இப்போது நடேசனின் படுக்கை நடைக்கு மாறிவிட்டது. கிழக்குப் பார்த்த ஓலை வீடு அது. அடுத்தடுத்த வாசல் களைக் கொண்டதும் நன்கு தாராளமானதுமான இரண்டு அறைகள். அவற்றுக்கெதிரே கிடைமட்டமாக அகன்ற நடை. அதை விட்டு கீழே இறங்கியதும் மட்டச் சுற்றுச் சுவருடன் பெரும் மண் வாசல். அதன் தென்மூலையில் அடுப்பு. வட கோடியில் புறக்கடை. நடுவே வகிடெடுத்தது மாதிரி நடைபாதையை விடுத்து ஆங்காங்கே தென்னை, முருங்கை, செம்பருத்தி, கனகாம்பரம், டிசம்பர் மற்றும் பெருமல்லிப் புதர்கள்.
தன்னை நடையில் கொண்டு வந்து போட்டது நல்லதாய்ப் போனது என்று நடேசன் நினைத்தான். பழைய இரும்புக் கட்டில் துயரத்துடன் முனக முனக அவன் கவிழ்ந்தோ, ஒருக்களித்தோ படுத்தாலும் அவனுக்கு பக்கத்து வீட்டு நடைபாதை நன்றாகத் தெரிந்தது. பக்கத்து வீடு இவர்களுடையதைப் போல கிடையாது. முன்பக்கமாக ஒரு அறை. நடுவில் சுண்ணாம்பு போட்டு மழுக்கிய வாசல். பிறகு ஓர் அறை. தெருவுக்கு வந்து போக நடேசன் வீட்டு வாசல் மட்டச் சுவரையொட்டித்தான் அவர்களுக்கு வழி. அதனால் காவேரி அவ்வழியாக வருவதும், போவதும், நின்று பேசுவதும் அவனுக்கு நன்றாகத் தெரியும். மட்டுமன்றி இராப்பொழுதுகளில் அவள் வீட்டு முன்னறை சுவரின் மீது தெருவிளக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சும். அப்போது அவள் நடமாட்டத்தையும் நிழலாட்டத்தையும் அவனால் துல்லியமாகக் கணிக்க முடியும். அவள் நினைவுகளின் நிழல்களே அவனை முழுமையாக ஆக்ரமித்திருந்தன
மருத்துவர்கள் கைவிட்டதற்குப் பிறகு, இருக்க இருக்க நடேசனின் நாட்களுக்கு வலியேறிக்கொண்டு வந்தது. அதுவும் கால அட்டவணையைப் போட்டு வரும் வலி. அவனுடைய காலைப் பொழுதுகள் வேதனை மிக்கவையாய்ப் புலர்ந்தன. பிறகு முற்பகல் பொழுதெல்லாம் காவேரியின் நினைவுகளில் ஊமையாய்ப் புரண்டான். மாலைப் பொழுதில் நண்பன்
சோமசுந்தரம் வருவான். சில நாட்களில் அவன் வருகையை நடேசன் நிரம்பவும் எதிர்பார்த்துக் காத்திருப்பான். சோமு வந்ததும், காவேரியின் நிழலுருக்களையும் நடமாட்டத்தையும் தான் நினைத்தவற்றுடன் இணைத்து ரகசியக் குரலில் விவரிக்கத் தொடங்குவான்.
‘‘நேத்து ராத்திரி ஒருக்களிச்சி படுத்துணிருந்தேன்டா. பக்கத்துல கீதா ஒக்காந்து பேசறா. அங்கப் பாத்தா அவளோட நெழலு. தெரு பக்கமா பாத்து நிக்கிறா போல தெரியுது. அந்தக் குண்டு மூஞ்சிதும், மொன்ன மூக்குதும் நெழலு நல்லா பொடச்சிக்கிட்டு
சொவத்துல விழுகுது. கீதா எழுந்துப் போனப்புறமும் அவளோட நெழல் மறையல. அங்கியே ஆணியடிச்ச மாதிரி நிக்குது''
இரவுகளில் நடேசன் போதையுடன் பிதற்றுவான். சில நேரங்களில் சிறு ரகளையும் இருக்கும். அவன் தூங்கும் வரை சிரமம் தான். பின்னர்
நடுசாமத்தில் விழித்துக் கொண்டால் இரவின் ஓசைகளை கவனிப்பான். ஊரின் இண்டு இடுக்குகளில் பதுங்கியிருக்கும் நாய்களெல்லாம் வெளிப்போந்து ஊளையிடும். கொசுக்கள் காதருகில் ரீங்கரிக்கும்.
சில்வண்டுகள் ஓயாமல் இரவுக்கு சேர்ந்திசை பாடும்.
அவன் இரவுகளை ஊடுருவி குளிரையும், வேக்காட்டையும் பிரித்தறிவான். சில காலங்களில் இரவில் பெய்யும் மழையின் தான்தோன்றித்தனம் அவனை மிரளச்செய்யும். நடு வானில் தோன்றி மறையும் ஒளிப்பிளவை தரிசிப்பான். தெருவிளக்கின் வெளிச்ச தயவில் மழையின் சரங்களை எண்ண முயல்வான். இரவும் அவனும் தனித்திருக்கும் அந்தப் பொழுதுகளில் காவேரியும் வந்து உருவற்றவளாக அவனுடன் இணைந்துக் கொள்வாள்.
அவன் இப்போதெல்லாம் தன்னை ஷாஜஹானாக எண்ணத் தொடங்கியிருந்தான். உலகின் அரசன் என்றழைக்கப்பட்ட அவனை தாஜ்மஹாலைப் பார்த்தவாறே சாகும்படிக்கு ஆக்ரா கோட்டையில் மகன் ஔரங்கசீப் சிறைவைத்ததைப் போலத்தான், கீதாவும் அவனை இந்த நடைவழியில் சிறை வைத்திருந்தாள். அவள் மட்டுமல்ல, வீட்டார் எல்லாருமே சேர்ந்து தான் அவனை அப்படி வைத்திருந்தார்கள். சில நேரங்களில் படுக்கையை நனைத்து விடுகிறான். மூலக்கட்டியிலிருந்து ரத்தமாய் வெளியேறுகிறது. மெல்லிய கவிச்சை நாற்றம். பிள்ளைகள் தூங்க மறுத்து முகம் கோணுகிறார்கள். காத்தாட அவன் நடையிலேயே இருக்கட்டும் என்று அவர்கள் கருதிக்கொண்டார்கள்.
ஆனாலும் அவன் விரும்பும் வரைக்கும் தன்னுடைய மும்தாஜான காவேரியை தொலைவிலிருந்து பார்த்துக் கொள்ளட்டும் என்று கீதா தன்னை ரகசியமாக அனுமதித்திருக்கிறாள் என்றே நடேசன் நம்பினான். நோயின் வலி மறக்க தம்பி அவனுக்கு பிரியமான மதுப்போத்தலை வங்கி வந்துக் கொடுத்தான். எல்லாருமே வலியில்லாமல் அவன் வாழ்க்கைக் கழியட்டுமென்று எண்ணிக் கொண்டார்கள்.
மாலை மிகுந்த பொன்னிறத்துடன் பொலிந்தது. அன்று சோமு கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டிருந்தான். நடேசனைக் குளிக்க வைத்து மாலை வெய்யிலைப் பெற்றுக் கொள்ளும் படிக்கு வாசலில் நாற்காலியைப் போட்டு அமர்த்தியிருந்தார்கள். முன்வாசலுக்கு அருகிலேயே எழுப்பியிருந்த ஒரு சின்ன அறையில் வாடிக்கையாளரை உட்காரவைத்து பாஸ்போர்ட் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள் கீதா. சிறுநகரத்தில் அவன் வைத்திருந்த கடையை காலிசெய்த கீதா, வீட்டிலேயே இப்படிக் கொண்டுவந்து வைத்துக் கொண்டாள். நடேசன் அவளுக்கு படம் எடுக்கிற நுட்பங்களை முன்பே கற்றுத் தந்திருந்தான்.
சோமசுந்தரம் வந்ததும் வராததுமாக நடேசன் காவேரியின் கதையை மெல்லிய குரலில் கமுக்கமாக அவனுக்குச் சொல்லத் தொடங்கியதும், சோமு அதை மடைமாற்றிவிட நினைத்தான்.
‘‘சின்னத பத்தி தான் தெனத்திக்கும் எங்கூட பேசற. எம் பெரிய தங்கச்சியப் பத்தி பேசுப்பா! அதோட பிளாக் அண்ட் ஒயிட் படங்கள எனக்கு காமிச்சிருக்கியே. என்னா மாரி படங்கன்ற? நீ பெரிய கலைஞன்பா!''
நடேசன் சிரித்துக் கொண்டான். அவன் கண்கள் ஆழத்திலிருந்து கனன்றன. காலத்தின் கிடங்கிலிருந்து ஏதோவொரு கை நீண்டு அக்கண்களில் கவிழ்ந்திருக்கும் திரியை துண்டி பற்றவைத்ததும் அது குபீரென்று ஒளிபிடித்து எரிந்தது.
‘‘அந்தப் படங்கள்ள கீதா ரொம்ப அழகாயிருப்பா! அந்தக் கண்ணும் மூக்கும் வாயும் அப்பிடியே செஞ்சி ஒட்ட வச்ச மாதிரி இருக்கும். ஒரு நாளு கூப்டு அதுங்களக் காட்டந்து தான் அசந்து போயிட்டா பாரேன்! ஆனா எனக்கெனுமோ, நா அவளப் படம் எடுக்கிறேன்னு தெரிஞ்சிணுதான் பொறுமையா நின்னுட்டு இருந்திருக்கிறா! இல்லேன்னா அதுங்க அவ்ளோ அழகா வராதில்ல?!''
நடேசன் சத்தம் போட்டு சிரிக்க முயன்றான். ஆனால் சிரிப்பொலி தொண்டையைத் தாண்டி வராமல் தவித் தது. கீச்சொலியைப் போல ஏதோ ஒன்று கேட்டது!
‘‘என்னாண்ணா, ஒரே சிரிப்பாயிருக்குது! என்னாவாம் சாருக்கு? ஒடம்பக் கெடுத்துக்கிட்டு இப்பிடி படுத்துகினாரு. இது நல்லதான்னு மட்டும் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க!''
வாடிக்கையாளரை அனுப்பிவிட்டு வெளியே வந்த கீதா அவர்களை கவனித்து கேட்டதற்கு சோமசுந்தரம் சமாதானமாக பதில் சொன்னான்.
‘‘ஒண்ணுமில்லமா. எதோ பழைய சம்பவத்தை
சொல்லிச் சிரிக்கிறாபிடி சாரு!''
அந்தக் கிராமத்தை யொட்டிய சிறுநகரத்தில் இருக்கும் ஒரு புகைப்பட நிலையத்தில் நடேசனை அப்பாதான் வேலைக்குச் சேர்த்து விட்டார். அவர் அந்தச் சிறுநகரத்திலிருக்கும் திரையரங்கத்தில் படம் ஓட்டும் வேலையைச் செய்துவந்தார். சிறு வயது முதற்கொண்டே அப்பாவுடன் சென்று அவர் ஃபிலிம்ரோல்களைக் கையாள்வதையும், அதிலிருந்து காட்சிகள் திரையில் விரிவதையும் பார்த்து வந்த நடேசனுக்கு, தான் ஒரு புகைப்படக்காரனாக ஆகவேண்டுமென்ற ஆசை தோன்றியபோது அப்பா தடையெதுவும் சொல்லவில்லை.
நடேசன் சொந்தமாக ஒரு நிக்கான் காமிராவை வாங்கியபிறகு தனியாகக் கடை வைப்பதற்கு துணிச்சலைக் கொடுத்தவை அவன் எடுத்த பக்கத்து வீட்டு கீதாவின் படங்கள் தான். கீதாவும் அவள் வீட்டாரும் குடும்பப் படம் எடுக்கப் போயிருந்த சமயத்தில் நடேசன் அவர்களுக்கு கலரும், நொறுக்கும் வாங்கிக் கொடுத்து நன்றாக உபசரித்து அனுப்பினான். அந்தக் குடும்பப் படத்தை சீக்கிரமாகவே பிரிண்ட் போட்டுவந்து கொடுத்தான். அதில் அழகாய் இருப்பது கீதாதான் என்று அவன் சொன்னதைக் கேட்ட நாளிலிருந்து நடேசனைப் பார்க்கும் போதெல்லாம் அவள் கூடுதலாகச் சிரிக்கத் தொடங்கினாள்.
முன்வாசல் தென்னைக்கருகில் வைக்கப்பட்டிருந்த மண்தொட்டியில் அம்மா ஊற்றிவைக்கும் குளிதித்
தண்ணீரை கீதா மாட்டுக்காக எடுக்க வரும்போதெல்லாம் நடேசன் இருந்தானென்றல் அவளை ரகசியமாகப் படமெடுப்பான். நடேசனின் அம்மாவோ அவளை மருமகளே மருமகளே என்று பேசி, கேலி செய்வார். ஒருமுறை அவளை வீட்டுக்குள் அழைத்து தான் எடுத்தப் படங்களில் சிலவற்றை அவன் காட்டியதும் கீதாவுக்கு வெட்கமும், சிரிப்பும் பொத்துக்கொண்டு வந்தது. திடீரென்று ஒரு நாள் நடேசன் அவளை அழைத்துச் சென்று ஏதோ ஒருகோயிலில் வைத்து தாலியைக்
கட்டி அழைத்து வந்து நின்றபோது பெற்றவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மா மஞ்சள் தண்ணீரைக் கலக்கி வந்து ஆரத்தியெடுத்து அவர்களை வீட்டுக்குள்ளே அழைத்துக்கொண்டார்.
பனிக்காலம் முதிரும் போதில் வருகின்ற பண்டிகைகளான கிறிஸ்மஸ்சுக்கும், புத்தாண்டுக்கும், தொடர்ந்து வரும் பொங்கலுக்குமாக நடேசனை கிராமங்கள் தோறும் சோமசுந்தரம் அழைத்துக் கொண்டு செல்வான். விரும்பியவர்களெல்லாம் அவனிடத்தில் படமெடுத்துக் கொள்வார்கள். கூட நாலுகாசை சம்பாதிக்க வேண்டுமென்றால் கடையிலேயே உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை. வெளியே செல்ல வேண்டும் என வலியுறுத்தினான் அவன்.
அன்றைக்கு அவர்கள் செம்மண் நிலங்களுக்கு நடுவாகச் செல்லும் சாலையில் போய்க் கொண்டிருந்தார்கள். கிராமங்களில் பொங்கலுக்குரிய சமிக்ஞைகள் அதிகரித்துக் கொண்டு வருவதை அவர்களால் காண முடிந்தது. நிலங்கள் முடிவடைந்து நீண்ட தொலைவுக்கு வந்த காடு ஒரு காட்டாற்றில் முடிந்தது. தொலைவில் கிராமம் ஒன்று காற்றில் மிதப்பதைப் போல் தெரிந்தது. அங்கு அடர்ந்திருந்த நாவல் மரக்கூட்டத்தின் நிழலில் டிவிஎஸ் ஃபிப்டியை நிறுத்திவிட்டு ஆற்றிலிறங்கி நடந்து வழுக்குப் பாறைகளில் ஏறியமர்ந்து புகைக்கத் தொடங்கினார்கள். அப்போது சோமசுந்தரம் ஆயிரத்து ஒன்றாவது தடவையாக தான் சினிமாவுக்குச் சென்று வந்த கதையை நடேசனுக்கு விவரித்தான்.
சோமுவின் ஊரில் சிறுஅணை ஒன்று கட்டப்பட்டிருந்தது. காட்டாற்றை ஒட்டிய கிணறுகளில் நிரம்பியிருக்கும் தண்ணீரில் இன்னும் அங்கே ஏற்றமிறைத்தார்கள். அங்கு வந்து தங்கிய ஒரு திரைப்படக்குழு முழுப்படத்தையும் அங்கேயே முடித்துக்கொண்டு சென்னைக்குச் சென்றது. ஊரில் அந்தக்குழுவினருக்கு வேண்டிய உதவிகளைச்செய்து வந்த சோமசுந்தரம் சினிமா குழுவினருடனேயே சென்னைக்குப் போய் சிலகாலம் தங்கிவிட்டு வந்தான். அந்தச்சுற்று வட்டாரத்தில் இது பலருக்கும் தெரியும் என்றாலும் அவன் பேசுகையில் தன் சினிமா தொடர்பை அவர்களுக்கு நினைவு படுத்த ஒரு பிரபல நடிகரோ, நடிகையோ அவ்வப்போது தன்னுடன் ஃபோனில் பேசுவதாக இயல்பாகச் சொல்வான். ஆனால் நடேசனிடம் மட்டும் அவன் பிரயத்தனங்கள் பலிப்பதில்லை.
‘‘டேய் மச்சான், ரெக்கார்டை மாத்து''
‘‘எங்க ஊருல டேம் கட்டறதுக் கோசரம் நெலத்தை பறிகுடுத்தாங்க பார்றா நடேசா. அதுவே பிரமாதமான சினிமாடா. நான் எடுக்கப்போற அந்தப் படத்துக்கு நீதான் ஸ்டில் ஃபோட்டோகிராபர். முடிஞ்சா நீயே கேமராவக்கூட பாத்துக்கோ! இது நடக்கும்!''
''மச்சான் சும்மா பேசாத. மேட்டர வரச்சொல்லு''
வழுக்குப் பாறையின் மீது எழுந்து நின்று சோம்பல் முறித்தபடி சொன்னான் நடேசன்.
‘‘சரி, நீ இங்கியே இரு. நான் போயி ஏற்பாடு
செஞ்சிட்டு வர்றேன்''
சோமசுந்தரம் எழுந்து போனான். அவன் முடுக்கி ஓட்டிக்கொண்டு போகும் வண்டியின் ஓசை எங்கோ தொலைவில் கேட்பதைப் போல நடேசனுக்குக் கேட்டது. அவன் நீண்ட நேரமாக வானத்தையே கவனித்தபடி மல்லாந்து படுத்திருந்தான். அவன் கண்களுக்கு நிழல் பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன. ஆற்றோர நிலங்களில் வேலை செய்யும் மனிதர்களின் பேச்சொலியும், ஆடு மாடுகளை மேய்ப்போரின் அதட்டலும் எங்கோ கனவில் கேட்பதைப்போல ஒலித்தன.
அப்போதுதான் காய்ச்சி இறக்கிய சாராயத்தை சுடச்சுட எடுத்துக் கொண்டு, சாப்பாட்டுத் தூக்குகளோடு சோமசுந்தரமும் இன்னுமொரு நண்பனும் வந்து சேர்ந்தார்கள். மூவரும் குடித்துப் பிதற்றி, சினிமா கதைகளைச் சொல்லியபடி பாறைகளின் மீதே மாலை வரைக்கும் படுத்திருந்தார்கள். அவர்களின் கதையைக் கேட்பதற்கு அந்தக் காட்டைத்தவிர வேறு யாரும் அங்கு இல்லை.
காவேரி வேலைக்குப் போகும் தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு கொஞ்சம் முன்னால் காத்திருந்த நடேசன், அவளைத் தன் டிவிஎஸ்சில் ஏற்றிக்கொண்டு பறந்தான். புகைப்படம் எடுப்பதற்காக பல கிராமங்களைச் சுற்றிய அவனுக்கு அனாதரவான சாலைகளும், இடங்களும் அத்துபடியாகியிருந்தன. அதற்கு சோமுவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமென்று அவன் நினைத்துக் கொண்டான்.
சிறிது நேரம் பேசாமல் வந்த காவேரி பின்பு அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அவர்கள் செம்மண் நிலங்களையும், காட்டையும் கடந்து நாகதொண்ணைக்குப் போய்ச்சேர்ந்தார்கள்.
வெய்யில் அன்று கனிவாக இருந்தது. நாவல் மர நிழலில் நடேசன் வண்டியை நிறுத்திப் பூட்டினான். பிறகு திரும்பி காவேரியை இறுக்கமாகத் தழுவிக்கொண்டான். அங்கு மரங்களுக் கிடையில் பரவிக்கிடந்த துத்திச்செடிகள் மஞ்சள் பூக்களைப் பூத்திருந்தன. அவற்றின் மய்யத்தில் சிவந்த வட்டங்கள் தெரிந்தன. அவர்கள் இருவரும் துத்திக் காட்டுக்குள் நுழைந்து மறைந்தார்கள். நேரம் கழித்து வந்து இருவரும் ஆற்றில் இறங்கியபோது தண்ணீரின் சிலிர்ப்பில் காவேரி குதுகலித்தாள். கரையோர நாவல் மரங்களிலிருந்த சில குரங்குகள் அவர்களைப் பார்த்து சத்தமெழுப்பிக்கொண்டு ஓடின.
காட்டாற்றில் தண்ணீர் மிதமாகத் தெளிந்து கொடிக் கொடியாக ஓடிக்கொண்டிருந்தது. அங்கங்கு மணல் தேலியிருந்தது. மணல் நொறுங்க நடந்து ஆற்றின் நடுவில் இருக்கும் வழுக்குப் பாறைகளுக்கு அவர்கள் வந்துச் சேர்ந்தார்கள். நடேசன் தன் கேமராவையும் உடுப்புகளையும் கழற்றி பாறையொன்றின் மீது வைத்துவிட்டு நீரில் குதித்தான். தாவணியையும், சட்டையையும் அவிழ்த்து நடேசனின் உடைகளோடு வைத்துவிட்டு பாவாடையை மார்புக்கு மேல் ஏற்றிக் கட்டிக்கொண்ட காவேரி அவனுக்குப் பின்னால் பாய்ந்தாள்.
நேரம் போவது தெரியாமல் அவர்கள் நீரிலாடிக் கொண்டிருந்தார்கள். பாறைகளையொட்டி வளர்ந்திருந்த செடிகளில் ஊதாநிறத்தில் புனல் பூக்கள் பூத்துக்கிடந்தன. அவற்றில் மொய்த்திருந்த கருநிற வண்டுகள் அடிக்கடி அவர்களின் தலைமீது பறந்து அச்சமூட்டின. நீரிலாடி சலித்த பிறகு காவேரி வழுக்குப் பாறை மீதமர்ந்து கூந்தலை உலர்த்திக் கொண்டிருக்கையில் நடேசன் அவளைப் படமெடுத்தான்.
வேலைக்கு வராமல் காவேரி அடிக்கடி காணமல் போகிறாள் என்ற தகவலை கீதாவினிடத்தில் தோழிகள் வந்து
சொன்னார்கள். நடேசனின்
சட்டைப்பையில் காவேரியின் படங்கள் இருப்பதை ஒருநாள் கீதாவும் பார்த்தாள். அவனைச் சட்டையைப் பிடித்து உலுக்கிவிட்டு, தன் வீட்டுக்குச் சென்று காவேரியை அறைந்தாள்.
‘‘வீட்டுல இருந்த வரைக்கும் எல்லாத்தையும் எங்கூட பங்கு போட்டுக்கின. இப்ப எம்பொழப்புலயுமாடி பங்கு கேக்கற?''
பக்கத்து வீடுதான் என்றாலும் திடீரென்று கீதா தன் வீட்டுப்பக்கமே திரும்பாமல் போனாள். நடேசனின் அம்மா கேட்டதற்கு, ‘‘மூட்டையும் கோட்டையும் கட்டியனுப்புவாங்கன்னு நெனச்சி நாம போனா, கையில இருக்கிறதையும் புடுங்கிக்கிணு அனுப்பிடுவாங்க போலருக்குது அத்த! தேவையில்லாம எதுக்கு அங்க போயிணு?''
நடேசனும், கீதாவும் சண்டையிட்டுக் கொண்டனர். வீட்டில் சாப்பிடுவதை நடேசன் நிறுத்திக் கொண்டான். கீதாவோ, அம்மாவோ கேட்டுத் திட்டும் சமயங்களில் மட்டும் பெயருக்கு கொஞ்சம் சாப்பிட்டான். விவரம் அறிந்த சோமசுந்தரம் அவனைக் கடிந்து கொண்டபோது, ‘‘என் கேமிரா கண்ணுக்கு காவேரிதான் பேரழகி'' என்றான் நடேசன்.
நடேசன் குடித்துவிட்டு வரத்தொடங்கியதும் வீட்டில் கனத்த அமைதியும், கசப்பும் உருவாகித் தங்கிக்கொண்டது. பெரும்போதையில் கேமிராவைப் போட்டுக்கொண்டு எங்காவது விழுந்து கிடந்தான். அவன் நடத்தி வந்த கடையை மூடினாள் கீதா. அங்கிருந்த பொருட்களையெல்லாம் வீட்டுக்கே கொண்டு வந்து வைத்துக் கொண்டாள். குடல் புண்ணாகி உடலைக் குறுக்கி நடக்கத் தொடங்கிய நடேசன் பின்னர் மேலெழ முடியாதபடிக்கு ஒரு நாள் படுக்கையில் சுருண்டு விழுந்தான்.
உள்ளறையில் கிடத்தப்பட்டிருந்த நடேசனின் மார்புக்கூடு மேலெழும்பி எழும்பித் தாழ்ந்தது. அவன் மூச்சு விடுவதற்குப் போராடினான். கைக்கால்கள் அசைவற்று கிடந்தன. வற்றிய உடலில் துருத்திக்கொண்டு தெரிந்த மார்பெலும்புகள் அச்சத்தை உண்டாக்கின. வேதனையுடன் அவன் மூச்சை உள்ளிழுக்கும்போது கேவல் சப்தம் கேட்டது. காலையில் புறக்கடையில் அவனைக் கொண்டுபோய் கழிவறை நாற்காலியில் அமர்த்தி வைத்துவிட்டு வந்தபிறகு நெடுநேரத்துக்கு அவனிடமிருந்து
சத்தமில்லை. சந்தேகமடைந்த கீதா போய்ப் பார்த்தபோது நடேசன் மயங்கிச் சரிந்திருந்தான். கீதாவின் அழுகைக்குப் பதறிக்கொண்டு ஓடிவந்த அம்மா மேலும் கதறினார். இருவரும் அவனைத் தூக்கிவந்து உள்ளறை படுக்கையில் கிடத்தினார்கள். பகல் நெருங்கிக்கொண்டு இருந்ததால் ஊரில் அவ்வளவாக ஆட்கள் இல்லை. அழுகையுடன் தெருவுக்கு ஓடிவந்த அம்மா, வேலைக்குப் போயிருக்கும் சின்ன மகனையும், பெரியவரையும் அழைத்துக் கொண்டு வருவதற்கு ஆள் தேடினார். விவரம் அறிந்த சிலர் அவ்வப்போது வந்து போகத் தொடங்கியிருந்தார்கள்.
புறக்கடைக்குப் போகும் நேரங்களிலெல்லாம் கடும் மூலத்தினால் நடேசன் நெடுநேரத்துக்கு அல்லாடிக் கொண்டிருப்பான் என்பது கீதாவுக்குத் தெரியும். அந்த நோயினாலேயே அவன் உடலில் இருந்த ரத்தமெல்லாம் வடிந்து விட்டதாக அவள் நம்பினாள். இன்றும் அவன் அவ்விதமாகவே போராடிக் கொண்டிருப்பான் என்று நினைத்தாள். தான் அவ்வாறு நினைத்துக் கொண்டு இருந்து விட்டதை எண்ணி தலையில் அடித்துக் கொண்டவளாய் பொங்கி பொங்கி அழுதாள் கீதா. அவன் அருகிலிருந்து விலகாமல் அமர்ந்தபடி அழுகையும் ஆதூரமுமாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அழுது களைத்த அம்மா அறையின் ஒரு மூலையில் பழந்துணி மூட்டையாய்க் கிடந்தார். வீட்டில் இருள் கவிந்துவிட்டது. பள்ளிக்குச் சென்றிருந்த நடேசனின் பிள்ளைகளும், அவன் தம்பியும், அப்பாவும் வந்து விட்டனர். கலங்கிய முகத்துடன் நண்பனைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சோமசுந்தரம். புலம்பல்கள் அதிகரித்து வந்தன.
வீட்டிலிருக்கும் எல்லாரும் தண்ணீரையும், பாலையும் நடேசனின் வாயில் விட்டார்கள்.
சோமசுந்தரமும் அப்படிச் செய்தான். ஆனாலும் நடேசனின் நெஞ்சு அடங்கவில்லை. அவன் கருவிழிகள் சுழன்றன. வாயை நன்றாகத் திறந்து சுவாசத்தை வெளியேற்ற முயன்றான். நடேசனுக்கு பிரியமானவர்கள் சிலர் அவனிடம் பேசுகொடுத்தனர். நடேசனின் கண்கள் தன்னையே நோக்குவதையறிந்த சோமசுந்தரம் வெளியாட்களை அனுப்பிவிட்டு அவன் பக்கத்திலமர்ந்து பேசுக்கொடுத்தான்.
‘‘என்னடா மச்சான்? என்ன பண்ணுது சொல்லு?''
‘‘...அவ...அவ அங்கதான் நிக்கறா. நேத்து அவ நெழலப் பாத்தேன்''
நடேசன் சோமுவிடத்தில் குழறுவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த கீதா வெளியே எழுந்து போனாள். அவள் வாசல் முன்னறையில் எதையோ தேடும் சப்தம் கேட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கு வந்த கீதா நடேசனின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவன் கையைப்பிடித்து காவேரியின் புகைப்படத்தை வைத்தாள். அது நழுவி விடாமலிருக்க தானும் அதைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு அவன் கண்களுக்கு நேராகக் கொண்டுபோனாள்.
அந்தப் படத்தை பார்த்த கணத்தில் நடேசனின் கண்கள் திடீரென தீப்பிடிப்பதைப் போல ஒளிர்ந்தன. அவன் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று தோன்றி நிலைத்தது. நினைவுகள் எங்கோ ஆழ்வது போலிருந்தன. அவன் முக மாற்றத்தை கவனித்தவாறே அவனை அழைத்தாள் கீதா. அந்தக் குரலை பொருட்படுத்தாத அவன் கண்கள் அந்தப் புகைப்படத்திலேயே நிலைகுத்தி உறைந்தன.
‘‘அய்யோ... நான் பிடிவாதக்காரி, நான் பிடிவாதக்காரி'' நடேசனின் மேல் விழுந்து அழத்தொடங்கினாள் கீதா.
மார்ச் 2021