வானம் இருண்டு கிடக்க, மின்னி மறையும் நட்சத்திரங்களை மறைத்திருந்தன மேகங்கள். பதினொரு வயது சிறுவனான அன்பு, வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பின் திரும்பி, அருகில் படுத்திருந்த தன் அம்மாவைப் பார்த்தான்.
‘‘ம்மா...''
‘‘ம்ம்ம்''
‘‘ம்மா..''
‘‘ம்ம்..என்ன?''
அன்பு யோசித்தபடியே ‘‘இப்பலாம் ஏம்மா நட்சத் திரமே தெரிய மாடேங்குது..''?
‘‘மழ காலம் வரப்போகுதுல்ல... அதான்.. கேள்வி கேக்காம ஒழுங்கா படு''
அன்பு எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான் ‘‘நாளைக்கு எங்கமா போறோம்?''
அவள் சோர்வுடன் ‘‘நாளைக்கு சொல்றேன்.. இப்ப தூங்கு... காலைல சீக்கிரம் எந்திரிக்கணும்''
‘‘ம்மா...சொல்லுமா..''
‘‘ஹாஸ்பிடலுக்கு ,'' என எரிச்சலுடன் அழுத்திக்கூறினாள்.
உடனே அவன் ‘‘அப்ப நாளைக்கு ஸ்கூலுக்கு போலேல ..லேட்ட்டா எந்திக்கவா..''
அவள் சற்று கடுகடுப்புடன் ‘‘நாளைக்கு அதே மாறி ஆறு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்ருவேன்.. சீக்கிரமே போகணும்''
எரிச்சலடைந்த அன்பு ‘‘ம்மா.. ஹாஸ்பிடல்தானமா போறோம்..லேட்டா போனா என்ன... நீ எப்போமே சீக்கிரம் சீக்கிரம் கூட்டு போற...''
அம்மா இப்போது திரும்பிப் படுத்து அவனைப்பார்த்துக் கொண்டே, ‘‘நாளைக்கு உனக்கு ரோல் கேக் வாங்கி தரேன்.. இப்ப படு''
''இததா நீ தினம் சொல்ற .. வாங்கியே தரமாட்டேன்ற..''
உடனே அவள் ‘‘நாளைக்கு கண்டிப்பா வாங்கி தரேன்.. சரியா..''
அன்பு கண்களை மூடி தூங்குவதைப் போல் நடித்தான். பின் திடீரென எதோ தோன்றியதைப்போல் ‘‘எனக்கு எதுவும் உடம்புல பிரச்சன இருக்காமா..?''
இதைக்கேட்டதும் பதற்றமடைந்த கயல், தூக்கம் கலைந்து ‘‘ஏண்டா இப்படி கேக்குற.. அதெல்லாம் உனக்கு ஒண்ணும் இல்ல.. நீ சூப்பரா இருக்க.. ஏன் திடீர்ன்னு இப்படிப் பேசுற.. யாரு எதுவும் உன்ன கேட்டாங்களா..?''
அன்பு தயங்கி தயங்கி ‘‘ இல்ல... நா சாயங்காலம் விளையாடிட்டு இருக்குறப்ப... சுதா ஆன்ட்டி பேசிகிட்டாங்க.. எனக்கு ஒண்ணும் புரில.. அதா கேட்டேன்..''
இதைக்கேட்டதும் கயலுக்கு மனம் பதறியது, வெடுக்கென எழுந்து அமர்ந்துகொண்டு, அவன் நெற்றியை வருடியபடியே ‘‘அதெல்லாம் நீ எதுக்கு கேக்குற.. அவங்க சும்மா சொல்றாங்க.. போன வாரம் ரன்னிங் ரேஸ்ல நீதான மூணாவதா வந்த...''
உடனே அவன் ‘‘ம்ம்ம்''
“அப்ப நீ நல்லா இருக்குறன்னுதான் அர்த்தம்... இவங்க யாரு சொல்றதையும் கேக்காத.. அம்மா என்ன சொல்றனோ அத மட்டும் கேளு.. உனக்கு அம்மா பிடிக்குமா.. அவங்க பிடிக்குமா?''
அன்பு அமைதியாக ‘‘நீதான் பிடிக்கும்''என்றான்.
‘‘ம்ம்..இப்ப தூங்கு .. நா நாளைக்கு கேக் வாங்கிதரேன்... சரியாப்பா.. வேற யாரு சொல்றதையும் கேக்க கூடாது'' என கூறிக்கொண்டே அவன் தலையை தடவிக்கொடுத்தபடியே தூங்கவைக்க முயற்சித்தாள் கயல்.
மீண்டும் அன்பு இன்னொரு சந்தேகம் வந்ததைப் போல் ‘‘அப்பறம் ஏன்மா நா ஒல்லியாவே இருக்கேன்... என் பிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க.. ஆனா நா டெய்லி முட்ட சாப்புறேன்ல.. குண்டாவே ஆகமாட்டேங்கேன் ''
கயல் சிரித்துக்கொண்டே ‘‘உடனே குண்டாகமாட்ட... டெய்லி.. நா தர முட்ட.. கீர... இதெல்லாம் வேஸ்ட் பண்ணாமா சாப்பிடணும்... கீழே கொட்டிட்டி வர கூடாது.''
அன்பு கண் மூடியபடியே சரியென்பதை போல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.
வானத்தில் இன்னும் மேக மூட்டமாகவேஇருக்க, இருள் மறைந்து சூரியன் தெரியலானது. வானம் வெளுத்துப் போனதாய் மாற... லட்சுமி மில்ஸ் ஆலையின் எட்டு மணி சங்கு தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்க... பள்ளிக்கு செல்ல சிறுவர்கள் தெருக்கள் வழியே விளையாடிக் கொண்டும் அவசர அவசரமாக ஓடிக் கொண்டும் இருந்தார்கள்.
கயல், அன்புவின் பள்ளி யூனிஃபார்ம் சட்டையின் பொத்தான்களை மாட்டிவிட்டபடியே, ‘‘எவ்வளோ துவைச்சாலும் இந்த மைக்கறைதான் போகவே மாடேங்கி... பேனாவ சட்டைல வக்காதன்னு சொன்னா நீயும் கேக்குறியா.. பாரு''என்றாள்.
அன்பு குழப்பமாக அவளைப் பார்த்து நின்றான். கயல் எழுந்து போய் அந்த இரண்டு மாத்திரை டப்பாக்களை தன் சிறிய ஹேண்ட்பேக்கினுள் போட்டுக்கொண்டு, பீரோலில் இருந்த ஒரு நோட்டை எடுத்தாள். அவள், அதில் எதையோ பார்த்துப் படித்தபடியே இருக்க, உடனே அன்பு ‘‘ஹாஸ்பிடல் தானமா போறோம்... எதுக்கு யூனிஃபார்ம்.. கலர் டிரஸ் போட்டுக்கவா ?''
கயல் பதில் ஏதும் சொல்லாமல், அந்த நோட்டையும் தன் பேக்கினுள் திணித்துக்கொண்டு ‘‘நேரமாச்சு.. வா போவோம், ‘‘ என அவனை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு வெளியே நடந்தாள். இருவரும் தெருக்களைக் கடந்து மெயின் ரோட்டை அடைந்தார்கள். அம்மாவின் நடைவேகத்திற்கு அன்பினால் ஈடுகொடுக்க முடியாமால் ஓடி ஓடி நடந்தான். ஒரு பழக்கடையின் ஓரத்தில் தந்தை ஒருவர் பனியனும் லுங்கியும் அணிந்துகொண்டு தன் மகளின் கையைப் பிடித்தபடி ஸ்கூல் வேனிற்காக காத்து நின்றார்.
கயல் எதையும் கண்டுகொள்ளாமல், விறுவிறுவென நடந்து போய்கொண்டே இருக்க, அன்பு தன் நடையை மெதுவாக குறைத்து அவர்களைப் பார்த்தான். அந்தச் சிறுமி, வெள்ளை வெளேரென யூனிஃபார்ம் அணிந்து, காலில் பளபளக்கும் கருப்பு ஷூவுடன் நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது. அன்பு அந்த மனிதரையும் பார்த்துவிட்டு, அந்த சிறுமியையும் பார்த்தான். அப்பா என்றால் இப்படிதான் இருப்பாரோ என தனக்குத்தானே நினைத்துக்கொண்டான்.
சிறிதுநேரம் மெய்மறந்து அவர்களைப் பார்த்தபடியே நின்றவன், திடீரென நினைவு வந்ததை போல், அம்மாவை பார்க்க, அவளோ தூரத்தில் போய் கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தான் அன்பு.
பேருந்து முழுக்க பெரும் கூட்டத்துடன், ஊரே கேட்கும்படி சினிமா பாட்டு ஒன்றை சத்தமாக வைத்து, ஒரு பேருந்து புறப்படத் தயாராக நின்றது. அதை ஆச்சர்யமாக பார்த்து நடந்த அன்பு, மீண்டும் திரும்பி அம்மாவைப் பார்க்க, அவள் அதையும் கண்டுகொள்ளாமல் இன்னும் வேகமாக நடந்து போய்க்கொண்டிருப்பதாக அவனுக்கு தெரிந்தது.
கயல், முகத்தில் வியர்வை வழிந்த தடங்கள் உப்பாக படிந்திருக்க, பின்னே திரும்பி அன்பு வருகிறானா என பார்த்தாள். அவன் தன் ஸ்கூல் பேக்கை முதுகில் தூக்கிக்கொண்டு அவளை நோக்கி ஓடி வருவது தெரிந்ததும். அவள் சற்று வேகத்தை குறைந்து கொண்டு அவனுக்காக மெதுவாக நடந்தாள். சில அடிகளில் அவன் வந்து கயலின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.
இருவரும் சிறிது தூரம் நடந்து வந்த பிறகு, அரசு மருத்துவமனை இருப்பது கயலுக்கு தென்பட்டது.
சடாரென அப்படியே நின்ற கயல், மருத்துவமனையையே பார்த்து நின்றாள்.
சுற்றும் முற்றும் பயந்து பயந்து எதையோ தேடியவள், நீண்ட மூச்சு ஒன்றை தனக்குள் வாங்கிக்கொண்டாள். அன்பு அம்மாவையே புரியாமல் பார்த்துக்கொண்டு நிற்க. அவள் மருத்துவமனையை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், அவனும் அவளுடன் சென்றான்.
மக்கள் கூட்டம் கூட்டமாக உள்ளே போவதும் வருவதுமாய் இருந்தனர். பெரும் கூட்டத்தைக் கண்டதும், அன்பு மகிழ்ச்சியாக ஒவ்வொரு முகத்தின் மூக்கையும் பார்த்தபடியே நடந்தான். ஆனால் அம்மாவின் முகத்தில் இன்னும் பயத்தின் வியர்வை வழிந்துகொண்டே இருந்தது என்பதை அவன் கவனிக்கத் தவறவில்லை.
கயல், அவனின் கையை இறுக்கமாகப் பிடித்துகொண்டு, உள்ளே நுழைந்தாள். வெள்ளை கோட் அணிந்த டாக்டர்களும், செவிலியர்களும் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தார்கள். கயலின் இறுக்கமான அந்த பிடி அன்புக்கு வலியைத் தந்தது. கூட்டம் அவனின் பாதையை மறைத்து நடந்துகொண்டிருக்க, கயலின் அந்த முரடான பிடியே அவன் முன்னேறி நடக்க சாதகமாக இருந்தது. வேறு வழி இல்லாமல் வலியைத் தாங்கிக்கொண்டு நடந்தான் .
இருவரும் மாடிப்படியில் ஏறி, அறை எண் 301 ஐ அடைந்தார்கள். கயல் சுற்றி திரிந்துகொண்டிருந்த கூட்டத்தை பதற்றமாக நோட்டமிட்டுக்கொண்டாள். இருவரும் அறைக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த செவிலியர் ஒருவரிடம் வீட்டில் இருந்து எடுத்து வந்த அந்த நோட்டை நீட்டினாள் கயல். அன்பு இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்துகொண்டே இருந்தான்.
‘‘கொஞ்சம் உட்காருங்க.. டாக்டர பாத்துட்டு வந்து வாங்கிக்கோங்க'' என்ற வாக்கியம் மட்டும் அவன் காதில் தெளிவாக கேட்டது. கயல் கைகள் இரண்டையும் பிசைந்தபடி அசௌகர்யமாக உட்கார்ந்திருப்பதை பார்த்தான் அன்பு, வழக்கம் போல் அதே அசௌகர்யம். அவன் அந்த அறைக்கு வந்து ஒரு மாதம் ஆனதால், வேறேதும் மாற்றம் இருக்கிறதா என சுற்றி நோட்டமிட்டான். சுவரில் அதே சிகப்புநிற ரிப்பன் சின்னமும், ‘‘ஹெச்.ஐ.வி நோயாளிகளை ஒதுக்காதீர்'' என்ற வாக்கியமும், ஆங்கிலத்தில் நீண்ட வாக்கியங்கள் கொண்ட புகைப்படங்களும் சுவரில் மாட்டப்படிருந்தன. ஆனால் அன்பு இந்த மூன்று எழுத்துக்களை மட்டும் அதிகமாக பார்த்து பழகிவிட்டான் . H I V என்ற எழுத்துகள்தான் அவை. அந்த அறை எந்த மாற்றமும் இன்றி அதே போல் தான் இருந்தது. ஆனால் முன்பு இருந்தவர்கள் இல்லாமல் வேறு சில நபர்கள் அமர்ந்திருந்தார்கள் அவ்வளவுதான்.
கயலை செவிலியர் உள்ளே அழைக்க, அவள் அன்பை அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு டாக்டரைப் பார்க்க அங்குள்ள குட்டி அறைக்குள் சென்றாள்.
அன்பு அமைதியாக அமர்ந்திருந்தான், அவனுக்கு எதிரில் ஒரு மனிதர் ஒல்லியான உடல் வாகுடன் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தார். அசையக்கூட இல்லை.
சிலைபோல அமர்ந்து ஆழ்ந்து எதையோ யோசித்தவாறே அமர்ந்திருந்தார். அப்போது அம்மா, அப்பா, ஒரு சிறுவன் என ஒரு குடும்பம் அவ்வறைக்குள் நுழைந்தது. அந்த எதிர்இருக்கை மனிதரிடம் கண்ட அதே சோகமும் இறுக்கத்தையும் இந்த அப்பா அம்மாவிடமும் இருப்பதைப் பார்த்தான். ஆனால் அவர்களுடன் வந்த அந்த சிறுவனோ கையில் ரப்பர் பந்தை வைத்துகொண்டு தரையில் குத்தி விளையாடிக்கொண்டிருந்தான். அன்பு அந்த பந்தையே ஆசையாக பார்த்து அமர்ந்திருக்க, திடீரென அந்தப் பந்து தரையில் குத்தி நிலை தடுமாறி அன்பின் பக்கம் வந்து விழுந்தது.
தன் சின்னஞ்சிறு கைகளால் அந்த சிவப்பு நிற பந்தை எடுத்து, எதிரில் இருந்த அந்த சிறுவனைநோக்கி உருட்டி விட்டான் அன்பு. பந்தை பிடித்துக்கொண்ட அவன், மீண்டும் அன்பை நோக்கி உருட்டி விட, இருவரும் விளையாடத் தொடங்கினார்கள். எல்லாரும் அவ்வறையில் சோகமாக அமர்ந்திருக்க, அந்த சிவப்பு பந்து, இரு சிறுவர்களிடமும் மாறி மாறி உருண்டு உருண்டு ஓடுவதை ஆர்வமாக பார்க்கத்தொடங்கினார்கள். அவர்கள் சோகம் சிறிது நேரம் காணாமல் ஆனது.
அதே சிறிது நேரத்தில் கயல் வெளியே வந்து, அன்பையும் உள்ளே அழைத்துச்சென்றாள். அங்கு வெள்ளை கோட் அணிந்தபடி டாக்டர் உட்கார்ந்திருந்தார். அன்பை அவர் தன் அருகில் அழைத்து, தன் ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டி, அவன் இதயத் துடிப்பை கவனித்தார், வயிற்றை அழுத்தி எதையோ சோதித்தார், முதுகையும் அழுத்தி சோதித்தார். இவையெல்லாம் அன்பிற்கு விசித்திரமாகவும் ஆர்வமாகவும் இருந்தது.
டாக்டர் ‘‘இன்னும் நல்லா சாப்பிடணும்.. சரியா ?''
அன்பு சரியென தலையாட்டிக் கொண்டான்.
''என்ன படிக்கிறீங்க ?''
''ஃபோர்த் ஸ்டாண்டர்ட்'' என்றான் அன்பு.
டாக்டர் : ‘‘நல்லா படிக்கணும் சரியா.. படிச்சி என்னவாகணும்னு ஆச உங்களுக்கு?''
அன்பு திரும்பி அம்மாவை பார்க்க, முன்பிருந்த பயம், பதற்றம் அவளிடம் இப்போது இருப்பதாக தெரியவில்லை. அவள் முகத்தில் அமைதி தெரிந்தது.
அன்பு திரும்பி டாக்டரைப் பார்த்து ‘‘நா உங்கள மாறி டாக்டர் ஆகணும்'' அவர் புன்னகைத்துக்கொண்டு ‘‘நல்லா படிங்க..''. என அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார். அன்பு சிரித்துக் கொண்டான்.
கயலும் சிரித்துக்கொள்ள, இருவரும் அங்கிருந்து வெளியே வந்தார்கள். கயல் வழக்கம் போல் இரண்டு மாத்திரை டப்பாக்களை வாங்கிக்கொண்டு, அவர்கள் எதையோ ஒரு காகிதத்தில் எழுதித் தந்ததைப் பெறுவதைக் கவனித்தான். இருவரும் மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தார்கள்.
கயல் அவனை இறுக்கமாகப் பிடித்திருந்தபோது பதிந்த விரல் தடங்கள் இப்போது சிவந்திருந்தது. அன்பு அதை தேய்த்துக்கொண்டான். அவன் இப்போது தன் அம்மா மெதுவாக நடப்பதை கவனித்தான்.
‘‘ம்மா..ரோல் கேக்கு''?
கயல் அவனை பார்த்து சிரித்துவிட்டு ‘‘சரி வா.. வாங்கிதரேன்'' .
வானில் வெளிச்சம் நிரம்பி நீலமாக இருந்தது. அதில் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் மின்னி மறைவதை கண்ட அன்பு மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ‘‘ம்மா.. ம்மா ..அங்க பாரு... அங்கபாரு.. பகல்ல நட்சத்திரம் தெரிது...''என ஊர் கேட்கக் கத்தினான்.
அரவிந்தன் ( 25 ) கோவில்பட்டிக்காரர். கோவை பி.எஸ்,ஜி கல்லூரியில் காட்சி தொடர்பியல் படித்தவர். கல்லூரிப் படிப்பின்போது கதைகள் எழுதுவதையும், படங்கள் பார்ப்பதையும் பொழுதுபோக்காக வைத்திருந்தவர். கூழாங்கல் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். கதைகள் மற்றும் திரைக்கதைகள் எழுதுவதே விருப்பம்.
ஜனவரி, 2023.