கண்ணு சிமிட்டறாம்மா. தலைய லேசா தூக்கி ரூம சுத்திச் சுத்தி பாக்குறா. உன்னத்தான் தேடுறான்னு நினைக்கிறேன்'
ரூபாவுக்கு மலைப்பாக இருந்தது. அவள் பதில் சொல்லிச் சொல்லி களைத்துப் போயிருந்தாள். முத்து வேறு அழைத்துக் கொண்டேயிருந்தான்.
‘இப்ப என்னடி பண்ணட்டும் நான்? கிளம்பி வந்துடட்டுமா'
‘இல்லல்ல. நீ பாரு... தண்ணி கொண்டு போய் குடுத்தேன். அப்பவும் உத்துப் பாக்குறா.. உன்னப் பாக்கணும் போல'
‘சரிடீ. நான் ஒரு மணிக்குலாம் வந்துடுவேன். பயமா இருந்தா கீழ அலமுக்கா இருப்பாங்க. நான் சொல்லிருக்கேன். கூப்டு படுத்துக்கோ. உப்புமா கிண்டி சட்னி அரைச்சுக்கோ’
போனை வைத்துவிட்டு வேனை நோக்கி நடந்தாள். முத்து மரத்தில் சாய்ந்து புகைத்துக் கொண்டிருந்தான். ‘எவ்வளவு நேரம் பேசிட்டு இருப்ப? டைம் ஆச்சுல்ல?‘ என்றான்.
‘நீதான் பீடி குடிக்க நிறுத்துன.. நானா நிறுத்தச் சொன்னேன்.. எடு கிளம்பலாம்' என்றாள். தூரத்தில் மாரியம்மன் பாடல் ஏழெட்டு ஒலிபெருக்கிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அதற்குள் இளைஞர்கள் கூட்டம் கூடத் தொடங்கிவிட்டிருந்தது.
உள்ளே ஏறியதுமே மீண்டும் போன் வந்தது. இரத்தினம் அழைத்திருக்கிறான். இவளுக்கு எரிச்சலாக இருந்தது. போனை எடுத்து ‘சொல்லுங்க சார்' என்றாள்.
‘ஆங்.. ரூபா.. அதான் நேத்து கேட்டுருந்தேனே..'
‘அதான் சார்.. அப்பவே நான் சொல்லிட்டனே.. நாடகம்லாம் சரியா வராதுனு‘
‘இல்ல ரூபா. நாளைக்கு நடிக்க வேண்டிய பொண்ணுக்கு திடீர்னு உடம்பு முடியாம போய்டுச்சு. கடைசி நேரத்துல எங்கயும் ஆள் கிடைக்கல. கொஞ்சம் யோசி'
‘இல்ல சார், சரியா வராது. நான் முடியாதுனு சொல்லியும் நீங்க திரும்ப திரும்ப கேட்குறது ரொம்ப சங்கடமா இருக்கு. புரிஞ்சிக்கோங்க‘
‘ப்ளீஸ் ரூபா... என்னால அலைய முடியல. பழசுலாம் கொஞ்சம் நினைச்சிப் பாத்து யோசிச்சுச் சொல்லு. நான் திரும்பக் கூப்பிடுறேன்‘ என்று அவன் போனை வைத்ததும் இவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
அம்மாவிடம் இரத்தினம் போன் செய்ததைச் சொன்னால் ‘ஒரு காலத்துல நமக்கு சோறு போட்டவங்கடி. இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசலாமா? எனக்காகவாவது போய் நடிச்சுக் குடுத்துட்டு தான் வர்றது' என தலையைக் கோதுகிறாள்.
கடந்த இரண்டு மாதங்களாகவே பெரிய தொல்லையாக இருக்கிறான். நாடகமெல்லாம் இப்போது யார் பார்க்கிறார்கள். நடன நிகழ்ச்சியென்றால் மாலை ஏழு மணிக்குத் தொடங்கி பத்துக்கு முடிந்து விடும். வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் தூங்கலாம். காலையில் எழுந்து அம்முவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு மாவு அரைத்து குகை ஏரியா முழுக்க விற்கலாம் அதில் தினசரி கொஞ்சம் தேறும். கூட ஆடும் பையன்களும் பரிச்சயமானவர்கள். வெளியாட்களை அருகில் நெருங்க விடாமல் காப்பார்கள். களைப்பாய் உணரும்போது மேலே ஏறும்வரை அட்ஜஸ்ட் செய்து ஆடுவார்கள்.
கிளாமர் பாடல்களில் அங்கே இங்கே கை வைக்க வேண்டிருக்கும். ‘சாரிக்கா' என்பார்கள். ஆனால் நாடகமென்றால் நிலைமை வேறு. முதல் நாளே ஒத்திகைக்குப் போய் உட்கார வேண்டும். பெரும்பாலும் கிராமப்புற நாடகங்களில் உள்ளூர் ஆண்கள் தான் மெயின் ரோலில் நடிப்பார்கள். நாடகமென்றால் பூர்ணம் விஸ்வநாதன், விசு மாதிரியான நாடகங்கள் இல்லை. பழைய நான்கைந்து மசாலாப் படங்களை சரிவிகிதத்தில் கலந்து ஹீரோ, வில்லன், ஆபாசக் காமெடி டிராக் என வேறு வகையறாவாக இருக்கும். வில்லன் புலி வாயைத் திறக்கும் திரையிலிருந்து வெளியே வந்து கூட்டத்தைப் பார்த்து ஹுஹாஹாஹா என்று சிரிப்பான். சின்னக் குழந்தைகள் அலறியடித்து ஓடும். பெரும்பாலும் ஒரு நாயகியை துகிலுரியும் காட்சி, பண்ணையார், மைனர்களோடு ஏழை வர்க்கத்தின் பகை என ஐம்பது வருடங்களுக்கு பிந்தையதாக இருக்கும். ஹீரோவுடன் நாலு டூயட் பாடி கண்கள் செருகப் பேச வேண்டும். ஹீரோவோ வில்லனோ தகப்பனோ அருகில் வரும்போதே கனமாக மது நாற்றம் வீசும். டூயட்டின் போது ஹீரோயினை தூக்கிச் சுற்ற தைரியம் வேண்டுமாம். இவள் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வாள்.
இப்படித்தான் ஒருமுறை மத்தூருக்குப் போயிருந்தபோது கதாநாயகனுக்கு ஐம்பதுக்கும் மேலிருக்கும். இவள் வேகத்துக்கு மாருகோ மாருகோ பாடலுக்கு நடனமாட முயற்சித்து உடலைக் குலுக்க அங்கேயே மாரடைப்பு வந்து மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். 11 மணிக்கு மேல் ஆரம்பமாகும் நாடகம் விடியற்காலை நான்கு, ஐந்து வரை கூட நடந்து கொண்டிருக்கும்.
தனி இருக்கையில் அமர்ந்து யோசித்தபடி வந்தவள் சிநேகா தன்னருகில் வந்தமரும்படி சைகை செய்ததில் கவனம் கலைந்தாள். இவளைப் போன்றே கரூரிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த மற்ற நடனப் பெண்களில் தெரியாத ஓரிருவரை நோட்டம் விட்டாள்.
‘எங்க உஷா வரலையா?'
‘அவ வரலக்கா'
‘ஏன் என்னாச்சு.. நேத்து கூட போன்ல வர்றேன்னு சொன்னாளே'
‘அவ திருச்சி பாலா குரூப் கூப்டாங்கனு போய்ட்டா'
இவள் எதையோ புரிந்து கொண்டது போல தலையாட்டினாள். ஆமாம் பாலா குரூப்பில் கொஞ்சம் வசதி அதிகமாகத்தான் இருக்கும்.
‘இதப்பாரு.. முத்து இந்த தடவையாவது பாத்ரூம் இருக்குற வீடா பாத்து அரேஞ்ச் பண்ணு. போன தடவ மெட்டாலா பக்கம் என்னவோ ஒரு ஊருக்குப் போனமே.. அது எங்க?'
‘மதுராயனூர்' என கலாதேவி எடுத்துக் கொடுத்தாள்.
‘ஆமா.. அங்க நீ பாட்டுக்கு எல்லாம் சொல்லிவயாச்சின்னு வண்டிய நிறுத்திட்டு பசங்களோட சரக்கு போட கிளம்பிட்ட.. அந்தம்மா என்னடான்னா பாத்ரூம பூட்டி சாவிய எடுத்துட்டு எங்கயோ கிளம்பிடுச்சி. நாலாபக்கமும் நெருக்கட்டமா வீடு வீதிவீதியா பிரிஞ்சிக் கெடக்கு. மருந்துக்கு கூட ஒரு காடுகரையக் காணோம். பயலுவ வேற வண்டில சுத்தி சுத்தி வர்றானுங்க.. நாங்க எவ்ளோ அவஸ்தப்பட்டோம் தெரியுமா?'
முத்து பதிலேதும் சொல்லாமல் வண்டி ஓட்டுவதிலேயே மும்முரமாக இருந்தது இவளுக்கு கோபத்தைக் கிளப்பியது.
மீண்டும் சத்தமாக அழைத்தாள்.
‘நாங்கேட்குறது காதுல விழுவுதா இல்லையா?'
‘கேட்டுட்டுத்தான் இருக்கேன் ரூபா. ஒரு பங்ஷனுக்குனு போனா இருந்தும் இருக்கும். இல்லாமலும் இருக்கும்.நானும் எல்லா இடத்துலயும் வசதி செஞ்சித்தர சொல்லிட்டுத்தான் இருக்கேன். இத்தன வருஷமா வர்ற போற.. இப்பதான் புதுசா ஆடுற மாதிரி பண்றியே'.
இவள் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அவன் சொல்வதும் உண்மைதான். பாலு குரூப்பில் எல்லா வசதிகளும் இருக்கும். நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கே கொண்டுபோய் விடுவான்.ஆனால் இரவுகளில் தயாராக ரூம் எடுத்து வைத்திருப்பான். உடன் தங்கச் சொல்லி தொல்லை செய்வான். ஆனால் முத்து அப்படியில்லை. பணம் தான் பிரதானம் அவனுக்கு. செட்டில் செய்ததும் நீ யாரோ நான் யாரோ.. அடுத்த நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது தான் அவன் நினைவு வரும்.
‘காரியக்காரன்...' என முணுமுணுத்தபடி சன்னலுக்கு வெளியே திரும்பி விழாக்கோலத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். சில்வர் காகிதங்கள் தோரணங்களாக அங்குமிங்கும் தொங்கிக் கொண்டிருந்தன. இளைஞர்கள் போதை குறையக் குறைய பொட்டல்வெளிகளில் அமர்ந்து ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பலூன் வாங்க வந்தப் பிள்ளைகள் தேரிழுக்க வாகாக மின்கம்பங்களில் ஏறி ஒயர்களை அவிழ்க்கும் ஊழியர்களைப் பார்த்தவாறு நின்றிருந்தனர். கனமாய் பரவும் கறிக்குழம்பின் வாசம் நாசிக்குள் நுழைந்து அதகளம் பண்ணியது. ஆட வந்த இடங்களில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. சாப்பிட்டால் உடலை வளைத்து ஆடவோ நளினமாக அசைக்கவோ முடியாது. அதுவுமின்றி இதுபோன்ற கழிவறைகளற்ற இரவுகளும் ஒரு காரணம்.
இங்கிருந்த நினைவுகளிலிருந்து விடுபட்டு மீண்டும் அம்மாவிடம் புகுந்தாள். குறுஞ்செய்தியொன்றை அம்முவுக்கு தட்டி விட்டாள்.
‘ஆர் யு ஆல்ரைட்?'
உடன் ஆல்ரைட் என்ற பதிலுடன் அம்மாவின் போட்டோவும் வந்தது.
பார்வதி நடிக்க வருகிறாள் என்றால் ஊர்ப்புறங்களில் கூட்டம் அள்ளும். சேலம் முத்தமிழ் நாடக மன்றத்தின் முக்கிய நடிகைகளில் ஒருத்தியாகத் திகழ்ந்தவள் இன்று கட்டிலில் வத்தலாகக் கிடப்பதைப் பார்க்கையில் அவளுக்கு கண்கள் கனத்தன. எடுத்த சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல் போனதில் வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகிறாள். நல்லவேளையாக இன்று அம்முவுக்கு பள்ளி விடுமுறை. அவள் தன்னைவிட நன்றாக பார்த்துக் கொள்வாள் என்பதில் பூரண நிம்மதி.
வேன் கோயிலை ஒட்டியிருந்த கலையரங்கத்தின் அருகில் சென்று நின்றது. இதே கலையரங்கம் அவளது சிறுவயதின் நினைவிலாடியது. நாடகங்களில் பார்வதி பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது கூட வந்திருக்கிறாள்.
வள்ளித் திருமணம், அர்ஜுனன் தபசு, கர்ண மோட்சமென பல்வேறு வரலாற்று நாடகங்களில் ஹீரோயின் அவள் தான். நாடக உலகில் ஒரு புயலாக அவள் பரபரத்துக் கிடந்த காலமது.
மதுரை சென்ட்ரல் அருகில் கணேசமூர்த்தி நாடக சபாவுக்காக சென்று நளாயினியாக நடித்த போது பல்வேறு காலத்திய நாடகச் செம்மல்களிடமும் விருது வாங்கியிருக்கிறாள். அதன்பிறகு சினிமா ஆசையில் சென்னை சென்றார்கள். அங்கிருந்த நான்கு வருடங்களில் ஒன்றிரண்டு படங்களில் துணை நடிகையாக தலை காட்டியிருக்கிறாள்.
எதிர்பார்த்தது போல இங்கிருந்து பெரிய இடத்திற்கு முன்னேற முடியாத சோகத்தோடு இரயிலில் பெட்டி கட்டிக் கிளம்பிய போது இவள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். சன்னலுக்கு வெளியே பார்த்தபடி 'அப்படியொண்ணும் சினிமா நல்லாலாம் இல்லடி.. நாடகம் அளவுக்கு வர்றாது' என ஏமாற்றத்தை ஜீரணிக்கும் வார்த்தைகளால் நிரப்பியபடி வந்த நாள் இப்போதும் நினைவிருக்கிறது.
அதன்பிறகு நடனம் ஆடுவதற்கு முன்புவரை கொஞ்சகாலம் பார்வதியின் இடத்தை ரூபாவும் நடித்து நிரப்பிக் கொண்டிருந்தாள்.
பொழுது சாய்ந்து இருள் கவ்வியதில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளனைத்தும் ஜரூராக நடந்து கொண்டிருந்தன.
போன் பைக்குள் அதிரவே எடுத்துப் பார்த்தாள். மீண்டும் இரத்தினம் தான் அழைத்திருந்தான். அழைப்பை எடுக்காமல் சலிப்போடு உள்ளே வைத்தவள் மேடை அலங்காரத்தை கவனிக்கத் தொடங்கினாள்.
ஜிகினாத்தாள்கள் வண்ண சீரியல் பல்புகளின் வெளிச்சத்துக்கேற்ப டாலடித்தன. மேடையின் பின்தட்டியில் சன் டிவி புகழ் ஆர்.கே. முத்து வழங்கும் ‘தி கிரேட் தில்ரூபா' என்ற பேனர் நான்கு புறமும் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது. வலசையூர் பாபு தான் வழக்கம் போல ஒலி-ஒளி அமைத்திருந்தான். தீவிர ரசிக வட்டங்கள் மேடையைத் தாங்கிப் பிடித்தவாறு இப்போதே இடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் தூவப்படும் பூக்களை எடுத்துத் தரச் சொல்லி அடம்பிடிப்பவர்கள் அவர்கள். அசுரவேக ஆட்டத்துக்கு நடுவில் மேடை ஓரமாய் நின்று அவர்களோடு சிநேகா நித்யஸ்ரீ போன்றோர் வெகுச்சுலபமாக செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். இவளுக்கு அப்படியான செய்கைகள் எதிலும் விருப்பமில்லை. பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் பொத்தாம்பொதுவாக எல்லாரையும் பார்த்து சிரித்தபடி ஆடிவிட்டு இறங்கிவிடுவாள். இவளது கண்டுகொள்ளாமை குறித்த கோபத்தில் சிலர் சொற்களை உமிழ்வார்கள்.
‘ஏய் இந்தப் பக்கம் திரும்புடி'
‘காசு வாங்குனல்ல.. இன்னும் நல்லா குனிஞ்சு ஆடு'
சிலர் அங்கங்களின் மீது குறிவைத்து கூழாங்கற்களை எறிய பிரச்னையாகி நிகழ்ச்சி நின்றெல்லாம் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் பேசாமல் நாடகங்களுக்கே திரும்பி விடலாமா எனத் தோன்றும். பார்வதியிடம் அன்றிரவு வீடு திரும்பியதும் சொல்லியழுவாள்.
‘அதுக்குத்தான்டி இது வேணாம்னு சொல்றேன்' என்பாள் அவள்.
பார்வதி அளவுக்கு நாடகத் தொழிலை காதலித்தவர்கள் யாரும் இருப்பார்களா என இவளுக்கு இப்போதும் சந்தேகம் தோன்றும். துக்கடா நாடகமாகவே இருந்தாலும் தன் பேரழகால் தேர்ந்த வசன உச்சரிப்பால் தூக்கி நிறுத்தும் வல்லமை அவளுக்குண்டு. குறிப்பாக சோகக் காட்சிகளில் நிஜம் போலவே கண்ணீர் சிந்தியழுது தாய்மார்களின் கூட்டத்தை ஒரு இன்ச் கூட நகரவிடாமல் செய்து விடுவாள். இதனாலேயே இவளுக்கு பேசியத் தொகையை விட கூடுதலாகக் கொடுத்துப் பாராட்டிய கம்பெனிகள் நிறைய உண்டு.
ரூபா வயிற்றிலிருக்கும்போதே அவளது கணவன் அவளை விட்டுப் பிரிந்துச் சென்றுவிட கம்பெனிக்காரர்கள் தான் அவளை அரவணைத்து பாதுகாப்பு தந்தார்கள்.
சிறுவயதிலிருந்தே ரூபாவும் அவள் நடிக்கும் நாடகங்களுக்கு உடன் சென்றதிலும் அம்மாவின் நடிப்பைப் பார்த்து அவளது பாவனைகளில் சிருங்காரத்தில் ஊறியதிலும் தானுமொரு கலைத்தாயின் மகளாக வேண்டுமென சபதமெடுத்தவளை பார்வதி தடுக்கவெல்லாம் இல்லை.
‘இங்க பாரு கண்ணு.. எந்த வேசமா இருந்தாலும் பயப்படக் கூடாது. பயந்தா நீ தோத்துட்டனு அர்த்தம். கண்ட எடத்துல கை வைப்பானுங்க கிள்ளுவானுங்க டிராமா முடிஞ்சதும் வர்றியாம்பானுங்க.. முடியாதுனு சொன்னா எல்லா விதத்துலயும் மிரட்டுவானுங்க. எதுக்கும் அசரக்கூடாது. சிரிச்சிக்கிட்டே நழுவத் தெரியணும். கோவப்பட்டு பதிலுக்கு நீயும் முறைச்சே.. எல்லாம் போச்சு.. பெரிய பிரச்சினையாகி நமக்கு வாய்ப்பு குடுத்த கம்பெனிக்காரர சங்கடத்துல நெளியிற மாதிரி பண்ணிடக் கூடாது. இது ஒண்ணு மட்டும் மனசுல வச்சிக்க' என்றாள்.
அவள் சொன்னபடியே எல்லாம் நடந்தது. அவள் சொன்னவாறே அனைத்தையும் சமாளித்தாள். ஆனால் அதன் பிறகான நாட்களில் நாடக மோகம் குறைந்து நடன நிகழ்ச்சிகளின் பக்கம் மக்கள் இரசனை மாறியது. நாடகங்களில் நடிப்பதை விட இரு மடங்குத் தொகை நடன நிகழ்ச்சிகளில் வருவதாகப் பேசிக் கொண்டார்கள். வாய்ப்புகள் குறைந்ததில் இவள் நடனமாடச் செல்வதாகக் கூறியபோது பார்வதி பிடிவாதமாக மறுத்தாள். ‘வௌங்கவே வௌங்காதுடி.. ரெண்டும் ஒண்ணாகவே முடியாது' என கோபித்துக் கொண்டு மூன்று நாட்கள் பேசாமலிருந்தாள். ஆனால் வீட்டு வாடகை, மளிகைச் செலவு, மருத்துவச் செலவெல்லாம் வேறு வழியின்றி அவளை மௌனமாக்கியது.
‘அக்கா.. உம் பாட்டு தான்.. ' என பின்னாலிருந்து கலாதேவி நெட்டித் தள்ள நினைவுகளை உதறித் தள்ளிவிட்டு மேடையேறினாள்.
‘மேல்நாட்டுப் பெண்களிடம் பார்க்காத பேரழகை..' இரஜினிக்கு ஜோடியாக ஏற்கனவே இருவர் ஆடிக் கொண்டிருக்க மூன்றாவதாக இவளும் போய்ச் சேர்ந்து கொண்டாள்.
கீழே வந்ததும் போனை எடுத்துப் பார்த்தாள். அம்முவிடமிருந்து ஆறு மிஸ்டுகால்கள். பதறியபடி திரும்பவும் அழைத்தாள்.
‘ஏன்மா போன பக்கத்துலயே வச்சிருக்க மாட்டியா.. பாட்டிக்கு நினைவு தப்பிடுச்சு. அலமு அக்கா ஆம்புலன்ஸ் கூப்பிட போயிருக்காங்க' என்றதும் வெலவெலத்துப் போனாள்.
‘நாங்க சேலம் ஜி.ஹெச் தான் கூட்டிட்டுப் போறோம். நீ கிளம்பி வா' என்றவள் ரூபாவின் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்திருந்தாள்.
நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது.இவள் ஆட வேண்டியதில் இன்னும் ஏழு பாடல்கள் மீதமிருக்கின்றன. முத்துவிடம் போய் கேட்டால் சிடுசிடுவென்பான். அடுத்த நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் போக்கு காட்டுவான். கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கிக் கிளம்பினாலும் இதையே சாக்காக வைத்து ஐந்தில் இரண்டாயிரத்தை கழித்துக் கொண்டு தருவான்.
ரூபாவுக்கு கண்கள் கலங்கி நா வறண்டது. ‘இதுக்கு மேல கஷ்டம்தான்ம்மா.. இன்னும் ரெண்டு மாசம் தான்.. இருக்குற வரைக்கும் பாத்துக் கோங்க...' என டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. விஷயம் கேள்விப்பட்ட மற்ற பெண்கள் ‘நாங்க ஆடிக்கிறோம்.. கிளம்புங்கக்கா' என சமாதானமாகச் சொன்னார்கள். ஆனால் பேமெண்ட் குறையுமென்பது அவர்களுக்கும் தெரியுமாதலால் ஆறுதலாக தட்டிக் கொடுத்து மாற்றி மாற்றி அருகில் நின்றார்கள். அடுத்தடுத்த பாடல்களில் கைகளையும் கால்களையும் இசைக் கேற்ப சுழன்று சுழன்று ஆடியவளின் மனம் முழுக்க பார்வதியை நோக்கியே நகர்ந்து கொண்டிருந்தது.
சிறுவயதில் பார்த்துக் கொள்ள ஆளின்றி நாடக மேடைகளுக்கு தன்னையும் இழுத்துக் கொண்டு ஊர் ஊராக அவள் அலைந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து போர்வையை போர்த்தியபடி கண்கள் சொக்க அம்மாவின் நடிப்பை கண்டு களித்ததும் ஞாபகத்தில் ஆடியது.
நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கியதும் தட்டியோரம் சலனமின்றி நின்று கொண்டாள். விழா கமிட்டி கணக்கு முடிக்க நேரமாகும் போலிருந்ததால் பையன்கள் முன்பாகவே பேசி பணத்தை வாங்கித் தந்தார்கள். ஆத்தூர் செல்ல கடைசி பேருந்து இருப்பதாக குறிப்பு தந்தார்கள். ஆத்தூர் போய்விட்டால் போதும் அங்கிருந்து சேலம் செல்லும் பஸ்ஸை பிடித்துவிடலாம். அவசர அவசரமாக ஒப்பனையைக் கலைத்து உடை மாற்றியவள் ஓடிப்போய் பேருந்தில் ஏறினாள். போனை எடுத்து கலங்கிய குரலைத் திருத்தி ‘அம்மு நான் வந்துட்டே இருக்கேன்டா.. பாட்டிய பாத்துக்கோ' என உரைத்து போனை வைத்த மறுநொடியே மீண்டும் ஒலித்தது. இரத்தினம் மீண்டும் அழைத்திருந்தான்.
அசுவாரஸ்யமாய் கட் செய்ய நினைத்தவள் ஒரு நொடி தாமதித்தாள்.போனை எடுத்து ‘நான் நடிக்கிறேன் சார்' என்றாள்.
விவசாயத்திலும் கவிதையிலும் ஆர்வம் கொண்டவர் ந.சிவநேசன். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூர். அரசுப்பள்ளி ஆசிரியர். கடந்த 12 வருடங்களாக கவிதைகள் எழுதி வருகிறார். பல்வேறு இதழ்களில் அவை வெளியாகி வருகின்றன. இவரது சிறுகதைகள் பல போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளன. 'கானங்களின் மென்சிறை' (படைப்பு பதிப்பகம்), ‘ஃ வரைகிறது தேனீ' (கடல் பதிப்பகம்) மற்றும் ‘இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை' (வாசகசாலை பதிப்பகம்) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
ஜனவரி, 2023.