சொல்

சொல்

Published on

சொல் ஒன்று, நகர்ந்து வந்து, காவல்துறை புலனாய்வு பிரிவினரின் காதுகளில் புகுந்து இடையறாது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தது.

என்ன என்று அறிந்து கொள்ள முடியாமல் காதில் புகுந்துவிட்ட சிறு பூச்சியைப் போலத்தான் இதுவும். எத்தனையோ விசாரணைகளை நடத்தி அதற்கான சாதனை விருதுகளை பெற்ற அந்த துறையால், இந்த சொல்லின் மர்ம முடிச்சின் அருகில் கூட செல்ல முடியவில்லை. அந்த சொல் தான் சுருக்கில் மாட்டிவிட புதிது புதிதாக முடிச்சுகளை இவர்களுக்காக தயாரித்துக் கொண்டிருந்தது. அந்த சொல் ஒரு சங்கேத சொல். விசாரணை அதிகாரி செழியனுக்குத்தான் இதில் பெரும் நெருக்கடி.

வடக்கிலிருந்து அப்பொழுது தான், அதிகாரி வந்திருந்தார். ஜார்க்கண்டில் பிறந்தவர். உருவம் வட கிழக்கு மாநிலத்தை ஒத்திருந்தாலும், அதிலிருந்தும் கொஞ்சம் வேறுபட்ட வித்தியாசம் அவரிடம் இருந்தது. மாவோஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தனக்கு சிறந்த அனுபவம் உண்டு என்பதை அடிக்கடிக் சொல்லிக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்.

ஒருமுறை மேலதிகாரி தனது வீர செயலை சொல்லத் தொடங்கிய போது ஒரு உண்மையை செழியனால் புரிந்து கொள்ள முடிந்தது. நாலுபக்கமும் வெடித்து பாய்ந்து வரும் குண்டுகளை சமாளித்து ரத்தம் கொட்டிக் கொண்டிருக்கும் உடலோடு முன்னேறியதாக அவர் கூறினார். அவருக்கு ஆங்கிலத்தில் போதிய பயிற்சி இல்லை. தட்டு தடுமாறி, சிரமப்பட்டு ஒவ்வொன்றாக சொல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு திகில் நிறைந்த இந்தி திரைப்படத்தின் சாகச காட்சி அவர் மனதில் ஆழமாக பதிந்திருக்க வேண்டும். அதை மேலும் காட்சிப்படுத்தி விவரிப்பதைப் போல விவரித்துக் கொண்டிருந்தார்.

மேலதிகாரி அந்தக் காட்சியின் கதாநாயகனாக தன்னை பாவித்து கொண்டு பேசுகிறார் என்பதை செழியனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் மேலதிகாரியின் பிரச்சனை வேறு. அவர் கூறும் அந்த சாகச செயலின் நாயகன் அவர் தான் என்பது மற்றவர்களுக்கு தெரியாமல் போய்விடுமோ என்ற  கவலையும் அவரிடம் தலைகாட்டியது. தன்னைப்பற்றி இடை இடையே கொஞ்சம் கூடுதலாகவும் அழுத்தமாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதன் பின்னர் தான் செழியனின் முழு கவனமும் அவரை நோக்கித் திரும்பியது.

மேலதிகாரி எப்பொழுதுமே சுறுசுறுப்பாக இருப்பதைப் போல தோற்றமளிக்க அதிகாரத் தோரணையை தனது  நடையில் காட்ட முயற்சி செய்வார். சில நேரங்களில் இவரது இயல்புக்குப் பொருந்தாத செயற்கையாக செழியனுக்கு இது தோன்றும். முதலில் அவர் நடந்து செல்லும் போது அவரது நடையை கவனிக்க தொடங்கியிருந்தான். அவர் கைககளை வீசி கம்பீரமாக நடப்பதைக் உற்றுக்கவனித்தான்.  சாப்பிடும் போது, தூங்கும் போது, அவர் சிறிது ஓய்வெடுக்கும் போது என்று அவரை சுற்றி சுற்றியே செழியனின் கவனம் சென்று கொண்டேயிருந்தது. ஆனால் அவரிடம் அவன் தேடிய ஒன்று மட்டும் கிடைக்கவே இல்லை. உடலில் எங்காவது, எந்த இடத்திலாவது குண்டடிபட்ட காயம் தெரிகிறதா? என்று தேடினான். அது மட்டும் அவனுக்கு கிடைக்கவே இல்லை.

மேலதிகாரி அலுவலகத்தில் காலடி வைத்த முதல் நாளின் காலை பத்திரிகைளில் மாவோயிஸ்டுகள்  மறைந்திருந்து தாக்கிய செய்தி வந்திருந்தது. அதில் வெளியிடப்பட்ட புகைப்படங்களிலும் ஒருவித செயற்கை தன்மை இருந்தது. காவல்துறையால்  எதையும் சுலபமாக செய்ய முடியும்.

தாக்குதலை பற்றிய அறிவித்த ஊடகங்கள் சங்கேத சொற்களைப் பற்றியும் குறிப்பிட்டு, அனைத்தையும் ஒருங்கிணைக்க ஒரு சங்கேத சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தது.  

மேலதிகாரி இதிலிருந்து தான் தலைமறைவு இயங்கங்கள் பற்றியும் அவர்களுக்கான சங்கேத மொழிபற்றியும் பேசத் தொடங்கினார். அதில் அபாரமான கற்பனை கலந்திருப்பதை சாதாரண மனிதர்களாலேயே புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதில் நிறைந்திருந்த அபாயத்தை யோசித்துப் பார்த்தான் செழியன்.

சில நேரங்களில் எதார்த்ததிலிருந்து விடுபட வைத்து புலனாய்வு என்ற பெயரில் இந்த அபாயம் வெகு தொலைவிற்கு  அழைத்து சென்றுவிடுகிறது. இதனால் ஏற்படும் மனித துயரங்கள் பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. இவ்வாறான விசாரணைகளில் எத்தனையோ குடும்பங்கள் அழிந்துவிடுகின்றன.

மேலதிகாரியின் புலனாய்வு உலகம் சங்கேத சொல்லிலேயே மையம் கொண்டிருந்தது. சங்கேத மொழி பற்றிய அனுபவ பின்னணி தமிழர்களுக்கு இருக்க முடியாது என்பதை முதலில் உறுதிபடக் கூறினார். இதை புரிந்து கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் மிகவும் மோசமான அபாயத்தை தமிழக காவல் துறை சந்திக்கப் போகிறது என்பதையும் எச்சரிக்கையாக குறிப்பிட்டார். விசாரணையை எவ்வாறு இந்த எச்சரிக்கையோடு நடத்துவது என்பது தான் செழியனுக்குப் புரியவில்லை.

விசாரணையில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என்றால் அதனை புலனாய்வு செய்வதற்கு பல்வேறு முறைகளும் அதற்கான துறைகளும் இருக்கின்றன. அவற்றின் உதவியை நாடி விசாரணையை முடிவுக்குக் கொண்டு வரலாம். இப்பொழுது எழுந்துள்ள பிரச்சனை வேறு. சொல்லில் மறைந்துள்ள ரகசியத்தைக் கண்டறிதல். இதற்கு என்ன வழி இருக்கிறது?

மேலதிகாரி இதற்கான பதிலையும் வைத்திருந்தார். சங்கேத சொற்களின் ஆழத்தைக் கண்டறிய முக்கிய மொழியியல் துறைகளின் உதவியைப் பெற வேண்டும் என்றார். முதலில் தமிழிலிருந்து ஆரம்பியுங்கள் என்று ஆலோசனை வழங்கினார். தமிழில் சொல்லாராய்ச்சியா?

செழியனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. மேலிட உத்தரவாயிற்றே. அவனால் சிரிப்பை வெளிகாட்டிக் கொள்ள முடியவில்லை. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். 

செழியன் கற்றது தமிழ் எம்.ஏ. தமிழ் புலவர்கள் சொல்லராய்ச்சியில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என்பதை அவன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான். ஒருவர் சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகம் தான். ஒரு சொல்லுக்கு எத்தனையோ அர்த்தங்களை தெரிந்து வைத்திருப்பவர்கள் இவர்கள். மொத்த தமிழ்கடலில் இந்த சங்கேத மொழியின் அர்த்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது.

இதைத் தவிர இதில் புலனாய்வுத்துறை மொழியியல் துறை கணினி ஆய்வாளர்கள் என்ற மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் மேலிடம் தெரிவித்திருந்தது. இதில் ஏற்படும் குழப்பங்களை கற்பனை செய்து பார்த்தான் செழியன். அவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

இன்றைய காவல் துறை பற்றி செழியன் சிந்தித்துப் பார்க்கிறான். காவல் துறை எதையும் சந்தேகப்படுவதை தன் கொள்கையாகக் கொண்டுள்ளது. குரங்கு உடலில் காயம் பட்டால் அதை தன் நகங்களால் நோண்டி நோண்டி காயத்தை அகலப்படுத்திக் கொள்ளும், அதைப் போலத்தான் போலீஸ்காரர்களின் சந்தேகமும்.

காவல்துறை கண்மூடித்தனமான சந்தேகங்களாலேயே கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. மனித உறவுகளை நாசப்படுத்துவதில் சந்தேகத்திற்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது.

அவன் பணியில் சேர்ந்த காலத்திற்கும் இன்றைய நிலைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை கணக்குப் போட்டு பார்க்கிறது மனம். காலம் ரொம்பவும் குழம்பி போயிருக்கிறது என்றால், காவல் துறையும் காவல்துறையின் புலனாய்வும் மிக மோசமாக குழம்பிக் கிடக்கிறது. அற்ப விஷயங்களில் கூட தலையிட முடியாத தடைகள் நிறைந்த குழப்பங்கள். இதில் புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.இதில் நடிகர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். 

ஆழம் தெரியாமல் இந்த குழப்பங்களில் சில நேர்மையாளர்கள் சிக்கிக் கொள்வது தான் வேதனைக்குரியது. முத்துக்குமரன் சார் வெளியிட்டவை அவன் மூளை நரம்புகளை வலிக்க வைத்தன, இப்பொழுதும் மண்டை ஓட்டுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. இந்தப் பணியில் இருப்பதை விட கௌரவமான முறையில் சீக்கிரம்

செத்துவிடலாம் என்று வாட்ஸப்பில் அவர் அனுப்பிய செய்தியை வாசித்த போது அவன் உடல் நடுங்கத் தொடங்கியது. அவர் அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்த வார்த்தைகளால் உருவான மரண பயம் அவன் உடல் முழுவதும் பரவியிருந்தது. சார் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார், அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஒவ்வொன்றையும் அவன் நன்கு அறிவான்.

எங்கே எந்த குழப்பம் நடந்தாலும் எல்லாவற்றையும் காவல்துறையின் தலையில் ஏற்றிவிட்டு ஆட்சியாளர்கள் தப்பித்து கொள்ளவே முயற்சிக்கிறார்கள். யாரோ செய்த தவறுக்கு முத்து குமரன் சார் பொறுப்பேற்கும் கட்டாயம். காவல்துறையில் சிலரால் தன் மனசாட்சியை கொலை செய்து கொள்ள முடிவதில்லை. இவர்களில் சிலர் மாரடைப்பால் இறந்து போகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காவல்துறையில் திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே முத்துக்குமார் சார் மீது  செழியனுக்கு ஈடுபாடு வந்துவிட்டது. அவரது இயல்பு அப்படிப்பட்டது. கருணையும் அன்பும் நிறைந்த கண்கள். அவரது மனைவியும் இரண்டு மகளும் கைப் பிடித்துக் கொண்டு, இந்தக் கைகளில்தானே என்று கேட்ட போது செழியன் வாய்விட்டு கதறி அழத் தொடங்கிவிட்டான். அந்த தருணத்தை நினைத்து பார்க்கிறான். முத்துக் குமார் சார் ஒருமாதிரி இருக்கிறது என்றார். குரலிலே ஒருவித சோர்வு இருந்தது. தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அவன் தண்ணீர் கொண்டு வருவதற்குள் அவர் சரிந்து விழத் தொடங்கினார். தாங்கிப் பிடித்தான். கைகளிலேயே உயிர் பிரிந்தது.

இந்த துயர மனநிலையிலிருந்து விடுபடுவதே

செழியனுக்கு பெரும் பிரச்சனையாகிவிட்டது. மாதங்கள் கழிந்தன. தூக்கம் வராமல் அவதிப்பட்டான்.  மனநல மருத்துவரை அணுக யோசித்தான். கடைசியில் அவனே தேவையற்றது என்ற முடிவுக்கும் வந்தான். அவன் மனப்பிரச்சனைகளை அவனே ஆராயத் தொடங்கினான். துயரத்தை வடிய வைக்கும் வடிகாலை மனம் தேடியது. ஏதாவது செய்தால் என்வென்று தோன்றியது. சென்னை பல்கலைக் கழகத்தில் மற்றொரு பட்டம் வாங்கும் நோக்கத்துடன் பணமும் கட்டினான். அதுவும் உளவியல் கல்வி. காவல்துறை பணியில் சேர்ந்தவன் எதைத் தான் செய்ய முடியும்? அவனால் படிப்பைத் தொடர முடியவில்லை. வேறு வழியில்லாமல் மனநலப்பிரச்சனைகள் குறித்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினான். சகமனிதர்களையும் சமுதாயத்தையும் புரிந்து கொள்ளாமல் வெறுப்பை உருவாக்கி கொள்வதின் விளைவுகள் எவ்வளவு மோசமானது என்பதை அவனால் இதில் புரிந்து கொள்ள முடிந்தது. நமது நாட்டில் இவை எல்லாம் ஏன் நிகழ்கின்றன?

செழியனுக்கு அந்த மாணவனின் முகம் ஞாபகத்திற்கு வருகிறது. குழந்தையின் கள்ளங்கபடமற்ற முகம். டெல்லியியில் ஒரு பல்கலைக் கழகத்தின் தலைவனாக தேர்வு பெற்றுவிடுகிறான். பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டான். அவன் மீது சுமத்தப்பட்ட குற்றமும் பயங்கரவாத இயக்கத்தின் சங்கேத சொல்லை பயன்படுத்தினான் என்பது தான். அவன் பயன்படுத்திய சொல் காஷ்மீர் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் சொல் என்பதற்கு சாட்சியங்களை தயாரித்து டெல்லி போலீஸார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.  அந்த சொல்லை எல்லோரும் பயன்படுத்தி தான் வருகிறார்கள், இத்தனைக்கும் இந்த சொல் சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் கூடுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சொல்லுக்கு வேறு இன்று விளக்கம் தரப்பட்டது.

தமிழ் நாட்டில் சங்கேத மொழியிலான இந்த ரகசிய சொல் குறித்த பிரச்சனை வந்த போதே அனுபவம் வாய்ந்த சில அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு அற்ப ஆயுள் தான் இருக்க முடியும் என்று மதிப்பிட்டிருந்தார்கள். பிரச்சனை தானாகவே மறைந்து போய்விடும் என்று நம்பிக்கை வைத்து, மௌனம் காத்து வந்தார்கள். ஆனாலும் இங்கும் ஒரு சிலர் அரசியல் காரணங்களுக்காக சங்கேத மொழியை கையில் எடுத்து கொண்டனர்.

சங்கேத சொல் ஊடகங்களில் தலைக்காட்டின. நடக்க கூடாதது நடந்து விட்டதைப் போல பரபரப்பு இதனால் உருவாக்கப்பட்டது. சிலர் நிரம்பவே கோவம் இருப்பதாகக் காட்டிக் கொண்டனர். பேட்டிகள் சில நேரங்களில் செய்தியாளர்களை பயப்பட வைத்தன. செய்தி சேகரிப்பாளர்கள் மட்டுமல்ல, செய்தியாளர்கள் கையிலிருந்த மைக்கும் பயந்து நடுங்கிப் போயின.

தொலைக்காட்சி கிளம்பியபோது விவாதங்கள் பயங்கரவாத சொல் குறித்த ஆராய்ச்சியில் இறங்கின. அன்றாடம் அவர்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும். பரபரப்பு என்பது இல்லை என்றால் ஊடகங்களில் எதுவுமே இல்லை என்ற நிலை. அப்படி ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் புதிதாக பரபரப்பை உருவாக்கிடும் திறமையை பெற்றிருந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் ரேட்டிங் தான் முக்கியம். பயங்கரவாத சொல் தொலைக்காட்சியின் ரேட்டிங்கை அதிகரிக்க செய்தது. செழியனிடம் அண்மைகாலமாக அவனையறியாமலேயே ஒரு குணமாறுதல் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. இளமை காலத்தில் இவன் கோபக்காரன். தனக்குப் பிடிக்காத எது நடந்தாலும். அந்த இடத்திலேயே அதை எதிர்த்துக் கேட்டுவிடுவான். கோபம் வந்தால் அவனுக்கு அறிவின் செயல்பாடு நின்று போய்விடும்.  எத்தனையோ முறை அடிதடிகளில் இறங்கியிருக்கிறான். இப்பொழுது அந்த செழியன் காணாமல் போய்விட்டான். காவல்துறையின் உள்உலகம் அவர்களின் நாடக மேடையில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டது.

இப்பொழுதெல்லாம் எதையும் யாரிடமும் வாய் திறந்து பேசுவது இல்லை. மேலதிகாரிகளின் மனநிலை என்ன என்பதை முதலில் புரிந்து கொண்டு அதற்கேற்ப பேச பழகி கொண்டவன். ஒருவிதத்தில் இது இவனுக்கு வசதியாகத் தெரிகிறது.  முழு புலனாய்வு துறையும் தீவிர புலனாய்வில் ஈடுபட்டிருக்கும், இந்த சங்கேத சொல்லை பற்றி சில மர்மங்கள் செழியனுக்கு தெரியத்தான் செய்யும். இவனுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பது தான் இவனுக்கு இப்பொழுது முக்கியமானதாகும். அவன் கவலை. வாய் தவறி கூட இந்த சொல் பற்றிய தன் அபிப்பிராயம் தன்னிடம் இருந்து வெளிப்பட்டு விடக்கூடாது என்பது தான்.

மனதில் ஒன்றை ஒளித்து வைத்துக் கொள்வது எத்தகைய சங்கடங்களைக் கொண்டது. எத்தனைக் காலம் தான் வாயைத் திறக்காமல் உம் என்று இருப்பது. அவனிடமிருந்த கலகலப்பும் உற்சாகமும் அவனை விட்டு வெளியேறிவிட்டது.  இந்த சூழலில் தான் விசாரணையை ஒரிரு நாட்களில் முடிக்க வேண்டும் என்று மேலிடம் மிகவும் கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தது. 

செழியன் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு வந்திருந்தான். போலீஸ் தயாரித்து தந்திருந்த முன் தகவல் குறிப்புகளுக்கும் அந்த வீட்டிற்கும் சம்பந்தமே இல்லை. வீடு விசாலமாக இருந்தது. நூறு ஆண்டுகளை கடந்தும் வாழும்  வசதியான ஒரு குடும்பத்தை நினைவு படுத்தியது.  செழியனும் அவரது உதவியாளரும் வீட்டுக்குள் செல்கிறார்கள். வெளிக்கதவு திறந்தே இருக்கிறது. உதவியாளர் ஐயா என்றழைக்கின்றார். வீட்டில் ஒரு வித அமைதி.

இதற்கிடையில் செழியனின் கண்கள் சுற்றியுள்ள சூழலை கவனிக்கின்றன. இவன் இதுவரை பார்த்திராத பாரதியார், பகத்சிங், மகாத்மா படங்கள் சுவரில் பொருத்தப்பட்டிருந்தன. எல்லாம் சுதந்திரப் போராட்டக் காலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். மிகவும் அரிதானவை. அதில் காந்தியின் படம் மிகவும் வித்தியாசமானது. அவரது சிரிப்பில் லயித்து நின்றுவிடுகிறான் செழியன்.

யாரது? குரல் உள்ளிருந்து கேட்கிறது. குரலில் கம்பீரம் இருந்தாலும் ஒருவித முதிர்ச்சி தெரிகிறது. செழியன் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான்.

செழியன் அவரை அறியாதவன் அல்ல. அவர் வெளிப்படுத்தும் சொல்லின் ஆழம் ஒவ்வொன்றும் எத்தகைய வலிமை கொண்டது என்பதை அவன் நன்கு அறிவான். இதனாலேயே நேர்மையாளர்களிடம் இவருக்கு தனி செல்வாக்கு எப்பொழுதும் உண்டு. ஓடிக் கொண்டிருக்கும் எந்த மனிதரை பிடித்து நிற்க வைத்து, அவர் சொல்வதை கேட்க வைத்துவிடும் திறன் அவருக்கு உண்டு.

அவரது சொற்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்த அரசு இயந்திரம் சந்தேகப்பட்ட அனைத்தையும் பதிவு செய்திருந்தது. அவை அனைத்தும் செழியனின் கைகளில் கோப்புகளாக இருந்தன. இந்த கோப்புகள் இப்பொழுது இங்கே இவனுக்குத் தேவைப்பட போவதில்லை. விசாரிக்காமலேயே இவரை பற்றிய விசாரணை முடிவை இவனை எடுக்க வைத்திருந்தது புலனாய்வுத் துறை. இது தான் காலம் இவன் தலையில் தூக்கி வைத்துள்ள தூக்க முடியாத சுமை.

அவரை பார்த்தவுடன்  பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாக படையெடுத்து இவனை ஆக்ரமித்துக் கொண்டன. நல்ல தமிழுக்காக ஒவ்வொரு  கூட்டமாக ஓடோடிச் சென்று கேட்ட  காலம் ஒன்றிருந்தது அவனுக்கு.  அந்த காலங்களில் இவரது உரையில் குற்றால அருவியைப் போல கருத்துக்கள் விழுந்து கொண்டே இருக்கும். இதில் குளித்து மகிழ்ந்திருக்கிறான். நேரம் போவதே தெரியாது. இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் பேசி முடிப்பார்.

செழியன் தன் கையிலுள்ள காகித்தை மீண்டும் எடுத்து படித்துப் பார்க்கிறான். அதில் தெளிவாக டைப் செய்யப்பட்ட வாசகங்கள். பல்வேறு இடங்களில் செயல்படும் பயங்கரவாத குழுக்களை இணைக்கும் சங்கேத சொல்லை இவர் பயன்படுத்தினார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த பயங்கரவாத சங்கேத சொல்லை மீண்டும் மனதுக்குள் கொண்டு வருகிறான். அந்த சொல்லில் எந்த பயங்கரவாதமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. எல்லோரும் பயன்படுத்தும் சொல் தான். இவனும் எத்தனையோ முறை பயன்படுத்திருக்கிறான். போலீஸ் அதிகாரிகளும் இந்த சொல்லை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது இன்று எவ்வாறு பயங்கரவாதிகளின் சொல்லாக மாறியது.

மனிதரை, ஒவ்வொருவராக சந்தேகப்பட்டு பயங்கரவாதிகள் என்று பட்டியலிட்டு சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இவர்களுக்கு எழுந்துள்ள சந்தேகம் அவனுக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சொல்லின் மீது சந்தேகப்படுகிறார்கள். அதை, பயங்கரவாத பட்டியலில் சேர்த்து விட்டார்கள். செழியனின்

மனதுக்குள் அருவெறுப்பு பரவத் தொடங்கியது.

ஏப்ரல், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com