இரவு நான் வீட்டிற்குத் திரும்பியபோது வழக்கத்தைவிட நேரம் அதிகமாகிவிட்டது. பொதுவாக இந்நேரம் படுத்திருப்பேன். இன்றோ மனசின் பாரம் மட்டுமீறி வரையறைகளைத் தகர்த்துவிட்டது. இனி இரவு சாப்பாடு; அம்மாவுக்குத் தொல்லை. நேரம் கெட்ட நேரத்தில் அடுத்தவர்களை இம்சிக்க வேலையற்ற ஒருவனுக்கு எந்த உரிமையும் இல்லை. என்ன செய்வது? இன்றைய தினத்தின் சாபம் இப்படி.
தெரு முச்சந்தியைத் தொட்டபோதே, வீட்டுத் திண்ணையில் 40 வால்ட் பல்பின் பரிதாபமான வெளிச்சம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம். ஏனோ அப்பாவின் அம்மைத் தழும்பு முகம் மனதில் தோன்றி மறைந்தது. சங்கடத்தையும் விநோதமான அச்சத்தையும் ஒரே நேரத்தில் உண்டுபண்ணும் சக்தி வாய்ந்த முகம் அது. மெதுவாக வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்தேன்.
‘கேதம்’ விழுந்த மாதிரி வீடு களையிழந்து கிடந்தது.
அப்பா மௌனம் தரித்து கல்தூணில் சாய்ந்திருந்தார். மூப்பின் தளர்ச்சி, காத்திருக்கும் ரிடையர்ட் அவர் கண்களில் தளர்ந்திருந்தது. திண்ணையின் மறுகோடியில் புராதனமான தாத்தா புராதனமான ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். அம்மா வழக்கம்போல் அடுப்படி இருளில்.. கமலா அக்கா நிலைப்படியில் சாய்ந்து உத்திரத்தில் குறிப்பாயிருந்தாள். பருக்கள் தோன்றிய அந்த அழகு மங்கிக்கொண்டிருக்கிறது. சிவகாமி தூங்கியிருக்க வேண்டும். ஆச்சரியம், கடைக்குட்டி சரவணன்கூட இன்னும் விழித்திருந்தான்.
நான் அடுப்படிக்குள் சென்று தட்டை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் பேசாதிருப்பதுதான் புத்திசாலித்தனம்.
யோசித்தபடி சாதத்தைப் பிசைந்தேன்.
நான் நினைத்த மாதிரி சரவணன் வந்தான்.
“என்னடா, என்ன விஷயம்?”
“எலிதான்...” சரவணன் உள்ளடங்கி ஒலித்தான்.
“எலியா?”
“ஆமா, எலிதான்.. தொல்லை தாங்க முடியலியாம்.. அப்பாதான்
சொன்னாரு.. அவரு ரூம் பூரா எலிப் புழுக்கை, அப்புறம் எலிக்குஞ்சு வேற.. குழியெல்லாம் வேற தோண்டிருக்கா.. அதான் அப்பாவுக்கு ரொம்ப கோவம்..”
சாதாரண எலிக்கு இப்படி ஒரு வல்லமையா? நம்ப சிரமமாயிருந்தது. முதலில் எலிகள், பிரச்னைக்குரிய ஜந்துக்களாகவே தோன்றவில்லை. வீடென்றால் வாசல்; அப்படித்தான் எலிகளும். ஆனால், திடீரென்று எலிகள் இனவிருத்தி செய்து வீடெங்கும் தென்பட பூதாகரமானது பிரச்னை.
நேற்று அம்மா அஞ்சரைப்பெட்டியைத் திறந்து கடுகுக் காக கையை விட, மொசுமொசுவென்று நெளிந்த எலிக்குஞ்சுகளைப் பார்த்துவிட்டு அலறிவிட்டாள். கமலா அக்காவின் கன்னங்களில் - ஏற்கெனவே அவை ஏக்கம் நிறைந்தவை - கீறல்களை உண்டாக்கி வெருள வைத்தது இதே எலிகள்தான்.
ஆரம்பத்தில் எலிகள் பொந்துகளைவிட்டு வெளிவர அஞ்சின. பகலில், துவாரத்தின் மேல் விளிம்பில் அபூர்வமாகவே தலையை நீட்டினாலும், மனிதத் தலை தெரிந்ததுமே விசுக்கென்று வளைக்குள் பதுங்கின. பின் இரவுகளில் மட்டும் அவை நடமாடின. அந்த நடமாட்டமும்கூட சந்தடி கேட்டால் சட்டென்று பதுங்கிவிடும். இந்த ஜாக்கிரதை உணர்வு சில நாட்கள்தான். பிறகு அவை வெளிச்சத்திலும் புழங்க ஆரம்பித்தன. அவற்றின் தாராள சஞ்சரிப்பில் வெளிச்சம்கூட பின்வாங்கிவிட்டது.
எலிகளின் தொல்லையை தீர்க்க முதலில் விரட்டி விரட்டி துரத்தினோம்; வேட்டையாடினோம். மிஞ்சியது தோல்விதான். எங்களது விரட்டலே அவற்றுக்கு பயிற்சிக்களமாக, அவை லாகவாமாக தப்பித்ததோடு அலட்சியம் செய்தன. முன்பெல்லாம் கம்பினால் தரையைத் தட்டியதுமே பொறி கலங்க ஓடியவை, இப்போது கம்பை விட்டெறிந்தாலும் ஓரப்பார்வை பார்த்துவிட்டு மந்தமாக நகர்கின்றன.
‘உண்மையில் எலிகள் சவால்கள்தான்’ என் புத்தியில் முதல் அடி விழுந்தது.
காலையில் அப்பா, அந்தக் கால அப்பா இல்லையா, கோட்டு வடிவில் தைக்கப்பட்ட சட்டையை மாட்டிக் கொண்டு ஆபிஸுக்குக் கிளம்ப ஆயத்தமானார். அன்றைய தினசரியை கையில் மடித்துப் பிடித்தபடி,
சட்டைப் பைக்குள் பேனாவை செருக, சட்டென்று, ‘ச்சீ.. த்தூ..’ என்று கத்தி எகிறிக் குதித்தார்.
சட்டையை அரக்கப்பரக்க கழட்டி வீசினார். பைக்குள்ளிருந்து சுண்டெலி ஒன்று தாவிப் பாய்ந்து மறைந்தது. அப்பாவுக்கு சன்னதம் வந்துவிட்டது. அம்மைத் தழும்புகள் துடித்துச் சிவக்க, எலிகளையும் வீட்டு நபர்களையும் மாறி மாறி திட்டத் துவங்கினார்.
“அட ஏண்டா கூறுகெட்ட மூதி.. வீணா அதுகள கரிச்சுக் கொட்டுறே.. உன் திட்டுக்குப் பயந்து அதுக செத்துடப் போவுதா என்ன.. இன்னக்கி நேத்து சமாச்சாரமா இது.. எலின்னா அப்பிடித்தான்.. மனுஷ வம்சம் மாதிரிதானே.. போவியா.. அந்தக் காலத்துல இப்பிடித்தான் ஆபீஸ் போற நேரத்துல தலப்பாகைய எடுத்து வச்சா, தலையெல்லாம் எலிக்குஞ்சு.. இதுக்கு யாரக் கோவிச்சு என்ன பண்றது.. ஜென்ம சனி தொலையட்டும்னு
வீசிட்டுப் போனேன்.. அப்புறமும் என்ன எலி இல்லாமயா இருக்கு..”
தாத்தா ஈஸிசேரில் கிடந்தபடி மெத்தனமாக அப்பாவுக்கு பதில் கொடுத்தார். அவரைப் பொருத்தமட்டில் எலிகளைப் பற்றிய சங்கடமே அவருக்கு இல்லை. எல்லாவற்றையும் பார்த்து சகித்துவிட்டவர். அப்பா ஓரப்பார்வையால் தாத்தாவை அடக்கிவிட்டுக் கிளம்பினார்.
சாயங்காலம் அப்பா வீட்டிற்குத் திரும்பி வந்த சமயம் அவர் கையில் ஒரு பொட்டலம் இருந்தது.
சரவணன் ரொம்பவும் குதூகலமாக அப்பாவிடம் குழைந்தான். நிச்சயம் அது ‘வசந்தா ஹோட்டல்’ அல்வாதான். சமீபத்தில் எவ்வளவோ தடவை கேட்டும் அவருக்கு இன்றுதான் மூட் வந்திருக்கிறது. அப்பா விசித்திரமானவர். யாரையும் கிட்டத்தில் அண்டவிட மாட்டார். இந்த சுபாவம் இயல்பா, அல்லது இடையில் ஒட்டிக் கொண்டதா? விடையற்ற புதிர்தான். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில்கூட கண்ணுக்குள் புலனாகாத சுவர் ஒன்று இருந்தது. எப்போதேனும் இரவில் மட்டும் அச்சுவர் அகல விரியும். மற்றபடி அது கெட்டித்தட்டி உறைந்தே நிற்கும்.
“டே.. டே.. அதைப் பிரிக்காதே, சனியனே கைய கால வச்சுக்கிட்டு செவனேன்னு இரேன்..”
சரவணன் ஒடுங்கி நகர்ந்தான். அதில் என்ன இருக்கிறது? அந்த எதிர்பார்ப்பு என்னிடமும் இருந்தது.
“ஏண்டா அவன திட்டுறே.. அதுல அப்பிடி என்ன எழவுதான் இருக்கு..” கேட்டது தாத்தா.
“எலி மருந்து..”
“எலி மருந்தா, எதுக்கு?”
“சோத்துல பெசஞ்சு திங்கதான்..” வக்கரித்தார் அப்பா. தாத்தா எதுவும் பேசாமல் சேரில் சாய்ந்துகொண்டார்.
அப்பா திண்ணையில் உட்கார்ந்து பழைய மண்சட்டி ஒன்றில் எலி மருந்தைக் கொட்டினார். பிறகு, சிறிய தென்னை ஓலையால் எலிகளின் வளையைச் சுற்றிலும் அநேகமாக அவை நடமாடும் இடங்களிலும் மருந்தைத் தெளித்தார். மாபெரும் காரியத்தை முடித்துவிட்ட திருப்தியுடன் மீண்டும் திண்ணைக்கே வந்து சாய்ந்தார். அம்மா, விஷம் என்றதும் முதலில் கொஞ்சம் மிரண்டு போனாள். ஆனால் எந்த எதிர்வாதத்தையும் காட்ட வில்லை.
மறுநாள் காலை அப்பாவின் முகத்தில் வெற்றியின் சின்னங்கள் துலங்கின. ஒரு பிரியத்துடனும் உற்சா கத்துடனும் அங்கங்கே செத்துக்கிடந்த எலிகளை இடுக்கியால் பிடித்து குப்பையில் கொட்டினார். ஒத்தாசைக்கு வந்த சரவணனின் உச்சந்தலையில் தட்டிக் கொடுத்து தன் பிரியத்தையும் காட்டினார்.
ஆனால், எல்லாம் சொற்ப நாள்தான். மரண விகிதத்தைவிட உற்பத்தியின் விகிதம் கூடி, எலிகள் எப்போதும் கொட்டமடித்தன. அது மட்டுமின்றி, கண் மங்கிப்போன தாத்தா பல்பொடி என நினைத்து எலி மருந்தை பல்துலக்கி மயங்கி விழ, களேபரமாகிவிட்டது. வழக்கமான செலவுகளுடன் தாத்தாவின் வைத்தியச் செலவும் சேர, அப்பாவின் முகம் மேலும் சிடுசிடுத்தது. அத்துடன் எலி மருந்துத் திட்டம் கைவிடப்பட்டது.
மிரட்ட ஆளற்று ரொம்ப தெம்போடு எலிகள் திரிந்தன. மற்றவர்களைவிட அப்பா சதா எலிகளைப்பற்றி யோசித்ததால், எலிகள் அவர் நினைவின் ஒருபகுதியாகவே மாறிவிட்டது. இயல்பான முசுட்டுத்தனத்துடன் இந்த குணமும் இணைய, அப்பாவின் முகம் மேலும் திகிலூட்டியது.
ஒருமுறை பேச்சின்போது எலிப்பொறி வாங்கினால் பிரச்னை தீரும் என அம்மா சொன்னாள். நியாயமான யோசனைதான். அடுத்த நாளே எலிப்பொறி வந்தது.
அது கூண்டு எலிப்பொறி. எனக்கு அதில் முழுத்திருப்தியில்லை. இந்தப் பொறியில் எலி உயிருடன் தப்பிக்க நிறைய வாய்ப்புகள் அதிகம். இதற்குப் பதிலாக, செங்குத்துப் பலகையுடன் வளைவான இரும்புக் கம்பி பொருத்திய பொறி என்றால், சிறப்பாக இருந்திருக்கும். அதில் நிச்சயம் எலியின் கழுத்து நெரிந்துவிடும். ரொம்ப அபூர்வமாகத்தான் சில எலிகள் தப்பிக்கும். ஆனால் அப்பா என் அபிப்ராயத்தை மதிக்கவில்லை.
சரவணனைப் பொருத்தவரை இது விளையாட்டு. ஆனால் கமலா அக்காவுக்கு எலிகள் குறித்து நிஜமான கவலையும் அக்கறையும் உண்டு. அம்மாவும் அக்காவும் தனித்திருக்கும் சமயங்களில் எலிகளின் பயம் குறித்தே பேசித் தீர்த்தனர்.
புது எலிப்பொறி இரவில் அலறிப் புடைத்து எழ வைத்தாலும் உத்தமமான முறையில் செயல்பட்டது. ஆனால் மாற்றி மாற்றி ஆமைவடை, தேங்காய் துண்டு வைக்கும் வேலையில் அம்மாவின் தூக்கம் கனவாகிவிட்டது.
சில நாட்களில் எலிகளும் சளைக்கவில்லை. பொறி வைக்கப்படும் இடங்களை அவை சீண்டவே இல்லை. அடுத்து, பொறியில் சிக்காமல் தின்னும் பொருளை எப்படிக் களவாடுவதில் எனக் கற்றுக்கொண்டன. விஷமும் நீர்த்துப் போனது; பொறியும் சுமையாகிவிட்டது. எலிகளின் வலிமையைக் கண்டு அப்பா முன்னிலும் ருத்ரசாமியாகிவிட்டார். அவர் தூக்கமற்று அமைதியிழக்க, எலிகளோ கும்மாளமிட்டன.
இப்படிக் கழிந்த நாட்களினூடே ஒரு முறை அப்பா கொண்டுவந்த புது ஜீவன் எல்லோரையும் கவர்ந்தது. மையிருட்டு போல் இருந்த பூனை மிரண்டு பார்த்தது. எப்போதாவது சிறு மின்னல் போல் ஒளியும் சந்தோஷம் அப்பாவின் கண்களில் தெரிந்தது. எலிகளின் சவால் எப்போதும் அவரை எதிர் சவால்களில் ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தது. அவர் அசரவில்லை. பூனையைப் பற்றியும் அதன் பயன் குறித்தும் அப்பா எங்களுக்கு பொதுவான லெக்சர் கொடுத்தபோதிலும், உன்னிப்பாகக் கவனித்ததில் அது அவருக்கேதான் என எனக்குத் தோன்றியது.
“இதெல்லாம் வேஸ்ட்.. ஒண்டிப் பூனை என்னத்த கிழிச்சிடப் போவுது...” அனுபவ அலுப்பில் வாய் திறந்தார் தாத்தா.
“கிழிக்குதோ இல்லையோ ஒரு முயற்சிதான். எத்தினி நாளக்கி அந்த சனியங்களோட மாரடிக்கிறது..”
“நா எதுக்கு சொல்றேன்னா, காலங்காலமா எலி, பிராணனை வாங்கிட்டுதான் இருக்கு.. இப்ப புதுப் பிரச்னை பூனையா வந்துடும், பார்த்துக்க..”
“இதென்னப்பா, ஒனக்கு வேற கலரே கெடைக்கலியா.. சுத்த கரி மாதிரி..” சரவணன் பூனையை தடவிக் கொடுத்தான்.
“கறுப்பு பூனைதாண்டா நல்லா எலிய புடிக்கும்..”
“எனக்கென்னவோ ராத்திரில இது கத்துனாதான் இத மிதிக்காம போகமுடியும்னு தோணுது..” கமலா கொட்டாங்குச்சி ஒன்றில் பாலை ஊற்றி பூனையின் தலையை அதற்குள் லேசாக திணித்தபடி கூறினாள். பூனை மிரண்டு பாலைக் குடித்தது.
பூனை வெகு நேர்த்தியாக வளர்ந்து அபாரமாக எலிகளைக் கவ்விப் பிடித்தது. அதன் துரிதமான பாய்ச்சலுக்கு முன் எலிகள் கிலியோடு ஓடின. உயிர் வேட்கையே அவற்றை வளைக்குள் அடைகாக்க வைத்துவிட்டது. பூனையால் எலிப் பிரச்னை பாரதூரமான அளவுக்கு அடங்கியது. அப்பாவின் உதடுகளில் சின்ன துளிர். கர்வத்துடன் அவர் தாத்தாவையும் மற்றவர்களையும் பார்த்தார். பூனை அவரது செல்லப்பிள்ளையானது.
காலம் எப்போதும் சிரித்துக்கொண்டேதானே இருக்கிறது. ஒரு மாதத்திலேயே எல்லாம் தலைகீழானது. பூனைக்கும் எலிகளுக்கும் என்ன ஒப்பந்தம் ஏற்பட்டதோ தெரியவில்லை.. எலிகள் மீண்டும் அஞ்ஞான வாசத்திலிருந்து விடுபட்டன. வழக்கம்போல் குழிகளைத் தோண்டின; கமலா அக்காவின் டிரங்க் பெட்டிக்குள் குட்டிகள் போடுவதும், அப்பாவின் ஃபைல்களில் புழுக்கைகள் இடுவதுமாக அவற்றின் சேட்டை புத்துயிர் பெற்றது.
இப்போது எலிகளைவிட பூனையே எதிர் சவாலாகிவிட்டது. தாத்தாவின் ஞானதிருஷ்டி இவ்வளவு சீக்கிரத்தில் நிரூபணமாகும் என நான் நினைக்கவில்லை. பூனை கொழுத்து மதர்ந்து நின்றது. பீதியூட்டும் அதன் கறுப்பும் கூர்மையுடன் வளர்ந்திருந்த நகங்களும் எல்லோரையும் திகிலவைத்தது.
பூனையின் குறிக்கு எந்தப் பொருளும் தப்பவில்லை. கூரிய நகங்களில் தலைகாணிகள் அலங்கோலமாயின. வீடெங்கும் மலமும் சிறுநீரும் சீரழிந்தன. அடிக்கப் போனால் சீற்றத்துடன் பாய்ச்சலுக்குத் தயாரானது.
அசுரத்தனமான வளர்ச்சியோடு கர்ப்பிணியாக இருந்ததால், அப்பாவின் அறையில் நிறைய குட்டிகளைப் பெற்றுத் தள்ளியது. இது தெரியாமல் அப்பா வேகமாக அறைக்குள் நுழைய, பூனையின் வால் அவர் காலடியில் சிக்கிவிட்டது. குரூரமான சீறலோடு அவர் மார்வரை எம்பிப் பாய்ந்தது. அவ்வளவுதான் அப்பா சப்தநாடியும் ஒடுங்கக் கத்திவிட்டார். நான் போய் அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
அன்றிலிருந்து பூனையும் அதன் சந்ததிகளும் குடும்பத்தின் சத்துருகளாகிவிட்டன. அப்பாவின் தளர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால், அப்பாவின் இயல்பான சுபாவத்தை எலிகளின் மெத்தனமும் பூனைகளின் சீற்றமும் தத்தம் பங்குக்கு மெருகூட்டியிருப்பதை அவரது செயல்களை வைத்து என்னால் உணர முடிந்தது. அவருடன் ஓரிரு வார்த்தைகள் சொல்லும் தைரியம் ஒன்று தாத்தாவுக்கு, இன்னொன்று அம்மாவுக்கு.
இடையில் கமலா அக்காவை பெண் பார்க்க ஒரு வரன் வந்தது. பேரம் படியவில்லை. அக்கா இன்னும் வாரந்தரிகளோடுதான். சின்னவள் சிவகாமி வேறு பெரிய மனுஷியாகிவிட்டாள். அவள் இப்போது எல்லாப் பெண்களைப் போலவும் பெரிய விஷயங்களைப் பேசுகிறாள். எலிகளும் பூனைகளும் மட்டும் வலம் வந்துகொண்டிருந்தன.
அப்பா முன்வைத்த காலை பின்வைக்க விரும்பவில்லை என்பதை மெய்ப்பிக்கும் ரீதியில், அடுத்து வீட்டுக்கு விருந்தாளியாக வந்தது நாய்க்குட்டி. “எலி வெரட்ட பூனை.. பூனைய விரட்ட நாயி.. நல்ல கதைதான் போ..” தாத்தா பொக்கை சிரிப்புடன் கிண்டல் செய்தார்.
நாய் கம்பீரத்துடன் வளர்ந்தது. எங்களுக்கும் நம்பிக்கை அவசியமாயிருந்ததால் நாயுடன் சிநேகத்தை வளர்த்துக் கொண்டோம். நாயோ அப்பாவிடம் மட்டுமே மண்டியிட்டது. சக்தி வாய்ந்த அந்த எதிரிக்கு முன் பூனைகள் வலுவிழந்து ஒளிந்தன. ஆனால் நாயின் பலம் எலிகளிடம் ஓரளவுக்குத்தான் செல்லுபடியானது. இருந்தாலும் அது நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு எலிகளை விரட்டத் தவறவில்லை. வயிற்றின் நிமித்தம் பூனைகள் எப்போதேனும் எலிகளை பிடித்தன. இல்லையென்றால், அண்டை வீடுகளில் பால் திருடி சச்சரவை உருவாக்கின.
நிச்சயித்தபடி சகலமும் நடந்தால் சுவாரஸ்யம் குறைந்துவிடும் இல்லையா.. அப்படித்தான் நம்பிக்கையில் துவங்கிய நாயின் கதை வீழ்ச்சியில் முடிந்தது. எலிகளுக்கும் பூனைகளுக்கும் அல்லாமல் அனைவருக்கும் அது ஜென்ம பகையாகிவிட்டது. தீவிர வளர்ச்சியால் அச்சத்தின் விளிம்பில் வைத்து எல்லோரையும் வேடிக்கை பார்த்தது. காட்டு விலங்கின் குரூரத்துடன் வெளிப்பட்ட அதன் உறுமல் வீட்டையே ஸ்தம்பிக்க வைத்தது. அதன் கோரைப் பற்களுக்கும் நீரொழுகும் நாக்குக்கும் முன் நிற்க சக்தியற்று, அப்பாவும் அந்நியமானார்.
நாயின் வயிற்றில் தீ மூண்டிருந்தது போலும். எப்போதும் எதையேனும் புசித்தது; பசியோடும் வேட்கையோடும் திரிந்தது. எலிகள், பூனைகளை அது பொருட்படுத்துவதில்லை. பெரும் இரைகளைத் தேடியே சுற்றி சுற்றி வந்தது. ஒருமுறை கனத்த சங்கிலியால் நான் அதைக் கட்ட முயல, அது உறுமி என்னைப் பார்த்த பார்வையை என்றும் என்னால் மறக்க முடியாது. இப்படித்தான் சரவணன் அதை அதட்ட, அது சீறி பாய, அலறி சாய்ந்த அவன் பின்மண்டை நிலையில் மோதி உடைந்தது. வழிந்த ரத்தத்தை நாய் நக்கி ருசித்ததும்தான் அதன் ரத்த வெறி எங்களை வன்மையாக உலுக்கியது. இது நாயா, ஓநாயா?
வீட்டின் நிம்மதி மிகவும் சிதைந்துவிட்டது. பீதி வீடெங்கும் கவிந்திருந்தது. ஜாக்கிரதை, கவலை, பயம்- இந்த மூன்றும்தான் எல்லோரின் மனதில் வடுவென பதிந்துவிட்டன.
அப்பா ரொம்பவும் குலைந்துவிட்டார். கண்களாலேயே பேசினார்; அதட்டினார்; மருள வைத்தார். தாத்தாவும்கூட சாவின் நிழலுக்காக தான் பிரியத்துடன் காத்துக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் சாவோ அவரை சீண்டவில்லை. நானும்கூட படித்து முடித்துவிட்டு பொய் நெல் குத்தி கை சோர்ந்து கிடந்திருந்தேன்.
முடிவுகளற்ற பந்தயம் போல் நாட்கள் உதிர்ந்தன.
ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்பாவோடு ஒரு புது பொருள் வந்தது. அது அனைவரையும் பதற வைத்தது. திண்ணையில் அவர் உட்கார்ந்ததும், வருவிக்கப்பட்ட துணிச்சலுடன் நாங்கள் அவரைச் சுற்றி அமர்ந்தோம்.
அந்தத் துப்பாக்கி வார்னீஷ் பளபளப்புடன் மின்னியது. கரிய இரட்டைக் குழல்கள். அப்பா மடியிலிருந்த ஈய ரவைகள் அடங்கிய டப்பாவை வெளியிலெடுத்தார். எங்கள் கண்களில் ஒருவித கலக்கம். எங்கள் முகங்களின் பிரதிபலிப்பை அவர் இம்மியும் அசைக்கவில்லை.
வீட்டுக்குள் மிருக தோரணையில் நாய் பாதி இடத்தை ஆக்கிரமித்திருக்க, எலிகளும் பூனைகளும் மெத்தனமாய் நடமாடிக் கொண்டிருந்தன.
அப்பா துப்பாக்கியின் குழல்களை மடக்கி ரவைகளை அடைத்து திரும்பவும் மூடினார். சூழலின் விநோத அமைதியை தாத்தாவின் வாய் மட்டும் திறந்தது.
“என்னடா அங்க கூட்டம்..”
“தாத்தாவ் துப்பாக்கி..”
“ஏ கெழடு.. வாய மூடமாட்டியா?” தாத்தா பதில்
சொல்லும் முன் அப்பாவின் குரல் ஒலித்தது. அது குரலல்ல, உறுமல்.
அப்பா துப்பாக்கியுடன் எழுந்தார். அம்மா சாமியைக் கூப்பிட்டாள். நான் அப்பாவின் பின்னால் போனேன். எங்கள் வருகை நாயை பாதிக்கவே இல்லை. தலையைத் தூக்கி அசட்டையுடன் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது.
அப்பா துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தார். பார்வை இலக்கின் மீது செங்குத்தானது. இதோ.. இதோ.. என்ற என் எதிர்பார்ப்பின் கரையுடைத்து துப்பாக்கி அதிர்ந்தது. வெடிப்பின் தொடர்ச்சியாக பயங்கரமான அலறல்.. நாய் துடித்து எழுந்தது. அதற்குப் பாய அவகாசம் தராது அடுத்த ரவை நாயின் தொண்டையில் தைத்தது. ரத்தம் கொப்புளிக்க நாய் உருண்டு புரண்டது.
வீட்டில் அமானுஷ்ய அமைதி. இருளுக்குள் பதுங்கின பூனைகள்; வளைகளை நிறைத்தன எலிகள். தன் கடைசி அவஸ்தைகளை முடித்து மல்லாந்து நீட்டி விறைத்தது நாய். அப்பா துப்பாக்கியை வைத்துவிட்டு நாயை இழுத்தார். முடியவில்லை. நானும் சரவணனும் உதவ நாயின் உடல் வாசலைத் தாண்டி விழுந்தது. அப்பாவின் உதடுகளில் குரூர நகைப்பு.
பிரதான இலக்கு முடிந்ததும் அடுத்து பூனைகள், எலிகள்.. சீராக பத்துப் பதினைந்து ரவைகள் சிதற பூனைகள் சடலங்களாயின. எலி வளைகள் உடைக்கப்பட்டன; உயிர்கள் கொல்லப்பட்டன. காரியங்கள் அனைத்தும் முடிந்ததும் துப்பாக்கி துடைக்கப்பட்டது. ஒரு காட்சிப் பொருளாய் அது உள் அறையில் உத்திரத்துக்கு கீழிருந்த சுவரில் மாட்டப்பட்டது.
நெடு நாட்களுக்குப் பிறகு நெருஞ்சியாய் உறுத்திய இம்சைகள் எல்லாம் முடிய, வீட்டில் சந்தோஷம் மீண்டும் நிறைந்தது. நிஜமா? கனவா? என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.
ஆனால்.. அப்பாதான் இப்போது ரொம்ப மாறிவிட்டார். அவர் உடல் எலிகளின் உடலமைப்போடு மாறி வருவதாக எனக்குத் தோன்றியது. விழிகள் உண்மையிலேயே பூனைகளின் பசிகொண்ட பளபளப்புடன் மாறிவிட்டன. குரலும் பற்களும் நாயின் வெறியோடு உருமாறிவிட்டது.
அப்பா இப்போதெல்லாம் உருக்கு மாதிரி நிமிர்ந்து நின்றார். துப்பாக்கி எப்போதும் அவர் பார்வையில் இருந்தது; அதன் பார்வையில் அவர் இருந்தார்.
வீட்டில் உருவற்ற எதிரியாக நிசப்தம் எங்களை வெருட்டியது. அதன் ஊசித்தனமான தாக்குதலுக்கு முன் நாங்கள் அற்ப ஜீவிகளாகி நாட்களை ஓட்டினோம்.
ஒருநாள் உத்திரத்தை வெறித்த என் பார்வையில் அது பட்டது. நான் திடுக்குற்றேன். துப்பாக்கிக்கு மேல் உத்திரத்தில் ஓடுவது என்ன? கூர்ந்து பார்த்தேன். எலி. நிச்சயமாய் அது எலிதான்!
நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு சிரிப்பு வந்தது. வாய்விட்டு பலமாக சிரித்தேன்.
(1987-ல் எழுதி, எதிலும் பிரசுரம் செய்யப்படாத கதை இது. காலஓட்டத்தைத் தாண்டி இன்றும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் பிரசுரம் செய்யப்படுகிறது- ஆசிரியர்)
அக்டோபர், 2014.