சபியாவின் மகன்

சபியாவின் மகன்
Published on

‘’என் மகனை வழி தவறச் செய்து தீவிரவாதியாக மாற்றி சுட்டுக் கொல்லப்படவும் வைத்தவர்களுக்கு நீதி மன்றம் ஆயுள் தண்டனைதான் கொடுத்திருக்கிறது. அது போதாது.அவர்களை சாகும்வரை  தூக்கிலேற்ற வேண்டும்”

சபியா புலம்பலுடன் தொலைக்காட்சியில் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். பத்திரிகையாளர் மன்றத்தில் நண்பரைத் தேடிச்  சென்றபோது கண்ட காட்சி இது. பத்திரிகையாளர் பலரும் சபியாவின் கட்சி. அவர் சொன்னதை ஆமோதித்துக் கொண்டிருந்தார்கள். ‘எனக்கு மகனை விட நாடுதான் முக்கியம்’ என்ற சபியாவின் வாசகத்தை மெய் சிலிர்ப்புடன் மேற்கோள் காட்டினார்கள். ஒரு பெண் இப்படிச் சொல்வது அபூர்வம். அதிலும் ஒரு முஸ்லிம் பெண் சொல்லுவது அபூர்வத்திலும் அபூர்வம் என்று சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். தேச பக்தியில் இஸ்லாமிய தேச பக்தி, இந்து தேச பக்தி போன்ற வகைகள் இருக்கின்றன என்ற புதிய அறிவும் அப்போது வாய்த்தது. இந்தச் சலசலப்புகள்  எல்லாம் காஷ்மீர் ரெக்ரூட்மெண்ட் கேஸ் என்று கேரள ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கின் பின் விளைவுகள்.

கேரளத்தின் மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கை முஸ்லிம்களுடையது. முஸ்லிம் மதச்சார்புக் கட்சிகள் அரசியலிலும் செல்வாக்கு உள்ளவை. காங்கிரஸ் கட்சித் தலைமையேற்கும் முன்னணியானாலும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் அமையும் முன்னணியானாலும் இஸ்லாமிய சமுதாயத்தை அரவணைத்துக் கொள்ளாமல் அரசியல் செய்ய முடியாது; ஆட்சியைப் பிடிக்க முடியாது. இந்த  ஜனநாயக இயல்பைப் பயன்படுத்திக் கொண்டுதான் தீவிரவாத அமைப்புகள் மக்களிடையே வேரூன்றுகின்றன. தென் மாநிலங்களில் கேரளத்தில்தான் இந்தப் பிரத்தியேகச் செயல்பாடு சாத்தியம். ஏனெனில் இதர மூன்று மாநிலங்களிலும் ஆட்சியைத் தீர்மானிப்பது முஸ்லிம் சார்புக் கட்சிகள் அல்ல.  அதிகாரத்தில் முஸ்லிம் அமைப்புகள் பங்காளிகளாக இருப்பதனாலேயே கேரளப் பொது வாழ்க்கையில் முஸ்லிம்களைப் பற்றிய இரட்டைக் கருத்துகள் உருவாகின்றன. கறுப்பும் வெளுப்புமாக அந்தச் சமுதாயம் பார்க்கப்படுகிறது. முஸ்லிம்கள் அப்பாவிகள் என்றும் எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்றும். காஷ்மீர் ரெக்ரூட்மெண்ட் விவகாரம் இந்தக் கோணத்திலிருந்தே உருவாக்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் இந்திய ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற இந்த ஐவரும் கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து சென்றவர்கள். கொல்லப்பட்டவர்களைத் தவிர பயிற்சி பெற்று மோதலுக்குத் தயாராக இருந்த மேலும் பதிமூன்று பேர்  தப்பியோடித் தலைமறைவானார்கள். ஆனால்  ஊர் திரும்பிய அவர்கள் மிக விரைவாகக் கைது செய்யப்பட்டார்கள். கைதைத் தொடர்ந்து வழக்கில் மேலும் பல  இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் கொண்டிருக்கும் தொடர்பு தெரிய வந்தது.  பலர் கைது செய்யப்பட்டனர். மாநில காவல் துறையிடமிருந்து வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு ( என்.ஐ.ஏ ) வுக்கு மாற்றப்பட்டது. என். ஐ. ஏ. நடத்திய ஐந்து ஆண்டு விசாரணையின் முடிவில் கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட இருபத்து நான்கு பேரில் பதின் மூன்று பேருக்குத் தண்டனை வழங்கப் பட்டது. மூவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் பத்து பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

கண்ணூரைச் சேர்ந்த தடியன்டவிடே நசீர் என்பவர் மாணவப் பருவத்தில் இடதுசாரி மாணவ அமைப்புகளில் செயல்பட்டவர். பின்னர் வெவ்வேறு முஸ்லிம் அமைப்புகளில் பணியாற்றினார். கோவை குண்டு வெடிப்பிலும் பெங்களூருவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளிலும் தொடர்பு இருப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடைசியாக நசீர் ஈடுபட்டது தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்களை நியமனம் செய்து கொடுப்பது.  அந்த நியமனம் மூலம் தீவிரவாதப் பயிற்சி பெற்று ராணுவத்துடன் மோதிய ஐந்து இளைஞர்கள்தான் இந்த அபாயப் பின்னலின் கண்ணிகளாகத் தெரிய வந்தார்கள்.

கொல்லப்பட்ட ஐந்து இளைஞர்களில் ஒருவனான ஃபயாஸின் தாய்தான்  சபியா.  மகனின் மரணச் செய்தி கேட்டதும் அவனுடைய ‘மய்யத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை’ என்று தெரிவித்தது எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர் மட்டுமல்ல ஃபயாஸுடன் சேர்ந்து கொல்லப்பட்ட மற்ற இளைஞர்களின் சடலங்களையும் அவர்கள் குடும்பத்தினர் பார்க்க மறுத்தனர்.

“என்னுடைய மகனைத் தீவிரவாதியாக்கிக் கொன்று விட்டார்கள். அவர்களுக்கு வெறும் ஆயுள் தண்டனைதானா? ஆனால் அல்லாஹ் அவர்களுக்குச் சரியான தண்டனை  கொடுப்பான். என்னுடைய மகனின் முகத்தைக்  கடைசியாக ஒரு முறை பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. பாசம் இருந்தாலும் நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டவனின்  முகத்தைப் பார்க்கக் கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன். வயசான காலத்தில் என்னைக் காப்பாற்ற வேண்டிய மகன் இல்லாமல் போனான். இது போன்ற சதியில் இனி  யாருடைய பிள்ளையும்  அகப்படக் கூடாது. ஒருதாயும் என்னைப் போல வேதனைப் படக் கூடாது. ஃபயாஸுக்கு இப்படி ஒரு முகம் இருக்கும் என்று எனக்குத் தெரியாமலே போய்விட்டது. சாதுவான பையன். எங்கே வெளியில் போனாலும் இரவு வீட்டுக்குத் திரும்பிவிடுவான். எங்களை விட்டுப் பிரிந்திருக்கிற அவனுடைய வாப்பாவின்  வீட்டுக்குப் போனால் கூடத் தங்க மாட்டான். ஒரு நாள் வீட்டிலிருந்து வேலைக்குப் போகிறேன் என்று போனான். இருபது நாட்களில் எப்படித் தீவிரவாதியாக மாறினான்? அவனை இதற்குள் இழுத்து விட்டவர்கள் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட இதில் ஈடுபடுத்த வில்லை. இந்தச் செயலால் நான் இழந்தது மகனை மட்டுமல்ல; முஸ்லிமாக நான் வாழ்வதற்கான சுதந்திரத்தையும் தான். என்னால் இப்போது வீட்டை விட்டுப் போக முடியாது. யார் கண்ணில் பட்டாலும் அவர்கள் விரல் என்னை நோக்கித் திரும்பி தீவிரவாதியின் அம்மா என்று சுட்டிக் காட்டுகிறது”

சபியா பேட்டியை முடித்தபோது நண்பர்கள் எல்லாரும் உறைந்து உட்கார்ந்திருந்தோம். மெதுவாக சகஜ நிலை திரும்பியபோது பேச்சுகள் எழுந்தன. பொதுவாகவே முஸ்லிம்கள் இப்படித்தான் என்று ஒரு தரப்பும் அவர்கள் அப்படி ஆனதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் காரணம் என்று மறு தரப்பும் சொல்லிக் கொண்டிருந்தன. இரண்டுக்கும் இடைப் பட்ட கேள்விகள் மனதுக்குள் எட்டிப் பார்த்தன. சபியா உம்மா சொன்னதுபோல தரித்திரரான இளைஞர்கள் மட்டுமே ஏன் இதில் இழுத்துச் செல்லப் படுகிறார்கள்? வன்முறையின் மூலம் மதத்தைப் பாதுகாத்து விட முடியுமானால் அந்த மதம் மனிதனின் எந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது? முஸ்லிம்களுக்கு தேச பக்தி இல்லை என்று புகார் சொல்லப்படுவது எந்த அடிப்படையில்? காவல் துறை கைது செய்யும் தீவிரவாதிகள் எல்லாரும் சொல்லி வைத்ததுபோல முஸ்லிம்களாகவே இருப்பது ஏன்? அரசாங்கம்  மக்களை ஓட்டுப் போடும் கருவிகளாகவும் மதம் விசுவாசமான அடிமைகளாகவும் ராணுவம் துப்பாக்கிப் பரிசோதனைக்கான இலக்காகவும் தான் கருதுகிறதா?

அரசியல் விமர்சகனில்லை என்பதால் சபியாவின் பேட்டியும் அது எழுப்பிய கேள்விகளும் குழப்பத்தைக் கொடுத்தன. பத்திரிகையாளர் மன்றத்தை விட்டு வெளியே வந்தபோது சாலையில் எதிரெதிராக இரண்டு ஊர்வலங்கள் முன்னேறி வருவதைப் பார்த்தேன். தீவிரவாதச் செயல்களுக்குத் துணை போனவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கச் சொல்லி தேசப் பற்றை வெளிக்காட்டும் கோஷங்களுடன் ஒரு ஊர்வலம் கடந்து போனது. அது கண் மறைவாகப் போனதும் தாங்கள் குஞ்ஞாலி மரைக்காயரின் வாரிசுகள்; தங்களுக்குத் தேச பக்தியை யாரும் கற்றுத் தரவேண்டியதில்லை என்று ஆக்ரோஷமாக முழங்கிக் கொண்டு இன்னொரு ஊர்வலம் தாண்டிச் சென்றது. முந்தைய ஊர்வலக்காரர்களின் கோரிக்கைக்கு, வழக்கில் தீர்ப்புச் சொன்ன என் ஐ ஏவின் நீதிபதி விஜயகுமாரின் வார்த்தைகளில் பதில் இருந்தது. ‘இவர்கள் செய்திருப்பது கொடிய குற்றம். ஆனால் மரண தண்டனை விதிக்க முடியாது. ஏனெனில் யாரும் தீவிரவாதிகளாகப் பிறப்பதில்லை’. இரண்டாவது ஊர்வலக்காரர்களின் உரிமை பாராட்டலுக்கு சபியாவின் பேட்டியிலேயே சாட்சி இருந்தது. இந்த இரண்டு மனநிலைகளையும் தாண்டி, எங்கிருந்து பிறக்கிறது தீவிரவாதம்?

நவம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com