கோழி

ஓவியம்
ஓவியம்அரஸ்
Published on

அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். இரண்டு நாட்களாய் விடாமல் பெய்துகொண்டிருந்த மழையால் பூமியில் மேலூற்று எடுத்து வயக்காடெங்கும் நீர் நிறைந்திருந்தது.

டவுனிலிருந்து இரண்டு மைல் தூரத்திலிருந்த கிராமம் அது. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பழங்குடி இனத்தவருக்கான உண்டு உறைவிடப் பள்ளியின் முதல் தலைமையாசிரியரும், காப்பாளரும் அப்பாதான்.

வாடகை வீடு பள்ளியை ஒட்டிய தெருவிலேயே.

“வாடகைல்லாம் வேணாம் வாத்தியாரே. எங்க புள்ள குட்டிங்களுக்குப் பாடம் சொல்லித் தர்ற, உங்கிட்டப் போய் என்னா காசு வாங்கறது?”

அக்கிராமத்தின் எல்லா மனிதர்களும் அன்பை, விடாமல் பெய்யும் இந்த மழை மாதிரி சதா கொட்டியிருந்தார்கள்.

நாங்கள் மொத்தம் நாலு பேர் அண்ணாமலை புரத்திலிருந்து சாரோன் ஸ்கூலுக்கு நடந்துபோய் படித்துவிட்டு வருவோம். தினந்தோறும் மதியம் போர்டிங் பள்ளி மாணவர்களுக்கு தரப்பட்ட மொட்டைமாவுக் கூழும், அதில் ஊறிக் கிடக்கும் முள்ளங்கி பத்தைகளும் சாப்பிட்டு, சலிப்பேறி இருந்த நாட்கள் அவை.

வீடுகளிலிருந்து நெடுஞ்சாலைக்கு வந்ததும் நாங்கள் நான்கு பேருமே போட்டி போட்டுக் கொண்டு போகிற வருகிற சைக்கிள்கார  அண்ணன்களுக்கு வணக்கம் வைப்பதும், கைகாட்டி நிறுத்துவதும், கட்டைவிரலை நிமிர்த்தி லிப்ட் கேட்பதுமாய் எப்படியாவது அவர்களை நிறுத்திவிடுவோம். எப்போதாவது ஒருமுறை டூவீலர் போகும். அவர்களை நிறுத்துவதற்கு பயம். அதையும் மீறி வாத்தியார் பையனான நான் தைரியமாய் கைகாட்டி நிறுத்தி பைக் பின்னால் உட்கார்ந்து பயணித்த நாட்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு பெருமிதமானவை.

இரண்டு நாட்களாய் விடாத மழை இப்போது விட்டு விட்டு பெய்ய ஆரம்பித்திருந்தது. கிடைத்த இடைவெளியில் சீருடை அணிந்து நான்கு பேருமே ரோட்டுக்கு வந்தோம். நீண்டநேரம் காத்திருந்தும் ஒரு சைக்கிள்கார அண்ணனும் அன்று வரவில்லை. திரும்பி விடலாமா என யோசித்து அது பிடிக்காமல் சாரோனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஐந்து நிமிட நடையிலேயே, நாங்கள் எல்லோரும்  எங்களுக்கு முன் நின்றிருந்த பலரோடும் சேர்ந்து சாலையிலேயே நிற்க வேண்டியதாயிற்று அன்று.

சமுத்திர ஏரி நிரம்பி அதன் மதகு உடைந்து, ஆறில்லா எங்கள் ஊரில் ஓலையாறு என்றழைக்கப்பட்ட ஒரு பெரும் ஓடை நிரம்பி, தரைப் பாலத்திற்குமேல் இரண்டடி தண்ணீர் போய்க்கொண்டிருந்தது,

சில தைரியமான அண்ணன்கள் வெள்ளத்தினூடே கடந்து போனது பெரும் சாகசமாக இருந்தது. ஒரு ஆள் அவர் மனைவியைத் தூக்கி, தோளில் வைத்துக் கடந்தது எங்களை மறந்து அந்த மழை நாளில் கைதட்டிக் குதூகலிக்க வைத்தது. தோளிலிருந்து அந்த பெண் வேறு எங்களைப் பார்த்து பதிலுக்கு கைத்தட்டி சிரித்தது. மழையில் எல்லா காட்சிகளுமே அபூர்வமாகிவிடுகின்றன.

எப்படியும், இந்த வெள்ளத்தைக் கடந்து சிறுவர்களாகிய நாங்கள் பள்ளிக்குப் போக முடியாது. கொஞ்ச நேரம் பெருகும் வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, பெரும்மழை மறுபடியும் கொட்ட ஆரம்பித்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளாமல் திரும்பி வீட்டிற்கு ஓடி வந்தோம். புத்தகங்கள் முழுக்க நனைந்திருந்தது. என் மேலிருந்து பாதம்வரை நீரின் ஈரம் சொதசொதவென்று ஒட்டியிருந்தது.

எப்போதும் இல்லாமல் வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. மழைச்சாரல் அடிக்கலாமென அம்மா உட்பக்கம் பூட்டியிருக்கலாம். நான் நனைந்த ஈரத்திற்கும் சேர்த்துவைத்து ஓங்கித் தட்டினேன்.

கதவு மிக ரகசியமாகத் திறக்கப்பட்டது. அம்மா தன் நடுவிரலை உதட்டில் வைத்து, “ஸ்ஸ்” என எச்சரித்து என் கையைப் பிடித்து என்னை உள்ளே இழுத்துக் கொண்டு, மீண்டும் கதவைத் தாழிட்டுக் கொண்டது விநோதமாக இருந்தது.

என் சட்டை, கால்சட்டையை அவிழ்த்துப் போட்டுவிட்டு, துண்டால் உடலெல்லாம் துடைத்துவிட்டுக்கொண்டே, சமையற்கட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. தன் பார்வையிலிருந்து எதுவும் தப்பிவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வை அவள் கண்களில் மிக அருகில் கண்டேன்.

“வேற கால்சட்டை போட்டுக்கோ”

என அம்மா சமையலறைக்குப் போவதற்குள் ஒரு சேவல் சமையலறையிலிருந்து மேலெழுந்து பறந்து வந்து நாங்கள் நின்றிருந்த இடத்தில் ‘பொத்’ தென்ற சத்தத்தோடு விழுந்தது. விழுந்த வேகத்தில் அது மீண்டுமெழுந்து மறுபடியும் சமையலறைக்குப் பறந்தது. நடப்பவையெல்லாமும் எனக்கு ஒரே திகைப்பாகவும், ஏதோ ஒரு சந்தேகத்தையும் கொடுத்தது.

அம்மா மௌனமாகவே செயல்பட்டாள், என் இருப்பு அவளுக்கு ஒரு பொருட்டே இல்லையென்பதுபோல சமையற்கட்டை நோக்கிய தன் கவனத்தை குவித்திருந்தாள்.

என் கண்களில் படிந்திருந்த இருட்டு விலகியதும் அச்சேவலை தெளிவாகப் பார்த்தேன். உறை சந்தில் பதுங்கியிருந்தது. அதற்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, கழுத்து ஏறியேறி இறங்கியது. ரத்தச் சிவப்பில் அலைந்த அதன் கண்கள் என்னையே பார்த்தன.

அது பக்கத்து வீட்டு மணியம்மா அக்காவின் சேவல். எப்போதும் அது அம்மாவிடம் வந்து அவளை வேலை செய்யவிடாமல் ஆட்டங்காட்டும். அம்மா அதோடு பல தடவை நடத்தின உரையாடல்கள் எல்லாம் கூட எனக்கு அத்துபடி.

“தோ பாரு, எங்கிட்ட ஆட்டங்காட்டாத, ஒருநாளு இல்லனா ஒருநாளு அறுத்து கொழம்பு வச்சிடுவேன்”

இது அம்மாவால் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள். அவ்வப்போது அவள் மனநிலைக்கேற்ப கொஞ்சம் கெட்ட வார்த்தைகளோடு திட்டும் விழும். அம்மா திட்டுவதைக் கவனித்தால் அச்சேவலின் அப்பா சந்தேகத்திற்கிடமின்றி ஒரு நாய் என்பது உறுதிப்படும். இன்று அம்மாவிடம் வசமாக மாட்டிக்கொண்டு இப்படி உறை மூலையில் மரண பயத்தில் பதுங்கியிருப்பது பாவமாயிருந்தது.

இருவருமே ஒரு தீர்மானத்தோடு இயங்கிதாகவே எனக்குப்பட்டது.

சேவல் அவ்வப்போது எழுப்பிய சத்தம் வீட்டைவிட்டு வெளியில் போகாமல் வீட்டிற்குள்ளேயே சுழன்றதற்குக் காரணம், வெளியே பெரும் சத்தத்தோடு இன்னும் பெய்து கொண்டிருந்த மழை.

மழை எப்போதுமே எல்லோரையும் அவரவர் இயல்புக்கு திருப்பியனுப்பி அமைதியாக்கிவிட்டு, தான் மட்டும் பிரவாகமெடுக்கும். அன்றும் அப்படித்தான்.

அம்மா மெல்ல உறையின் பின்பக்கமாய்ப் போய் மண் தரையில் முட்டிபோட்டு, இன்ச் இன்ச்சாய் நகர்ந்து சேவலின் மேல் கையைப் போட்ட வினாடி, அது பறந்து நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தது.

நான் முகத்தைத் திருப்பிக்கொண்டு அதைப் பிடிக்க முயன்றதெல்லாம் பலிக்கவில்லை. அது எங்கள் இருவருக்கும் சேர்த்து போக்கு காட்டிவிட்டு நிமிஷத்தில் எங்கோ மறைந்துவிட்டது.

இப்போது யாரும் கூப்பிடாமலேயே நானும் அதைப் பிடிப்பதற்கு அம்மாவோடு கூட்டு சேர்ந்திருந்தேன். மூடப்பட்ட கதவு எங்கள் இருவருக்கும் சேர்த்து காவல் காத்தது.

அரிசி கொட்டி வைக்கும் அண்டாவுக்கருகில் அண்டை கொடுத்து அது படுத்துக்கொண்டிருந்ததை நான் தான் கண்டுபிடித்து அம்மாவுக்கு சைகைக் காட்டினேன். அம்மா அதை கவனித்துவிட்டு கவனிக்காதது மாதிரி இன்னும் பின்னகர்ந்து போய், தரையில் மீண்டும் முட்டிக் கால் போட்டு அதை நோக்கி ஊர்ந்து வந்தாள். சைகையால் என்னை அதற்கு முன் வந்து நிற்கச் சொன்னாள். அம்மாவை ஏறெடுத்துப் பார்த்தபோது ஒரு தேர்ந்த வேட்டைக்காரி மாதிரி இருந்தாள்.

நடப்பது எனக்குப் பெரும் சந்தோஷத்தைத் தந்தது. யாரும் வந்துவிடக்கூடாது என நினைத்தேன். குறிப்பாக அப்பா. அப்பா வந்துவிட்டால் அம்மாவோடு சேர்ந்து எனக்கும் உதை விழும். அப்பாவின் அடி உதையின் மகத்துவம் அந்த ஊருக்கே தெரியும். நான் தெருத்தெருவாய் ஓட அப்பா ஒரு திருடனை பிடிக்கும் சமார்த்தியோடு ஓடிவந்து என்னைப் பிடித்து அடிப்பார். அம்மாவை ஒரு மூலையில் தள்ளி காலாலேயே உதைப்பார். இது எப்போதாவதுதான் நிகழும் வாழ்வில் எல்லாமும்தான் வரும்; போகும். அப்பா எனக்கு எப்போதுமே நாலைந்து டெரிகாட்டன் சட்டைகளாக வாங்கித் தருவார். ஒரு சட்டை, ஒரு கால்சட்டை வாங்கி தந்தாக என் ஞாபகத்திலேயே இல்லை. யாரும் எதிர்பாராமல் அம்மாவுக்கு வெள்ளைக்கல் தோடு வாங்கி வருவார். அப்போதெல்லாம் அவர் மீது ப்ரியம் பொங்கும்.

அடி உதை விழும்போதெல்லாம் டெரிகாட்டன் சட்டையும், வெள்ளைக்கல் கம்மலும் எங்கள் முன் வந்து அதை ஏற்றுக்கொள்ள வைக்கும்.

இதோ இப்போது கோழி. அதுவும் பக்கத்து வீட்டுக் கோழி. பச்சையாய் சொன்னால் அம்மா இப்போது செய்வது திருட்டு. ஒரு நிமிடத்தில் சாதாரண கோழி, திருட்டுக் கோழியாகி விட்டிருந்தது.

அப்பாவிடம் மாட்டினால் என்னையும் அம்மாவையும் கோழிக்கு முன் பலி போட்டுவிடுவார்.

என் யோசனைகளின் மேல் சேவலின் கத்தல் சத்தம் விழுந்து புரண்டது.

அம்மா ஒரு கையால் அதன் இரு கால்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அதன் கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

வெற்றிப் பெருமிதமெல்லாம் ஒன்றும் அம்மா முகத்தில் மிளிரவில்லை. மௌனமாக செயல்படுகிறாள். இதற்கு முதலீடே மௌனம்தான் போலும்.

நான் பார்க்கும் கொண்டிருக்கும் போதே கீழே தரையில் சேவலைக் கிடத்தப்போனவள், பின் எதையோ மறந்துவிட்டதைப்போல ஒரு கையால் அதைத் தூக்கிப் பார்த்தாள். எடை பார்க்கிறாள் என யூகித்தேன்.

என் யூகம் சரிதான்.

“ரெண்டு கிலோ தேறும்” தனக்குதானே பேசிக் கொண்டது நிலவிய அமைதியின் பொருட்டு எனக்கும் கேட்டது. சத்தம் போட்டால் முதலுக்கே மோசம் வரும்.

என்னைக் கதவுகிட்ட நிக்கச் சொல்லி சைகை காட்டிவிட்டு மீண்டும் சேவலைக் கீழே தள்ளி, அதன் இரு கால்களையும் தன் ஒரு காலால் மிதித்துக் கொண்டு தன் கையிலிருந்த அருவாமனையை அதன் கழுத்துக்குக் கொண்டு போனதை நான் கதவுக்கருகில் நின்று எக்கிஎக்கிப் பார்த்ததில் நன்றாக பார்க்க முடிந்தது.

‘க்ளுக்’ என ஒரு சிறு சத்தம் கேட்டது. நான் சட்டென முகத்தை திருப்பிக் கொண்டேன்.

அடங்கும் சப்தம் அது எனத் தெரிந்தது. அதற்குப் பிறகும் அம்மா கொஞ்ச நேரம் தன் காலை அதன் கால்களில் இருந்து எடுக்காமல் குனிந்த நிலையிலேயே நின்றிருந்தாள்.

நான் இப்போது கதவுக்கருகிலிருந்து சமையலறைக்கே வந்துவிட்டேன். ஒரு அடி தள்ளி சேவலின் தலை கிடந்தது. தலையைக் கையிலெடுத்துப் பார்த்தேன்.

சற்றுமுன் ரத்தச் சிவப்பில் மின்னிய கண்கள் இப்போது மூடியிருந்தன.

அம்மாவின் செயல்பாடுகள் இன்னும் பரபரப்படைந்தன. விறகடுப்பில் வெந்நீர் போட்டுக் கொண்டே, அம்மியில் மஞ்சள் அரைக்க ஆரம்பித்தாள்.

அப்பா அன்று மழையின் பொருட்டு “ஸ்கூலிலேயே சாப்டுக்கிறேன்” என்று காலையில் சொன்னது எங்கள் இருவருக்குமே ரொம்ப சவுகரியமாகப் போய்விட்டது.

இடையே ஒரேயொருமுறை கதவைத் திறந்து, வெளிப்பக்கமாகப் பார்த்துவிட்டு வந்தாள். பின்னாலேயே நானும் போனேன். அப்போதும் மழை கொட்டிக் கொண்டிருந்தது. அம்மா அன்று தெருவை  பார்த்ததில் தனி கவனமிருந்தது. மணியம்மாக்கா வீட்டில் மட்டுமே சற்று நேரம் அம்மாவின் பார்வை அலைந்து நின்றது. அவள் வீட்டுக் கதவும் உள் பக்கமாக அடைக்கப்பட்டிருந்தது.

‘வே கிளியர்’ என்பது போல அம்மா இன்னும் கொஞ்சம் நிதானமாக இயங்கினாள். வழக்கமான அம்மா பாணியில் பெரிய வாணலில் சற்றுமுன் வரை ஆட்டம் காட்டிய சேவல் எந்த எதிர்ப்புமின்றி வெந்து கொண்டிருந்தது.

ஒரு மனைக்கட்டையை போட்டு அதன் எதிரில் உட்கார்ந்து கொண்டு விறகடுப்பு நின்றெரிவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அடுப்புச் சூட்டோடு நானும் அதனருகில் ஒடுங்கியிருந்தேன். ஏதோ ஒரு ஆழ்ந்த யோசனை அம்மாவுக்குள் ஓடுவது தெரிந்தது.

ஒருவேளை இதைச் செய்திருக்க வேண்டாமென இப்போது நினைக்கிறாளோ?

நாளைக்கு விஷயம் தெரிந்தால் என்னாவது? இந்த ஊரின் வாத்தியார் பொண்டாட்டி. நல்லது கெட்டது என்று எல்லாவற்றுக்கும் இந்த ஊரில் வாத்தியாரும் வாத்தியார் மனைவியாகிய அம்மாவும் தான். அதனால்தான் ஐந்தாம் வகுப்பைக்கூடத் தாண்டாத அம்மாவை எல்லோருமே ‘டீச்சர்’ எனக் கூப்பிடுகிறார்கள். பெரும் லேவாதேவி வேறு செய்கிறாள். வட்டி என்று பணமாக யாரிடமும் வாங்குவதில்லை என்றாலும் தானியமாக, பண்டம்பாத்திரமாகக் கைமாறுகிறது. இவையெல்லாமே ஒரு அற்ப கோழியின் பொருட்டு ஒரே ஒரு நிமிடத்தில் தலை கீழாகும்.

கோழி கறிக்கு ஆசைப்பட்டு இதுவரை சேர்த்த எல்லாத்தையும் இழக்க நேரிடுமோ என்ற கவலை ரேகைகள் அதுவென நான் நினைத்ததற்கு நேர்மாறாக, உறை சந்தில் வைக்கப்பட்டிருந்த மண்வெட்டியை எடுத்து ஆவேசம் வந்தவளைப்போல சாணி மெழுகப்பட்ட சமையலறை மண்தரையை வெட்டி குழிதோண்ட ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் என்ன யோசித்தும் எனக்குப் பிடிபடவில்லை.

என்ன வந்தது இந்த அம்மாவுக்கு? இன்று திடீரென பக்கத்து வீட்டுக் கோழியைப் பிடித்து வைத்து அறுக்கிறாள். சமயலறையில் பள்ளம் தோண்டுகிறாள். எனக்கு பதில் சொல்வது மாதிரியே, மூலையிலிருந்து மூங்கில் கூடையிலிருந்த அக்கோழி இறக்கைகள், குடல், கழிவு இதோடு மூடப்பட்ட கண்களோடு கிடந்த அதன் முழுத்தலை இவற்றை அப்பள்ளத்தில் போட்டு மீண்டும் மண்ணைத் தள்ளினாள்.

புளிக் கரைசலை ஊற்றி, கறிக்குழம்பை இறக்குவதற்கும், சமையலறை முழுவதையும் சாணி போட்டு மெழுகுவதற்கும் சரியாயிருந்தது.

‘யார்ட்டயும் சொல்லக்கூடாது’ என்ற சொல்லப்படாத ஒப்பந்தம் எங்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்டிருந்தது.

வெளியில் மழை இரைச்சலும், உள்ளே ஊடுருவி வரும் குளிரும், அம்மா எனக்குப் போட்டுவைத்த சுடுசோறும், கறிக்குழம்பும், துழாவித் துழாவி எடுத்துப் போட்ட ஈரலும், கல்லீரலும் பெரும் மயக்கத்தையே தந்தது.

சாப்பிட்டு முடியும்வரை கதவு உள்பக்கமாகவே சாத்தியிருந்தது. சாப்பிட்டு முடிப்பதற்கு முன் தூக்கம் சுழற்றிக் கொண்டு வந்தது. அங்கேயே பாய் போட்டுப் படுத்துக் கொண்டேன். சாயங்காலம் அப்பா வந்துதான் என்னை எழுப்பினார்.

தூங்கி எழுந்ததும் மத்தியானம் நடந்ததெல்லாம் கனவில் நடந்தது மாதிரியே இருந்தது. ஒருவேளை நடந்தது எல்லாம் கனவோ!

எதுவுமே நடக்காதது மாதிரி வெகு இயல்பாய் அம்மா வெளிக்கும் உள்ளுக்கும் நடந்து கொண்டிருந்தது வேறு என் சந்தேகத்தை வலுவாக்கியது.

மெழுகப்பட்ட சமையலறை இன்னும் இந்த மழையில் காயவில்லை. ஈரலும் கறியும் சாப்பிட்ட வயிறு சொல்லும் இது கனவெல்லாமில்லை. சாதுரியமான கோழித் திருட்டின் பொருட்டு நிறைந்த வயிறு.

அம்மாவின் நிதானம் கொஞ்சம் அச்சத்தைத் தந்தாலும், குற்றம் நடந்து பலமணி நேரம் ஆகிவிட்டபடியால் இயல்பாயிருந்தேன். தடயங்கள் வேறு முற்றிலும் புதைக்கப்படிருந்தன. வயிற்றுக்குள்ளிருந்து யாரும் எதையும் தோண்டியெடுத்துவிட முடியாது. எல்லாம் கச்சிதமாக முடிந்திருந்ததென நினைத்த நிமிடத்தில் மணியம்மாக்கா எங்கள் வீட்டின்முன் நின்று,

“டீச்சரம்மா” எனக் குரல் கொடுத்தாள்.

முகத்தில் ஒரு சிறு மாறுதலுமின்றி, அம்மா அந்த அக்காவை எதிர்கொண்டாள்.

“வா மணிம்மா” என்ற வாஞ்சையான அழைப்பு வேறு, அந்த அக்கா உள்ளே வந்து வெறும் தரையில் குந்திக்கொண்டது.

“அந்தப் பாயில் உட்காரு” என விரிக்கப்பட்டிருந்த பாயைக் காட்டினாள் அம்மா.

அந்த அக்கா பாதி உட்கார்ந்தும், உட்காராததுமாக,

“என் சேவலைக் காணோம் வாத்யாரம்மா” என்றது அம்மாவின் முகத்தைப் பார்க்காமல். அதன் கண்கள் நாலாபக்கமும் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது, இதில் எந்த சம்பந்தமுமின்றி அப்பா உள்ளறையில் உட்கார்ந்து ஆஸ்டல் கணக்குகள் எழுத ஆரம்பித்திருந்தார்.

குரல் கேட்டு அப்பா திரும்பி அவர்களிருவரையும் பார்த்துவிட்டு தன் வேலையில் மும்முரமானார்.

“அய்யோ, உன் பெரிய சேவலா, ரெண்டு கிலோ வருமே?” என உள்ளார்ந்த பதைப்போடு கேட்பது மாதிரி கேட்டாள்.

அம்மாவைவிட அதன் எடையை துல்லியமாய் மணியம்மா அக்காகூட அறிந்திருக்க முடியாது.

“மழையில எங்க ஒதுங்கிச்சோ?” என மணியம்மாக்காவும், “நல்லா தேடிப்பாரு” என அம்மாவும் பேசி முடித்து அந்த அக்கா எழுந்து வெளியே போக முயன்றவளைத் தடுத்து,

“செத்த ஒக்காரு, வர்ரேன். ரெண்டு தோசை சாப்பிட்டுப் போ. எங்க வீட்லயும் இன்னிக்குக் கோழிக் குழம்புதான்”

என வெகு இயல்பாய் தோசைசுட ஆரம்பித்தாள் அம்மா. தீ நின்று நிதானமாய் எரிந்தது.

மார்ச், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com