பத்தமடையிலிருந்து வயக்காட்டையெல்லாம் விற்று விற்று அந்தப் பணத்தோடு திருநெல்வேலிக்கு வந்தவன் பாடகலிங்கம். நொடித்துப் போய் கிடந்த சித்தப்பாவின் ஜவுளிக்கடையை வாங்கி தன்னுடைய முதலைப் போட்டு தன் அம்மா பெயரில் வேலம்மாள் துணிக்கடை என்று வைத்தான். மறைந்து போன அவன் தாயின் ஆசீர்வாதம் அவனை மிக மிக உயர்த்தியது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், அம்பாசமுத்திரம், தென்காசி, தூத்துக்குடி என்று கடைகள் பெருகின.
வில் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த அவனிடம் இன்று ஆறு கார்கள் இருக்கின்றன.
திருநெல்வேலியிலேயே அவன் புதிதாகக்கட்டிய வீடுதான் தளவாய் அரண்மனைக்கு அடுத்து பேசப் பட்டது.
என்ன ஒரு சிறப்பு எனில், அவன் பத்தமடை பாடகலிங்கமாகவே இருந்தான். அவன் சித்தப்பா புளியங்குளத்தில் சுப்பையா பிள்ளையின் மகளை அவனுக்கு கட்டிவைத்தார். திருநெல்வேலி பெண்கள் எல்லாம் சிகப்பு ரெட்டா ஒருத்தியை அவங்க சித்தப்பா கொண்டு வந்திட்டாங்களேன்னு அங்கலாய்த்தார்கள். மகிழ்ந்தார்கள் என்று சொல்ல வழியில்லை.
பெண்ணின் பெயர் குழல்வாய்மொழி. அம்மன் பெயரென்றாலும் அவளுக்கு பொருத்தம்.ஆனால் அவளுடைய விருந்தோம்பல் அவளை அன்னலெட்சுமி என்ற பெயரையும்பெற வைத்தது.
அங்கே ஓன்றும் சைவ வைணவ மோதல்கள் இல்லை. பசிச்சுது, எங்கம்மை வீட்டுக்கு போனேன், சாப்பிட்டேன் என ஊர் சொல்லும் அளவிற்கு அவள் எல்லோருக்கும் அம்மையானாள்.
அவர்கள் வீட்டில் பணியாட்கள் எல்லோருக்கும் அவள் அக்கா. அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு அவள் கையாலேயே பண்டங்கள் செய்து கொடுத்தனுப்புவாள். தங்கள் கடையிலிருந்து இரண்டு மாதத்திற்கொரு தடவை துணிமணிகளும் கொடுத்தனுப்புவாள்.
திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதிகள் செழிப்பாக இருப்பதற்கு அவளின் அன்பும் கொடையுள்ளமும் தான் காரணம் என்று நல்லவர்கள் எல்லோரும் சொல்லுவார்கள்.
மருந்தவை மந்திரம் என அவள் பாடும் போதுதான் தெரியும், சம்பந்தர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே என ஏன் பாடினார் என்று.
ஐப்பசி திருக்கல்யாணத்திற்கு வடிவுடைநாயகிக்கு.. காந்திமதின்னா தானே புரியும்?& அவ சாத்துற பட்டு அம்மைக்கு ரொம்ப புடிச்சுப் போகும்.
மனசு மனசு மனசு...
யாரையும் அவளால் நோகடிக்க இயலாது.
அவள் கருவுற்றாள்...
நல்லவர்கள் கொண்டாடினார்கள்.
பிள்ளைக்கு வேலன் எனப் பெயரிட்டனர்.
அழகன் என்கின்ற பெயர். சரிதானே அவ்வளவு அழகு. அவனுக்கென்று புளியங்குளத்துப் பிள்ளை, ரெண்டு பசுமாட்டைக் கொண்டு தோட்டத்தில் கட்டினார். மாடுகள் நிறையக் கறந்தன, மகராசி கறந்தால் சுரக்கும் தானே?
குழல்வாய்மொழி மீதப்பாலை வீட்டு வாசலிலே பெரிய வெண்கலச் செம்பிலே வைத்து விடுவாள். ஊரிலே யாரெல்லாம் கைப்பிள்ளைக்காரியோ அவர்கள் எல்லாம் வந்து தங்கள் பாத்திரங்களில் எடுத்துச் செல்வார்கள்.
சம்பந்தனுக்கு பாலளித்த அம்மைபெயர் கொண்டவளல்லவா? பிள்ளையும் அவளை உரித்து வைத்தவனாக இருந்தான். அழகில் மட்டுமல்ல பண்புகளிலும்...
எந்த பணியாளையும் அண்ணாச்சி என்றே அழைப்பான்.
வித ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா மொளைக்கும் என்பார்கள் ஊர்க்காரர்கள்.
வேகமாக வளர்ந்தான், படித்தான், அவன் பெயரிலேய அவன் அப்பா பாடகலிங்கமொரு நகைக்கடையைத் திறந்தான்.
குழல்வாய்மொழி, பாடகலிங்கத்திடம் வேலனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்றாள்.
வயது... என்றான் பாடகலிங்கம்.
பருவத்தே பயிர் செய் என்றாள் குழல்வாய்மொழி.
தூரத்து சொந்தம், புளியரை சண்முகம் பிள்ளை பேத்தியை பார்த்தார்கள்,முடித்தார்கள்.
செண்பகவல்லி மாமியாரை மிஞ்சிய அழகு.திருமணத்தில் ஒரே தரத்தில் வாழை மரங்கள் ஊர் முழுவதும் கட்டியிருந்தனர்.
சாப்பாடு இலஞ்சி சங்கரன்.
பிறகு என்ன?
சம்பந்தியம்மா உண்ணாமுலை ஆகா... குழல்வாய்மொழிக்கும் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பந்தம் இறைவன் அருள்.
இரண்டாம் நாள் சொதிச் சாப்பாட்டிபோது தான் ஒரு பெண், என்ன மதினி கல்யாணத்த ஜாம்ஜாமுன்னு நடத்திட்டிய என்றாள், குழல்வாய்மொழிக்கு புரியவில்லை. சாப்பிட்டீர்களா? எனக் கேட்டாள்
உண்ணாமுலை அம்மா எங்கிருந்தோ வேகம் வேகமாக வந்தாள். என்னா மதினி இத்தனை வேகம்? என்றாள் குழல்வாய்மொழி.
ஒண்ணும் இல்ல, இவ ஏந்தங்கச்சி ஆவுடையம்மா என்று அந்தப் பெண்ணை அறிமுகம் செய்தாள்.ஆமா மதினின்னு கூப்ப்பிட்டாங்க, என்ன விட வயசு கொறவான்னா? ஆமம்மா, எங்க வீட்டிலேயே கடைக்குட்டி என்றாள் உண்ணாமலை.
ஏன் இத்தனை வேகமாக மூச்சிரைக்க வந்தாள் உண்ணாமுலை, என யோசித்தாள் குழல்வாய்மொழி.
கல்யாணம் முடிந்து எல்லோரும் புளியரைக்கு புறப்படும் போது ஆவுடையம்மாள் தான் மகளோடு ரெண்டு நாள் இருந்து விட்டு வருவதாகச் சொன்ன போது உண்ணாமுலை, கொண்டான் கொடுத்தான் வீட்டில எல்லாம் அப்படித் தங்கக் கூடாது என்று தங்கச்சிய வல்லா நெல்லையா பிடிச்சு வண்டியில் ஏத்திக்கிட்டா.
குழல் வாய்மொழி இதையும் கவனித்தாள்.
ஒரு வாரம் கடந்திருக்கும் ஒருநாள் காலையிலேயே ஆவுடையம்மா மகளைப் பார்க்கணும்ன்னு வந்து நிக்கா.
குழல்வாய்மொழி கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்தாள்.
செண்பகவல்லியை விட்டுப் பிரியவேயில்லை,
செண்பகத்த தேடுச்சு... அதான் வந்தேன், என்றாள்.
மதினிக்கிட்ட சொல்லியிருந்தா அவங்க என்கிட்ட போனில சொல்லியிருப்பாகளே என்றாள்
குழல்வாய்மொழி.
ஆவுடைக்கு தெரியாது, அவள் வந்தவுடனே உண்ணாமுலை அம்மாளுக்கு குழல்வாய்மொழி தகவல் கொடுத்து விட்டாள்.
சரியாக ஒரு மணி நேரத்தில் உண்ணாமுலை அம்மாள் ஆவுடையம்மாள் மகனை அழைத்துக் கொண்டு காரில் வந்தாள்.
அவள் மகன் கேட்டான், அங்கன நானு அப்பாவும் சாப்பிடத் தடுமாறிக்கிட்டு கெடக்கோம், நீ இங்க எப்படி வந்த என்று...
பிள்ளைய அக்காவத் தேடுச்சுன்னா ஆவுடை. அவள நீயா வளத்தே... ஏம்மா நான் ஒன் வயத்தில பொறக்க வேண்டியவனே இல்லை பெரியம்மை வயத்தில் பொறந்திருக்க வேண்டியவன்னான்.
உண்ணாமுலை அவள ஒண்ணும்
சொல்லாதய்யா என்றாள்.
ஆவுடை தவிக்கின்ற தவிப்பை குழல்வாய்மொழி புரிந்துகொண்டாள்.
நாங்க பிள்ளைகளை இன்னிக்கு திருச்செந்தூர் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகலாம்ன்னு இருக்கோம் என்றாள். நானும் வரவா என்றாள் ஆவுடை.
அதுதான் ஆவுடை.
உண்ணாமுலை சொன்னாள், அவங்க குடும்பத்தாரோட போறாங்க...
அம்மா கௌம்பு ஊருக்குப் போவோம்ன்னான் ஆவுடையின் மகன்.
பொச முட்டிப் போனாள் ஆவுடை.
குழல்வாய்மொழி அவங்க வரட்டுமே என்றாள்
அவன் சொன்னான், எங்க அம்மை எங்கயும் சரி வர மாட்டா அத்தை, என்றான்.
கார் புளியரைக்கு கௌம்பியது. ஆவுடை சிறைக் கைதியைப் போல் அழைத்துச் செல்லப்பட்டாள்.
இதெல்லாம் அவளை ஒன்றும் செய்யாது.
அக்காள் மகள் நல்லா வாழாமல் இருப்பதற்காக அவள் ஏதாவது செய்தாக வேண்டும், அவள் உள் மனம் போதித்துக் கொண்டேயிருக்கின்றது.
உண்ணாமுலை தங்கச்சியின் குணங்களை நன்கு உணர்ந்ததனால் தன் மகள் வீட்டிற்கு அவள் போவதனை தடுப்பதற்கே தன் வாழ்நாள் கழிந்து போகுமோ என அஞ்சினாள்.
ஆவுடையின் கணவர் தலைமை ஆசிரியர். மிகமிக நல்லவர்.
அவர் மனதொடிந்து போய் இருந்தார்.
செண்பகவல்லி தன்னை சித்தப்பா என அழைக்கும் போதெல்லாம் அவர் கண்கள் பனித்து விடும்.
அவர் கற்ற திருக்குறள் அவரை இனிய
சொற்களையே பேச அனுமதிக்கும். அதுவே பெரிய வாய்ப்பு ஆவுடைக்கு.
ஆவுடைக்கு தன் அக்காளுக்கு நல்ல கல்யாணம் பண்ணி வைத்த அம்மாவும் அப்பாவும் தன்னை ஒரு மாதச் சம்பளகாரன் கையில் பிடித்துக் கொடுத்து விட்டார்களே என்ற வருத்தம். அக்கா வாழ்க்கையைக்கெடுக்க வேண்டும் என கங்கணம்கட்டிக் கொண்டு திரிந்தாள். இருவரும் நெல்லையப்பர் சேர்த்து வைத்த இணையல்லவா ஒன்றும் நடக்கவில்லை...
அவள் கணவரும் மாதச் சம்பளம் மட்டும் இல்லை, சொந்த வீட்டுக்காரர். சாப்பாட்டுக்கு அரிசி வரும் வயக்காடு, காய்கறிகள், தேங்காய்க்கு தோப்பு, சிலர் மனம் யாருக்கு புரியும். நல்ல பெயர்,
சிவநாதன்.
அக்கா மகளும் நல்ல வீட்டிற்கு போய் விட்டாளே என வருத்தம்.
ஏதாவது செய்யணும்ன்னு ஆசை.
ஆவுடையும் சுடலை மாடன் படைப்பு தான்.
அதுக்காக எல்லாரையும் சுடுகாடாக்க ஆசை கொள்வது நியாயமில்லையே?
செண்பகவல்லி உண்டாகி அக்கா கூப்பிடப் போயிருக்கிறாள் என்ற செய்தி ஆவுடை செவியில் இன்பத்தேனாக பாய்ந்தது.
இங்கேயே வந்திருவாள்ளா பாத்துக்கிடலாம்ன்னு நெனப்பு.
உண்ணாமுலை இவளை நன்கு உணர்ந்தவளில்லையா அடிச்சா ஒரு அடி!
அக்கா கார் வந்திடுத்துன்னவுடனே ஆவுடை ஒடினாள்.
செண்பகவல்லி எங்க அக்கா என்றாள்.
அவங்க மாமனாரும் மாமியாரும் மாப்பிள்ளையும் இங்க இருக்கின்ற டாக்டர்கள் மாதிரி உங்க கிராமத்திலே ஏது மதினி? நாங்க பாத்திக்கிடுதோம் என்றார்கள். அவ எங்க மருமக இல்லை மக தானே என்றாங்க... அத்தானும் அது சரிதான்னு
சொல்லிட்டாக, செண்பகவல்லியும் அதைத் தான் விரும்புதா, அதான் விட்டுட்டு வந்திட்டேன்னா.
பிள்ளை நம்ம வீட்டிலதானக்கா பெறணும்...
அதெல்லாம் ஆவுடை காலம் மாறும் போது நாமும்மாறிடணும்லா டா, என்றாள்.
ஆவுடை செண்பகவல்லியை பார்க்கப் போவதாக பாசாங்கு செய்வாள் என்ற அச்சம் உண்ணமுலையை ஆட்டிப் படைத்தது.
போனில் குழல் வாய்மொழியிடமும் சொல்லிவைத்தாள்.
நான்கே நாட்கள் ஆவுடை திருநெல்வேலிக்கு வந்து விட்டாள்.
செண்பகவல்லியும் குழல் வாய்மொழியும் நவகைலாயத் திருத்தலங்களுக்கு போயிருந்தனர் வர இரவு ஆகும் என்றான் பாடகலிங்கம்.
கொஞ்சம் ஆவுடையை பற்றி சொல்லி வைத்திருந்தாள் குழல்வாய்மொழி. பாடகலிங்கம், ஆவுடையிடம் இரவு வராமல் தூத்துக்குடி தாத்தா வீட்டிற்கு போனாலும் போய் விடுவார்கள், நீங்கள் ஊருக்கு போங்கள் நான் அழைத்து சொல்லுகின்றேன், வாருங்கள் என்று ஆவுடையை வழி அனுப்பி வைத்தான்.
ஆனால் ஆவுடை போனுக்காக காத்திருப்பவள் எல்லாம் அல்ல. மூன்றாவது நாளே நெல்லைக்கு வந்துவிட்டாள்.
செண்பகவல்லியிடம் அவள் மாமியார் ஆவுடையைப் பற்றிய இரகசியங்களைச் சொல்லி வைத்திருந்ததால்
செண்பா சித்தியிடம் எச்சரிக்கையாக இருந்தாள்.
எப்போதும் மாமியாருடனே இருந்தாள்.
ஆவுடைக்கு தாங்கலே.
செண்பா கிட்ட நாலு வார்த்தை தனியா
பேசணுமென்றாள். அம்மைக்கும் மகளுக்கும் என்ன ரகசியம் நானும் கூட இருக்கேன், என்றாள் குழல் வாய்மொழி.
ஆவுடைக்கு வெக்கமெல்லாம் கிடையாது என்பது குழல் வாய்மொழிக்கு புரியவில்லை இல்ல... இது என்னா, எங்க பொண்ணு கிட்ட பேசும்போது நீங்க கூட இருப்பேங்கது சரியா? என்றாள்.
என்றைக்கு அவள் எங்க வீட்டுக்கு வந்திட்டாளோ அன்றிலிருந்துருந்து அவ எங்களுக்கும் மகள்தான், என்றாள் குழல்வாய்மொழி.
ஆவுடை தவியாய்த் தவித்தாள்.
மறுநாள் காலையில் வெளிப்படையாகவே குழல் வாய்மொழி ஆவுடையிடம் பேசி விட்டாள். நீங்க இங்கன அடிக்கடி வர்றது எங்க வீட்டில யாருக்கும் பிடிக்கல கௌம்புங்க, என்று மண்டையில் அடித்தது போல சொல்லி விட்டாள்.
ஆவுடை அலறிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
சிவநாதனுக்கு கொஞ்சம் உடல் நலம் சரியில்லை.
பெரிதாக ஒன்றுமில்லை... யோகா செய்கின்றவர்... என்பதால் ஆவுடையும் ரொம்ப அலட்டிக் கொள்ளவில்லை.
சிவநாதன் பக்கம் உறவுகளும் அதிகம் கிடையாது.
அவளுக்கு சம்பந்தியம்மா செவிட்டில் அடித்தது போல் சொன்னது அதிர்ச்சி, அக்காளுக்கு சொல்லியிருப்பாளோ என்பது அடுத்த அதிர்ச்சி.
என்னாத்தையாவது தின்னு செத்தா என்னான்னு தோணுச்சு அது எதுக்கு?... முயற்சிய விடக் கூடாதுனும் தோணுச்சு.
காலையில் ஆவுடை எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டுட்டு வரும் போதே வழக்கம் போல எழுந்து குளித்து முடித்து நெற்றி நிறைய திருநீற்றோடும் குங்குமத்தோடும் ஈசி சேரில் படுத்திருக்கின்ற சிவநாதனுக்கு காபிபோட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் போய் காபி கொண்டு வரட்டா என்று கேட்டாள். அவரிடம் இருந்து பதில் இல்லை. என்னங்கன்னு தொட்டாள். உடல் சில்லிட்டிருந்தது, அதிர்ந்தாள் ஆவுடை.
எப்போதோ அவர் காண்பித்த ஒரு மாத்திரை நினைவு வந்தது இதை அதிகமா போட்டா சாவுதான் என்று.
ஒடிப் போய் அந்த மாத்திரையை பத்து எண்ணம் வாயில் போட்டு விட்டு அவர் ஈசிசேருக்கு அருகிலேயே படுத்துக் கொண்டாள்.
பரம்பரையாக கற்பிக்கப்பட்ட பத்தினித்தனத்தின் பாற்பட்டது என்றெல்லாம் கருதிவிடக்கூடாது.
சாதி தன்னை வெள்ளைச் சேலைகட்ட வைத்து விடுமே என்ற ஆதங்கம் உயிரைப் பறித்தது.
உண்ணாமுலை அம்மாள் வாழ்நாளெல்லாம் கெட்ட பெயரே வாங்கி கொண்டிருந்த தங்கையை கற்புக்கரசியாக ஆக்க வாய்ப்பு கிடைத்தது. அவாளோடயே போயிட்டாளே என அனைவரையும் தங்கையை வணங்க வைத்து விட்டாள்.
ஆவுடை இன்றும் அந்த ஊரில் பல குடும்பங்களுக்கும் குல தெய்வமாக வணங்கப்படுகின்றாள்.
ஜூலை, 2020.