காந்தியைச் சுமப்பவர்கள்!

காந்தியடிகள்
காந்தியடிகள்
Published on

அந்தக் காரில் ஐந்து பேர் இருந்தார்கள். பனிமூட்டமான சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது காரில் இருந்தவர்களில் இருவர் இந்தியர் மற்ற மூவரும் உகாண்டாவைச்
சேர்ந்தவர்கள். காரோட்டி தான் ஐவரில் மிகவும் இளைஞன். முவாங்கா என்ற பெயருள்ள அவனுக்குப் பதினெட்டு வயது தான் இருக்ககூடும். ஆனால் ஆள் திடகாத்திரமாக, ஆறு அடிக்கும் மேலான உயரத்திலிருந்தான். கற்சிலை போல உறைந்து போன முகம். அவன் கார் ஓட்டுவது ஓர் இயந்திரம் கார் ஓட்டுவது போலவே இருந்தது.

உகாண்டாவின் கிழக்கு பிராந்தியத்திலுள்ள
புசோகா துணை பிராந்தியமான ஜின்ஜாவில் ஓடும் நைல் நதியை நோக்கியதாக அவர்களின் பயணமிருந்தது.

கம்பாலாவிலிருந்து அவர்கள் சாலை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். காரிலிருந்த இந்தியர்கள் இருவரும் வயதானவர்கள். அவர்கள் உகாண்டாவில் குடியேறி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தது.

நரேஷ் கித்வானிக்கு வயது எழுபதை தாண்டியிருக்கும். அவர் வெண்ணிற கதர் குல்லா அணிந்திருந்தார். அதே வெண்ணிறத்தில் கதர் ஜிப்பா பைஜாமா. அகன்ற நெற்றி. தலை முழுவதும் நரைத்த மயிர்கள் என்றாலும் கற்றையாகவே இருந்தன. அவர் முகத்திற்குப் பொருந்தாத பெரிய கண்ணாடி அணிந்திருந்தார். அவருடன் இருந்த சுக்லாவிற்கு அறுபது வயதிருக்கக் கூடும். ஆள் குள்ளமாக இருந்தார். கறுத்துப்போன உதடுகள். பருத்த தொப்பை. வளைந்த மூக்கு. அவரும் கதராடை தான் அணிந்திருந்தார்.

அவரது மடியில் ஒரு மரப்பெட்டியிருந்தது. அதை மிகக் கவனமாகவும் பொறுப்பாகவும் வைத்துக் கொண்டிருந்தார்.

சுக்லாவும் கித்வானியும் தங்களுக்குள்
பேசிக் கொள்ளவில்லை. தங்களுக்கு இடப்பட்ட கடமை ஒன்றை சரிவரச் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் போலக் காரில் அமர்ந்திருந்தார்கள். கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

உகாண்டாவிற்கு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீக்கியர்கள் கூலிகளாக அழைத்து வரப்பட்டனர், இம்பீரியல் பிரிட்டிஷ் ஒப்பந்தக்காரர் அலிபாய் முல்லா ஜீவன்ஜியின் உதவியுடன், உகாண்டா ரயில்வேயை மொம்பசா விலிருந்து கிசுமு வரை 1901 ஆம் ஆண்டிலும், 1931 வாக்கில் கம்பாலாவிலும் அவர்கள் உருவாக்கினார்கள். இந்தக் கடினமான ரயில் பாதை போடும் பணியில் இந்தியர்கள் பலர் இறந்து போனார்கள். சிலருக்குக் கைகால்கள் போயின.

ரயில்வே பாதை அமைத்து முடித்தவுடன் ஒரு சில குடும்பத்தினர் தங்கள் ஒப்பந்தம் முடிந்தது என இந்தியாவுக்குத் திரும்பினர், ஆனால் மற்றவர்கள் உகாண்டாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். இவர்கள் மட்டுமின்றித் துணி வணிகம் செய்வதற்காக வந்த குஜராத்திகளும் உகாண்டாவின் நிரந்தரப் பிரஜைகளாக உருமாறினார்கள். அவர்களில் சிலர் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்டி தந்ததோடு இந்திய மக்களுக்கான தனிச்சுற்று இதழ் ஒன்றை நடத்தியும் வந்தார்கள்.

காந்தியடிகள்
காந்தியடிகள்

காரின் முன்சீட்டிலிருந்த சார்லிக்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். சுருள்முடி கொண்ட தலை. பிளவுபட்ட கீழ் உதடு. புருவத்தில் வெட்டுப்பட்டது போல ஒரு தழும்பு. பெரிய காதுகள். அவர் சில காலம் தபால்துறையில் பணியாற்றிய காரணத்தால் இந்தியர்களுடன் நல்லுறவு இருந்தது.

சார்லியின் குடும்பம் மிகப்பெரியது. அவருக்கு இரண்டு மனைவிகள். ஒன்பது பிள்ளைகள்.

சார்லிக்கு ஒரு முறை இந்தியா போய்வர வேண்டும் என்ற ஆசை கூட இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்தியப் பெண்களின் அழகு. அதை அவர் மிகவும் ரசித்தார். குறிப்பாக உகாண்டாவில் வசித்த இந்தியப் பெண்களின் வட்டமுகத்தையும் அவர்கள் சேலை அணிந்துள்ள விதமும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

சார்லியோடு அமர்ந்திருந்த ஒபாடே என்ற இளைஞன் கல்லூரி படிப்பை பாதியில் விட்டவன். கால்பந்தாட்டத்தில் ஆர்வம் கொண்டவன். பகலும் இரவும் குடிப்பதுதான் அவனது வாழ்க்கை. காரில் ஏறுவதற்கு முன்பாகவே
சார்லி அவனிடம் பயணத்தின் போது குடிக்கக் கூடாது என்று கண்டிப்பாகச்
சொல்லியிருந்தார். ஆனாலும் அவன் பாக்கெட்டில் சிறிய மதுப்போத்தல் ஒன்றை வைத்திருந்தான். அதை வெளியே எடுக்கவேயில்லை.

அவர்கள் எதற்காக நைல் நதியை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்று ஒபாடே கேட்டுக் கொள்ளவேயில்லை. அவனுக்கு இந்தப்பயணம் எரிச்சலாக இருந்தது. சார்லியின் கட்டாயத்தால் தான் அவன் பயணத்திற்கு ஒத்துக் கொண்டான். அவனுக்கு நதியில் படகோட்டத் தெரியும் என்பதால் உடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.

வெறித்த பார்வையுடன் கித்வானி கேட்டார்

''இன்னும் எவ்வளவு தூரமிருக்கிறது?''

''நதிமுகத்தை அடைய இரண்டு மணி நேரமாகக்கூடும்,'' என்றான் சார்லி

ஒபாடே தன் அதிருப்தியை தெரியப்படுத்துகிறவன் போலச் சொன்னான்

''சவ ஊர்வலம் போவது போலக் கார் மிகமெதுவாகச் செல்கிறது. இப்படிப் போனால் நதிமுகத்திற்குப் போவதற்குள் மதியமாகிவிடும்,''

''இதுவும் ஒரு சவ ஊர்வலம் தான்'' என்றார் சுக்லா.

ஒபாடேவிற்கு அவர் சொன்னதன் பொருள் புரியவில்லை. அவன் சார்லியை நோக்கி கேட்டான்

''உண்மையில் நாம் எதற்காக நைல் நதியை நோக்கிப் போகிறோம். அங்கே எனக்கு என்ன தான் வேலை?''

''நதியில் அஸ்தியை கரைப்பதற்குப் படகோட்ட வேண்டும் அது தான் உன் வேலை,'' என்றார் சார்லி.

''எனக்குப் பசிக்கிறது. தலைவலியாகவே வேறு இருக்கிறது வயதானவர்களுடன் பயணம் செய்வது என்பது இறந்த மாட்டிற்குக் காவல் காப்பதைப் போன்று அலுப்பூட்டக்கூடியது,'' என்றான் ஒபாடே

கித்வானி அமைதியான குரலில் சொன்னார்

''எல்லோரும் ஒரு நாள் முதியவர்கள் ஆவார்கள். அப்போது நீயும் முதுமையின் வலியை அறிவாய்,''

''நாங்கள் வயதை பொருட்படுத்துவதில்லை. வயதை கணக்கிடுவது வெள்ளைக்காரன் செய்த தந்திரம். உடலில் ஓடும் ரத்தம் உஷ்ணமாக இருக்கும் வரை நாங்கள் இளமையானவர்களே,''என்றார், சார்லி

அதை ஆமோதிப்பவன் போல ஒபாடே சொன்னான்.

''நாங்கள் மேகத்தைப் போன்றவர்கள். மேகம் எப்போதும் இளமையானது தானே, மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் தன் வயதைக் கணக்கிடுவதேயில்லை''.

''அப்படியில்லை மரங்களுக்குக் கூட வயதிருக்கிறது. மரப்பட்டைகளை வைத்து அதன் வயதை கணக்கிடுகிறார்கள்'' என்றார் கித்வானி

''இந்தியர்களுக்குக் கணிதத்தில் விருப்பம் அதிகம்'' என்றார் சார்லி

'' ஒன்று இரண்டு மூன்று நான்கு அதற்கு அப்புறம் எல்லாமும் கூட்டம் தான். அவ்வளவு கணக்கு தெரிந்தால் போதும்'' என்று சொல்லி சிரித்தான் ஒபாடே

''உன் சிரிப்பை நிறுத்து. கொஞ்ச நேரம் வாயை மூடிக்கொண்டு வா'' என்று சற்றே கோபமான குரலில் சொன்னார் சுக்லா

பாதையில் இருந்த குழியில் கார் ஏறி இறங்கியதால் அவரது மடியில் இருந்த மரப்பெட்டி குலுங்கியது. கைக்குழந்தையைப் பற்றிக் கொள்வது போலச் சுக்லா இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.

''இந்தப் பெட்டிக்குள் இருப்பது இறந்து போன மனிதனின் சாம்பலா'' எனக் கேட்டான் ஒபாடே.
'' மகாத்மா காந்தியின் அஸ்தி'' என்றார் கித்வானி

''யார் அவர் உங்கள் தந்தையா?'' எனக்கேட்டான் ஒபாடே.

''இல்லை. இந்தியாவின் தந்தை. கோடான கோடி இந்தியர்கள் அவரைத் தந்தை என்றே அழைத்தார்கள்''. என்றார் சுக்லா.

''ஒரு ஆள் எப்படி இந்தியாவிற்கே தந்தையாக இருக்க முடியும்'' எனக் குழப்பமான முகத்துடன் கேட்டான் ஒபாடே.

''தந்தையாக அவர் நடந்து கொண்டார். தந்தை என்பது பொறுப்புணர்வின் அடையாளம். கைமாறு எதிர்பாராமல் அன்பு செய்யும் வழி.. இயேசுவை நீங்கள் தந்தையாகத் தானே அடையாளப்படுத்துகிறீர்கள்'' என்று கேட்டார் சுக்லா

''அவர் கடவுள்'' என்றார் சார்லி.

''இவர் கடவுளைப் போன்ற மனிதன்'' என்றார் கித்வானி.

''இறந்த போன மனிதனின் சாம்பலை ஏன் நதியில் கரைக்க நினைக்கிறீர்கள்'' எனக்கேட்டான் ஒபாடே.

''இறந்தபிறகு அந்த மனிதன் உலகிற்குச்
சொந்தமானவன். அவன் சாம்பலை முக்கிய நதிகளில் கரைப்பதன் மூலம் உலகிடம் அவரைத் திரும்ப ஒப்படைக்கிறோம். இந்த நதிகள் இருக்கும் வரை அவரது நினைவுகளும் இருக்கும் தானே'' என்றார் சுக்லா.

''நதிக்கு நினைவுகள் கிடையாது'' என்றான் ஒபாடே.

''நதி தன் நினைவுகளைக் கூழாங்கல்லில் எழுதிவிடுகிறது'' என்றார் சார்லி.

''உண்மை. சரியாகச் சொன்னீர்கள். கூழாங்கற்களில் இருப்பது நதியின் நினைவுகளே'' என்றார் கித்வானி.

''காந்தி எப்போதாவது நைல் நதியை நேரில் பார்த்திருக்கிறாரா'' எனக்கேட்டான் ஒபாடே.

''இல்லை. அவரது சாம்பல் தான் நதியை அறியப்போகிறது''

''தன் வாழ்நாளில் காணாத நதியை வாழ்நாளிற்குப் பிறகு அறிந்து கொள்வது விசித்திரம்'' என்றார் சார்லி.

''டெல்லியில் அவர் கொல்லப்பட்டார். அங்கு தான் இறுதி நிகழ்வுகள் நடந்தன. தென்னாப்பிரிக்காவிற்கு காந்தியின் அஸ்தி கப்பலில் கொண்டுவரப்பட்டது. காந்தியின் குடும்ப நண்பரான விலாஸ் மேத்தா அதைப் பெற்று விசேச, பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்தார். அவரிடமிருந்தே இந்த அஸ்தியை நாங்கள் பெற்றோம். எங்களுக்கு இடப்பட்ட கட்டளை காந்தியின் அஸ்தியை நைல் நதியில் கரைக்க வேண்டும் என்பதே. இங்கு மட்டுமில்லை. உலகின் பல்வேறு நதிகளிலும் கடலிலும் காந்தி அஸ்தி கரைக்கப்பட்டிருக்கிறது'' என்றார் கித்வானி.

''நீங்கள் காந்தியை நேரில் பார்த்திருக்கிறீர்களா'' எனக்கேட்டார்
சார்லி.

கார் ஒரு வளைவில் திரும்பும் போது இரண்டு நாய்களைச்
 சங்கிலியிட்டு பிடித்தபடியே ஒரு பெண் நடந்து போய்க் கொண்டிருந்தார். தாழ்வான கூரைகள் கொண்ட
சிறிய கிராமம் ஒன்று தொலைவில் தெரிந்தது. உகாண்டாவின் கிராமமும் இந்திய கிராமம் போலவே இருந்தது.

''காந்தியை புகைப் படத்தில் தான் பார்த்திருக்கி றேன். அவர் குரல் எப்படி யிருக்கும் என்று கூடத் தெரியாது'' என்றார் சுக்லா.

''ஒருமுறை கூட நேரில் காணாத காந்தியை இப்போது
சாம்பலாக மடியில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். காந்தியின் எடையை உணருகிறீர்களா?'' எனக் கேட்டான் ஒபாடே.

''காந்தி இப்போது எடையற்றிருக்கிறார்'' என்றார் சுக்லா.

''சாம்பலின் கனத்தை நம்மால் மதிப்பிட முடியாது. உயிருள்ள மனிதன் செய்ய முடியாதவற்றைக் கூட இறந்த மனிதனால் செய்து முடித்துவிட முடியும். இறந்தவர்களைப் பற்றி எளிதாக நினைக்க வேண்டாம்'' என்றார் சார்லி.

''அதுவும் உண்மை தான். ஒரு மனிதனின் இறப்பு அவனது உடலுக்கு மட்டும் தான் முடிவைத் தருகிறது. அவனது நற்செயல்கள் உலகில்
நீண்டகாலம் வாழ்ந்து கொண்டேதானிருக்கும். அந்த எண்ணங்களை, செயல்களைக் கடைபிடிக்கும் கடைசி மனிதன் இருக்கும் வரை மனிதனுக்கு மரணமில்லை. காந்தியும் அப்படிப் பட்டவர் தான்'' என் அழுத்தமான குரலில் சொன்னார் சுக்லா.

''அப்படி காந்தி இந்தியாவிற்கு என்ன தான் செய்தார்?'' எனக்கேட்டான் ஒபாடே.

''நல்லறமும் அன்பும் அகிம்சையும் இந்தியர்களின் ஆதார குணம் என்பதை அவர் தான் அடையாளம் காட்டினார். இந்தியர்களின் மனசாட்சியோடு பேசிய ஒரே மனிதர் அவரே. உலகில் எந்தத் தேசத்திலாவது கோடானகோடி மக்களால்
நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் தன் கழிப்பறையைத் தானே சுத்தம் செய்திருக்கிறாரா. இடுப்புக்கு கீழே மட்டும் அரையாடை அணிந்து எளிய மனிதராக வாழ்ந்திருக்கிறாரா. தானே நூல் நூற்று கதர் ஆடையை அணிந்திருக்கிறாரா. அவரது போராட்ட வடிவங்கள் அதன் முன்பு இந்தியா கண்டறியாதவை. அவர் அன்பை போராட்ட வடிவமாக்கினார். பிரிட்டீஷ் அரசு அதைக்கண்டு பயந்தது. எளிய மக்களின் குரலாகவே அவர் எப்போதும் ஒலித்தார். காந்தியின் போராட்டம் தென்னாப்பிரிக்கா வில் தான் துவங்கியது. அவர் இனவெறிக்கு எதிராகப் போராடினார். சிறை
சென்றார்''

இதைக் கேட்டதும் ஒபாடேயின் முகம் மாறியது

''அவர் கறுப்பரா?'' எனக்கேட்டான்

''கறுப்பர். ஆனால் இந்தியர்'' என்றார் சுக்லா

''அவர் எந்த ஆயுதத்தையும் எடுக்காமல் எப்படிப் போராடினார்?'' என வியப்போடு கேட்டார் சார்லி

''அஹிம்சை தான் அவரது வழி'' என்றார் கித்வானி.

இதைக்கேட்டதும் அதுவரை மௌனமாகக் காரோட்டியபடியே வந்த முவாங்கா மெல்லிய குரலில் கேட்டான்.

''அவர் ஒன்றும் தேவதூதர் இல்லையே''

''தேவதூதரும் மனிதனாகத் தானே தோன்றினார் '' என்றார் கித்வானி.

''காந்தி எப்படி இறந்து போனார். உடல் நலமில்லையா'' எனக்கேட்டான் முவாங்கா.

''இல்லை. சுட்டுக் கொல்லப்பட்டார்''. என்றார் சுக்லா.
''பிரிட்டீஷ்காரனாலா'' எனக்கேட்டான் ஒபாடே

''இல்லை. இன்னொரு இந்தியன் தான் அவரைக் கொன்றான்'' என வருத்தமான குரலில் சொன்னார் சுக்லா.

காந்தியடிகள்
காந்தியடிகள்

''விசித்திரமாக இருக்கிறது. இந்தியாவின் தந்தையை ஏன் ஒரு இந்தியன் கொல்ல வேண்டும்?''

''அது தான் எங்களுக்கும் புரியவில்லை'' என்றார் கித்வானி.

''பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவன் கூட அவரைக் கைகூப்பி வணங்கியபிறகே தனது துப்பாக்கியை உயர்த்தினான்''

''கொலைக்காரன் ஏன் அவரை வணங்கினான் ''எனக் குழப்பமான முகத்துடன் கேட்டான் ஒபாடே.

''அவனுக்கும் அவர் தந்தை தானே'' என்று தணிவான குரலில் சொன்னார் சுக்லா.

''கேட்கவே வருத்தமாக இருக்கிறது. நல்லமனிதர்கள் ஏன் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள்? இயேசுவிற்கும் இப்படித் தானே நடந்தது'' என்றான் முவாங்கா.

சுக்லா ஏதோ சொல்ல முயன்று பேசமுடியாமல் அவரது கண்ணில் கண்ணீர் கசிந்தது. அதைச்
சார்லி கவனித்திருக்கக் கூடும். ஒபாடேயை பார்த்து அமைதியாக இரு என்பது போலச் சைகை காட்டினார்.

கார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. காரை ஓட்டிக் கொண்டிருந்த முவாங்கா கேட்டான்.

''மகாத்மாவின் புகைப்படம் உங்களிடம் இருக்கிறதா. நான் அதை ஒரு முறை பார்க்க விரும்புகிறேன்''

''நதிமுகத்திற்குப் போனதும் அவசியம் காட்டுகிறேன்'' என்றார் சுக்லா.

''நைல் நதி கடவுள் சொன்ன பொய்யின் காரணமாக உருவாக்கப்பட்டது. அது உங்களுக்குத் தெரியும் தானே?'' என்றார் சார்லி.

''இது என்ன புதுக்கதை'' எனக் கேட்டார் கித்வானி.

''ஆமாம். நைல் நதி உருவானதற்கு ஒரு கதையிருக்கிறது. ஜீயஸ் என்ற கிரேக்க கடவுளுக்கு ஹீரா என்ற அழகிய மனைவி இருந்தாள். அவள் கண்களில் இருந்து யாரும் எதையும் மறைக்க முடியாது. ஜீயஸ் ஒரு நாள் லோ என்ற இளம்பெண்ணைச் சந்தித்தார், அவள் மீது காதல் கொண்டார். இதை மனைவியிடமிருந்து மறைக்க நிறையத் தந்திரங்கள் செய்தார். பொய்
சொன்னார். இதை அறிந்து கொண்ட ஹீரா லோவை பாலைவனத்திற்குத் துரத்திவிட்டாள். பொய்யே பேசாத ஜீயஸ் பொய் சொன்ன காரணத்தால் பெருமழை கொட்டித் தீர்த்தது. வருஷக்கணக்கில் மழை பெய்து தண்ணீர் பெரிய ஏரியாகத் தேங்கியது. பாலைவனத்தில் இருக்கும் லோவிற்காக அந்தத் தண்ணீர் ஒரு நதியாக மாறி ஓடியது. அது தான் நைல் நதி,'' என்றார் சார்லி

''எல்லா நதிகளுக்கும் இப்படி ஏதாவது ஒரு விசித்திர கதை இருக்கத்தானே செய்கிறது'' என்றார் சுக்லா.

''கதையில்லாத ஆறுகளேயில்லை. மழை என்பதே கடவுள் விடுகிற கண்ணீர் தானே?'' என்றான் காரோட்டியான முவாங்கா.

''கடவுள் ஏன் கண்ணீர் விடுகிறார்?''என்று கேட்டார் கித்வானி.

''மனிதர்களின் செயலைப் பார்த்து தான். வேறு என்ன'' என்றான் முவாங்கா.

''காந்தி மனிதர்களின் செயலைப் பார்த்து வெறுமனே கண்ணீர் விடவில்லை. துயரம் துடைக்கப் பாடுபட்டார். காற்றைப் போல இந்தியா முழுவதும் பரவியிருந்தார் காந்தி. எளிமை தான் அவரது பலம். ''

''நீங்கள் பேசுவதைக் கேட்கும் போது அந்த மனிதர் மீது மிகுந்த மரியாதை வருகிறது'' என்றான் முவாங்கா.

''உன்னைப் போலத் தான் நாங்களும் அவரைக் காணாமலே அவரை நேசித்தோம். அவர் வழி நடந்தோம். அவரது செயல்களைப் பின்பற்றினோம். அவரது மரணம் எங்களை உலுக்கிவிட்டது''

''காந்தி கொல்லப்பட்டிருக்கக் கூடாது'' என்று உறுதியான குரலில் சொன்னான் முவாங்கா

''காந்தியோடு சேர்த்து அவர் போதித்த நெறிகளையும் அறத்தையும் புதைத்துவிடப் பார்க்கிறார்கள். அது தான் கவலை அளிக்கிறது'' என்றார் கித்வானி.

''இந்தியா இனி என்னவாகும் என்று நினைத்தால் பயமாகவே இருக்கிறது'' என்றார் சுக்லா.

''ஒரே நம்பிக்கை நேரு தான். ஆனால் அவரைச் சுதந்திரமாகச் செயல்பட விடமாட்டார்கள்'' என்றார் கித்வானி.

''காந்தியின் இடம் எவராலும் நிரப்பபட முடியாதது. காந்தி முன்பு உடலுடன் இருந்தார். இனி ஒளியாக இருப்பார்'' என்றார் சுக்லா.

''சரியாகச் சொன்னீர்கள் காந்தி ஒளியே தான். வெளிச்சம் உலகிற்குப் பொதுவானது தானே. ஒவ்வொரு தேசத்திற்குத் தனி வெளிச்சம் என்று இருக்கிறதா என்ன?'' எனக் கேட்டார் கித்வானி.

அதன்பிறகு அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. நதிமுகம் தேடி அவர்கள் கார் பயணித்தது. ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவர்கள் நடந்து செல்ல ஆரம்பித்தார்கள். நதிக்கரையோர குடியிருப்புகள் கண்ணில் பட்டன.

முவாங்கா அந்த அஸ்தி கலயம் உள்ள பெட்டியை தான் சுமந்துவரட்டுமா எனக்கேட்டான். சுக்லா ஒரு நிமிசம் யோசித்தார். பின்பு அவன் தோளிற்குப் பெட்டியை மாற்றினார்.

''நாம் காந்தியை சுமந்து செல்கிறோம் ''என்றார்
சார்லி.

அவர்கள் மௌனமாக நடந்தார்கள்.

''காந்தியின் உடலை விடவும் அவரது அஸ்தியின் கனம் அதிகமாகயிருக்கும். காரணம் அது கோடான கோடி இந்தியர்களின் கண்ணீரையும் சேர்த்தது தானே?''என்றார் சுக்லா

முவாங்கா நதிமுகம் வரை அந்த அஸ்தியை சுமந்து வந்தான். ஒபாடே ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டுவந்தான். அவர்கள் அப்படகில் ஏறிக் கொண்டு நைல் நதியில் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். நுரைத்து பெருக்கெடுத்து ஒடும் நதி. வெளிர்பச்சை நிறமான நீர். கடலொன்று சீறிப் பாய்ந்து செல்வது போலவே இருந்தது. ஆற்றின் வேகத்தில் படகு தத்தளித்தபடியே போனது.

ஆற்றின் நடுவில் படகை நிறுத்திவிட்டு சுக்லா மரப்பெட்டியில் இருந்த வெண்கல கலயம் ஒன்றை வெளியே எடுத்தார். அதைத் தன் கைகளால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். சார்லியும் கித்வானியும் முவாங்காவும் அதை வணங்கினார்கள். வெண்கல கலயத்திலிருந்த காந்தியின் அஸ்தியை அவர்கள் நதி நீரில் கரைத்தார்கள். காற்றின் வேகத்தில் அஸ்தி பறந்து முவாங்காவின் கண்ணில் பட்டது. அவன் அதைத் துடைக்கவில்லை. உலகின் மிகப்பெரிய நதியான நைலில் காந்தி கரைந்து போனார்.

எத்தனையோ பேரரசர்களை, ராஜ்ஜியங்களைக் கண்ட நைல் நதி மகாத்மாவையும் தனக்குள் ஏந்தியபடியே ஓடிக் கொண்டிருந்தது.

அவர்கள் கரை திரும்பும் போது ஆதங்கமாகக் குரலில் முவாங்கா சொன்னான்.

''தந்தையைக் கொல்வது பெரும்பாவம். அது உங்கள் தேசத்தைச் சும்மாவிடாது''

சுக்லா கலக்கமான முகத்துடன் சொன்னார்.

''காந்தி தான் இந்தியாவைக் காக்க வேண்டும்''

தொலைதூர மரமொன்றிலிருந்து அதை ஆமோதிப்பது போலப் பறவையின் குரல் ஒன்று உரத்துக் கேட்டது.

அக்டோபர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com