மதியத்திலிருந்தே பரபரப்பானான். குனியமுத்தூரிலிருந்து முதல்முறை சென்னைப் பயணம் கிளம்புகிறான். வயக்காட்டிலிருந்து திரும்பிய தந்தை முருகையன், வாசலில் அண்டாவிலிருந்த நீரில் முகம், கைகால் தேய்த்துக் கழுவிக் கொள்கிறார். தோள்துண்டில் துடைத்துக்கொண்டு, சுவர் ஓரமாக வைத்திருந்த பெரிய துணிப்பையுடன் உள்ளே வருகிறார்.
‘ தம்பி வேலுச்சாமி ! இங்க பாரு ! நம்ம தோட்டத்து மாம்பழமும் கற்பூர வள்ளியும் இதிலே வைச்சிருக்கேன்! பெரிய மனுஷன் மாமல்லனைப் பார்க்கப் போறே ; வெறுங்கையோடப் போகாம, இதைக் கொண்டுபோய்க் கொடப்பா ! நம்ம பூமியில விளைஞ்சதுன்னு சொல்லிக் கொடு ! நாம மனுஷனோட வயித்துக்குச் சோறு போட்றோம் ; அவரு மனுஷங்க மனசுக்குச் சோறு போட்றாரு... ‘
வேலுச்சாமிக்கு சிங்காநல்லூரில் தனியார் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் பணி. ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிடின் கல்லூரியின் கதவு தட்டலுக்கு உதவுமே என்று பள்ளித் தலைமையாசிரியர் ஊக்குவித்தார். உதவினார். அவரது நண்பர் கல்லூரிப் பேராசிரியர் சரவணனிடம் இவனை அறிமுகப்படுத்தினார்.
சரவணன் வேலுச்சாமியை பலமுறை வரச் சொல்லி உரையாடி அவனது ஆர்வம், திறமை இவற்றை ஆழம் பார்த்தார். நிறைவு கொண்டார் இறுதியாக, இரண்டு மூன்று தலைப்புகளில் - இலக்கியப் பரப்பில் களம் காண்பித்தார். அதில் உள்ள சாதக பாதகங்களை அலசிக் காண்பித்தார். பிறகே வேலுச்சாமியை, பல்கலைக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கு விண்ணப்பிக்கச் சொன்னார். நுழைவுத் தேர்வெழுதி வென்று, நேர்காணலும் சென்று வந்தான். ஆய்வுக்குத் தேர்வானான். கோவையிலேயே வேலுச்சாமிக்கு ஆய்வு நெறியாளர் மருதன் கிடைத்தார்.
தலைப்பை வேலுச்சாமியே தீர்மானிக்கட்டும் என்று அவனது விருப்பத்திற்கே விட்டார். வேலுச்சாமி தேர்ந்தெடுத்தான் தலைப்பை :
‘ மாமல்லன் படைப்புகளில் மனித நேயம்'
மருதன், ‘சரி, வேலு, நீ சென்னையில் மாமல்லன் அவர்களிடம் நேரில் உனது ஆய்வு முயற்சி பற்றி, தலைப்பு, ஆய்வின் எல்லைகள் பற்றிக் கூறி, அவரது வாழ்க்கைக் குறிப்பும் ஒப்புதல் கடிதமும் பெற்று வாப்பா' என்றார்.
இப்போது இந்தப் பயணம்.
மாமல்லனுக்குத் தரச் சொல்லித் தந்தை கொடுத்தனுப்பிய பழங்கள் கொண்ட ஒரு பையும், தனது சிறிய தோள் பையும்தான். சென்னை மெயிலில் அமர்ந்து, வண்டி நகரக் காத்திருக்கும் வேளையில் நினைவுகள் நகர்கின்றன.
************
‘வேலு, நீ, மாமல்லனின் நாவல் கவிதையை நிறையப் படிப்பியோ ?'
மருதன் முதல் நாளே கேட்டார்.
‘ஆமாம் சார். களத்துமேட்டுக்குப் போய் வந்தபிறகு, அப்பாரு, சாணம் மெழுகிய வாசலில், கொய்யா மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடியே, நூலகத்திலிருந்து தான் எடுத்து வந்திருக்கும் புத்தகத்தை என்கிட்டே குடுத்துப் படிக்கச்
சொல்லிக் கேட்பார். எட்டு வரை படித்திருக்கிறார். ஆனாலும், என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பதில் அவருக்கு ஒரு இன்பம். நாவல், சிறுகதை, கவிதை எல்லாவற்றிலும் ஈடுபாடு. மாமல்லன் அவருக்குப் பிடித்த படைப்பாளர். அப்படித்தான் எனக்கு மாமல்லன் சார் அறிமுகம். மாமல்லன் சிறுகதை, நாவல் இவற்றோடு கவிதைகளும் எழுதறது எனக்குப் பிடிக்கும் சார் !
‘ கவிதையில் மட்டும் நேரடியாக எளிய தமிழில் சுவையான நடையில் எழுதிச் செல்வார். பெரும்பாலும் நகரம் சார்ந்த உழைக்கும் மக்கள் பற்றிய எழுத்துகள். அவர்களது வாழ்நிலை, பொருளாதார சிக்கல்களின் விளைவுகள், மன அவசங்கள், அகவாழ்வின் சூட்சுமங்கள், என்று ஆரம்பித்தவர், பின்னர், கீழ் மத்தியதர, மத்தியதர மக்களின் குண வெளிப்பாடுகள் என்று பயணித்தது மாமல்லனின் எழுத்து....‘
‘வேலு ! போதும், போதும். உன்னோட ஆய்வேட்டை என்கிட்டே வாய்லயே ஒப்பிச்சுடுவே போலிருக்கே! கிளம்பு சென்னைக்கு !'
இதோ இப்போது, பயணம் ! அந்த மாமல்லனைப் பார்க்க. அவருக்கு மூன்று கடிதங்கள் எழுதிவிட்டான். பதிலே இல்லை. ‘சரி, நேரில் போய்ப் பார்த்துவிட்டு, அவரது ஆசியயையும், இசைவுக் கடிதத்தையும் வாங்கி வந்துடணும்.'
நகர்கிறது ரயில். பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து சரிபார்த்துச் செல்கிறார். வேலுச்சாமி தனது தோள் பையையே தலையணையாகக் கொண்டு படுக்கிறான். ஆங்காங்கே பெரிய விளக்குகள் அணைந்து இரவு விளக்குகள் மட்டும் கண் சிமிட்டுகின்றன. வேலுச் சாமிக்கு உறக்கம் கொள்ளவில்லை. மாமல்லனே கண் முன் வந்து வந்து நிற்கிறார். அவர் கிட்டத் தட்ட திரை நாயகன் போல், வில்லன் போல் பலவிதங்களில் காட்சி தருவார். உடை மட்டுமல்ல, சிகையலங்காரம், கண்ணாடி ஃபிரேம் என. ஆனால், எல்லாமே அவருக்குப் பொருந்திப் போகும் !
சாதாரண கிழிசல் சட்டை, வேட்டி எனும் தமிழ் எழுத்தாளரின் பொது பிம்பத்தைப் போட்டு உடைத்தவர் மாமல்லன்.
பத்திரிகையில் நாவல், சிறுகதை, கவிதை எழுதியதோடு, திரைப்படப் பாடல்களும் எழுதினார். இளைஞரிடையே இவர் ஒர் உதாரணபுருஷர் ஆனார்! இவரது நடையுடை, பாவனை, பேச்சுத் த்வனி - எல்லாமே பிரதியெடுக்கப்பட்டு தமிழ் இலக்கிய உலகில் ஆராதிக்கும் வகையில் குறியீடென நிற்கிறார் !
ஆனால், வேலுச்சாமிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல ! மாமல்லனின் எழுத்தே இவனை ஈர்த்தது. அந்த எழுத்துச் சுட்டும் பொருளில் ஈடுபாடுகொண்டான்.
‘ சாமான்யர்கள் மீதான மாமல்லனின் அக்கறை உணர்த்திய ஆழமான கவிதைகள், நாவல் இவையே நான் அவர் மீது கொண்ட ஈர்ப்பின் முக்கிய மையப்புள்ளி. விடிந்ததும் அந்த மாமல்லனை நேரில் சந்திக்கப் போகிறேன்! காலையில் சென்னை சேர்ந்ததும் ரயில்நிலையம் அருகிலேயே ஒரு சிறிய விடுதியில் தங்கிக் குளித்து இரண்டு இட்டிலி சாப்பிட்டுவிட்டு, கொட்டிவாக்கம் சென்றுவிடவேண்டும். அங்குதானே அவரது வீடு.'
***
புரண்டு புரண்டு படுத்தான்... விடிந்தும் விடியாத பொழுது.... மணி - ஐந்தேமுக்கால். எழுந்தான். ரயிலிலேயே முகம் கழுவிப் பல் துலக்கித் தயாரானான். ஜன்னல் வழியே சென்னைப்பட்டினத்தின் முதல் தரிசனம் ! அஞ்சு ரூபாய் அஞ்சல்தலை அளவில் நகரத்தின் சிறுதுளி ! சட்டென நினைவு வந்தவனாகத் தன் இருக்கையைப் பார்த்துக் கொண்டான் - தோள் பை, பழப் பை ! அதது வைத்த இடத்தில் அப்படியே. தந்தை சொன்னது எதிரொலித்தது :
‘ சாக்கிரதப்பா ! பட்டணத்துலே காபந்தா இருந்துக்கோ. ஒரே திருட்டுப் பயலுக ஊரப்பா ! கொஞ்சம் அசந்தா ஆளையே தூக்கிட்டுப் போயிடுவானுகன்னு சொல்றாங்க. போற வேலையிலே கவனமிருக்கட்டும்.’
வண்டி நின்றது. துள்ளிக்குதித்து இறங்கினான்.
செஞ் சட்டைவீரர்களின் மொய்ப்பிலிருந்து நீந்தி, இடதுபக்க வாசல் வழியே வெளியேறினான். முன்னதாகப் பயணச் சீட்டுப் பரிசோதகரிடம் மலிவு வாடகை அறை, கொட்டிவாக்கம் செல்லும் வழிமுறை விவரங்களைக் கேட்டுக்கொண்டான். எதிர் சந்தில் கேரளக்காரர் நடத்தும் தங்கும் விடுதி.
சிறிய, சுத்தமான அறைகள் பயமுறுத்தாத வாடகையில். அங்கேயே சிற்றுண்டி. முதலில் பறக்கும் ரயில், பின்னர், மாநகரப் பேருந்து. விசாரித்து விசாரித்து மாமல்லன் இல்லம் இருக்கும் பகுதியை அடைந்துவிட்டான். ஆனால், அவன் நினைத்தபடி 'மாமல்லன் வீடு எங்கே இருக்கு' என்று கேட்டால், ‘இதோ இங்கேயிருக்கு, அதோ அதுதான் அவர் வீடு ' என்றெல்லாம் யாரும் அடையாளம் காட்டிவிடவில்லை. ‘யாருப்பா மாமல்லன் ? ',
‘மாமல்லன்னா ? ', ‘ஐயோ மகாபலிபுரம் போறதுக்கு இங்கே எறங்கீட்டீரோ ? ' என்றெல்லாம்தான் பதில் வந்தது. இறுதியாகத் தள்ளுவண்டித் துணிச் சலவைக்காரர் தெளிவாக அடையாளம் கூறினார்.
‘ சிகப்புக் கலர் வீடு ; முன்னாடி நீலக் கலர் மாருதி ஸ்விப்ட் நிக்கும். வெளியிலிருந்து இடதுபக்கம் மாடிப்படிக்கட்டு. அங்கயே டாபர்மேன் கட்டியிருக்கும் !'
இவர்தான் அந்த வீட்டின் வடிவமைப்பாளரோ என்று யோசிக்க வைக்கும் வகையில் தெளிவாகக் கூறினார். வேலுச்சாமி நன்றி கூறி நகர்ந்தான். மணி பார்த்தான் - பகல் பதினொன்று.
மாமல்லனின் வீட்டை அடைந்தான். வீட்டின் வாயிலில் கம்பிக் கிராதியிட்ட இரு கதவுகள். உள்பக்கம் பூட்டு தொங்குகிறது. கீழும் மாடியுமாக வீடு - மாடியில் முன்பக்கம் திறந்தவெளி கொண்ட உள்ளடங்கிய கட்டிடப்பகுதி. அழைப்பு மணியெதுவும் கண்ணில் படவில்லை. யோசித்தவன், குரல் கொடுக்கிறான் :
‘சார் ! சார் ! ‘
‘லொள் ! லொள் ! ‘
எங்கிருந்து வருகிறதெனத் தெரியாமல் துப்பாக்கிக் குண்டுபோல் கருப்புநிற நாய் உரத்துக் குரல் கொடுத்து, இவனை நோக்கிப் பாய்ந்து தாவுகிறது. இடையே இரும்புக்கதவு. இவன் பயந்துபோய் பின்வாங்கினான்.
வேலுச்சாமியின் குரல் தாழ்ந்து தொடர்ந்தது :
‘ சார் ! சார் ! ‘
மவுனமே பதிலாக ...
மீண்டும் சில முறை...
யாரும் வரவில்லை. நாயும், இவனுக்காகக் குரைப்பது வீண் என்பதாகக் குரல் கொடுப்பதைத் தவிர்த்து, அங்கேயே நின்று இவனை முறைத்துப் பார்த்தது. ஐந்து, பத்து என்று நிமிடங்கள் நகர்ந்தன. இவன் இடைவெளி விட்டு அவ்வப்போது மீண்டும் மீண்டும் அழைத்தான்.
சற்று நேரத்தில், மாடியில், திறந்த வெளிப்பகுதியில் நீல வண்ண லுங்கியும் பனியனுமாக வந்தார் மாமல்லன். தூக்கத்திலிருந்திருக்க வேண்டும். கரகரத்த குரலில் :
‘ ம்... யாரு?'
இந்த முறை மீசை மழித்து, ந.பிச்சமுத்து தாடியில் மாமல்லன் !
வேலுச்சாமிக்கு நம்பவே முடியவில்லை ! தான், பல நாட்களாகப் பார்க்க விரும்பிய கவிஞர், எழுத்தாளர் மாமல்லன் ! கையிலிருந்த பழப்பையை அப்படியே, கதவில் சாய்த்து, தரையில் வைத்தான். சரிந்த தோள் பையைச் சரிசெய்தபடி, ‘வணக்கம் சார் ! நான் வேலுச் சாமி. கோவை, குனியமுத்தூர். மூணு காயிதம் போட்டேன் சார் உங்களுக்கு.'
‘ ஆவ்... ஹ...' கொட்டாவி விட்டார் மாமல்லன்.
‘ ம்... இப்ப, என்ன... என்ன வோணும்?' வார்த்தைக்கு வார்த்தை
நீண்ட இடைவெளி.
சட்டென வாடினான் வேலுச்சாமி.
இப்படி எதிர்கொள்வார் இவரென நினைக்கவில்லை. இங்கிருந்தே எப்படிப் பேசுவதெனத் தயங்கினான்.
‘ சார், நான் முனைவர் படிப்புக்கு ஆய்வுக்கு உங்கள் படைப்புகளை எடுத்திருக்கேன்... அதான் உங்க கிட்டே சில விஷயம்...'
‘ உன்னை யார் பண்ணச் சொன்னது?'
‘ இல்ல சார் உங்க கவிதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்..‘
‘ ஒனக்குப் பிடிச்சா எனக்கென்ன ?'
பன நொங்குப் பளிங்குச் சுளையைக் கட்டைவிரல் கொண்டு நோண்டி எடுப்பது போல, தன் தாடிக்குள் கட்டை விரலை விட்டுச் சிக்கெடுத்த வண்ணம் கேட்டார்.
இவனுக்குப் புரிபடவில்லை.
‘... இல்லை சார், அப்பாவுக்கும் உங்க எழுத்துன்னா ரொம்பப் புடிக்கும் ! அவருதான் உங்க எழுத்தையே எனக்கு...'
‘ அட...ஊர்ல இருக்கவன் எவன் எவனுக்கோ என்னோட எழுத்துப் பிடிச்சாலென்ன... பிடிக்கலைன்னா எனக்கென்ன... ? தெருவில் போறவன்லாம் எழுத்து, ரசனை, ஆய்வுன்னு சும்மா வேல வெட்டியில்லாம வந்துட்டே... காலங்கார்த்தால...‘
அடித் தொண்டையில் இருந்து காறி உமிழ்ந்தார் மாமல்லன். நெருப்பை மிதித்த சூட்டை உணர்ந்தான் வேலுச்சாமி. தலையில் சம்மட்டியால் அடிவாங்கிய உணர்வு. நெஞ்சுக் குழியெல்லாம் நெருப்பு இறங்கும் தகிப்பு...
தன் எழுத்தில் மனிதம் போற்றிய அவரா இவர் ?
நான் நுணுகிப் படித்து மகிழ்ந்த, ஆராதித்த அவரா இவர் ?
இரும்புக் கதவைப் பற்றியிருந்த தன் கரங்களை விருட்டென விலக்கிக் கொண்டான். சட்டென்று திரும்பினான். வேலுச்சாமி, அப்பா கொடுத்தனுப்பிய அந்தக் காக்கிப் பழப் பையை மட்டும் காலை எக்கி உயர்த்தி நின்று, மாமல்லன் வீட்டின் கதவின் உள்பக்கம் இறக்கிச் சுற்றுச் சுவற்றில் சாய்த்து வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தான்.
கையும் கனக்கவில்லை, மனசும் கனக்கவில்லை. தெளிந்தான். நடக்க நடக்க இவனுள் புதிய விழிப்பு புலர்ந்தது...
பாவம், இவனுக்கு - தான் அடிபட்டது வலிக்கவில்லை. படைப்பையும் படைப்பாளியையும் ஒருசேரப் பார்த்து மகிழ்ந்த அந்த மண் மனிதனான தன் தன் தந்தை, முருகையனது பால் மனசுதான் கண் முன் நிழலாடியது....
எதிரிலிருந்து பகலிலேயே வீசும் உடல் வருடும் உப்புக் கடற்காற்றும் மேலே அடிக்கும் சென்னைப் பட்டணச் சுடு வெயிலும் வேலுச்சாமிக்குள் புதிய பார்வையைத் தெளித்தன.
தீர்மானித்தான் வேலுச்சாமி. நாளை ஊர் திரும்பியதும் பகலில் ஆய்வு நெறியாளர் மருதனைச் சந்தித்து, மாமல்லனை விடுத்துவிட்டு, தனது புதிய ஆய்வுத் தலைப்பையும் தளத்தையும் கூற முடிவெடுத்தான் :
‘ மண் மக்களின் வாழ்வு கூறும் நாவல்கள் ‘ -
‘விவசாய வாழ்க்கையைக் கூறும் அண்மைய நாவல்கள் ! ‘
தீர்மானித்தான் வேலுச்சாமி, தான் மாற்றிக்கொண்ட ஆய்வுத் தலைப்பை.
வேலுச்சாமியின் நடையில் வேகமும் மனசில் விவேகமும் புகுந்தன.
ஏப்ரல், 2021