கண்ணாடி வீட்டின் திருடன்

ஓவியம்
ஓவியம்ஜீவா
Published on

முதல் மிடறின் ஊடாக கீழிறங்கிய வலி பின் ஒவ்வொரு மிடறின் போதும் பெருகிக்கொண்டே வந்தது. பாலன் தனது கையிலிருந்த தேநீர் கோப்பையை உற்று நோக்கினான். பூங்கொத்துகள் சிலாகித்து வரையப்பட்ட கண்ணாடிக் கோப்பையின் அடியில் ஒரு கப்பல் காணப்பட்டது. தேநீரிலிருந்து மணம் ஒரு தூண்டுதல் போல ஆவியோடு வந்தது. பரபரக்கும் நாவினை மனம் வலியின் மீறுதலைக் கொண்டு தடுத்தது. இன்று ஞானத்தின் வீட்டிற்கு தான் வந்திருக்கக்கூடாது என தனக்குள்ளாக ஒருதரம் உரத்துச் சொல்லிக்கொண்டான்.

அடுக்களையின் உள்ளே குழந்தையின் சிணுங்கல்களுக்கும் இடையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாள் ரெஜி. கூடுதலாக ஏதோ வாங்கி வரவேண்டி வெளியேப் போயிருந்த ஞானத்தின் பின்னே நிமிடங்கள் கடந்து செல்லத் துவங்கியிருந்தன.

உள்ளேயிருந்து குரல் கொடுத்தபடி ரெஜி எட்டிப் பார்த்தாள்.

“புத்தகம் படிக்கிறீங்களா.......? அவரு சீக்கிரம் வந்துருவாரு.” அவன் தலையாட்டி உடனே மறுத்தான்.

“பாட்டுப் போடட்டா?”

“வேண்டாம்”

“பாட்டுன்னா  ரெம்ப இஷ்டம்னு சொன்னாரு...?”

மீறிக்கொண்டு வந்த புன்னகையின் உள்ளே ஒளிந்திருந்த அலட்சியத்தினை அவள் அறியாதவாறு அடக்கிகொண்டான். சிநேகத்தின் ஒரு துவக்க பாவத்தினை வெளிப்படுத்திவிட்டு அவள் உள்ளே சென்றாள்.

“இன்னும் என்ன ஸார் அனுபவம் மிச்சமிருக்கு? இப்படியேப் போட்டு அலக்கழிக்குது வாழ்க்க....!” ஹீரோ ஒடஞ்சிப் போயி சொல்லுறான் ஜெயிலர் கிட்ட. ராஜன் பி தேவ் மாதிரி ஒரு ரியாக்சன். அன்பா குரூரமானு தெரியாத மாதிரி.

“ஸார்....!”. அவரு திரும்புறாரு. “சாவறத விட  சாவுக்காகக் காத்திருக்கறது தான் ஸார் ரொம்பக் கஷ்டமா இருக்கு.” காட்சியை நிறுத்திய வகைக்கு பாலன் சற்று தண்ணீர்க் குடித்தான். இயக்குநர் அவனது கைகளைப் பிடித்து வைத்துக் கொண்டார். உடன் இருந்தவர்கள் பரிச்சயமற்ற பார்வையில் மருத்துவமனையில் காத்திருப்பவர்களைப் போலக் காணப்பட்டார்கள்.

“உங்களுக்கு எந்த ஏரியா பாலன்?”

“கே.கே. நகர்”

“டிராப் பண்ணட்டுமா?”

“வேண்டாம்.”

“நா கொண்டுவிடறனே”

“நடந்து போறது தனி வசதி. யோசிச்சுக் கிட்டே போகலாம்.”

“அந்த வசதிக்கு ஒரு தடவ லீவு விடுங்களேன்....” வண்டியை உருட்டிக் கொண்டே பின் தொடர்ந்தான் ஞானம். அசௌகரியமாக இருந்தது பாலனுக்கு.

துரைசாமி சுரங்கப்பாதை அருகே வந்ததும்  ஞானம் கேட்டான், “உங்கக்கூட ஃப்ரண்டா ஆகிக்கலாமா பாலன்?”. அதன் பிறகு பாலன் வண்டியில் ஏறிக்கொண்டான்.

“டிஸ்கஷன்னா நிறையப் பேசுவோம். ஆனா நீங்கக் கதையத் தவிர வேற எதுவும் பேசமாட்டீங்களா பாலன்?”

“நெறைய பேசித்தானே இந்த நிலைக்கு வர்றோம்..”

“நா ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?. கோவிச்சுக்கிட்டாக் கூட பரவாயில்லதான்.”

சாலையில் வாகனங்களின் இரைச்சல்களை செவியடக்க பாலன் கூர்ந்து கவனித்தான்.

“அந்த டைரக்டருக்கு நீங்க இந்தக் கதைய குடுக்கக் கூடாது பாலன்.”

பாலன் சற்று அதிர்ந்துதான் போனான். இது எந்தத் தடம் நோக்கி செலுத்தப்படுகிற வண்டியோ என ஞானத்தை சம்சயித்தான்.

“வேண்ணா பாருங்க. ஸ்க்ரிப்ட்ட வாங்கிக்குவாரு. உங்களுக்கான க்ரெடிட் கெடைக்கவே கெடைக்காது.” பாலன் கண்களை மூடிக் கொண்டு கவனித்தான்.

“ஒரு கத வேணும் பாலன். பொரட்டிப் போடுற மாதிரி ஒரு கத. இதாண்டா ஸ்க்ரிப்ட்னு சொல்ற மாதிரி இருக்கணும். உங்களால முடியும் பாலன். ரைட்டருங்கறவரு குருமாதிரின்னு நம்பறவன் நா. உங்களுக்கு என்ன செய்யணுமோ அத சரியா செய்றேன்....ஒர்க் பண்ணுங்க.”

“கவனிக்கிறீங்களா பாலன்?. ....அட்லீஸ்ட் பணமாவது கெடக்குமான்னா.....சான்சே இல்ல. ஏமாத்திருவாரு....கதைய யாருக்குமே குடுக்காதீங்க.” என்றான் ஞானம்.

“வீடு மாத்த வேண்டியதிருக்கு. பணம் தேவப்படுது...”

“அது என்னமோ தெரியல பாலன். எங்கிட்ட வேலைக்கு வரும்போதுதான் நெறைய பேருக்கு வீட்டு பிரச்சன வருது. பாட்டி சாவக் கெடப்பா.... அம்மாவுக்கு ட்ரீட்மெண்ட் தேவைப்படும். அப்பாவுக்கு ஆஞ்சியோ, பைபாஸ்னு வரும். தங்கச்சிக்கு நிச்சயம் ஆவும்.....”

“பணம்கறது சம்பளம் மட்டும் இல்லையே சார்... அது ஒரு அங்கீகாரம். என்னுடைய வேலைய நீங்க அங்கீகரிச்சிருக்கீங்கங்கற மரியாத”. இயக்குநருக்குக் கோபம் வந்தது.

“நா உங்களுக்கு வாழ்க்கயக் குடுத்துருக்கேன். இந்தப் படத்துக்கு அப்புறமா பாருங்க.... நீங்க எங்கப் போகப் போறீங்கன்னு.”

வாழ்க்கை தெருவை விட்டு எங்கும் நகர வில்லை. தேவைக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள். சிலபேர் மூலக்கதை என்று பெயர் போட்டார்கள். சிலபேர் வசனம் என்று போட்டார்கள். சிலபேர் எதுவுமே போடவில்லை. “இதுக்கு அஞ்சலினு போட்டுருக்கலாம் ஸார்” ஒரு இயக்குநரை சந்தித்தபோது பாலன் கூறினான்.

“நீங்க விரும்புற படத்த உங்களால மட்டுந்தான் பாலன் எடுக்க முடியும். உங்கக் கத அந்த மாதிரி. உண்மையா சொல்லனும்னா உங்கக் கதையக் கேட்டு எனக்கு ஜுரமே வந்திருச்சி...இப்படி ஒரு கதைய எப்படிடா யோசிச்சிருப்பான்னு மனசுக்குள்ள ஒரே புலம்பல்னா பாத்துக்குங்க. வேண்டாம் பாலன். கதையவே பலாத்காரம் பண்ணிருவாங்க.”. பாலன் பார்வையை மாற்ற முயற்சித் தான். விழிகளில் ஒருவித நடுக்கமும்  சேர்ந்து நகர்ந்தது. சுவாசம் பகுதிபகுதியாக விட்டுவிட்டு சென்றது சற்று கடினமாக இருந்தது.

‘எதுக்காக எம்மேல இவ்ளோ பாசம்?”

“உங்கக் கதையாக் கூட இருக்கலாம். இல்ல, இப்படி ஒரு கதைய சொன்னதால கூட இருக்கலாம்.”

“எனக்குத் தொண்டக் காயுது.”

வலிகள் கூடும்போது தொண்டை காய்வதும், வறண்டு இருமல் உருவாவதும் பாலனுக்கு பழக்கமாகி விட்டது.

“சிலசமயம் ஏன் ஒட்டாம போயிர்றே பாலன்?”

“பயந்தான். ஒட்டாம போன அனுபவம் ஈர மூட்டை மாதிரி சுமையா இருக்குல்ல?”

“சட்டுன்னு அமைதியாயிர்ற...?”

“அமைதி சட்டுன்னு வந்தா ஏத்துக்க மாட்டியா?”

“சடன் பிரேக் அடிச்ச மாதிரி மூச்சு முட்டுதுல்ல?”

“எனக்கும் அந்நேரம் அப்படித்தான் இருக்கும்.”

சன்னமாக உரசல் உருவாகும். விவாதம் பலப்படும். சண்டை உண்டாகும். சந்திப்பில் இடைவெளி ஏற்படும். ஒரு தடவை பல வாரங்கள் வரை இடைவெளி நீண்டது.

ஒரு இரவின் பாதி வேளையில் மழையின் தாக்குதலுக்கு தப்பிக்க இயலாமல் சிரமப்பட்டு வீடு போகும் வழியில் ஞானத்தின் வீட்டினைக் கடக்க வேண்டி வந்தது. அறைகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. உள்ளேயிருந்து மழையில் நனைவது போல யேசுதாஸ் “ஒரு ராகம் பாடலோடு.....” என மயக்கிக் கொண்டிருந்தார். கதவினைத் தள்ளியபோது அது தானாக திறந்து கொண்டது. பாலன் உள்ளே நுழைய எதிரில் சுவற்றோடு சாய்ந்து இருந்த ஞானம் எழுந்து வந்து துண்டினை எடுத்து துவட்டக் கொடுத்தான்.

“இப்ப நா வருவேன்னு எதிர்பாத்தியா?”

“முன்னாடியே வருவேனு நெனச்சேன்”

“நீ ஏன் வரல?”

“ஜுரம்.”

அந்த இரவில் ஞானம் படுத்திருக்க, பாலன் ரசம் வைத்து சோறு வடித்தான்.

“இனிமே எனக்கு சென்னைதான் சொந்த ஊருன்னு

சொல்ல முடியாது” ஞானம் சொன்னான்.

“எத்தன அசிஸ்டண்ட் டைரக்டர்களுக்கு சொந்த ஊரு இருக்கு?”

“அது இல்லடா. இனிமே உன்னோட ஊருதான் எனக்கும் சொந்த ஊருன்னு சொல்ல வந்தேன்.”

பாலன் சொன்னான், ”இனி எனக்கு ஏது சொந்த ஊருலாம்? அதான் வாழி பாடியாச்சே!. எனக்குன்னு அங்க யாரு இருக்கா?”

“நாங்கூட சென்னைதான் என் சொந்த ஊருன்னு சொல்லிட்டுத் திரிஞ்சேன்.. சென்னை என்னைய ஒத்துக்கிச்சா என்ன? எனக்குந்தான் இங்க யாரு இருக்கா?. ஹவுஸ் ஓனர் உங்க ஊர்க்காரர். வித்தியாசமா அப்பாவி மனுஷன். பாரு எனக்கு ஒரு பொண்ணு பாத்திருக்காரு.”

உள்ளுக்குள் நெகிழும் பூரிப்பு உண்டாவதை பாலன் உணர்ந்தான். அதைக் கண்டுகொண்டு பலவீனத்திலும் ஞானம் விழுந்து விழுந்து சிரித்தான்.

“என்னா?”

“என்னதான் வீம்பு இருந்தாலும் பொறந்த மண்ணுல்ல?”

“சீக்கிரம் வாங்க. அவருக்கு போரடிக்கும்ல....” ரெஜியின் குரல் பாலனின் கவனத்தினை அசைக்க முயற்சிக்கையில் அவன் கண்ணாடி கோப்பையினையேப் பார்த்துக் கொண்டிருந்தான். கோப்பையினுள்ளே காணப்பட்ட பூக்களின் வடிவங்கள் குதிரைகளின் வடிவங்களை ஒத்திருப்பது போல பட்டன. அவை குதிரைகளாக உருமாறத் தயாராகவே இருந்தன. அதற்கு ஏற்றாற்போல் குளம்பொலிகளின் சத்தங்கள் கூட அவனுக்குக் கேட்டது. அவன் அவற்றை செவி மடுத்தான். ஆனால் அவை அவனோடு இணங்காமல் அவனை துரத்த துவங்கின. பாலன் குதிரைகளை விடவும் வேகமாக முன்னே ஓடத்துவங்கினான். உண்மையில் குதிரைகளை ஓடவிட்டு அதன் பின்னே பாப்பா டீச்சர் தான் அவனைத் துரத்திக் கொண்டிருந்தாள். பாலன் சத்தமிட்டுக் கொண்டே தப்பிப்பதற்காக ஓடினான். அப்போது எதிர்பாராத வகையில் அவனுக்கு நேரெதிரே அந்த சிறுமி வந்து நின்றாள். அவனைப் பிடிக்கவும் செய்தாள். பாப்பா டீச்சர் நாற்காலியின் உடைந்த கால் துண்டைக் கொண்டு அவனது வலது கை மணிக்கட்டினைப் பிடித்து அடிக்கத் துவங்கினாள். சங்கடங்கள் எதுவுமில்லாத வகையில் ரெஜி அதனைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். பாப்பா டீச்சர் தன் விருப்பம் ஓய்கிற வரையிலும் அவனது மணிக்கட்டினை அடித்துக் கொண்டேயிருந்தாள்.

பேசிக்கொண்டிருந்தது போலத்தான் இருந்தது ஞானத்தின் திருமணம் நடந்ததும் குழந்தை பிறந்ததும். பாலன் தொழில் நிமித்தமாய் கலந்து கொள்ள முடியாமல் போனதில் இருவருக்குமே வெளிக்காட்டிக்கொள்ளாத வருத்தம் இருந்தது.

“பேரு என்னடா வக்கப் போறே?”

“ஓம்படத்தோட ஒரு டைட்டில் தான். சுட்டுட்டேன்.”

“எது?”

“தளவாய்!”

“கள்ளப் பயலே”

“அதுலாம் வக்க முடியாது.”

வழிகாட்டுதலில் நடை தப்பிய ஒருவனான தனது கண் முன்னே அந்தரத்திலிருந்து திடமான நிலைக்குப் பெயர்ந்த ஞானத்தின் வாழ்க்கை சிறுவகையில் ஆறுதலாக இருந்தது.

“யாருலாம் வெளையாட வாரீங்க?”

“நா,நா,நா,நா” ஆளாளுக்கு இரைந்துக் கத்தினார்கள்.

“என்ன வெளையாட்டுரே?”

“ஐஸ்பால்ரே”.

அந்திக்கருக்கலின் துவக்கத்தில் பிடிக்கும் விளையாட்டு இருளஇருள சூடுபிடித்தது. தெருவோரத்து கருங்கல் பெருஞ்சுவரில் ஒருவன் கண்களைப் பொத்திக்கொண்டு மறைந்து நிற்பதும், மற்றவர்கள் ஓடி ஒளிவதும், ஒளிந்தவர்களைத் தேடுவதும், கண்டதும் உண்டாகும் கூச்சலும், குதூகலமும் தனது கண்ணாடி வீட்டின் மாடியில் நின்றபடி பார்த்துக் கொண்டிருக்கும் ரெஜிக்கு மிகவும் பிடித்துப்போனது.

அம்மாவும் அப்பாவும் வேலைவிட்டு வீடுவந்து சேர்வதற்குள் இருட்டி விடுகிறது. வழக்கமாக பள்ளி விட்டு வந்தால் பாட்டி எலிசபெத்தாள் தான் கவனித்துக் கொள்வாள். பாட்டியின் மரணத்திற்குப் பிறகு வீடுவந்தாலே வெறுமைதான் ரெஜிக்கு. அதன் கனத்தினை சிறுவர்களின் விளையாட்டு இலகுவாக்கியது. இதற்காகவே மாலைப் பொழுதுகளை அவள் மிகவும் விரும்பினாள்.

ஒருநாள் “ஐஸ்பால்” விளையாட்டின் போது ஓடிஒளிவதற்கு நேரம் பத்தாமல் அவசரத்தில் கண்ணாடிவீட்டின் அனுமதிக்கப்படாத இரும்புக் கதவினைத் தாண்டிப் போய்விட்டான் பாலன். அப்போது ஒரு சல்லி தேகத்துடன் கன்னத்தில் கைத்தாங்கலாக படிக்கட்டின் மீது கண்ணாடிவீட்டின் பெண் ரெஜி உட்கார்ந்திருப்பதை அவன் கவனித்தான். ஒற்றை விளக்கின் பால் வெளிச்சத்தினைத் தன் மீது படரவிட்டிருந்தாள் அவள். எழுந்து ஓடப்போனவன் ஒளிந்துகொள்ள ஏதுவாக முன் விளக்கினை அவள் அணைத்தாள். வீட்டினுள்ளே ஆடிக்கொண்டிருந்த வண்ண சரவிளக்குகளின் வெளிச்சங்கள் கண்ணாடி போல் நின்றிருந்த சுவர்களில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தன. அலங்கார சப்பரம் போல வீடு மின்னிக் கொண்டிருந்தது பாலனுக்கு பிரமிப்பாக இருந்தது.

பாலனுக்கு மட்டுமல்ல அப்பகுதியில் அனைவருக்குமே கண்ணாடி வீடு ஒரு அதிசயம் தான். ஏதாவது ஒரு வாய்ப்பில் உள்ளேச் சென்று வந்தவர்கள் வாய்ப் பிளக்கும் அளவிற்கு கண்ணாடிகளின் அதிசயத்தினை விவரித்தார்கள்.

மறுநாள் விளையாட்டின்போது ரெஜி அவனைத் தன்  வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள். கனவினை நேரில் கண்டது போல திகைப்பாய் இருந்தது பாலனுக்கு. அலங்காரக் கண்ணாடிகளின் வண்ணங்கள் சுவர்களில் அலைகளைப் போல நகர்ந்து செல்வதை அவன் கவனித்தான். அணிகலன்களைப் போல தொங்கவிடப்பட்டிருந்தன கண்ணாடி சாரைவிளக்குகள். கண்ணீர்த் துளிகளைப் போல நெளிந்து ஓடின கண்ணாடித் தொங்கல்கள். வரைந்து செல்லும் ஓவியம் போல அவனது நிழலினை இழுத்துச் சென்றது கண்ணாடி விளக்கு ஒளியின் ஸ்பரிசம். தரிசனம் கண்ட மனநிலையில் நின்றான் அவன்.

கடிகாரத்தில் கூட இத்தனைப் பெரிய கண்ணாடியை இதுவரையிலும் அவன் பார்த்திருக்கவில்லை. சன்னல்களில் சொருகப்பட்டிருந்த கண்ணாடிகளின் வழி வெளியே அவன் கண்ட காட்சி போல ஒன்று தெருவில் திரைக்கட்டி காண்பித்த ஒரு திரைப்படத்தில் ஏற்கனவே அவன் கண்டது தான், ஆனால் நேரில் கூடுதல் ரசனை அளித்தது.

“சோப்பும் கண்ணாடியா?”

“அது பியர்ஸ்”

“அப்படின்னா?”

அவன் மறுபக்கம் தெரிகிறதா என்று பார்த்தான். அருகில் வைத்துப் பார்த்தபோது அதனிடமிருந்து ரெஜியின் வாசனை வந்தது. சட்டை மீது ஒருமுறை தடவிக் கொண்டான்.

சிறிய தேன்குப்பிகளைக் கொண்டு அடுக்கப்பட்ட கண்ணாடி கோபுரத்தினைக் கண்டதும் தொட்டுப் பார்க்க கை பரபரத்தது.

“வுழாது. தொட்டுப் பாரு”

அவை ஒட்டியிருந்தன. கண்ணாடியினால் செய்யப்பட்ட பல் தேயிக்கும் ‘பிரஷ்’ தான் அவனுக்கு விசேஷமாகத் தெரிந்தது.

“நீ பிரஷ்ல பல் தேச்சது இல்லியா? இப்படிப் பாக்கறே?”

“உமிக்கரி தான்”

“உப்பா இருக்குமே?”

ஒரு கதாநாயகனாக கவுரவித்த அந்த வீட்டையும் ரெஜியையும் விட்டு இரவில் தனித்து செல்வது பெரும் கவலையை அளித்தது.

ரெஜியின் மணமும் கண்ணாடி வீட்டின் பிரதிபலிப்பும் அவனுள் கதைத் தன்மையை விதைத்தன.

“நேத்து ஏன் வரல?”

“மழைல்லா”

“மழைன்னா வெளையாடக்கூடாதா?”

“எனக்கு இழுப்பு வந்துரும்”

“இழுப்புன்னா?”

“மூச்சு இழுக்கும். மாத்திரயப் போட்டா சரியாவும்”

“வீட்டுல உக்காந்து என்ன செய்வே?”

“மழை எப்படா விடும்? இங்க எப்படா வரலாம்னு மழையயே பாத்திட்டுருப்பேன்”

அவள் ஓடிச்சென்று திரும்பி வந்து “இந்தா” என்று கொடுத்தாள்.

அவன் கையில் வாங்கிப் பார்த்தான்.

ஒருபுறம் கப்பலும் மறுபுறம் ரோஜாவும் வரையப்பட்ட சிறிய கண்ணாடிக் குடுவை.

அன்று இரவில் முற்றத்தில் படுத்துக் கொண்டு வெகுநேரமாக பலவிதமான கதைகளைக் கூறிக்கொண்டிருந்தான். வானத்தின் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கதை. நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காத புதுப்புது கதைகள் தன்னிடத்தில் உருவாவதை உணரத் துவங்கினான்.

மறுநாள் புட்டத்தில் அடி விழுந்து தான் எழுந்திருந்தான்.

“அந்த பிரஸ்ஸ எங்கலே?”

“எந்த பிரஸ்ஸ?”

“கண்ணாடி வீட்டுக்கு போயி எடுத்தியாமே?”

ஓவியம்
ஓவியம்ஜீவா

திக்கென்றிருந்தது. அவன் அழுது மன்றாடி தான் எடுக்கவில்லை என்றான். கால்பிடித்து சத்தியங்கள் செய்தான். அம்மா போய் ரெஜியின் தாயாரை அழைத்து வந்தாள்.

“கேட்டுப்பாருங்க. எம்மவன் உங்க வீட்டுக்கு வந்தத ஒத்துக்கிட்டான். அத எடுத்துப் பாத்ததையும் ஒத்துக்கிடுதான். ஆனா எடுக்கலையாம். நா ஒண்ணும் கள்ளப்புள்ளைய பெத்து வச்சிக்கிடல”

“அப்ப அது?”

அந்தப் பெண்மணி சுட்டிக் காட்டிய இடத்தில் மாத்திரைகள் அடங்கிய கண்ணாடிக் குடுவை இருந்தது.

“ரெஜிதாம்மா தந்தா”

விழுந்த அடியில் ரெஜி இல்லை என்றாள். பாலனுக்கு விழுந்த அடிகளுக்கு கணக்குகள் கிடையாது. மாத்திரைகள் தூர எறியப்பட்டன. அவன் கையாலேயே குடுவை ரெஜியிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டு மன்னிப்புக் கேட்கப்பட்டது. அம்மா கஷ்டங்களைச் சொல்லி நிறைய அழுதாள். அன்றைய இரவு அவமானத்தின் முதல் இரவாக பாலனுக்கு அமைந்தது.

பாலன் திருடன் என்று அறியப்பட்டது அன்று தான். கள்ளப்பெயர் தெரு முழுக்க பரவியது. விளையாட்டுகளின் போது “கள்ளன்” என்ற பெயராலேயே பாலன் அழைக்கப்பட்டு பின் அதுவே நிலைத்து பள்ளிக்கூடம் வரையிலும் சென்றது. வகுப்பில் மாணவர்களின் பைகளிலிருந்து ஏதாவது காணாமல் போய்விட்டது என்று கூறப்பட்டால் உடனே பாலனின் பையும், உடையும் சோதனையிடப்படுவது வழக்கத்திற்கு வந்தது.

புத்தகப்பை பலதடவை கிழிந்தது. நோட்டுப் புத்தகங்கள் வீசப்பட்டுக் கிடந்தன. பயிற்சி எடுத்துப் பழகிய முத்து போன்ற அவனது கையெழுத்துக்கள் வானம் பார்த்துக் கிடந்தன. அம்மாவிடம் சொல்லி அவள் அழுகையினையும் காண அவன் விரும்பவில்லை.

மாமாவிற்கு அம்மா கடிதம் எழுதியபோது பாலனும் தனது விண்ணப்பத்தினை வைத்தான். பலனாக அரேபியாவிலிருந்து மாமா வரும்போது ஒரு பையினை அவனுக்குப் பரிசளித்தார் அத்தைக்குத் தெரியாமல். அதன்பிறகு தனது பையினை சோதனையிட பாலன் கடுமையாக எதிர்த்தான். அவனது பையின் வருகை மாணவர்களை தீவிரமாக ஆலோசிக்க வைத்தது. விறகுக் கூலியின் மகனான அவனுக்கு திருடினாலொழிய அப்படியொரு பை கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். குறிப்பாக அரபு எழுத்துக்கள் கொண்ட தடிமனான ஸ்டிக்கர் தான் அவர்களை பெரிதும் உறுத்தியது. இதுபோன்ற பை யாருக்கேனும் காணாமல் போயிருக்கிறதா என்று விசாரித்தார்கள்.

ஒருநாள் மதிய உணவு முடிந்து வந்து பார்த்த பாலன் பையினைக் கட்டிக்கொண்டு அழுதான். ஸ்டிக்கர் பகுதி தாறுமாறாக பிளேடினால் கிழிக்கப்பட்டிருந்தது. பையின் சில பகுதிகளும் வெட்டப்பட்டிருந்தன. அவனது அழுகையைக் கண்டு ஓய்வறையில் இருந்த பாப்பா டீச்சர் அழைத்து விசாரித்தார். அவன் நடந்ததைச் சொல்லி அழுதான். அதேசமயம் மாணவர்கள் அவன் வீடு புகுந்து திருடுபவன் என்றும் இதுவரையில் வகுப்பில் காணாமல் போனதாக ஒரு பெரிய பட்டியலையும் ஒப்புவித்தார்கள். ஆசிரியர் மூலையில் கிடந்த நாற்காலியின் உடைந்த கட்டை ஒன்றினை எடுத்து வந்தார்.

“ரெண்டு நாளைக்கு முன்ன எம்பர்ஸ்லேருந்து காணாமப் போன ரூபாய எடுத்தது நீதானலே?” என்றுக் கேட்டார்.   

பாலனின் எவ்வகை பதிலையும் அவர் ஏற்கவில்லை. அவனது வலதுகை மணிக்கட்டினை பிடிக்கச் சொல்லி கட்டையின் ஒரு முனையால் வில்லடிப்பது போல வளைத்து வளைத்து அடித்தார். காக்கை துடிப்பது போல அவன் துடித்தான். அதன்பிறகு சோதனையிடப்பட்டான். முதல் அடியும் குலுங்க குலுங்க அடித்த ஆசிரியையின் மூர்க்கமும் அவனுக்குள் பதிவாயின. அதன்பிறகு அவன் எந்தக் குற்றத்தையும் வேண்டுமென்றே ஒத்துக் கொள்ளத் துவங்கினான்.

அதே சமயம் எப்போதும் தன்னை யாரோ பின்தொடர்வதாகவும் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால் தன்னை சோதனையிடத் தயாராக இருப்பதாகவும் உள்ளூர எண்ணம் தோன்றி வளர்ந்தது. யாரேனும் தொடர்ந்து சில நொடிகள் தன்னை கவனித்தால் அச்சப்பட்டான். மறைவாகச் சென்று தன்னைத் தானே சோதனையிட்டுக் கொண்டான். இது பெரும் துரத்தலாகவே அமைந்துவிட்டது.

“எப்பவும் ஒங்களப்பத்தியே பேசிட்டிருப்பாரு...ஒங்களுக்கும் நாகர்கோவிலாமே”

ரெஜி பாலனிடம் கேட்டாள்.

“ஆமா”

“நாகர்கோயிலா...? இல்ல அது பக்கத்துலேயா?”

“நாகர்கோயிலே தான்”

“எங்கே?”

“மீனாட்சிபுரம் பக்கத்துல”

“பக்கம்னா?”

“ஆர்சி பரதர் தெரு”

“பரதர் தெருவா?” அவள் ஆச்சரியப்பட்டு ஞானத்தைப் பார்த்தாள்.

“சின்ன வயசுல நாங்க அந்தத் தெருவுல தான் இருந்தோம். கண்ணாடி வீடுன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?”

“ம்”

அதான் எங்க வீடு. உங்களுக்கு எந்த வீடு?”

“கண்ணாடி வீட்டுலேருந்து நாலு வீடு தள்ளி”

“நாலு வீடு பக்கத்துலேயா? பாருங்க பக்கத்துலேயே இருந்திருக்கோம்” என்றவள் ஞானத்திடம்

“எங்கத் தெருவுலேருந்து மாதா கோயில் சப்பரம் போகும் பாருங்க..நாங்கெல்லாம் கூடவே போவோம் ஊர் சுத்தறதுக்கு”

“பாலா சப்பரம் கூடவே வருவியா?”

“உங்க வீட்டுல விடுவாங்களா?”

“சப்பரம் வரும்போது ஓடி வந்துருவேன்”

மரியே மாதாவே என்று சிறுவர் கூட்டத்துடன் அவர்கள் கரைந்தார்கள்.

வழியில் ஏதேனும் கிடைத்தால் பாலன் ரெஜிக்கும்

கொடுத்தான். ரெஜி அவனுக்குக் கொடுத்தாள்.

“நாங்கூட போயிருக்கேங்க...எவ்ளோ சந்தோசமாயிருக்கும் தெரியுமா? நீங்க போயிருக்கீங்களா?” பாலனிடம் கேட்டாள்.

“ஆமா”

“பாத்தீங்களா. இவரும் போயிருக்காராம்”

மணிக்கட்டு மரத்துப் போவது அதிகமானது.

“நீ எங்க வீட்டப் பாக்க வந்தியா? என்னப் பாக்க வந்தியா?”

அவன் விழித்தான்.

“வீட்ட பாக்கதுன்னா இனிமே வராதே..”

“ஏன்?”

“என்னைய ஆஸ்டல்ல சேக்கப் போறாங்க..” நாப் போனப் பொறவு வீட்டப் பாக்க வந்து நிப்பியா?”

“எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்களா?”

ரெஜி ஆர்வ மிகுதியால் கேட்டாள்.

“எவ்ளோ அழகா மின்னுது உங்க வீடு? இங்க இருந்தா சந்தோசமா இருக்கும்”

“எனக்கு பயம்மா இருக்கு”

“ஏன்?”

“எங்கப்பா அம்மா வரது வரைக்கும் ஒத்தையில இருக்கணும்லா. பாட்டி செத்துப் போன ஞாவகமா வரும்”

“உங்க அம்மா அப்பா வார வரைக்கும் நா இருக்கேன்”

“மழை வந்தா வரமாட்டியே?”

“மழ! இனி நீ வராத!”

மிகவும் தயக்கத்தோடு பாலன் அவளிடம் கேட்டான்.

“என்னைய ஞாபகம் இருக்கா?”

அவள் அவனை உற்று நோக்கினாள்.

மணிக்கட்டில் லேசான ஊறல் போல வலி தோன்றியது.

ரெஜியின் முகம் சன்னமான இறுக்கம் கண்டது. கண்களைக் கூர்ந்து கவனித்தாள்.

“ஒனக்கு முட்டைக் கண்ணு பாலா. சோடாக் குப்பியில இருக்க கழச்சி மாதிரி”

“ஒனக்கு ஊதாக்கண்ணு பேப்பர் பூ மாதிரி”

“பாத்த மாதிரி இல்லியே”

ரெஜி கூறவும் மணிக்கட்டு அதிர்ந்து கைநடுங்க கோப்பை கீழே விழுந்து நொறுங்கியது.

அதன் கீழ் வட்டப்பகுதி மட்டும் முழுமையாக பிசிறில்லாமல் கிடந்தது. அதில் ஒரு கப்பலின் படம் தெரிய பாலன் ரோஜாவினை கற்பனை செய்தான். மணிக்கட்டு இடைவிடாமல் வலித்தது. கைகள் இரண்டும் பேன்ட் பாக்கெட்டில் தஞ்சமடைந்திருந்தன. எரிப்பு போன்று வலி ஊடுருவியது. எடுத்துப் பார்த்தான். விரல் நடுவில் இருந்து ரத்தம் கசிந்து வந்தது.

சட்டென ஒரு பயம் கவ்வியது. தேநீர்க் கோப்பையின் உடைந்த அடிப்பகுதி தனது பேன்ட் பாக்கெட்டினுள் கிடக்கிறதோ என்று. பின்புறம் யாரோஅவனை பின்தொடர்வது போல வந்தார்கள். அவன் நின்று விட்டான். மழை இறைப்பது போல பெய்தது. தான் திருடினோம் என்று ஒப்புக்கொள்ளலாமா என்று நினைத்தான். கண்களை மூடிக் கொண்டான். கப்பலும் ரோஜாவும் மழைக்கு ஒதுங்கி நிற்பதாகத் தோன்றியது. பின்புறம் வந்த ஆள் அவனைக் கடந்து சென்றான். அழுகை வெடித்தது. மழையில் சிதறியது.

சாலையின் நடுவே நின்று மழையில் கதறும் ஒருவனை வேடிக்கை பார்த்தபடியே கடந்து சென்றவன் நடந்தான். பாலன் பாக்கெட்டினுள் தேடினான். எதுவும் அகப்படவில்லை.

தனித்தவனாய் மணிக்கட்டினை உதறினான்.

மழை கண்ணீரை வாங்கிக் கொண்டது. எத்தனையோ வலித்த கண்ணீரை வாங்கி தன்னுள் கரைத்துக் கொண்டதைப் போல. 

மார்ச், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com