ஓவியம்
ஓவியம் வேல்முருகன்

எழுத்தும் இயக்கமும்

Published on

முருகையனை தியேட்டருக்குள் பெரிய எட்டு எடுத்து வைத்து சுருக்கென வருமாறு அவசரப் படுத்தி  அழைத்துக்கொண்டு போனான் கவிமணி. 

‘சீக்கிரம் வாப்பா, படம் தொடங்கிடும். லேட்டா போனா நல்லா இருக்காது‘ என்று தன் அப்பா முருகையனிடம் சொன்னான் கவிமணி.

‘சரிடா... நீ முன்னாடி நட, உன் பின்னாடியே நான் வந்துட்டுருக்கேன்‘ என்று பற்களும் சிவந்த ஈறுகளும் வெளித்தெரியச் சொன்னார். நவீனமும் பிரம்மாண்டமும் கலந்து நின்று காட்சியளித்த அந்தத்  திரையரங்கத்திற்குள் இருவரும் நுழைந்தனர்.

முருகையன் ஊரில் இருந்த தியேட்டர்களில் தன் வாழ்க்கையின் பாதி நேரத்தைக் கழித்திருப்பார். டிக்கெட் வாங்க கவுண்டருக்குள் வளைந்து நெளிந்து செல்லும் போதே சினிமாவின் இருள் தொடங்கிவிடும். நாணயங்களைக் கொண்டு கிறுக்கியிருந்த பெயர்களும், இதயமும், அதனுள் சேர்க்கப்பட்ட அம்பும் நினைவுச் சின்னங்களையும் அந்த அரையிருட்டில் கடந்து செல்ல வேண்டும். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வெளிவரும் சமயத்தில் மறுபடியும் பரந்திருக்கும் கண்ணைக் கூசும் வெளிச்சம் தியேட்டருக்குள் நுழைந்தவுடன் துண்டிக்கப்பட்டு இருள் கோலோச்சும் வகையில் விளக்கின் ஒளி எரிந்து கொண்டிருக்கும். சினிமா மனநிலையை உருவாக்கும் இருட்டும், சிறிது வெளிச்சமும் கலந்து ஒரு ரம்மியமான சூழல் அது. அரங்கத்தின் உள்ளே முழுதும் கரைந்து போகும் நம்மை சிறுகச் சிறுக கரைத்துக் கொள்ளத் தயார்ப்படுத்துவதைப் போலக் கொஞ்சம் வெளிச்சம். கண்ணாடிச் சட்டகத்தின் உள்ளே குத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் பளபளப்பான சிறு சினிமா போஸ்டர்கள் மினுமினுப்போடு தெரிவதற்காக பொருத்தப்பட்ட சிறு விளக்குகளிருந்து  வெளிச்சம்.

அந்த தியேட்டரின் பெருமையைச் சொல்லும் வகையில் வெள்ளிவிழா, நூறு நாள், இருநூறு நாள் கண்ட திரைப்படங்களின் நினைவுச்  சின்னங்கள், அவை வழங்கப்பட்ட விழா மேடையில் அந்த தியேட்டரின் உரிமையாளர் பிரபல கதாநாயகர், இயக்குநர்களின் கைகளிலிருந்து பெற்றுக்கொண்ட அந்த மகிழ்வான கணத்தை சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள், கதாநாயகர்கள், கதாநாயகிகள், இயக்குநர்கள் அந்த தியேட்டருக்கு வந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்த பொழுதுகளின் ஞாபகக்குறிப்புகளாய் சில புகைப்படங்கள் பளிச் சென்று தெரியும் வண்ணம் உள்ளே மேலிருந்து கீழே விழும் விளக்குகளின் வெளிச்சம். கோன் ஐஸ்கிரீம், பாப்கார்ன், குளிர்பானங்கள், டீ, காபி, மிட்டாய் என தின்பண்டங்கள் விற்கும் பகுதிகள் ஒரு நீளமான மேஜையை வைத்துக் கடையாக உருவாக்கியிருந்ததை அங்கிருந்த குண்டு பல்புகளின் மஞ்சள் வெளிச்சம் நிறைந்து கிடந்த இருளில் தனித்துக் காட்டும். தியேட்டரின் வழமையான சித்திரங்கள் எதுவும் இங்கு இல்லையே என்று ஏமாற்றம் அடைந்த மனதோடு ஓடியும், நடந்தும் அவனை பின்தொடர்ந்து கொண்டிருந்தார் முருகையன்.

மேலே மாடியில் இருந்த தியேட்டரை அடைந்தனர். உள்ளே செல்வதற்கு முன் உடலைத் தடவி சோதனை செய்ததைக் கண்டு வியப்பும், கோபமும் கொண்டார். இதற்குள் நுழைந்த பிறகுதான் ஒளிகுறைந்த சூழலில் இருந்த தியேட்டருக்குள் நுழைந்த உணர்வு அரும்பியது. ஆனால் அவர் எதிர்பார்த்த எதுவும் அந்தத் திரையரங்கில் இல்லை.

அவர் இளவட்டமாக இருந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். ஊரில்  அவரைப் பார்க்கும் எவரும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் என்பதை எளிதில்  கண்டுகொள்வார்கள். மற்ற ரசிகர்களை விட இவருக்கு மட்டும்தான் சுருண்டிருந்த சிகையமைப்பு இயற்கையிலேயே வாய்த்திருந்தது. முடியைச் சுருள வைத்து எம்.ஜி.ஆர் ஸ்டைலில் நெற்றியின் மீது சிறிது இழுத்து விட்டுக் கொள்வார். கருகருவென அடர்த்தியாக வளரக் கூடிய மீசையை மெல்லிய கோட்டைப் போல சிறிதாக்கி செதுக்கி ஒதுக்கி எம்.ஜி.ஆரைப் போல வைத்துக் கொள்வார். எம்.ஜி.ஆரைப் போலச் சிரிக்கவும், அழவும் அவர் தனியாகப் பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், அவரைப் போலவே இவரும் சிரித்தார், அழுதார்.

எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திலும் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் அதன் கதை, சிறப்பம்சம், கதாநாயகி, இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எத்தனை பாடல்கள்,  பாடிய பாடகர், பாடகிகள், வெளிவந்த வருடம், அவரின் ஊரில் எந்த தியேட்டரில் வெளிவந்தது, அப்போது ரசிகர் மன்றங்களின் சார்பில்  என்னென்ன செய்யப்பட்டது என ஒன்று விடாமல் சரியாகச் சொல்வார். ஒருவர் ஒன்றில் ஈடுபாடு கொண்டு விட்டால் மூளை அதற்கென்று சிறப்புப் பகுதிகளை ஒதுக்கித் தன் ஞாபகக் கிடங்கில் காண்பவற்றையெல்லாம் தேக்கி வைத்துக் கொள்கிறது.

தன் தலைவன் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிட்ட சமயம் கொந்தளித்துக் கொண்டிருந்த தமிழக அரசியல் காலத்தின் சூட்டை அப்படியே அச்சுப் பிசகாமல் அவனுக்கு கடத்தினார். எம்.ஜி.ஆர் திமுகவைவிட்டு வெளியேறிய நேரம். கட்சியைவிட்டு வெளியே வந்த பிறகு திரையிடப்படும் முதல் திரைப்படம். ஏற்கனவே தனிக்கட்சி தொடங்கி தன் அரசியல் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த  நெருக்கடியான காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையில் வெளியிட்ட உலகம் சுற்றும் வாலிபனை எப்படி வெற்றி பெற வைப்பதென ரசிகர்கள் கூடி விவாதம் செய்ததை, அதற்கான திட்டம் தீட்டியதை எம்.ஜி.ஆரை விட அதிக சவால்களை சந்தித்ததை முருகையன் ஒரு சாகசக்கதை போல கவிமணிக்கு சொன்னார்.

எதையும் அவர் சாதாரணமாக இன்னொருவருக்கு சொல்லும் வழக்கமில்லை. எதை சொன்னாலும் ஒரு கதையாகத்தான் சொல்லுவார். தானொரு கதை சொல்லி என்ற நினைப்பு அவரின் ஆழ்மனதில் ஊறிப் போயிருந்தது. எம்.ஜி.ஆரை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க வேண்டுமென தீராத கனவொன்று அவர் மனதில் நங்கூரமாய் குத்திட்டு நிலை கொண்டிருந்தது. அதற்காக ஏராளமான கதைகளை உருவாக்கி திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார். பாடல்களையும் அவரே எழுதியிருந்தார்.

‘தந்தன தந்தனா தந்தன தந்தனா தந்தன தான தனதானா தந்தனா‘ என்று தத்தகாரம் போட்டு எழுதி வைத்திருந்ததை அருகில் அமர்ந்திருந்த நண்பனிடம் பாடிக் காட்டினார். 

‘குறிஞ்சி மலர்ந்த குலத்தின் கொடியே; நெருங்கி வந்து என்மீது படர்வாயோ?‘ என்று எழுதிய வரிகளை பாடியும் காட்டினார். நண்பன் வரிகளில் வசீகரிக்கப்பட்டு அவரின் ரசிகனாக மாறிப் போனான். அவர்கள் அமர்ந்திருந்த வேப்பமரத்தின் நுனிக்கிளையை மேலும் கீழும்  ஆட்டி சிலுப்பிக்கொண்டிருந்த காகம் அங்கிருந்து பறந்து ஓடியது.

‘எல்லாப் பாட்டும் நானே எழுத மாட்டேன். வாலிக்கும் சில பாட்டு எழுத வாய்ப்பு கொடுக்கலாம். தலைவருக்குன்னு சில பாட்டுகளை எழுதி தனியா வச்சிருப்பாராம். சிவாஜி கேட்டாலும் கொடுக்க மாட்டாராம்‘ என்று தன்  நண்பனுக்கு திரையுலகத்தின் ரகசியங்களைச் சொன்னார்.

‘சீர்காழி கோவிந்தராஜனையும், கே.ஜே.யேசுதாசையும் பாட வைக்கணும். ரெண்டு பேருக்கும் ரெண்டு பாட்டு. மெலோடிக்கு யேசுதாஸ். சீர்காழிக்கு ஒரு மெலோடி, ஒரு சோகப்பாட்டு‘ என்று தான் சொன்னதைத் தன் கதைப்புத்தகத்தில் பாடல்களுக்கு பக்கத்திலேயே குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்.

‘தலைவரோட காதல் பாட்டை டி.எம்.எஸ், பாடுனாதான் சிறப்பா இருக்கும்‘ என்றான் நண்பன். டி.எம்.எஸ்ஸை ஏனோ முருகையனுக்குப் பிடிப்பதில்லை.

‘ப்ச்‘ என்ற உதட்டைப் பிதுக்கி நிராகரித்தார்.

‘ஜிக்கி, எல்.ஆர்.ஈஸ்வரிய பாட வைக்கணும். வித்தியாசமான குரல்கள். இதுவரைக்கும் கேட்காத ஒரு கிறக்கம் அவங்க குரல்ல இருக்கும். 'காதோடுதான் நான் பாடுவேன்' பாட்டுல  கவனிச்சிருக்கியா?‘ என்று அந்த பாட்டைப் பாடி நண்பனைக் கருத்து கேட்டார்.

‘இப்போல்லாம் எல்லா படத்துலயும் டி.எம்.எஸ், சுசீலா ஜோடியா பாடுற பாட்டுதான் பிரபலமாவுது‘ என்றான் நண்பன். இதற்கும் ஒரு முகச் சுளிப்பை பதிலாக தந்தார் முருகையன்.  சுசீலாவை விட  ஜிக்கி, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களின் மீது முருகையனுக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது.

‘ஏ.எம்.ராஜாதான் படத்துக்கு மியூசிக். கல்யாணப்பரிசு, தேன் நிலவு படங்களுக்கு பிறகு நம்ம படம் ரொம்ப வித்தியாசமா அமையும். அவர் ரொம்ப நல்ல பண்ணுவார்‘ என்றார். ஏ.எம்.ராஜாதான் இசை அமைக்க வேண்டுமென்பது அவரின் ஆசையாக இருந்தது. எம்.ஜி.ஆரின் நடிப்பு அசைவுகளுக்கும், இவரின் கதைகளுக்கும் நிச்சயம் வழக்கத்திலிருந்து விலகிய புதுமையான ஒரு இசையை அவரால் வழங்க முடியும் என்ற நம்பிக்கை முருகையனுக்கு  இருந்தது. கதாபாத்திரங்களையும் உறுதி செய்து விட்டார். அசோகன் எல்லா கதைகளிலும் ஏதோ ஒரு பாத்திரத்தில் இருந்தார். யார் எந்த பாத்திரத்திற்கு பொருந்துவார்கள் என்ற தனக்கென ஒரு கருத்தைக் கொண்டிருந்தார்.

‘பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை

என் தாய்த்திரு தமிழ்நாடு -அதில்

புல்லுருவிகள் புகுந்து நாசம் செய்ய விடமாட்டேன்

காய்த்து தொங்கும் காய்கனிகள்

என் தவத்திரு வளநாடு - அதில்

கயவர் துணிந்து களவு கொள்ள விடமாட்டேன்

வீட்டில் முடங்கி கிடக்கும் கோழைகளல்ல- நாங்கள்

களத்தை கண்டால் குதித்தோடும் காளைகள்

வீணாய் சோம்பித் திரியும் நரிகளல்ல - நாங்கள்

வீறுகொண்டு சிலிர்த்தோடும் வேங்கைகள்’

 

என் வில்லும் அம்பும்

போருக்கு ஏங்கி கிடக்கின்றன

என் வேலும், வாளும்

சண்டைக்கு தவம் செய்கின்றன.

 

என் குறுவாள் உன் குடல் கிழிக்கும்

என் குத்தீட்டி உன் குருதி குடிக்கும்

என் கைகள் உன் எலும்பை நொறுக்கும்

என் கால்கள் உன் இடுப்பை ஒடிக்கும்

 

மாசு படிந்த மனம் கொண்ட உனக்கு

மாணிக்கம் என்று பெயரா? மாபாதகனே!

காசுமாலை கிடந்து ஆடும் உன் கழுத்தை

இப்போதே கவர்ந்து கொண்டு போய்

என் தாய் மடியில் காணிக்கையாக்குவேன்!

 

கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன்

ஓடி ஒளிந்து பிழைத்து கொள்‘

என்று மூச்சு விடாமல் வசனம் பேசி தன் வாதங்கள் சரியென நிரூபிக்க ஒடிந்து கிடந்த மரக்கிளையை வாளைப் போல கையில் ஏந்தி அங்கிமிங்கும் சுழற்றி எம்.ஜி.ஆரைப் போல நடித்துக் காட்டுவார். வசனம் பேசிய வேகத்தில் ஒரு கையில் வாளையேந்தி கொண்டு இன்னொரு கையில் ஆலமரத்தின் நீண்டு தொங்கும் விழுதைப் பிடித்து சர்ரென கொஞ்சம் தூரம் சென்று குதிப்பார். வசனங்களையும் பாடலைப் போல எழுதிக் கொள்வது அவர் பாணி என்று நினைத்துக் கொண்டார். நண்பர்கள் பலரிடம் விவாதிக்கும் சமயங்களில் வசனம்  பேசும் சில இடங்களில் சிவாஜியின் சாயலும் வந்ததை ஒப்புக் கொண்டார். தன் கட்டைக் குரலில் பாடியும் காட்டுவார்.

ஓவியம்
ஓவியம்வேல்முருகன்

அவர் நினைவு முழுக்க கதைகளும், காட்சிகளும்,  வசனங்களும் நிறைந்திருந்தது. எம்.ஜி.ஆர் மற்ற நடிகர்களோடு நடிக்கும் காட்சிகள் அவர் கண்கள் முன் நிழலாடிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் ரசிகனாக இருந்து சினிமாவின் ரசிகனாக மாறினார். திரைப்படங்களை பார்ப்பதற்காகவே தியேட்டரில் வேலைக்கு சேர்ந்து ஊழியம் செய்யத் தொடங்கினார். படங்களைப் பார்த்துப் பார்த்து கதைகளை எழுதி குவிக்கத் தொடங்கினார். 'சினிமா பைத்தியம்' என்று எவர் கேலி செய்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். சென்னைக்கு வந்து சினிமாவில் சேர்வதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. சென்னைக்கு செல்லும் வாய்ப்பே கிட்டவில்லை. குடும்பத்தின் பட்டினி எங்கும் நகர விடாமல் ஊரிலேயே இழுத்து வைத்து கொண்டது. பசியில் எரிந்த காலி வயிற்றுச் சூட்டில் கனவுகளைப் பொசுக்கிக் கொண்டு வாழ்க்கையை கழிக்கவேண்டி வந்தது. அக்கா மகளோடு  திருமணம் ஆனது. குழந்தைகள் பிறந்தது. குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்குப் போனார்கள். அவர் மட்டும் கதைகள் எழுதுவதை நிறுத்தவில்லை. குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கும் போது தனக்கும் நான்கு நோட்டு புத்தகங்களைச் சேர்த்து வாங்கிக் கொண்டார். பிள்ளைகளோடு சேர்ந்து உட்கார்ந்து கொண்டு இவரும் கதைகளை வீட்டுப்பாடங்களைப் போல எழுதித் தள்ளினார். சிலசமயங்களில் பிள்ளைகள் தவறுதலாக இவரின் கதை எழுதிய புத்தகங்களைப் பள்ளிக்கு எடுத்துச் சென்று படித்துப் பார்த்து பேந்தப் பேந்த விழித்தனர்.

தியேட்டருக்குள் வந்து உட்கார்ந்ததும் நினைவு திரும்பியது. இருள் நிரம்பிய அரங்கத்தை பார்த்த பிறகுதான் சினிமா பார்க்க வந்திருக்கிறோம் என்ற உணர்வு வந்தது. இப்போதுதான் உயிர் மீண்டு வந்தது போலவும் இருந்தது.  ஊரிலிருக்கும் தியேட்டருக்கு உரித்தான அந்த மூட்டைப்பூச்சி நாற்றம் இல்லை. நல்ல மணம் சுவாசக் குழலுக்குள் சென்று வந்தது. அவர் பார்த்துப் பழகிய கட்டை சேர் இல்லை இது. இப்போது உட்கார்ந்திருக்கும் இருக்கை மிருதுவாகவும், சுகமாகவும் இருந்தது. ஏசி குளிர் ஒரு சிலருக்கு கதகதப்பையும், இன்னும் சிலருக்கு நடுக்கத்தையும் கொடுத்தது. உள்ளுக்குள் நுழைகிற எல்லோரையும் வரவேற்பதும், வணக்கம் சொல்வதும், வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வதுமாக கவிமணி நின்று கொண்டே யிருக்கிறான். வருகிறவர்களிடம் கையிலிருக்கும் டிக்கெட்டை வாங்கி டார்ச் லைட் அடித்து இருக்கை எண்ணைப் பார்த்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள், இரண்டு தியேட்டர் ஊழியர்கள்.

எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தன. சுற்றியிருக்கும் பலரில் ஏற்கனவே பரிச்சயமான முகங்களாக இருந்தனர்.  ஒவ்வொருவரை பார்க்கும் போதும் ஏதோ ஒரு  திரைப்படத்தில் அவர்கள் நடித்திருந்தது நினைவுக்கு வந்து மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி மின்னலென வெட்டி மறைந்தது. சிலரைப் பார்க்கும் போது அவராக இருக்குமோ? இவராக இருக்குமோ? என்று எழுந்த சந்தேகங்கள் தீரவில்லை. இன்றைய காலத்து நடிகர், நடிகைகளும், இயக்குனர்களும் அவருக்கு தெரிந்தவர்களாகவே இருந்தனர். அவர் காலத்து இயக்குனர் ஒருவர் உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் அவருக்கு தன் இளவட்டக் கனவுகள் மீண்டும் மேலெழுந்து வந்தது.

சட்டென்று மனதில் ஒரு மெல்லிய சோகம். ஆற்றாமையின் சோகம். ஏமாற்றத்தின் மிச்சம். ஒரு சிறு முயற்சி எடுத்திருந்தால் இப்போது இங்கிருக்கும் பல சினிமாக்காரர்களில் தானும் ஒருவனாக மாறியிருக்ககூடும். இந்த சினிமா சமுத்திரத்தில் தானும் ஒரு துளியாகக் கலந்து எல்லோரையும் மகிழ்வித்திருக்க கூடும். முனைப்பு மட்டும் போதுமா என்ன. முனைப்பைச் சாத்தியமாக்கும் முயற்சியும், கடும் உழைப்பையும் தர வேண்டுமல்லவா. ஆசைகளும், கனவுகளும் நம் முயற்சியைப் பொறுத்து எளிதில் சாத்தியமாகி விடும் ஒன்றுதான். அன்றிருந்த குடும்ப வறுமை இன்று மட்டும் ஒழிந்துவிட்டதா  என்ன? குடும்பத்தை பீடித்த தரித்திரம் சதா அதை எண்ணி கவலையுறுவதாலேயே விலகி விடுவதில்லை. தரித்திரம் வெளியேற வேண்டுமென்றால் தான் ஊரை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். குடும்பத்தையும், ஊரையும் விட்டு வெளியே வராமல் வறுமையை விட்டு வெளியில் வருவது சாத்தியமா?  இப்போதும் முருகையன் சினிமா பார்த்துக் கொண்டுதானிருக்கிறார். சினிமா பார்க்காமல் அவர் உயிர் வாழ்வது கடினம்தான்.

எரிந்து கொண்டிருந்த ஒன்றிரண்டு விளக்குகளும் அணைந்து அரங்கம் முழுக்க இருள் நிறைந்ததும் முருகையனுக்குள் உற்சாகம் பீறிட்டது. திரையில் சினிமா தொடங்கி வெளிச்சத்தை சிதற அடித்தது. அவரின் கண்கள் ஒளிர்ந்து மின்னியது. சிதறிய வெளிச்சத்தில் படத்தின் பெயர், கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடகர், பாடகி பெயர்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வருவதும் மறைவதுமாக இருந்தது. தியேட்டருக்குள் ஒவ்வொரு பெயருக்கும் இடைவிடாமல் கைகள் தட்டும் ஒலி. அவருக்குள்ளிருந்த சினிமாக்காரன் விழித்துக் கொண்டான். ஒவ்வொரு பெயரையும் மிகவும் உன்னிப்பாய் கவனித்து வந்தார். உதவியாளர்கள் பெயரைக் கூட மறைந்து விடுவதற்குள் விறுவிறுவென வாசித்தார். தயாரிப்பாளர் பெயர் தோன்றி மறைந்ததும் ‘எழுத்தும், இயக்கமும்' & கவிமணி முருகையன் என்ற பெயர் திரையின் வெளிச்சத்தில் மின்னியது. மனம் சலனமற்று இருந்தது. சிந்தனையை எங்கும் சிதற விடாமல் படத்திற்குள் நிலைநிறுத்த முயன்று கொண்டிருந்தார்.

அவரது மகன் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் வெளியாகிறது. அதற்கான பிரிவியூ காட்சிக்குத்தான் இப்படி அவசரப்படுத்தியிருக்கிறான். வீட்டிலிருந்து கிளம்பிய பொழுது பூத்த புன்முறுவல் சிரித்த முகமாகி தியேட்டருக்குள் நுழையும் வரை நீண்டு கொண்டே போனதற்கான காரணம் இப்போது புரிந்தது.  நேரம் கரையக் கரைய அவனுடைய பதட்டம் கூடிக்கொண்டிருந்தது. தன் அப்பாவை அழைத்துக்கொண்டு இதற்குத்தான் இப்படி ஓட்டமும், நடையுமாக வந்திருக்கிறான். அப்பாவுக்கு தன் முதல் படத்தைக் காண்பிக்க வேண்டுமென்ற தன் பன்னிரண்டு வருடக் கனவை நனவாக்கும் நேரம் இதோ நிறைவேறிவிட்டது. 

படம் பார்த்து முடித்த எல்லோரும் கவிமணியை வந்து கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துவிட்டு ஒவ்வொருவராய் வெளியேறிக் கொண்டிருந்தனர். எல்லோரும் வெளியேறியவுடன் அப்பாவின் அருகில் வந்தான் கவிமணி. ‘என்னப்பா..' என்று கேட்பது போலப் பார்த்தான். ‘ரொம்பப் குளிருதுப்பா.. சீக்கிரம் வீட்டுக்குப் போகலாமா?‘ என்று கேட்டார் அப்பா.

பிப்ரவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com