தி ட்டக்குடியான் பூச்சி மருந்து குடிச்சுட்டு கெடக்குறான்யா..
சோமசுந்தரத்து ஆஸ்பத்திரில, ரெவைக்குள்ள முடிஞ்சிரும்ன்னு சொல்றாய்ங்க.. வெரசா பொறப்பட்டு வாய்யா'
சித்தப்பாவின் அந்த குரலை, அதே பதற்றத்துடன், காதுகளுக்குள் எப்போதுவேண்டுமானாலும் என்னால் மீட்டுக்கொள்ளமுடியும். இதுவரையில் தொலைபேசி வாயிலாக கேட்ட சேதிகளில், எனக்கு அதிகம் உதறலெடுத்தது இந்த விஷயத்திற்காகத்தான் என்று நினைக்கிறேன்.
எப்படியும் நான் ஊருக்கு போய்ச்சேர்வதற்குள் எல்லாம் முடிந்துவிடும். எதையுமே
யோசிக்கமுடியவில்லை. சரியாக அந்த ஊருக்கே 'திட்டக்குடியான்' என்பதுதான் அவன் விலாசம். வகுப்பில் வாத்தியார்களும் அப்படித்தான் அழைப்பார்கள் என்று அவனே சொல்லியிருக்கிறான். இத்தனைக்கும், திட்டக்குடி, அவன் அம்மா பிறந்த ஊர் மட்டுமே; அவனும் சூரப்பள்ளத்துக்காரன்தான். ஆறாம் ஏழாம் வயது வரை, அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டே திரிந்தவன் என்பதால், அம்மாவோடு சேர்த்தே ஊர்க்காரர்களால் அவன் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதோடு, ஆரம்பத்திலெல்லாம் அவன் பேச்சிலும், நடையிலும் ஒருவித பெண்மையின் குழைவு தெரியவே செய்யும்; அப்படியே அவன் அம்மாவின் சிறிய பிரதி போல. அவனது நிஜப்பெயர் சுப்பிரமணி என்பதே நிறைய பேருக்கு தெரியாது. எனக்கும் முழுப்பெயர் திருத்தமாகத் தெரியவில்லை& மணியனா மணியமா என்பதில் குழப்பம்.
என் பட்டணத்து பாசாங்குகள் அனைத்தையும் சிறுமைப்படுத்தி நிலைகுலைய வைப்பதில், திட்டக்குடியான் ஓர் அசகாய சூரன். புதுகுளத்தின் படித்துறையில், நீஞ்ச தெரியாத என்னை உட்காரவைத்துவிட்டு, இந்த கரையில் முங்கி மறு கரையில் எழும்புவான். பத்து வினாடிக்குள் பனைமர உச்சிக்கு போய் நுங்கை சீவி தள்ளுவான். பத்து வயதில் அத்தனை பாந்தமாக கைலி கட்டுவான். பொறாமையாக இருக்கும். இதையெல்லாம் செய்துகாட்டி பழிப்பு எதுவும் காட்டமாட்டான். என் இயலாமையை குத்திக்காட்டும் அளவிற்கு தான் அற்பன் அல்ல என்பதை அவனது மிடுக்கு காட்டிக்கொடுக்கும். முடியாத ஒருவனின் முன்தான் தன்னுடைய வித்தைகளை கட்டவிழ்க்கிறோம் என்ற சுதாரிப்பு, அந்த மிடுக்கில் இருப்பதாக எனக்கு தோன்றும்.
அதோடு அவன் எப்போதும் என்னை ஓர் ஆத்மார்த்தமான நண்பனாகத்தான் நடத்தியிருக்கிறான். தன்னை உச்சி கொப்பில் வைத்துக்கொண்டு, என்னை ஒருபோதும் ஏளனப்படுத்தியதில்லை. ஊருக்கு போகும் அந்த இரண்டு வாரங்களும் அப்படியே அவன் போக்கில் என்னை ஒப்புக்கொடுத்துவிடுவேன். அது அப்படியே அடுத்த ஒரு வருடத்திற்கு தாங்கும். காலை ஐந்தரை மணிக்கு டார்ச் வெளிச்சத்தில் குளக்கரையில்
குத்தவைத்துவிட்டு, பாண்டி வீட்டு போர் செட்டு தண்ணீரில் குளியல்& 'ல்லேய் சுகந்தா, தொட்டிக்குள்ள ஒக்காந்து மோட்டார் தண்ணியில கொஞ்ச நேரம் காமியேன், அஞ்சு நிமிஷத்துல உச்சந்தல வரைக்கும் புடிச்சு இலுக்கும் பாரு!; தினமும் இரவில், தாத்தாவின் தனிக்கொட்டகையில் பதப்படுத்தபட்டிருக்கும் நுரைத்த பனங்கள்ளை, லாகவமாக ஒரு சொம்பு கொண்டு வந்து கொடுத்து, பேசிக்கொண்டிருந்துவிட்டு, இருட்டுக்குள் குறுக்கு பாதையில் புகுந்து, பாடியபடியே அவன் வீட்டுக்கு போவான். திடீரென எனக்கு நகரப்பூச்சுகள் அத்தனையையும் துறந்துவிட்டு, அவனைப் போலவே இருந்துவிட வேண்டுமென்று அப்போது இருக்கும்.
கோடை விடுமுறை நேரத்தில்தான், ஊர் பிடாரியம்மன் கோயிலுக்கு காப்புக் கட்டுவார்கள். காப்பு கட்டி ஒரு வாரத்திற்கு, ஊர் மண்டகப்படியில் விடியவிடிய திரை கட்டி
சினிமா ஓடிக்கொண்டிருக்கும். ஊரே அங்கு பாய், தலையணை சகிதம் ஐக்கியம் ஆகிவிட, திருவிழா கூட்டத்தில் போய் ஒரு ரூபாய் ஆட்டுக்கால் சூப் குடித்துவிட்டு, லாட்டரி டிக்கெட் சுரண்டி பார்த்துவிட்டு, கடைசியில் எஞ்சும் இருபத்தி ஐந்து பைசாவிற்கு மூக்குப்பொடி வாங்கிக்கொண்டு, படம் பார்க்க வந்து படத்து கிடக்கும் கூட்டத்துக் குள் போவோம். தூங்கிக்கொண்டிருப்பவர்கள் மூக்கில் கொஞ்சம் பொடியை போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்போம். தும்மிக்கொண்டே கண்விழிக்கும் கிழவிகள் சகட்டுமேனிக்கு சபித்து தள்ளுவார்கள். அவனுடன் சேர்ந்து நான் செய்யும் இந்த போக்கிரித்தனங்கள் எல்லாம், அப்பாவின் காதுகளுக்கு போய்ச் சேரும்போது, 'அந்த பொம்பள
சட்டி காளிப்பய கூட சேரவுட கூடாதுன்னுதான் உன்னைய ஊர் பக்கமே கூட்டிவர்றதில்ல' என்று கூச்சல் போடுவார்.
அவனுடைய அப்பா, ஹோமியோபதியோ சித்த வைத்தியமோ, ஏதோ பார்ப்பார். முறையாகப் பயின்றவர் இல்லை என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஏதோ அவர் அரைத்து கொடுப்பதற்கெல்லாம், சின்ன சின்ன நோய்கள் சில, சரியாவதாய் ஊருக்குள் பேசிக்கொண்டார்கள். 'கைராசி' பட்டமும் உண்டு. அதோடு, பட்டணத்தில் ஒதுங்கிவிட்ட எங்களைப் போன்றோர்களின் நிலமெல்லாம் குத்தகைக்குப் பிடித்து வைத்து அவர்தான் காடு செய்வார். விவசாயம் போக மீதி நேரத்தில்தான், அந்த டாக்டர் சோலியெல்லாம்.
கரும்புக் காடும், தென்னையும் கொடுக்கும் ஜீவிதம்தான் பெரியது என்றாலும், தன் அப்பாவின் வைத்திய தொழில் மீது திட்டக்குடியானுக்கு ஓர் அலாதி ஆசை. தெரியாத ஆட்கள் அடையாளம் கேட்கும்போதெல்லாம், 'கோயிந்தராசு வைத்தியரு மகன்' என்று அறிமுகப்படுத்திக்கொள்வதை நான் கவனித்திருக்கிறேன்.
'சுகந்தா, நால்லாம் டாக்ட்டருக்குதான் படிப்பேன்.. எங்கப்பா மாதிரியில்ல.. வெள்ள கோட்டு போட்டு, கூட்டத்துக்கு டோக்கன் போட்டு, நம்மூருலயே ஒரு ஆஸ்பத்திரி.. எங்கப்பாவ டோக்கன் கொடுக்கவுட்ருவேன்..'
எனக்கும் டாக்டராகிவிடுவதுதான் விருப்பமாக இருந்தது. சரியாக சொன்னால், என் அப்பாவின் ஆசையை நான் உள்ளுக்குள் சுமந்துகொண்டிருந்தேன். அவன், அவனுடைய ஆசையைச் சொல்லிக்கொண்டிருந்தான்.
மருத்துவப் படிப்பில் சேருவதில் இருக்கும் நடைமுறை கடினங்களின் அச்சுறுத்தல் இல்லாமல் அவனால் பேசமுடிந்தது. அது எனக்கு, அவன் சூழல் சார்ந்த அறியாமையாகத்தான் தெரிந்தது. நான் சொல்வதெல்லாம், நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு முந்தைய காலகட்டம். பட்டுக்கோட்டை பாய்ஸ் ஹை ஸ்கூலிலிருந்து டாக்டர்கள் உருவாகிக்கொண்டுதான் இருந்தார்கள் என்றாலும், திட்டக்குடியான் அந்தளவுக்கு படிப்பில் உழைப்பைக் கொட்டுபவனாக எனக்குத் தெரிந்ததில்லை. ஆனால், என்னைவிட மனப்பூர்வமாக அவன் அந்த துறைக்குள் நுழைய ஏங்கிக்கொண்டிருந்தான் என்பதை அவன் கண்களில் பார்த்திருக்கிறேன்.
பிளஸ்டூ மதிப்பெண்கள் அவனுக்கு, நான் நினைத்ததை விட சாதகமாக வந்திருந்தது. நான் எதிர்ப்பார்த்திருந்த மாதிரியே, நுழைவுத்தேர்வின் சூட்சமம்தான் அவனுக்கு பிடிபடவில்லை. நிச்சயம் நொறுங்கிப் போயிருப்பான். பட்டணத்து பயிற்சி மையங்கள் அந்த சூத்திரத்தை சொல்லி கொடுத்துவிட்டதால், தேறி மேலேறி ஒருவழியாக எனக்கு ஸ்டான்லியில் சீட் கிடைத்துவிட்டது. அவன் பொறியியலில் சேருவான் என்று நம்பினேன். தகவல் தொடர்பு துறையின் ஆரம்பநிலையில், அதற்கிருந்த ஈர்ப்பில் அவனும் உள்ளிழுக்கப்படுவான் என்று நினைத்தால், அவனது கணக்கு வேறுவிதமாக இருந்தது. திருச்செங்கோட்டில் விடுதியுடன் கூடிய தனியார் பள்ளியைப் பற்றி அவனே விசாரித்து தெரிந்துகொண்டு, அந்த அலைவரிசையில் ஆசையை நீட்டியிருக்கிறான். அடுத்த ஒரு வருடம் நுழைவுத்தேர்வுக்காக மட்டும், அங்குபோய் தங்கி தயாராவதற்காக, சேர்த்துவிட சொல்லி மாமாவிடம் கேட்டதற்கு, அடியோடு மறுத்துவிட்டாராம். சிபாரிசுக்கு அப்பாவைதான் கூப்பிட்டான்.
'ஒன் மொவன் டாக்டராயிட்டாம்ன்னு இங்குன வந்து எக்காளம் ஊதுற வேலையெல்லாம் வேணாம்.. இவனெல்லாம் கொண்டி அவ்வளவு தூரத்துல விட்டா, என்னாவான்னு எனக்குத் தெரியும்.. படிக்கிற நாயிக்கு இங்க இருந்து படிக்க என்ன கேடாம்? நீ போயி ஒஞ்சோலிய பாரு'
செவிட்டில் அறைந்த மாதிரி மாமா அப்படிச் சொல்லிவிட்ட நாளிலிருந்து, அப்பா அவரிடம் முகம் கொடுத்தே பேசுவதில்லை.
தஞ்சாவூரில் நான் படித்த பயிற்சி மையத்திலேயே, வாரயிறுதி நாட்களில் மட்டுமான வகுப்புகளுக்கு, அந்த ஒரு வருடம் முழுக்க பட்டுக்கோட்டையிலிருந்து வந்து அவன் படித்துவிட்டு போனான். பள்ளியோ விடுதி சூழலோ இல்லாமல் போக, 'இம்ப்ரூவ்மெண்ட்' வருடத்திற்கு தேவையான உத்வேகம் அவனிடம் நொடித்துப்போயிருக்கிறது. அப்பா நடுவில் ஒரு முறை பார்த்தபோது, ரொம்பவே அழுத்தமற்ற தோரணையில் பேசியிருக்கிறான்; அவன் சோபிக்க மாட்டான் என்று அப்போதே வருத்தப்பட்டார்.
அண்ணாமலையிலோ ராமசந்திராவிலேயோ மாமாவால் சேர்த்துவிடமுடியும்தான்; செய்யமாட்டார். அதுவும் கண்முன்னாலேயே நான் ஒருவன் மெரிட்டில் சேர்ந்த பிறகு, நிச்சயம் மாட்டார். அவனையெல்லாம் காசு கட்டி சேர்த்துவிடுவது ஒன்றும் அத்தனை பெரிய குற்றமல்ல; ஆத்மார்த்தமாய் கற்றுத் தேர்ந்து வருவான். அவ்வளவு தவித்திருந்தான். எப்படியோ அவன் நகர்த்தி கழித்த அந்த ஒரு வருடத்தின் கடைசியில், முந்தைய வருடத்தைவிட, ரொம்பவே சோகையான முடிவுகள்தான் வந்து நின்றன. அவனால் அந்த கசப்பை விழுங்கவே முடியவில்லை. தனியாரில் சேர்த்துவிட சொல்லி அவன் துவங்கிய வாக்குவாதம் முற்றிப்போக ஒரு கட்டத்தில், மாமா குருட்டுப்போக்கில் அவனை அடித்து துவைத்துவிட்டாராம்.
அந்த சமயத்தில், நான் முதலாம் ஆண்டின் இறுதிக்கு வந்துவிட்டேன். அந்த சித்திரையில், கோயிலுக்கு காப்பு கட்டும் சமயத்தில் ஊருக்குப் போன போதுதான், அவனை மறுபடியும் பார்க்கவாய்த்தது. நிச்சயமாக என்னால் பழைய சௌகர்யத்துடன் அவனுடன் பழகமுடியாது என்று எனக்கு தெரியும். தோற்றுப்போன நண்பனுக்கு வெற்றிகண்டவன் இயல்பாக பேசி சிரிப்பது கூட வன்பகடியாக திரித்து பொருள்கொள்ளப்பட்டுவிடும். கூடுமானவரை கல்லூரியைப் பற்றி அவனிடம் எதுவும் பேசிவிடக்கூடாது என்ற நிதானத்துடன்தான் இருந்தேன்.
'பர்ஸ்ட் இயர்லயே பொணத்தெல்லாம் வெட்டி போஸ்ட்மார்ட்டம் பண்ண டிரைனிங் கொடுப்பாங்களா? அதெல்லாம் கத்துக்கிட்டியா நீ?' என்று அவனாகவே கேட்டான். 'அது போஸ்ட்மார்ட்டம் அல்ல; அனாட்டமி வகுப்புதான்' என்று, அவன் சொல்லியதை திருத்த வாயெடுத்து, ஏனோ தயங்கி நிறுத்தி, 'ம்' என்று மட்டும்
சொல்லி விட்டுவிட்டேன். அவனும் ஏதோ சம்பிரதாயத்திற்குதான் கேட்டிருக்கவேண்டும். கேட்காவிடின், அவனுக்கு என் மீது பொச்சரிப்பு என்று நான் நினைத்துகொள்வேன் என்பதற்காக, இட்டு நிரப்பும் பேச்சாகத்தான் அது தெரிந்தது. அந்த 'ம்'ஐ அவன் கவனிக்கக்கூட இல்லை. அயர்ந்துபோன முகமும் ஆர்வமற்ற பேச்சும் அவனுக்கானதல்ல. முன்னெப்போதும் அவனை அப்படி பார்த்ததேயில்லை. 'இந்தா வந்துடுறேன்' என்று திருவிழா கூட்டத்திற்குள் மறைந்துபோனவனை, அடுத்த இரண்டு நாட்கள் பார்க்கவே முடியவில்லை. வீட்டிற்குள்தான் அடைபட்டு கிடக்கிறான் என்று தெரிந்தும், நானாக போய் அவனைப் பார்ப்பதில் ஏதோ சங்கடம். சுடரைத் சுண்டிவிடுவதில் தூண்டுகோலும் கொஞ்சம் பொசுங்கத்தானே செய்யும். சென்னைக்குப் புறப்பட இருந்த அன்று இரவும், பயணம் சொல்லிவிட்டு வரும் சாக்கில் கொஞ்சம் அந்த இறுக்கத்தைத் தளர்த்திவிடலாம் என்றுதான் அங்கு போனேன். போகாமலே இருந்திருக்கலாம்.
சாத்தியிருந்த வீட்டுக்குள்ளிருந்து சத்தங்கள் மட்டும் வெளியே கேட்டுக்கொண்டிருந்தது. மாமாவின் குரல்...
' அவ்வளோ ரோசமயிரு இருக்கவன் எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு வந்து காசு கேக்குற? இந்த முண்டயும் ஒனக்கு நகைய கொண்டாந்து நீட்டிருக்கா.. அப்பமூட்டு சீருல்ல.. அதான் கெப்புரு.. சுயம்பா செய்ய பாக்குறீயலாக்கும்.. பிச்ச எடுக்கவிட்றுவேன் நாய்ங்களா.. சமஞ்ச புள்ள நிக்கிது வீட்டுல.. அதுக் கொரு கலியாணம்ன்னா நகநட்டுக்கு போயி, அந்த திட்டக்குடி கெழவன் வழுக்கைய செரைக்க சொல்றியா? ஆத்தாளுக்கும் மவனுக்கும் கெடப்பு தெரியாம துடிக்குது அப்புடி.. இன்னொரு வாட்டி இந்த பேச்சு வந்துச்சு, உசுரோட கொண்டி ரெண்டு பேரையும் பொதச்சுபுடுவேன்'
சற்று அமைதியான இடைவெளி.. கதவைத் தட்டலாமாவென யோசித்து, வேண்டாமென்று திரும்ப நினைக்கையில், மீண்டும் குரல்...
'பீட சிறுக்கி.. நகைய கொண்டிட்டு சொசைட்டிக்கும் செட்டியார் கடைக்கும் போற அளவுக்கு ஏத்தம் வந்துருச்சு...'
அப்படியே தொடர்ந்து அடிக்கும் சத்தம். அதுவரை கேட்காமல் இருந்த அத்தையின் குரல் அழுகையாக வெடித்து வெளியே வந்தது.
திரும்பி விறுவிறுவென நடக்க ஆரம்பித்துவிட்டேன். இனி எப்போதும் அவனுடைய அந்த பழைய துடுக்குத்தனத்தை நான் பார்க்கவே போவதில்லை என்று நினைக்கும்போது, என் நடை தளர்ந்து மூச்சு கொள்ளாமல் மௌனித்து நின்றேன். அதன் பிறகு நான் அப்பாவிடம் பேசும்போதுகூட அவனைப் பற்றி எதுவும் விசாரித்ததில்லை. என்னை நானே துயரப்படுத்திக்கொள்வதிலிருந்து தப்பித்துகொண்டிருந்தேன் என்றுதான்
சொல்லவேண்டும்.
கிட்டத்தட்ட எட்டு மாத இடைவெளி விட்டுதான் சித்தப்பாவின் அந்த அழைப்பு வந்தது. அதிகாலை நான்கு மணிக்கு பேருந்து போய் வடசேரி முக்கத்தில் நின்றதும், ஓட்டமும் நடையுமாக மருத்துமனைக்கு போய்சேர்ந்தேன். அப்பாவும் அம்மாவும்
தஞ்சாவூரிலிருந்து வந்துவிட்டிருந்தார்கள். மாமாவின் முகத்தை ஏறிட்டு பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது. எதற்காக வலிந்து அந்த சிலுவையை நான் சுமந்து கொண்டிருந்தேன் என்பது புரியவில்லை. எந்த நேரத்திலும் அவர் என்னை நோக்கி மண்ணை வாரி தூற்றி சபிக்க ஆரம்பிக்கலாம் என்று எதிர்ப்பார்த்துதான் நின்றுகொண்டிருந்தேன்.
ஆறு மணிக்கு சாம்ஸன் டாக்டர் வந்துவிடுவார் என்று சொன்னார்கள். மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த என்னை, உறவுக்காரர்கள் அத்தனை பேருமாக
சேர்ந்து, தங்களுக்கான பிரதிநிதியாக முன்னிறுத்தி டாக்டரிடம் போய் பேச சொன்னார்கள். பொதுவாக, படிக்காத பாமரனிடம் காட்டும் பரிவைக் கூட, மூத்த மருத்துவர்கள், மருத்துவம் பயிலும் பொடியர்களிடம் காட்டுவதில்லை. ஓர் இரண்டாம் ஆண்டு மாணவனுக்கு புரிகிற மாதிரி பேசக்கூடாது என்பதில், சாம்ஸன் மிகத்தெளிவாக இருந்தார். (நீதான் பெரிய டாக்டர்ன்னு முன்னாடி வந்து நிக்கிறியே; முடிஞ்சா புரிஞ்சுக்கோ) அவர் பேசியதில் ஆங்கிலம் மட்டும்தான் எனக்குப் புரிந்தது. தலையை ஆட்டிக்கொண்டேன். அவரது நெற்றி தசைகள் மட்டும் சிரித்ததாக எனக்கு தோன்றியது.
மூன்று படுக்கைகளே உள்ள அந்த சிறிய ஐசியூவிற்குள் நுழையும் அனுமதி எனக்கு மட்டும் அளிக்கப்பட்டது. உள்ளேயிருக்கும் மின்திரைகளில் தெரியும் எண்களும், எழுத்துகளும் என்னவாகயிருக்கும் என்று விழி பிதுங்கிக்கொண்டிருந்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் போல இருந்த ஒரு செவிலி, பயபக்தியுடன் வந்து நோயறிக்கையை
நீட்டினாள். மறுபடியும் எழுத்துகள். தொடர்ச்சியற்ற அர்த்தங்கள் ஆங்காங்கே அதில் கொஞ்சம் புரிந்தன.
'நைட்டு ரெண்டு மணிக்கு ஒரு வாட்டி கண்ண தெறந்து பாத்தாரு சார். திரும்பவும் அஞ்சு மணிக்கு ஒரு வாட்டி. ஆண்ட் கில்லர் பவுடர் மாதிரிதான் இருக்கு; பொழச்சுப்பாருன்னு
சாம்ஸன் சார் சொன்னாரு'
அதை அவர், என்னிடம் சொல்லவேயில்லை. அந்த பூஞ்சையான பெண் சொன்னதைத்தான், வெளியே காத்துக்கொண்டிருந்த காதுகளில் கிடத்தினேன்.
போஸ்ட் ஆபிஸ் பக்கத்திலிருந்த டீக்கடையில் நிறுத்திவைத்து, சித்தப்பாதான் நடந்ததையெல்லாம் விவரித்துச் சொன்னார்.
மாமாவிற்கும் அவனுக்கும் ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை இல்லாமல் போயிருக்கிறது.
தஞ்சாவூர் சண்முகாவில் பி.எஸ்.சி சேர்ந்துவிட்டு, மூன்று வாரங்கள் கடந்த பிறகு, அவன் கல்லூரிக்குப் போவதை நிறுத்திவிட்டானாம். அங்குதான் படித்துக்கொண்டிருக்கிறான் என்பதை மட்டும், முன்னர் அப்போது யாரோ என்னிடம் சொன்னார்கள். இவன் என்னடாவென்றால், ஊருக்குள்தான் திரிந்துகொண்டிருந்திருக்கிறான். யாராவது கேட்டால் 'காலேஜ் லீவு' என்று சொல்லிவிடுவானாம். வலியப்போய் ஊர் சடங்குகளில் முன்னே நின்று, எல்லோரிடமும் எதாவது சம்பந்தமில்லாமல் பேசி சத்தமாகச்
சிரிப்பதை, ஊர்வாய்கள் ஒருமாதிரியாக கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கின்றன. அவனிடம் பால்யத்தில் தெரிந்த அந்த பெண்மையின் சாயல், மீண்டும் வெளிப்பட துவங்கியதாக எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தன் மீதான கட்டுப்பாட்டை அவன் இழந்திருக்கிறான் என்பதாகத்தான் அதைப் புரிந்துகொண்டேன்.
திட்டக்குடியான், மெள்ள மெள்ள, அங்கே ஒரு கேலி பொருளாக சுருங்கியிருக்கிறான். ஆங்காங்கே பார்ப்பவர்களிடமெல்லாம் கைசெலவுக்கு காசு கேட்க ஆரம்பித்திருக்கிறான். மாமா அசிங்கத்தால் திணறிப்போயிருக்கிறார். தாளமுடியாத ஒரு புள்ளியில், மூன்று நாட்கள் வீட்டிற்குள்ளேயே போட்டு அவனைப் பூட்டிவைத்திருக்கிறார். இப்படித்தான் அந்த கடைசி இரண்டு மாதங்கள் போராட்டமாகக் கடந்திருக்கின்றன. திட்டக்குடியான் பூச்சிமருந்து குடிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன், அத்தையின் தகப்பனாருக்கு வயதுமூப்பிற்கான அத்தனை வியாதிகளும் வந்து, இரண்டு தனியார்களைக் கடந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் போய் சேர்த்திருக்கிறார்கள். இவன் அங்கே போன போதுதான் ஏதோ தீவிரமடைந்தவனைப் போல தெரிந்திருக்கிறான். மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வரும்போதெல்லாம், அவர்களை ஒரு மாணவனுக்கான குறுகுறுப்புடன் பின்தொடர்ந்திருக்கிறான். அவர்கள் போனப்பிறகு படுக்கைவாரியாக போய் நோயாளிகளிடம் பேச்சு கொடுத்து குசலம் விசாரிப்பானாம். அங்கு போன இரண்டு நாட்களில் பெரியவர் தவறிவிட்டார். அந்த தகவல் எனக்கும் வந்தது. நான் அந்த துக்கத்திற்கெல்லாம் போய் தலை காட்டவில்லை.
தாத்தா செத்துப்போய் ஒரு வாரம் விட்டு, கல்லூரிக்கு கிளம்புவதாக சொல்லிவிட்டு தஞ்சாவூருக்கு கிளம்பியவன், நேராக மருத்துவக் கல்லூரியிலிருக்கும் கூட்டுறவு அங்காடிக்கு போய், ஒரு வெள்ளை கோட்டை வாங்கி மாட்டிக் கொண்டு, காலை ஏழரை மணிக்கு 'ரவுண்ட்ஸ்' என்று ஒரு வார்டுக்குள் நுழைந்திருக்கிறான். அங்கிருக்கும்
செவிலிய மாணவிகளிடம் ஓர் அதிகார குரலை உயர்த்தி பார்த்திருக்கிறான். அவர்கள் சற்று பணிந்ததை சாதகமாக்கிக்கொண்டு, இரண்டு மூன்று நோயாளிகளைப் பரிசோப்பது போல ஏதோ செய்தானாம். சிறிது நேரத்தில் அங்கு வந்த, மூத்த
செவிலி ஒருவர், ஆள் புதிதாக இருக்கவும், இவனை ஏறிட்டு விசாரித்திருக்கிறார். இவன் தடுமாறி உளற, அவருக்கு ஏதோ பொறிதட்டிவிட்டது. பதற்றத்தில் இவனும், 'டாக்டர நீ கேள்வி கேக்குறியா? உனக்கு வேல இல்லாம பண்ணிருவேன்' என்று
சொல்லப்போக, அங்கு ஒரே கூச்சலாகி கூட்டம் சேர, இவன் சாயம் வெளுத்துவிட்டது.
' செமத்தியான அடிப்பா.. விட்ருந்தா கொண்டு போயி போலிஸ்ல கொடுத்துருப்பாய்ங்க.. நாதான் போயி கைய கால புடிச்சு,புத்தி செரியில்லாத பயன்னு சொல்லி இழுத்துகிட்டு வந்தேன்.. ஆனா அப்படி நான் சொன்னதுலேந்து அதுக்கப்றம் விழுந்த எந்த அடிக்கும் அவன் அசையவே இல்ல.. என்னய ஒரு மாதிரி பாத்துட்டு, கூட்டத்துலேந்து வெளிய போய்ட்டான். அந்த பய நடக்குற வேகத்த, ஓடிக்கூட புடிக்க முடியல.. மேலுக்கும் முடியலேல்ல.. அந்த கோட்டோடயே போயி, மெடிக்கல் மூனாவது கேட்டுக்கிட்ட ஓடிட்டிருந்த பஸ்சுல தொரத்தி ஏறிகிட்டான்.. படக்குன்னு அவன் அப்பனுக்கு போன் போட்டு சொல்லிட்டேன்.. பாத்தா அன்னிக்கு நைட்டே சாண்டகுடிக்கி மவன், இங்க வந்து மருந்த குடிச்சிருக்கான்.. நீ இப்ப அவன் நல்லாருக்கான்னு சொல்லவுட்டுதான் உள்ள டீயே எறங்குது..'
மூச்சைப் பிடித்து இறுக்கியது போல இருந்தது. அவனை எல்லோரும் சேர்ந்து புத்தி
சுவாதீனமற்றவனாக சித்தரித்துமுடித்துவிட்டார்கள். அவன் எப்படியாவது பிழைத்துவந்து அந்த நாய்களுக்கு முன் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று, தெரிந்த அத்தனை கடவுள்களையும் வேண்டிக்கொண்டேன். அவன் உயிர் பிழைத்து, கண்விழித்து, சுயமூச்செடுத்து, சோறு உண்ணும் நாள் வர, முழுமையாக இரண்டு வாரங்கள் ஆனது. அந்நாட்களில், அந்த மருத்துவமனையே கதியென்று கிடந்தேன். அவனை டிஸ்சார்ஜ் செய்யவிருந்த அன்று காலை இருந்த உணர்வு குவியலில், நேராக கரம்பயத்துக்கு போய் மொட்டை போட்டுக்கொண்டு வந்து, மருத்துவமனையில் சந்தனத்தலையுடன் நின்றேன். அதுவரை என்னிடம் தயங்கிக்கொண்டிருந்த மாமா, சரியாக அந்த கணம், என்னைக் கட்டிக்கொண்டு உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார்.
அதன் பின்னர் நான் அங்கிருந்த இரண்டு மூன்று நாட்களில் என் கண்களை அவன் ஏறிட்டும் பார்க்கவில்லை. என்னிடம் பேசுவதைத் தவிர்க்கவே யாருடனும் பேசாமல் இருந்ததாக எனக்கு தோன்றியது.
'ஓன்னோட வேல்யூ தெரியாம நீ நடந்துக்குற.. அது மட்டும்தான் என்னால சொல்ல முடியும்' என்று கடைசியாக அவனிடம் நான் சொல்லிய போது, காதிலேயே வாங்காதவன் போல குனிந்து நக இடுக்கின் அழுக்கை சுரண்டிக்கொண்டிருந்தான். நான் குனிந்த தலையுடன் அவனைப் பார்த்தது அதுதான் கடைசி முறையாக இருக்கவேண்டும்.
பின்னொரு முறை, அவன் ஏதோ கார் பேட்டரி பிஸினஸ் ஆரம்பித்திருப்பதாக அப்பா
சொன்னார். நான் என் இளநிலை படிப்பை முடிக்கும் நிலைக்கு வந்திருந்தேன். நடுவில் நான் ஊருக்கு போயிருந்த ஓரிரு முறைகளிலும், என்னைப் பார்த்தாலே, ஒரு மாதிரி கூனிக்குறுகி தவிர்த்து தாண்டிப்போய்க்கொண்டிருந்தான். அவன் மறைமுகமாக என்னைக் குற்றம்
சாட்டிக்கொண்டிருப்பதாக தோன்றினாலும், மனதில் அவனுக்கான ஈரம் அப்படியேதான் இருந்தது. அப்பாவிடம் அவனுக்கு எதுவும் வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுக்கமுடியுமா என்றெல்லாம் ஆலோசித்தேன். ஒரு தொழில் முனைவோனுக்கு தேவையான முதலீட்டை, மாமா அவனை நம்பியெல்லாம் தரமாட்டார் என்பது எனக்கு தெரியும்.
எம்பிபிஎஸ் முடித்து எம்டி நுழைவுத்தேர்வுக்காக நான் போராடிக்கொண்டிருந்த போது, அவன் ஏதோ ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் வேலையெல்லாம் பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன்.
'குண்டி செரங்கு புடிச்ச பய, ஒரு எடத்துல ஒக்கார மாட்டான்.. பேட்டரி கடைய அப்படியே கை மாத்தி உட்டுட்டான்.. வட்டிக்கு வாங்கி எடம் புடிச்சு வித்து காசு பண்ண போறானாம்..' சித்தப்பா பொரிந்து தள்ளினார்.
'நொடிச்சுப் போயிட்டான்னா நிறுத்தி தூக்கி விட்றுங்க.. அப்பாகிட்டயும் அவனுக்கு லோனுக்காக கேட்டேன்.. அவன நம்பி கைய சுட்டுக்க முடியாதுன்னுட்டாரு'
அந்த வருடம் எனக்கு விருப்பமான மேற்படிப்பு சீட் கிடைக்காததால், அரசுப் பணியில், பூதலூர் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்ந்துவிட்டேன். அரசு பணியில் இருந்துகொண்டே அடுத்த தேர்வுக்கு தயாராகலாம், அல்லது இரண்டு ஆண்டுகள் விட்டு, அரசு பணியில் இருப்போருக்கான இட ஒதுக்கீட்டை பிரயோகித்து உள்ளே நுழைந்துவிடலாம் என்பது என் கணக்கு. ரியல் எஸ்டேட் தொழில் அவனுக்கு நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாக தெரியவந்தது. வீடு கட்டி விற்கும் வேலையும் செய்வதாக
சொன்னார்கள். கண்ணால் காணாத வரை இதெல்லாம் ஆறுதலான விஷயமாகத்தான் எனக்கு இருந்தது.
பல மாதங்கழித்து, ஊருக்கு ஒரு கல்யாணத்திற்கு போயிருந்த போது, எதிர்பாராத விதமாக, மயில் கண் வேஷ்டியில், கையில் தங்க செயினுடன் அவனைப் பார்த்தேன். அத்தனை நாட்கள் கேட்டிருந்த அவனது வளர்ச்சிகளை கண்ணால் காணும்போது, அதில் என்னால் எளிதாக ஒட்டமுடியவில்லை. அவன் கைகளுடன் நிறைய அதே போன்ற தடித்த தங்க
சங்கிலி கைகள் குலுக்கப்பட்டன. விருந்து பந்திக்கு நான் போய்க்கொண்டிருந்த போது, எதிர்ப்பட்ட அவன், முகம் நிறைய புன்னகையுடன், பெரிய மனித தோரணையில் என்னை நோக்கி ஒரு வணக்கம் வைத் தான். சத்தியமாக நான் தடுமாறிப்போனேன். அவன் என் கண்களை நேருக்கு நேராக சந்தித்தது என்னை தொந்தரவு செய்வதாக இருந்தது. ஒரு மாதிரியாக பேரொளி கண்டு கூசியதைப் போல கண்களை நான் விலக்கிக்கொண்டேன். முதன்முறையாக நான் அவனைத் தவிர்த்து தாண்டிப் போக விரும்பினேன்.
காரில் ஊருக்குள் போகும்போதெல்லாம் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பேனர்களில் 'திட்டக்குடியான்' என்ற பெயர் தெரிய ஆரம்பித்தது. யாராவது அந்த கட்சி பொறுப்பில் இருக்கும் பெருந்தலைகள் பட்டுக்கோட்டை விஜயம் என்றால், இவன் 'வரவேற்கும்' ஒரு தனிப்பெரும் பதாகை முளைக்க துவங்கியது. மயில் கண் வேஷ்டி, கட்சி கரை வேஷ்டியாக மாறியது. மெல்லிய வெள்ளை பாக்கெட்டுக்குள் கட்சி தலைவர் சிரித்துக்கொண்டிருந்தார். கை செயின் இன்னும் வீங்கியது. அதன் பிறகு அவனைப் பற்றி எதாவது புது செய்திகள் வந்தபடியேதான் இருந்தன; அந்த நேரத்தில் அவன் செய்திகளை உருவாக்குபவனாக ஆகிவிட்டிருந்தான் என்றுதான் சொல்லவேண்டும். இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கிற்கான ஒப்பந்தம் அவனுக்குக் கிடைக்கும் போல இருக்கிறது என்று அப்பா சொல்லிய நாளில், என் நாற்பத்தி நான்காயிரத்து சொச்சம் சம்பளத்தில், காருக்கான பெட்ரோல் காசை மிச்சம் பிடிக்க, நான் இருசக்கர வாகனத்தில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன். அவன் தரையிலிருந்து மேற்தளங்களுக்கு போன நாட்களில், நான் பூதலூரில் அதே மூட்டைப்பூச்சி நாற்காலியில் அமர்ந்துகொண்டு, பீ காம்ப்லெக்ஸ் மாத்திரைகளை இரண்டாவது வருடமாக எழுதிக்கொண்டிருந்தேன்.
ஊருக்குப் போகும்போதெல்லாம், அவனைப் பற்றி என்னிடம் பேசுபவர்கள் அனைவரும், கண்ணுக்கு புலப்படாதவோர் ஒப்பீட்டு அளவுகோலை எங்களுக்கிடையில் நிறுவ முயன்றதாக எனக்கு தோன்றியது. ஒவ்வொரு பேச்சிலும், அவனுடன் நான் கோர்க்கப்படுவதாகத் தெரிவது, சிறுக சிறுக என் நிம்மதியை செல்லரிக்க ஆரம்பித்தது. சிலர் வேண்டுமென்றே அதை செய்தார்கள்-
'நல்லவேள.. இந்தப் பயலுக்கு டாக்டர் சீட்டு கெடைக்காம போச்சு.. கிடுகிடுகிடுன்னு கெடைக்குற கெளைய புடிச்சு இப்ப மேல வந்துருக்கவன், அப்டியே ஒக்காந்து தேஞ்சு போயிருப்பான்'
இதற்காகவே ஊருக்குப் போவதை குறைத்துகொள்ள ஆரம்பித்தேன். குறைந்தபட்சம் எம்டி சீட் கிடைத்தபிறகு போய்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டேன். நான்கு மாதங்கள் அந்த வைராக்கியத்தை அப்படியே இறுக்கி பிடித்து வைத்திருந்ததை கவனித்துவிட்ட அப்பாவிற்கு, நான் ஏதோ பதுங்குவதைப் போல தோன்றியிருக்கவேண்டும்.
'நீயா ஏண்டா இப்டி கம்பேர் பண்ணிக்கிற? நீ என்ன மாதிரி ப்ரொஃபஷன்ல இருக்க, அவன் என்ன தொழில் பண்றான்.. ரெண்டு பேரும் ஒண்ணா?.. ஃபர்ஸ்ட் இந்த காம்ப்ளெக்ஸ ப்ரேக் பண்ணு.. கௌம்பு என்கூட..' ஊரில் குலதெய்வத்து கோவில் கும்பாபிஷேகத்துக்கு போய்விட்டு வரலாம் என்று வற்புறுத்தி கூட்டிக்கொண்டு போனார்.
ஊர் மண்டகப்படியைக் கடந்து கார் போய்க்கொண்டிருக்கும்போது, இரண்டு இடங்களில் அவனது சிறிய கட்&அவுட்டை கவனித்தேன். கும்பாபிஷேகத்தையொட்டி நடக்கும் அன்னதானதிற்கு அவன்தான் நிதியளித்து பொறுப்பேற்றிருக்கிறான். அதற்குத்தான் அந்த கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கும்பத்தில் நீர் ஊற்றப்பட்டது.. உயர பறந்து வட்டமடித்துக்கொண்டிருக்கும் கருடனை அண்ணாந்து பார்த்து எல்லோரும் கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில், மருத்துவன் என்பதற்கான தனி கவனிப்பு எனக்குக் கிடைக்கத்தான் செய்தது என்றாலும், அவன் கையசைப்பிற்கு அங்கு எல்லாம் நடந்துகொண்டிருப்பதைதான், நான் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பக்கமாக வந்துகொண்டிருந்தவன், அப்படியே என்னைக் கடந்து போவான் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, வந்தவன் நேராக என் கைகளைப் பற்றி,
'சுகந்தா.. இப்ப உன்ன டா போட்டெல்லாம் கூப்ட முடியாது.. நம்ம பயகள்ல ஒரே டாக்டரு
நீதான்.. ஊர விட்டு ஏன்யா தள்ளி போயி அங்க இருக்குற.. இங்க வந்து ஆஸ்ப்பத்திரி போடுய்யா.. மாமா ஒக்காந்து டோக்கன் போடட்டும்' என்று ஒரு வெடி சிரிப்புடன் சொல்லிவிட்டு கையைக் குலுக்கிவிட்டு போனான். ஒரு கணம் குறுக்குப் பாதையில் பாட்டு பாடிக்கொண்டு போகும் அந்த பழைய உடல்மொழி எனக்கு அவனிடம் தெரிந்தது. அதே பழைய பாணியில், அவன் என் பாசாங்குகளை இடது கையால் தட்டிவிட்டு போவதைப் போல இருந்தது.
சிறகுகள் முறிந்து பரிதாபத்திற்குரியவனாக அவன் கிடந்தபோது கனிந்த என் நெஞ்சம், அவனே பறக்க ஆரம்பித்ததும், அதன் அத்தனை ஈரத்தையும் நொடியில் உலர்த்திபோட்டுவிட்டு, பதற்றமடைய ஆரம்பித்துவிட்டது. அவனுக்காக பரிதாபப்படுவதைத்தான் மனம் விரும்புகிறது; அவன் வாழவேண்டும் என்ற ஏக்கத்துடன் சேர்த்து, அவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற நிர்ணயத்தையும் நான் சுமந்திருக்கிறேன். சோமசுந்தரத்து மருத்துவமனையில் விஷம் முறிந்த போது அவன் மீண்டும் பிறந்திருக்கிறான் என்றுதான் இப்போது எனக்குப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், அவனது முந்தைய பிறவியிலேயே நான் இன்னும் அப்படியே நின்றுகொண்டிருக்கிறேன்; கும்பத்தில் ஊற்றப்பட்ட நீரை விசிறி இரைத்தார்கள். அங்கு ஒரு சொட்டு கூட என் மீது விழவில்லை. கன்னத்தில் போட்டுக்கொள்ளவும், கையெடுத்து கும்பிடவும் எனக்கு விதிக்கப்படவில்லை. பயந்துகொண்டிருப்பதற்கோ பார்த்துக்கொண்டிருப்பதற்கோ அல்ல; பறப்பதற்குதான் வானம். அண்ணாந்து பார்ப்பதை நிறுத்திவிட்டு, முதுகில் கைவைத்து, நான் மறந்துபோயிருந்த என் சிறகுகளை நீவிவிட்டு ஒரு முறை கனமாகச் சிலுப்பிக்கொண்டேன். என்
வலசைக்கான திசை என் கண் முன்னே திறந்துகொண்டது.
நவம்பர், 2019.