இரை

ஓவியம்
ஓவியம்ஜீவா
Published on

கதவு பூட்டோ தாழ்ப்பாளோ இடப்படாமல் இருந்ததால், தொட்டதும் திறந்து கொண்டது. அவர் உள்ளே நுழைந்தார். விளக்குப் போடாததால் சுற்றிலும் இருள் பரவியிருந்தது. அவர் தட்டுத் தடுமாறி சுவிட்ச் இருந்த பக்கம்சென்று போட்டார். பரவிய வெளிச்சத்தில் அவள் கட்டிலில் படுத்திருந்தது தெரிந்தது.

 ‘எதுக்கு இருட்டுல தவம் பண்ணிக்கிட்டு இருக்க?'என்று கேட்டார் அவர்.

‘இப்போ விளக்கு எதுக்கு? அணைச்சிடுங்க'என்றாள்.

‘எப்படியும் வெளிச்சத்துக்கு வந்துதான ஆகணும்?'

என்றபடி அவள் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

அறையைச் சுற்றிப் புத்தகங்கள் இறைந்து  கிடந்தன. கட்டிலிலும் சில.

‘வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வரதுதான் ஈசியாவும் நிம்மதியாவும் இருக்கு'

என்றாள். இன்னும் அவள் அவர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

அவர் எதுவும் பதில் அளிக்காததைக் கண்டு  அவள் திரும்பிப் படுத்துக் கொண்டு அவரைப் பார்த்தாள்.

‘ஏன், ராத்திரி பூரா தூங்கலியா? கண்ணுல்லாம் செவ
செவன்னு இருக்கு' என்றார்.

‘அவன் என் நிம்மதியக் கெடுத்துட்டான்' என்றாள்.

‘இது பழைய கதைதான?'என்றார் அவர்.

அவள் அவர் குரலில் ஏளனமோ வெறுப்போ இருக்கிறதா என்று தேடினாள்.

அவர் அறையைச் சுற்றிப் பார்வையைச் செலுத்தினார். அறையின் நடுச்சுவரில் இரையைத் தேடிச் செல்லும் பல்லியின் ஓவியம் தொங்கிற்று. அர்ஜுனன் அவளுக்குப் பிறந்த நாள்
பரிசாகக் கொடுத்தது என்று அவள்சொல்லியிருக்கிறாள். அவள்
சொன்ன போது அவர்'இதுல பல்லி யாரு? இரை யாரு?'

என்று சிரித்தார்.

‘ஏன் நீங்களே சொல்லுங்களேன்'

என்று அவளும் சிரித்தாள்.

‘எனக்கென்னவோ அர்ஜுனன்தான்  இரைன்னு தோணுது' என்றார் அவர்.

அவள் திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள். அந்தப் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை என்று முகம் காட்டியது.

‘அவ்வளவு கேவலமாவா நான் இருக்கேன்?' என்று கேட்டாள். அவள் குரலில் ஆழ்ந்த அமைதி இருந்தது.

‘இதுல கேவலமோ அருவருப்போ எங்க வந்தது?  நீ கேட்ட,  நா சொன்னேன்' என்றார். தொடர்ந்து ஆங்கிலத்தில்'அப்படியே நீ இரையை விரட்டிச் செல்லாதவளாக இருந்தாலும் நீ நிச்சயமாக இரையாகப் போகிறவள் இல்லை' என்றார்,

‘இந்தக் காம்ப்ளிமெண்ட்டை நான் எதிர்பார்க்கவில்லை' என்றாள். இப்போது அவள் முகம் மென்மையாகியிருந்தது.

‘உண்மை புகழ்ச்சியாகப் பார்க்கப்படுவது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை' என்றார் அவர்...

இப்போதும் அந்த ஓவியத்தைப் பார்த்ததும் பழைய சம்பாஷணை நினைவுக்கு வந்து அவரது இதழில் புன்னகையை ஏற்றியது.

‘எதுக்கு சிரிக்கிறீங்க?' என்று கேட்டபடி அவள் தலையைத் தூக்கி அவர் பார்வை சென்ற வழியே தன் பார்வையைச் செலுத்தினாள். 'ஓ, அதுவா?' என்றாள். 

‘ஆமா. ஆனா நீ அன்னிக்கி அர்ஜுனனை நான் இரைன்னு ஏன் சொன்னேன்னு  கேக்கலையே!' என்றார்.

‘நீங்க என்னை வெறுப்படிக்கணும்னு நினைச்சுதான சொன்னீங்க?'என்றாள், அவள்.

‘நீ இன்னும் குழந்தையாத்தான் இருக்கேன்னு
சொன்னா மறுபடியும் கோவிச்சுக்குவே' என்றார் அவர்.'நேத்திக்கி அர்ஜுனனைப் பாத்தியா? நீ இப்பிடி கவுந்தடிச்சு படுத்துக் கிடக்கிறதுக்கும் அதுதான் காரணமா?'

அவள் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.'ஆமா. ரெண்டு பேரும் மாக்ஸ்முல்லர் பவன் போனோம். எலியா காஸானோட பழைய படம்  ஈஸ்ட் ஆஃ ப்  ஈடன். திரும்ப வரப்ப தகராறு ஆயிடுச்சு' என்றாள். கைகளைப் பின்பக்கம் கொண்டு சென்று தலைமயிரைக் கோதி ஒரு கொண்டை போலப் போட்டு முடிந்து கொண்டாள். இப்போது அவள் பார்க்க இன்னும் கொஞ்சம் அழகாக ஆகி விட்டாள்  என்று அவர் நினைத்தார். ஆனால் அவளிடம்சொல்லி விடக் கூடாது.. மறுபடியும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு...

அவள் கட்டிலை விட்டுக் கீழிறங்கி சோம்பல் முறித்தாள். மேலே அணிந்திருந்த டாப்ஸ் இன்னும் சற்று நீளமாக இருந்திருக்கலாம் என்று அவருக்குத் தேன்றிற்று. ஏதாவது சொன்னால்'நீயும் ஒரு
சாவனிஸ்டுன்னு நான் நினைச்சதே இல்லை' என்பாள்.

அவள் அவரைப் பார்த்து'டாப்ஸ் கொஞ்சம் நீளமா இருந்திருக்கலாமில்லே?' என்று கேட்டாள்.

அவர் ஆச்சரியத்துடன்'ஆமா'என்றார்.

‘சரி நெக்ஸ்ட் டைம் பாத்து வாங்கறேன். ஆம் ஐ நாட் எ குட் லேடி?'

என்று சிரித்தாள்.

‘ரெண்டாவது தடவையா என்னை
சொல்ல வைக்காதே' என்று சிரித்தார் அவர்.

‘என்ன? குழந்தைன்னா?'என்று கேட்டாள் அவள்.'அர்ஜுனனும் அப்படித்தான் நெனச்சிட்டிருக்கான் போல.'

‘என்ன ஆச்சுன்னு சொல்லு. அப்புறமா எனக்கு சூடா ஒரு காபி போட்டுக் குடு' என்றார் அவர்.

‘நேத்திக்கு திரும்பி வரப்ப, என் கூடயே இன்னிக்கு தங்கிடுன்னேன். இல்ல என் வீட்டுக்கு போகணும்னான். ஏன் யாராச்சும் கெஸ்ட் வந்திருக்கான்னு கேட்டேன். இல்ல, என் ஒய்ஃப்க்கு உடம்பு சரியில்ல. போகணும்னான்'

‘அவன் ஒய்ஃபுக்குதான் ரொம்ப நாளா  உடம்பு சரியில்லாம இருக்கில்ல'  என்றார் அவர்.

‘ஆமா. அவனுக்கு திடீர்னு ஞாபகம் வந்திருச்சு போல. வலைச்சி மோதிரத்தைக் கொண்டு வந்து காமிச்சவுடன சகுந்தலை ஞாபகம் வந்த துஷ்யந்தனா ஆயிட்டான். ஹீ இஸ் எ செல்ஃபிஷ் ரோக். இனிமே என்னை வந்து பாக்காதேன்னு நேத்து கத்திட்டு வந்திட்டேன்' என்றவள்'சரி, நான் போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்திர்றேன். பால மட்டும் காச்சிருங்க'என்று சொல்லி விட்டுப் பாத்ரூமை  நோக்கி நடந்தாள்.

அவர் பால் பாக்கெட்டைப் பிரித்து பாத்திரத்தில் ஊற்றி காஸ் அடுப்பைப் பற்ற வைத்தார். அர்ஜுனனின் நினைப்பு அவரைத் தொடர்ந்தது. அவர் இந்த ஊருக்கு வந்த பிறகுதான் அர்ஜுனன்  வந்தான். ஆரம்ப காலத்தில் தங்குவது முதற்கொண்டு எல்லா உதவிகளையும் அவர்தான் செய்து கொடுத்தார். அவர் வழக்கமாக இம்மாதிரி மற்றவர்களுக்கும் செய்து வந்ததால் அர்ஜுனனுக்குச் செய்தது ஒன்றும் வித்தியாசமான பெரிய வேலை இல்லை.

ஆனால் அவன் பல வருஷங்களுக்கு அவருடைய உதவிகளைப்  பற்றி வந்து போவோர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பான். திடீரென்று ஒரு நாள் மறந்து விட்டவன் போலத் தோன்றினான். துஷ்யந்தன் அவனது முன்னோரில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும். ஆளைப்  பார்த்தாலும் அர்ஜுனன்  முகத்தில் ராஜகளை சொட்டும். அவன் இருபதாம் நூற்றாண்டின் துஷ்யந்தன்தான். துஷ்யந்தன் ஒரு சகுந்தலையைத்தான் மறந்தான்.ஆனால் அர்ஜுனன்  பல
சகுந்தலைகளை...

‘அட அப்பிடி என்ன
யோசனை? நான் வராட்ட, பால் பொங்கியிருக்கும்' என்ற குரல்தான் அவரை உலக நினைப்புக்குக் கொண்டு வந்தது. அவள் அடுப்பை அணைத்து விட்டு கிளாஸ்களை எடுத்து வந்தாள். இருவருக்கும் காபிகலந்து அவரிடம் ஒன்றைக் கொடுத்தாள். இருவரும் வாசலில் அருகருகே இருந்த
சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர். சூரியன் தில்லியை வெறுப்பவன் போல காலை எட்டுக்கே தீக்கங்குகளைத் தெருவில் இறைத்துக் கொண்டிருந்தான்..

‘அர்ஜுனனைப் பத்தித்தான் நினைச்சிட்டிருந்தேன்' என்றார் அவர்.

‘நேத்தி திடீர்னு உங்களைப் பத்திக் கேட்டான்' என்றாள்.

‘என்னவாம்?'

‘நீங்க மறுபடியும் ஸ்டேட்ஸ்மன்ல எழுத ஆரம்பிச்சிட்டீங்களான்னு' என்றாள்.

‘அவன் ஸ்டேட்ஸ்மன் படிக்கிறான்னு தெரிஞ்சா நான் அந்தப் பக்கம் போயிருக்க மாட்டேனே'

என்று அவர் சிரித்தார்.

‘கொஞ்சம் கவலப்பட்டவன் மாதிரிதான் இருந்தான்'

என்றாள் அவள்.'அவனோட புது நாடகம் வந்து மூணு நாளாகுதுன்னு உங்களுக்குத் தெரியும்ல?'

‘ஆமா. அதுக்கென்ன?'

‘நீங்க அதைப்பத்தி என்ன எழுதப் போறீங்கன்னு கேட்டான்' என்றாள்.

‘நேத்திதான் பாத்தேன்.'

‘அதை பத்தி  ஸ்டேட்ஸ்மன்ல நீங்க  ஒண்ணும் சொல்ல வேண்டாம்னு அவன் நினைக்கிறான்' என்றாள் அவள்.

‘அர்ஜுனன் தன்னோட  நாடகத்தைப் பத்தி சரியாதான் எடை போட்டிருக்கான்'

என்று சிரித்தார்.'ஆனா  நான் எழுதறதும் எழுதாம இருக்கறதும் அவன் கையில இல்லையே! போன வாரமே சுதீப் என்னிடம் கட்டுரை எழுதிக்கொடுன்னு சொல்லி விட்டானே !'

சுதீப் ஸ்டேட்ஸ்மனில் தலைமை உதவி ஆசிரியர்.

  அவர்  குடித்து முடித்த காபி டம்ளரைக் கீழே வைத்தார்.

‘எல்லாம் நீங்க பண்ணி வச்ச தப்பு. நாடகம்னா என்னன்னு தெரியாதவன  அல்காஷியிடம் கத்துக்கோ. டென்னஸி வில்லியம்ஸ  படி. ஆர்தர் மில்லர படின்னு  சொன்னதுமில்லாம, ஊர்ல நடக்கற சீரியஸ் டிராமாக்கெல்லாம்கூட்டிகிட்டு போயி டெக்னிக்ஸ் எல்லாம் சொல்லிக் குடுத்து டிஸ்கஸ் பண்ணி...எவ்வளவு நேரம்? எவ்வளவு எஃபர்ட்? எல்லாம் ஆரம்பத்திலேயே நீங்க பண்ணின தப்புதான்' என்றாள்.

‘ஆரம்பத்திலதான் எல்லாத் தப்பும் நடக்குது. ஏவாள் கொடுத்த ஆப்பிளை ஆதாம் வாங்கித் திங்காம இருந்திருந்தா பல்லாயிரக்

கணக்கான வருஷம் உலகம் தப்பே பாக்காம நகர்ந்து போயிருக்கும். இல்லியா?'

என்று அவளைப் பார்த்தார்.

‘சொல்லிக் கொடுத்தது போதாதுன்னு நாடக உலகில் திருப்பு முனை,மறுமலர்ச்சின்னுல்லாம் வேற எழுதி அவனைப் பெரிய ஆளாக்கி விட்டதும் நீங்கதான். அந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் தேரோட்டினான். இந்தஅர்ஜுனனுக்கு நீங்க...'

என்று முடிக்காமல் சிரித்தாள்.

‘இன்னிக்கி தேதில வேணும்னா காரோட்டியா இருக்கலாம். ஆனா என்கிட்டயோ அவன் கிட்டயோ காரில்லாம போச்சே'

என்று அவரும் சிரித்தார். தொடர்ந்து'ஆனா ஒண்ணு சொல்லித்தான் ஆகணும். அவன் கெட்டிக்காரன்.அதுல சந்தேகமே இல்லை.
கத்துக்கறதில மன்னன்.  ஏணியக் காமிச்சு முதல் படில ஏத்தி விட்டதுதான். அதுக்கப்புறம் திரும்பிப் பாக்காமலே உசரத்துக்குப் போயிட்டானே. ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்.'

உணர்ச்சிக்கு ஆட்படாமல் எந்த ஒரு விஷயத்திலும் இருக்கும் இரு புறங்களையும் பார்த்துத் தீர்மானிக்கும்  அவரை அவள் வழக்கம்போல ஆச்சரியம் நிரம்பிய கண்களுடன் பார்த்தாள். இது ஏதோ அவர் தனது எழுத்தில் மட்டும்தான் இந்தப் பொறுப்பைக் கை கொண்டிருப்பதாக இல்லாமல் குடும்ப  அலுவலக சமூக வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வரும் மனிதன்.  தலையில்  கொத்தாகப் புரண்ட மயிரில் ஒரு பகுதி வளைவுடன் முன்நெற்றியில் விழுந்திருந்தது. எவரையும் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் முகமல்ல அவரது. அந்தப் பெரிய கனமான கண்ணாடிகளுக்குள் புரளும் கண்களை வைத்து அவரை மதிப்பவர்கள் ஏமாளிகள் என்று அவள் அடிக்கடி நினைப்பதுண்டு. காவி நிற  கதர்க் குர்த்தாவும் வெள்ளை பைஜாமாவும் அணிந்து ஆரவாரமற்றவராய்க் காணப்பட்டார். 

‘எதுக்கு அப்பிடி என்னையே பாத்துகிட்டு இருக்கே?' என்று கேட்டார்.

‘ஐ சிம்ப்ளி லவ் யூ 'என்றாள்.

‘போச்சுடா.அர்ஜுனன்  கேட்டா  கோவிச்சுக்கப் போறான்' என்று சிரித்தார்.

‘அர்ஜுனன்  மை  ஃபுட் ! ஹீ 'ஸ் ய மொரான்' என்றாள் அவள்.

‘நான் நீ அவனை விரும்பறேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்' என்றார்.

‘யூ மீன் லவ்?'

அவர் சிரித்தபடி தலையை அசைத்தார்.

‘இல்ல. அதே மாதிரி அவனுக்கும் என் மீது இல்ல.'

‘அப்ப என்ன மாதிரி உறவு இது?'

‘உறவுங்கறது எல்லாம் பெரிய வார்த்தை' என்றாள். 'ஆரம்பத்துல அது ஒரு பிஸிகல் அட்ராக்ஷன். அதுக்கு அப்புறம் நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் எங்களை யூஸ் பண்ணிக்க ஆரம்பிச்சோம். ஆனா ரெண்டு பேருமே அதில ஜெயிக்கல.'

‘அவனுக்கு வேற  சிநேகிதிகள் எல்லாம் இருந்தாங்கன்னு உனக்குத் தெரியுமா?'

‘ஆரம்பத்தில தெரியாது. அப்புறம் அவன் தன்னோட மனைவி வியாதிக்காரின்னு சொல்லி மொதல்ல இரக்கத்தை அவங்க கிட்ட தூண்டி அப்புறம் காதலுக்கு வலை விரிச்சான்னு தெரிஞ்சது. பை தட் டைம் இட் வாஸ் டூலேட் ஃ பார்  எவ்ரிஒன்.'

 'நீ அவனை வெறுக்கிறியா?' என்று கேட்டார்.

‘அது பரஸ்பரமானது' அவள் சிரித்தாள்.

‘இப்போ மறுபடியும் வந்தான்னா?'

‘வராம எங்க போவான்?'  தாள்களைக் குலுக்கினாள்.

‘போடான்னு சொல்லுவேன். ஆனா அப்புறம் அவனை
சேத்துக்கிறது  அவன் எவ்வளவு தூரம் கால்ல விழுந்து கெஞ்சறாங்கிறதைப் பொறுத்தது' சிரித்தாள்.'நீ ரொம்பப் பொல்லாதவ‘ என்றார், அவர்.

அவள் தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை எடுத்து அவருக்கு எதிராகப் போட்டுக் கொண்டாள். கால்களை
நீட்டி அவருடைய முழங்கால்களின் மீது வைத்துக் கொண்டாள்.'இப்பதான்
சவுகரியமா இருக்கு‘ என்றாள்.

அவர் சிரித்தபடி'இந்த மாதிரி முழங்காலை இடிச்சுக்கிட்டு மேல விழறது ஒண்ணு என்னோட பேத்தி. இன்னொன்னு ரோஸி' என்றார்.

‘என்னைய நாய்க்குட்டின்னு போட்டுப் பாக்கறீங்க' என்றாள் அவள்.'இப்ப எங்க அப்பா கூட உக்காந்திருக்கிற மாதிரி இருக்கு எனக்கு.'

சற்று முன்பு அவள் சொன்ன லவ் யூவுக்கு இதுதான் முழுமையான அர்த்தம் என்று அவர் நினைத்தார். ஒரு  வினாடி உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டு மறைந்தது.

‘உங்கப்பா மேல உனக்கு ரொம்பப் பிரியமா?' என்று கேட்டார்.

அவள் அவரை ஒரு கணம் உற்று நோக்கினாள்.'அவர் செத்துப் போயிருக்கக் கூடாது. அதனாலதான் படிப்புன்னு என்னவோ சொல்லிக்கிட்டு இங்க வந்தேன். ஐ ஹேட் நோ ஃபிரெண்ட்ஸ் அட் ஹோம்.‘

வருத்தத்தில் திளைத்த அவள் கண்கள் வெளியே காற்றில் ஆடிக் கொண்டிருந்த சரக்கொன்றை மரத்தின் மஞ்சள் நிறப் பூக்கள் மீது பதிந்திருந்தன.

அப்போது அவருடைய கைபேசி ஒலித்தது. 'மெஸ்ஸேஜ்‘ என்றபடி  சட்டைப் பையிலிருந்து எடுத்துப் பார்த்தார். சில வினாடிகள் வந்திருந்த செய்தியையே உற்றுப் பார்த்தபடி இருந்தார்.

‘எனிதிங் சீரியஸ்?‘ என்று அவள் கேட்டாள்.

‘சுதீப் கிட்டேயிருந்து. நீயே பாரு' என்று அவளிடம் போனைக் கொடுத்தார்.

‘அர்ஜுனனின் நாடகம் பற்றித் தலைமை ஆசிரியர் விமரிசனம் எழுதப் போகிறார். இன்று மாலை ஆறு மணிக்கு  இந்தியா காபி ஹவுஸில் சந்திப்போம்‘ என்றிருந்தது.

‘பாஸ்டர்ட்‘ என்றாள் அவள் கோபத்துடன்.

‘நான்தான் சொன்னேனே அர்ஜுனன் ரொம்பக் கெட்டிக்காரன்னு‘  என்றார் அவர்.

ஜுன், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com