ஆறுமாத அடப்பு

ஓவியம்
ஓவியம் மனோகர்
Published on

நெருங்கிய சொந்தமனைத்தும் வீட்டு வாசலில் குவிந்து விட்டது. பெண்களின் அழுகையொலி விடிகாலை நான்கு மணியிலிருந்தே அந்த குக்கிராமத்திற்குள் கேட்டுக் கொண்டிருந்தது.

நேரம் விடிகாலை ஐந்தரையை தாண்டி விட்டது. இருந்தும் இன்னும் கோவை அரசாங்க மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி வந்து கொண்டே இருப்பதாகத்தான்
சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘அப்பலையாவே கேட்டேன் பெருமாநல்லூரு வந்தாச்சுன்னாங்க! இன்னுமா வர்றாங்க?'

தமிழ்நதிக்கு எட்டு வயது தான் ஆகிறது. உள்ளூர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். தமிழ்நதியின் அக்கா இவளுக்கும் ஒருவருடம் மூத்தவள். இருவரும் ஒன்றாகவே தான் பள்ளிக்குச் செல்வதும் காடு கரைகளில் விளையாடுவதுமாக இருந்தார்கள்.

தமிழ்நதிக்கு மூன்று மாதகாலமாகவே உடல்நிலையில் கோளாறு வந்து விட்டது. சாதாரண சளி காய்ச்சல் என்று தான் டாக்டரிடம் காட்டி ஊசி போட்டு, மாத்திரைகளையும் வாங்கி வந்து கொடுத்தார்கள். போகப் போக காய்ச்சல் நின்றபாடில்லை. கோபி மருத்துவமனைக்கு தூக்கி ஓடினார்கள். அங்கே அவர்கள் கையை விரித்து ஈரோடு குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆய்வுகளுக்குப் பிறகு பாப்பாவிற்கு ஒரு கிட்னி இல்லையென்றும் மற்றொன்றும் வேலையை நிறுத்திக் கொள்ளும் நிலையில் இருப்பதாகவும் கூறினார்கள். செலவை சமாளிக்க சொந்தபந்தங்களிடம் கடன் வாங்கினான் சுப்பிரமணி.வாரத்தில் இரண்டு முறை டயாலிசிஸ் செய்தார்கள்.

வாழ்தலின் நிமித்தமாக உலகிற்கு வந்த தமிழ்நதி பாப்பா வாழாமலேயே விடைபெற்றுக் கொண்டாள். கடவுளின் தோட்டத்திலிருந்து இப்படி பல குழந்தைகள் வாழாமலேயே துரத்தியடிக்கப்படுகிறார்கள்.எல்லோரும் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் வாழவே கூடாது என்று நினைக்கிறார்களோ அந்த சூழ்நிலையில் தான் வாழ்ந்தேயாக வேண்டுமென வலுக்கட்டாயமாக அமரவைக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளை வீட்டை ஒட்டியே குழி வெட்டிப் புதைத்து விடுவது கிராமங்களின் சம்பிரதாயம். ஆனால் தமிழ்நதிக்கு எட்டு வயதாகிவிட்டது. எல்லோரும் குழப்பத்தில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.சுப்பிரமணியே தான் சொல்ல வேண்டும் என்று அவனிடம் பேசவும் தயங்கி நின்றிருந்தார்கள். சுப்பிரமணியும் மரகதமும் நெஞ்சில் அடித்துக் கொண்டு வாசலில் அமர்ந்திருந்தார்கள். தமிழ்நதியின் அப்பிச்சி வாசலில் கிடத்தப்பட்டிருந்த பாயில் கிடந்த பேத்தியின் அருகில் குந்த வைத்து அமர்ந்து ‘எந்திரி சாமி! எந்திரி சாமி! காட்டுக்கு ஆடுகளெ ஓட்டீட்டுப் போலாம்!' என்று சொல்லியபடி அமர்ந்திருந்தார்.

'பாப்பா படமெல்லாம் நல்லா வரைவாளுங்க! முருகரு, விநாயகருன்னு அச்சு அசலா ஒரு படத்தப் பாத்தாள்னா அப்பிடியே நோட்டுப் பேப்பர்ல ரூல் பென்சில்ல வரஞ்சி கொண்டாந்து பெரீப்பா பாருன்னு காட்டுவாளுங்க! இப்பிடீன்னு மொதல்லயே தெரிஞ்சிருந்தா உடவா போறோம்? காசு இத்தனை செலவு பண்டியும் காப்பாத்த முடியாமப் போச்சே! காச்சல்னா டாக்டர் கிட்ட தூக்கீட்டு போயி ஒரு ஊசியப் போட்டு கூட்டிட்டு வந்துடறோம். வேற பிரச்சனைக இருக்குதுன்னு இங்கிருக்குற டாக்டருங்களுக்கு என்ன தெரியும்? நான் படிச்சுப் படிச்சு மொதல்லயே இவங்கிட்ட சொன்னேனுங்க! அட கொழந்தைங்க டாக்டருகிட்ட எதா இருந்தாலும் கூட்டிட்டுப் போயிட்டு வாடான்னு!' சுப்பிரமணியின் அண்ணன் சுந்தர் இழவு பார்க்க வந்தவரிடம்
சொல்லிக் கொண்டிருந்தான்.

'இங்கெல்லாம் ஊட்டை ஒட்டி பொதைக்கிறதெல்லாம் வேண்டாம்! எப்ப பொறவுக்கு போனாலும் அதே ஞாபகமா இருந்துட்டே இருக்கும் காலத்துக்கும்! சுடு காட்டுக்கே கொண்டு போயிடலாம்' சுந்தரே தான் கூட்டத்தினரிடையே சொன்னான். நெருங்கிய
சொந்தங்களும் அதற்கு மறுப்பேதும்
சொல்லவுமில்லை.

அப்படித்தான் நடந்தும் முடிந்தது அது. உள்ளூர் நாவிதனை வைத்து துக்க நாள் அன்றே கருப்பும் செய்து விடுவதாக முடிவாயிற்று. இப்போதெல்லாம் அப்படித்தான் ஒரே நாளில் எல்லா விசயங்களையும் முடித்துக் கொண்டு உறவுச் சனம் அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்று விடுகிறது. நோக்காட்டுக் குதிரைக்கு சறுக்குனதே சாக்காடு என்பது போல அடுத்த நாளு அமாவாசை வருது, உள்ளூரு நோம்பி சாட்டுறாங்க, மாசம் முடியுது என்று எதையோ காரணம் வைத்துக் கொள்கிறார்கள்.

ஜாதகப்பையைத் தூக்கிக் கொண்டு நாலு உறவுச் சனம் ஜோதிடரை நோக்கி ஓடியது. பாப்பா இறந்த நேரத்தை கேட்டதும் ஜோதிடர் விரல்களை எண்ணினார். ‘ஆறு மாசம் அடப்பு இருக்குதுங்களே!இதுவரைக்குமில்லாத சாதாரண அடப்பு இல்லீங்களே இது! சரி பாப்பாவை வீட்டுக் கிட்டயே தானே அடக்கம் பண்ணியிருக்கீங்க?' என்றவருக்கு தகவலைச் சொன்னார்கள்.

''வீட்டையொட்டித் தான வழக்கமா அடக்கம் பண்ணுவாங்க, இப்படி செய்யலாம்னு யாரு உங்களுக்குச் சொன்னது? ஒரு போனு போட்டு என்கிட்ட கேட்டிருந்தீங்கன்னா கூட நாஞ்
சொல்லியிருப்பனே!''என்றார் ஜோதிடர்.

"என்ன இருந்தாலும் பாப்பாவைக் கூட்டிட்டு என் தம்பிகாரன் கல்யாணம் காச்சின்னும், இழவு வீடுன்னும் போயிருக்கானுங்களே! பாப்பாவும் நல்ல விசயத்திலயும் கலந்திருக்கு, கெட்ட விசயத்திலயும் கலந்திருக்கே! நீங்க சொல்றாப்ல பார்த்தா கைக்கொழந்தைங்களைத் தான் அப்படி ஊட்டை ஒட்டி பொதைப்பாங்க சோசீகார்ரே! பாப்பா மூணு வருசம் பள்ளிக்கூடம் போயிருக்குதுல்ல!''

"அதெல்லாம் சரிதானப்பா! அடப்புன்னா வீட்டுக்குள்ள ஆறு மாசம் சாயந்திரம் ஆறு மணியாச்சின்னா வௌக்கு பத்த வச்சம்னா போதும். அதெல்லாம் வயசானவங்களுக்கு. இது பாப்பாவாச்சே! விளக்கை குழி மேட்டுல தான் ஆறு மாசம் வரைக்கும் பத்த வைக்கணும். அதும் போக வௌக்கு விடியுமுட்டும் அணையாம இருக்கணும்!''

''இதென்னுங்கிது புதுசா சொல்றீங்க நீங்க? இப்படி எங்கீமே நடந்ததே இல்லியே! சித்த பொறுமையா பார்த்துச் சொல்லுங்க சோசீகார்ரே!''

"பொறுமையா பார்த்துச் சொல்ல என்ன இருக்கு இதுல? நான் உங்க குடும்ப நன்மைக்கித் தான்
சொல்றேன். அப்படிப் பண்ணாம விட்டீங்கன்னா வரிசையா தப்புத் தப்பாவே தான் நடக்கும். ஜாதகம் என்ன சொல்லுதோ அதன்படி தான் நான் சொல்றேன். உங்களை சிரமப்படுத்தனும்னு நான் என்ன தனியாவா யோசிச்சு சொல்றேன். இந்த மாதிரி நூத்துல ஒரு குடும்பத்துக்கு நடந்துரும் பாத்துக்கங்களேன். ஆறுமாசம்ங்கறது சிரமம் தான் உங்களுக்கு. இருந்தாலும் உங்க நலனுக்காக இதை பண்ணியே ஆகணும் நீங்க. சுடுகாட்டுல குழிமேட்டுல விளக்கு ஆறு மாசத்திக்கி ராத்திரில எரிஞ்சே ஆகணும்!''

"எல்லோரும் ஊத்துக்குளியில பனியன் கம்பெனி வேலையில இருக்கோம். வீட்டுல அப்பாவும் அம்மாவும் மட்டும் தான் ஊருக்குள்ள இருக்காங்க! அவங்க ஆடுகுட்டிகளை வச்சுட்டு பகல்ல காட்டுல மேச்சுட்டு வந்து துளி சோறாக்கி தின்னுட்டு படுத்துருவாங்க! ஏனுங்க.. இல்ல கேக்கேன் இதுக்கு தனியா வேறொரு ஆளை வச்சு பத்த வச்சா சரிப்படுமுங்ளா?''

"குழிமேட்டுல வௌக்கு எரியணும் அவ்வளவு தானப்பா! யாரு பத்த வச்சா என்ன?''

"அப்பச் செரி உடுங்க, ஊருக்குள்ள கிட்டானாசாரி இருக்காரு! தெனம் ஒரு கோட்டரு வாங்கிக் குடுத்து ரெண்டு மாசத்திக்கி இவ்வளவு வாங்கிக்கன்னு
சொன்னா சேரீன்னுடுவாரு. ஊட்டுல தண்ணியப் போட்டுட்டு கிடக்குறதுக்கு அங்க போயித் தான் படுத்து எந்திருச்சுட்டு வரட்டுமே! அதும் கண்ணா செத்த குழி மேட்டுல கட்டடமாட்ட கட்டிஉட்டிருக்கானுக அவ பசக. அதுல தாயக்கரமே ஆடீட்டு இருப்பாங்க ஆடுமேய்க்கப் போறவங்க! அதுல ஜம்முனு படுத்துக்குவாப்ல கிட்டனாசாரி. அப்பச் செரீங்க சோசீகார்ரே! அப்புறம் வேற எதாச்சிம்  இருக்குங்ளா?''

"அதான் ஆறு மாசம் முடிஞ்சு ஒரு ஐயரைக் கூட்டிட்டு வந்து வீட்டுல ஒரு பூசை போட்டுக்கங்க! செரி அப்ப போயிட்டு வாங்க!'' ஜோதிடர் சொல்ல வணக்கம் வைத்து விட்டு கிளம்பினார்கள் இவர்களும்.

சுப்பிரமணி மீசையை மழித்துக் கொண்டான். உறவுச்சனம் முச்சூடும் காக்காயிக்கி வீட்டின் கூரை மீது சோறு வீசின. காகங்கள் கூட்டமாய் பறந்து வந்து சோறெடுத்து உண்டன. உறவுச்சனம் சில சாப்பிட்டானபின் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பின. மாலை மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் வீட்டின் முன் போடப்பட்டிருந்த சேர்களில் பல காலியாகக் கிடந்தன. அழுகை ஒலி அந்த வீட்டில் நின்றிருந்தது.

கிட்டானாசாரி 'அவள் பறந்து போனாளே! என்னை மறந்து போனாளே! நான் பார்க்கும் போது ..' என்று பாடியபடி லுங்கியை மடித்துக் கட்டியபடி எழவு வீட்டுக்கு வந்தார். மேல் சட்டை அணியாமல் துண்டை மட்டும் தோளில் போட்டிருந்தவரின் நெஞ்சாங்கூட்டு எலுப்புகள் வெளியே முட்டிக் கொண்டு தெரிந்தன.

வாசலுக்கு வந்தவர் பாடலை நிறுத்திக் கொண்டு துண்டை நீட்டியபடி வந்து எல்லோரிடமும் இழவு வாங்கிக் கொண்டு சேரில் அமர்ந்தார்.

'பாட்டு பாடீட்டு வந்தீங்களே.. இன்னேரத்துலயே துளி நனைச்சிட்டீங்களாட்ட இருக்குதா!' என்று சுந்தரன் பேச்சுக் கொடுத்தான். அதை அவர் கண்டு கொள்ளாமல் 'எப்பிடி, பாப்பாக்கு இப்பிடி இருக்குதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியாமயே போயிடுச்சா? கண்ணுக்கு முன்னால ஓடீட்டு இருக்காப்லையே இருக்கப்பா சுப்பிரமணி! பள்ளிக்கோடத்துக்கு ரெண்டும் சோடியாத்தான போகும். நான் தான் அந்த கோயல் கல்லுக்கட்டு மேலயே கெடக்கறவனாச்சே! அட முட்டாயி வாங்கித் தின்னுங்க பிள்ளைங்களான்னு பணம் குடுத்தாக்கூட வாங்கிக்காதுக! எங்களுக்கு எங்கப்பன் குடுத்து உட்டுருக்குது அப்பாருன்னுட்டு போவாங்க!'

"காசெல்லாம் யாரு குடுத்தாலுமோ இல்ல தீம்பண்டம் யாரு வாங்கிக் குடுத்தாலுமோ வாங்கிக்கவே மாட்டாளுக ரெண்டு பேரும். அதெல்லாம் அவங்க அம்மா பழக்கம்!'' சுப்பிரமணி துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே கிட்டானாசாரியிடம் சொன்னான்.

"அப்புறம் பாப்பா போன நேரத்தை வச்சி பார்த்தீங்களாடா?''

"அதெல்லாம் பார்த்துட்டோம் அப்பாரு. உங்களைப் பார்க்கத்தான் வரலாம்னு இப்பத்தான் பேசிட்டு இருந்தோம்.''

"எழுவது வயசுக் கெழவனை பார்க்க வரலாம்னுட்டு இருந்தீங்களா? இதென்னடா இது அலும்பா இருக்குது!''

"ஜோசீகாரன் பாப்பா குழி மேட்டுல ஆறு மாசத்திக்கி வௌக்கு பத்த வைக்கணும்னு சொல்லிட்டான். அதும் வெடியும் முட்டும் அணையவே புடாதாம். இதையப் பார்த்துட்டு இங்க உட்கார்ந்துட்டு இருக்க முடியுமா எங்களால? அதான் ..''

ஓவியம்
ஓவியம் மனோகர்

"ஓ! அதான் என்னைய பார்த்து பேசிடலாம்னு யோசனை பண்ணிட்டிருந்தீங்களா? நானு ஊட்டுல படுத்திருந்தா என்ன? சுடுகாட்டுல படுத்திருந்தா தான் என்ன? எம்பட குடிசையில நான் ஒருத்தன் தான வெட்டியாக் கெடக்கேன். நான் போயி பத்த வச்சுட்டு பாப்பா கூட பேசிட்டு படுத்துக்கறேன்! ஒரு தமாசு கேளுங்க நீங்கல்லாம்! ஒரு விசுக்கா இதுக ரெண்டும் பள்ளிக்கோடம் உட்டு வலப்பைய தோள்ல போட்டுட்டு வந்துதுக சாயந்திரம். ரெண்டும் கையில வேகவைக்காத பனம்பழம் வேற. போட்டு இசிச்சிட்டு வருதுக. கன்னமெல்லாம் மஞ்சளா பனம் பழம் அப்பியிருந்திச்சு. அடப் பிள்ளைங்களா பனம்பழம் தின்னா காத்தால ஜலவாதிக்கி போனீங்கன்னா மஞ்சளா மஞ்சளா வருமே புள்ளைங்களா! அப்பிடின்னேன். பெரியவ தான் டக்குனு சொல்றா. ‘வந்தா வந்துட்டு போவுது அப்பாருன்னு.' சின்னவ தான் ‘ஐயோ அப்பிடியா அப்பாருன்னுட்டா!' ஆமாம்பிள்ளைன்னு வெளையாட்டா ஆரம்பிச்சேன்.. பாருங்க..
சின்னவளை இழுத்துட்டு பெரியவ, ‘அந்தப்பாரு புளுகுது'ன்னு கிளம்பிட்டா!''

"சின்னவ பெரியவளை மிஞ்சுவாளுங்க அப்பாரு! சரி தெனமும் ஒரு கோட்டரு உங்களுக்கு வந்துரும். அதும் போக தெனம் கையில நூறு ரூவா நாங்க தந்துடறோம். சரிங்ளா அப்பாரு!''

"எப்ப இருந்து வௌக்கு பத்த வைக்கணும்? இத்தினீக்கூண்டு வௌக்கா இருந்தா எத்தன விசுக்காப்பா எந்திரிச்சுப் போயிப் போயி எண்ணெயை ஊத்துறது? அப்புறம் காத்தடிச்சா வௌக்கு அணைஞ்சி போகும்!''

"வௌக்கெல்லாம் பெருசா வாங்கிட்டு வந்துட்டோம் அப்பாரு. குழி மேட்டு கிட்ட
சின்னதா ரெண்டு பனையோலை வச்சு கூடாரமாட்ட பண்ணிட்டு வந்துட்டோம். இன்னிக்கிருந்தே கணக்கு தானாம்''என்றான் சுந்தரன்.

"சரி எனக்கு ஆறு மாசம் நைட் டூட்டி போட்டுக் குடுத்துட்டீங்க ரெண்டு பேரும்? நானும் தானப்பா பாஞ்சி வருசம் மின்னாடி சிறுவலூர்ல கருப்பட்டி சொசைட்டிக்கி ராக்காவலுக்கு போனேன். அது ஒரு மூனு வருசம் போயிருப்பேன் மின்ன. இருட்டு கட்டுறப்ப வௌக்கு பத்த வச்சிடணும் அப்படித்தான?''

"ஆமாங்கப்பாரு, எங்காச்சிம் ஒரு நாள் கூடத் தவறாப்புடாது பாத்துக்கங்க. தண்ணியப் போட்டுட்டு பகல்ல எங்காச்சிம் பீஸ் போயிட்டீங்கன்னா அப்புறம் எங்களுக்குத் தான் துக்க வெனைக வந்து சேர்ந்துரும் பாத்துக்கங்க''

"இப்ப வர்ற சரக்குக எங்கப்பா பீஸ் போற மாதிரி இருக்குது? முழுப்பாட்டிலையும் முடிச்சா தான் எறும்பு கடிச்சாப்ல இருக்கும். சரி எண்ணெய் கேனையும் வௌக்கையும் குடுங்க எடுத்தாந்து. மணி ஆயிட்டே இருக்குதுல்லொ! சுடுகாடென்ன இவத்திக்கா இருக்குது நம்மளுக்கு. போகணுமில்ல ஒண்ணரை கிலோ மீட்டரு!''

"இன்னிக்கி எம்பட பைக்குல போயிக்கலாம் அப்பாரு இன்னஞ் சித்த கழிச்சி. சோறு தின்னுட்டீங்களா? இங்கியே சாப்டுக்கலாம் இன்னிக்கி''

"பாட்டல் வாங்கிட்டு வந்துட்டீங்களா?''

"இருக்குதுங்க அப்பாரு'' என்றான் சுந்தரன். சற்று தெம்பாய் கிட்டனாசாரி நிமிர்ந்து சேரில் அமர்ந்தார்.

ஆயிற்று! முதல் நாள் இருள் சூழ்ந்து விட்ட நேரத்தில் தமிழ்நதி குழிமேட்டில் கிட்டானாசாரி விளக்கு பற்ற வைத்து குப்பிட்டார். ' கண்ணா கட்டடத்துல படுத்துத் தூங்குங்க நல்லா! ரெண்டு மூணு நாளைக்கி சிரமமா இருக்கும் உங்களுக்கு. அப்புறம் பழகிப் போயிரும் அப்பாரு! உங்களுக்கு போர்வை தலயணை எல்லாம் புதுசாவே வாங்கிட்டு வந்துட்டோம்!'' என்று பைக்கிலிருந்து எடுத்துப் போய் கண்ணா குழி கட்டிடத்தின் மீது வைத்தான் சுந்தர்.

கிட்டானாசாரி ஜோப்பிலிருந்து கோட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு திண்டில் ஏறி அமர்ந்தார். அவர் கையில் புதிய டார்ச் லைட் ஒன்றை சுப்பிரமணி கொடுத்தான். டார்ச்சை அடித்துப் பார்த்தவர், 'மொசக் குட்டி ஒருமைலு தூரத்துல ஓடினாலும் பளிச்சுனு தெரியறாப்ல வெளிச்சம் வருதேப்பா!'' என்றார்.

"பொடங்கப்பாரு சாமத்துல வந்து மெரட்டுனா செருப்புலயே
சாத்துவேன்னு சொல்லுங்க!''

‘‘யாரு பொடங்கானா? அதென்ன பாப்பா குழிக்கி பக்கத்துல தான் போன வருஷம் அவனைக் கொண்டாந்து பொதச்சது! இன்னாரம் இத்துப் போயிருப்பான். சரி நீங்க கௌம்புங்கப்பா! அந்த தண்ணிக் கேனை இப்படி வச்சுட்டு போங்க!
சாமத்துல தண்ணித் தாகமெடுத்தா மடக்கு மடக்குனு குடிப்பேன்!'' என்றவர் கோட்டர் பாட்டில் மூடியைத் திருகி மூணு சொட்டு மண்ணுக்கு உதறி விட்டு அண்ணாந்து குடித்து முடித்து பாட்டிலை தூர வீசினார். கேனிலிருந்த தண்ணீரை ஒரு மடக்கு குடித்துக் கொண்டார். நாலு சுளுக்கை எறும்பு கடித்தது போன்று இப்போது போதை ஏறியது. சுப்பிரமணி தன்  பைக்கை கிளப்பிக் கொண்டு செல்ல பின்னாலேயே சுந்தரனும் தன் பைக்கை கிளப்பிக் கொண்டு
சென்றான்.

இரண்டு வண்டிகளும் சென்ற பிறகு மயானத்தில் மயான அமைதி நிலவியது. கிட்டானாசாரி பாப்பா குழி மேட்டைப் பார்த்தார். விளக்கு தள்ளாடி எரிந்து கொண்டிருந்தது. குப்பென அவரது காதுகள் அடைத்துக் கொண்டது போன்றிருந்தது. பன்னாட்டுப் பேச்செல்லாம் கப் சிப்பென்ற அமைதியில் அடங்கி ஒடுங்கிப் போனது.

பொடங்கானின் குரல் அப்போது அவருக்கு கேட்டது.

"பெருசு! நீ குடிக்கப்ப என்னா மசுத்துக்கு மூணு சொட்டு ஊத்துனே நிலத்துல? அதை கொமரன் வாத்தியான் குடிச்சுட்டு மப்புல என்னைய மிதிக்க வர்றான்! பெருசு! எனக்கும் மூணு சொட்டு ஊத்து! நானும் குடிக்கேன்! ரெண்டுல ஒண்ணு அந்த வாத்தியானை பாத்துடறேன் இன்னிக்கி!''

"சரக்கு காலி போடா பொடங்கா! நாளைக்கி வாங்கியாறேன்!''

"பெர்சு! அதான் எனக்குப் புடிக்காது பாத்துக்கோ! கொரவளியில மெதிச்சு கொன்னு போடுவேன் இன்னிக்கி உன்னெ!''

"மிதீடா பாப்பம்?'' போதையில் கிட்டானாசாரி கத்தினார். எதற்காக இப்படி கத்துகிறோமெனத் தெரியவில்லை அவருக்கே.

000

காலையில் கிட்டானாசாரியை பார்த்துப் போக வந்த சுந்தரன் கண்ணாயா திண்டில் போர்வையும் பெட்ஷீட்டும் கிடப்பதை பார்த்து விட்டு அப்பாருவை கூப்பிட்டுப் பார்த்தான். ஆள் அரவம் எதுவுமில்லாமல் இருக்கவே நேராக அவர் குடிசைக்கே வண்டியை ஓட்டி வந்தான். குடிசையினுள் கிட்டானாசாரி காய்ச்சலில் பினாத்திக் கொண்டு கிடந்தார்.

"என்னப்பாரு ஆச்சு?'' என்று சப்தமாய் சுந்தரன் கேட்டான்.

"பொடங்கான் என்னை மிதிச்சுப் போட்டான்டா பையா!'' என்றார்.

"டாக்டருகிட்ட கூட்டீட்டு போகட்டுமா உங்களை?''

"வேண்டாண்டா பையா! ரெண்டு மணி நேரம் படுத்திருந்து எந்திரிச்சா சரியாப் போயிடும்''

"சேரியப்பாரு அப்ப மத்தியானமா வர்றேன் நானு'' சுந்தரன் சொல்லி விட்டு குடிசையை விட்டு வெளியேறினான்.

"நானென்ன இவனுக வெச்ச ஆளுக்காரனா? இவனுக குடும்பம் நல்லா இருக்கோணுமின்னா இவனுங்க தான போயி சாமத்துல சுடுகாட்டுல குக்கியிருக்கோணும்! எனக்கென்ன வந்திச்சி? பொழுதோட பாட்டலு அவுக்கறானுங்களாம்! இவனுங்க அவுப்பானுங்கன்னு நாயி காத்திருந்தாப்ல தெனமும் உக்கோந்திருக்கோணும் நானு? ஆளப்பாரு சோளக்காட்டுல ங்கொப்பன் தன்னானா!''

பிப்ரவரி, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com