இந்த மாடுக என்னமா பேசுது. இதுகள மேய்க்கிற உங்களுக்குதே பேசத் தெரியுறதில்லே‘ அப்பாவை ஊர்ப்பொடியன்கள் மேய்ச்சல் காடுகளில் இப்படித்தான் கேலிச் செய்வார்கள். இதற்காக அப்பா ஒரு காலமும் கோபித்துக்கொண்டதில்லை. இந்தப் பொடியன் என்ன அழகா பேசுறான் பார், எனப் பார்த்தவராய் இருப்பார். சரளமாகப் பேசுபவர்களைக் கண்கொட்டி பார்ப்பார். யார் பேசுவதும் அவருக்குப் பிடிக்கவே செய்யும். அவர் பேச்சுதான் அவருக்குப் பிடிப்பதில்லை.
அப்பாவுக்குத் தாத்தா சூட்டிய பெயர் சுப்பையா. உறவுக்காரர்கள் சுப்பன் என அழைப்பதாக இருந்தார்கள். அப்பாயி, பெரியப்பா, பங்காளிகள் எல்லாரும் சுப்பா, என்று அழைத்து வந்தார்கள். ஊரார்கள் அழைப்பது ஊமையன் என்று. அதற்கேற்ப, அப்பாவும் 'அடேய் ஊமைய்யா' எனக் கூப்பிடுகையில் திரும்பிப் பார்த்து, இதுதான் தன் பெயரென ஏற்றுக்கொள்கிறவராக இருந்தார். ஊரில் வாய்ப்பேச முடியாதவர் மூன்று நான்கு பேர் இருந்தார்கள். அவர்கள் யாரும் ஊமையன் என அழைக்கப்படாமல் அப்பா அப்படியாக அழைக்கப்படுவதை நினைக்கையில் அம்மாவுக்குக் கண் மண் தெரியாமல் கோபம் வரும். ‘ யாரும் உங்கள ஊமைய்யானு கூப்பிட்டா திரும்பிப் பார்க்காம நடங்க‘ என அம்மா அவருக்கு வகுப்பெடுப்பார். அப்பா அப்போதைக்குச் சரியென்பார். ஆனால், ஊமைய்யா, என யாரேனும் சத்தம் கொடுத்தால் அவரையும் அறியாமல் திரும்பிப் பார்ப்பதில் மீளாதவராக இருந்தார்.
அப்பா ஒன்றும் ஊமையல்ல. அவரது நுனி நாக்கு சற்றே தட்டைக்கட்டி இருந்ததில் ல, ழ, ள - வை அவ்வளவாக உச்சரிக்க முடியாதவராக இருந்தார். இதை வைத்துதான் ஊரார்கள் அவரை ஊமையன் என அழைத்திருக்கிறார்கள். அப்பாவும் ஊமையனாகியிருந்தார்.
அப்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஊரில் படிக்காத பாமரர்கள் பலர் இருந்தாலும் படிக்காதவரென அப்பட்டமாக தெரிவது அப்பாவிடம்தான். அண்ணா, அண்ணாவென அப்பாவையே சுற்றிவரும் அத்தை படிக்காமல் போனதற்கும்கூட காரணம் அப்பாதான். அப்பா பள்ளிக்கூடம் போயிருந்தால் அத்தையும் போயிருப்பாள், என்பது எனது சமீப கண்டுபிடிப்பு.
அப்பா சிறுவனாக இருந்த காலத்திலேயே ஊருக்குள் பள்ளிக்கூடம் வந்திருக்கிறது. பள்ளிக்கூடத்தின் கல்வெட்டு அப்படியாகத்தான் சொல்கிறது. அது ஊரின் மையத்திலில்லாமல் ஊருக்கும் வெளியே வெகுதொலைவில் இருந்திருக்கிறது. ஏன்ப்பா படிக்கலனு, அப்பாவைக் கேட்டால், ‘பர்ரிக்கொடம் தொரவா இருந்துச்சு. அவ்ரோ நெட்டுக்கு என்னார போவ முடிர ‘ என்பார். அப்பாவுக்கு ல என்பது ர என்றே வரும்.
அவரது இந்த பதில் எனக்கு வியப்பாக இருக்கும். அப்பாவுக்குத் தூரமோ, உயரமோ மலைப்பில்லை. ஏன் ஆழம் அகலம் கூட அவரைப் பொருத்தவரைக்கும் ஒரு தாண்டுதான். அப்பாவால் முடியாத வேலையென்று ஒரு வேலை ஊரில் இருந்ததில்லை. அப்பாவின் முரட்டுத் தனத்துக்கு எந்த வேலையும் தவிடுபொடிதான். முரட்டுத்தனம் என்பது அவரது குணமாக இருந்தது. அதை வைத்து அவரது இளமைக் காலம் எப்படியாக இருந்திருக்குமென அவ்வபோது அசைபோட்டு பார்த்துக் கொள்வேன். வளர்ப்பவனுக்கும் அடங்காத கோண்டி கன்றுக்குட்டியைப் போலதான் இளமையில் அப்பா இருந்திருக்க வேணும்.
நன்றாக மரம் ஏறக்கூடியவர் அப்பா. வாது இல்லாத தென்னை, பனை மரங்களில் கால்களால் உந்திக்கொடுத்து உச்சிக்கு ஏறுவார். அவர் மரம் ஏறுவது தரையில் கங்காரு நடப்பதைப் போலிருக்கும். அப்பாவின் தேசிய உடுப்பு பட்டாபட்டி டவுசர். அதற்குள் வெத்திலை முடிச்சு, புகையிலை பொட்டலம், சில்லறைக்காசுகள்...என சகலமும் வைத்திருப்பார். பின் இடுப்பில் நுங்கு சீவும் சூரிக்கத்தியைச் செருகிக்கொண்டு, மரத்திலிருந்து நுங்கு, தேங்காய்களை வெட்டி கீழே இறக்கிவிட்டு இறங்காமல் அந்த மரத்திலிருந்தபடியே அடுத்த மரத்திற்குத் தாவுவார். கரணம் தப்பினால் மரணம் என்பதாகவே அவரது தாவுதல் இருக்கும். மரத்தின் மட்டைகளைப் பிடித்துக்கொண்டு தாவுகிறவர் குரங்கைப் போல ஒரு தாவுத்தாவி மரத்தின் தண்டைப் பிடித்துக் கொள்வார். அப்பா, இதைக் குரங்குத் தாவுதல் என்பார். இதை அவர் இயல்பாக செய்தாலும் ஊரும் தெருவும் அவரை சாகசக்காரராகவே பார்க்கும். ஊர் கண்கொட்டி வேடிக்கை பார்ப்பதை அம்மா கண்களை மூடிக்கொண்டு அவளது பிறந்த வீட்டு ஆனந்தப்பேச்சி குலதெய்வத்தை வேண்டி நிற்பாள். இந்த மனுசன் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறாரோ, எனக் கேட்பதைப்போல அவரது பார்வை இருக்கும். அம்மா திட்டுவதை அப்பா காதினில் வாங்கிக்கொள்ளமாட்டார். அப்பாவைப் பெற்று வளர்த்த அப்பாயி சொல்லுக்குச் சற்றே செவிமடுப்பார். அவர் மரமேறி இறங்குகையில் அவள் பெரிய சிம்புக்குச்சியை எடுத்துக் கொண்டு விளாசுவதைப் போல வருவாள். ‘ அவன் எறங்கி வரட்டும். அவன நான் என்ன செய்றேனு பாரு ‘ என வரிந்துகட்டிக்கொண்டு நிற்பாள்.
அந்த வயதிலும் கை நீட்டி அடிக்கும் உரிமையை அப்பாயிக்குக் கொடுத்திருந்தார். அப்பா சிறுவனாக இருக்கையில் அவரை எப்படியெல்லாம் அப்பாயி அடித்திருப்பாள், என்பதை அகக்கண் கொண்டு பார்ப்பவனாக இருந்தேன். அப்பாயி அடிப்பது அப்படியொன்றும் வலித்துவிடாது. அப்பாவின் தாட்டியான உடம்புக்கு எலும்புக் கூடமாகக் கொண்ட அப்பாயியின் ஓங்கிய அடி தட்டிக் கொடுத்து தடவிக் கொடுப்பதாக இருக்கும். அவளது உடற்தினவு அந்தளவிலேயே இருந்தது.
ஒரு நாள் பனை மரத்திலிருந்து இறங்கி வந்த அப்பாவை அவள் நாலு சாத்துச் சாத்தினாள். அவள் அடிக்கையில் அப்பா முதுகை வளைந்துகொடுத்து சிரித்தபடி கால்ச்சட்டைக்குள் கையை விட்டு வெற்றிலை முடிச்சை பிரித்து, ஒன்றரை வெற்றிலையை எடுத்து காம்பைக் கிள்ளிக்கொண்டிருந்தார். அவரது செய்கை எனக்கும் ஊருக்கும் வேடிக்கையாக இருந்தது.
அப்பாவை அவள் அப்படியாக அடிப்பது அம்மாவுக்குப் பிடிக்காது. “என்னடி உன் புருசன அடிக்கிறா, பார்த்துக்கிட்டு நிற்கே' என ஊரார்கள் முடுக்கிவிடுவார்கள். அம்மா, அப்பாயியின் குறுக்கே பாய்ந்து அடிப்பதைத் தடுத்தாள். ‘ என் புருசன அடிக்க நீ யாரு?‘ எனக் கேட்டு சண்டைக்கு நிற்பாள்.
‘ என் புள்ளய நான் அடிக்கேன். அதைக் கேட்க நீ யாரடி? ‘ அப்பாயி பதிலுக்கு அம்மாவிடம் சண்டைக்கு ஏறுவாள். இருவருக்குமிடையே மாமியார் மருமகள் சண்டை களைக் கட்டும். அப்பாயி அளவிற்கு அம்மாவுக்குப் பேச தெரியாது. உன் அளவுக்கு என்னால் பேச முடியாதென தோல்வியை ஒப்புக்கொண்டவளாட்டம் ஒட்டுத்திண்ணையில் குந்திவிடுவாள். இந்தச் சண்டை சச்சரவெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். மறுநாள் அப்பாயி சொற்பேச்சுக்கு ‘இம்‘ போடுகிறவளாக அம்மா ஆகிவிடுவாள்.
அப்பாவிற்கு இரண்டு அண்ணன்கள். அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுவிடுகிறவராக அப்பா இருந்தார். அப்போது அப்பா வாலிப பையனாக இருந்த காலம். ஒரு நாள் வீட்டுத் தோட்டத்திற்குள் ஆடுகள் நுழைந்து வாய் வைத்துவிட்டன. அப்பா ஆடுகளை அலங்கப்புலங்க விரட்டியடித்திருக்கிறார். ஆடுகள் திரும்பத் திரும்ப நுழைந்திருக்கின்றன. பெரியப்பா தொலைவில் நின்றவராய், “ஆட்டோட காதுகள புடிச்சி அறுடா. அப்பதான் இந்த ஆடுக திரும்ப வராது', என வாய்ப்போக்காக சொல்ல, அப்பா அப்படியே செய்துவிட்டார். ஆடுகள் கத்திக்கொண்டு வளர்த்தவர் வீட்டுக்கு ஓட, மறுநாள் ஊர்ப் பஞ்சாயத்தாகி விட்டது. ஆட்டுக்காரர், குதி குதியென குதித்து, அபராதம் கேட்டிருக்கிறார். ஊரும் தண்டம் வைக்கச்சொல்லி பஞ்சாயத்து வரிந்துகட்ட, பஞ்சாயத்திற்குச் சென்ற பெரியப்பா, ‘அட விடுங்கப்பா. ஊமையன் தெரியாத் தனமா செஞ்சுப்புட்டான். அவன நான் கண்டிச்சிக்கிறேன். இதுக்குப் போயி தண்டம் கிண்டமென. விட்டுத்தொலைங்க. பய இளமைத்துடிப்புல பண்ணிப்புட்டான்,' எனப் பத்தாம்பதவுசாக பேசி பஞ்சாயத்தின் கோபத்தை அம்சடக்கியிருக்கிறார். பஞ்சாயத்து முடிந்து வீடு திரும்புகையில், “ஆடு மாடு வளர்க்கிறவங்க இனி வெள்ளாம கொல்லைக்குள்ள ஆட்ட விடாம பார்த்துக்கோங்க‘ எனச் சொல்லி திரும்பியிருக்கிறார் பெரியப்பா. அதன்பிறகு, ஊரார்கள் ‘ ஆடு மாடுக பத்திரம், ஊமையன் கொல்லைக்குள்ள எறங்குனீச்சி. காதுக போயிரும்...‘ எனச் சொல்லி வளர்க்குமளவிற்கு அப்பா பிரபல்யமாகியிருந்தார். இப்படி எதையும் முரட்டுத் தனமாக செய்துவிடும் அப்பா பள்ளிக்கூடம் தொலைவு என்று சொன்னது எனக்குப் புதிராக இருந்தது.
இந்தக் கேள்வியை நான் அவ்வபோது அவரிடம் கேட்பவனாக இருந்தேன். பள்ளிக்கூடம் இருந்த தூரத்தை அவர் 'எட்டி' என்றும் 'தொரவு' என்றும் சொல்லி வந்தார். அப்பா சொல்கிற தொலைவு, மேற்காகவும் மேலத் தெருவாகவும் இருந்தது. இப்போது பள்ளிக்கூடம் ஊர் மத்தியில் இருக்கிறது. அப்பா காலத்தில் இந்தப் பள்ளிக்கூடம் ஊர் மையத்தில் இருந்திருந்தால் அப்பா இரண்டெழுத்துகளும் அத்தை ஒன்றரை எழுத்துகளும் படித்திருப்பார்கள்.
அப்பா பற்றி பேச்செடுக்கும் யாரும் அலுக்கைத்தூள் சம்பவத்தை நினைவுகூராமல் செல்வதில்லை. அவரது படிப்பறிவை ஊரார் கேலி செய்து சிரிக்குமளவிற்கு அந்தச் சம்பவத்தை அவர் நிகழ்த்திவிட்டிருந்தார். யாராலும் அத்தனை எளிதில் மறக்க முடியாத சம்பவமாக அது இருந்தது. அலுக்கைத்தூள் சம்பவத்தைச் சொல்கையில் அப்பா அத்தனை அமைதியாக கேட்டுக்கொள்வார். அவரையும் அறியாமல் மெல்லிய சோகம் கண்களில் நிழலாடும். சம்பவத்தைச் சொல்லி முடிக்கையில் அவர்களோடு சேர்ந்து அப்பாவும் சிரிப்பார். ஆனாலும் வெளியில் காட்டமுடியாத ஓர் அவமானம் முகத்தில் தளும்பியாடும்.
அலுக்கைத்தூள் கதையை யாரேனும் சொல்கையில், அந்தச் சம்பவத்தை நிகழ்த்திய அப்பாவின் முதுகில் நான்கடி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அப்பாயி. ‘ புள்ள பெத்து வளர்த்திருக்கேன் பாரு, புள்ள. உலக்கையாட்டம். மூளைனு ஒண்ணு இருந்திருந்தா இப்படியொரு வேலய செஞ்சிருப்பானா,..‘ என, இப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்ததைப் போல காதத் தூரத்துக்குத் திட்டித் தீர்ப்பாள். அவள் அடிக்கையில் அப்பா ஒரு நாளும் எதிர்க்கவோ தடுக்கவோ செய்ததில்லை. அவர் சிரித்தபடியே உட்கார்ந்திருப்பார். சில நேரம் ‘ இம், அந்த எடத்துரதே அரிக்குது. இன்னும் ரெண்டு சாத்து சாத்து ‘ என்பார். அந்த இடத்தில் மேலும் நான்கு சாத்துச் சாத்துவாள் அப்பாயி. அவள் அப்பாவைக் கை நீட்டி அடித்துவிட்டு, அத்தோடு விட்டுவிடுவதில்லை. அடித்த இடத்தை ஒத்தடம் கொடுப்பதைப்போல தடவிக் கொடுக்கவும் செய்வாள்.
எங்கள் ஊர் மானாவாரி பூமி. பண்டிகைக் காலங்களைச் சமாளிக்க ஊரார் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கீழைச்சீமைக்குச் சென்று வருவார்கள். கீழைச்சீமை என்பது தஞ்சைக்குக் கிழக்குப் பகுதி. பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுளை, ஏனாதி, ஒரத்தநாடு,..என அதைச் சுற்றியுள்ள ஊராக இருந்தது. களைப்பறிப்பு, சஞ்சாய் அறுப்பு, குத்தகை அறுப்பு எனப் பேசி முடித்து நெல் மூட்டைகளைக் கட்டிக்கொண்டு ஊர் திரும்புவார்கள். தீபாவளி என்றால் நடவு. பொங்கலுக்கு அறுப்பு. பத்து மூட்டைக்கு ஒரு மூட்டை நெல் என்பது அவர்களது நியாயக் கூலியாக இருந்தது.
அத்தை அதுநாள் வரைக்கும் கீழைச் சீமைக்குப் போனதில்லை. அப்பாயி, அவளை வீட்டுக்கும் வெளியே அனுப்பியதில்லை. அவள் வயதையொத்த பெண்கள் கிளம்பியதும் அத்தையும் கிளம்பிவிட்டாள். மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாத அப்பாயி அப்பா, அம்மா கிளம்பியதும் அவர்களினூடே நம்பி அனுப்பி வைத்தாள்.
அத்தைக்கு இது புது அனுபவம். வீட்டில் பொங்கிக்கொண்டு வீடு வாசலைக் கூட்டிப் பெருக்கிக்கொண்டு வீடே உலகமென இருந்தவளுக்கு வயலும் வெயிலும் நெற்கதிரின் வெட்கையும் அவளது உடம்பை ரணப்படுத்தியிருக்கிறது. அவள் அப்பாவிடம் சொல்லி, ‘ அண்ணா, ஒடம்பு வலியாருக்குண்ணா. அலுக்கெ தூளு வாங்கிட்டு வாண்ணா‘ எனச் சொல்லி அனுப்பியிருக்கிறாள். அப்பாவும் கடைக்குச் சென்று ஒரு பொட்டலம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
அன்றைக்கு யாருக்கும் எதேனும் ஒன்றென்றால் அவர்கள் முதலில் உட்கொள்வது அலுப்பு மருந்துதான். ஊரார்கள் அதை அலுக்கெ தூளு, என்பார்கள். அப்பொழுது மின் விளக்குகள் பெரியளவில் இல்லாத காலம். அரிக்கேன் விளக்கும், டார்ச் விளக்கும்தான்.
அத்தைக்கு இருந்த அசதியில் ஒரு தம்ளரில் அலுக்கைத் தூள் பொட்டலத்தைப் பிரித்துக் கொட்டி, தூளைச் சுடுதண்ணீரில் கலக்கி, அன்னார்த்திக் கொண்டாள். நடுராத்திரியில் அத்தைக்குத் தாங்கமுடியாத வயிற்று வலி. சொருகல் கொண்டதைப் போல வயிற்றுப் போக்கு. வேலைக்கு வந்த இடத்தில் காட்டுக்கும் படுக்கைக்குமாக இருந்திருக்கிறாள். போக்கு குறைந்தபாடில்லை.
சற்றுநேரத்தில் பறித்து மூன்று நாட்களான கீரையைப் போல சுணங்கிப்போனாள். இதற்குமேலுமிருந்தால் உயிரைக் கைகழுவ வேண்டிருக்குமென மாட்டு வண்டியைப் பூட்டிக்கொண்டு அத்தையை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். மருத்துவர் முதல் சிகிச்சை கொடுத்து, முந்தைய நாள் சாப்பாட்டு விஷயங்களைக் கேட்டிருக்கிறார். உடம்பு அசதியாக இருந்ததும் அதற்காக அலுக்கைத் தூள் கரைச்சிக் குடித்ததையும் அத்தை சொல்லியிருக்கிறாள். அந்தப் பொட்டலத்தை எடுத்துவரச் சொல்லி பார்த்திருக்கிறார் மருத்துவர். அது அலுக்கை தூள் அல்ல. அரப்புத் தூள்.
அத்தை கவலைக்கிடம் அளவிற்குச் சென்றுவிட்டாள். அத்தையை வேலைக்கு அழைத்துவந்த கங்காணி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்திருக்கிறார். ஊரார் அப்பாவைத் திட்டுவதும், தலையில் கொட்டுவதும் வசைபாடுவதுமாக இருந்திருக்கிறார்கள். படிக்காததன் விளைவை முதன்முறையாக உணர்ந்த தருணம் அதுவாகவே இருக்கும். அலுக்கைத் தூளுக்குப் பதிலாக அவர் வாங்கிக்கொடுத்த அரப்புத் தூள் பொட்டலத்தில் எழுதியிருந்த எழுத்துகளைப் பார்த்தபடி இருந்திருக்கிறார். அவரது முகம் அவமானத்தால் கிறங்கி, அவரைச் சுற்றிலும் அலுக்கைத் தூள் வாசனையாக இருந்திருக்கிறது.
இரண்டாம் நாள் சிகிச்சையில் அத்தை உடல் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அத்தை புரண்டுப் படுக்கவும் எழுந்து உட்காரவுமாக இருந்திருக்கிறாள். உயிர் திரும்பக் கிடைத்துவிட்ட ஆயாசத்தில் பெருமூச்செரிந்தார். வேலை தளத்தில் அத்தை இந்த வேலைக்கு ஆகமாட்டாளென்று சொல்லி, அப்பாவுடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அம்மா கூடவே கிளம்பியிருக்கிறாள். முன் பணமாக கை நீட்டி வாங்கிவிட்ட கடனை அடைக்க அம்மா ஒரு வாரம் இருந்து வேலை பார்க்க வேண்டியதாகியிருந்தது.
அப்பாயிக்கு அத்தை என்றால் உயிர். வேலைக்குச் சென்ற நாலாம் நாளிலேயே வீடு திரும்பிவிட்ட அத்தையைப் பார்த்து என்னவோ ஏதோவென்று ஓடி வந்தவள் அத்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு பரிதவித்தாள். வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அத்தை, அண்ணன் அலுக்கைத் தூளுக்குப் பதிலாக அரப்பு தூள் வாங்கிகொடுத்ததையும் அதைக் குடித்துவிட்டு, முடியாமல்போய், செத்து பிழைத்து வந்திருப்பதையும் அத்தை சொல்ல அப்பாயி துடிதுடித்துப் போனாள்.“ அடி நீ சாம்பாதிச்சா நான் வயித்த கழுவணும். ஒன்னைய இவன் கொல்லப் பார்த்திருக்கிறானே, தடிப்பய...' அத்தையைக் கட்டிப்பிடித்து குலுங்கி அழுது தீர்த்தவள், அப்பாவை வசைச் சொற்களால் திட்டித் தீர்த்துவிட்டாள். அவரது முதுகில் நான்கைந்து அடி வைத்து, அவரது தலை மயிற்றைப் பற்றி குலுக்கி எடுத்துவிட்டாள்.
ஊரார் தடுத்தும் அவள் விடுவதாக இல்லை. அம்மா, ஒரு வேளை இருந்திருந்தால் அப்பாயியால் அவ்வளவு அடி அடித்திருக்க முடியாது. அத்தை குறுக்கே விழுந்து மறித்தும் அவள் விடுவதாக இல்லை. அடிவாங்குவதற்கென்றே நேர்ந்துவிடப்பட்டவரைப் போல அப்பா அடிவாங்கிக்கொண்டிருந்தார். அடியை விடவும் அப்பாயியின் வசைப்பாடு செவிகளில் அறைவதாக இருந்தது. அப்பாவால் அதற்கும் மேல் அந்த இடத்தில் நிற்கவில்லை. முகம் ஒடுங்கி, அந்த இடத்திலிருந்து மெல்ல நடக்கத்தொடங்கினார்.
அத்தை சொன்னாள், ‘ ஆயா, அண்ணே கோபிச்சிகிட்டு போவுது‘ அப்பாயி, வாசலில் நின்றபடி அப்பாவை வெறிக்கப் பார்த்தாள். பின்னால் ஓடியபடி கெஞ்சிக் கூப்பிட்டாள். அப்பா நிற்பதாக இல்லை. எனக்கென்று ரோசமும் மானமும் இருக்கிறது, எனச் சொல்லும்படியாக தன் போக்கில் நடந்தார். அப்பா கோபித்துக்கொண்டு போவதைக் கண்டதும் அப்பாயி அப்பாவைத் திட்டுவதை நிறுத்திவிட்டு அத்தையைத் திட்டத் தொடங்கினாள். ‘ ஒனக்கு அறிவுகிறிவு இருக்காடி. அவன்தான் அரப்ப வாங்கிக்கொடுத்தான். ஒனக்கு எங்கேடி போச்சு புத்தி. புத்திதான் கெட்டுப்போச்சு, நாக்குமா செத்துப்போச்சு. மூக்கு இருந்துச்சா அவுஞ்சுப் போச்சா. அரப்புக்கும் அலுக்கெ தூளுக்கும் வித்தியாசம் தெரியாமலா அதெ நீ கலக்கிக் குடிச்சே....‘ என்று அத்தையை வசைபாடினாள். அத்தை அப்பாயி பேசும் பேச்சுக்குக் காதைக் கொடுக்காமல் அப்பா போகும் திசையைப் பார்த்தவளாக இருந்தாள்.
அன்று, இரவாகியும் அப்பா வீடு திரும்பவில்லை. அப்பாயி ஒரு சுற்று ஊர்த்தெருவுக்குள் அப்பாவைத் தேடிக்கொண்டு வந்தாள். அத்தை ஒரு பக்கமாகத் தேடினாள் . ‘எங்கே ஏ புள்ள போயிருக்கப்போறான். இங்கேதான் எங்கேயாவது இருப்பான்‘ எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டவளாய் தேடினாள்.
‘ஏ கெழவி, நீ பெத்தவனாகவே இருக்கட்டும். புள்ளைக்குத் தகப்பனான ஒருத்தன கை நீட்டலாமா? இது ஒனக்கே நல்லாருக்கா. ஒன்ன அவன் திருப்பி அடிச்சா தாங்குற தெம்பு ஒனக்கிருக்கா?‘ ஊர்ப் பெருந்தலைகள் அப்பாயியைத் திட்டித் தீர்த்தார்கள்.
அப்படியாகச் சொன்னவர்களுக்கு ‘பெத்தத் தாய திருப்பி அடிக்கிற புள்ளையாவா நான் வளர்த்து வச்சிருக்கேன்‘ பதிலடி கொடுத்தாள் அப்பாயி.
அப்பாவை டீக்கடை, சாராயக்கடை, பெட்டிக் கடை, சீட்டாட்டக்களம், பேருந்து நிறுத்தம்,.. என எங்குமாகத் தேடினாள். அப்பாவை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நேரத்துக்கு எப்படியும் வீடு வந்திருப்பாரென, வீட்டுக்குத் திரும்பிவந்தாள். வீட்டுக்கு அப்பா வந்திருக்கவில்லை. அவளுக்குள் மடிப்பு மடிப்பாக கவலை கட்டின. அப்பா கோபித்துக் கொண்டு போவதற்குக் காரணமான அத்தையை வசைபாடினாள். பதிலுக்கு அத்தை எதிர்பாடினாள். “அவன்தான்டி ஏம்புள்ள. எப்பவாவது என்னை அவன் பதிலடி அடிச்சிருப்பானா? எதிர்த்துப் பேசிருப்பானா? ஒனக்காக அவனை நான் அடிச்சிப்புட்டேனே. என் புள்ள எங்கே இருக்கானோ, எப்பா, சுப்பா...' எனக் கூப்பாடு போட்டவளாய் அரிக்கேன் விளக்கை ஏந்திக்கொண்டு தெருவுக்குள் இறங்கி, அப்பாவை வளர்த்த கதையைச் சொல்லி தேடத் தொடங்கினாள்.
எங்குத் தேடியும் அப்பாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னை ஒரு கணம் குனிந்துபார்த்த அப்பாயி, “ அப்பனைக் காணோமென பதப்புக்கிதப்பு இருக்கானு பார்த்தீயா' எனச் சொல்லியவளாய், என் முதுகில் ரெண்டு அடி வைத்தாள். பிறகு அவளே என் முதுகைத் தடவிக் கொடுத்து, கன்னம் உருவி முத்தம் கொடுத்தாள். அப்பாயி எப்பொழுதும் அப்படித்தான். பாசத்தைக் கோபத்தோடு காட்டுகிறவள்.
நீண்ட நேரம் தொட்டு தேடிய எங்களுக்குக் களைப்பு வந்திருந்தது. கொஞ்சநேரம் இளைப்பாறலாமென பள்ளிக்கூடத்தை நாடினோம். பள்ளி திண்ணையில் ஆளரவம் தெரிந்தது. அப்பாதான்! குக்கிட்டு உட்கார்ந்திருந்தவர் முகவாய்க்கு ஒரு கையைக் கொடுத்திருந்தார்.
வியர்வை ஈரத்தில் கசகசக்கும் உடலோடு பரிதவிக்க ஓடினாள். ‘ எப்பா, சுப்பா..., நீ இங்கேயா இருக்கே. நான் ஒன்ன எங்கெல்லாம் தேடுறது ‘ என்ற அப்பாயியின் குரல் கமறியது.
அவரது கன்னத்தை உருவிக் கொஞ்சிய அப்பாயி, ‘ பின்னே என்னப்பா, அலுக்கெ தூளுக்கும் அரப்புத் தூளுக்கும் வித்தியாசம் தெரியாமலா போச்சு‘ என்றவளாய் அவளது முந்தானையை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டாள். ‘தெரியாமத்தான் ஆயா போச்சு‘ என்ற அப்பா, அவரது முகத்தை இரு கைகளால் பொத்திக்கொண்டு குலுங்கினார்.
அப்பா அழுது அப்பாயி பார்த்ததில்லை. அப்பாவுடன் சேர்ந்து அழும் அப்பாயியை நான் பார்த்ததில்லை.
அப்பாவின் தலைமுடியைக் கோதிக் கொடுத்த அப்பாயி, “ வாப்பா வீட்டுக்கு' என்றாள். அப்பாயி முன்னே நடக்க, அப்பா ஒரு கன்றுக்குட்டியைப் போல நடக்கலானார்.
அண்டனூர் சுராவின் இயற்பெயர் சு.இராஜமாணிக்கம். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் அண்டனூர் கிராமத்தில் பிறந்தவர். கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கட்டுரை, நாவல், சொல்லாய்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், மூன்று குறுநாவல்கள், நான்கு கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இவரது 'நீளநடுக்கோடு' குறுநாவல் ஸீரோ டிகிரி இலக்கியப் பரிசும், 'அன்னமழகி' நாவல் எழுத்து அறக்கட்டளை இலக்கியப் பரிசும் பெற்றன. இவர் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருது, சிகரம், நெருஞ்சி, சௌமா இலக்கிய விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.
ஜனவரி, 2023.