வெள்ளம்!

ஓவியம்
ஓவியம்ரோகிணி மணி
Published on

மதி கெட்டான் சோலைக்கு மேற்கில், ஒரு மலைச்சரிவு இருக்கிறது. அங்குதான் ஸ்டெல்லா தாமஸ், தாமரைப் பாண்டியனிடம் அவன் எதிர்பாராவண்ணம் தனது காதலை வெளிப்படுத்துகிறாள். ஒரு காவியக் கட்டம்.

யூனிட்டார் எல்லோருமே வியப்பிலிருந்தார்கள் என்றால் ஹரிக்கு கிளர்ச்சி இல்லாதிருக்குமா? அவர் அதை வெற்றிகரமாக படம்பிடித்து விட்டதாக நம்பியதுமே மறு கணம் மனதில் வந்தது பாலாவின் முகம்தான். என்னமாய் எழுதியிருக்கிறான். அவன் வாக்கிலிருப்பது சாட்சாத் சரஸ்வதியே தான். அந்தக் கதாநாயகி நீர்நிலைக்கு வருகிற செந்நாய்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தது எப்படி வளைந்து படியிறங்கி நிழலில் அமர்ந்து காதலின் குளிர்கூடிய சொற்களாய் மாறிற்று. இதெல்லாம் மனித பிரயத்தனத்திலேயே இல்லை என்று வரவே, ஹோட்டலுக்கு வந்து சேரும் வரை அவனைப் பற்றியே ஹரி யோசித்துக் கொண்டு வந்தார். எதிர்பார்க்கக்கூடிய ஒரு இடத்தில் மானேஜர் இருக்கத்தான் செய்தார்.

‘‘பாலா போன் செய்தானா?''

 ‘‘ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று தடவை சார். தேள் போல கொட்டுகிறான். அவனால் எனக்கு தினமும் டென்ஷன்...''

ஹரி பார்த்தார்.

 ‘‘இது சினிமா சார். பணம் எப்போது கொடுக்க முடியுமோ அப்போதுதான் கொடுக்க முடியும். அவிழ்த்து வை என்கிறான். அவ்வளவு திமிர் ஆகாது. கொஞ்சமாவது பாடம் கற்றுக் கொள்ளட்டும் என்று தான் ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் தெரியாதது போல இருந்து கொள்ளுங்கள், போதும்.''

ஹரி மானேஜரை ஒருமுறை பார்க்க மட்டுமே செய்தார். அவன் யானையுடன் குஸ்தி போட்டுவிட்டு வந்தது போல இருந்தான். மூச்சே கூட இரைப்பது போல கேட்டது. பொதுவாகவே நாம் இருந்தாலும் இல்லாதது போல இருக்க வேண்டும் என்கிற கோட்பாட்டில் ஒழுகுகிற ஹரி மேலே எதையும் யோசிக்க முற்படவில்லை. மூன்று பெக் ஓட்காவிற்குப் பின்னர் பாலாவின் நினைவு வரவே, அவனோடு எப்போதோ சாப்பிட்ட முட்டை பரோட்டாவை வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டார். எத்தனைக் கதைகள் அவனது மண்டையில் சூறாவளி வீசிக் கொண்டிருக்கும்? மகளின் போன் வந்தது. அவள் தனது எட்டு வயது மகளைப் பற்றி புகார் செய்தாள். கொஞ்சம் பஞ்சாயத்து பேச வேண்டியிருந்தது. ஆனால் பேத்தி துடுக்கு ஆங்கிலத்தில் போனை வைத்துத் தொலைய மாட்டாயா கிழட்டுக் கழுதையே என்று கேட்டு விட்டதால் இன்று இரவு வைஜெயந்தியின் அறைக்கதவை தட்டவில்லை. வயதாகிக் கொண்டிருக்கிறது தான். இல்லையெனில் பாலா பற்றி யோசித்திருந்தது தொடர்ந்து இப்படி மனசு ரீங்காரம் போட்டுக் கொண்டிருக்குமா?

------------------------------------------------------------------------------

பால சேனாதிபதி என்று ஒருவன் வந்தான்.

நிறைய முடி வளர்த்திருந்தான்.

பிளாக் அண்ட் வைட் காலம். போட்டோ ஸ்டுடியோவில் அன்று ஹரியும் அவனது தம்பியும் கணேஷ் என்று பிரின்ட் போடுகிற ஒருத்தனுமாய் மூவர் இருந்தார்கள். பால சேனாதிபதிக்கு கேபினட் சைஸ் போட்டோ எடுக்க வேண்டும். இரண்டு காப்பிகள் எக்ஸ்ட்ரா வேறு. முப்பது ரூபாய்க்கு பில்லைப் போட்டுக் கொடுக்க அவன் அட்வான்ஸ் என்று இருபது ரூபாய் கொடுத்தான். அப்புறம் அவன் தலையை வாரி பவுடரை அப்பிக் கொண்டு இரண்டு பாக்கெட்டுகளிலும் கைகளை விட்டுக் கொண்டு தயாராக நின்று கொண்டு விட்டான். வழக்கமாய் அவ்வப்போது கேமிராவில் பிலிம் இருக்காது. இப்போ கேமிராவே இல்லை. அவுட்டோர் போயிருக்கிறது.

‘‘சார், நான் இந்த பக்கம் தலை சாய்த்து ரஜனிகாந்த் மாதிரி நின்று கொள்ளுகிறேன். முடி பறக்கட்டும். வாயைக் கூட இப்படி கொஞ்சம் கோணலாக வைத்துக் கொள்ளவா?''

ஓவியம்
ஓவியம்ரோகிணி மணி

‘‘அடடே - எல்லாம் பிரமாதமாய் இருக்கிறது. ஆனால் பேண்ட் ஜிப்பை போட்டுக் கொள்ளுங்கள்..''

டார்க் ரூமிலிருந்த ஜெர்மன் என்லார்ஜருடைய அடிப்பாகத்தின் லென்சை கழட்டிக் கொண்டு ஸ்டாண்டின் மீது வைக்கும் போது பால சேனாதிபதியின் முகத்தில் விளக்குகளை ஒளிர செய்து பிளாட் பண்ணி வாயினாலேயே க்ளிக் என்று சவுண்டு கொடுத்து ஓ.கே, தாங்க்ஸ் என்று அனுப்பி வைத்தார்கள். அந்தக் காசு சென்று சேரவே தான் அரிசியும் மீனும் வாங்கி அம்மா சமைத்துப் போட்டாள். இரண்டு நாட்களில் பால சேனாதிபதி வந்தான். திருப்பதி மொட்டை. அதன் மீது மணக்க மணக்க சந்தனம். ‘‘எங்கே போட்டோ?'' என்றான். ‘‘க்ளிக் ஆகும்போது கண்களை மூடிக்கொண்டு விட்டீர்கள், மறுபடியும் எடுக்க வேண்டும்.'' என்று அந்த மொட்டையிடம் சொல்லி முடிப்பதற்குள் அவன் என்னவோ ஒன்று சரியில்லை என்று அப்பவே தெரியும் என்று ஆட்களைக் கூப்பிடப் போனான். ஹரி கதவை  இழுத்து சாத்திப் பூட்டைப் போட்டு விட்டு தம்பியுடன் வீட்டுக்கு வந்துவிட்டான்.

‘‘ஹரி''

 ‘‘என்னம்மா?''

‘‘காசைக் கொடு. சமையல் செய்ய வேண்டாமா?''

ஒருத்தனும் ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ எடுக்கவும் வரவில்லை. சில்லறை இல்லாததால் காலையில் இருந்து ஒரு நான்கு இட்லிகள் அல்லது  டீ கூட சாப்பிட முடியாதது தனிக்கதை. எல்லா பக்கமும் கடனிருக்க காசு வேண்டும் என்று எவனிடமும் வாய் திறக்க முடியாது. அப்பா புரிந்து கொண்டு பேப்பர் படிக்க ஆரம்பித்தார். ஹரி தம்பிக்கு பசித்து விடுமோ என்கிற பயத்தில் இருந்தான். ஏனென்றால் ஏதாவது ஒரு சாக்கைக் கண்டுபிடித்து சண்டையை இழுப்பான். காணாமல் போன சில நெகடிவ்களை தேடுகிற சாக்கில் நேரம் போக்கினாலும் பசி முறுகிய அந்தக் கடும் பகல் நேரத்தில் பால சேனாதிபதி வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து ஆட்களுடன் வந்து நின்று கூச்சல் போட்டான். அக்கம் பக்கத்தார் வேடிக்கை பார்த்தார்கள். அப்பா பல உறுதிமொழிகள் கூறி அவர்களை அனுப்பி வைத் தாலும், யாரோ ஒருவன் இப்படி எல்லாமா ஏமாற்றித் தின்னுவீர்கள் என்று கேட்டுவிட்டுத்தான் போனான். அப்போது தான் சாமிக்கண்ணு பிச்சைக்காரன் வேலியோரமாக உட்கார்ந்து இருப்பதை ஹரி கவனித்தான். நல்ல கெட்ட வார்த்தை மனதில் வந்து போயிற்று. எங்கேயோ சுற்றியடித்து பைசா தேறாமல் முக்கால் மணிநேரம் கழித்து திரும்பி வந்த போது சாமிகண்ணு அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கவில்லை.

 ‘‘பெரியவரே. இன்று ஒன்றும் தேறாது. அப்புறம் எப்பவாவது வாருங்கள்''

அப்பா ஏற்படுத்தின பழக்கம் தான். என்றோ ஒருநாள் வேலியின் அருகே வந்து நின்று கையேந்தினவருக்கு சில்லறை கொடுத்து அனுப்பாமல் உட்கார வைத்து மீன் குழம்பு மணக்க சாப்பாடு கொடுக்கச் செய்தார். அப்புறம் அவ்வப்போது வந்து விடுகிற சாமிக்கண்ணு அங்கேயே உட்கார்ந்து விடுவார். சமையல் முடிந்து எல்லோரும் சாப்பிடும் போது சாப்பாடு அவருக்கும் பரிமாறப்பட்டு விடும். அப்படித்தான், சில பட்டினிப் பொழுதுகள் நேரும் போது ஒன்றுமில்லை என்றால் சென்று விடுவார். இன்று நகரவில்லை. ஹரிக்கு நிலை கொள்ளவில்லை.

அவன் சொல்லுவதற்குள் அவர், ‘‘ தம்பி, அம்மாவை வரச் சொல்லுங்கள்,'' என்றார்.

அம்மா வந்ததும் மிகவும் பணிவாய் அவர் அந்த இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.

‘‘வேண்டாம் என்று சொல்லி என் மனதை காயப்படுத்தி விடக்கூடாது. நீங்கள் இந்த வீட்டின் அன்னலட்சுமி. நீங்கள் பொங்கிப் போடுகிற உணவில் ஒரு கவளம் உண்ணாமல் நான் இந்த இடத்தை விட்டுச் செல்லமாட்டேன். பிச்சைக் காரன் கொடுக்கிற பணமாய் எண்ணாமல் கடவுள் கொடுப்பதாய் வாங்கிக் கொள்ளுங்கள்...''

அன்று அரிசியும் மீனும் வாங்க ஹரி தான் ஓடினான்.

அன்றைய சாப்பாடு போல அதுவரை சாப்பிட்டதில்லை என்று எல்லோருமே நினைத்தார்கள். என்னவோ சாமிக்கண்ணு அதற்கு அப்புறம் வரவில்லை. சரிந்திருந்த வியாபாரமே கூட சூடுபிடித்து தம்பி கடையைப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்து மெல்ல ஹரி சினிமா பக்கம் வந்து பெரிய சிரமம் எதுவுமே இல்லாமல் இயக்குனராகவே ஆனான்.

அந்த பால சேனாதிபதி பற்களைப் போட்டு நறநறத்தவாறு சண்டை போட்டது மறக்க முடிவதில்லை.

இந்த பாலாவும் அந்த தினுசில் பட்டவன்தான்.

இருக்கும். சோற்றுக்கு வழி இல்லாமல் வட்டம் சுற்றுவது ஒரு மாதிரி போதை. யாரோ ஒருவனிடம் உலக காரியம் பேசிக் கொண்டிருந்து அவன் சோர்கிற வரை காத்திருந்து வீட்டில் பசியால் வீறிடப்போகிற குழந்தைக்கு ஊட்ட வேண்டிய பாலுக்காக அவனிடம் கொஞ்சம் பணம் கேட்கிற தருணம் இருக்கிறதல்லவா, பாலா எழுதியிருக்கிறான். ஒருகணம் கண்ணசைந்தால் எனது குடித்தனத்தை புற்று மூடி விடும் என்று சொல்லி அவன் விழுந்து விழுந்து சிரித்ததெல்லாம் பிரசித்தம். எழுத்து என்று வரும்போது சன்னதம் கொண்டு விடுவது போல தான், பல விஷயங்களும். அவன் துரத்தப்பட்டவாறு இருக்கிற ஒருவன். சில நேரங்களில் அவனே அவனைத் துரத்த வேண்டியிருக்கும் போது அவன் முன்னால் நின்று சிக்கிக் கொள்ளக்கூடாது.

ஹரி அவனது போன் எண்ணைப் பார்த்தவாறிருந்து பிறகு காலையில் பேசலாம் என்று  முடிவு செய்தார்.

நாம் படமே எடுக்க முடியாமல் போனாலும் சரி. அவனுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடு என்று மேனேஜருக்கு கட்டளை போட்டு விட வேண்டும். 

நல்ல தூக்கம் வந்தது.

காலையில் மேனேஜர் வர வேண்டியிராமல், இவரே போன் செய்யத் தேவையில்லாமல் பாலாவே போன் செய்தான்.

‘‘ரொம்ப நாட்களாயிற்று. நேற்றெல்லாம் உன்னை தான் நினைத்துக் கொண்டிருந்தேன் பாலா. நீ கூப்பிடவில்லை என்றாலும் நானே அழைத்திருப்பேன்...''

மறுமுனை எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

------------------------------------------------------------

ஹரியின் தலைக்குள் பட்டாசு வெடித்தவாறிருந்தது. அந்தக் காட்சியை எடுத்து முடிக்கும் போது கூட பாலாவின் எழுத்து அவரை தலைசுற்ற வைத்தது. முடிந்தவரை எல்லாவற்றையும் மாற்றி பேசச் சொன்னார். அது வளைந்து வரவில்லை என்பது தன் மீது தானே காறித் துப்புவதாய் இருந்தது. எதற்கோ சிரித்த ஹீரோயினியிடம் நெருங்கி அவளை எரிப்பது போல பார்த்தார்.

இன்று இரவு நான் வருவேன் என்கிறார் பிடிவாதமாய்.

அவள் முடியாது என்பதில் நிலைக்கக் கூடியவள்.

ஓ.கே சார் என்றாள்.

ஹரி தன்னம்பிக்கை பெற்றார். பேத்தியின் போனை எடுக்கவில்லை. இயற்கையைப் பற்றி பேசுகிற காதலர்களை முழுமையாய் ஷூட் செய்துகொண்டுவிட்டு அந்தப் பிரதேசத்தை ஒரு முறை சுற்றிப் பார்க்கிறார். இந்த இடத்தில் ஒருமுறை மலைவெள்ளம் வந்து பத்து ஆள் உயரத்துக்கு தண்ணீர் ஓடியிருக்கிறது. வெள்ளம் யானைகளை உருட்டி வந்திருக்கிறது. மொத்த மரங்களையும் சரித்துக் கொண்டு சென்று கரைகளுக்கு வீசியிருக்கிறது. வழியெங்கிலும் இருந்த கிராமங்கள் பூண்டோடு அழிந்தன. மனிதர்கள் மறக்கிறோம். அல்லது அது நடக்காத மாதிரி இருக்கிறோம். இதோ, இந்த நிமிடம் அது நடந்தால் கூட வியப்பதற்கு இல்லை. நடக்காது என்றில்லை. இயற்கையோடு வாழ்வதாம். என்ன பேத்தல்.

மேனேஜர் வந்து அடிக்கிற போனைக் காட்டுகிறார்.

பாலா தான்.

‘‘பத்து பைசா தர முடியாது என்று சொல். என்ன செய்வானென்று நான் பார்த்துக் கொள்கிறேன்..'' என்கிறார் தன்னையறியாமல்.

மனதில் ஒரு திருப்தி வந்து நிரம்பித் ததும்பியது.

ஓகே, ரெடியா என்று கூச்சலிட்டார்.

ஆகஸ்ட், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com