சவக்கிடங்கு

சவக்கிடங்கு
ஓவியம்: ஸ்யாம்
Published on

அந்திமழை சிறுகதைப் போட்டி 2024-இல் 15 கதைகள் பரிசுக்குத் தேர்வாகிய விவரத்தை சென்ற இதழில் அறிவித்திருந்தோம். அவற்றில் ஒன்பது கதைகளை கடந்த இதழில் வெளியிட்டோம். ஊக்கப்பரிசு பெறும் ஆறு கதைகள் இந்த இதழில். வாசிப்புத் திருவிழா தொடர்கிறது.

உடல் முழுவதும் அழுத்தம் கூடிக்கொண்டே போனது. தாளமுடியாத பாரம் அமுக்கியதில் உடலை அசைக்க முடியவில்லை.  புளித்த வாசத்துடன் கூடிய வியர்வை நாற்றம் குமட்டிக்கொண்டு வந்தது.  அவளால் மூச்சு விட முடியவில்லை. அவளது அடிவயிற்றில் அசாத்திய சக்தியுடன் யாரோ..எதுவோ...நுழைவது மாதிரி இருந்தது.  உடலை உதறிக்கொண்டு எழுந்துவிட வேண்டும் என மனம் துடித்தது.  முடியவில்லை.  அம்மா..என அழைக்கப்போய் குரல்வளையில் இருந்து வினோதமான ஒலி மட்டும் வந்தது.

சத்தம் கேட்ட அம்மா, “எங்கண்ணு ஒன்னுமில்லடி சாமி அம்மா நான் இருக்கறனுல்ல” என்றவாறே அரக்கபரக்க லைட்டைப் போட்டாள்.  அவள் தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள்.  பயத்தில் கண்களை திறக்க மறுத்து இருந்தாள்.  “அம்மாவப் பாரு கண்ணத் திற சாமி” என கனிவாக அம்மா அழைத்ததும், வெளிச்சமும் அம்மாவின் அருகாமையும் கொடுத்த தைரியத்தில் அவள் மெதுவாக கண்களைத் திறந்தாள்.  கண்களில் அச்சம் பாம்பைப்போல படமெடுத்து ஆடியது.  அம்மா, அவளை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள்.  “அம்மா என்னை யாரோ போட்டு அமுக்கற மாதிரி இருந்துச்சும்மா” என அவள் சொன்னதும், அம்மாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.  “ஏதாவது காத்து கருப்பா இருக்குஞ்சாமி, அப்படியே அம்மா மடியில படுத்து தூங்கு” என்றவள்.  அந்த பாழாய்போன மனுசன் பண்ண வேல எம்புள்ளைய இப்பிடி பாடா படுத்துதே என மனதுக்குள் புலம்பினாள்.

அவள் மீண்டும் தூங்கிவிட்டாள். ஆனால் அவளுக்கு அடிக்கடி இப்படி ஒரு நிகழ்வு ஒரு கனவைப்போல வருகிறது.  இறந்து பிழைப்பது மாதிரி ஒவ்வொரு முறையும் அவளுக்கு உயிர் போய் வருகிறது.  பதினைந்து வயது பெண்ணுக்கான கனவுகளோ, கற்பனைகளோ இன்றி நிழல் படிந்த முகத்துடன் தீவிரமாக எதையோ காற்றுவெளியில் தேடிக்கொண்டே இருந்தாள்.  பாட்டோ, ஆட்டமோ, விளையாட்டோ எதுவும் இல்லை.

அம்மா, எல்லா பக்கமும் வைத்தியத்திற்காக அலைந்து திரிந்துவிட்டாள்.  ஒரு பிரயோசனமும் இல்லை.  நடுநிசி நேரங்களில் அவள் இப்படி அலறி அடித்துக்கொண்டு எழும்போது அம்மா படபடத்துப்போவாள்.  அதிலிருந்து அவள் எப்போது மீண்டு வருவாள் என்ற ஏக்கம் அம்மாவின் நெஞ்சில் பெரும் துயரமாக பற்றிக்கொண்டு இருந்தது.

சவக்கிடங்கின் முன்பு அவள் நின்று கொண்டிருந்தாள்.  இரவு அடங்கிய வேளையில் அவளை அங்கே நிறுத்திச் சென்ற காவலர், அரைமணி நேரமாகியும் திரும்பவில்லை.  மருத்துவமனை ஊழியரை அழைத்து வருவதாக சொல்லிச் சென்றார்.

சவக்கிடங்கு என எழுதப்பட்டிருந்த தகரப்பலகை துருப்பிடித்து நீலநிறச் சாயம் வெளுத்து இருந்தது.  எழுத்துக்கள், இடையே உதிர்ந்து இருந்ததால், சவ....ங்கு என்ற எழுத்துக்களுடன் சவக்கிடங்கு என்ற பெயரும் செத்துப் போயிருந்தது.  கட்டடத்தின் தலையில் எரிந்து கொண்டிருந்த மஞ்சள் குண்டு பல்பு கட்டிடத்திற்காக அழுவது போலிருந்தது.  ஆங்காங்கே விரிசலுற்ற சுவர்களும், உடைந்திருந்த சீமை ஓட்டுக்கூரையும் கட்டடத்திற்கு ஒரு போஸ்ட் மார்ட்டம் செய்யக்கூடாதா? என ஏங்கியிருந்தன. 

கட்டடத்தின் முன்பு நின்ற வேப்ப மரம் பெரிதாக தெரிந்தது.  அதன் கிளைகள் அடர்த்தியாக விரிந்து மேற்பகுதியை மறைத்தவாறு இருந்தது.  அநேகமாக அடிக்கல் நாட்டு விழாவின் போது நட்ட மரமாக இருக்கும்.  மரம் இன்னும் பல காலம் இருக்கும்.  அநேகமாக கட்டடம் ஒன்று இரண்டு வருடங்கள் கூட தாங்காது.

அவளது அப்பாவை உள்ளே படுக்க வைத்து இருப்பதாகச் சொன்னார்கள்.  மர ஜன்னல்கள் திறந்து இருந்தன. உள்ளே இருட்டாக இருந்தது.  எந்தப்பக்கம் இருந்து காற்று வந்தது என்று தெரியவில்லை.   வேப்ப மரத்தை ஒரு அசைவு அசைத்தது.  காற்றில் இருந்த பனி ஜில்லென்று அவளது மார்பைத் தழுவியதில் உடல் முழுவதும் சிலிர்த்தது. போலீஸ் அழைத்த அவசரத்தில் துப்பட்டாவை எடுக்க மறந்துவிட்டாள்.  துப்பட்டா அணியாத மார்புகள் தூக்கலாக தெரிந்தது.  அது அவளுக்கு சங்கோஜத்தை ஏற்படுத்தியது.  இரண்டு கைகளாலும் மார்பின் குறுக்கே கோர்த்துக் கொண்டாள்.

காற்றுபோனதும், நிசப்தம் புதிதாக குடிகொண்டது.  இன்னும் எவ்வளவு நேரம் இங்கே காத்திருப்பது என அவளுக்கு தெரியவில்லை.  காவலரின் பூட்ஸ் கால் சத்தம் கேட்கிறதா என உன்னிப்பாக கவனித்தவளின் காதுகளுக்கு பிறந்த குழந்தை வீறிடும் சத்தம் கேட்டு புளகாங்கிதத்தை ஏற்படுத்தியது.  இப்பொழுது மணி என்னவாக இருக்கும் என அவளது மனம் காலத்தைக் கணக்கிட்டது.  அழுதது பெண் குழந்தையாகத்தான் இருக்கும்.  பிரசவ வார்டுக்கு உயிர்க்களை வந்திருக்கும். 

அவளுக்கு தன்னியல்பாக அம்மாவின் ஞாபகம் வந்தது.  ஓரு சிறு தவறு கூட செய்யத் தெரியாத அப்பழுக்கற்றவள்.  கொஞ்சம் ஏறு நெற்றியுடனும், பெரிய பொட்டுடனும் ஈறு தெரியச் சிரிக்கும் அம்மாவின் முகம் ஞாபகத்திற்கு வந்தது.  அவள் அந்த வேப்ப மரத்தைப் பார்த்து அம்மா என்று ஒரு முறை அழைத்தாள்.  அவளுக்கு இப்பொழுது தனியாக இருப்பது போல தோன்றவில்லை.  அம்மா இருக்கிறாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அவளது மூளைக்குள் ஊர்ந்தது.  அப்பொழுது அவளுக்கு பதிமூன்று வயது இருக்கும்.  எட்டாம் வகுப்பு போய்க்கொண்ருந்தாள்.  நூறு நாள் வேலைக்கு போகும் அம்மா, அவளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு செல்வாள்.  பள்ளி அருகே வந்ததும், அதுவரை அவளது கை பிடித்து அழைத்து வந்த அம்மாவுக்கு அவளது கையை விட்டு விலக மனமிருக்காது.  அவளுக்கும் அப்படித்தான்.

அவள், சுற்றுச்சுவர் வாசல் தாண்டி, மைதானம் கடந்து பள்ளிக் கட்டிடத்தின் படியேறி, வகுப்பறைக்குள் நுழையும் வரை அம்மா பார்த்துக்கொண்டிருப்பாள். வேலை முடிந்து அம்மா வீடு திரும்புகையில், பள்ளி வாசலில் காத்திருக்கும் அவளை பத்திரமாக அழைத்து வருவாள்.  வரும் வழியில் காளியம்மன் கோவில் அருகில் உள்ள சீனியண்ணன் கடையில், அவள் விரும்பும் திண்பண்டத்தை கைநிறைய வாங்கித் தருவாள்.  கண்ணாடி சீசாக்களில் இருக்கும் கடலை பரிப்பி, கமர்கட்டு, சூஸ்பரி, ஜவ்வு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், புளுக்கை மிட்டாய் என அனைத்தும் கலர்கலராய் கண்ணைப் பறிக்கும்.

அம்மா ஒன்றும் சாப்பிட மாட்டாள்.  கேட்டால், “நீ தான் கண்ணு எனக்கு கடலை முட்டாயி, கம்முறு முட்டாயி, சூஸ்பரி.. என கன்னத்தில் முத்தமிட்டு தலைமுடி கோதுவாள்.  “அப்ப முட்டாயி நான்னா? அந்த   கண்ணாடி சீசா நீயாம்மா” என கேட்டால் “ஆமாண்டி என் ராசாத்தி” என அம்மா உச்சி முகர்வாள்.

யாரோ சிகரெட் பற்ற வைக்கும் சத்தம் கேட்டது.  அவள் சுற்றிலும் பார்த்தால் யாரும் தட்டுப்படவில்லை. ஆனால் புகை வாசம் அடித்தது. யாருங்க அது என கேட்க நினைத்த வார்த்தைகள் தொண்டைக்குழியை விட்டு வரவில்லை.  சிகரெட் நெடி கூடுதலானது.  செருமும் சத்தமும் கேட்டது.  அவளுக்கு பயத்தில் வியர்ப்பது போலிருந்தது.  வேப்ப மரத்தின் பின்புறமாக இருந்தே சிகரெட் வாசனை வந்திருக்கவேண்டும்.  பலமாக காறி எச்சில் துப்பும் சத்தமும், நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் சத்தமும் அடுத்தடுத்து கேட்டது.  பிறகு ஒரு சத்தமும் கேட்கவில்லை.  வந்தவன் கவனியாமல் போய்விட்டான்.  அது யாராக இருந்தாலும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அப்பா சிகரெட் பிடிப்பார் என்பது அவளுக்கு தெரியும்.  ஆனால் அவர் மது அருந்துவார் என்பது அவளுக்கு தெரியாது.  ஒரு நாள் இரவு, அவள் பாடம் படித்த புத்தகங்களுடன் அப்படியே படுத்து தூங்கிவிட்டாள்.  அம்மா வீட்டுக்கு தூரம் என்பதால், சமையற்கட்டிற்கு பின்புறம் உள்ள கொட்டத்தில் படுத்து இருந்தாள்.  இரவு வெகு நேரம் ஆகியும் அப்பா வரவில்லை.

அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பொழுது புளித்த நாற்றம் அவளது மேனி முழுவதும் படர்ந்தது.  அழுத்தம் கூடி சுமக்க முடியாத பாரத்தால் மூச்சு திணறியது.  கண் விழித்து பார்க்கையில் இருட்டில் ஒரு மிருகம் ஊர்ந்து கொண்டு இருந்தது.  “அம்மா...” என்று அவள் அழைத்த குரல் அம்மாவுக்கு எப்படி கேட்டது என்று தெரியவில்லை.

“அடிப்பாவி மனுசா..” என்ற அம்மாவின் கூச்சல் கொடுத்த நிம்மதியில் அவள் மயக்கமுற்றாள்.  அம்மா விளக்கைப் போட்டுக்கொண்டு,  விளக்குமாற்றைத்தேடி எடுத்து கண்மண் தெரியாமல் விளாசியிருக்கிறாள். அந்த மிருகம் தட்டுத் தடுமாறி வெளியேறியது.  அதற்குப்பிறகு வீட்டுக்குள் வராமல் அம்மா பார்த்துக்கொண்டாள்.  

அவள் விடிந்த பிறகும் படுக்கையை விட்டு எழவில்லை.  உடம்பு அனல் போல கொதித்தது.  அம்மா ஆஸ்பத்திரிக்கு அழைத்து போவதற்கு முன்பு, அவளை அல்லா கோயிலுக்கு அழைத்துச் சென்று, மந்திரித்து தாயத்து கட்டினாள்.  அவள் பேசுவதும், விளையாடியதும் அவளுக்கு மறந்து போனது.  பள்ளியிலும் பாடத்தைக் கவனிக்க அவளால் முடியவில்லை.  சீனி அண்ணன் கடை தின்பண்டங்கள் மீது இருந்த விருப்பமும் அவளுக்கு மாறிப்போனது.  அவ்வப்பொழுது அது ஞாபகத்திற்கு வந்தது போல அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அம்மா ரொம்பவும் கலங்கிப் போனாள்.  “கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானால் அது மூளையைப் பாதிக்கும், மருந்து எடுத்துக் கொண்டு தூங்கச் சொல்லுங்க நாளாக நாளாக சரியாகி விடும்” என்று மருத்துவர் சொன்னது அம்மாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.  அவள் தூக்கத்தை வைத்தியமாக எடுத்துக்கொண்டதில், பள்ளிக்கு செல்வதை மறந்து போனாள்.

அம்மா அவளை விட்டு அகலவில்லை.  வேலைக்கு செல்ல முடியா நிலையில் ரேசன் அரிசியை நம்பி இரண்டு ஜீவன்களும் உயிர் வாழ்ந்தன.  அந்த சம்பவத்திற்கு பிறகு அப்பா வீட்டுப்பக்கமே வரவில்லை.

பூட்ஸ் கால் சத்தம் கேட்டது. உடன் ரப்பர் செருப்பின் சட்டக் சத்தமும் கேட்டது.  இருட்டில் இரண்டு பேர் வருகிறார்கள்.  வேப்ப மரத்தின் ஓரம் ஒடுங்கி இருந்த அவளை, காவலர், “ஏ..புள்ளே...”என அழைத்தார். “சார் நான் இங்கே தான் இருக்கேன்” என்றவளை வெளிச்சத்திற்கு வருமாறு காவலர் அழைத்தார்.

வெளிச்சத்திற்கு வந்தவளை, காவலருடன் வந்த மருத்துவ ஊழியர் ஏற இறங்க பார்த்தார்.  நல்ல தூக்கத்தில் இருந்தவரை காவலர் எழுப்பி வந்ததாக தெரிந்தது.  நீளமாக கொட்டாவி விட்டவர், “சார் அறைக்குள்ள பல்பு இல்ல சார், இருட்டுக்குள்ள பொணத்த அடையாளம் காட்ட முடியாது” என்றார்.

“நீ கதவ தொறந்து விடுய்யா, இருக்கற வெளிச்சத்துல பாப்பா அடையாளம் பார்த்து சொல்லியிரும்” என காவலர் அதட்டினார்.  காவலரிடம் அவசரம் தெரிந்தது.  “எனக்கென்னங்க வந்தது, உண்டானத சொல்றது என் வேலை, அப்புறம் உங்க இஷ்டம்” என்றவாறே ஊழியர், இடுப்பு அரைஞான் கயிற்றில் மாட்டியிருந்த சாவியை வெளியே எடுத்தார்.

அவள் சவக்கிடங்கு வாசலுக்கு அருகில் சென்றாள். அழுகிய வாடை அடிவயிற்றைப் புரட்டியது.  வாந்தி வருவது போலிருந்தது.  துருப்பிடித்திருந்த கதவுகளின் கீழ்கள் கிறீச்சென்ற சத்தத்துடன் திறந்து கொண்டன.  கதவுகள் திறந்ததும் உள்ளே அடைந்திருந்த காற்று கெட்ட நாற்றத்துடன் குப்பென வெளியேறியது.  அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை.  வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாய் நிறைய உமிழ்நீர் வெளியே வந்தது.  அவள் அம்மா..என்றழைத்தவாறே வேப்ப மரத்தின் அருகே ஓடினாள்.  ஓங்கரித்து வாந்தி எடுக்கும் சத்தம் மருத்துவமனை முழுவதும் கேட்பது போலிருந்தது.

ஊழியர் உள்ளே சென்று நின்று கொண்டார்.  வரிசையாக மேஜைகளில் படுக்க வைக்கப்பட்டிருந்த மூன்று பிணங்களில் அடையாளம் காட்டவேண்டிய பிணம் எதுவாக இருக்கும் என பார்த்துக் கொண்டிருந்தார்.  காவலர் சவக்கிடங்கின் வாசற்படிகளை விட்டு இறங்கி கீழே நின்று கொண்டார்.  பேண்ட் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்து மூக்கில் வைத்துக்கொண்டு, இருட்டில் அவளைத் தேடினார்.  அவள் வாந்தி எடுக்கும் சத்தமும், பிணவாடையும் சேர்ந்து காவலருக்கும் வாந்தி வருவது போலிருந்தது. 

“அந்த பொண்ண ஒடனே கூட்டிட்டு போயி, பொணத்த அடையாளம் காட்டிட்டு, அங்கனயே அவகிட்ட வாக்குமூலம் வாங்கிட்டு வந்து சேரனும் தெரியுதா” என உத்தரவிட்ட இன்ஸ்பெக்டர் கண்ணுக்கு முன் வந்தார்.  அவர் உத்தரவு போட்ட நேரம் இரவு ஒன்பது மணி, ஓய்ந்து வீட்டுக்குப் போகும் நேரத்தில் அவளது கிராமத்தை நோக்கி காவலர் மோட்டார் சைக்கிளை உதைத்தார்.

அவள் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தாள்.  ஆனால் அந்தக் கனவு அவளை விட்டபாடில்லை.  ஒவ்வொரு முறையும் அடித்து போட்ட மாதிரி நான்கு நாட்கள் கிடையில் கிடப்பாள்.  மகளை முன்பு போல பார்க்க முடியாத இயலாமையினால் அம்மா புழுங்கினாள்.  அம்மாவின் உடல்நிலை பாதித்தது.  மன அழுத்தத்தினால் தீராத தலைவலி ஏற்பட்டது.  உடல் சத்துமானம் இழந்து ஓய்ந்து விட்டது.

காவலர் வந்து அழைத்தபோது, அம்மாவினால் எழக்கூட முடியவில்லை.  அவள் தான் கதவைத்திறந்து விசாரித்தாள். காவலர் சொன்ன விபரத்தை அம்மாவும் கேட்டுக்கொண்டிருந்தாள்.  நீண்டநாட்களுக்கு பிறகு கணவனின் முகம் அம்மாவின் கண்முன் வந்து போனது.  அம்மா, “ஏங்க உங்களுக்கு நேரங்காலமே கிடையாதா, நான் படுத்த படுக்கையா கெடக்குறேன், அவ பச்சைப்புள்ள, இந்த நேரத்துல எங்க வந்து என்ன சொல்றது” என இறுமிக்கொண்டே கேட்டாள்.

“அம்மா, கவலைப்படாதீங்க இது அதிகாரி உத்தரவு, உங்க பொண்ண அனுப்புங்க பெத்த மகளாட்டாம் கூட்டிட்டு போய் கொண்டாந்து விட்டர்றேன்” என காவலர் இறைஞ்சும் குரலில் பேசியதைக் கேட்டு அம்மா ஆத்திரமுற்றாள்.  “பொம்பளப்புள்ளைகள நல்லா பாத்துக்கிட்டீங்க போங்க பெத்த மகளாம்,” என அம்மா அனத்தியது காவலரின் காதுகளுக்கு கேட்கவில்லை.

அவள் வாந்தி எடுத்த அதிர்ச்சியில் தலையில் வைத்து சவக்கிடங்கு வாசலில் உட்கார்ந்து கொண்டாள்.  காவலருக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.  செத்துப்போனது உங்கப்பாவான்னு அடையாளம் காட்டுங்க என்று சொல்லியும், அதைப்பற்றி அக்கறையோ, அதிர்ச்சியோ இல்லாத அம்மாவும் மகளும் அவரது சர்வீசில் அதிசயமாக தெரிந்தார்கள்.  அதைப்பற்றித் தெரிந்து கொள்ள அவர் ஆசைப்பட்டார்.  அதைக் கேட்கப்போய் வந்த வேலை கெட்டுவிடக்கூடாது என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது.

மருத்துவ ஊழியர் வெளியில் எட்டிப்பார்த்தார்.  பக்கத்திலிருந்து தேவலாயத்தின் ஒலிபெருக்கி கர்த்தரின் பெயரால் காலத்தை அதிகாலை 3 மணி என அறிவித்தது.  “ஏனுங்க சார் எப்படிங்க சங்கதி, விடிஞ்சு பாத்துக்கலாமா இல்ல மெழுகுவர்த்தி ஒன்னு இருக்கு அந்த வெளிச்சத்துல பாத்துக்கலாமா” என சத்தமாக கேட்டார்.

“மெழுகுவர்த்தி இருந்தா அது போதும்யா,” என உற்சாகமாக கூறியவர், “பாப்பா எந்திரிம்மா, பொணத்த அடையாளம் காட்டிட்டா உடனே வீட்டுக்குபோயிறலாம்” என அவளைப் பார்த்து இணக்கமாக பேசினார்.  வீட்டுக்குப் போக வேண்டும் என்ற உந்துதலில் அவள் வேப்ப மரத்தைப் பார்த்துக் கொண்டே எழுந்தாள்.

மார்பின் குறுக்கே மீண்டும் கைகளைக் கட்டிக்கொண்டாள்.  மூச்சை இழுத்து அடக்கிக் கொண்டாள்.  உள்ளே தீப்பெட்டி உரசும் சத்தம் கேட்டது.  மெழுகுவர்த்தியின் வெளிச்சம் பழுப்பு நிற கறை படிந்த சுவற்றின் மீது மரப்பல்லி ஒன்று ஊர்ந்து மேலேறி செல்வதை காட்டியது.

காவலர் தள்ளி நின்று கொண்டார்.  ஊழியர் தான், ஒவ்வொரு பிணத்தின் மீது இருந்த துணியை விலக்கி முகத்தைக் காட்டினார்.  மூன்றாவது பிணத்தின் முகத்தைப் பார்த்ததும், அவளது மனமும் உடலும் சில்லிட்டது.  பிணத்தின் வலது பக்க நெற்றியில் பெரிய மரு ஒன்று கருப்பு நிறத்தில் இருந்தது.  அது அப்பாதான்.  அடையாளம் காட்டிவிட மார்பில் குறுக்கே இருந்து விலகிய கையை அவள் மீண்டும் சேர்த்;து அணைத்துக்கொண்டாள்.

அவளிடம் தெரிந்த மாற்றத்தை ஒரு நொடியில் புரிந்து கொண்ட ஊழியர், “இது தான் உங்க அப்பாவா” என கேட்டது கிணற்றிலிருந்து கேட்கும் குரல் போல அவளுக்கு இருந்தது.  அவளது அடிவயிறு வலிக்க ஆரம்பித்தது, அந்த இடத்திலிருந்து உடனே நகன்று விட அவள் மனம் துடித்தது.  சவக்கிடங்கு முழுவதும் புளித்த நாற்றம் சூழ்ந்து கொண்டதைப் போல அவளால் மூச்சுவிட முடியவில்லை.

காவலர் நிலைமையை புரிந்து கொண்டு அருகில் வந்தார்.  “என்னம்மா அடையாளம் ஏதும் தெரிஞ்சதா” எனக் கேட்டார்.  அவள், “இல்ல சார் இதுல யாரும் எங்கப்பா இல்ல” என்றவாறே சவக்கிடங்கை விட்டு வெளியேறினாள்.  வெளியே வேப்ப மரம் அவளை அன்புடன் வரவேற்றது.

 ஊழியர் கதவை பூட்டிக்கொண்டே, “இன்னும் எவ்வளவு நாள் சார் பாடிய வச்சுகிட்டு இருக்கறது” என்று கேட்டார்.  “அய்யா கிட்ட கேட்டுகிட்டு நாளைக்கு வந்து சொல்லிர்றேன்.  அனாதப் பொணம்னு பொதச்சிருங்க” என காவலர் சொல்லிக்கொண்டே வருவது அவளுக்கு கேட்டது.

வரத.இராஜமாணிக்கம்

பழநி நகரில் வசிப்பவர். வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய சிறுகதைகள் பல இலக்கிய இதழ்களில் பிரசுரமாகி உள்ளன.மரங்களைச் சுமக்கும் பிஞ்சுகள், ஜிங்லி என்ற பெயர்களில் இரண்டு சிறுகதை தொகுப்புகளும் அதிதி என்ற நாவலும் வெளி வந்துள்ளன.

2006 - 2011ஆம் ஆண்டு வரை பழநி நகராட்சித் தலைவராக பணியாற்றியவர். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக மக்கள் பணியாற்றி வருகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com