சந்தான லட்சுமிக்குக் குழந்தை இல்லை என்பதை விட சுவாரஸ்யமான முரண், அவள் பெயர் சந்தான லட்சுமி அல்ல என்பது. அவளது தந்தை அவளுக்கு ராஜலட்சுமி என்றுதான் பெயர் சூட்டினார்.
ராமஜெயத்திற்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை.பெண் பார்க்க வந்த போது, ‘பேசலாமா?' என்றான் நேரே முகம் பார்த்து. இலைக்குக் கீழிருந்து எட்டிப் பார்க்கும் மலரைப் போல, மீசைக்குக் கீழிருந்த புன்னகை அவளுக்குப் பிடித்திருந்தது.. ‘கறுத்த மேகம் சிரித்தது - மின்னல்' என்றொரு குறுங்கவிதை மனதில் ஓடி மறைந்தது.
‘கூட்டிட்டுப் போம்மா' என்றார் அப்பா. பக்கத்து அறையை நோக்கி அவள் நகர இரண்டடி பின்னால் நடந்தான் அவன். அவனை முந்திக் கொண்டு அவன் நிழல் முன்னால் நடந்தது.
அறைக்குப் போனபோதுதான் பார்த்தான் சுவர் முழுக்க போஸ்டர்கள். எல்லாம் கொழு கொழு குழந்தைகளின் படங்கள்.
தலையணையில் ஒருக்களித்துச் சாய்ந்து கொண்டு சிரித்தது ஒன்று. தேங்காய்ப் பூ தூவாலையை முக்காடிட்டுக் கொண்டு குப்புறக் கிடந்தவாறு மலர்ந்தது ஒன்று. தண்ணீர் அளையும் ஒன்று. தலை நிமிர்ந்து சிந்திக்கும் ஒன்று. முகத்தை விடப் பெரிதாய் மூக்குக்கண்ணாடி மாட்டிக் கொண்டு புத்தகத்தை ஆராயும் ஒன்று...
பேச வந்தவன்,மௌனமாய்ப் படங்களைப் பார்த்துக் கொண்டு நின்றான். நெருங்கி ஒவ்வொன்றையும் பார்த்தான். படத்தோடு அதிலிருந்த வரிகளையும் படித்தான். புத்தகம் படிக்கும் குழந்தைப் போஸ்டரின் கீழ் ‘புத்தகங்களே, குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்' என்ற வாக்கியத்தைப் படித்தவன்,
‘வைரமுத்து?' என்றான்.
‘அப்துல் ரகுமான்' என்றாள் மெல்லப் புன்னகையோடு.
‘எனக்கு எல்லோர் கவிதையும் ஒரே மாதிரி இருக்கிறது' என்றான். அவளுக்கு என்ன
சொல்வது என்று தெரியவில்லை.
‘ம்' என்றாள் மெல்ல.
‘உங்களுக்குக் கவிதைகள் பிடிக்குமா?' என்றான் அவன்
‘எழுதுவேன்' என்றாள். ஆனால் அவள் குரல் அவளுக்கே கேட்டிருக்காது
அதற்குள் அவன் அவள் மேசைக்கு நேர் மேலே மாட்டியிருந்த போஸ்டர் முன் நகர்ந்திருந்தான். மற்றப் போஸ்டர்களைப் போலின்றி சட்டமிடப்பட்டு மாட்டிருந்தது. மிளகாய்ச் சிவப்புச் சேலையில் ஓர் இளம் தாய். கையில் முகம் மலர,கண் சிரிக்க, ரோஜாப்பூ நிறத்தில், நாக்கைத் துருத்திக் கொண்டு ஒரு குழந்தை.. கடைவாயில் ஒரு துளிப் பால். கீழே ஒரு நாலுவரி
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்
அர்த்தம் கேட்பானோ? மருங்கு என்றால் இடுப்பு, புல்கில் என்றால் அணைத்தால், உதரம் என்பது வயிறு என மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். ஆனால் எப்படிக் கோர்வையாகச் சொல்வது என்று வார்த்தைகளைத் தேடினாள். ஆனால் அவன்,
‘உங்க கவிதையா?' என்றான்.
‘பெரியாழ்வார்' என்றாள். ‘மக்கு, சமகாலக் கவிதை நடை இல்லை என்பது கூடவா உனக்குத் தெரியவில்லை என மனதுக்குள் சுருங்கினாள். அப்போது சற்றும் எதிர்பாராமல் அவன் ஒரு காரியம் செய்தான். நெருங்கி வந்தான். ‘நீ ராஜலட்சுமி இல்லை, சந்தான லட்சுமி!' என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில் செல்லமாகத் தட்டினான். அவள் திகைப்பு நீங்கித் தலை நிமிரும் முன் அறையை விட்டு வெளியேறிவிட்டான்.
அவள் திடுக்கிட்டாள். முகம் சிவந்தது. அனிச்சையாகக் கை கன்னத்தை வருடிக் கொண்டது. என்ன சொன்னான். சந்தான... சந்தான லட்சுமி!
‘என்ன பேசியாச்சா?' என்றார் அவள் தந்தை.தேர்வு முடிவைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் சிறுவனைப் போல் முகத்தில் ஓர் ஆர்வம்.
லேசான பதட்டம்.
‘ம்ஹூம். பேச முடியாமல் மிரண்டு போய் ஓடி வந்திருக்கிறேன்'
‘மிரண்டா?' ராஜலட்சுமியின் தந்தை மருண்டார்; குரல் பதறியது.‘என்ன சொன்னாள்'
‘அவளைப் பார்த்தல்ல, அங்கிருந்த தமிழைப் பார்த்து'
எல்லோரும் சிரித்தார்கள். பதற்றம் நீங்கி ஆசுவாசம் பரவியது. ‘ஆமாம், அவளுக்கு உசிர் இரண்டு. தமிழ், குழந்தைகள்'
‘தெரிகிறதே, அவள் ராஜலட்சுமி இல்லை, சந்தான லட்சுமி!'
மறுபடியும் சிரித்தார்கள். வாய் விட்டுச் சொல்லாமலே கல்யாணம் உறுதியாகி விட்டது என்பதை அறிவிக்கும் சிரிப்பு அது.
*
‘எதை எடுத்துக் கொள்ளட்டும்?
‘பெரிசு பெரிசா எதையும் எடுத்துண்டு வராதே!'
படங்களைத் துடைத்துக் கொண்டிருந்த லட்சுமி தலையை உயர்த்தி ‘ஏன்?' என்றாள்
‘அங்கே வந்து பாரு, தெரியும்' என்றான் ராமஜெயம்
‘சொல்லுங்க'
‘அங்கே சுவரில் படங்கள் மாட்டுவது அவ்வளவு உசிதமல்ல'
‘ஏன்? சுவரில் ஆணி இறங்காதா?'
‘அங்கே வந்து பாரு' என்றான் மறுபடியும்
*
அங்கே என்று அவன் சொன்னது ஜப்பானை. கல்யாணமான ஏழாம் மாதம் அவனை ஜப்பானில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றியது அவனது நிறுவனம். ஜப்பான் என்றால் டோக்கியோ அல்ல. நகோனா என்ற மலையோர நகரத்திற்கு.
அவர்கள் போயிறங்கிய ஆகஸ்ட் மாதம் அங்கே வெயில் பொலிந்து கொண்டிருந்தது. நாலு பக்கமும் மலைகள். கொஞ்சம் புழுக்கமாக இருந்தது. ஊரின் ஓரமாக சிக்குமா ஓடிக் கொண்டிருந்தது.‘இதுதான் ஜப்பானின் நீளமான நதி' என்றான் ராம்
ஆனால் வீட்டைப் பார்த்ததும்தான் அவன் சொன்ன காரணம் புரிந்தது. நம்மூரைப் போலக் கல் கல்லாக அடுக்கிக் கனமாக, காத்திரமாக, எழுப்பிய வீடல்ல. மர வீடு. வெளிச்சுவர்களில் மட்டும் கம்பி வலைகட்டி சிமிண்டு கொண்டு பூசியிருந்தார்கள்.
‘ஷூவைக் கழற்றிவிட்டு வாருங்கள்' என்றார் வீட்டைச் சுற்றிக் காட்ட வந்திருந்த அதன் உரிமையாளர் மினாதோ. வீட்டின் வெளிப்புறம் செருப்பை வைப்பதற்கு ஒரு மாடம் இருந்தது. அது ஒன்றுதான் கிரானைட் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. மற்றப்படி வீட்டின் தரையெல்லாம் மரம். டைல்ஸ் கிடையாது. மெத்து மெத்தென்ற கார்ப்பெட் கிடையாது. மாறாக பத்தமடைப் பாய் போன்று தரை முழுவதும் போர்த்தி அடித்திருந்தார்கள்.
லட்சுமி அந்தப் பாயைக் காலால் நிமிண்டிப் பார்த்தாள் ‘தத்தாமி' என்றார் வீட்டுக்காரர். என்ன என்பதைப் போல அவர் முகத்தைப் பார்த்தாள் லட்சுமி. ‘மூன்று அடிக்கு ஆறு அடி இருக்கும் இந்தப் பாய்களுக்கு தத்தாமி என்று பெயர். இங்கே அறைகளை சதுர அடிக் கணக்கில் சொல்வதில்லை. பாய் கணக்கில் சொல்வதுதான் வழக்கம். நீங்கள் இருப்பது ஆறு பாய் அறை.உங்கள் படுக்கை அறை சற்று பெரிது அது எட்டுப் பாய் அறை
ஜன்னல்கள் சுவர் போல பெரிது பெரிதாய் இருந்தது. வெளியே பார்த்தாள். நாலடி அகலத்தில் ஒரு வராண்டா. வீட்டுக் கூரை கண்னின் இமை போல முழநீளத்திற்கு வளைந்து நீண்டிருந்தது. அறைக் கதவுகளைத் தள்ளித் திறக்க முடியாது. ஏனெனில் அவை பக்கவாட்டில் நகரும் ஸ்லைடிங் கதவுகள். படுக்கை அறை என அவர் காட்டிய அறையில் கட்டில்கள் இல்லை. ‘நாங்கள் தரையில் மெத்தை விரித்துத்தான் தூங்குவது வழக்கம். உங்களுக்கு வேண்டுமானால் ஃபூட்டான் ஏற்பாடு செய்யட்டுமா?' என்றார் மினாதோ. ராமின் முழங்கையைப் பிறாண்டினாள் லட்சுமி ‘ஃபூட்டானா என்ன? என்று கிசுகிசுத்தாள். ‘கனமான மூன்றடுக்கு மெத்தை' என்றான்.
‘வாருங்கள், ஏதாவது பருகலாம்' என்று அழைத்தார் மினாதோ.டீ வரப் போகிறது என்று நினைத்தாள். ‘சாகே சாப்பிடுவீர்களா?' என்று கேட்டார். லட்சுமி மறுபடியும் முழங்கையை பிறாண்டினாள். அதைப் பார்த்த மினாதோ சிரித்துக் கொண்டே, ‘மென்மையாகத் தானிருக்கும், இது வோட்கா இல்லை. பீர். அரிசியில் தயாரான பீர்!' என்றார் ராமின் கண்ணில் சபலம் தெரிந்தது.
‘சுற்றிலும் இவ்வளவு மலைகள் இருக்கிறதே, ஏன் வீடுகளை கல்லால் கட்டாமல், கான்கிரீட்டில் கட்டாமல், மரத்தில் கட்டியிருக்கிறீர்கள்?' என்றாள் லட்சுமி.
‘நில நடுக்கம் வந்தால் கான்கிரீட் வீடுகள் தாங்காது. அதன் கனத்திலேயே நொறுங்கி விடும். ஆனால் மெல்லிய மரவீடுகள் தப்பித்து விடும். இரண்டு மரக்கட்டைகளை ஆப்புகளால் பிணைத்து விட்டால் அவற்றை எளிதில் பிரிக்க முடியாது!' புரிந்ததோ புரியவில்லையோ என்று தனது இரு கைகளின் விரல்களையும் கோர்த்துக் கொண்டு இழுத்துக் காண்பித்தார்.
‘ஆ! நில நடுக்கம் வருமா?'
‘ம்ம். வந்தது. வரலாம் ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை. இந்த நகரம் புத்தர் அருளால் 1500 வருடமாக பத்திரமாயிருக்கிறது. இங்கு ஒரு ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புத்தர் கோயில் இருக்கிறது. நானே ஒரு நாள் கூட்டிப் போகிறேன். அல்லது நேரம் கிடைக்கும் போது ஒரு நடை போய் நன்றி சொல்லிவிட்டு வந்து விடுங்கள். புதிய ஊருக்கு வந்திருக்கிறீர்கள். அவர் உங்களைக் காப்பார். சொல்ல மறந்து விட்டேனே, அந்தக் கோவிலும் மரத்தால் கட்டியதுதான்'
மினாதோ மென்மையான மனிதர். ஆனால் அவர்
சொன்னது போல் சாகே மென்மையாக இல்லை என்பது அன்றிரவு ராம் அவளைத் தழுவின மூர்க்கத்தில் தெரிந்தது.
*
ராம் ஆபீஸ் போய்விட்டால் பொழுதைக் கொல்வது பெரும்பாடாக இருந்தது. செடிகளோடு பேசினாள். மலைகளோடு பேசினாள் எப்போதாவது வந்து வராந்தா தரையில் அலகைத் தீட்டிக் கொண்டு போகும் ஆரஞ்சுக் கழுத்தும் கருநீல உடலும்
சிவப்புத் தலையும் கொண்ட வினோதப் பறவையோடு பேசினாள். அவ்வப்போது மினாதோவோடு பேசினாள்.
மினாதோ அடுத்த வீட்டில் தனியாகத்தான் வசித்தார். மனைவி இல்லை. அவருக்கும் குழந்தைகளுக்கும் என்று அடுத்தடுத்து இரு வீடுகள் கட்டினார் குழந்தைகள் படித்து கியோத்தாவில் வேலை தேடிக் கொண்டு போய்விட்டார்கள். தனியாக என்றா சொன்னேன்? தனியாக என்பது சரியான சொல் இல்லை. எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார். அவர் டாக்டர். ஆனால் இப்போது பிராக்டீஸ் செய்வதில்லை. அரசு மருத்துவ மனைகளில் 45 வருடங்கள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்று விட்டார். ஆனாலும் அவரிடம் யாராவது
யோசனை கேட்டு வந்து கொண்டிருந்தார்கள். அவருக்கு அதில் உள்ளூறப் பெருமை. ‘எந்த ஒரு டாக்டரும் கடைசி மூச்சு வரைக்கும் டாக்டர்தான்' என்று ஆங்கிலத்தில் ஒருமுறை சொன்னார். ஆங்கிலம் பேசும் அரிதான ஜப்பானியர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவரது ஒவ்வொரு செல்லிலும் ஜப்பான் இருந்தது. ஜப்பானிய இசை, உணவு, சரித்திரம்,
கலாசாரம், அதன் பின்னுள்ள நம்பிக்கைகள் (அவற்றில் சில பிற்போக்குத்தனமானவை என்பது அவர் கருத்து) என லட்சுமிக்கு அந்த ஆறு பாய் அறையிலிருந்தே ஜப்பான் முழுக்கக் காட்டிவிட்டார்.
*
நாள் தள்ளிப் போனபோது முதலில் பதற்றமாகத்தானிருந்தது. அப்படியிருக்குமோ என்று கேள்வி எழுந்தது. ஆம் அப்படித்தான் என்று புன்னகைத்துக் கொண்டே காலமும் டாக்டரும்
சொன்னார்கள். சாகேயின் மூர்க்கமும் ராமின் காதலும் தந்த பரிசுக்கு மது என்று பெயர் வைக்கலாமா என்று கூட யோசித்தாள்.
முதலில் அம்மா வந்தார். மூன்று மாதம் இருந்தார். அதன் பின் மாமியார் வந்தார். அவர்களோடும் மினாதோ பேசினார். அவர்களிருவரும் இந்தியாவைப் பற்றிய அவரது ஆச்சரியங்களை அதிகரித்தார்கள். (‘எங்கு பிணைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியாமல் Seamless ஆக எப்படி போண்டாவிற்குள் உருளைக் கிழங்கை வைக்கிறார்கள்?‘) ஆனால் அவர்கள் ‘அரிகதோ‘ (நன்றி) என்ற ஒரு ஜப்பானியச் சொல்லைத் தவிர எதையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆஸ்பத்ரிக்குப் போகும் முன்‘ஆம்பிளைக் குழந்தைனா, கிருஷ்ணன்னு பேர் வை‘னு போனில் சொன்னார் மாமியார்.
ஆனால் அவர்கள் அநிருத் என்று பெயர் வைக்கத் தீர்மானித்தார்கள்.
*
பெரியாழ்வார் சரியாகத்தான் சொல்லியிருந்தார். தூளி கட்டவில்லை அதனால் அநிருத் அதை உதைத்துக் கிழிக்கவில்லையே தவிர, தொட்டில் சட்டத்தை உதைத்தான். இடுப்பில் வைத்துக் கொண்ட போது துள்ளிக் குதித்தான். மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்ட போது வயிற்றில் எத்தினான். லட்சுமிக்கும் தாங்க சக்தியில்லை ஆனால் சந்தோஷமாக இருந்தது.
பெரியாழ்வார் சொல்லாததும் ஒன்று இருந்தது அருகில் அணைத்துக் கொண்டு உறங்கும் போது காதில் கேட்கும் அவன் இதயத்தின் சப்தம் ஒரு சங்கீதம் என்பது.
அநிருத் வளர்ந்த போது மினாதோவிற்கு அரட்டைக்கு நேரமில்லை. அவனோடு விளையாடவே அவருக்குப் பொழுது போதவில்லை. கலர்க் காகிதங்கள் வாங்கி வந்து இருவரும் ‘ஓரிகாமி‘யில் கொக்கு செய்தார்கள். காகித விளக்கு செய்தார்கள். கிறுக்கலை ஓவியமாக மாற்றக் கற்றுக் கொடுத்தார்.ஜப்பானியர்களின் பம்பரமான ‘பெய்கொமா‘வில் கயிறு சுற்றக் கற்றுக் கொடுத்தார்.கையால் தொடாமல் பந்தைக் காற்றிலேயே வைத்திருக்கும் ‘கெமாரி‘ விளைடினார்கள். வீடியோ கேமில் விழ இருந்தவனை மீட்டுத் தோட்டம் போட்டார். தோட்டம் என்றால் செடி நடுவது மட்டுமல்ல. கூழாங்கற்களைப் பிரித்துப் பரப்புவதும்தான். ஜப்பானியர்களுக்குக் கல்லும் மலர்தான்.
ஏழு வயதில் சைக்கிள் கற்றுக் கொடுத்தார். வார இறுதி நாட்களில் ஆளுக்கொரு சைக்கிளில் இருவரும் ஊரைச் சுற்றினார்கள்.அதில்தான் விதி காத்திருந்தது. என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
*
சற்றே சரிந்து. நதி போல் வளைந்து, பின் சரேலென்று இறங்கி நெடுஞ்சாலையில் பிணைந்தது அந்த மலைப்பாதை. அன்று அதிகாலை பெய்த மழையில் நனைந்து ஈரத்தில் மினுங்கியது.
‘இகோ கா!' என்று வாசலில் இருந்து கத்தினார் மினாதோ. போகலாமா என்ற அந்தக் கேள்விக்கு ‘வரேன்மா!' என்று லட்சுமியிடம் பதில் சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு இறங்கினான். ‘டே! ஹெல்மட் டா!' என்று அவள் அவசரமாக அவன் பின் ஓடினாள். அதற்குள் அவர்கள் தெரு முனை திரும்பி விட்டார்கள்.
இருவருக்கும் சின்ன ரேஸ். அநிருத் பறவையாகிப் பறந்து கொண்டிருந்தான். மினோதாவை முதுமை இழுத்துப் பிடித்தது. என்றாலும் பேரனிடம் தோற்கிற பெரியவர்களின் சந்தோஷத்தில் அவர் அவனை துரத்திக் கொண்டிருந்தார். அவன் அவ்வப்போது திரும்பிப் பார்த்து உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தான்
சரேலென்று இறங்கிய ஈரச் சாலையில் சைக்கிள் சறுக்கி வந்து நெடுஞ்சாலையில் திரும்பிய போது சீறிக் கொண்டு வந்தது ஒரு கண்டெய்னர் டிரக்.
*
என்ன நடக்கிறதென்று லட்சுமிக்குப் புரியவில்லை.ஆனால் திடமாகத்தானிருந்தாள். ராமின் முகத்தைப் பார்த்தாள்.அவன் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். இறுகிப் போயிருந்தான். மினாதோ அருகில் வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்.இருவரையும் பார்த்து, ‘ஸாரி, என்னால்தான் எல்லாம்!' என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். குற்ற உணர்ச்சியில் அவருக்குத் தொண்டை அடைத்தது.
மாறி மாறி இருவர், மூவர் எனக் குழுக்களாக பல டாக்டர்கள் வந்தார்கள். பஞ்சால் கண்ணை வருடினார்கள்.காதில் தண்ணீர் போன்று ஊசியால் செலுத்தினார்கள். மணிக்கட்டினருகிலிருந்து ஊசி மூலம் இல்லாமல் குழாய் மூலம் ரத்தம் எடுத்தார்கள். புரியாத மொழியில் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். முகத்தில் அனுபவம் முத்திரையிட்டிருந்த மூத்த டாக்டர் ஒருவர் வந்து தலை முதல் கூர்ந்து பார்த்தார். கண்ணாடியை நெற்றிக்கு உயர்த்திக் கொண்டு கண்களை இடுக்கிக் கொண்டு காகிதங்களை வாசித்தார். முழங்கையிலும் நெற்றியிலும் உதட்டருகிலும் இருந்த சிறு காயங்களுக்குப் போட்டிருந்த பிளாஸ்திரிகளுடன் ராமின் அருகில் உட்கார்ந்திருந்த மினோதாவிடம் காகிதங்களைக் காட்டிப் பேசினார்.
இருவரும் அருகில் இருந்த அறைக்குள் போனார்கள். சிறிது நேரத்தில் மினோதா வெளியே வந்தார். ஆதுரத்துடன் ராமின் தோளில் கை வைத்தார். என்னுடன் வாருங்கள் என்று கண்ணால் அழைத்தார். லட்சுமியும் அவர்களைப் பின் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தாள்.
‘இவர் டாக்டர் ரென். ஜப்பானின் புகழ் பெற்ற நியூரோ சர்ஜன். நான் அவருடன் சில காலம் பணியாற்றும் பாக்கியம் பெற்றவன்' என்று மினதோ மூத்த டாக்டரை அறிமுகம் செய்து வைத்தார்
‘ஐ ஆம் வெரி சாரி' என்று ஆரம்பித்த மூத்த டாக்டரை நிறுத்தினாள் லட்சுமி
‘டாக்டர், எதையும் மறைக்க வேண்டாம். நேரிடையாகக் கேட்கிறேன். அவன் பிழைப்பானா?'
மூத்த டாக்டர் மினோதாவைப் பார்த்தார். ஜப்பானிய மொழியில் ஏதோ கேட்டார். ‘நீங்கள் அவளிடம்
சொல்லலாம், புரிந்து கொள்வாள்' என்றார் மினாதோ ஆங்கிலத்தில்.
‘வெளிப்படையாகச் சொல்வதானால் உங்கள் மகன் இறந்து விட்டார்'
‘ஓ! நோ!' என்று ராம் மேஜையைக் குத்தினான். விசும்பினான். விசும்பல் வலுப்பெற்று உடைந்து அழுதான். நீ அவனை சமாதானப்படுத்தேன் என்பதைப் போல மினோதா லட்சுமியைப் பார்த்தார். பின் அவரே எழுந்து போய் ராமின் முதுகைத் தடவினார்.
‘நிச்சயமாகச் சொல்கிறீர்களா டாக்டர்? என்று கேட்டாள் லட்சுமி. ‘மூச்சு விடும் போது அவன் மார்பு ஏறி இறங்குகிறது. நான் அவன் உள்ளங்கையைப் பற்றியிருந்தேன். அது இளம் சூடாக இருந்தது'
‘ஹி இஸ் பிரைன் டெட்' என்றார் டாக்டர்
‘அப்படியென்றால்? கோமாவா?'
‘மனித உடல் ஒரு விசித்திர இயந்திரம்.உடலில் வேறு பகுதிகளில் செல்கள் சிதைந்தால் அவை தங்களைக் காலப் போக்கில் புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் மூளையின் செல்கள் சிதைந்தால் அவை புத்துயிர் பெறாது. மூளைத் தண்டில் அடிபடவில்லை என்றால் இதயம் சில மணி நேரம் இயங்கும். இது கோமா இல்லை. கோமாவில் இருப்பவர்கள் தொட்டால் எதிர்வினையாற்றுவார்கள். இமையைத் தொட்டால் கண்ணை உருட்டுவார்கள். ஆனால் மூளைச்
சாவடைந்தவர்கள் எதிர்வினையாற்ற மாட்டார்கள்'
‘நான் சொல்கிறேன் சுருக்கமாக' என்றார் மினாதோ. ‘அவன் இறந்து விட்டான். ஆனால் வாழமுடியும்'
என்ன பேத்தல் இது என்பது போல் ராம் அவரை வெறுப்புடன் பார்த்தான். இந்த நேரத்தில் என்ன புதிர் வேண்டிக் கிடக்கு என்பதைப் போல லட்சுமி புருவத்தை நெறித்தாள்.
‘இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனது உறுப்புக்கள் செயலிழந்துவிடும். அதற்கு முன் அவற்றை எடுத்துச் சேமித்தால் அவற்றைத் தேவைப்படும் இன்னொரு உடலுக்கு மாற்றி அங்கு இயங்கச் செய்யலாம்'
லட்சுமியின் கண்ணில் ஒரு மின்னல் வெட்டியது.
‘நான் இதற்கு சம்மதிக்க மாட்டேன். அவனை எனக்கு முழுசாகத் திருப்பிக் கொடுங்கள்.' என்று இரைந்தான் ராம்.
லட்சுமி அவன் முதுகைத் தடவினாள். லட்சுமியின் கண்களைப் பார்த்த மினோதா ‘கொடுத்தால் மகிழ்வேன். மறுத்தால் வற்புறுத்த மாட்டேன்.
நீங்கள் பேசி முடிவெடுங்கள். ஆனால் சீக்கிரம்' என்று எழுந்து கொண்டார்.
*
அவ்வளவு அழுத ராம் இரண்டு மாதத்தில் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான். இந்தியாவிற்குத் திருப்பி அழைத்துக் கொள்ளுங்கள் என்ற அவன் கோரிக்கைக்கு கையிலிருக்கும் புராஜெக்ட்டை ஆறுமாதத்தில் முடித்து விட்டால் நீங்கள் திரும்பலாம் என்று நிர்வாகம் பதிலளித்து விட்டது. அவன் அதை முடிக்கும் வெறியில் ஆழ்ந்தான்.
எதுவுமே நடக்காதது போல்தான் லட்சுமி நடந்து கொள்வது போல் தோன்றியது. சமையல், வாசிப்பு, ஆரஞ்சுக் கழுத்துப் பறவையோடு பேசுவது எல்லாம் ஏதோ ஓர் இயந்திர கதியில் நடந்து கொண்டிருந்தது. வெற்றுப் பார்வையாக வீதியைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஜன்னல் பக்கம் நிழலாடியது. செருப்புகள் கழற்றப்படும் அரவம் கேட்டது.
கதவைத் திறந்தாள்.
மினாதோ. அருகில் ஒரு ஜப்பானியச் சிறுமி பத்து பன்னிரெண்டு வயதிருக்கும். அது இடுப்பைக் குனிந்து வணங்கியது.
‘யார் இது, உங்கள் பேத்தி வந்திருக்கிறாளா?' என்று மினாதோவைப் பார்த்தாள் லட்சுமி.
‘இல்லை. ஆனால் இவள் உங்கள் குழந்தை'
‘என்ன!', என்பது போல் அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள் லட்சுமி.
‘இதைக் கேளுங்கள், அது சொல்லும்!' என்று கழுத்திலிருந்த ஸ்டெதஸ்கோப்பை அந்தக் குழந்தையின் நெஞ்சில் வைத்து மறுமுனையை லட்சுமியின் காதில் செருகினார். இதயம் துடிக்கும் ஒலி துல்லியமாகக் கேட்டது.
‘அநிருத்தின் இதயம்' முறுவலிக்க முயன்றார் மினோதோ.
ஒரு நிமிடம் அந்தக் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள், லட்சுமி. பின் சடக்கென்று அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள். அடுத்த கணம்- உடைந்து விசும்பி அழுதாள், சந்தான லட்சுமி.
ஜூன், 2022