புளியாமரம்

புளியாமரம்
ஓவியம்: தமிழ்
Published on

தா...லி… வண்டிய எப்படி ஓட்டுறான் பாரு” என்று சத்தமாகத் தன் காலுக்கு நெருக்கத்தில் கடந்துபோன ஆட்டோவைப் பார்த்துக் கத்தினான் ரவி. அதற்குள் ஆட்டோ சிறுபுள்ளியாகத் தொலைவிற்குப் பறந்துவிட்டிருந்தது.

இதுவரை இதுமாதிரியான வார்த்தைகளைப் பேசியவன் இல்லை. பள்ளிக்கூடத்துப் பயல்கள் எல்லாம் சேர்ந்து “டேய் ரவிய நம்ம கூட்டத்துல சேக்காதீங்கடா. அவன் நம்மள மாதிரியெல்லாம் பேச மாட்டான். ரொம்ப நல்லவன்…” என்று சொல்லி எப்போதும் தங்களுக்குள் சிரிப்பார்கள். அவனுக்கும் ஆரம்பத்தில் அது பெருமையாகத்தான் பட்டது. நாளடைவில் வகுப்பில் இருப்பவர்கள் விளையாடச் செல்லும்போதும் கடைக்குச் செல்லும்போதும் ரவியைத் தனித்து விட்டுவிட்டுச் செல்லத் தொடங்கினர். மற்றவர்களைப்போல் கெட்ட வார்த்தை பேசாதது அப்போதுதான் அவனுக்கு ஒரு பெருங்குறையாகப் பட்டது. எத்தனையோ முறை வலுக்கட்டாயமாகப் பேச முயற்சி செய்தும் பார்த்திருக்கிறான். அவனது அம்மா ‘கெட்ட வார்த்த பேசுறதெல்லாம் தப்பு’ என்று அவனுக்குச் சிறுவயதிலிருந்தே புத்திமதி சொல்லி வளர்த்துவிட்டாள். பிள்ளைப் பிராயத்திலிருந்தே மனதில் ‘தவறு’ என்று ஊறிப்போன எண்ணத்தை அவனால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.

முன்பு படித்துக்கொண்டிருந்த பள்ளியில் பணம் கட்ட முடியாமல் இந்த ஆண்டுதான் இந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தான். வந்ததுமுதல் தன் சகாக்களோடு ஒட்டுவதற்குப் பலமுறை யத்தனித்தும் முடியாமல் மன அயர்ச்சியுற்றுப் போனான். இரண்டு மாதங்கள் எப்படியோ கழிந்தன. தனித்தே பள்ளிக்குப் போவான். வருவான்.

இன்று அவனது சகாக்கள் யாரும் விளையாடச் செல்லாததால் அவர்களோடு ரவி கூடி நடந்தான்.

“ஏன்டா என்ன எங்கயும் சேத்துக்க மாட்டறீங்க?”

கூட்டத்திலிருந்த ஒருவன், “டேய் ரவி நீ நல்ல பையன்டா. நீ எங்ககூட சேந்து சுத்துனா நாங்க தான் உன்ன கெடுக்குறோமுன்னு எல்லாரும் சொல்லுவாங்கடா…” என்று சொல்ல கூட்டமே கெக்கலி கொட்டியது. ரவியை நல்லவன் என்று அடிக்கடி சொல்வது அவனிடமிருந்து விலகி இருப்பது என்பதைத்தாண்டி, அவர்கள் பேசுவதை யாரிடமேனும் சொல்லிவிடுவானோ என்னும் பயம்தான் முக்கிய காரணமாக இருந்தது.

‘நல்ல பையன்! நல்ல பையன்!’ என்று சொல்லி, தன்னை அவர்களோடு சேர்த்துக் கொள்ளாமல் விடுவதை ரவியால் தாங்க முடியவில்லை. என்னமோ போலிருந்தது. அங்கிருந்து நகர்ந்து செல்லத் தீர்மானித்தான். அவனுக்குப் பின்னால் வந்த கூட்டத்தினர் அவரவர் வீட்டுச் சாலைகளுக்குத் திரும்பினர். இப்போது ரவியும் அதே தெருவைச் சேர்ந்த மணியும் மட்டுமே நடந்து போயினர்.

அப்போதுதான் அந்த ஆட்டோ, ரவி நடந்து சென்ற புளியமரத்தின் அருகில் வந்து அவனைச் சற்று உரசுமளவிற்கு நெருங்கிப் பாய்ந்து சென்றது. அவனையும் மீறித்தான் அச்சொல் வெளிவந்தது. ரவிக்கே அது ஆச்சரியமாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். பின்னாலிருந்து மணி, ரவியை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தான். அருகில் வந்தததும்,

“டேய் ரவி! உனக்கு எப்பட்றா இந்த வார்த்தையெல்லாம் தெரியும். நீயா இத பேசுனது? என்னால நம்பவே முடியலடா” என்று வாய்பிளந்து கேட்டான்.

மணி அப்படிக் கேட்டதும் ரவிக்கு ஒரே மகிழ்ச்சியாகிப் போனது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களோடு சேர்ந்துகொள்ள முடிவெடுத்தான்.

“டேய் மணி, எனக்கு இன்னும் என்னமெல்லாமோ தெரியும். ஆனா உங்க முன்னாடி பேச வேணாமுன்னு அமைதியா இருப்பேன்டா” என்று பீத்தி மார்தட்டினான்.

“சூப்பருடா ரவி! என்னென்ன தெரியும். எனக்கு கொஞ்சம் சொல்லேன்டா. நானும் கத்துக்கறேன்” என்று கெஞ்சினான்.

தன்னிடம் கெஞ்சிய மணியைப் பார்க்கவே ரவிக்கு ஆனந்தமாக இருந்தது. இத்தனை நாட்களாகத் தன்னை ஒரு பொருட்டாக எண்ணாத கூட்டத்திலிருந்த ஒருவன் தன்முன் மண்டியிடுவது ரவியை ஏதோ செய்தது. இந்தச் சமயத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்கிற உண்மையைப் போட்டு உடைக்க ரவி விரும்பவில்லை. இதுவரை தான் கேட்ட, தனக்கு நினைவில் இருக்கின்ற இரண்டு, மூன்று கெட்ட வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு புதுப்புது கலைச்சொற்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.

சமயங்களில் கழுதை, பன்றி, நாய் என மிருகங்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டான். ரவி சொல்லச் சொல்ல மணி சிரித்தபடியே இருந்தான். மணி சிரிப்பது ரவிக்கும் உத்வேகத்தை அளித்திருக்கும்போல. முதல் முறையாகக் கெட்ட வார்த்தைகளைப் பேசுவது மனதில் ஏதோ ஒருவித குறுகுறுப்பைத் தந்தது. அதுவும் உடனியைந்து ரவியை ஊக்க நெடுநாள் பழகியவன் போலச் சரளமாக வாரி இறைத்தான். அந்தப் புளியமரமே அப்போதைக்கு ரவி தன் உலகத்தினரோடு ஒத்து வாழ்வதற்கு ஏற்ற ஞான மார்க்கத்தை வழங்கிய போதிமரமாக மாறியது.

எல்லாம் ஒருவகையில் முடிவிற்கு வந்தது மாதிரி இருந்தது. “போதும்டா ரவி. என்னால சிரிப்ப அடக்க முடியல. வயிறே வலிக்குது.” என்று மணி சொன்னபின்புதான் நிறுத்தினான். சிரிப்பலைகள் ஓய்ந்தபின் வென்ற மகிழ்வோடு வீட்டிற்குச் சென்றான் ரவி. ‘எப்படியும் மணி சகாக்களிடம் நம்மைப்பற்றிச் சொல்வான். நாளைமுதல் அவர்களோடு சேர்ந்து விளையாடச் செல்லலாம், ஊர் சுற்றலாம்’ என்றெல்லாம் நினைக்கும்போதே பேரானந்தமாக இருந்தது அவனுக்கு. விடிவதற்காகக் காத்திருந்தான்.

மறுநாள் காலை பள்ளியில் வகுப்பறை முழுக்க ரவியைப் பற்றித்தான் பேச்சு. ‘ரவியா பேசினான். உண்மையச் சொல்லுடா. பொய் சொல்லாத…” என்று ஆளாளுக்குத் தன்னிடம் வந்து விஷயத்தைச் சொல்பவர்களிடம் சதா கேட்டபடி இருந்தனர். அவர்களும் “அட ஆமாடா…” என்று பதில் சொன்னபடி இருந்தனர்.

இதற்கிடையில் ரவியும் வந்துவிட்டான். ரவி வந்ததும் எல்லாரும் அவனையே பார்த்தனர். ஏதும் அறியாததுபோல் வகுப்பறையின் தன் இடத்தில் சென்று அமர்ந்தான். அமர்ந்த கொஞ்ச நேரத்தில் அவனை மொய்த்துக்கொண்டனர். ஆளாளுக்கு வந்து, “இவ்வளோ நாளா நம்ம கூட்டத்துல ரவிய சேத்துக்காம விட்டுட்டோம்டா. இனிமே நம்மளோட விளையாட ரவியும் வரட்டும்டா” என்று ஏகமனதாக முடிவெடுத்தனர்.

சாயங்காலம் அவர்கள் வழக்கமாக விளையாடும் தெருவிற்கு ரவியை அழைத்துச் சென்றனர். முதல்முறையாக அவர்களோடு கிரிக்கட் விளையாட வருகிறான். முதலில் அவனிடம் மட்டையைக் கொடுத்து ஆடக்கூறினர். அவனுக்கு அதை எப்படிப் பிடிக்க வேண்டும் என்றே தெரியவில்லை. ‘கையத் திருப்புடா, மாத்திப் புடிடா, திரும்பி நில்லுடா’ என்று அவனைச் சுற்றி, குரல்கள் வந்தபடி இருந்தன. கிரிக்கட் விளையாட்டே தெரியாதவன் என்பது சில நிமிடங்களில் அங்கிருந்தவர்களுக்குத் தெரிந்தது. ரவியிடமிருந்து மட்டையை வாங்கிக்கொண்டு ஃபீல்டிங்கில் நிறுத்தினர். அங்கும் அவனால் களமாட முடியவில்லை. பந்து கையில் பட்டுத் தெறித்து ஓடியது. பிடிக்கமுடியாமல் திணறினான். அங்கிருந்தவர்கள் அவனைப் பரிதாபமாகப் பார்த்துச் சிரித்தனர்.

பந்து அடுத்தமுறை அவனைக் கடந்து சென்று அந்தத் தெருவின் இருமருங்கிலும் கருங்குழம்பாக ஓடிய கால்வாயின் ஒருபக்கத்திற்குள் சென்று விழுந்தது. பந்தைப் பிடிக்க வேண்டும் என்கிற வேகத்தில் ரவி ஒருசிறிதும் யோசிக்காது கையைக் கால்வாய்க்குள் துழாவி பந்தை வெளியே எடுத்தான். அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். தெருமுனையில் இருந்த தண்ணீர் போருக்குச் சென்று பந்தைக் கழுவியும் கொண்டுவந்தான். வந்தவன் இயல்பாக அவர்களிடம் கொடுத்துவிட்டு அவனது இடத்தில் நின்றுகொண்டான்.

இதுபோன்ற சமயங்களில் எப்போதும் அவர்களுக்குள் சண்டைதான். பந்து கால்வாயில் விழுந்துவிட்டால் ‘யார் பந்தை எடுப்பது?’ என்பதில் பெரும் வாய்த்தகராறே நடக்கும். பந்தை அடித்தவன்தான் எடுக்கவேண்டும் என்று ஒரு சாராரும் பந்தைப் பிடிக்காமல் விட்டவன்தான் எடுக்கவேண்டும் என்று மற்றொரு சாராரும் பேசுவர். சில நேரங்களில் யாரும் எடுக்காமல் பந்து கால்வாயிலேயே கிடக்கும். பின்பு யாரேனும் ஒருவர் சமாதானத்திற்கு வந்து கையில் ‘கவர்’ போட்டுக்கொண்டு எடுப்பர். ஆனால் ரவி அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் சட்டெனக் கையை விட்டு எடுத்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. அதற்காக அவனைப் பொய்யாகப் பாராட்டவும் செய்தனர்.

மறுநாளிலிருந்து ரவியை வேண்டுமென்றே கால்வாயின் ஓரத்திலேயே நிற்க வைத்தனர். தொடக்கத்தில் ரவிக்கும் ‘நம்மை விளையாடச் சேர்த்துக் கொண்டதே பெரிய விஷயம்’ என்கிற எண்ணத்தில் அவர்கள் சொல்லும் இடத்தில் நின்று சொன்னபடியெல்லாம் செய்தான். தொடர்ச்சியாக ஒரே இடத்தில் நிற்க வைப்பதையும் கால்வாயில் பந்து விழுந்துவிட்டால் தான் மட்டுமே எடுத்துத் தருவதையும் பத்தாம் நாளில்தான் உணர்ந்தான். இந்தமுறை பந்து விழுந்தபோது எடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டு முறுக்கிக்கொண்டு நின்றான் ரவி.

அப்போது விளையாடிக்கொண்டிருந்த மதன், “என்னடா பந்த எடுக்கமாட்டியா?” என்று கேட்டபடி ரவியை நெருங்கினான்.

மதன் உடன் படிப்பவனெல்லாம் இல்லை. கான்வென்டில் படிப்பவன். விளையாடுவதற்கு மட்டும் மாலையில் வந்து இவர்களோடு சேர்ந்து கொள்வான். மதனைச் சேர்ப்பதில் அங்கு விளையாடுபவர்களுக்கு நன்மையும் உண்டு. ஊர்த் தலைவரின் மகன் என்பதால் எப்போதும் பையில் பணம் வைத்திருப்பான். விளையாடி முடித்ததும் அனைவரையும் கடைக்கு அழைத்துச் சென்று நொறுக்குத் தீனிகளை வாங்கித் தருவான். ஆனால் ரவி ஒருநாளும் சாப்பிடச் சென்றதே இல்லை.

மதனுடைய வீட்டில்தான் ரவியின் அம்மா துணிச் சலவை செய்கிறாள். எப்போதும் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று ரவியிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். அதனால் ரவி மதனிடம் பெரிதாகப் பூசி உறவாட மாட்டான். விளையாட்டு நிமித்தமாக ஒன்றிரண்டு வார்த்தைதான். முடிந்தவுடன் வீட்டிற்குச் சென்று விடுவான்.

இப்போது பந்தை எடுக்க இசையாமல் முரண்டு பிடிக்கும் ரவியை நோக்கி வந்த மதன், “டேய் புளியாமரம். பந்த எடுடா. இல்லன்னா உன் கதைய எல்லார்கிட்டயும் பரப்பிடுவேன்” என்று மிரட்டினான். மதன் இப்படிச் சொன்னதும் ரவிக்குக் கைகால் வியர்த்துப்போனது. ‘இந்த விஷயம் மதனுக்கு எப்படித் தெரிந்தது. நமது பயல்களில் எவனோ ஒருவன்தான் மதனின் நொறுக்குத்தீனிக்கு மயங்கி இப்படிச் செய்திருக்க வேண்டும்’ என்பதை ஊகிக்க ரவிக்கு நேரம் பிடிக்கவில்லை. இப்போது முடியாது என்று சொல்லிவிட்டால் கட்டாயம் மதன் மூலமாகத் தன்னுடைய அம்மாவிற்குத் தகவல் சென்று சேர்ந்துவிடும் என்பது ரவிக்கு நன்றாகத் தெரியும். அந்த இடத்தில் மதனை எதிர்த்துப் பேச இயலாமல் வேறு வழியின்றிப் பந்தை எடுத்துக்கொடுத்தான். மதன் முகத்தில் வெற்றிபெற்ற ஆணவச்சிரிப்பு. ரவி கூனிக் குருகி நின்றான்.

மறுநாளிலிருந்து பள்ளியில் ரவியின் பெயர் ‘புளியாமரம்’ என்றானது. யாருக்கு எந்த வேலை செய்ய வேண்டும் என்றாலும் ‘புளியாமரம்’ என்று சொல்லி ரவியை மிரட்டிச் செய்துகொள்வர். ரெக்கார்டில் படம் வரைவது, தண்ணீர் பிடித்துக்கொண்டு வருவது, கடைக்குச் செல்வது என அந்த வகுப்பின் எழுதித்தரப்படாத எடுபிடி ஆனான். அம்மாவிற்கும் ஆசிரியர்க்கும் தெரிந்தால் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணமே அவனை அத்தனையையும் செய்ய வைத்தது. பல்லைக் கடித்துக்கொண்டு எல்லாவற்றையும் செய்தான்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘புளியாமரம், புளியாமரம்’ என்கிற சொல் அவன் காதில் கேட்டபடி இருந்தது. ‘எல்லாவற்றிற்கும் காரணம் நாமேதான்’ என்று சிலநேரம் நொந்துகொள்வான். சிலநேரம் இப்பெயரால் தன்னை மிரட்டத் தொடங்கிய மதன் மீது வெறுப்பு கொள்வான். எல்லாம் விளையாட்டின் மீதிருந்த மோகத்தினால் விளைந்ததுதான் என்று எண்ணி இனி விளையாடவே செல்லக்கூடாது என்று நினைத்திருந்தான். ஆனால் அதற்கும் அவன் கூட்டாளிகள் விடுவதாயில்லை. எல்லாவற்றிற்கும் ‘புளியாமரம்’தான். வேறு வழியின்றி விளையாடச் சென்றான்.

ஒரு வாரமாகப் படாத துயரமெல்லாம் பட்டபின்பு வழக்கம்போல பந்து கால்வாய்க்குள் விழுந்தது. ‘என்ன ஆனாலும் சரி. இந்த முறை எடுக்கவே கூடாது’ என்னும் உறுதியோடு இருந்தான். எல்லோரும் ஒன்றுகூடி ‘புளியாமரம்’ என்று கத்தினர். அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத ஆற்றாமையால் ரவி ஒடிந்து விழுந்து தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டு கதறி அழுதான். ரவியின் அழுகையை நிறுத்தவும் பின்பு பந்தை எடுத்துக்கொடுக்கவும் ‘புளியாமரம்’தான் உதவியது. ரவியின் வாழ்க்கையை அந்த ஒற்றைச் சொல்லே வழிநடத்தி ஆட்டிப்படைத்தது.

மறுநாள் சனிக்கிழமை. விடுமுறை நாட்களில் எப்போதும் அவனது அம்மாவோடு துணிதுவைக்கும் வீடுகளுக்குச் செல்வான். அம்மாவிற்குத் துணிகளை அலசித் தந்து உதவி செய்வான். நான்கு வீடுகளை முடித்துவிட்டு மதனுடைய வீட்டிற்கு வந்தாள். ரவி உள்ளே வராமல் தயங்கி நின்றான். அம்மா எவ்வளவோ அழைத்துப் பார்த்தும் வரவில்லை.

அப்போது மதனுடைய பக்கத்து வீட்டிலிருந்து இதனைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தி ரவியின் அம்மாவிடம், “என்னன்னு தெரியலக்கா. ரெண்டு பேருக்கும் சண்டபோல. அதான் வரமாட்டேங்குறான். நேத்துக்கூட தெருவுல உன் புள்ள தலைல மண்ண வாரித் தூத்தி அழுதுனு இருந்தான். மதன் வந்து ‘புளியாமர’மின்னு சொன்னதும் அழுவறத நிறுத்திட்டு எழுந்துபோயி காவாயில கெடந்த பந்த எடுத்துப்போட்டு ஓடிட்டான்” என்று சொல்லி நிறுத்தினாள்.

ரவியின் அம்மாவிற்கு ஒன்றும் துலங்கவில்லை. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் யோசித்தபடி ரவியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு மதனுடைய வீட்டிற்குச் சென்றாள். மதனைப் பெயரிட்டு வெளியே அழைத்து, “என்னடா ரவிய புளியாமரமின்னு சொல்லி மெரட்டுறியாமே” என்று வேகமாகக் கேட்டாள்.

ஊர்த்தலைவரின் மகன் என்பதால் எப்போதும் ‘தம்பி! தம்பி!’ என்றே அழைப்பாள். என்றைக்கும் இல்லாத வழக்கமாய் இன்று பெயரிட்டு அழைத்ததை உள்ளேயிருந்து கேட்டுக்கொண்டிருந்த மதனுடைய அம்மா விருட்டென வெளியே வந்தாள்.

“என் வீட்டுல அழுக்குத் துணி தோய்க்குற பொட்டச்சிக்கு என் புள்ளையவே பேரச் சொல்லி, ‘டா’ போட்டு அதட்டிப் பேசுற அளவுக்குத் திமிருத்தனம் வந்திருச்சா” என்று ரவியின் அம்மாவிடம் வரிந்துகட்டி நின்றாள். இருவரும் தங்கள் பக்கத்திற்குப் பேசத் தொடங்கினர். இருவருக்குமிடையே கடும் அமளிதுமளி. சத்தம் கேட்டுத் தெருஜனமே கூடிவிட்டிருந்தது. மதனும் ரவியும் பேசாமல் இருந்தனர். என்னதான் காரணம் என்று ரவியின் அம்மா கேட்டபடியே இருந்தாள். ரவிக்குப் பயத்தில் கிலி ஆடியது. ‘இன்று நம் கதை முடிந்தது. ஒழுங்கீனத்திற்கு உதாரணமாகப் போகிறோம். இத்தனைநாள் நாம் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர் எல்லாம் இன்று ஒரே நாளில் அடக்கமாகப் போகிறது’ என்று பயந்து நின்றுகொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் மதனுடைய அம்மா, “உன் புள்ள இந்த வயசுலயே இல்லாத பொல்லாத வார்த்தையெல்லாம் கத்து வெச்சிருக்குது. இப்பவே என்னவெல்லாம் பேசுதுன்னு தெரியுமா” என்று சொல்லி நான்கைந்து வார்த்தைகளை விட்டெறிந்தாள்.

அவற்றைக் கேட்டவுடன் ரவியின் பக்கம் திரும்பினாள். ரவியின் முதுகு சிவக்கும்படி அடி வெளுத்து வாங்கினாள். ரவியோ ‘நான் பேசலமா, நான் பேசலமா’ என்று கதறி அழுதபடி தரையில் விழுந்து அடிவாங்கித் துடித்துக்கொண்டிருந்தான். கூட்டத்திலிருந்தவர்கள் ‘புள்ளய போட்டு இப்படி அடிக்காதம்மா’ என்று அவளைத் தடுக்க வந்தனர்.

எல்லாரையும் மீறி அடித்துக்கொண்டே ரவியின் அம்மா “கெட்ட வார்த்த பேசுனதாவே இருக்கட்டும். நீ ஏன்டா கண்ட நாயிக்கெல்லாம் பயந்து காவாயில கைய வெக்குற” என்று அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாகக் கத்தியே சொன்னாள்.

ந. சூரிய மூர்த்தி

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். தொடர்ச்சியாக இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். நவீன இலக்கியத் தளங்களிலும் எழுதும் ஆர்வம் உடையவர்.

சிற்றிதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன.  வளரும் எழுத்தாளர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com