பூனை மனிதர்கள்
"நல்லா தான் போ. இதென்ன கைக்குழந்தையாட்டம் காலங்கார்த்தாலே சிணுங்கிட்டு வந்து நிக்குறது?” நேற்றிரவு நீர் விட்டு வைத்திருந்த சோற்றுப்பருக்கைகளை மைய கரைத்தவாறே வாசலுக்கு வந்தாள் ஈஸ்வரி.
எதிரிலிருந்த நான்கு ஜீவன்களும் சிணுங்கலாய்க் குரைத்தன. கேட்டுக்கு முன்னால் அங்குமிங்கும் ஓடி அவளையும் அவள் கையிலிருந்த, சோற்றுத் தவலையையும் எச்சில் சுரக்கப் பார்த்தன. மற்றவற்றைவிட உருவத்தில் சின்னதாய், காலில் அடிபட்டிருந்த கறுப்பி “ஊ” என்று செல்லம் கொஞ்சியது. “இரு வரேன்” என்ற ஈஸ்வரி, ஜன்னல் திட்டிலிருந்த பேசினைக் கழுவி, சோற்றையிட, துள்ளி வந்த நாய்கள் போட்டி போட்டபடி வாய் வைத்தன.
“என்ன பராக்கு பார்க்குற? நீயும் வந்து தின்னு” மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதுமாக இவள் சோறு வைப்பதை ஓரக்கண்ணால் கவனித்து நின்ற ராணியை அழைத்தாள் ஈஸ்வரி. அதுவோ நகராமல் ஆழம் விடுவது போல ஈஸ்வரியைப் பார்த்தது. பிறகு இன்னும் ஒரு படி மேலேறி நின்றது.
“இந்தா… நீயெதுவும் கொடுக்காத. நான் வந்துட்டேன்” குளியலறையிலிருந்து சிவம் கத்தினார். “மனுசனுக்கு காதெல்லாம் இங்க தான். அவரே வர்றாராம் போ” மீதியிருந்ததையும் தட்டிலேயே போட்டுவிட்டு அவள் செல்ல, “சோறு எதுவும் வைக்கலல்ல?” அரக்கப் பறக்க தலையைத் துடைத்தபடி வந்தார் சிவம்.
“ஒழுங்கா குளிச்சீங்களா, இல்லையா? ஏன், உங்க குவினு சோறெல்லாம் திங்காதோ?”
சிவம், பெடிக்ரீ பாக்கெட்டை எடுத்து “குவின், கம் ஹியர்” என்றழைக்க, மின்னலென ஓடி வந்த குவின் அறைக்குள் நுழைந்து ஒரே தாவலாய் சிவத்தின் நாற்காலி மீதேறி தோரணையாக அமர்ந்து கொண்டது. சிவம் அதற்கு வைத்த பெயர் குவின். அவரை வெறுப்பேற்றுவதற்காகவே “ராணி” என்றழைத்து சிவத்தின் முறைப்பை வாங்கி கொள்வாள் ஈஸ்வரி.
சிவத்திற்குப் புசுபுசுவென்று வெள்ளை உடலும், கோலிகுண்டு கண்களும், ரேசர் போல ஊடுருவும் கம்பீரமுமாக இருக்கும் இப்பூனையின் மேல் கொள்ளை பிரியம். எங்கிருந்தோ வந்தது தான். ஈஸ்வரி அயர்ந்திருந்த ஒரு மதியத்தில் மேடையிலிருந்த பால் முழுவதையும் கபளீகரம் செய்த நாளில் தான் அவர்களுக்கு அறிமுகமாகியது.
“இந்த அக்கிரமத்தைப் பாருங்களேன். சிந்தாம சிதறாம துளி சத்தமில்லாம குடிச்சிருக்கு” ஈஸ்வரி கையில் கிடைத்த விசிறி காம்பை அதன் மேல் வீச, “கும்பகர்ணியாட்டம் நீ தூங்கினா அது என்ன பண்ணும் பாவம். வாயில்லாத ஜீவன். இனிமே ஒழுங்கா கதவை சாத்தி வை” என்ற சிவத்திடம் அதுவும் ஒரு அன்பான பார்வையைச் சிந்திவிட்டுச் சென்றது. தன்னை மட்டும் அடிக்கண்ணில் முறைத்துப் பார்த்ததாக ஈஸ்வரிக்குச் சந்தேகம். இப்போதெல்லாம் சந்தேகமே இல்லை. அது தன்னை மதிப்பதேயில்லை, நன்றாகவே புரிந்தது.
ராணியும் சிவம் வீட்டிலுள்ள நேரம் தான் அந்த எல்லைக்குள்ளே வரும். ஏதோ சமஸ்தான இளவரசி போல உடம்பை நிமிர்த்தி, கால்களை அழுந்த பதித்து, எடுப்பாய் நடந்து வரும். ஈஸ்வரியைத் திரும்பியும் பார்க்காது. முதல் சந்திப்பில் நிகழ்ந்த கசப்பை இன்னும் மறக்கவில்லை போலும். “போடி சரி தான்” என்பாள் ஈஸ்வரியும்.
“சாதாரண பூனை தானேனு சுளுவா நினைச்சியா? புலி வம்சம்டி இது” என்பார் சிவம் பெருமையாக.
“ம்க்கும். திமிரு பிடிச்சது. மெச்சிக்குங்க நீங்களே” கடுப்பாய்ச் சொல்லிவிட்டு ஈஸ்வரி எழுந்து செல்வாள்.
“இப்படி கொஞ்சிட்டிருந்தா எப்ப கிளம்புறது?” உணவுருண்டைகளை ராணி நிதானமாகச் சாப்பிட, சிவம் அதன் பாதநுனிகளை வருடியபடி தரையில் உட்கார்ந்திருந்தார். சிவம் அந்நாள் அடிமை போலவும் அது ஆளுமையாகவும் அமர்ந்திருப்பதைக் கண்ட ஈஸ்வரிக்குச் சிரிப்பும் வந்தது. எரிச்சலாகவும் இருந்தது. ‘பெத்த பிள்ளைங்கட்ட கூட இத்தனை பிரியமா இருந்ததில்லையே இவரு?’ என்ற திகைப்பும் ஏற்பட்டது. ‘ஒருவேளை அதுங்க வளர்ந்து வேலை, கல்யாணம்னு ஆனதுக்கப்புறம் தான் இந்த பூனை கிறுக்கு பிடிச்சு போச்சோ!?’ என்றும் நினைத்து கொள்வாள்.
பொறுமையாக பீங்கானைக் காலி செய்த ராணி, சிவத்திடம் ஒரு அமர்த்தலான புன்னகையும், ‘மியாவ்’ வுமாக விடைபெற்று வெளியேற, சிவம் அதன்பிறகே எழுந்து உடையணிந்தார்.
யாரும் ஆறு கிலோமீட்டர் பயணித்து இங்கு வரத் தயாராக இல்லையென்பதால் காலையுணவு மட்டும் கையில். ஹோட்டலில் தங்கியிருந்த மச்சினர் நாத்தனார் குடும்பங்கள் நேரே அம்மா வீட்டுக்கே வந்து விடுவதாக ஏற்பாடு. மதியவுணவுக்கு மெஸ்ஸில் சொல்லி வைத்திருந்தனர்.
பயணம் முழுக்க இருவரும் அமைதியாகவே வந்தார்கள். இது தான் கடைசியாக அந்த வீட்டுக்குப் போகும் பயணம். இனி எப்போது இப்பாதையில் வரப்போகிறார்கள்? எத்தனை ஆண்டுகளாய் நித்திய கடனாய்த் தொடர்ந்த பழக்கம்? ஈஸ்வரிக்குக் கண்களில் நீர் தளும்பியது.
‘இருபது இருபத்தஞ்சு வருஷம் இருக்குமா? சே, அருணுக்கே இப்ப முப்பத்திரண்டு. அவனுக்குப் பிள்ளை பிறந்து மொட்டையும் அடிச்சாச்சு.’ கணக்கிட்டவளின் மனம், ‘பழையபாளையத்துக்கும் வலசுக்கும் போய் வருவது இன்றா, நேற்றா? ஏதோ விவரம் தெரிஞ்சதுலருந்து போய்ட்டு வர்ற மாதிரி தான் இருக்கு’ என்று மலைத்துப் போனது. கல்யாணம் முடித்த சுருக்கில் புதுமணத் தம்பதிகளை வீடு பார்க்கக் கூட்டி வந்து, உடனேயே தனிக்குடித்தனம் வைத்த நாளிலிருந்து தொடங்கிய பயணங்கள் இரு வீட்டுக்குமிடையில்.
ஆயா ஆறு பெற்றாலும் சிவம் மட்டும் தான் அருகிலேயே தங்கி போனது. மற்ற எல்லோரும் தொழில், வேலை என்று நாடெங்கும் கிளை விரித்துச் செழித்தார்கள். சிவம் உள்ளூரிலேயே பிரஸ் வைத்திருக்க, இவர்கள் பிழைப்பு மட்டும் இங்கேயே என்றானது. மாமனார் போனபின் இவர்களுடன் வந்திருக்க எவ்வளவோ சொன்னார்கள். ஆயா அசையவில்லை.
ஆயாவும் லேசான ஆளல்ல. அந்தக்காலத்துத் திடமும் தெம்பும் துணிச்சலுமுள்ள மனுஷி. தாத்தாவும் ஆயாவை வெறுங்கையோடு வைக்கவில்லை. இருக்க வீடு, வாடகைக்கு இரண்டு குடித்தனம், கழுத்து நிறைய நகை, மாதாமாதம் ஓய்வூதியம் என்று நிறைவாகத்தான் விட்டுச்சென்றார். அதனால் ஆயாவுக்கு யாரிடமும் சென்றிருக்கும் தேவையில்லை. விருப்பமுமில்லை. மூத்த இருமகள்களையும் கட்டிக் கொடுத்தபின் மீந்திருந்த ஆண்மக்களை செலவு கணக்கிலேயே வைத்து, திருமணம் செய்து, உடனக்குடன் தனிக்குடித்தனம் வைத்து தாமரையிலை தண்ணீர் போல வாழ்ந்ததில் தாத்தாவையும் ஆயாவையும் அடித்துக் கொள்ள ஆளில்லை தான் அவர்கள் வட்டத்தில்.
வந்த மருமக்களில் ஈஸ்வரி மட்டும் தான் அவர்களை ஆயா, தாத்தா என்பாள். தூரத்துப் பேத்தி என்ற வகையில் அப்படியே பழகிவிட்டது. மற்றவர்களுக்கு அத்தை மாமா தான். கடைக்குட்டி மருமகள் என்பதால் அவர்கள் வயதுக்கும் அவ்விளிப்புப் பொருத்தமாகவே இருந்தது. அதனாலோ என்னவோ பிறரது ஏவல்களுக்கு ஆட்பட்டுப் போவதும் அவளாகவே இருந்தாள்.
ஆயா தனியானபிறகு ரொம்ப வருஷம் செயலாக இருந்தாள். இவர்கள் வாராவாரம் சென்று பார்ப்பது தான். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தழைத்தாலும் இங்கு வர மாட்டாள். இங்கு என்றில்லை. எந்தப்பிள்ளை வீட்டுக்குமே. பெரிய மனையில் தனிக்காட்டு ராணியாக வாழ்பவளுக்கு இண்டுஇடுக்காகச் சிறுபிள்ளைகளின் சத்தத்துடன் இருக்கும் வீடுகள் சவுகரியமும் படவில்லை என்பது தான் உண்மை.
நாள் கிழமைகளில் இங்குக் கும்பிட்டுவிட்டு அங்குச் செல்வார்கள். தீபாவளி பொங்கலுக்கு பலகாரம் கொண்டு போகும்போது ஈஸ்வரி பயந்தபடி செல்வாள். ‘என்ன வடை இது காசாட்டம்? முறுக்கு கடிக்க முடியல, பொங்கல்ல முந்திரியை தேடணுமாட்டு இருக்கு’ நுழைந்த கையோடு பாத்திரங்களைத் திறந்து பார்த்துச் சிரிப்பாள் ஆயா. பலகாரங்கள் சுடுவதிலும் பகுமானாகச் சமைப்பதிலும் விற்பன்னி அவள். பெரிய கை. பாங்கான கைமணமும் கூட. மகள்களுக்குப் பலகாரம் கொடுத்துவிடும்போது கூடைகளில் சுட்டெடுத்து டின்களில் அடுக்கி அனுப்புவாள். அப்படிப் பெருந்திட்டமாய்ச் செய்து ஆண்டு அனுபவித்தவளை வரவு செலவு கணக்கு பார்த்து மாதத்தை ஓட்டும் ஈஸ்வரியால் திருப்தி செய்ய முடிந்ததில்லை, என்றுமே.
அருகிலிருப்பதால் இவளுக்குத் தான் நமுட்டு நகைப்புகளே தவிர, எப்போதாவது எட்டிப்பார்க்கும் மற்ற பிள்ளைகளுக்கு உபச்சாரம் தான் நிகழும். வரும்வழியில் அவர்கள் பிடித்து வரும் இனிப்பையும் மிக்ஸரையும் ஆயா பெருமை பேசுவதைக் கண்டு ஈஸ்வரிக்கு நெஞ்சே விண்டு போகும். கூட இருந்து செய்பவர்களுக்கு எந்தக் காலத்தில் மரியாதை கிடைத்திருக்கிறது? தோட்டத்து மூலிகைகள் களைகள் தான் என்றுமே.
என்னவோ மனுஷி போயும் சேர்ந்தாகிவிட்டது. பாவம் ஆர்ப்பாட்டமாய் வாழ்ந்தவளின் கட்டை கரை சேர்வதற்குள் எத்தனை பாடு? மனதில் வலுவிருந்தாலும் வயது கொஞ்சம் கொஞ்சமாய் ஆயாவை ஒடுக்கித்தான் போட்டது. தோல் கழன்று, உடல் வற்றி, எலும்பு போர்த்திய உருவானாள். மனநிலையும் பிசக, ஏறுக்குமாறாய் நடக்க ஆரம்பித்தாள்.
தன் வீட்டுக்கு வந்தால் தங்கமாய்க் கவனிக்க ஈஸ்வரி தயாரென்றாலும் மற்ற யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. தங்களுக்கும் கேள்வி வருமென்று ஆள் வைத்துப் பார்ப்பதில் தான் குறியாக இருந்தார்கள். ‘ஆறு பெத்துட்டு ஆள் போட்டு பார்க்கலாம்னா ஊர்ல எல்லோரும் சிரிப்பாங்க. இப்ப நாம பண்றது கணக்கா எழுதி நமக்கும் வந்து சேரும்’ என்று ஈஸ்வரி தான் புலம்பி திரிந்தாள். எளியவன் சொல் எந்தக் காலத்தில் ஈடேறியுள்ளது?
ஏஜன்சியில் சொல்லி ஆள் தேடினார்கள். வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். வரும்போது பதவிசாகத் தலையாட்டியவர்கள் நான்கே நாட்களில் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள்.
ஆள் மாற்றிப் போட்டும் பயனில்லை. கை சுத்தமிருந்தவர்கள் ஆயாவின் தொணதொணப்பு தாங்காமல் ஓடினார்கள். இல்லை, ஆயாவே ‘இவ இப்பவே பெட்டியை கட்டணும்’ என்று சிலரை சட்டமாய்ப் பேசி அனுப்பினாள். முழுதாகப் பிரக்கினை இல்லாமலிருந்தால் கூட கவனிக்க சுளுவோ என்று கூடத் தோன்றியது. ஒரு நாள் எல்லா நினைவுகளையும் சேர்த்து வைத்துப் பேசி தீர்ப்பது. அடுத்த நிமிடமே சற்றுமுன் சாப்பிட்டது குளித்தது எல்லாம் மறந்து, பாத்ரூமுக்குள் சென்று துணி உருவிப் போட்டு அமர்வது என்று சிறுகச்சிறுக நினைவு தப்ப ஆரம்பித்தது.
பெண்ணென்ற உரிமையில் நாத்தனார்கள் வேறு படுத்தி எடுத்தார்கள். வேலையாளுக்கு ஒருபங்கெனில் ஈஸ்வரிக்கு இருபங்காக டோஸ் விழ, எல்லாப் பக்கமும் உதைபடும் கால்பந்து போலிருந்தது அவள் நிலை. ‘பெத்தவ நினைவில்லாம இருக்காளே. வந்து இரண்டு நாள் தங்கி பிடிச்சதை சமைச்சு போட்டா அது பிள்ளைங்க. எங்கம்மாவுக்கு பால் தந்தியா, பன்னீர் தந்தியானு அங்க இருந்து சட்டம் பேசினா? என் தலையெழுத்து, உங்களுக்குனு வந்து மாட்டினேனே’ என்று சிவத்தை இடித்துத் தன் எரிச்சலைத் தீர்த்துக் கொள்வாள் ஈஸ்வரி. மச்சினர் பொண்டாட்டிகள் மூவரும் என்ன ஏதென்று ஒருவார்த்தை கேட்க வேண்டுமே!? மூச்….
எப்படியோ எல்லாம் ஓய்ந்து ஈஸ்வரியும் சிவமும் உயிர் தண்ணீர் ஊற்ற, ஆயாவின் நாடி மெல்ல அடங்கியது. பெற்ற மற்ற ஐந்தையும் மனது தேடியதோ, இல்லை இவளைத்தானே இடித்தோம் ஆதி நாளிலிருந்து, கடைசி மட்டும் இவள் தானே செய்கிறாள் என்ற எண்ணமோ, மாலை மாலையாக நீர் வடிந்தபடியே இருந்தது உயிர் போகும் நேரத்தில். “அழாதீங்க ஆயா. அழாதீங்க” என்று கண்களைத் துடைத்துவிட்டபடி தானும் அழுதாள் ஈஸ்வரி.
அது கோவிட் நேரம் என்பதால் யாரும் சுளுவாக வந்து செல்ல முடியவில்லை. பெற்ற பிள்ளைகளும் பெண்களும் மட்டும் பாஸ் வாங்கி வந்தார்கள். ஈஸ்வரியும் சிவமும் ஏற்பாடுகளைச் செய்து வைக்க, எப்படியோ காடு சேர்த்து கல் ஊன்றி கடமை முடித்தார்கள். அம்மா போனதில் சிவம் கூடச் சுதாரித்துக் கொண்டார். ஆயாவுக்காகத் தினமும் ஓடிப் பழகிய ஈஸ்வரிக்குத்தான் வெறுமை அழுத்தியது.
பிறகும் கூட ஆயா நிமித்தமிருந்த கடமைகள் ஓயவில்லை அவளுக்கு. வீடு, அதன் பராமரிப்பு, குடித்தனங்களில் வாடகை வசூலிக்க, கரண்ட் பில், தண்ணீர் வரி கட்ட, மோட்டார் ரிப்பேர் பார்க்க, கிணறு தூரெடுக்க என ஒவ்வொன்றுக்கும் ஓட வேண்டியிருந்தது. எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும் சிவம் காலையில் போனால் இரவு தான் வீடு வருவது.
ஒவ்வொரு மாதமும் கணக்கு பார்த்து, கேள்விகளுக்குப் பதில் சொல்லி, பங்கு பிரித்துப் பணம் அனுப்பி, நொந்து போனாள் ஈஸ்வரி, “பேசாம வித்துடலாம். பொது சொத்தை எத்தனை நாளைக்கு காபந்து பண்றது?” என்று எல்லோரிடமும் பேசி, சம்மதம் வாங்கி, ப்ரோக்கர்களிடம் சொல்லி வைத்து, வீடு காட்ட தினமும் ஓடி, ‘பார்க்கிங் இல்ல, பழைய கட்டிடம்’ என்கிற விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து…. ஈஸ்வரி தளர்ந்து போனாள்.
மெயின்ரோட்டிலிருந்து கூப்பிடுதொலைவில் இருந்த வீட்டை வாங்க ஆட்களும் வராமல் இல்லை. படியும் விலையை மற்ற ஐவரிடமும் சொல்லி ஒப்புதல் வாங்குவது தான் பிரம்மபிரயத்தனமாக இருந்தது. ‘விலை கம்மி’ என்றொருவர். ‘இப்பென்ன அவசரம்?’ என்று இன்னொருவர். ‘கோவிட் ஓஞ்சா விலையேறும்’ இது மூன்றாமவர். ஆனால், அதுவரை யார் யானை கட்டி தீனி போடுவது, அதற்கு விடை யோசிக்க மட்டும் எவரும் தயாராக இல்லை.
இதற்கிடையே இவர்களுடன் தகராறு செய்த தரகனொருவன், “அந்தம்மா ஆவி இங்கதான் சுத்துதாம்” என்று புரளி கிளப்பிவிட, வந்த ஓரிருவரும் பயந்து பின்னகர்ந்தனர். ‘ஏன் ஆயா, இருந்தப்பவும் பாடாபடுத்தின. இப்பவுமா?’ என்று ஈஸ்வரி மேலே பார்த்து திட்டிக் கொள்வாள். வேறென்ன செய்ய?
அப்புறம் ஓரிரு வருடங்கள் வீடு அப்படியே கிடந்தது. ஈஸ்வரி அவ்வப்போது சென்று பெருக்கி துடைத்து விட்டு வருவாள். மினி பஸ் ட்ரைவர், கண்டக்டர் கூட அவளைத் துக்கம் விசாரிக்க, ஒருகட்டத்தில் ஆயாவுக்கே பாவம் என்றாகிவிட்டது போலும். மளிகைக்கடை வைக்கத் தோது என்று இளைஞனொருவன் ஆர்வமாய் வந்ததில் மடமடவென வேலைகள் முடித்து, இதோ நேற்று ரிஜிஸ்தர் ஆபிசில் பத்திரமும் பதிந்து கொடுத்தாகிவிட்டது.
பைசா சுத்தமாய்க் கணக்கு போட்டு அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தி அவன் நேர் செய்ததில் எல்லோருக்கும் நிம்மதி. முக்கியமாய் ஈஸ்வரிக்கு. கணக்கு நோட்டைச் சுமந்து அத்தனை வெறுத்துப் போயிருந்தாள் அவள். அதற்கு வந்தவர்கள் டவுனில் அறையெடுத்து தங்கி இருந்தார்கள். வீட்டைக் காலி செய்து, தத்தம் பங்காகப் பொருட்களைப் பிரித்தெடுப்பது தான் இன்றைய திட்டம்.
‘பெற்றவள் இருக்கும்போது ஒருநாள் வந்து போக முடியா அலுவல், அதுவே இப்போது?’ என்று தோன்றினாலும் எப்படியோ பத்திரப்பதிவுக்கு வந்தார்களே, அதுவரைக்கும் நிம்மதி என்று நினைத்துக்கொண்டாள் ஈஸ்வரி. ‘ஏன் வராம? லட்சக்கணக்குல பணம் வருதுல்ல’ என்றெண்ணியபடி வண்டியை வீடு முன் நிறுத்தினார் சிவம்.
அக்கா குடும்பங்கள் வந்து கொண்டிருக்க, மற்றவர்கள் முற்றத்தில் அமர்ந்திருந்தனர். “எல்லோருக்கும் நல்ல பசி” நடு மச்சினர் கூடையை எடுத்துக்கொண்டார். டிபன் கடை முடிந்து பரணிலிருந்து ஒவ்வொரு பெட்டியாக இறக்கினார்கள். பாத்திரங்களை ஒன்றாகக் குவித்து வைத்தார்கள். இருபெண்களும் அம்மா பீரோவைத் திறந்து பட்டுப்புடவைகளை மடியிலிட்டுப் பிரிக்க ஆரம்பித்தார்கள்.
பெரியவர் மனைவி தனக்கு மிக்சியும் கிரைண்டரும் வேண்டுமென்றாள். அடுப்பையும், குக்கர் வகையறாக்களையும் தன்பங்காக எடுத்து வைத்தாள் அடுத்தவள்.
“நெய் கிண்ணியும், மாவு அடுக்கும், பித்தளை பாத்திரமும் எனக்கு வைச்சிடு ஈஸ்வரி” என்று பெரிய மகள் சொல்ல, “அம்மா பாத்திரம் ஒவ்வொன்னும் கல்லாட்டம் இருக்கும். முறுக்குக்குழல், பலகாரக்கரண்டி, பணியாரச்சட்டி இதெல்லாம் எனக்கு” லிஸ்ட் போட்டாள் சின்னவள்.
ஏற்கனவே அப்பொருட்களை எடுத்து வைத்திருந்த இளைய ஓரகத்தி இவளை முறைத்தாள். “ஆயா இரண்டா வச்சிருந்தாங்க. இருங்க பார்க்கிறேன்” பாத்திரக்குவியலுக்குள் தலை விட்ட ஈஸ்வரி தேடி எடுத்துக் கொடுக்க, அதுவரை முகம் சுண்டியிருந்த சின்னக்கா சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள்.
இப்படிப் புடவை, கட்டில், மேசை, நகைகள் என ஒவ்வொன்றுக்கும் பஞ்சாயத்து பண்ணி, பங்கீடு செய்து, தங்கள் பங்குக்கு என மீந்த சீண்ட ஆளில்லாத உருப்படிகளை நியாபகத்துக்கு என்று எடுத்து வைத்துக்கொண்டு….
“இடியாப்ப அச்சை காணோம். குதிரை ஏணி எங்க? மாம்பழ கலர் பட்டுப்புடவை எங்க தான் போச்சோ?” அதிருப்திகள் அணிவகுக்க, ‘என்ன ஆளுங்கடா?’ சிவம் கடுப்பாக உணர்ந்தார் என்றால் ஈஸ்வரி களைப்பாக உணர்ந்தாள். எப்போது வீட்டில் போய் ‘அக்கடா’வென்று விழுவோம் என்றிருந்தது.
மதியம் சாப்பிட அமர்ந்தாலும் பங்கீட்டில் நடந்த சின்னச் சின்ன உரசல்களில் யாருக்கும் முகம் சரியாக இல்லை. அவரவர் அம்பாரமாய்க் குவித்த உருப்படிகளை விட அடுத்தவர் பங்கையே கண்கள் நோட்டமிட்டன. தங்கத்தையே பெயர்த்துக் கை நிறைய அள்ளிக் கொடுத்தாலும் நிறைகிற மனம் தானே நிறையும்.
அவரவர் பொருள் எடுக்க வண்டி சொல்லி, உருப்படிகள் இடம் பெயர ஆரம்பிக்க, ஆயா ஆண்டு ஆட்சி செய்த வீடு ஒவ்வொரு உறுப்பாக இழந்து நிற்பது போலிருந்தது ஈஸ்வரிக்கு.
“இந்த வீட்டுக்கும் நமக்குமிருந்த உறவு இன்னியோட முடிஞ்சு போச்சு” பெருமூச்சுடன் சிவம் நிற்க, “ம்ம்” என்ற பெரியக்கா திடுதிப்பென்று அழ ஆரம்பித்தாள். “அழாதக்கா…” என்ற சிவத்தைச் சீறுவது போலப் பார்த்தாள்.
“நான் அழுவேன். உனக்கென்னடா? எங்கம்மா வீட்டுக்கு இனி எப்ப வர? அம்மா நல்லாருந்த காலத்தோட போச்சு. எங்க வந்து தங்கினேன்? எந்த சீராட்டலை அனுபவிச்சேன்?”
“தாயத்து போனா சீரத்துப் போகும். இனிமே இங்கனு வண்டியேறி வரவா போறோம்?” என்று சின்னவளும் கண்ணைக் கசக்க, சிவம் விழித்தார். ஈஸ்வரிக்கு கருக்கென்று இருந்தது.
“ஏன் அப்படி சொல்றீங்க? உங்க தம்பி வீடு இருக்கு. அதுவும் உங்க வீடு தானே” குத்தும் முள் தனக்குத்தான் என்று புரிந்த ஈஸ்வரி நயமாகவே சொன்னாள்.
“ம்க்கும். அப்படியே வந்துட்டாலும். கூடப் பிறந்தவளுக்குனு என்ன செஞ்சு கிழிச்சிட்டீங்க. பெருசா பேசுற?”
மச்சினர்களும் அவர்தம் பொண்டாட்டிகளும் யாருக்கோ என நிற்க, வந்து விழுந்த சொற்கள் அனைத்தும் ஈஸ்வரியைக் குறி பார்த்தே எறியப்பட்டன. ‘என்ன செய்யாம விட்டோம்?’ உள்ளே உடைத்துக்கொண்டு வந்தாலும் எதையும் வாய் விட்டுக் கேட்க முடியவில்லை அவளால்.
“எங்கம்மா கழுத்தோட போட்டிருந்த உருண்டைமணி செயின் உன்கிட்ட தானே வந்துருக்கு, பத்திரமா வச்சுக்கோ. எங்கம்மா கழட்டாம போட்டிருந்தது ” அவளுக்குப் புரிந்தது. பையைப் பிரித்து, சிகப்பு மணிகளும் அவற்றை இணைக்கும் சிறு கம்பியும் ஓடிய செயினை எடுத்து நீட்டினாள்.
“இதுவும் ஆயா கைல போட்டிருந்த வளையல் தான். சின்னண்ணி, நீங்க..” அவள் முடிக்கும் முன்பே வளை கை மாறியிருந்தது.
“உங்களுக்குனு வந்ததை கொடுத்துட்ட. அப்புறம் உனக்கு?”
“ஆயாவோட மோதிரமும் தோடும் இருக்கு. அது போதும் சாமி கும்பிட”
“என்னவோ உங்களை மாதிரி நாங்களும் பக்கத்துல இருந்திருந்தா நிறைய செஞ்சுருப்பாங்க. தள்ளி இருந்து… ஒன்னும் அனுபவிச்சிக்க முடியல.”
ஈஸ்வரி வலித்த மனதை நீவி விட்டபடி நின்றாள்.
சில கணங்களிலேயே அழுத முகங்கள் புன்னகை பூச, விட்டேற்றியாய் நின்ற முகங்கள் ‘அப்பாடா கிளம்பலாம்’ என்று நிம்மதியடைய, ஒவ்வொருவராகப் புறப்பட்டார்கள்.
அனைவரையும் வழியனுப்பிவிட்டு, இருந்த குப்பைகளை அள்ளிப் போட்டு, வீட்டைச் சுற்றி வந்தவர்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது கூடத்தில் அனாதையாகக் கிடந்த ஆயாவின் படம்.
நியூஸ்பேப்பர் ஒன்றை எடுத்த ஈஸ்வரி, புகைப்படத்தை சுற்றி எடுத்துக் கொண்டாள். “ஒட்டடைக்குச்சி முதற்கொண்டு பங்கு பிரிச்சு எடுத்துட்டுப் போகத் தெரிஞ்சவங்களுக்கு அம்மாவோட ஃபோட்டோ ஒன்னு வேணும்னு கேட்க தோணல பாரேன்“
“சரி, வாங்க. போற வழில சாவி கொடுத்துட்டு போவோம்” இன்னொருமுறை வீட்டைத் துழாவி கண்களில் நிரப்பிக்கொண்டு கிளம்பினார்கள். திரும்பும்போதும் அமைதி. ஈஸ்வரி பொருட்களுடன் ஆட்டோவில் வர, சிவம் அதை ஒட்டியே வந்தார். வீடு சென்றபிறகு அவள் மடியில் தலை வைத்து கொஞ்சநேரம் படுக்கவேண்டும் போலிருந்தது சிவத்துக்கு.
வாசலில் ஈஸ்வரியின் தோழமைகள் வாலை குழைத்துக் குறைக்க, “இருங்கடா. மீந்ததைக் கொண்டாந்துருக்கேன்” என்றபடி அவள் உள்ளே சென்றாள். சிவம் உள்ளே வர, அவரைப் பின்தொடர்ந்து வந்தது குவின். அதன் வழக்கம் போல அவரையும் தாண்டி நடந்து, நாற்காலியில் அமர்ந்து மிடுக்காகத் திரும்பிப் பார்க்க, சிவம் கொடியில் கிடந்த துண்டை உருவி பட்டென்று உதறினார்.
“முதல்ல தூர போவ சொல்லு அதை. என்ன மெதப்பா வந்து நிக்குது. ஆயிரம் செய்யு, எல்லாம் நன்றி கெட்டதுங்க. வேலைக்காரனா நான், இல்ல என் பொண்டாட்டி தான் அவங்க வச்ச ஆளா?”
முகம் சிவக்க கத்திய சிவத்தை அதிர்ச்சியாய்ப் பார்த்தபடி குவின் நிற்க, கையிலிருந்த படத்தைப் பிரித்துக் கொண்டிருந்த ஈஸ்வரி, “ச்சு…. சும்மா போங்க… யார் மேலேயோ இருக்கிறதை வாயில்லா ஜீவன் மேல காட்டிக்கிட்டு… இந்தா இரு ராணி” என்றபடி உள்ளே சென்றாள்.
பாக்கெட்டை எடுத்து வந்து ராணியின் தட்டில் உணவைக் கொட்டிய ஈஸ்வரி, “ஆயாவுக்கு நம்ம வீட்டுக்கு வரத்தான் இஷ்டம். இல்லைங்க” என்றபடி புகைப்படத்தை அலமாரியில் சார்த்தி வைக்க, ஆயா தங்கள் இருவரையும் கண்கள் அகல பார்த்துக்கொண்டே இருப்பது போலிருந்தது சிவத்துக்கு.