ஒரு கதையின் கதை

drawing
ஓவியம்: பி.ஆர்.ராஜன்
Published on

 கொசுவலை போடப்பட்டிருந்த ஜன்னலின் ஒரு கதவு திறந்திருந்தது.

விளிம்புகளில் எறும்புகள் போர்க்கால வேகத்தில் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்தன.

உள்ளிருந்த “எழுத்துக்கனல்” பால்வெளியனுக்கு அவர் சிறைக்குள் இருப்பது போலவும், எறும்புகள் சுதந்திர உலகில் சஞ்சரிப்பது போலவும் தோன்றியது.

“எழுத்துக்கனல்” பட்டம் எப்படி வந்தது?

திரிபுரக்கட்டத்தூரிலிருந்து நடந்து அல்லது சைக்கிளில் எட்டு கி.மீ. உள்ளே சென்றால் வரும் தேன்புலியூர் “நவீன எழுத்துக் களம்” சார்பில் சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் அது. விருது வாங்கியபின், கூட்ட அமைப்பாளர் சைக்கிளில், பஸ் நிறுத்தம் வரை கொண்டுவந்துவிட்டார். கூட்டத்தில் போடப்பட்ட மாலை, பொன்னாடை, நினைவுப்பரிசு, எல்லோருக்கும் வழங்கப்பட்ட இனிப்பு, காரம் இணைந்த நெகிழிப் பொட்டலம் இரண்டு, எல்லாவற்றையும் ஒரு கட்டைப் பையில் போட்டுக் கொடுத்தனுப்பினார். மேலதிகமாக, அவரது, “நிலவில் தத்தளித்த பூமிக்காரன்” மற்றும் “ஆழ்கடலிலும் அலைபேசி தேடியவன்” என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளிலும் தலா ஐந்து பிரதிகளைப் போட்டுவிட்டார். வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும், “பரவலாகக் கொண்டு போய்ச் சேருங்கள்” என்ற வேண்டுகோளோடு திணித்துவிட்டார். கூடவே, காலில் பட்ட காயம். சைக்கிளை உருட்டிக்கொண்டு அமைப்பாளருடன் வந்தபோது, கல்தடுக்கி கட்டைவிரலில் இரத்தம் வந்து வீங்கிப் பெரிதாகிவிட்டது. வலியோடும் வேண்டாத சுமையோடும் வீடு வந்து சேர்ந்தார்.

“மறக்க முடியாத விருது” என்று ஒரு சமூக ஊடகப் பேட்டியில்கூட பதிவு செய்தார்.

அந்த விருதுக் கூட்டத்தில், மூன்று தொகுப்புகள் போட்ட ஒரு படைப்பாளி தனது பெயரை “பாழ்வெளியன்” என்று உச்சரித்தது, அவருக்கு நாவினாற் சுட்ட வடுவாகப் பதிந்துவிட்டது. தமிழ் மண்ணில், ஆகப் பெரும் படைப்பாளிகளுக்கு நேர்ந்த அவலங்களுடன் ஒப்பிடுகையில், இது Nothing என்று தேற்றிக்கொண்டார்.

பால்வெளியன் உண்மையிலேயே சிறையிலடைத்தது போலத்தான் இருக்கிறார். வெளியில் கால் வைத்து இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. கால் கட்டை இன்னும் பிரிக்கவில்லை.

ஜன்னலுக்கு வெளியே எறும்புகளை மீண்டும் நோட்டமிட்டார். கூட்டம் குறைந்திருந்தது. பாதி வேலை முடிந்திருக்கலாம்.

அதைக் கடந்து எதிர் வீட்டு மாடியைப் பார்த்தார். அங்கே கொடியில் தொங்கிய கறுப்பு நிற மார்புக் கச்சை கண்ணில் பட்டது. அந்த வீட்டில் வசிக்கும் பெண்கள் இவருக்குப் பெரிதாகப் பரிச்சயமில்லை. இருந்தாலும், அவர்களில் இது யாருடையதாக இருக்கும் என்ற தேடலில் மனம் மெல்ல இறங்கியது.

“அட… இதென்ன…. பண்பாட்டுப் பிறழ்வாக இருக்கிறதே…” என்று தன்னைத்தானே தட்டிச் சரிபடுத்திக்கொண்டு, கண்ணாடிக்கு மேல் கண்களை உயர்த்தி – அந்தக் கொடியிலிருந்து நேர் மேலே - வானம் பார்த்தார், கண்கள் சொருகி தமிழமுதம் பருகும் கவிஞனைப் போல.

“தக்க” வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் நேரத்துப் பேரணிக்கு வரும் கூட்டம்போல, மேகம் திரண்டு வந்தது.

பிரபல இணைய இதழுக்கு அனுப்ப வேண்டிய சிறுகதையைப் பாதியில் நிறுத்தியிருந்தார். இப்போது அவருக்குப் படைப்பாற்றல் மீண்டும் ஊறியது.

அது சக்கரம் பொருத்திய சுழல் நாற்காலி. காலை ஊன்றி மேசை நோக்கி நகர்த்தினார். பாதியில் நிறுத்தியிருந்த கதைப் பக்கங்களை எடுத்தவாறு, மீண்டும் நாற்காலியைப் பின்நகர்த்தி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பழைய இடத்தில் நிறுத்திக் கொண்டார்.

விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பித்தார். இரண்டு பக்கங்கள் வேகமாக எழுதினார். இடையிடையே அடித்து திருத்தினார்.

சாப்பாட்டுக்கு, மூன்றாவது அழைப்பு வந்தது. அதற்குப் பிறகும் அமைதி காத்தால், அன்றைய மிச்சப் பொழுதை அது எப்படி வேண்டுமானாலும் திசைதிருப்பிவிடலாம் என்ற ஆபத்து அவருக்கு நன்றாகவே புரியும். எழுத்தை அப்படியே நிறுத்திவிட்டு, சாப்பிட நகர்ந்தார்.

மறுபடியும் வந்து மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தார். எறும்புகள் முன்னர் பார்த்ததைவிட, சொற்ப எண்ணிக்கையில் ஊர்ந்து கொண்டிருந்தன.

அதுகடந்த கண்கள், தன்னால் எதிர்வீட்டு கொடியை நோக்கிச் சென்றன. கச்சை வரிசையில். ஒரு பாவாடை ஈரத்துடன் தென்பட்டது. அப்போதுதான் போட்டுவிட்டுப் போயிருப்பார்கள்போல. தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.

வானம் பார்த்தார். உண்ணாநிலைப் போராட்டம் முடிந்த பந்தல்போல வெறிச்சோடிக் காணப்பட்டது.

மீண்டும் எழுத நினைத்தார். பேனாவை எடுத்தார். ஜெல் பேனா. தீர்ந்துவிட்டது. சலிப்புடன் மேசை டிராயரைத் திறந்து, இருப்பிலிருந்த புதுப் பேனாவை எடுத்தார்.

மீண்டும், ஜன்னலுக்கு வெளியே பார்ப்பதற்கு வாட்டமாக அமர்ந்துகொண்டு, மடியில் அட்டையுடன் பேப்பரை வைத்து எழுத முயற்சி செய்தார். ஊறவில்லை.

“எழுத்துன்னா தவம் மாதிரி”ன்னு விவரமில்லாமலா சொல்லியிருப்பார்கள் என்று தோன்றியது.

லேசாக கொட்டாவி வந்தது. மெல்ல கண் சொருகியது.

“உட்கார்ந்துகிட்டே தூங்கறதுக்கு பேனாவும் பேப்பரும் எதுக்கு..”

உள்ளிருந்து வந்த குரல் கேட்டு, லேசான அதிர்வுடன் பழைய விழிப்பு நிலைக்கு வந்தார்.

எழுதியதை அப்படியே வைத்துவிட்டு பக்கத்திலிருந்த கட்டிலில் படுத்துவிட்டார்.

(இந்த இடத்தில், கட்டையைச் சாய்த்தார் என்று எழுதியிருக்கலாமே என்று தோன்றினால், அவ்வாறே கொள்க. வாசிப்பவர்கள் பங்கேற்பும் இருந்தால்தான் ஒரு படைப்பு முழுமை பெறும்.)

மனத்திரை என்று சொல்கிறார்களே… அதுவா என்று சரியாகத் தெரியவில்லை. எறும்பு, மார்புக் கச்சை, வானம் மூன்றும், மாறி, மாறி தோன்றி மறைந்தன.

பார்வையின் பிரதிபலிப்பு எண்ணமா அல்லது எண்ணத்தின் பிரதிபலிப்பு பார்வையா? கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. இப்படியும் அப்படியுமாக புரண்டு படுத்தார். விடை தேறவில்லை.

மெல்ல எழுந்து கழிப்பறை சென்று வந்தார். மேசையிலிருந்த குவளையில் மீதமிருந்த தண்ணீரை ஒரே இழுப்பில் குடித்தார்.

நாற்காலியை மறுபடியும் அவரது வாட்டமான ஜன்னல் இடத்துக்கு நகர்த்தி அமர்ந்தார்.

இப்போது ஜன்னலுக்கு வெளியே எறும்புகள் இல்லை. எதிர்வீட்டு கொடியில் தொங்கிய பாவாடை நன்றாக காய்ந்திருந்தது.

வானம் நோக்கினார். அடுத்த கண்காட்சி வரை அசையாமலிருக்கும், தடிமனான காக்கித் தாளில் கட்டப்பட்ட புத்தகக் கட்டுகள் போல, எந்தச் சலனமும் இன்றி அப்படியே இருந்தது.

காக்கைகள் இங்குமங்கும் பறந்தன. ஏழெட்டு காக்கைகள் எதிர்வீட்டு வாட்டர் டேங்க் மாடியில் வரிசையாக அமர்ந்தன. மாறி, மாறி கரைந்தன. எல்லாமும் ஒரே அலை வரிசையிலிருந்தது. அவர்களுக்குள் நடக்கும் இந்த உரையாடலுக்கு என்ன பொருளாக இருக்கும்…? யோசித்தார்.

“காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாடிவிட்டுப் போனாரே…. அவருக்குப் புரிந்திருக்குமோ… பலவாறாக யோசனை நீடித்தது.

மறுநாள் காலை ஏதோ அவசர வேலைக்கு தயாராக வேண்டும் என்ற முனைப்புடன் பரபரப்பது போல, திடீரென்று காக்கைகள் வேகமாகப் பறந்து மறைந்தன.

வெளிச்சம் குறையத் தொடங்கியது.

எதிர்வீட்டு மாடியில், ஒரு பெண்மணி வந்து காயப்போட்டிருந்த துணிகளை எடுத்துச் சென்றார். கொடியின் ஓரத்தில், ஒரு பனியன் மட்டும் தொங்கியது. அது அவர் வீட்டு துணி அல்ல போலும்.

வீட்டுக்குள் மின்விளக்கு எரியத் தொடங்கியது. அடுப்பங்கரையிலிருந்து இரவு உணவுக்கான முன்னேற்பாட்டு ஒலிகள் கேட்டன.

மறுபடியும் எழுதலாம் என்று பேப்பரை எடுத்தார். ஜன்னலுக்கு வெளியே இருட்டு. மெல்ல ஒரு வெளிச்சம் தோன்றி நகர்ந்தது. விமானம். எந்த வீட்டிலோ மிக்ஸி அரைக்கும் சப்தம். காதைப் பிளந்தது.

இருட்டுக்குள் எதையோ தேடுவதைப் போலப் பார்த்தவாறே, யோசித்தார்.

“நாவல் என்பது இருட்டில் நழுவி ஓடும் பன்றியைப் பிடிப்பது போல…” என்று கனடா நாட்டு எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் கூறியதாக எப்போதோ படித்த நினைவு. நாவலுக்கே அப்படி என்றால், சிறுகதைக்கு எலி அல்லது சுண்டெலி என்றுதான் கொள்ள வேண்டும். குறுநாவலுக்கு… பெருச்சாளியாகத்தானிருக்கும். இந்த வகையில் பார்த்தால், தாம் எத்தனையோ “சுண்டெலிகளை” பிடித்திருப்பதாக எண்ணி, பெருமிதத்துடன் புன்னகைத்துக் கொண்டார்.

மனத்திரைக் காட்சிகள் மாறி, மாறி கடைசியில் கொடியில் தொங்கிய மார்புக் கச்சையில் “ப்ரீஸ்” ஆனது. அதாவது “நிலைநிறுத்தம்” கொண்டது. அந்தப் பெண்மணி, துணி எடுக்க வந்து சென்ற காட்சிகளை “ரீவைண்ட்” செய்தார். மார்புக் கச்சை, நிச்சயம் அந்தப் பெண்மணியுடையதுதான். பார்வையில் பதிந்த அளவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, இறுதி முடிவுக்கு வந்தார். அது குத்து மதிப்பல்ல. துல்லியத்துக்கு நெருக்கம் என்று அவரே நம்பினார்.

ஒரு நெடுநேரப் புதிருக்கு விடை கண்டுபிடித்தது போல, அவருக்கு உள்ளூர ஒரு திருப்தி.

இந்த “எழுச்சியுடன்” கதையை, விட்ட இடத்திலிருந்து தொடர முயற்சி செய்தார். ஊறவில்லை. அப்படியே வைத்துவிட்டு, இரவு சாப்பாட்டுக்கான அழைப்பை எதிர்நோக்கி, காத்திருந்தார்.

சாப்பிட்டுவிட்டு படுத்தார். மீண்டும் மனத்திரையில் மார்புக் கச்சை. அது மட்டும். எறும்புகளும் வானமும் மறைந்துவிட்டன.

இத்தனக்கும், வானம் மிகப் பரந்து விரிந்தது. உயிரினம் தோன்றிய காலத்திலிருந்து எறும்புகள் இருக்கின்றன.

கொடியில் அது அசைவது இவருக்குள் நிழலாடியது. நித்திரையில் ஆழ்ந்தார்.

காலையில் எழுந்தார். சோம்பல் முறித்தவாறே, திறந்திருந்த ஜன்னல் பக்கம் நகர்ந்து எதிர் வீட்டு கொடியைப் பார்த்தார்.

பழுப்பு நிறத்தில் ஒரு வேட்டி. துவைத்தும் ஓரங்களில் கரைகள்.

திடீர்ப் பிரசவத்தின்போது பொதுப் பார்வையிலிருந்து மறைவாயிருக்க பிடிப்பார்களே… அதுபோல, நன்றாக விரித்துக் காயப் போடப்பட்டிருந்தது.

இன்று எப்படியாவது கதையை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது அவருக்கு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com