நாச்சம்மாவின் பரிசு

நாச்சம்மாவின் பரிசு
பி.ஆர்.ராஜன்
Published on

முதுகுத்தண்டின் அடிப்பகுதியெங்கும் வலி வியாபித்து போர்க்கொடி தூக்கிக்கொண்டிருந்தது. ருக்மணி அங்கே இங்கே என்று திரும்ப முடியாமல் படுத்துக்கிடந்தாள்.

இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று டாக்டர் ராஜவேணி சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து, சமாதானப்படுத்திக் கொண்டிருந்தது.

என்ன சொல்லி வேதனையைப் போக்குவது? தெரியாமல் குணசேகரன் தவித்தான். ‘இதுக்குத்தான் இருந்து விட்டுப் போகட்டும்‘ என்று மனதிற்குள்ளேயே சலித்துக் கொண்டான்.

“தோட்டத்துக்குள்ளே உடாமெ பார்த்துக் கோண்ணு எத்தனெ தடவ சொல்றது... ஏய்யா...' என்று பக்கத்துத் தோட்டக்காரரின் குரல் உரத்ததாய் ருக்மணி வீட்டினுள் படுத்திருந்த நிலையிலும் காதுகளுக்குள் நுழைந்து கலவரப்படுத்தியது.

தன் தோட்டத்திற்குள் பன்றிகள் நுழைந்து விட்டால் போதும். இப்படித்தான் சப்தம் போடுவார். சுந்தரலிங்கம் வனத்துறையில் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். ஆனால் வழக்கத்தை விட சத்தம் உரத்ததாய் இருந்தது.

“அய்யா...சரிங்கய்யா, மேய உடாமெ பார்த்துக்றேன்' என்று தோட்டத்திற்குள் புகுந்த பன்றிகளை வெளியேற்றும் வகையில் துரத்தி விடுவதும் குணசேகரனுக்கு வாடிக்கையாய் போய்விட்ட ஒன்று.

ஆமாம். ருக்மணி பி.எச்.டி., படிப்பை முடித்தாக வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேல் படிக்க வேண்டும். எத்தனை பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன? அதற்குள் இப்படி செய்யாமலிருந்தால் எவ்வளவு துன்பத்திற்குள்ளாகி இருக்க வேண்டும். இந்த லட்சணத்தில் பி.எச்.டி-யை எங்கே முடிப்பது? இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. பன்றி மேய்க்கிற குடும்பம் சுத்தமாய் பிடிக்காமல் தான் காலம் கடந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் குணசேகரேன் எம்.எஸ்.ஸி. விலங்கியல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவன்.

தந்தை வயது முதிர்வு காரணமாக, அவருக்குத் துணையாக இருந்து அப்படியே பழகிப் போய்விட்டது. அவன் பெற்றோருக்குப் பின்னால் பன்றி மேய்க்கும் தொழிலை விட்டு விடுவானோ?

குடியிருக்கும் வீடு ஆறு அறைகள் கொண்ட பெரிய வீடு. ஓட்டு வீடுதான். வீட்டின் இடது புறமுள்ள காலி இடத்தில் இருபதடிக்கு முப்பதடி என்ற அளவில் பன்றிகளுக்கான பெரிய ஓடுகள் வேய்ந்த கொட்டகை. பாக்குத் தப்பை, மூங்கில் தப்பை கொண்டு சுவர் போல் நான்கு புறமும் தடுக்கப்பட்டு அழகாய் இருந்தது. அதையொட்டியே தொட்டி நீளவாக்கில். பன்றிகளுக்குப் பிடித்தது சேறு, சேற்றில் விழுந்து புரள்வது, தொட்டியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் விழுந்து புரள்வது என்பது அவற்றுக்குப் பெரிய சுகம். சீச்சு கீச்சு என்று கத்துவதும் உறுமுவதுமாய் எந்நேரமும். பெரியதாய் இருக்கும் கொட்டகையில் பன்றிகள் அங்குமிங்குமாய் அலைந்தவாறிருக்கும்.

வா வா என்று அழைத்தால் போதும், ட்ர்ர்...ட்ர்ர் என்று உடன் சப்தமும் கொடுத்தால் ஓடி வரும் காட்சியைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருப்பான் குணசேகரன். பெண் பன்றிகள் மீது அலாதி ப்ரியம். அவை தானே இனப்பெருக்கம் செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொடுக்க இருப்பவை. அலட்சியமாகப் பிரியம் காட்டினால் விரலைக் கடித்து விடும். இப்படித்தான் குணசேகரின் நண்பன் செந்திலான் விரலைக் கடித்துத் துண்டாக்கி விட்டது.

குணசேகரன், அவன் அப்பா அங்கண்ணன் பன்றிகளை வளர்த்த விதத்தைப் பார்த்தே தன்னை உருவாக்கிக் கொண்டவன். வயது முதிர்ந்த அப்பா அங்கண்ணன் ஒருபுறமும் அம்மா செல்லம்மா மற்றொருபுறமும் இரண்டு திண்ணைகளில் படுத்தே காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். நடப்பதற்கே சிரமப்படுபவர்கள்.

உறவுக்காரப் பெண் என்பதாலேயே ருக்மணியை குணசேகரனுக்கு கட்டி வைத்தார்கள். குணசேகரன் எம்.எஸ்.சி படித்தவன் என்பதாலேயே பெண் வீட்டாரும் உடன்பட்டார்கள். உடன் பிறந்தவர்கள் நான்கு பெண் மக்கள். அவர்கள் ஏதோ காய்ச்சல் தாக்கி இரண்டு வருடங்களுக்குள் இறந்து போனார்கள். குணசேகரன் பெற்றோருக்கு இப்போது ஒரே பிள்ளை.

ருக்மணிக்கு இங்கேயும் நிரந்தரமாய் தங்கும் எண்ணம் துளியும் இல்லை. பூ மார்க்கெட்டில் இருக்கும் தன் அம்மா வீட்டிற்கு அவள் அண்ணன் ரங்கநாதன் சென்னையிலிருந்து விடுப்பில் தன் மனைவியுடன் வந்து ஒரு மாதமாய்த் தங்கி இருக்கிறான். விடுப்பு முடிய இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன. பிறகு சென்னைக்குப் போய் விடுவான். அதற்கப்புறம் போய்த் தன் வேலையைப் பார்த்துக் கொள்ளலாம். அப்பா அரசு அலுவலகத்தில் பியூனாக இருந்தவர். சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் நாற்பது வருடங்களுக்கு முன் வாங்கிய வீடு. வீட்டிற்கு என்று வாங்கிய கடன்கள் அடைபட அவர் கட்டி வைத்த இரண்டு கடைகளின் வாடகை உதவியாய் இருந்தது. சென்ற ஆண்டு தான் அப்பா காலமானார். அம்மா நன்றாகவே இருக்கிறாள். பூ வாங்கி வந்து மாலை தொடுத்து விற்பனை செய்பவள்.

அம்மா வீட்டிற்கு வந்த பின்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். பெண் மருத்துவர் ராஜவேணியிடம் சென்று வந்ததையெல்லாம் அம்மாவிடம் சொல்லவில்லை. சொன்னால் அம்மா சத்தம் போடுவாள். அவள் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

காலையில் எழுந்தவுடன் தான் குணசேகரனுக்கு நினைவுக்கு வந்தது.

'ஓ..ருக்கு...அம்மா வீட்டிற்குப் போய் விட்டாள்,' காலையில் ஒவ்வொரு நாளும் போய் ஓட்டலிலிருந்து இட்லி வாங்கி வரவேண்டியதில்லை. தன் பெற்றோருக்கும் தனக்கும் தேவையானதை அவனே செய்து கொள்வான். உப்புமா, சப்பாத்தி, சாப்பாடு, தோசை, இட்லி என்று விதவிதமாய்ச் செய்யப் பழகிக் கொண்டவன் குணசேகரன்.

இங்கு வீட்டில் செய்வதை எதையும் சாப்பிடமாட்டாள். தண்ணீர் கூட ‘பிஸிலரி‘ பாட்டில் தண்ணி தான். எதையும் வீட்டிலிருந்து எடுத்துக் கொள்ள மாட்டாள். நாத்தம் நாத்தம் என்று மூச்சைச் சுளிப்பாள்.

வீட்டிற்குள்ளேயே இப்படி. வெளியே வந்தால் சொல்லவே வேண்டாம். முகத்தைச் சுளித்துக் கொண்டும் முனகிக் கொண்டும் இருப்பாள். இவளின் செய்கையும் பேச்சும் குணசேகரனின் மனதைக் கசக்கிப் பிழியும். நல்ல வேளை அவள் தன் அம்மா வீட்டிற்குப் போய்விட்டாள்.

காலை எட்டு மணிக்குள் பன்றிகளுக்கென்று பலகையால் செய்துவைக்கப்பட்டிருந்த தொட்டியில் அரிசிக் கஞ்சி, கழுநீர், சோளக் கஞ்சி, ராகிக் கஞ்சி, பழைய தக்காளி, காய்கறி என்று மாற்றி மாற்றி நிரப்பி வைப்பான். அவ்வப்போது கிடைக்கும் மட்டி, கரும்புச் சக்கை, கரும்பு என்று பன்றிகள் தின்பதற்காகச் சேகரித்துக் கொண்டு வந்து விடுவான். ஆமாம்,  அவனிடம் இருக்கும் இருபது பன்றிகளையும் காப்பாற்ற வேண்டும்.

காலை வைக்கும் உணவு வகைகள் தொட்டியிலிருந்து வெகு விரைவில் காணாமல் போகும். மாலையும் ஐந்துமணி வாக்கில் தொட்டியை நிரப்பி வைப்பான்.

பன்றிகளைச் சரியான முறையில் பாதுகாத்தால் தான் வருமானமும் பார்க்க முடியும். குணசேகரன் முதலில் லுங்கி அணிந்திருப்பான். சில சமயம் பேண்ட்டும் போட்டுக் கொள்வான். இப்போதோ எப்போது பார்த்தாலும் பர்முடாஸோடு தான். டீ சர்ட் தான் விருப்பமாய் போட்டுக் கொள்கிறான்.

வாரா வாரம் ஞாயிறு அதிகாலையில் பன்றி வாங்க வந்து விடுவார்கள், பன்றி இறைச்சி வியாபாரிகள். பன்றிகளை இரண்டு மூன்று என்று பிடித்துப் போய்விடுவார்கள். தொடக்கத்தில் நான்கு பன்றிகள் இருந்தன. ஒவ்வொரு தடவையும் பன்றி, பத்து பதினான்கு என்று குட்டிகளை ஈன்றெடுக்கும்.

ஒரு பக்கம் விற்பனை ஆக ஆக இன்னொரு பக்கம் ஈனும் குட்டிகளின் பெருக்கமும் என அள்ளக் அள்ளக் குறையாது என்பது போல் இருக்கும். தொடர்புடையவர்களின் வீட்டு விசேஷங்கள், திருவிழா சமயங்களில் பன்றி இறைச்சி வியாபாரம் களை கட்டும். பன்றி இறைச்சி வியாபாரிகளிடம் குணசேகரனுக்கு நல்ல பெயர். வெண்பன்றிகளை வாங்கி வளர்க்கும் உத்தேசமும் அவனிடமிருந்தது.

ஒரே இடத்தில் அடைப்பட்டு கிடக்கும் பன்றிகளை சுத்தமான காற்றைச் சுவாசிக்கட்டும் என்று தான் அருகில் இருக்கும் தோட்டத்தை ஒட்டிய தரிசு நிலங்களுக்கு விடுவது. சில சமயங்களில் எதிர்பாராத விதமாய் தோட்டத்திற்குள் நுழைந்து விடுவதும் உண்டு.

குணசேகரன் மேய்ச்சலுக்கு விடுவானேயானால் வீட்டுக் கொட்டகைக்கு ஓட்டி வரும் வரை வெகு கவனமாக இருப்பான். சில சமயம் பிசகு ஏற்பட்டு விடுவதும் உண்டு. தான் படித்த விலங்கியல் முதுகலை அறிவியல் இவன் பணிகளுக்கு உதவுவதாக நினைத்துக் கொள்வான்.

ருக்மணி தன் ஆராய்ச்சிப் படிப்பில் தீவிரமாய் இருந்தாள். நிறைய தரவுகள் கைவசம் இருந்ததால் நெறியாளர் சொல்வதைத் தவறாமல் கடைப்பிடித்து அவரது ‘குட் புக்‘கில் இருந்தாள். அம்மா பூ விற்றுக் கொடுக்கும் பணமே அவள் ஆய்வுப் பணிக்குப் பேருதவியாய் இருக்கிறது.

தன் அம்மாவைப் பார்த்ததும் கட்டிப் பிடித்து அழவேண்டும் போலிருந்தது. எப்படித்தான் பன்றி மேய்க்கும் குடும்பத்திற்கும் தன் குடும்பத்திற்கும் சம்பந்தத்தை ஏற்படுத்தினார்களோ. நீ இங்கு மணம் நிறைந்த பூக்களோடு புழுங்குகிறாய். ஆனால் அங்கு நாற்றமே நிறைந்த பன்றிகள் தான் உறவுக்காரர்கள்.

நல்லவேளை அங்கு வீட்டு வாசலில் பெரிய தொரு வேப்ப மரம். அதன் காற்று நாற்றத்துலிருந்து அவ்வப்போது விடுபட வைத்துக் கொண்டிருந்தது.

அவள் ஆய்வுப் பணிக்கு எடுத்துக் கொண்ட தலைப்பே ‘பழங்குடியின மக்களின் வாழ்வியல் கூறுகள்' பல்கலைக் கழகம் போவதற்கும், நூலகங்கள் போவதற்கும் என இடைவிடாத பணிகளில் மூழ்கியிருந்தாள். மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு ஆசிரியை பணிக்கு விண்ணப்பித்து அது பரிசீலனையில் இருக்கிறது. அது எப்போதோ கிடைக்கட்டும் அதற்குள் முனைவர் பட்டத்திற்குத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

குணசேகரன் பால்ய காலத்திலிருந்தே எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யப்பழகிக் கொண்டான். படிப்பிலும் சமர்த்தன். ஆனால் தனக்கான கல்வித் தகுதிக்கேற்ப ஒரு பணியைத் தேடிக்கொள்வதில் ஈடுபாடு காட்டாமல் போய்விட்டான். சில சமயம் இது குறித்தான வருத்தமும் எப்போதும் மனசுக்குள் படர்ந்து இருந்தே இருந்தது.

ருகமணியை அலைபேசியில் அழைத்தால் எடுப்பதே இல்லை. அழைத்ததே மறந்து போய் இருக்கும். எவ்வளவு நேரம் கடந்து போயிருக்குமோ ‘கூப்பிட்டீங்களா?' என்பாள். உற்சாகம் இருந்தால் தானே ஈர்ப்போடு பேசுவாள்?

‘சரி...முனைவர் பட்டத்திற்காக ஏதாச்சும் வேலையில் இருப்பாள்' என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்வான்.

அவனும் மறந்து போவான். சினையாய் இருக்கும் பன்றிகளைச் சிரத்தை எடுத்துக் கொண்டு கவனித்துக் கொள்வான். குட்டிகளை ஈன்று விட்டாலோ சோளக் கஞ்சியைக் காய்ச்சிக் கொடுப்பான். அப்போது தான் பால் ஊறும். பருமனில் அதிகம் உள்ள ஆண் பன்றிகளுக்குக்கான கவனிப்பை விட குறைந்த பருமன் உள்ள பெண் பன்றிகளைப் பாசத்துடன் பார்த்துக் கொள்வான்.

பன்றிகள் மூக்கோடும் முகத்தோடும் உரசிக்கொண்டு சண்டையிட்டுக் கொள்ளும். அப்போது பார்க்க வேண்டுமே விரைத்து நிற்கும் மயிர்க் கற்றைகளை... முள்ளம்பன்றி நினைவு வந்து விடும். தான் படித்த முதுகலை விலங்கியல் பற்றி அசைபோடுவான்.

ஆயிற்று எல்லாம் ஆயிற்று. குடும்பச் சூழலே மாறிப்போய்விட்டது. அப்பா, அம்மா இருவருமே பத்து நாள் இடைவெளியில் முதலில் அப்பா, அடுத்து அம்மா என்று இறந்து போனார்கள்.

‘யாரோ காட்டில் மாடு மேய்கிறது நமக்கென்ன' என்பது போல இருந்தாள் ருக்மணி. துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் எல்லாம் முகம் சுளித்தாள். ‘எல்லாம் பன்னி மேய்க்கிற குரூப்' என்று ரௌத்ரம் பொங்கியது.

‘பெரிய பி.எச்.டி., படிக்கிறாளாம்...அதுக்கு இப்படியா..நம்ம குணாவை நம் கண் முன்னாலேயே கண்டபடி திட்டுகிறாளே...பன்னி மேய்க்கிறவனாம். பேச்சைப் பாரு பேச்சை... அவன் என்ன படிப்பறிவில்லாதவனா? எம்.எஸ்.ஸி. முதல் வகுப்பில் தேறியவன். அவன் அப்பா அம்மாவை இவனைப் போல யாரும் பார்த்திருப்பார்களா...தன்னை விட்டால் யார் பாதுகாப்பது. போதுமான வருமானம் கிடைக்கிறது என்று தானே நினைத்து இருந்தான். ருக்மணிக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம்' ஆரம்பப் பள்ளி டீச்சர் மல்லிகா வந்திருந்தவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஒரே நாத்தம்...எங்கு பார்த்தாலும் நாத்தம் பன்னிகளிடமிருந்து வருகிற சேற்று நாத்தம்' வழக்கம் போல் இல்லாமல் இன்று அதிகமாகவே பிலாக்கணம் வாசித்தாள்.

‘குணா என்ன செய்யப் போகிறானோ தெரியலையே எப்படித்தான் இவளோடு காலம் தள்ளுகிறானோ...' விவரம் தெரியாத செந்தில் யாரோ அருகிலிருந்தவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

 “முதலிலெல்லாம் இந்த அளவுக்கில்லை. பி.எச்.டி முடிக்கப் போகிறாளே அதனால் தான். தலைக்கனம். ஒரு கொழந்த பிறந்திருந்தா கொஞ்சமாவது நாவை அடக்கிப் பேசியிருப்பாளோ அதுவுமில்லெ...' மல்லிகா டீச்சர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

என்ன காரணமோ ருக்மணி மனசிலும், ‘ஆமாம் கொழந்தை வேணாம்னு தானிருந்தேன்.. பெத்திருந்தா பன்னி நாத்தத்திற்குள் அதுவும் வளர்ந்து..ச்சே‘ என்ற படியே எண்ணம் ஓடியது.

‘பி.எச்.டி., படிப்பதற்குள் எத்தனை சிரமப்பட்டிருப்பேன். பன்னி மேய்க்கிறவனுக்கு வாழ்க்கை பட்டுடேனாம்...' சகமாணவர்கள் சாடை மாடையாகப் பேசிய பேச்சு குணசேகரன் மீது வெறுப்பைச் சீந்துகிற அளவுக்கு ஆகிப்போய்விட்டது.

ஆறு ஆண்டுகள் கடந்து போய் விட்டிருந்தன. ஆசிரியைப் பணி கிடைத்திருந்தது. பி.எச்.டி., பட்டம் பெற்ற பின் அவள் எண்ணம் முழுவதும் மாறிப் போய் இருந்தது. முனைவர் படிப்பிற்காகத் தான் ஆய்வுக்காகத் தேர்வு செய்திருந்த தலைப்பே ‘பழங்குடி மக்களின் வாழ்வில் கூறுகள்'. ஆமாம் அவளை ஒரு பக்குவப்படுத்தப்பட்டவளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

‘ஒரு நாள் மலையாளிப் பழங்குடித் தலைவன் காஞ்சியில் அவர்கள் குடியிருப்பில் குலதெய்வமான நாச்சம்மாவை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது நாச்சம்மாள் அவன் முன் தோன்றி ‘என் காதலரான நாச்சப்பாவிற்கு  பரிசுப்பொருள் தர ஒரு சிறிய விலங்கைத் தரவேண்டும்' என கேட்டாள்.

வணங்கும் தெய்வம் நேரில் தோன்றி பரிசுப் பொருள் கேட்டது குறித்து மகிழ்ந்து போனான். ஏதாவது ஒரு விலங்கினைத் தர வேண்டும் என்று சொல்ல, தெய்வம் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் எனத் தேடி அலைந்தனர் குடியிருப்பில் உள்ளவர்கள். ஒரு சிறிய விலங்கு ஓடி வருவதைப் பார்த்து விரட்டிப்பிடித்தனர். பிடிபட்ட பன்றியை ஒரு கணம் கூட சிந்திக்காமல் உடனே பிடித்துக் கொண்டு போய் நாச்சம்மாளிடம் கொடுத்திட வேண்டும் என விரும்பினான்.

பன்றியை நாச்சம்மாளிடம் கொடுத்தான். நாச்சம்மாள் பன்றியைப் பெற்றுக் கொண்டு ஒரு நொடியில் மறைந்து போனாள். பழங்குடியினர் வியந்தனர். மறுநாள் அடையாளம் தெரியாத ஒருவர் மலையாளிகளின் குடியிருப்புக்கு வந்து நாச்சம்மாள் (பார்வதி), நாச்சப்பா (சிவன்) திருமணத்திற்கு பழங்குடித் தலைவனையும் மற்றவர்களையும் அழைத்தான் தாங்கள் கொடுத்த பன்றி மூலம் நாச்சம்மாளின் காதல் திருமணம் நிறைவேறுகிறதே என வியந்தனர்.

திருமணம் முடிந்த பிறகு நாச்சம்மாள் மலையாளிப் பழங்குடித் தலைவனை அழைத்து, ‘உமது பன்றி மூலம் என் காதலரை மணந்து கொண்டேன். அவ்விலங்கினைக் கொண்டு சென்று வளர்த்துக் கொள்ளுங்கள்,' என்று கேட்டுக் கொண்டாள்.

பன்றி சாதாரணமான விலங்காகக் கருதப்படாமல் சமயத்தோடும் வரலாற்றோடும் பிணைந்துவிட்ட பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கிறது. திருமணத்தில் பன்றியின் பங்கு மிகுதியானது.

ருக்மணி தனது முனைவர் பட்ட ஆய்வுப் பணிக்காக தரவுகள் சேகரிக்கும் போது ‘பழங்குடியினர் வாழ்வியல் கூறுகள்' என்ற தலைப்பிற்குப் பொருந்தி வருகிறதே பன்றியின் பங்கு என வியந்து மெதுவாக மெதுவாக பன்றியின் மீது தான் வைத்திருந்த மதிப்பீடு உயர்ந்திருக்கிறதே என மறுபடியும் மெய்சிலிர்த்தாள்.

இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் தனது புகுந்த வீட்டிற்கு வந்து விடுகிறாள். கொட்டகையில் இருக்கும் பன்றிகளைப் பார்த்துக் கொண்டே வருகிறாள். ஒரு பெண் பன்றி படுத்துக் கிடக்கிறது. அது ஈன்றெடுத்த பத்துக்கும் மேற்பட்ட குட்டிகள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று தள்ளிக் கொண்டு முலைக் காம்புகளில் வாய் வைத்து பாலை சுவைத்துக் குடித்த வண்ணம் இருக்கின்றன.

‘முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து, குழந்தை பெறுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேனே...இப்போது குழந்தை வேண்டும் என்று நினைக்கிறேன்...கிடைக்க மறுக்கிறதே. இத்தனை குட்டிகளுக்கும் ஒரே நேரத்தில் பால் கொடுக்க உன்னால் முடிகிறது. நான் ஒரே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துப் பால் கொடுத்தால் போதும்.'

கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது. பன்றியையும் குட்டிகளையும் தன் நினைவுகளை எங்கும் சிதறவிடாமல் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட நிலையில் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள்.

பின்னால் வந்து நின்ற குணசேகரன் அவள் தோளைத் தொடுகிறான். தொட்டதும் எப்போதும் இல்லாத சிலிர்ப்பு அவள் உடலெங்கும் பரவத் தொடங்குகிறது.

மார்ச், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com