இது வேறு உலகம்

இது வேறு உலகம்
ஓவியம்: தமிழ்
Published on

மாலை நேரத்து வாகன நெரிசல்.  பச்சை சிக்னல் பார்த்தவுடன் நிறைய ஹாரன் சத்தங்கள்.  எப்படியும் தாண்டி விட தீர்மானித்த இரண்டு சக்கர வாகனங்கள் அங்கங்கே குறுக்கே புகுந்து விளைவித்த குழப்பத்தில்,  பொறுமை இழந்த ஆனந்த் கார் ஹாரனை ஓங்கி அழுத்தினார்.  கைகள் வேர்த்துப் போய் ஸ்டியரிங்கில் வழுக்கியது. ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது.  பக்கத்தில் இருந்த மனைவி அருணாவின் முகத்தைப் பார்த்தார்.  அருணா  அவரையே கவனித்துக் கொண்டிருந்ததை அறிந்து தோள்களை உலுக்கி தன் இயலாமையை வெளிப்படுத்தினார்.

அருணா அவரைப் பார்வையால் அமைதிப் படுத்த முயன்றார்.  அருணாவும்  உடைந்து போயிருந்தார்.  சிக்னல் தாண்டியவுடன் "ஒரு காபி சாப்பிட்டு போகலாமா" என்று கேட்டார்.   ரியர் வியூ கண்ணாடியை சற்றே திருப்பிப் பார்த்து, "எனக்கும் ஒரே தலைவலி.." என்றார்  ஆனந்த்.  பின் சீட்டில் இருந்த  அபூர்வா,  ஆனந்தை தீர்க்கமான பார்வை பார்த்து விட்டு சட்டென்று ஜன்னல் பக்கம் திரும்பினாள்.

*****

ஆனந்த் வேலை பார்க்கும் மென்பொருள் அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை போய்க்கொண்டிருந்ததால், வேலையை தக்க வைத்துக் கொள்ள ஆனந்த் போன்றவர்கள் அதிகம் உழைத்து போராடிக் கொண்டிருந்தார்கள்.  அருணா வங்கியில் குமாஸ்தாவாக பணி செய்கிறார்.  காலையில் மூவருக்கும் சாப்பிட ஏதாவது செய்து, மதியத்திற்கு கைக்கும் தயாரித்து, அபூர்வாவை பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பி விட்டு,  ஆனந்த் ரெடியாகும் முன் தானும் கிளம்ப முடிந்தால், அவரோடு  சென்று வழியில் இறங்கி, பத்து நிமிடம் நடந்தால் வங்கியை அடைந்து விடலாம்.

இருவரின் வருமானத்தை நம்பி வாங்கி இருக்கும் வீட்டுக் கடனும், கார் லோனும் முழுவதுமாக அடைய இன்னும் எட்டு ஒன்பது வருடங்கள் ஆகும். ஏழாவது படிக்கும் அபூர்வா அதற்குள் படிப்பு முடித்து செட்டில் ஆகி விடுவாள்.  இவ்வாறாக போய்க்கொண்டிருந்த குடும்பம், சில மாதங்களாக அபூர்வாவின் நடவடிக்கைகளால் ஆடிப்போய் தடுமாறிக் கொண்டிருக்கிறது. 

அபூர்வா....அருணா, ஆனந்த் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன பிறகு பிறந்த செல்ல மகள்.  ஒரே குழந்தை என்பதால் அதிகமான சலுகைகள்,  குழந்தையும் அதீத பிடிவாதம் செய்து தன் விருப்பங்களை சாதித்துக் கொள்வாள். 'எல்லாம் சரியாகி விடும்' என்று தான் அருணாவும் ஆனந்தும் நினைத்தார்கள்.  சென்ற வருடம் ஆனந்த் தனது தேவைக்கு புதிய லேப்டாப் வாங்கியபோது, அவனது பழைய லாப் ஐ அடம்பிடித்து தனதாக்கிக் கொண்டாள் அபூர்வா.  தனது வகுப்பு நண்பர்கள் அனைவரும் கைபேசி வைத்திருக்கிறார்கள், தனக்கு மட்டும் இல்லை என்று அழுது, ஒரு புதிய ஆண்ட்ராய்டு மொபைலும் வாங்கியாச்சு.   தற்பொழுது அவளது உலகம் வேறாகி விட்டது..பெற்றோரிடமிருந்து நிறைய விலகி விட்டது போன்ற நிலை.

*****

'கீதம்' உணவகத்தின் வாசலில் இடம் கிடைக்காததால், சற்று தள்ளி காரை நிறுத்தினார்  ஆனந்த்.  பின்னால் திரும்பிப் பார்த்த அருணாவிடம், "நோ, நான் வரலை, யூ கேன் கோ .."  என்று சொல்லி முகத்தை வேறு திசையில் திருப்பினாள் அபூர்வா.

"பேபி, நாங்க காபி குடிக்கிறோம், நீ  டெசர்ட் ஜூஸ் ஏதாவது சாப்பிடு" என்று ஆனந்த் சொல்ல, கோபத்துடன் கார் கதவை அறைந்து விட்டு முன்னால் நடந்தாள் அபூர்வா.  ஆனந்த் தோளை மெதுவாகப் பற்றினார்  அருணா.

டாக்டர் அஞ்சு மேனன் இடம் செல்வதற்கு முன்பு இருந்ததை விட கௌன்சில்லிங் முடிந்து வெளியே வந்த பிறகு தான் ஆனந்தும் அருணாவும் மிகவும் பாதிக்கப் பட்டவர்களாகத் தெரிந்தார்கள். 

காபியும் ஐஸ்கிரீமும் வந்தது.  டேபிளில் அசாதாரண அமைதி நிலவியது.

அபூர்வா வெகு நிதானமாக ஐஸ்கிரீமை  ருசித்துக் கொண்டிருந்தாள்.  ஆனந்தும் அருணாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்...

அருணாவின் கண்கள் கலங்கி இருந்தது..

'இப்படி ஒரேயடியாக நாம தான் காரணம்னு டாக்டர் சொல்லிட்டாங்களே ...நாம என்ன குறை வச்சோம், எங்கே தவறினோம்..அபூர்வா வுக்கு படிக்க தனியே ரூம் கொடுத்தது தவறா..அவளை திட்டறதில்லை, அடிக்கிறதில்லை, கேட்பதை வாங்கித் தரோமே .. என்ன பிரச்சனை இவளுக்கு?  நல்லா படிக்கிற பொண்ணு, போன வருஷம் மார்க்ஸ் குறைவாக எடுத்ததால் வகுப்பு மிஸ் அழைத்து பேசினார் ..நண்பர்களோடு இரண்டு நாள் டூர் போய் வந்தப்புறம் இன்னும் மாறி விட்டாள். தினம் காலை எழுப்ப வேண்டி இருக்கு...சாப்பாடு நன்றாக இல்லையாம் ..எதற்கெடுத்தாலும் கோபம், வாக்குவாதம் ...

இவளோட லாப், மொபைல் ல என்ன பண்றான்னு நாங்கள் பார்க்க உரிமை இல்லையாம்.. இரவு படுத்தபிறகு போர்வைக்குள் மொபைல் வெளிச்சம்...

அன்று இரவு ஆனந்த் இடம் அபூர்வா பற்றி பேசினார்  அருணா.  முதலில் 'பொறுப்பில்லாத பெண்' என்று ஆனந்த் கத்தினாலும், மனைவியின் குரலில், கண்களில் தெரிந்த பயத்தைக் கண்டு கவலைப்பட ஆரம்பித்தார்.

"என்ன செய்யலாம் அருணா.. இப்போ திடீர்னு  அதிகம் கண்டிச்சா ..ஏதாவது விபரீதமா நடந்துக்குவாளோ.. "  ஆனந்த்.

"ரெண்டு நாளா ஸ்கூல் போக படுத்தறா அவ.  சாயங்காலம்  ஸ்கூல் லேந்து வந்தப்பறம் யூனிஃபார்ம் கூட மாத்தாம மொபைல் பேச ஆரம்பிக்கிறா ...இன்னிக்கு நான் ஆபிஸ்ல மல்லிகாவோடு பேசினேன்.."  அருணா.

"அவங்களுக்கும் இந்த மாதிரி பெண் இருக்காளா ..?"  ஆனந்த்.

"அவங்களோட பெண் எட்டாவது படிக்கிறா..  சிங்கிள் சைல்டு, நம்மள மாதிரி தான் ..ஒரு வருட போராட்டத்திற்கு அப்புறம் டாக்டர் அஞ்சு மேனன் னு கவுன்சிலிங் போய், மூணு சிட்டிங்ஸ் அப்புறம் கொஞ்சம் தேவலைன்னு சொன்னாங்க.  டீடைல்ஸ் வாங்கி வந்திருக்கேன் ..நாமளும் போய் பார்க்கலாமா ஆனந்த்?  அபூர்வா சரியாகணும்.."  அருணா.

"சொந்தங்களுக்கு தெரிஞ்சா குழந்தைய பயித்தியம்னு நினைப்பாங்க, நம்மையும் தப்பா பேசுவாங்க..."  ஆனந்த்.

"பிளீஸ் ஆனந்த்,  நாளைக்கு விசாரிச்சு டேட் வாங்கிடறேன், சனிக்கிழமை நீங்க வீட்ல இருப்பீங்க,  முயற்சி பண்றேன்..."  அருணா.

இப்படியாக டாக்டர் அஞ்சு மேனன் அப்பாயிண்ட்மென்ட் கிடைத்தது.  'அபூர்வாவின் இந்த நடவடிக்கைகளுக்கு நீங்கதான் பொறுப்பு' ன்னு அந்த டாக்டர் சொல்லிவிட்டார்.

*****

மூவரும் உள்ளே நுழைந்தவுடன், இருக்கையைக் காட்டி அமரச் சொன்னார் டாக்டர்.  அங்கிருந்த உதவியாளர் மென்மையான சிரிப்புடன்,  குடிக்கத்  தண்ணீர் வைத்தாள். 

அபூர்வாவின் தோளில் கை வைத்து, "வாட்ஸ் யுவர் நேம் டியர்?" என்று புன்னகைத்தாள்.

"ஐம் அபூர்வா ...ஸோ .."  என்று முறைத்தவளை பெற்றோர் கடிந்தனர்.

அதே சிரிப்புடன் அந்த உதவியாளர் வெளியே நடந்தாள்.

ஆனந்த், "டாக்டர், இவள் வந்து.." என்று ஆரம்பிக்க, இடைமறித்த டாக்டர், "மிஸ்டர் ஆனந்த் நீங்கள் தண்ணீர் குடியுங்கள். மிஸ் அருணா ரிலாக்ஸ் ப்ளீஸ்..இப்போ எனக்குத் தேவை என் பிரண்ட் அபூர்வா தான்.."  என்று சிரித்தார்.

நிமிர்ந்து பார்த்த அபூர்வா கொஞ்சம் சிரித்தாள்.  அந்த டேபிள்  முழுவதும் கண்ணாடியால் போர்த்தப்பட்டிருந்தது.  அதன் மேலிருந்த கண்ணாடி பேப்பர் வெயிட்டை கையால் உருட்டிக் கொண்டிருந்தாள் அபூர்வா.  ஆனந்தும் அருணாவும் அவளை கோபத்தோடு பார்த்தார்கள்.

"அபூர்வா டியர், உனக்கு இந்தச் சத்தம் ரொம்ப பிடிச்சிருக்கோ.." என்று அதே நிதானத்தோடு டாக்டர் கேட்க,

"நோ .." என்று  பேப்பர் வெயிட்டை அதன் இடத்தில் வைத்தாள்.

"ஓகே டியர், வெளியே அந்த கேஜ் ல நிறைய கலர் பர்ட்ஸ் இருக்கு, நீ போய் விளையாடு"  என்று வெளியில் அனுப்பினார் டாக்டர் அஞ்சு மேனன்.

"என்னோட உதவியாளர் அங்க இருக்காங்க, பார்த்துப்பாங்க..டோன்ட்  வொரி. சரி, இப்பொ சொல்லுங்க"

அருணாவும் ஆனந்தும் அடுத்தடுத்து பேசினார்கள். ஆனந்த் சற்று கோபத்துடனும், அருணா மிகுந்த வேதனையுடனும் சொல்லி முடித்தார்கள்.

நிமிர்ந்து வெளியே பார்த்து விட்டு டாக்டர் பேச ஆரம்பித்தார்...

"...ஸோ, ரெண்டு பேரும் வேலைக்குப் போறீங்க.. அபூர்வா ஒரே குழந்தை, அதீத செல்லம், கேட்பதையும் விட அதிகமா வாங்கித் தரீங்க.. அவளை எந்த வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்துவது இல்லை...

இப்போ அபூர்வா கிட்ட பிரச்சனை இருக்கறதா சொல்றீங்க... அவளோட  நடவடிக்கைகளை நீங்க ஆரம்பத்திலேயே கவனித்து இருக்கலாம்..உங்களுக்கு நேரம் இல்லைன்னு சொல்ல முடியாது.

இரவு டின்னர் சாப்பிடும் போது டிவி யில் சீரியல் பார்ப்போம் னு அருணா சொன்னாங்க.  ஆனந்த் ஆபிசிலிருந்து வரவே லேட் ஆகுது, வந்தப்புறமும் ஆபிஸ் வேலைன்னு  சொல்றீங்க..வாரக்கடைசி விடுமுறை நாட்கள்ல தியேட்டர் போறீங்க, வெளியே சாப்பிடுவது வழக்கமா இருக்கு...

குழந்தைகளுக்கு இது ஒரு சென்சிடிவ் பீரியட் .. சில வருடங்களுக்கு முன்னால் 14, 15 வயதில் தெரிந்து கொண்ட விஷயங்கள், இப்போ இருக்குற டெக்னாலஜி மாற்றத்துல  11, 12 வயதிலேயே தேடறாங்க, தெரிஞ்சுக்கறாங்க.. அபூர்வாவுக்கு 12 முடியப்போகுது.  அப்பா அம்மா எப்பவும் பிசி..  ஸ்கூல் ல கேட்காத போதே  லேப்டாப்  கொடுத்திருக்கீங்க ..

தப்பை தப்புன்னு தெரியாம செய்ய ஆரம்பித்து, படிப்படியா அடிமை ஆயிடறாங்க.. ஒரு சின்ன வட்டத்தை உருவாக்கி, அதிலேயே மூழ்கிப் போறாங்க... ஒரு தனி உலகத்தை ஏற்படுத்திக்கிறாங்க... ஒரு சிலரோட சைபர் கிரைம் விளையாட்டுக்கு ஆட்பட்டு, மீளமுடியாமல் .... புளூவேல் னு கேள்விப்பட்டு இருப்பீங்க..6, 7 வருஷத்துக்கு முன்னாடி எத்தனை குழந்தைகள் தற்கொலை செஞ்சுகிட்டாங்க...  அப்புறம், இந்த  பப்ஜி (Pub G), பிரீ பாயர் (Free Fire) னு எத்தனை எத்தனை...மனதை, உடலை கெடுத்து, வாழ்வை தொலைக்கும் அளவுக்கு இந்த டீன் ஏஜ் குழந்தைகள் நிறைய இருக்கிறார்கள்...."

டாக்டர் பேசுவதை நிறுத்தி தண்ணீர் எடுத்து பருகினார்.

உறைந்துபோன அருணாவும் ஆனந்தும், "டாக்டர், எங்க குழந்தை அந்த மாதிரி இப்போ பாதிக்கப் பட்டு இருப்பாளா..?" என்று ஏகக்  குரலில்  கேட்டார்கள்.

"அப்படி இருக்க வேண்டாம்...இன்றைய சூழ்நிலையை சொன்னேன்... அபூர்வா உடனான உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள்...உங்களை மாதிரி  Gen Alpha கிட்ஸ் ஓட  பெற்றோர்கள் (Gen-Alpha kids...2010 க்கு பிறகு பிறந்த குழந்தைகள்) முக்கியமா குழந்தைகளை வெளி உலக ஆபத்திலிருந்து எப்படி காக்க நினைக்கிறீர்களோ, அதே மாதிரி  ஆன்லைன் ஆபத்திலிருந்தும் அவர்களைக்  காப்பாற்ற வேண்டிய நிலை .."

இன்னும் கொஞ்சம் பேசிய பிறகு டாக்டர் அஞ்சு மேனன், அவர்கள் இருவரையும் அடுத்த மாதம் வருமாறு பணித்தார்.

டேபிள் மேல் வைத்திருந்த கார் சாவியை காணாது திகைத்த ஆனந்த் ஐப் பார்த்து புன்னகைத்தார் டாக்டர்..

"சார்..நீங்க கவனிக்க வில்லை.. அபூர்வா எழுந்து போகும்போது உங்க கார் சாவியை எடுத்துப்போய் விட்டாள். ..உங்க பின்னால ஜன்னல் வழியா பாருங்க ..அதோ கார் பின் சீட்டில் உட்கார்ந்து இருக்கா அபூர்வா. என்னோட உதவியாளர் பார்வையில் தான் அவள் இப்போ இருக்கா..  குழந்தையைக் கண்டிக்க வேண்டாம், போய் வாருங்கள் .."  என்றார்.

அருணாவும் ஆனந்தும் காரை நெருங்கினார்கள்.  காரின் சாவியை ஆனந்திடம் கொடுத்து விட்டு, அந்தப்பக்க ஜன்னலுக்கு மாறினாள் அபூர்வா. 

*****

காபி சாப்பிட்டு விட்டு, வீடு நோக்கி செல்லும் வழியில் பூக்கடையைப் பார்த்த அருணா, "வீட்டிற்கு பூ வாங்கணும், கொஞ்சம் நிறுத்துங்க .." என்றார்.  சற்று தள்ளி ஒரு வீட்டின் கேட்டு அருகில் காரை நிறுத்தினார்  ஆனந்த்.  அருணா பூ வாங்க இறங்கிப் போனார்.

திடீரென்று "ஹாய் ஜான்" என்று கத்தியபடி அபூர்வா காரிலிருந்து இறங்கியதை கவனித்துப்  பதறிப்போன ஆனந்த், 'ஜான்' யார் என்று பார்க்க கீழே இறங்கினார்.   தன் வீட்டு வாசலில் கார் வந்து நிற்பதைப் பார்த்த பெண் ..ஜான், ஜானு  என்கிற ஜானவி, தன் வகுப்புத் தோழி காரிலிருந்து இறங்குவதைக் கண்டவுடன், ஓடிச்சென்று "ஹாய் அபூர்வா .." என்று அவளைக் கட்டிக்கொண்டாள்.

தனது தாயார் பூ வாங்குவதைக் காட்டினாள் அபூர்வா. இருவரும் அருணாவை நெருங்க, அபூர்வா தன் வகுப்புத் தோழியை அறிமுகப்படுத்தினாள். 

"ஆண்ட்டி, இது தான் எங்க வீடு, உள்ளே வாங்க.."   பாவாடை சட்டை அணிந்து, தலையில் மல்லிகை வைத்து, முகம் மலர அழைத்த ஜானுவை கன்னத்தில் தட்டி, அவர்கள் வீட்டிற்குத் தனியாக பூ வாங்கிக்கொண்டு, ஆனந்திடம் 'ஒரு பத்து நிமிஷம்' என்று சொல்லி, அனைவரும் உள்ளே நுழைந்தார்கள்.    ஜானுவின் குரலால் வெளியே வந்த அவள் தாயார் கவிதா, முகமன் சொல்லி அனைவரையும் உள்ளே அழைத்துப் போனார்.

"ஜானவி அப்பா வர நேரம் தான்..இதோ காபி கொண்டு வரேன்.  ஜானு தன்னோட  பிரெண்ட்ஸ் பத்தி பேசுறப்போ அபூர்வா பத்தியும் சொல்லி இருக்கா ..'ஸ்வீட் கேர்ள்..'.." என்று அபூர்வாவைக் கட்டிக்கொண்டார்.

"இப்பத்தான் காபி சாப்பிட்டோம், குடிக்க தண்ணீர் குடுங்க ..இன்னொரு நாள் வரோம் .." என்று கவிதாவின் கைகளைப் பற்றிக் கொண்டு  அருணா சொன்னார்.

கேட்டைத் திறந்து, சைக்கிளை  வளைத்து ஓட்டி, சட்டென்று நிறுத்தி உள்ளே நுழைந்த மகனைக் காட்டி, " ஜனார்தன், ஜானுவின் அண்ணன், ஒன்பதாவது படிக்கிறான்" என்று அறிமுகப்படுத்தினார்  கவிதா.  புத்தகப் பையை அதன் இடத்தில் வைத்து விட்டு எல்லோரையும் பார்த்தான் ஜனா.

"ஸ்கூலேந்து திரும்ப இத்தனை நேரம் ஆகுமாப்பா..?"  ஆனந்த்.

"அடுத்த வாரம் எக்ஸாம்ஸ்  ஆரம்பிக்குது,  இன்னும் ரெண்டு  பிரெண்ட்ஸோட சேர்ந்து படிச்சுட்டு வரேன் அங்கிள்..அதான் லேட்.."   உள்ளே ஓடிய ஜனா ஐந்தே நிமிடத்தில் கை கால் கழுவி, உடை மாற்றி வந்து, ஜானவியின் தோளில் கிள்ளி விட்டு அமர்ந்தான்.  இருவரையும் கண்கள் விரிய பார்த்து புன்னகைத்தாள் அபூர்வா.

வாசலில் ஸ்கூட்டர் சத்தம்...."ஜனா அப்பா வந்துட்டாரு .." என்றபடி வெளியே சென்றார்  கவிதா.

தன் வீட்டில் இல்லாத ஒரு அமைதியான சூழ்நிலை இங்கு இருப்பதை உணர்ந்தாள் அருணா. 

வீட்டில்  இருக்கும் பொருட்கள் அதனதன் இடத்தில் நேர்த்தியாக வைக்கப்பட்டிருப்பதை கவனித்தான் ஆனந்த்.

"வாங்க, வாங்க.. ஒரே டிராபிக், லேட்டாயிடிச்சு ..ஐம் ஶ்ரீதர் ...கவிதா, சாப்பிட ஏதாவது கொடுத்தியாம்மா.."

"உங்கள பார்த்துட்டு கிளம்பலாம்னு இருந்தோம் ..இன்னொருநாள்..." என்றபடி எழுந்த ஆனந்தை அமர்த்தி, ஶ்ரீதர் கவிதாவிடம், "எனக்கு சூடா லெமன் டீ தரியா, அப்படியே இவங்களுக்கும் உனக்கும் சேர்த்து நாலு கப்.."    தொடர்ந்து ஜானவியைப் பார்த்து, "குட்டிமா, உன்னோட டிராயிங்..ஜனாவோட ஸ்டாம்ப்ஸ் புக் எல்லாம் உன் பிரெண்டுக்கு காட்டு" என்றவர், "ஜஸ்ட் டூ மினிட்ஸ் பிளீஸ் .."  உள்ளே சென்றார் ஶ்ரீதர். 

ஜானவி, அபூர்வாவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துப்  போனாள்.  அருணா, ஆனந்த் இருவரையும் பார்த்து நட்புடன் சிரித்தான் ஜனா. 

'நாமும் இன்னொரு குழந்தை பெற்றுக்கொண்டிருக்க வேண்டுமோ'  என்று எண்ணினாள் அருணா... ஆனந்த் தன் கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தான்.

லெமன் டீ தயாரித்து டிரே யில் எடுத்து வந்தார்  கவிதா.

"ஜனா, இந்த ஸ்டாம்ப் எந்த கன்ட்ரிதுடா .."  ஜானுவின் குரல் கேட்டு,  ஜனா உள்ளே சென்றான்.

வேஷ்டி, டி ஷர்ட் க்கு மாறி இருந்த ஶ்ரீதர், நெற்றியில் சிறிய விபூதிக் கீற்றுடன் வந்து அமர்ந்தார்...

நால்வரும் நிதானமாக  தேநீரை பருகினார்கள்.

அருணா, "தேங்க்ஸ் மா, லெமன் டீ இதமா இருக்கு.."  காலி கப்பை டேபிளில் வைத்து, "ஒரு அபூர்வாவை எங்களால் சமாளிக்க முடியலை ..நீங்க எப்படி ரெண்டு குழந்தைகளை..." ...பாதியில் கவிதா  குறுக்கிட்டு, "இல்லை மா, இரண்டு குழந்தைகள் இருந்தா சமாளிக்கிறது சுலபம்..எங்கள் அனுபவம் இது.."  என்றார்.  

"டீசண்ட் லிவிங் இப்போ ரொம்ப காஸ்ட்லியா இருக்கே....எப்படி நீங்க..."  ஆரம்பித்த ஆனந்தை பார்த்துப் புன்னகைத்த ஶ்ரீதர், "இல்லை ஆனந்த் சார், அப்படி இல்லை .. நான் இன்சூரன்ஸ் ல இருக்கேன். கவிதா  ஸ்கூல் டீச்சர். ஊர்ல சொந்தமா ஒரு வீடு இருக்கு, வாடகை வருது... இங்கே  இந்த வீடு வாடகை வீடு தான்.  கார் மெய்ன்டெய்ன் பண்றது இப்போ சிரமம்னு வாங்கறதை ஒத்திப் போட்டிருக்கோம்.  ஜனா சைக்கிள்ல போய் வந்துடுவான்.  நான் கவிதாவை காலைல ஸ்கூட்டர்ல டிராப் செஞ்சுடுவேன்.  வரும் போது பஸ்ல வந்துடுவா..ஜானு ஸ்கூல் பஸ் .."  என்றவர் தொடர்ந்து ..."எது அத்தியாவசிய தேவைன்னு பார்த்து செலவு செய்யறோம் ... குழந்தைகள் மத்தவங்களைப் பார்த்து கேப்பாங்க தான்... அவங்களுக்கு சௌகரியங்கள் காட்டும் அதே நேரம் பொறுப்பும் கடமையும் புரிய வைக்கிறோம்... கேக்கறத எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டா குழந்தைகளுக்கு வாழ்க்கையின் எதார்த்தம் புரியாம போயிடும். ..."  சற்று நிறுத்தினார் ஶ்ரீதர்.

இப்போது கவிதா பேசினார்.."செர்வெண்ட் மெய்டு  வந்து வீடு கிளீன் செஞ்சுட்டு போயிடுவாங்க...மற்ற வேலைகளை எங்களுக்குள்ள பிரிச்சு செஞ்சுக்குறோம்.   அவரு காய்கறி எல்லாம் நல்லா கட் செய்வாரு ..ஜனா துணிகள் அயர்ன் பண்ணுவான்... ஜானு துணி மடிச்சு வைப்பா, சின்ன சின்ன வேலைகள் அவங்களும் கத்துக்கணும் இல்லையா...மத்தபடி அவங்களோட படிப்பு நேரம் அவங்களோடது, விளையாடற நேரம் அவங்களோடது. .."

"நீங்களே  டீச்சர் ..ரெண்டு பேருக்கும் சொல்லிக் கொடுத்துடுவீங்க .."  அருணா.

"அதெல்லாம் அஞ்சாவதோட சரி..  அவங்களே ஹோம் ஒர்க் முடிச்சு, படிச்சுடுவாங்க.. அப்பப்போ கவனிச்சா போதும். ஸ்கூல்ல நடக்கிறதை கேட்டு தெரிஞ்சுப்போம்.  சனி ஞாயிறு ஹாலிடே ன்னாலும் நேரத்தோட எழுந்து அவங்க வேலைகளை பார்ப்பாங்க. ரெண்டு பேரும் அடிச்சுப்பாங்க ..என்னன்னு நாம  கேட்கப்போனா  உடனே  ஒண்ணாயிடுவாங்க.." சிரித்தார் கவிதா.

ஆனந்த் அருணாவைப்   பார்த்தார்.   அருணா  தலையைக் குனிந்து கொண்டார்...

"இவள் எப்போதும் மொபைல் போனை நோண்டிகிட்டு இருக்குறது தான் எங்களுக்கு கவலையா இருக்கு.."  ஆனந்த்.

கவிதா,  "எல்லாம் சரியாயிடும் சார்..எங்க வீட்ல ரெண்டு பேரைத் தவிர குழந்தைகளுக்குன்னு பொதுவா ஒரு மொபைல் இருக்கு.  இவரு  'நாகாலாந்தில் என்ன பேமஸ், நைல் நதி எந்தெந்த நாடுகளை கடந்து ஓடறதுன்னு ..ஏதாவது கேப்பாரு..குழந்தைகள் இன்டர்நெட் பார்த்து சொல்லுவாங்க... மத்தபடி சாப்பிடும்போது டிவி பார்க்கக் கூடாது, ராத்திரி ஒன்பதுக்கு மேல மொபைல் பார்க்கக் கூடாது அப்படிங்கறது வீட்டிற்கு பொதுவான ரூல்..."

அருணாவும் ஆனந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

 “பெரிய விஷயமில்லை சார்,  என்னோட ஷூ க்கு நான் பாலிஷ் போடறதைப் பார்த்து குழந்தைகளும் கத்துக்கிட்டாங்க.. குழந்தைகள் நாம சொல்றத செய்ய மாட்டாங்க, நாம் செய்யறதை கவனிப்பாங்க...இந்த ஸ்டேஜ்ல கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும்... சில சமயம் முரண்டு பண்ணுவாங்க, நாம கண்டிப்பா இருக்கணும், நிதானமா புரியவும் வைக்கணும் ..பாருங்க, போன மாசம் தியேட்டர் போனோம்..இப்ப திரும்ப கேட்டாங்க ..இன்னும் இரண்டு மாசம் காத்திருக்கணும் னு அவங்களுக்குத் தெரியும்.  டிவி யில் நல்ல சினிமா போடும்போது பார்ப்போம்.  சனி ஞாயிறு பார்க் போயி  இவங்களை விளையாட விட்டு நடப்போம். சொந்தக்காரங்க, நண்பர்கள் வீடுன்னு போயி வருவோம்...குழந்தைகளுக்கு ஹியூமன் வால்யூ புரியணும் ..."

அருணா ஆமோதித்தார் ..

கவிதா தொடர்ந்தார்... "குழந்தைகள் பள்ளி முடித்து, காலேஜ் போற வரைக்கும், நம்மை நாம் கட்டுப் படுத்துகிட்டு, நம்மளோட நேரத்தை அவங்களுக்காகத்  தியாகம் செஞ்சாத்தான் ...அவங்க திறமையோட பொறுப்பும் கடமையும் தெரிஞ்சு வருங்காலத்தை சுலபமா சமாளிக்கத்   தயார் ஆவாங்க இல்லையா .. இதை டீனேஜ் குழந்தைகளுக்காக பெற்றோர் செய்ய வேண்டிய தியாகக் கடமை என்றும் சொல்லலாம்..."

அருணா - ஆனந்திற்கு பல விஷயங்கள் புரிந்த மாதிரி இருந்தது.  இருவரும்  கவிதா - ஸ்ரீதரை நன்றியுடன் பார்த்தார்கள்.

"நேரம் போனதே தெரியலை..கொஞ்சம் இருந்தீங்கன்னா டின்னர் ரெடி செஞ்சுடுவேன், சாப்பிட்டு போகலாம்"  கேட்டார்  கவிதா.

இதற்கு மேல் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்த ஆனந்த், கை கூப்பியபடி எழுந்து நின்றார். அருணா, அபூர்வா வை அழைத்தார்.  அபூர்வா சிரித்தபடி வெளியே வந்தாள்.  அவளுடைய தலைமுடியை சீவி, அவளது பிங்க் டிரெஸ் க்கு மேட்ச் ஆக பிங்க்  பேண்ட்  தலைக்கு போட்டு விட்டிருந்தாள்  ஜானவி.

"அபூர்வா  கம்ப்யூட்டர் டிசைனிங்  பத்தி நிறைய சொல்றா ஆண்டி...அவளை என்கரேஜ் பண்ணுங்க..." என்றான் ஜனார்தன். 

*****

காரை நிதானமாக ஓட்டிக் கொண்டிருந்தார் ஆனந்த்.  பக்கத்தில் அபூர்வா, கையில்  ஏதோ வைத்திருந்தாள்.

"பேபி, அது என்னடா..." என்று ஆனந்த் கேட்க, திறந்து காண்பித்தாள் ..  ஓவியம், இரண்டு நாய் குட்டிகள் விளையாடும் ஓவியம்.

"ஜானு எனக்கு பிரசென்ட் பண்ணினா.."  பெருமையோடு சொன்னாள் அபூர்வா.

ரியர் வியூ கண்ணாடி வழியாகப் பின்னால் பார்த்தார் ஆனந்த் ... தெளிவடைந்த மனதோடு மென்மையாகச் சிரித்தார் அருணா.

'வீட்டிற்கு போனவுடன் அபூர்வாவிடம் கம்ப்யூட்டர் டிசைனிங் பற்றி பேச வேண்டும்'.

எஸ்.முத்துக்குமார்

வங்கிப் பணியில் இருந்து ஒய்வு பெற்றவரான எஸ்.முத்துக்குமார், 1958ல் பெங்களூரில் பிறந்தவர். ஆரம்ப பள்ளி படிப்பு பெங்களூரிலும், உயர்நிலை பள்ளிக் கல்வியை திருவிடைமருதூரிலும் படித்தவர். கும்பகோணத்தில் பி.காம். முடித்து திருப்பூரில், பெங்களூரில் தனியார் துறையில் வேலை செய்த பின், புதுவையில் மத்திய பொதுப்பணித் துறையில் இரண்டு வருடம் பணியாற்றியவர். பிறகு வங்கித் துறைக்கு வந்தவர். இயற்கை, எழுத்து, இசை, ஓவியம் ஆகியவற்றில் நாட்டம் உள்ளவர். கல்லூரிக் காலத்தில் இருந்தே எழுதி வருகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com