சிறுகதை உலகில் முக்கியமான சம்பவம் ஒன்று 4 டிசெம்பர் 2017ல் நடக்கிறது. நியூயோர்க்கர் பத்திரிகையில் ’பூனை மனிதன்’ (Cat Person) என்ற சிறுகதை பிரசுரமாகி ஓர் அதிசயம் நிகழ்கிறது. இரண்டு வாரங்களில் அந்தக் கதையை 1.5 மில்லியன் மக்கள் படிக்கிறார்கள். உலகம் முழுக்க அந்தக் கதை பற்றிய விவாதம் நடக்கிறது. பல பத்திரிகைகள், கதையின் நிறை குறை பற்றி எழுதுகின்றன. சமூக ஊடகங்கள் பற்றி எரிகின்றன. உலகத்தின் முதல் வைரல் சிறுகதை என்ற பட்டத்தைப் பெறுகிறது.
இந்தச் சிறுகதையை எழுதியவர் பெயர் கிரிஸ்டென் ரூப்பினியான் (Kristen Roupenian). அவர் அப்படி ஒன்றும் பெயர் பெற்ற எழுத்தாளர் அல்ல. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் எழுதிய இந்தச் சிறுகதையை பல பத்திரிகைகள் நிராகரித்தன. அவருடைய ஏஜண்ட் ஜென்னி மூலம் இறுதியாக கதையை நியூயோர்க்கருக்கு அனுப்புகிறார். அங்கிருந்து சில வாரம் கழித்து பதில் வருகிறது. ‘இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை. இன்னொரு உள்சுற்றுக்கு கதை அனுப்பப்பட்டிருக்கிறது. விரைவில் பத்திரிகையின் முடிவு தெரியவரும்.’
சிறிது காலம் கழித்து சிறுகதை ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி வருகிறது. எழுத்தாளருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தாயாருக்கு இந்தச் செய்தியை தெரிவித்துவிட்டு ‘உங்களால் நம்ப முடிகிறதா, நியூயோர்க்கர் புனைவு ஆசிரியருக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது’ என்று சத்தமிடுகிறார். தாயார் அதைக் கேட்டு அழுகிறார்.
அத்துடன் விசயம் முடிவுக்கு வரவில்லை. சில நாள் கழித்து எழுத்தாளருடைய சிநேகிதி சொன்னார் ‘உன்னுடைய சிறுகதை சின்னப் பிரளயத்தை கிளப்பிவிட்டிருக்கிறது போலிருக்கிறதே. பெரிய விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.’ எழுத்தாளரால் நம்ப முடியவில்லை. ‘உனக்குத் தெரியுமா பராக் ஒபாமா தொடரும் ஒருவர் உன் சிறுகதையை திரும்ப ட்வீட் செய்திருக்கிறார்.’ அவ்வளவுதான், சிறுகதை வேகமாக உலகம் முழுவதும் பரவுகிறது. பேராசிரியர்கள் விவாதங்களில் கலந்துகொள்கிறார்கள். பத்திரிகைகள் போட்டி போட்டு எழுதுகின்றன.
இந்தச் சிறுகதை 20 வயது மாணவிக்கும், 34 வயது ஆணுக்குமிடையில் நடந்த உடலுறவு பற்றியது. அந்தச் சமயம்தான் ’மீட்டூ‘ விவகாரம் உலகம் முழுக்க அதிர்ச்சி அலையை கிளப்பிக்கொண்டிருந்தது. ஆண்கள் அநேகருக்கு சிறுகதை பிடிக்கவில்லை. பெண்களில் பலர் சிறுகதையை வரவேற்றனர். சிறுகதை எழுதிய ஆசிரியரை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் நேர்காணல் கண்டன. ஆசிரியரால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. ஆட்கள் அவரைச் சுற்றி மொய்த்தனர். பதிப்பாளர்கள் அவருடைய அடுத்த சிறுகதைத் தொகுப்பை வெளியிடுவதற்கு போட்டி போட்டார்கள். ஒப்பந்தம் செய்வதற்கு ’நான் நீ’ என்று பலர் வந்தனர். இறுதியில் ஒப்பந்தம் போடப்பட்டு, வேறு எங்கேயும் இல்லாத அளவுக்கு முன்பணமாக 1.2 மில்லியன் டொலர் ஆசிரியருக்கு அளிக்கப்பட்டது.
அத்துடன் நிற்கவில்லை. இந்தச் சிறுகதையை சினிமாவாக எடுக்க முன்வந்தார்கள். சினிமாவுக்கு சிறுகதையின் நீளம் போதவில்லை. சிறுகதை முடிந்த இடத்திலிருந்து அதை நீட்டி ஓர் உளவியல் சாகசப் படமாக மாற்றினார்கள். படம் எதிர்பார்த்த வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை.
கனடாவின் சிறந்த எழுத்தாளர் மார்கிரட் அட்வுட் எதையும் நுணுக்கமாக அணுகுபவர். அவர் சிறுகதையைப் பற்றி இப்படிச் சொன்னார். ‘ஆண்களுக்கு பெண்கள் தங்களைப் பற்றி நகைப்பார்கள் என்று பயம். பெண்களுக்கு ஆண்கள் தங்களை கொலைசெய்துவிடுவார்கள் என்று பயம்.’ இதை விடச் சிறப்பாக இந்தச் சிறுகதையை வர்ணிக்க முடியாது.
சிறுகதை ஆசிரியரை இலகுவில் அணுக முடியாது. மூன்றடுக்கு பாதுகாப்பு அரணுக்குள் வாழ்கிறார். அவருடைய ஏஜண்டை பிடித்து பதிப்பாளரை என்னால் அணுகக்கூடியதாக இருந்தது. தமிழில் மொழிபெயர்க்க நான் விருப்பம் தெரிவித்தபோது ஆசிரியர் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. ஒப்பந்தம் செய்து உரிய பணத்தை உடனே கட்டவேண்டும் என்றார்கள். அப்படியே பணத்தைக் கட்டி அனுமதி பெற்று கதை இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
நீங்களே படித்துப் பாருங்கள்.
‘நான் இதுவரை ஒருவருக்கும் சிவப்பு இனிப்பை பக்கட்டாக விற்றது கிடையாது.’ வாடிக்கையாளர்களுடன் கொஞ்சம் சரசமாடும் கலையை அவள் முன்பு கோப்பிக் கடையில் வேலைசெய்தபோது கற்றிருந்தாள். அங்கே தாராளமாக டிப்ஸ் கிடைக்கும். ஆனால் இங்கே தியேட்டரில் ஒருவரும் டிப்ஸ் தருவதில்லை. அத்துடன் ரோபர்ட் வசீகரமான ஆள் கிடையாது. ஒரு விருந்தின்போது அவளாக கிட்ட அணுகக்கூடிய அளவுக்கு கவர்ச்சி கொண்டவன்அல்ல. ஆனால் அவளுடைய அலுப்பூட்டும் வகுப்பில், அவளுக்கு எதிராக அவன் உட்கார்ந்திருக்கும் பட்சத்தில், ஒருவிதமான இச்சை உணர்வை அவன் கிளப்பிவிடக்கூடும். அவன் கல்லூரி வயதை மீறியவன், நிச்சயமாக நடு இருபதுகளை தாண்டியவனாக இருப்பான். அவன் உயரமானவன், அது அவளுக்குப் பிடிக்கும். அத்துடன் அவன் உருட்டிவிட்ட நீலக்கை மடிப்பு விளிம்பின் கீழ் பச்சை குத்தியிருந்தது பாதியாகத் தெரிந்தது. அவன் கொஞ்சம் அதிகமாக வாட்டசாட்டமாக இருந்தான். அவனுடைய தாடி சிறிது நீளமாக இருந்தது. அவனுடைய தோள்கள் சற்று முன்வளைந்து எதையோ பாதுகாப்பதுபோல தோற்றமளித்தன.
ரோபர்ட் அவளுடைய சரசத்தை கவனித்ததாகத் தெரியவில்லை. சில வேளை கவனித்திருக்கலாம். ஓர் அடி பின்னே வைத்தான், இன்னும் அவள் முன்னேற வேண்டும் என்பதுபோல. மீதிச் சில்லறையை சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு ‘ஓகே’ என்றவாறு புறப்பட்டான். ஆனால் அடுத்த வாரமே மறுபடியும் வந்து இன்னொரு சிவப்பு இனிப்பு பக்கட்டை வாங்கினான்.
‘உன்னுடைய வேலையில் நீ தேறிவிட்டாய். இம்முறை என்னை நீ அத்தனை அவமதிக்கவில்லை.’
அவள் தோள்களைக் குலுக்கினாள். ‘அப்ப, எனக்கு நிச்சயம் வேலை உயர்வு கிடைக்கும்.’ திரைப்படம் முடிந்த பின்னர் அவன் திரும்பினான். ‘விற்பனை பெண்ணே, உன்னுடைய தொலைபேசி எண்ணை தருவாயா?’ அவளே ஆச்சரியப்படும் விதமாக அவள் தன் நம்பரை அவனுக்கு தந்தாள்.
சிவப்பு இனிப்பில் ஆரம்பித்த சம்பாசணை தொடர்ந்து பல வாரங்களாக உயரங்களைத் தொட்டு வளர்ந்தது. சிலவேளை அரட்டைகளை வேகமாகத் தொடர்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவன் அதிகெட்டிக்காரனாக இருந்தான். அவனுடைய மதிப்பை பெற இன்னும் கடினமாக அவள் உழைக்க வேண்டியிருந்தது.
எப்பொழுது அவள் குறுஞ்செய்தி அனுப்பினாலும் உடனுக்குடன் பதில் கிடைத்தது. ஆனால் சிலவேளை அவள் பதில் அனுப்ப சில மணி நேரம் பிந்தினால் அவனுடைய பதில் சுருக்கமாக இருப்பதுடன் வழக்கான ஒரு கேள்வியுடன் முடியாது. அப்படியானால் அவளே புதிய விசயத்துடன் ஒரு சம்பாசணையை தொடங்கிவைப்பாள். சில சமயம் கவனம் வேறு எதிலோ சிக்கி சம்பாசணை அப்படியே நின்று போய்விடுமோ என அவள் நினைத்ததுண்டு. ஆனால் அவளுக்கு சிரிப்பு சம்பவம் ஒன்று நினைவுக்கு வரும். அல்லது அவர்கள் பேசிய ஒரு விசயம் பற்றி இணையத்தில் ஒரு படம் அகப்படும். அப்போது சம்பாசணை மறுபடியும் தொடங்கும். அவளுக்கு இன்னும் அவனைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர்கள் தங்களைப்பற்றி ஒன்றும் பேசிக்கொள்வதில்லை. ஆனால் ஒன்றிரண்டு நகைச்சுவை தொடர்ந்து வந்து ஒன்றன்பின் ஒன்றாக விழும்போது அணைத்து நடனமாடுவதுபோல ஒருவித உற்சாகம் அவர்களுக்கு தொற்றிக் கொள்ளும்.
ஓர் இரவு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாசிப்பு நேரத்தில்,மார்கோ தன் கஷ்டத்தை அவனுக்கு எழுதினாள். உணவுக்கூடம் மூடிவிட்டது; அறைத் தோழி மார்கோவின் சாப்பாட்டை அவளுக்கு தெரியாமல் எடுத்து உண்டுவிட்டாள். அவன் கேலியாக ’நான் உன் பசியை தீர்க்க ஒரு சிவப்பு இனிப்பு பக்கட் வாங்கி அனுப்புகிறேன்,’ என எழுதினான். அவள் அதற்கு ஏதோ நகைச்சுவையான பதில் அனுப்பினாள். ’நான் நிசமாகத்தான் சொல்கிறேன். உடனே வா,’ என்று ரோபர்ட் எழுதினான். அவள் தன் இரவு ஆடைக்கு மேல் கோட் அணிந்து அவனைச் சந்திக்க ’செவன் இலவன்’ உணவகத்துக்கு சென்றாள்.
அப்போது இரவு பதினொரு மணி. அவன் தினமும் சந்திப்பவன்போல ஆரவாரம் இன்றி உணவைத் தேர்ந்தெடுப்பதற்காக அவளை உள்ளே அழைத்துச் சென்றான். உணவகத்தில் சிவப்பு இனிப்பு இல்லை. ஆகவே செர்ரி கோக் போன்ற உணவு வகையை வாங்கினான். வெளியே வந்தபோது அவள் நன்றி சொன்னாள்.
ரோபர்ட் அன்று காதை மறைக்கும் முயல் தோல் தொப்பியும், வாத்து சிறகு அடைத்த தடித்த பழைய காலத்து மேலங்கியும் அணிந்திருந்தான். அந்த உடையலங்காரம் கொஞ்சம் அசட்டுத்தனமாக இருந்தாலும், நல்ல தோற்றத்தை தந்தது. மரம்வெட்டிகளுடைய வலுவான உடல்வாகை தொப்பி கொடுத்தது. பாரமான கோட்டு, அவனுடைய தொப்பையையும், கூனலான தோற்றத்தையும் மறைத்தது. ’உன்னுடைய நன்றியை ஏற்றுக்கொண்டேன், விற்பனைப் பெண்ணே,’ என்றான். அவளுடைய பெயர் அவனுக்கு இப்போது தெரிந்திருந்தாலும் ’விற்பனைப் பெண்ணே’ என்றுதான் அழைத்தான். உதட்டில் முத்தமிடப் போகிறான் என்று நினைத்த அவள் அதைத் தவிர்த்து தன் கன்னத்தை கொடுக்கத் தயாரான போது அவன் ஏதோ விலைமதிக்க முடியாத ஒரு பெண்ணை அணுகுவதுபோல அவள் நெற்றியில் மிருதுவாக முத்தமிட்டான். ‘தீவிரமாகப் படி, அன்பே. நான் விரைவில் உன்னை சந்திப்பேன்,’ என்றான்.
அவள் விடுதிக்கு திரும்பும்போது அவளை ஒருவித லேசான காற்று நிறைத்தது. அது ’ஆரம்ப நிலை முதிரா காதல்’ என்று அவளை ஊகிக்கவைத்தது. விடுமுறையில் அவள் வீட்டுக்குச் சென்றபோதும் நிறுத்தாமல் இருவரும் அரட்டை அடித்தார்கள். நகைத்துணுக்குகள் மட்டுமல்லாது தங்கள் நாள்கள் பற்றியும் எழுதினார்கள்.
’காலை வணக்கம்’ ‘இரவு வணக்கம்’ என்று தினமும் சொல்ல ஆரம்பித்தார்கள். ஒரு கேள்விஅனுப்பி அவன் உடனே பதில் சொல்லாவிட்டால் அவளுக்கு ஒருவித பதற்றம் தொற்றியது. ரோபர்ட்டிடம் இரண்டு பூனைகள் இருப்பது தெரிய வந்தது. ஒன்று ’மு’ மற்றது ’யான்.’ அவளிடம் சின்ன வயதில் ’பீட்டா’ என்று ஒரு பூனை இருந்தது. அவர்கள் ஒரு விளையாட்டை தொடங்கினார்கள். பீட்டா எழுதுவதுபோல அவள் யானுக்கு சரசமான வார்த்தைகளில் கடிதம் எழுதுவாள். யான் எழுதுவதுபோல அவன் பீட்டவுக்கு பதில் அனுப்புவான்.
’நீ ஏன் எப்பொழுதும் குறுஞ்செய்தி அனுப்புகிறாய்? நீ யார் மேலாவது காதல் கொண்டிருக்கிறாயா?’ என்று அவளுடைய அம்மாவின் புதுக் கணவர் ஒருநாள் இரவு உணவின்போது கேட்டார். ’ஆமாம். அவர் பெயர் ரோபர்ட். அவரை சினிமா தியேட்டரில் சந்தித்தேன். நாங்கள் காதலிக்கிறோம். மணமுடிப்பது பற்றி திட்டமிடுகிறோம்,’ என்றாள். ‘ம், அவனிடம் சொல்லு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன என்று.’
’என்னுடைய பெற்றோர் உன்னைப்பற்றி விசாரிக்கிறார்கள்’ என்று ரோபர்ட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். இதற்கு பதிலாக இருதயத்தை கண்களாக வைத்த சிரிப்பு முகம் வந்தது.
அவள் விடுமுறை முடிந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு திரும்பிய பின்னர் ரோபர்ட்டை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியது. ஆனால் அவனைப் பிடிப்பது சுலபமில்லை. ’வேலைத் தொந்தரவு அதிகம். விரைவிலேயே உன்னைச் சந்திப்பேன். இது சத்தியம்’ என எழுதினான். மார்கோவுக்கு இது பிடிக்கவில்லை. காரியங்கள் அவளை விட்டு விலகுவதுபோல பட்டது. இறுதியில் அவன் சினிமாவுக்கு போக அழைத்தபோது உடனேயே சம்மதித்தாள்.
அவன் பார்க்க விரும்பிய சினிமா அவள் வேலைசெய்த தியேட்டரிலேயே ஓடியது. ஆனால் அவள் அந்தப் படத்தை பெரிய டவுனில், மல்டிபிளெக்ஸில் பார்க்க விரும்பினாள்.
ரோபர்ட் அவளை அழைத்துப் போவதற்கு அழுக்கு வெள்ளை சிவிக் காரில் வந்திருந்தான். குவளை வைக்கும் இடத்தில் இனிப்பு சுற்றிவரும் பேப்பர்கள் குவிந்திருந்தன. காரிலே போனபோது அவன் அவ்வளவு பேசவில்லை. மௌனமாகவே பயணித்தான். அவளை அடிக்கடி திரும்பி பார்க்கவும் இல்லை. ஐந்து நிமிடம் கழியமுன்னரே அவளால் அசௌகரியமாக உணர முடிந்தது. விரைவு சாலையை அடைந்தபோது அவன் அவளை எங்கோ அழைத்துப்போய் வன்புணர்வு செய்துவிட்டு கொல்லப்போகிறானோ என்று தோன்றியது. அவளுக்கு அவனைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அவளுடைய சிந்தனை இப்படி போய்க்கொண்டிருந்தபோது அவன் ‘யோசிக்காதே. நான் உன்னை கொலைசெய்யப்போவதில்லை,’ என்றான். அவளுடைய அசௌகரியம் அவனுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவளுடைய பிழைதான் அது. அவளுடைய உதறலும், பதட்டமும் அவனுக்கு புரிந்துவிட்டது. ‘அது பரவாயில்லை. உனக்கு விருப்பமானால் நீ என்னைக் கொலை செய்யலாம்,’ என்றாள். அதைக்கேட்டு அவன் சிரித்தபடி அவள் முழங்காலைத் தட்டிக் கொடுத்தான். அவன் அப்படி மௌனமாக இருப்பது அவளுக்கு குழப்பத்தைக் கொடுத்தது. அவளுடைய உற்சாகமான பேச்சும் பயனற்றதாக இருந்தது.
தியேட்டரில் அவன் காசாளரிடம் ஏதோ சிவப்பு இனிப்பு பற்றி நகைச்சுவையாகச் சொன்னபோது அது ஒரு விளைவையும் ஏற்படுத்தாமல் மண்ணில் விழுந்து பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
சினிமா, திரையில் ஓடியபோது அவன் அவளுடைய கையை பிடிக்கவில்லை; கைகளை அவள் தோள்மூட்டு மீது போட்டு அணைக்கவில்லை. படம் முடிந்து கார் தரிப்பு இடத்துக்கு வந்தபோது நிச்சயமாக அவளை அவனுக்குப் பெரிதாக பிடிக்கவில்லை என்பது தெரிந்தது.
அவள் கால்களை ஒட்டிப்பிடிக்கும் உடையும், வீட்டுக்கு அணியும் மேலாடையும் தரித்து வந்தது பிரச்சினையாக இருக்கலாம். அவள் காரில் ஏறியபோது அவன்,’நீ எனக்காக அலங்கரித்து வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று சொன்னதை அவள் நகைச்சுவை என்று நினைத்தாள். உண்மையில் அவள் அவனுக்காக அலங்கரித்து புறப்படாதது கொஞ்சம் வருத்தத்தை தந்திருக்கலாம். அவன் காக்கி கால்சட்டையும், பட்டன் வைத்த சேர்ட்டும் அணிந்திருந்தான்.
காருக்கு வந்ததும்,’உனக்கு குடிப்பதற்கு ஏதாவது வேணுமா?’ என்று கேட்டான். கண்ணியமாக நடப்பதற்கு கடமைப்பட்டவன்போல அவன் செயல் இருந்தது. அவள் வேண்டாம் என்று சொல்வாள் என்று அவன் எதிர்பார்த்ததாகத் தெரிந்தது. வேண்டாம் என்றால் சம்பாசணை அங்கேயே நின்றுவிடும். அவளுக்கு துக்கமாக இருந்தது. விடுமுறையின்போது அவனுடன் இன்பமாக நேரத்தை கழிக்க வேண்டும் என நினைத்திருந்தாள். அந்த நினைப்பு சட்டென்று முடிவுக்கு வருவதை அவள் எதிர்பார்க்கவில்லை.
‘ஏதாவது குடிபானம் இருந்தால் நல்லாயிருக்கும்,’ என்றாள். ‘உனக்குத் தேவையென்றால்,’ என்றான். இனிமையற்ற இந்தப் பதில் அவளை மறுபடியும் மௌனமாக்கியது. அவள் கால்களைத் தொட்டு, ‘என்ன துயரம்?’ என்றான். ’எனக்கு ஒரு துயரமும் இல்லை. கொஞ்சம் களைப்பு.’ ‘நான் உன் இருப்பிடத்துக்கு காரைச் செலுத்தவா?’ ‘இல்லை, ஒரு பானம் அருந்தினால் நல்லது.’
அன்று அவன் தெரிவுசெய்த திரைப்படம் இனவழிப்பு சம்பந்தமானது; மனதை கலைக்கக்கூடியது. ஒரு பெண்ணை முதல்முறை வெளியே அழைத்துப் போகும்போது பார்க்கக்கூடிய படம் அல்ல, அவன் திரைப்படத்தின் பெயரைச் சொன்னபோது நம்ப முடியாமல், ‘நீ உண்மை சொல்கிறாயா?’ என்று கேட்டாள். அவன் உடனே அவளுடைய ரசனையை தவறாக புரிந்துகொண்டது பற்றி சொன்னான். பின்னர் ‘நான் உன்னை இதற்குப் பதிலாக ஒரு காதல் படத்திற்கு அழைத்துப் போகிறேன்,’ என்றான். ஒருவேளை இனவழிப்பு பற்றி அவன் பார்க்க விரும்பியது அவளுக்கு தன்னைப் பற்றி ஓர் உயர்ந்த எண்ணத்தை உண்டாக்குவதற்காக இருக்கலாம்.’
‘எங்கே போகலாம்?’ என்று அவன் கேட்டபோது அவள் தான் வழக்கமாகப் போகும் ஓர் இடத்தைச் சொன்னாள். அது மாணவர்கள் போகும் மதுவகம் என்று அவன் சொல்லி அவள் இதுவரைபோயிருக்காத ஓர் இடத்துக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கே உள்ளே நுழைவதற்கான வரிசையில் போய் நின்றார்கள். அப்படி நின்றபோது அவளுக்கு படபடப்பாக இருந்தது. அவனுக்கு எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. வரிசைக் காவலன் அடையாள அட்டையை கேட்டபோது காட்டினாள். அவன் ஏளனமாகச் சிரித்து அவளைத் தடுத்து பக்கத்தில் நிறுத்திவிட்டு, மற்றவர்களை நகரச் சொன்னான். இதைக் கவனிக்காமல் ரோபர்ட் வரிசையில் முன்னேறினான். ’ரோபர்ட்’ என்று அழைத்தாள். அவன் திரும்பியும் பார்க்கவில்லை. இறுதியில் வரிசையில் நின்ற ஒருவன் ரோபர்ட்டின் தோளைத்தட்டி தடுத்துவைக்கப்பட்ட பெண்ணை சுட்டிக் காட்டினான். வெட்கத்துடன் நின்ற அவளிடம் ரோபர்ட் வந்தான். ‘மன்னித்து விடு, இது பெரிய அவமானம்,’ என்றாள். ’உனக்கு எத்தனை வயது?’ அவன் கேட்டான். ‘இருபது.’ ‘ஓ, உன்னுடைய வயது இன்னும் கூடவாக இருக்கும் என்று நினைத்தேன்.’ ’நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டாம் வருட மாணவி என்றுதான் சொன்னேன்.’
ஆட்களுக்கு முன், வரிசையிலிருந்து அகற்றப்பட்டு அவமானத்துடன் நின்ற அவளை ஏதோ குற்றம் செய்ததுபோல ரோபர்ட் பார்த்தான், அவள் கண்களில் நீர் சேர்ந்து விழ ஆரம்பித்தது. எப்படியோ எல்லாமே நாசமாகிவிட்டது. அவளுடைய சுருங்கிய முகத்தை ரோபர்ட் பார்த்த அந்தக் கணத்தில் ஏதோ நிகழ்ந்தது.
அவளுடைய முகம் இப்படி உருகுவதை கண்ட ரோபர்ட்டிடம் ஒரு மாற்றம் மந்திரம்போல ஏற்பட்டது. அவனிடம் இருந்த எல்லா பதற்றமும் மறைந்தது. அவன் நிமிர்ந்து நின்று அவனுடைய கரடிக்கரங்களால் அவளைச் சுற்றி அணைத்தான். ‘ஓ, என் இனியவளே,’ என்றான். ‘அன்பே, இது ஒன்றுமே இல்லை. இதையிட்டு வருத்தப் படாதே.’ அவனுடைய அணைப்பை முழுவதுமாக ஏற்றுக்கொண்டாள். ’செவன் இலெவுனுக்கு’ முன் ஏற்பட்ட அதே உணர்வு அவளுக்கு கிடைத்தது. அவளின் மென்மையான தன்மையை அவன் உடைத்து விடுவானோ என்று பயப்படுவதுபோல அவளுடைய உச்சந்தலையை முத்தமிட்டான்.அவள் சிரித்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்துச் சொன்னாள். ‘என்னால் நம்பமுடியவில்லை. மதுவகம் ஒன்றுக்குள் என்னை அனுமதிக்கவில்லை என்பதால் நான் அழுகிறேன். நான் ஒரு முட்டாள் என்று நீ நினைக்கலாம்.’அவன் அப்படி நினைக்கவில்லை என்பது வெளிச்சம். அவன் பார்த்த பார்வையில் தான் கண்ணீருக்குள் சிரித்தபடி, தெரு விளக்கு வெளிச்சத்தில் எத்தனை அழகாகக் காட்சியளிக்கிறாள் என்பது அவளுக்கு தெரிந்ததுதான்.
அவன் மார்கோவின்உதட்டில் அப்படியே பாய்ந்து முத்தமிட்டான். அவனுடைய நாக்கு அவளுடைய தொண்டைக்குழிவரை போய்விட்டது. அது மிக மோசமான ஒரு முத்தம். மார்கோவால் நம்ப முடியவில்லை. வாலிப வயதை தாண்டிய ஒரு முழு ஆண்மகனுக்கு நல்ல முத்தம் ஒன்று கொடுக்கத் தெரியவில்லை. அப்படியிருந்தும் ஒரு கனிவான உணர்வே அவளுக்கு அவனிடம் ஏற்பட்டது. அவன் அவளிலும் பார்க்க வயதில் மூத்தவனாக இருந்தாலும் அவனுக்குத் தெரியாத ஒன்று அவளுக்கு தெரிந்திருந்தது. அவன் முத்தம் கொடுத்து முடிந்தபின்னர், அவள் கைகளைப் பிடித்து அழைத்துக்கொண்டு வேறொரு மதுவகத்துக்குப் போனான். அங்கே பில்லியர்ட்ஸ் விளையாடும் மேசை மற்றும் பின்போல விளையாடும் மேசை எல்லாம் இருந்தன. நிலத்திலே மரத்தூள் பரவியிருந்தது. முக்கியமாக வாசலில் அடையாள அட்டை சரிபார்க்க ஒருவரும் இல்லை.
அவளுடைய முதல் வருடத்தில் அவளுக்கு ஆங்கிலப் பாடம் எடுத்த ஒருத்தர் அங்கே ஓர் அறையில் இருப்பதை அவள் காண நேர்ந்தது. ‘உனக்கு ஒரு வொட்காவும், சோடாவும் எடுத்து வரவா,’ என்று ரோபர்ட் கேட்டான். அப்படி அவன் கேட்டது சிரிப்பாக இருந்தது. கல்லூரி மாணவிகள் என்ன குடிப்பார்கள் என்பதுகூட அவனுக்கு தெரியவில்லை. அவள் வொட்கா குடித்ததே கிடையாது. உண்மையில் அவளுக்கு என்ன ஆணை கொடுப்பது என்பதில் பதற்றம் இருந்தது. அவள் வயது 21க்கு கீழே இருந்ததால் அவளை மதுவகத்துக்குள் அனுமதிக்க மாட்டார்கள். கள்ள அடையாள அட்டை உள்ள நண்பர்கள் பியருக்கு ஆணை கொடுப்பார்கள். அவள் ’பட்லைட்’ பியர் குடிப்பாள். அந்த வகை பியர் அங்கே இருக்கிறதா என்பது அவளுக்கு தெரியாது. ஆகவே ‘எனக்கு ஒரு பியர்,’ என்று அவள் ரோபர்ட்டிடம் சொன்னாள்.
முத்தம் முடிந்து, பியர்கள்மேசையில் முன்னே இருக்க, ரோபர்ட் பதற்றம் தணிந்து பழைய புத்திசாலியாக மாறியிருந்தான். அவள் வகுப்பில் படிக்கும் கலைச் சினிமா பற்றியும், உயர்ந்த ரசனை பற்றியும் கிண்டல் செய்தான். அவன் முதலில் தெரிவு செய்த படத்தை அவள் நிராகரித்தது பற்றி பேசினான். அவளுடைய உயர்ந்த கலை ரசனையையும் சீண்டினான். கலைப்படம் பார்த்துவிட்டு அவளும் அவளுடன் பணி புரிபவர்களும் சுற்றியிருந்து ஏனைய படங்களைப் பார்ப்பவர்களை கிண்டலடிப்பது பற்றியும் சொன்னான்.
ஒருவேளை தான் ரோபர்ட்டின் உணர்வுகளை புண்படுத்தியிருக்கலாம் என்று மார்கோவுக்கு பட்டது. அவளுக்கு தான் வேலை செய்யும் இடத்தில் ஓடிய படத்தை பார்க்க விருப்பமில்லை. அவள் அவனைப் புரிய ஆரம்பித்திருந்தாள். ஆனால் மெல்லிய உணர்வுள்ளவனாக, எளிதில் காயப்படுபவனாக ரோபர்ட் இருந்தான். அது அவளை அவனுடன் நெருக்கமாக்கியது. அவளை பலமுள்ளவளாகவும் மாற்றியது. அவனை எப்படி காயப்படுத்தலாம் என்று தெரிந்தால் அவனை எப்படி ஆற்றலாம் என்பதும் தெரிந்திருக்கும்.
அவள் அவனுக்கு பிடித்தமான படங்கள் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டாள். அவள் தன்னை மிகவும் குறைத்துப் பேசினாள். கலைப்படங்கள் எப்படி சலிப்பூட்டும் என்றும், சிலசமயம் புரியாது என்றும் சொன்னாள். தன்னுடன் வேலை செய்யும் மூத்த பணியாளர்கள் தன்னை எப்படி மிரட்டினார்கள் என்றும், தனக்கு என ஒரு கருத்தை உருவாக்க தகுதியில்லையா என்றும் கவலைப்பட்டாள். இந்த உரையாடல் பெரும் மாற்றத்தை அவளிடம் உண்டுபண்ணியது கண்கூடாகத் தெரிந்தது.
மூன்றாவது பியர் குடித்து முடித்த பிறகு, அவளுக்கு ரோபர்ட்டுடன் உடலுறவு வைத்தால் அது எப்படியிருக்கும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அது அந்த மோசமான முத்தம் போலவே இருக்கும். அது அசிங்கமாகவும் அதீதமாகவும் இருக்கும். ஆனால் அவன் அவளை ஈர்த்து அசத்துவதற்கு எத்தனை ஆர்வமாக இருப்பான். அந்த நினைவு அவள் அடிவயிற்றில் ரப்பரை இழுத்து அடித்ததுபோல பெரும் கிளர்ச்சியை உண்டுபண்ணியது.
அவர்கள் குடிபானத்தை குடித்து முடித்தபோது அவள் ‘நாங்கள் வெளியேற வேண்டுமா?’ என்றாள். அவனுக்கு அது கொஞ்சம் வருத்தம் கொடுத்ததுபோல இருந்தது. அந்த நாளை முடிவுக்கு கொண்டுவர அவள் விரும்புகிறாள் என்று அவன் நினைத்தான். ஆனால் அவள் அவனுடைய கையை பிடித்து இழுத்தபோது அவனுடைய முகத்தில் அவள் சொன்னதன் கருத்து புரிந்துவிட்டது என்பது தெரிந்தது. விசுவாசமாக அவளுடைய கைகளைப் பிடித்து அவன் தொடர்ந்தது மறுபடியும் அடிவயிற்றில் ரப்பர் இழுத்து அடித்து போன்ற உணர்வை அவளுக்கு எழுப்பியது.
வெளியே அவள் மீண்டும் அவனிடம் முத்தம் வேண்டி நெருங்கினாள். ஆனால் ஆச்சரியமாக அவன் உதட்டில் உதட்டால் மெல்ல தொட்டான். ‘உனக்கு குடி முற்றிவிட்டது’ என்று குற்றம் சாட்டுவதுபோலச் சொன்னான்.அவள் உச்சமான குடிபோதையில் இருந்தாலும் ‘இல்லை, நான் இல்லை’ என்றாள். அவள் தன் உடலை, அவனுடைய பாரிய உடலுக்குப் பக்கத்தில் சிறிதாகத் தோன்ற, நகர்த்தினாள். அவன் பெரிய நடுங்கும் பெருமூச்சு ஒன்றை வெளியே விட்டான். அவளை மெல்ல அணைத்து காருக்கு கிட்ட கொண்டு சென்றபோது ’நான் உன்னை என்வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்,’ என்றான். அவள் அவனுக்கு மேல் படர்ந்தபோது அவனுடைய நாக்கு அவள் தொண்டைக்குள் சென்றது. திகைத்து சிறிது பின்வாங்கினாள். பின்னர் அவளுக்கு பிடித்த விதமாக மென்மையாக அவளை அணுக அவனுக்கு கற்றுத் தந்தாள். இறுக்கமாக அவன்மேல் விழுந்து அணைத்தபோது, விறைப்பான ஏதோ ஒன்று அவள் மேல் உரசியது. பாரம் இறுகியபோது அவனிடமிருந்து கூர்மையான ஓர் அலறல் வெளியே வந்தது. அவளுக்கு அது கொஞ்சம் அதீதமான நாடகத் தன்மை என்று பட்டது. திடீரென்று அவளை தள்ளிவிட்டு அவன் காரைக் கிளப்பினான்.
கொஞ்சம் வெறுப்புத் தோன்ற ’பதின்பருவக்காரர்கள்போல காரின் முன் இருக்கையில் சரசமாடுவதா? நீ இப்படியான விளையாட்டை தாண்டிவிட்டாய் என நினைத்தேன். உனக்கு இப்போது வயது இருபது அல்லவா?’
அவள் நாக்கை வெளியே தள்ளி பழிப்பு காட்டி ‘அப்ப, எங்கே போகப் போகிறாய்?’ என்றாள். ‘உன்னுடைய இடம்,’ ‘அது சரி வராது. என்னுடைய அறைவாசி அங்கே இருக்கிறாள்.’
ஏதோ அவள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற தொனியில் ‘ஓ, நீ விடுதியில் அல்லவா தங்கியிருக்கிறாய்.’ என்றான்.
‘நீ எங்கே வசிக்கிறாய்?’ அவள் கேட்டாள்.
‘நான் வீட்டில்தான் இருக்கிறேன்.’
‘நான் அங்கே வரமுடியாதா?’
‘வரலாமே.’
அவனுடைய வீடு மரங்களடர்ந்த தோப்பின் அருகாமையில், கல்லூரி வளாகத்துக்கு கிட்டவாக இருந்தது. மகிழ்ச்சியூட்டும் வெள்ளை மின் விளக்குகள் வீட்டு வாசல் வரை அலங்கரித்தன. காரை விட்டு இறங்க முன்னர் ஓர் எச்சரிக்கை போலச்சொன்னான், ‘என்னிடம் பூனைகள் உள்ளன.’
‘எனக்குத் தெரியும்,நாங்கள் ஏற்கனவே அதுபற்றி குறுஞ்செய்தியில் எழுதியிருக்கிறோமே.’வாய்க்குள் பொதுவான வசைகளை முணுமுணுத்தபடி நீண்டநேரம் முன்வாசல் சாவியை தேடி எடுத்தான். அவன் பதற்றத்தை குறைக்க மார்கோ அவன் முதுகை தடவிக்கொடுத்தாள். அது இன்னும் பதற்றத்தை கூட்டியதால் தடவுவதை நிறுத்தினாள். கதவைத் திறந்தபடி ‘இதுதான் என் வீடு,’ என்றான். பலவிதமான பொருள்கள் நிறைந்த அந்த வீடு மங்கலான வெளிச்சத்தில் அரைகுறையாகத் தெரிந்தது. அவள் கண்கள் வெளிச்சத்திற்கு பழகிய பின்னர் எல்லா பொருள்களும் புலப்பட ஆரம்பித்தன. புத்தகங்கள் நிறைந்த இரண்டு பெரிய அலமாரிகள், வைனல் ஒலித்தட்டுகள், விளையாட்டு பொருள்கள், பலவிதமான கலைச் செல்வங்கள், சுவரில் ஒட்டாமல்தொங்கும் சுவரொட்டிகள் என வீடு நிரம்பியிருந்தது.
’எனக்கு வீடு பிடித்திருக்கிறது,’ என்று அவள் உண்மையாகவே சொன்னாள். ஒருவித ஆசுவாசமாக உணர்ந்தாள். அவள் முதல் தடவையாக ஒரு வீட்டுக்கு உடலுறவு வைப்பதற்காக வந்திருந்தாள். தன்னுடைய வயது ஒத்த பையன்களையே அவள் உடலுறவுக்கு தேர்வு செய்வாள். கள்ளமாக அறை வாசிகளை தவிர்த்து நடப்பது பழக்கமானது. இது அவளுக்கு புதிது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இது இன்னொருவருடைய ஆளுமைக்கு உட்பட்ட இடம். ரோபர்ட்டுடைய கலை ஆர்வம், அவளுடையதைப்போலவே இருந்ததால் அவளுடைய தேர்வு சரி என்று பட்டது.
அவள் இப்படி யோசித்தபோது ரோபர்ட் அவளை உற்றுப் பார்த்தபடியே இருந்தான். ஒருவேளை இது சாதாரண அறை இல்லை; இது ஒரு பொறி. ரோபர்ட் சாதாரண ஆள் கிடையாது. வீட்டின் மற்ற அறைகளில் அவன் கடத்திய ஆட்களின் பிணங்கள் கிடக்கலாம். அப்படி அவள் சிந்தனை ஓடியபோது அவன் முத்தத்தை தொடங்கிவிட்டான். அவளுடைய கைப்பையையும், மேலங்கியையும் கழற்றி சாய்கதிரையில் வீசியபடி படுக்கை அறைக்குள் அவளை அழைத்துப் போனான். அந்த நேரம் அவன் அவள் பிருட்டத்தையும், மார்பையும், அவன் கொடுத்த முதல் முத்தம் போல, ஒழுங்கற்ற முறையில் அளைந்தான்.
படுக்கை அறை வெறுமையாக இல்லை, ஆனால் முன் அறையிலும் பார்க்க பொருட்கள் குறைவாகவே இருந்தன. படுக்கைக்கான சட்டகமும், கால்களும் இல்லை. தரையிலே ஒரு பெட்டி ஸ்பிரிங்கும், அதற்கான மெத்தையும் இருந்தன. கண்ணாடி மேசையில் ஒரு போத்தல் விஸ்கி காணப்பட்டது. அதிலிருந்து ஒரு மிடறு குடித்தான். பின்னர் அதை அவளிடம் தந்துவிட்டு தன் மடிக்கணினியை திறந்து இசையை ஓடவிட்டான். மார்கோ படுக்கையில் அமர்ந்தாள். ரோபர்ட் தன் மேல்சட்டையை கழற்றிவிட்டு கால்சட்டையை முழங்கால்வரை இழுத்தான். காலில் காலணி இருப்பதை அப்போதுதான் உணர்ந்து சப்பாத்து கயிறை அவிழ்க்க குனிந்தான். அவனது ரோமம் நிறைந்த தொப்பை வெளியே தள்ளியது. அவள் மனதில் ,’ஐயையோ’ என்ற நினைவு ஓடியது. அவள் ஆரம்பித்து வைத்ததை நிறுத்துவது எப்படி? இதற்கு சாதுர்யமும், மென்மையும் தேவை. ஆனால் அவற்றை வரவழைப்பது சுலபம் இல்லை. அவன் அவளை பலவந்தப்படுத்துவான் என்று அவள் நினைக்கவில்லை. ஆனால் இதை இங்கே நிறுத்தினால் இவள் அடிக்கடி மனம் மாறுபவள், உதவாதவள் என்று அவனுக்கு தோன்றலாம். ஓர் உணவகத்தில் உணவுக்கு ஆணை கொடுத்து அது வந்த பிறகு வேண்டாம் என்று திருப்பி அனுப்புவது போல அது இருக்கும் என அவள் நினைத்தாள்.
ஒரு மிடறு விஸ்கியை விழுங்கிக்கொண்டு, இந்த எதிர்ப்பை கைவிட முடிவெடுத்தாள். ஆனால் அவன் அவள்மேல் விழுந்து அருவருக்கத்தக்க முத்தங்களால் மூழ்கடித்தான். அதே நேரத்தில், அவன் கைகள் மார்புகள் மீதும், கால்கள் சந்திக்கும் இடத்திலும் தீவிரமாக அலைந்தன. அவளுக்கு தாங்க முடியாத மூச்சுத் திணறல் ஏற்பட்டு இந்தக் காரியத்தை மேலும் தொடரமுடியாது என்று தோன்றியது. கண்களை மூடி ’செவன் இலெவனில்’ அவன் நெற்றியில் முத்தமிட்டதை நினைத்தபடி அவன் பாரத்தில் இருந்து விடுபட நெளிந்து வளைந்து வெளியே வந்தாள். அவள் தன் மேலுடையை கழற்றினாள். ரோபர்ட் ஒரு கையை அவள் மார்புக்கச்சுக்குள் நுழைத்தான். அது அசௌகரியமாக இருந்ததால் அவள் சற்று முன்னே வளைந்து உதவினாள். அவன் ப்ரா கொக்கியை கழற்ற செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எரிச்சலில் ‘இதைக் கழற்றி எறி’ என்று ஒருவிதமான குரலில் சொன்னான். அவளும் அப்படியே செய்தாள்.
இதற்கு முன்னர் இவளை நிர்வாணமாகப் பார்த்த ஆறு பேரிலும் பார்க்க இவன் பார்வை அதீத உச்சமாக இருந்தது. ரோபர்ட் நிறைய பால்குடித்தஒரு குழந்தையைப் போல திக்குமுக்காடி, திகைத்து முட்டாளாகக் காட்சியளித்தான். உடலுறவில் அவளுக்கு பிடித்த பகுதி இதுதான், ஆணின் முட்டாள்தனமான திகைத்த பார்வை.
அவர்கள் முத்தமிட்டபோது அவளுடைய இன்பக் கற்பனை விரிந்தது. அவன் நினைப்பதாகக் கற்பனை ஓடியது. இவள் அழகான பெண். இவளுடைய உடல் அத்தனை கச்சிதமானது. செப்பமானது. இவளுக்கு வயது இருபது மட்டுமே. இவளுடைய சருமம் அப்பழுக்கற்றது. எனக்கு இவள் வேண்டும். நான் செத்தாலும் பரவாயில்லை. இவள் வேண்டும். கற்பனை செய்யச் செய்ய மார்கோவின் கிளர்ச்சி மேல்நோக்கி நகர்ந்தது. வெகு சீக்கிரத்தில் அவர்கள் ஒருவித தாள லயத்துடன் இயங்கினார்கள். உச்சத்தை நெருங்கிப் போனபோது அவன் பெண்குரலில் ஊளை போன்ற ஓர் ஒலியை எழுப்பினான். இந்த ஒலியை நிறுத்த என்ன செய்யலாம் என அவள் யோசித்தாள். ஆனால் ஒன்றும் முடியவில்லை. திடீரென்று அவன்,’பொறு, நீ இதை முன்னரே செய்திருக்கிறாயா?’ என்றான். அவளுடைய முதல் எண்ணம் ‘இல்லை’ என்று சத்தமிடுவது. பின்னர் அவன் என்ன அறிய விரும்பினான் என்று எண்ணியபோது பலமாகச் சிரித்தாள்.
அப்படி சிரிக்கவேண்டும் என அவள் நினைக்கவில்லை. கன்னிமை இழப்பது பற்றி அவள் நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறாள். பல மாதங்கள் இதுபற்றி அவளுடைய இரண்டு வருட நண்பனுடன் பேசியிருக்கிறாள். அத்துடன் மகப்பேறு மருத்துவருடன் அவள் ஒழுங்குசெய்த சந்திப்பும் அச்சமூட்டுவதாக அமைந்தது. கடைசியில் அவளுடைய அம்மாவுடன் விவரமாக இது பற்றி உரையாடினாள். அம்மா விடுதியில் அவளுக்காக ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தார். சம்பவம் முடிந்த பின்னர் அவள் அம்மா வாழ்த்து அட்டைகூட அனுப்பியிருந்தார்.
இத்தனை எச்சரிக்கையும், அறிவும் கொண்ட ஒரு பெண், படம் பார்த்து, மூன்று பியர் குடித்து, தெரியாத ஒருவர் வீட்டுக்குப் போய், தியேட்டரில் சந்தித்த முன்பின் தெரியாத ஆணுடன் அவள் தன் கன்னிமையை இழக்கச் சம்பதிப்பாள் என்று அவன் எப்படி எண்ணலாம். அவளுக்கு சிரிப்பாக வந்தது.
‘மன்னிக்கவேண்டும், எனக்கு தெரியாது,’ என்றான் ரோபர்ட். அவள் கெக்கே என்று சிரிப்பதை நிறுத்தினாள். ’நீ என்னிடம் விசாரித்தது சரிதான். நான் இதற்கு முன்னரே உடலுறவு வைத்திருக்கிறேன். நான் சிரித்ததற்கு உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.’
‘நீ மன்னிப்பு கேட்கத் தேவையில்லை.’ ‘ஒரு வேளை எனக்கு பதற்றமாக இருந்திருக்கலாம்,’ என்றாள் அவள். ‘பதற்றத்துக்கு இடமே இல்லை. நாங்கள் அமைதியாக இதைச் செய்து முடிப்போம்.’
அவன் மறுபடியும் முத்தத்தை ஆரம்பித்தான். அவளுக்குத் தெரியும் இதில் கிடைக்கக்கூடிய இன்பம் எல்லாம் எங்கேயோ ஓடிவிட்டது என்று. ஆனாலும் தொடங்கியதை முடித்துவைப்போம் என நினைத்தாள். முடி அடர்ந்த தொப்பை தெரிய அவன் ’கொண்டொம்’ ஒன்றை எடுத்து மெதுவாக உருட்ட ஆரம்பித்தான். ஒரு வெறுப்பு அலை அவளை தாக்கியது.
உடலுறவின்போது அவளை வெவ்வேறு நிலையில் பயன்படுத்தினான். அவள் வளைந்து கொடுத்து, திரும்பவும் சமநிலை அடைகிற ஒரு பொம்மையைப்போல தன்னை உணர்ந்தாள். அவளுடைய தொடையை அடித்து ‘அதுதான்’ என்றான். அது என்ன கேள்வியா அல்லது ஆணையா என்பது தெரியவில்லை. ‘உன்னைப்போன்ற ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதே என் விருப்பம்’ என்று அவன் மார்கோவின் காதுக்குள் சொன்னபோது அவள் தலையணையில் முகம் புதைத்து சிரிப்பை அடக்கினாள். இறுதியில் ஒரு கணத்தில் அவன் உடல் நடுங்க ஒரு மரம்போல அவள்மேல் விழுந்தான். அவனால் நசிக்கப்பட்டு கிடந்த அவள் ’இதுதான் நான் என் வாழ்நாளில் எடுத்த அதிமுட்டாள்தனமான முடிவு’ என நினைத்துக்கொண்டாள்.
சிலநேரம் கழித்து,’கொண்டம்’ விழாமல் தூக்கி கைகளால் பிடித்தபடி,வளைந்த கால்களால் நடந்து கழிவறைக்கு விரைந்தான். மார்கோ படுத்திருந்தபடி முதல் முறையாக தட்டைக் கூரையை பார்த்தாள். அங்கே இரவு நேரத்தில் மின்னும் நட்சந்திரங்களும், சந்திரன்களும் ஒட்டியிருந்தன. ரோபர்ட் வெளியே வந்து பக்கத்தில் நிழல்போல நின்று ’இப்பொழுது உனக்கு என்ன செய்ய விருப்பம்?’ என்றான். ‘நாங்கள் தற்கொலை செய்யலாம்,’ இப்படி பதில் சொல்வதாக அவள் கற்பனை செய்தாள். அவள் தோள்களை அசைத்தாள். ‘ஒரு படம் பார்ப்போம்,’ என்றபடி ரோபர்ட் தன் மடிக்கணினியை எடுத்து, என்ன காரணமோ கீழே வசனங்கள் ஓடும் ஒரு படத்தை தேர்வுசெய்தான். கண்களை மூடியபடியால் அவளுக்கு அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. அவள் தலைமுடியை வருடியபடியும், தோள்மூட்டில் சின்னச்சின்ன முத்தங்கள் கொடுத்தபடியும் அவன் இருந்தான்.
திடீரென்று அவன் தன் உணர்ச்சிகள் பற்றி வர்ணிக்கத் தொடங்கினான். அவள் விடுமுறையில் போனபோது அவன் தவித்தான். ஒருவேளை அவள் பழைய உயர்நிலைப்பள்ளி மாணவனுடன் சேர்ந்திருப்பாளோ எனப் பயந்ததையும் சொன்னான். ’நீ ஏதாவது தவறான முடிவு எடுத்திருப்பாய். நீ திரும்பும்போது எங்கள் உறவு நின்றுவிடும் என்று நான் கவலைப்பட்டேன். ஆனால் நான் உன்னை நம்பியிருக்க வேண்டும்.’
அவள் ஒன்றும் சொல்லவில்லை். கொஞ்சம் வெறுப்பை காட்டியபடி மௌனமாக இருந்தாள். ரோபர்ட் ’நீ விழிப்பாக இருக்கிறாயா?’ என்று
கேட்டான். அவள் ஆம் என்றாள். அவன் ‘எல்லாம் சரியாக இருக்கிறதா?’ என்றான். ‘உன்னுடைய வயது என்ன?’ மார்கோ கேட்டாள். ‘என்னுடைய வயது 34. ஏதாவது பிரச்சினையா?’ அவன் பயப்படுவதை அந்த இருட்டிலும் அவளால் உணரக்கூடியதாக இருந்தது. ‘இல்லை, ஒன்றும் பிரச்சினை இல்லை.’
‘அதைப்பற்றி நான் பேசவே நினைத்தேன். ஆனால் நீ எப்படி எடுப்பாய் என்று எனக்குத் தெரியவில்லை. ‘
அவன் உருண்டு அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டான். ஒரு நத்தையின்மீது உப்பு தூவியதுபோல மார்கோ அந்த முத்தத்தால் சுருங்கினாள். அவள் மணிக்கூட்டைப் பார்த்தாள். ஏறக்குறைய காலை மூன்று மணி. ‘நான் விடுதிக்கு திரும்பவேண்டும்.’
‘உண்மையாகவா? நீ தங்குவாய் என நினைத்தேன். காலையில் நான் அருமையாக முட்டை கிளறிப் பொரிப்பேன்.’ ‘நன்றி’ அவள் ஒட்டிப்பிடிக்கும் தன்னுடைய கால்சட்டையை அணிந்தபடி சொன்னாள். ‘நான் நிற்க முடியாது. என் அறைவாசி கவலைப்பட ஆரம்பித்திருப்பாள்.’ ‘விடுதி அறைக்கு நீ திரும்பவேண்டும்,’ கொஞ்சம் கிண்டலோடு அவன் சொன்னான். ‘ஆமாம், அங்கேதான் நான் வசிக்கிறேன்.’
கார் நெடுநேரம் ஓடியது. பனித்தூறல் மழையாக மாறிவிட்டது. அவர்கள் பேசவில்லை. ரோபர்ட் ரேடியோவை திருகினான். அவனுடன் நெடுஞ்சாலையில் புறப்பட்டபோது ரோபர்ட் அவளைக் கொலை செய்ய முயன்றால் என்ன செய்வது என்று தான் பயந்ததை மார்கோ நினைவுகூர்ந்தாள். அவன் கொல்வதானால் இப்பொழுது கொன்றாலும் ஆச்சரியப்பட முடியாது.
அவன் கொல்லவில்லை. அவளுடைய விடுதிக்கு காரை செலுத்தினான். தன்னுடைய சீட் பெல்ட்டை விடுவித்தபடி அவன் சொன்னான், ‘இன்று அருமையாக நேரம் கழிந்தது.’ ‘நன்றி, எனக்கும் அப்படியே’ என்று அவள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு சொன்னாள். ‘எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. இறுதியில் எங்களால் ஒரு டேட்டுக்கு போக முடிந்தது.’
‘டேட்டா?’ அவள் தன் கற்பனை சிநேகிதிக்கு சொன்னாள். ’அவன் இதை டேட் என்று சொல்கிறான்.’ அவளும், கற்பனை சிநேகிதியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ‘படத்துக்கும், உங்கள் இன்றைய செலவுகளுக்கும் நன்றி,’ என்றபடி கதவு கைப்பிடியில் கை வைத்தாள். ‘பொறு’ அவள் கையைப் பிடித்து இழுத்தபடி சொன்னான். ‘இங்கே வா.’ அவளைச் சுற்றி கைகளை அணைத்தபடி தன் நாக்கை கடைசிமுறையாக அவள் தொண்டைக்குள் செலுத்தினான். ‘ஓ, கடவுளே, இது எப்போது முடியும்?’ தன் கற்பனை சிநேகிதியிடம் புலம்பினாள். கற்பனை சிநேகிதி பதில் பேசவில்லை. ‘நல்ல இரவு’ என்று சொல்லியபடி கதவைத் திறந்து தப்பி ஓடினாள். அவள் அறைக்குள் போனவுடன் அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்து கிடந்தது. வார்த்தைகள் இல்லை. உணர்ச்சிப் படம்தான். இருதயமும், இருதயக் கண்களும் ஏதோ காரணத்துக்காக ஒரு டொல்ஃபினும்.
அவள் பன்னிரெண்டு மணி நேரம் தொடர்ந்து தூங்கினாள். எழும்பியதும் உணவுக்கூடத்தில் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து நெட்ஃபிளிக்சில் படம் பார்த்தாள். எப்படியாவது அவன் தன் நினைலிருந்து மறைந்து போகவேண்டும் என விரும்பினாள். அதற்கு அவள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. அடுத்த குறுஞ்செய்தி அவளுடைய இரவு உணவுக்கு பின்னர் வந்தது. சிவப்பு இனிப்பு பற்றிய ஒரு சின்ன நகைச் சுவை. உடனேயே அதை நீக்கினாள். அவள் தோலில் ஏதோ ஊர்வது போன்ற வெறுப்பு ஏற்பட்டது. அவனுக்கு தாங்கள் பிரியும் செய்தியை அனுப்ப வேண்டியது தன் கடமை என அவள் எண்ணினாள். அப்படியே பாதியில் மறைவது நல்லதல்ல, அது கொடூரமானது. அவனுக்கு தான் பிரியப்போவது தெரியாவிட்டால் அவன் தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டே இருப்பான் அது முடிவை அடையாது.
அவனுக்கு ஒரு பிரிவுச் செய்தியை அவள் தயாரித்தாள். ‘உன்னுடன் கழித்த இன்பமான நேரத்துக்கு மிக்க நன்றி. ஆனால் இதைத் தொடருவதில் எனக்கு விருப்பம் இல்லை.’ அது சரியாக வரவில்லை. மன்னிப்பு கேட்கவேண்டுமா? அவன் திரும்பவும் வந்து சாதாரண நண்பர்களாக இருப்போமே என்று சொன்னால் என்ன செய்வது? இதை முற்று முழுதாக நிறுத்த வேண்டும். அவளுடைய செய்தி நீண்டுகொண்டே போனது. அவளால் பிரேக் அப் செய்தியை அனுப்ப முடியவில்லை. ஆனால் அவனிடமிருந்து செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தன. ஒவ்வொரு செய்தியும் அதற்கு முன்னர் வந்த செய்தியிலும் பார்க்க தீவிரம் கூடியிருந்தது. தரையிலே கிடக்கும் படுக்கையில் அவன் அமர்ந்திருந்து அவளுக்கு செய்தி அனுப்புவது காட்சியாக மனதில் தோன்றியது, தான் வளர்க்கும் பூனைகள் பற்றி அவன் நிறையப் பேசியிருக்கிறான். ஆனால் அவள் ஒரு பூனையைக்கூட அவன் வீட்டில் காணவில்லை. ஒருவேளை இதுவெல்லாம் அவனுடைய கற்பனையாக இருக்கலாம்..
அடுத்த சில நாள்களாக அவள் ஒருவித பகல்கனவு மனநிலையில், எதையோ இழந்தது போன்ற தவிப்புடன் இருந்தாள். யோசித்துப் பார்த்தபோது இதற்கு காரணம் ரோபர்ட் அவள் வாழ்க்கையில் இல்லாதது எனத் தெரிந்தது. ஆனால் உண்மையான ரோபர்ட் அல்ல, குறுஞ்செய்திகள் அனுப்பியபோது அவள் மனதில் தோன்றிய கற்பனை ரோபர்ட்.
கடைசி சந்திப்பு முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு அவனிடமிருந்து ஒரு செய்தி வந்தது. ‘ நீ உண்மையிலேயே வேலைப் பளுவில் இருக்கிறாய் போலிருக்கிறதே.’ அப்பொழுது அவளுக்கு தோன்றியது இது நல்ல தருணம் என்று. இப்படிச் செய்தி அனுப்பினாள். ‘மன்னிக்க வேண்டும். விரைவில் செய்தி அனுப்புவேன்.’ உடனேயே அவள் நினைத்தாள், ‘ஏன் இப்படிச் செய்தேன்?’
அவளுடைய அறைவாசி தமாரா சொன்னாள்,’அவனுக்குச் சொல், உனக்கு அவன்மீது ஒருவித ஈர்ப்பும் இல்லையென்று.’ மார்கோ ஒரு மணி நேரமாக படுக்கையில் அமர்ந்து என்ன எழுதுவது என்று தெரியாமல் புலம்பியபடி இருந்தாள். தமாராவிடம் சொன்னாள், ‘அப்படிச் சுருக்கமாக சொல்லமுடியாது. நான் அவனுடன் படுத்திருக்கிறேன்.’
‘அப்படியா?’
‘அவன் நல்லவன்.’ அப்படிச் சொன்னபோதே அவளுக்குள் சந்தேகம் எழுந்தது.
தமாரா பாய்ந்துஅவள் செல்பேசியை பறித்து இப்படி ஒரு செய்தி அனுப்பினாள். ‘எனக்கு உன்மீது ஒருவித ஈர்ப்பும் இல்லை. குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்து.’ இதை அனுப்பிவிட்டு செல்பேசியை மார்கோவிடம் திருப்பி எறிந்தாள்.’
செய்தியை வாசித்து ‘ஓ, கடவுளே’ என்றாள் மார்கோ. அவளுக்கு மூச்சு விடுவது கஷ்டமாகவிருந்தது. ‘உண்மை, இது என்ன பெரிய விசயம்,’ என்றாள் தமாரா. மார்கோவின் வயிற்றில் ஒரு முடிச்சு விழுந்தது போல பயமும் தொடர்ந்தது வாந்தி வந்துவிடும் போலவும் பட்டது. ரோபர்ட் அந்தச் செய்தியை படிப்பதை கற்பனையில் பார்த்தாள். அவன் உடைந்து அழுவது தெரிந்தது.
‘அமைதி, வா குடித்தால் எல்லாம் சரியாகும்.’ இருவரும் மதுவகத்துக்குச் சென்று ஆளுக்கு பாதியாக குடித்தார்கள். மார்கோவின் செல்பேசி அவர்களுக்கு நடுவில் கிடந்தது. அது செய்தி வந்த சத்தத்தை எழுப்பியபோது இருவரும் ஒருவர் தோளை ஒருவர் கெட்டியாகப் பிடித்து அலறினார்கள். ‘என்னால் முடியாது. நீ படி’ என்று சொல்லியபடி செல்பேசியை தமாரா பக்கம் தள்ளினாள். ‘நீதான் செய்தாய். இது உன்னுடைய பிழை’ என்று மார்கோ கத்தினாள். ஆனால் செய்தி இதுதான். ‘நல்லது மார்கோ. நீ சொல்வதைக் கேட்க எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் உன்னைக் கவலைப்படுத்தும் விதமாக ஒன்றும் செய்யவில்லை என்றே நினைக்கிறேன். நீ மிகவும் இனிமையான பெண். உன்னுடன் கழித்த நேரம் எனக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. உன்னுடைய மனதை மாற்றினால் நீ எனக்குத் தெரியப்படுத்து,’ மார்கோ அப்படியே தலையை கைகளால் பிடித்தபடி மேசையில் கவிழ்ந்தாள். சின்னக் காயம் உண்டாக்கி நிறைய ரத்தம் குடித்துவிட்டு விழுந்த அட்டைபோல மார்கோ தன்னை உணர்ந்தாள்.
எதற்காக அவள் அப்படி உணர்ந்தாள். அவள் நியாயமாக அவனுடன் நடக்கவில்லை. அவன் ஒருவித பிழையும் செய்யவில்லையே. அவனால் படுக்கையில் சரியாக இயங்க முடியவில்லை. சிலவேளை பூனைகள் பற்றி அவன் பொய் சொல்லியிருக்கலாம். அல்லது பூனைகள் வேறு அறையில் இருந்திருக்கலாம்.
ஒரு மாதம் கழித்து அவனை பல்கலைக்கழக மாணவர்கள் செல்லும் ஒரு மதுவகத்தில் மார்கோ கண்டாள். அவன் ஒரு மேசையில் தனியாக உட்கார்ந்திருந்தான். அவனிடம் புத்தகம் இல்லை. செல்பேசி இல்லை. பியருக்கு மேல் தலை குனிந்தபடி இருந்தான். அவளுடன் வந்த நண்பன் அல்பெர்ட்டின் கையை இறுக்கப் பற்றி ’ஓ, கடவுளே, இவன்தான்’ என்று ரகஸ்யக் குரலில் மார்கோ சொன்னாள்.
‘அவன்தான் அந்த தியேட்டரில் நான் சந்தித்த மனிதன்.’ அல்பெர்்ட் அந்தக் கதையை கேள்விப்பட்டிருந்தான். அந்தச் சம்பவம் எல்லா நண்பர்களுக்கும் தெரிந்ததுதான். அல்பேர்ட் அவள் முன்னால்நகர்ந்து அவளை மறைத்தபடி வேறு நண்பர்கள் உட்கார்ந்திருக்கும் மேசைக்கு சென்றான். மார்கோ அந்த நண்பர்களுக்கு அங்கே ரோபர்ட் வந்திருக்கும் செய்தியை பிரகடனம் செய்தாள். எல்லோரும் ஆச்சரியத்தில் வெடித்து கும்மாளமிட்டு அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு ஜனாதிபதியை அவருடைய மெய்க்காவல் படையினர் சூழ்வதுபோல அவளைச் சுற்றி மறைத்தபடி வெளியேறினார்கள். மிக மோசமான ஒரு பெண்ணாக நடந்தாளா என்று மனதில் நினைத்த அதே நேரம் அவள் பயத்தில் இருந்ததும் தெரிந்தது.
அன்றிரவு தமாராவுடன் படுக்கையில் சுருண்டு படுத்துக் கிடந்தபோது அவளுடைய செல்பேசி ஒளிர்ந்து அவர்கள் முகங்களை பிரகாசமாக்கியது.செய்தி வரும்போதே மார்கோ அதைப் படித்தாள். மார்கோ, இன்றிரவு நான் உன்னை மதுவகத்தில் பார்த்தேன். நீ செய்தி அனுப்பவேண்டாம் என்று சொல்லியிருந்தாய். ஆனால் நீ நல்ல அழகாக இருந்தாய் என்று சொல்ல விரும்புகிறேன். நீ சேமமாக இருக்கிறாய்தானே.
நான் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் நீ இல்லாமல் வாழ்வது எனக்கு வெறுமையாகிவிட்டது. எனக்கு இதைக் கேட்க உரிமை இல்லை. நான் உனக்கு என்ன தவறு இழைத்தேன் என்று தெரிந்தால் நல்லாயிருக்கும். உனக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்தது. உனக்கு அப்படித் தோன்றவில்லையா? ஒருவேளை நான் உனக்கு அதிக வயதுக்காரனாக பட்டிருக்கலாம். அல்லது உனக்கு வேறு ஒருவரைப் பிடித்திருக்கலாம். உன்னுடன் காணப்பட்ட அந்தப் பையன்தானா உன் நண்பன்? அல்லது அவன் சும்மா நீ படுக்க உபயோகிக்கும் ஒருவனா? மன்னித்துக்கொள். நீ கன்னியா என்று நான் கேட்டபோது சிரித்தாயே. நீ கணக்களவில்லாத பையன்களுடன் ஏற்கனவே படுத்திருந்தாய் என்பதாலா?
நீ அந்தப் பையனுடன் இந்த நிமிடம் படுத்திருக்கிறாயா?
படுத்திருக்கிறாயா
படுத்திருக்கிறாயா
படுத்திருக்கிறாயா
பதில் சொல்
வேசை.
‘Cat Person’ by Kristen Roupenian. Copyright © 2017, Kristen Roupenian, used by permission of The Wylie Agency (UK) Limited.