வட்டத் திமிர்கள்

வட்டத் திமிர்கள்
Published on

காமத்துப்பாலில் பத்துக் குறள்களைக் கொண்டு கவிஞர் பழநிபாரதி புனைந்திருக்கும்  கவிதை இது. அந்த குறள்களும் வாசகர்களின் புரிதலுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. வள்ளுவனை விட காதலைச் சிறப்பாகப் பாட யார் உண்டு?

தேவதையா

மயிலா

பெண்ணா

யாரிவள்?

அவை கண்களா?

இல்லை... இல்லை

காண்பவர் உயிரை

மென்று விழுங்கும்

வட்டத் திமிர்கள்!

நெருங்கக் குளிர்கிறது

விலகச் சுடுகிறது

இந்தத் தீயை

இவள்

எங்கிருந்து பற்றவைக்கிறாள்?

காதல் பெருவெள்ளம்

நாணம் நுரைக்க

இழுத்துச் செல்கிறது

ஆண் தோணியை!

யாரும் அறியவில்லையென

நான் அமைதி காக்கிறேன்

என் காமமோ

தெருத் தெருவாய்

சுற்றிவருகிறது

நல்லது ஊராரே!

தூற்றுங்கள்... தூற்றுங்கள்

உங்கள் தூற்றல்களாவது

எங்களை

இணைத்ததுபோல்

ஓர் இன்பத்தை நல்கட்டும்!

காதல்

கடலாக விரிந்திருக்கிறது

கடந்துபோக

கட்டுமரந்தான் இல்லை!

மறக்கத்தான் நினைக்கிறேன்.

காதலை

அது தும்மலைப் போல

சட்டென வெளிப்பட்டுவிடுகிறது!

மணிமாலையில்

கோத்த நூலாக

அவள் அழகுகளில் நிழலாடுகிறது

எனக்காக

ஏதோ ஒன்று!

மென்மை

மென்மையிலும் மென்மை - காமம்!

அதன் மகரந்த நுட்பத்தை அறிந்தவர்

ஓரிருவர்தான்!

1081.   அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை        

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

1084.  கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்       

 பேதைக்கு அமர்த்தன கண்

1104.   நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்        

தீயாண்டுப் பெற்றாள் இவள்

1134.   காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு        

நல்லாண்மை என்னும் புணை

1139.   அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்        

மறுகின் மறுகும் மருண்டு

1143.   உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்        

பெறாஅது பெற்றன்ன நீர்த்து

1164.   காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்        

ஏமப் புணைமன்னும் இல்

1253.   மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்        

தும்மல்போல் தோன்றி விடும்

1273.   மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை        

அணியில் திகழ்வதொன்று உண்டு

1289.   மலரினும் மெல்லிது காமம் சிலரதன்        

செவ்வி தலைப்படு வார்

logo
Andhimazhai
www.andhimazhai.com