வைரமுத்துவுடன் புகைப்படம்!
வைரமுத்துவுடன் புகைப்படம்!

கவிஞர் வைரமுத்து வழங்கிய கறி விருந்து!

மண்ணின் மைந்தர்களோடு ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்! - கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி
Published on

ஆண்டுதோறும் கவிஞர் வைரமுத்து தன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு விழாவைத் தனது பொன்மணி மாளிகையில் வழக்கமாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாகக் கொண்டாடுவது வழக்கம். பெரும்பாலும் சென்னையில் இவ்விழா நடப்பதால் நிகழ்விடத்தை முன்னிட்டு சென்னைப் பிரமுகர்கள், வாசகர்கள், ரசிகர்கள் சூழ நடந்தேறும்.

காலையில் முதலமைச்சர் முதல் அரசியல் தலைவர்களின் தொலைபேசி வாழ்த்துகளுடன் அந்த நாள் தொடங்கும்.

பிறந்தநாள் விழா அரங்கில் வழமை போலப் பிரமுகர்கள் , ரசிகர்கள் வருகைகள் வாழ்த்துகள் கவிஞர்கள் தின விழா விருது வழங்கல் என்று அந்த விழா எந்தப் புதுமைகளுக்கும் இடமில்லாமல் சம்பிரதாயமாக நடக்கும்.

உண்மையைச் சொன்னால் சென்னையில் நடக்கும் விழாக்கள் ஒரு 'டெம்ப்ளேட்' தன்மையுடன்தான் இருக்கும்.விருது பெறும் கவிஞரைத் தவிர மற்றவை அனைத்தும் பார்த்த, பழகிய முகங்களாகவே இருக்கும்.

தனது பிறந்தநாள் விழாவைச் சில ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தான் பிறந்து வளர்ந்த மண்ணில் அந்த மண்ணின் மைந்தர்களோடு கவிஞர் கொண்டாடுவார்.கொண்டாடுவார் என்பதை விட, தான் பிறந்தநாளில் அங்கு இருப்பதாக அறிவிப்பார். மண்ணின் மைந்தர்கள் கூடி அதைக் கொண்டாட்டமாக மாற்றி விடுவார்கள்.

இந்த ஆண்டும் அப்படித்தான் அங்கு பிறந்தநாள் கொண்டாடுவதாக செய்தி அறிந்ததும் அப்பகுதியினர் பரபரப்பாகி விட்டார்கள்.

அப்படித்தான் இந்த ஜூலை13ம் தேதி கொடைக்கானல் அடிவாரத்தில் கெங்குவார்ப் பட்டியில் அவரது 'கவிஞர் தோட்டம்' என்கிற பண்ணைத் தோட்டத்தில் பிறந்தநாள் விழா நடப்பதாக ஏற்பாடு.

சில நாட்களுக்கு முன்பே தன்னது சொந்த மண்ணுக்கு சென்றவர், அங்கே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவ்வகையில் பெரியகுளம் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார்.

1994 முதல் தனது பிறந்த நாளைக் கவிஞர்கள் தினமாக கொண்டாடி வருகிறார் கவிஞர் வைரமுத்து.

அதை முன்னிட்டு கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து கவிஞர்கள் தின விருதும் பரிசுத்தொகையும் வழங்கி வருகிறார். பாராட்டுப் பத்திரம் 25 ஆயிரம் ரூபாய் பரிசு கொண்டது இவ்விருது.

இதுவரை கவிஞர்கள் தின விருதை கவிஞர்கள் சுரதா, நா.காமராசன்,கே.சி.எஸ்.அருணாசலம்,முகவை ராஜமாணிக்கம்,பூவை செங்குட்டுவன், வா.மு.சேதுராமன்,முத்துலிங்கம், தமிழன்பன், இன்குலாப், காசி ஆனந்தன், சிற்பி பாலசுப்ரமணியன், இந்திரன், கல்யாண்ஜி, நெல்லை ஜெயந்தா, தமிழச்சி தங்கப்பாண்டியன், ஆண்டாள் பிரியதர்ஷினி, இளம்பிறை, வெண்ணிலா, சல்மா, ஈழத்துக் கவிஞர்கள் றகுமான் ஏ.ஜமீல், எம்.எம்.நெளபல், மலேசியக் கவிஞர்கள் சி.மா.இளங்கோ(தன்னாசி),இராஜேஸ்வரிவேடியன், கலாப்ரியா, முத்தையா, மனுஷ்யபுத்திரன், தமிழ்நாடன், சக்திஜோதி, ராஜா சந்திரசேகர்,பா.சத்தியமோகன், தாராகணேசன் உள்ளிட்ட பல்வேறு வகையிலான கவிஞர்கள் பெற்றுள்ளார்கள்.

இவ்வாண்டு சேலத்தைச் சேர்ந்த கவிஞர் பழ. புகழேந்திக்கு கவிஞர் திருநாள் விருது வழங்கப்பட்டு பணப்பரிசு வழங்கப்பட்டது. விருதுப் பத்திரத்தை மரபின் மைந்தன் முத்தையா வாசித்தார். விருதை வைரமுத்து வழங்கினார். அதன் பிறகு நலிவுற்ற குடும்பத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சக்தி வேல், ஆர்த்திஶ்ரீ காளீஸ்வரி, சிரானா பாத்திமா, ரூபியா, பாண்டிச் செல்வி என ஐந்து பேருக்குக் கல்வி உதவித்தொகை ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.

அவர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை வாழ்த்தினார்.

எப்போதும் இந்த விழாவை அவரது வெற்றித் தமிழர் பேரவை அமைப்பு முன்னெடுக்கும்.

இந்த ஆண்டு கவிஞரது பிறந்தநாள் விழாவை அந்த ஊர் மக்கள் ஒரு திருவிழா போல் மாற்றி விட்டார்கள்.

சுமார் 2000 பேர் கூடி அமர்க்களம் செய்து விட்டார்கள் . விருது நிகழ்ச்சி முடியும் வரை சற்று அமைதி காத்தார்கள். அதன் பிறகு மண்ணின் மைந்தர்களின் ஆர்ப்பாட்டமான வாழ்த்து வைபவங்கள் தொடங்கின.

கவிஞர் தோட்டத்தில் இருந்த அந்த பண்ணை வீடு அவரது உறவினராலும் ஊர்க்காரர்களாலும் நண்பர்களாலும் நிரம்பி வழிந்தது. வைரமுத்து என்கிற அந்த 71வயது இளைஞனுக்கு வகைவகையாக வாழ்த்துக்கள், பலவிதமாகப் பாராட்டுக்கள் குவிந்தன. விசில் சத்தம் கவிப்பேரரசர் வாழ்க என்ற கோஷம் என திமிலோகப்பட்டது.

உறவினர் கூட்டம் அணி அணியாக படை படையாக, அலையலையாக வந்து கொண்டே இருந்தது.

கனிகள், பரிசுப் பொருட்கள், சீர்வரிசைத் தட்டுகள், பலகாரங்கள் இனிப்புகள், மரக்கன்றுகள், புத்தகங்கள், ஆளுயர மாலைகள், பொன்னாடைகள், மலர்க்கிரீடங்கள் என்று அமர்க்களப் படுத்தினார்கள். கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் 500 ரூபாய் நோட்டு மாலையை அணிவித்தார். பிறந்தநாள் கேக்குகள் வகை வகையாக வெட்டப்பட்டன. அந்த பண்ணைத்தோட்டத்தில் ஆங்காங்கே கேக் வெட்டி மகிழ்ச்சியாகப் பிறந்தநாள் கொண்டாடினார்கள்.

வைரமுத்து
வைரமுத்து

அந்தப் பகுதி மண்ணின் மைந்தரான அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி, தமிழக அரசின் முன்னாள் டில்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், பழனி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணன்,முன்னாள் எம்.எல்.ஏ எல்.மூக்கையா, தேனி காவல்துறை ஏடிஎஸ்பி விவேகானந்தன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.சஜீவனா,

புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து, மலேசிய எழுத்தாளர் சஙக முன்னாள் தலைவர் பெ.இராஜேந்திரன், இந்நாள் தைலவர் ஞானசைமன்,மருத்துவர்கள் சி.செல்வராஜ்,ஜெயபால், வனசேகர், தஞ்சை பல் மருத்துவர் ஆர்.பாஸ்கரன்,

மதுரை வெற்றி சினிமாஸ் ஐ.வெற்றிவேல், திருப்பூர் ஜீவானந்தம், சென்னை ' பாஸ்ட்ராக் ' தமிழரசு, ராசி பில்டர் ரங்கநாதன், டவுன்பஸ் ஓட்டல் வேலு, கோவை லாலா ஸ்வீட்ஸ் மாரியப்பன், தஞ்சை பாம்பே ஸ்வீட்ஸ் சுப்பிரமணியசர்மா, திருச்சி ஆர்ச்சர்ட் பள்ளி மணி கோவை ரமேஷ்,ஃபேஷன் வுட் சண்முகம் உள்ளிட்ட தொழிலதிபர்கள், பேராசிரியர் நம்.சீனிவாசன், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் திருமலை, வெற்றித் தமிழர் பேரவை வி.பி.குமார், தஞ்சை செழியன், ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, புதுவை வெற்றித் தமிழர் பேரவை வழக்கறிஞர் தி.கோவிந்தராசு, கர்நாடக வெற்றித் தமிழர் பேரவை பெங்களூரு இராஜேந்திரன், விமல், லோகநாதன்,கவிஞரின் படைப்புகளின் கன்னட மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் மலர்வழி, திருச்சி வெற்றித் தமிழர் பேரவை வி.பாஸ்கர், சந்திரன், பேராசிரியர் குபேந்திரன், சாத்தனூர் சிவா, கவிஞர் தஞ்சை இனியன், கவிஞரை முதலில் ஆதரித்து ஊக்கமூட்டிய தமிழாசிரியர் வெ.ஆ.உத்தமன், நடிகர் இயக்குநர் கணேஷ்பாபு, வாய்மை, காக்கி படங்களின் இசை அமைப்பாளர் அவ்கத், ராமநாதபுரம் ராணி, தேனி எஸ்.பி ஆர்.சிவப்ரசாத் ஐபிஎஸ்,வடுகபட்டி அழகர், ஆண்டிபட்டி வீரா, பிரபுதங்கம், தேனி மாவட்ட வெற்றித் தமிழர் பேரவை போகர் முருகன் போன்ற பல்துறைப் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். இந்த நீளப் பட்டியலைப் பார்த்தால் கவிஞர் அடிக்கடி குறிப்பிடும் 'மனிதர்களால் ஆனது வாழ்வு' என்பது புரியும்.

வைரமுத்துவுக்கு வாழ்த்து சொல்லும் எம்.பி. தங்க தமிச்செல்வன்
வைரமுத்துவுக்கு வாழ்த்து சொல்லும் எம்.பி. தங்க தமிச்செல்வன்

ஊர்க்காரர்கள் கூட்டத்தில் வாழ்த்து சொல்ல வந்த விஐபிகள் சிக்கிப் பிதுங்கி வெளியேறினார்கள்.

ஊர் மக்கள் குடும்பம் குடும்பமாக கவிஞருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆயிரம் பேராவது புகைப்படங்கள் எடுத்து இருப்பார்கள்.

அவர்களின் முரட்டு அன்பில் சிக்கிக் கொண்ட கவிஞர் மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் திணறினார்.

ஆர்வமிகுதித் தள்ளுமுள்ளுகளைத் தவிர்க்க முடியவில்லை. கூடியவர்கள் அடங்காத அன்புடன் அலை மோதினார்கள். அதனால் அவர் மதிய உணவே தாமதமாக உண்ணும் அளவிற்கு கூட்டம் நெருக்கி அடித்தது.

ஒவ்வொருவரும் அவருடன் ஏதாவது பேச விரும்பினார்கள். பாமர மனிதர்களுக்கும் பதில் மரியாதையாக அவரும் சில வினாடிகளில் ஒரு புன்னகை, ஒரு நலம் விசாரிப்பு என்று கொடுக்க வேண்டி இருந்தது.அவர்களின் அன்புச் சூட்டில், பாசப் புழுக்கத்தில் தெப்பமாக நனைந்திருந்தார். ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்து அவரை மீட்பது சிரமமாக இருந்தது. இப்படிப்பட்ட கூட்டம் ஆபத்தானது. வருங்காலத்தில் இப்படி நிகழும் போது இந்தக் கூட்ட நெரிசலைச் சரியானபடி முறைப் படுத்திட வேண்டும்.

கவிஞர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த அசைவ விருந்து தடபுடலாக இருந்தது. தலைவாழை இலையில் பிரியாணி, மட்டன் சுக்கா, மட்டன் கறி வறுவல், குடல் கறி, ஈரல் வறுவல் என்று ஆட்டின் சகல பாகங்களுக்கும் எனத் தனித்தனி தொடுகறிகளுடன்,பொரித்த முழுக்காடை, கரண்டி ஆம்லெட்,

மீன் வறுவல் போன்றவையும் பரிமாறப்பட்டன. பீடா, ஜிகர்தண்டா வரை இடம்பெற்று ஒரு முழு விருந்தாக ஆக்கியிருந்தார்கள். சிறுபான்மையினருக்குச் சைவ உணவும் ஒரு பக்கம் இருந்தது.

பிறந்தநாளை முன்னிட்டு, தன்னைப் பார்க்க வந்தவர்கள் காட்டிய பாச மழையில் நனைந்து கவிஞர் தெப்பமாக மாறி இருந்தார்.

வெளியூரிலிருந்து இந்த விழாவுக்கு வந்தவர்களில் கவிஞர் பிறந்த ஊர் வடுகபட்டி சென்று அவர் வாழ்ந்த வீட்டையும் படித்த பள்ளியையும் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டு சென்றது ஒரு கூட்டம்.

வைரமுத்து கொடுத்த கறிவிருந்து
வைரமுத்து கொடுத்த கறிவிருந்து

விழாவில், தான் செய்த நிதி உதவி பற்றி குறிப்பிடும் போது,

"பொருள் பெற்றோர் புன்னகையை விடவும் பொருள் ஒன்றும் உயர்ந்ததில்லை. தமிழ்கொடுத்த பொருளைத் தமிழர்க்குத் தருகிறோம்"என்றவர் மக்கள் காட்டிய அன்பு பற்றி பேசும்போது, விரிவாக விளக்கிச் சொல்ல சொற்களற்றவராக இருந்தார்.

" இவ்வுறவை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன்!" என்கிறார் நெகிழ்டன்.

விழாவுக்கு வந்தவர்கள் கவிஞரை ஆரத் தழுவுவது, கை குலுக்குவது என்று ஆளாளுக்கு ஒரு ஸ்பரிசப் பரிசை வழங்கினார்கள். ஒரு பெண்மணி கவிஞரைக் குழந்தை போல பாவித்து அவரது கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டார் .

அந்தத் தருணம் 8000 பாடல்கள், 40 நூல்கள் படைத்த , 7 தேசிய விருதுகள் பெற்ற பெருமைகள் கொண்ட 71 வயதுக்காரரான கவிஞர் வைரமுத்து, தனது ஊரின் 7 வயதுக் குழந்தையாக மாறி இருந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com