கிணற்றுத் தவளை விருதுகளாமே... கனடா இயல் விருது விழாவில் விமர்சித்த கவிஞர்!  

சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணனுக்கு இயல் விருது
R Balakrishnan with iyal award
இயல் விருதுடன் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்
Published on

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு வழங்கும் இயல் விருது (2023) ஆர்.பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்- க்கு அக்டோபர் 20 ஆம் தேதி டொரோண்டோ நகரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

இது இலையுதிர் காலம் மாறி குளிர்காலத்திற்குள் நுழையும் பருவம்.மரங்கள் இலைகள் எல்லாம் பசுமை துறந்து செம்மை படர்ந்து புது அழகு காட்டும் காட்சி இக்காலத்தில் அரங்கேறும்.இயற்கை புது வண்ணம் காட்டிச் சிரிக்கும்.குளிர்ப்பிரதேசமான கனடா இதமான தட்பவெட்பத்தில் திளைத்திருக்கும் இந்த நேரத்தில் தான் இந்த விழா நடைபெற்றது.இன்னும் சில வாரங்களில் வாட்டி எடுக்கும் குளிரின் பயணம் தொடங்கிவிடும்.எனவே விருது விழா தேதியில் கூட தீவிரமான முன் தயாரிப்பையும் திட்டமிடலையும் காண முடிந்தது.

 மாலையிலிருந்தே முகத்தில் ஒளிரும் உற்சாக மின்னலுடன் பலதரப்பட்ட இடங்களில் இருந்து இலக்கிய  ஆர்வலர்கள்,தமிழ் அன்பர்கள்,புலம்பெயர்ந்த உறவுகள் என்று விழா அரங்கில் குவிய ஆரம்பித்தார்கள்.

அப்படி ஒவ்வொரு நிமிடத்தையும் செதுக்கி வடிவமைப்பு செய்யப்பட்ட விழாவை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புரவலர்களில் ஒருவரான ஏ.ஜே.வி சந்திரகாந்தன் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது,

 "தமிழ் மொழியை வாழும் மொழியாகவும் தமது வாழ்வின் மொழியாகவும் மண்ணோடு கலந்து வாழ்கின்ற நிலப்பரப்புகளுக்கு அப்பால் வட துருவத்தில் தன்னை மையப்படுத்தி ஆண்டுதோறும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தங்களுடைய வாழ்வின் மொழியை உயிரோடு இணைத்து பல ஆக்க படைப்புகளை முன் கொண்டு வருபவர்கள், தமிழ் மொழி சார்ந்ததும் ஆய்வுகள் சார்ந்ததுமான நூல்களை எழுதுபவர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வேற்று மொழிகளில் இருந்து தமிழ் மொழியில் பெயர்ப்பவர்கள் இத்தகையவர்களையெல்லாம் இனம் கண்டு - அடையாளம் கண்டு  அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற பேரெண்ணத்தோடு 2001 ஆம் ஆண்டு இந்தத் தமிழ் இலக்கியத் தோட்டம் தொடங்கி  வைக்கப்பட்டது.தொடர்ந்து அன்றிலிருந்து இன்று வரை இந்த பெரும்பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் அனைவரையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறோம்; பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்;நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்"என்றார்.

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தலைவரும்  அமைப்பின் அனைத்துப் பணிகளிலும் முன்னணியில் பங்குபெறும் ஒருவரும் வழக்கறிஞருமான மேனுவல் ஜேசுதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். 

தமிழ் இலக்கியத் தோட்ட புரவலர்களில் ஒருவரும் ஹார்ட்வேர்ட்  பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை தொடக்கி வைத்தவருமான டாக்டர் ஜானகிராமன் பேசும்போது,

 "தமிழ் இலக்கியத் தோட்டம் நடத்தும் இந்த 24 வது விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்..உலகில் பல தமிழ் அமைப்புகள் இருக்கலாம். ஆனால் தமிழிலக்கிய தோட்டம் தான் தனிச்சிறப்பு கொண்டது. உலகளாவிய அளவில் தகுதியானவர்களைத் தேடித் தெரிந்து எடுத்து அவர்களைப் பாராட்டி,அவர்களது தமிழ்ப் பணியை உலகறியச் செய்யும் பெரும் பணியை ஆற்றி வருகிறது. அந்த அமைப்பின் நிறுவனர் ஐயா முத்துலிங்கம் அவர்களுடன் இணைந்து பணிபுரியும் அனைத்து தன்னார்வலர்களையும் வணங்கி வாழ்த்துகின்றேன்" என்றார்.

 அதன் பிறகு விருதுகள் வழங்கப்படும் நிகழ்வுகள் அரங்கேறின.

இந்த விழாவின் முதல் விருதாக புனைவு விருது றாஷ்மி பெற்றார்.இவர் முதலில் பத்திரிகை வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர் கவிஞராகவும் ஓவியராகவும் எழுத்தாளராகவும் பன்முகம் கொண்டவர்.புலம்பெயர்ந்து லண்டன் சென்ற பிறகு அங்கு ஓவியக் கலையில் பல பட்டங்கள் பெற்றவர்.

விருதைப் பெற்ற பிறகு அவர் பேசும் போது , தனது 30 ஆண்டு காலப்பணிக்கு இது தனது கவிதைகளுக்குக் கிடைத்த இரண்டாவது விருது என்றார்.

  அடுத்ததாக,'நினைவு நல்லது 'நூலுக்காக அல்புனைவு விருது பெற்ற பி. விக்னேஸ்வரன் பேசும்போது, "இந்த இலக்கியத் தோட்ட நிகழ்ச்சியில் பலமுறை நான் கலந்து கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு முக்கியமானது. சிறப்புமிக்கது. நினைவு நல்லது என்ற எனது அனுபவப் பகிர்வை டொரொண்டோ தாய் வீடு பத்திரிகையில் அதன் பிரதம ஆசிரியரும் எனது நண்பருமான திலீப் குமாரின் வேண்டுகோளின் படி தொடர்ந்து ஆறு வருடங்கள் எழுதினேன்.அப்போது எனது அனுபவத்தினை எழுத வேண்டியதன் கட்டாயத்தை உணரத் தலைப்பட்டேன்.அதற்காக திலீப் குமாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.அது நூல் வடிவில் வந்த போது அதற்கு கவிஞர் சேரன் எழுதிய அணிந்துரையே எனது நூலுக்குக் கிடைத்த இன்னொரு அங்கீகாரமாக மகிழ்ச்சி அடைந்தேன்.அந்த நூல் ஊடகத்துறை மாணவர்களுக்கான உசாத்துணை நூலாகப் பரிந்துரைக்கப்பட்டது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.இது அடுத்த அங்கீகாரம்.அடுத்தபடியாக 2023 ஆண்டுக்கான அல்புனைவு விருதினை இந்த தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்தபோது அது எனக்குப் பெரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்தது '' என்றார்.

கனடாவில் வாழும் கவிஞரும் பெரிதும் அறியப்பட்ட ஊடகவியலாளரும் பேராசிரியருமான டாக்டர் சேரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். " தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகளுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? அதற்கு என்ன மாண்பு இருக்கிறது? அதன் பின்னணியைச் சற்று நான் விளக்க வேண்டும்.எல்லோருக்கும் தெரியும் இப்போது  விருதுகள் வழங்குவது, பட்டங்கள் வழங்குவது எல்லாம் ஒரு குடிசைத் தொழில் போல் மாறிவிட்டது என்று.யார் வேண்டுமானாலும் வழங்கலாம் அத்தகைய எல்லா விருதுகளையும் கிணற்றுத் தவளை விருதுகள் என்றுதான் அழைக்க வேண்டும்.ஏனென்றால் கிணற்றுத் தவளைகளுக்குத் தனது கிணற்றை விட வேறு உலகம் தெரியாது.அவர்கள் தங்கள் நாட்டை வைத்து, ஊரை வைத்து, கிராமத்தை வைத்து விருது கொடுக்கலாம். ஆனால் ,தமிழ் என்பது இப்போது ஒரு நாட்டினுடைய எல்லைப் பரப்பில் குறுக்கிவிடக் கூடிய ஒரு மொழி அல்ல.தமிழ் என்பது நிலம் கடந்த மொழி.அந்த மொழியால் அமைந்தது தான் தமிழ்ப் பண்பாடும் வாழ்வும்.இந்த விருது மட்டும்தான் உலகத் தமிழ் விருதாக இருக்கிறது.சரியான தீர்க்கமான தெளிவான பார்வையோடு வழங்கப்படுகிற இந்த விருதுதான் பெருமைக்குரியது" என்றார்.

 கவிதை விருதை இளவாலை விஜயேந்திரன் பெற்றார்.  "இந்தத் தருணம் எனக்கு மிகவும் உவப்பான தருணம்.என்னுடைய பாடசாலையில் எனக்கு இரண்டு மூன்று வருடங்கள் முன்பு கற்ற பேராசிரியர்  சேரனுடன் இலக்கியம் தொடர்பாகப் பேசத் தொடங்கி 50 வருடங்கள் ஆகிவிட்டன.இந்த அரங்கே அவரைக் கொண்டாடுகிற போது நான் நினைத்துப் பார்க்கிறேன், மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே என்னைப் பற்றிக் கூறியது சற்று மிகையாகக் கேட்டபோது எனக்கு கூச்சமாக இருந்தது. பொதுவாக படைப்பாளிகளைப் பிறரால் சகித்துக் கொள்ள முடியாது. சிக்கலான பேர்வழிகள். இத்தனை வருடங்களாக என்னைச் சகித்துக் கொண்டிருக்கும் எனது குடும்பத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார் அவர்.

 மொழியாக்க விருது ஜெகதீஷ் குமார் கேசவனுக்கு வழங்கப்பட்டது.அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் கதைகள் கவிதைகள் எழுதி வருகிறார். ஜெகதீஷ் குமார் கேசவன் பேசும்போது, "எத்தனையோ சாதனையாளர்கள், கலைஞர்கள் இருந்த சபையில் எனக்கு ஒரு இடம் கிடைத்ததை நான்  பெருமையாகக் கருதுகிறேன்.அதிலும் கனடா இலக்கியத் தோட்டத்தின் மொழிபெயர்ப்புக்கான விருதைப் பெற்றுக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.இந்த விருதுக்கு தகுதியானவனாக என்னை மாற்றிக் கொள்வதற்கு மேலும் தீவிரத்தோடும் ஊக்கத்தோடும் இலக்கிய பணியில் ஈடுபடுவேன் என்று உறுதி கூறுகின்றேன் " என்றார்.

இலக்கியத் தோட்ட செயல்பாடுகளுக்கு அனுசரணையாளர்களாகவும் கொடையாளர்களாகவும் பலரும் செயல்பட்டு வருகிறார்கள்.அப்படி மொழி, சமூகம் என்று செயல்படும் ஒருவருக்கான மொழியியல் சமூகப் பணிகளுக்காக  பார்வதி கந்தசாமிக்கு சிறப்பு அங்கீகார விருது வழங்கப்பட்டது. "நான் வன்னி என்ற ஒரு ஒதுக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து வந்தவள். அந்த ஒதுக்கப்பட்ட பிரதேசம்  பிரபாகரனால் வெகு பிரபலமானது.நான் படித்த காலத்தில் ஏழாம் வகுப்பு வரை தான் போனேன்.ஆங்கிலம் கிடையாது.அப்படிப் பட்ட சூழலில் இருந்து வந்த எனக்கு கனடாவில் சைக்கிரியாட்டிஸ்ட்ஸ் அசோசியேஷனின் விருது கிடைத்தது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.நாங்கள் ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து வந்ததால் எனக்குச் சமூகப் பணிகள் மீது ஆர்வம் உண்டு. அதற்காக நான் பல விருதுகள் பெற்றுள்ளேன் ஆனால் இந்த விருதுக்காகப் பெருமைப்படுகிறேன் " என்றார் பார்வதி.

அடுத்து இயல் விருது வாழ்நாள் சாதனையாளருக்கான விருது  ஆர். பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.. விருதாளருக்கான மதிப்புரை வாசிக்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்டு  ஆர். பாலகிருஷ்ணன் பேசும்போது,

"நிறைவால் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது என் நெஞ்சம் .நான் ஒரு தமிழ் மாணவன் அதுதான் எனது அடிப்படை அடையாளம்.தமிழ் தான் எனது முகம்.தமிழ் தான் எனது முகவரி.தமிழ் தான் எனது முகவரிச்சீட்டு. தமிழ் நெடுஞ்சாலையின் எண்ணற்ற பயணிகளில் நானும் ஒருவன்.இந்த தமிழ் நெடுஞ்சாலையில் நான் செய்து வரும் பயணத்தின் திசையை, நோக்கத்தை,  எதிர்பாராத திருப்பங்களை, அதன் சில விளைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இந்த ஏற்புரையை ஏற்புடையதாக்கும் என்று நான் நம்புகிறேன்.பிடித்ததை விட மாட்டேன் பிடிக்காததைத் தொட மாட்டேன் என்ற என் இயல்புதான் தமிழின்பால் என்னை ஆற்றுப்படுத்தியது.எனக்கு மிகவும் பிடித்த தமிழ் இலக்கியத்தை தான் நேசித்துப் படித்தேன். தமிழை மட்டுமே பற்றிக் கொண்டு என்னளவில் நான் பயமின்றி இருந்தேன். தமிழ் இலக்கியம் படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று என்னைச் சுற்றி நின்று அச்சுறுத்தினார்கள்.ஆனால் நான் எனது முதுகலைத் தேர்வு முடிவுகள் வருவதற்கு 30 நாட்கள் முன்னதாகவே மதுரை தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்

 நான் எனது வாழ்க்கையில் எழுதிய ஒரே ஒரு தேர்வு இந்திய குடிமைப்பணி தேர்வு மட்டுமே. அதையும் முதன் முறையாக தமிழில் எழுதினேன். அதையும் முதல் முயற்சியிலேயே எழுதி வெற்றி கண்டது என்பது எனது வாழ்நாள் பெருமிதம்.ஆனாலும் தமிழ்நாட்டில் தான் என்னைப் பணியமர்த்த  வேண்டும் என்ற சலுகை கேட்காமல் 1984-ல்  தமிழ்நாட்டை விட்டு ஒடிசா சென்றேன். 34 ஆண்டுகள் ஒடிசா மாநில அரசிலும் டெல்லியில் இந்திய துணைத்தேர்தல் ஆணையராகவும் பணியாற்றி 2018-ல் ஓய்வு பெற்றேன். ஒய்வுக்குப் பின்னரும் ஒடிசா முதல்வரின்   தலைமை ஆலோசகராகப் பணியமர்த்தப்பட்டு இறுதியாக இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்தேன் . நேற்று போல் இருக்கிறது ஆனால் 40 ஆண்டுகள் ஓடிவிட்டன.

 நான் எழுதிவிட்ட நூல்கள் முகப்பு அட்டையில்  என் பெயருக்கு எந்த முன்னொட்டும், குறிப்பாக ஐஏஎஸ் என்ற பின்னொட்டும் இல்லாதவாறு கவனமாகப் பார்த்துக் கொண்டேன்.ஆனாலும் இந்திய ஆட்சிப் பணியை நான் நெஞ்சார விரும்புகிறேன்.காலம் எனக்கு அளித்த வாய்ப்பு அது.உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள ஏராளமான நாடுகளுக்கும் இந்தியாவில் 97 விழுக்காடு மாவட்டங்களுக்கும் ஆட்சிப் பணியே என்னை அழைத்துச் சென்றது.தமிழ் நெடுஞ்சாலையில் எனது நெடிய ஆய்வுப் பணியையும் கவனக்குவிப்பையும் அதுவே சாத்தியப்படுத்தியது.''ஐஏஎஸ் தேர்வு எழுதி கலெக்டர் ஆகி விடு'' என்று என்னை நெறிப்படுத்தி ஆற்றுப்படுத்தியவர் பெருந்தலைவர்  காமராஜர்.அப்போது எனக்கு வயது 15 கூட ஆகி இருக்கவில்லை. இப்போது நினைத்தாலும் என்னை நெகிழ வைக்கிறது பெருந்தலைவருடன் நான் சென்ற அந்த நள்ளிரவுக் கார்ப் பயணம்"  என்று பேசினார்.

நிறைவாக எழுத்தாளர் முத்துலிங்கம் நன்றியுரை ஆற்றும் போது,

" இந்தப் பணியில் விருதாளர்களைத் தேர்வு செய்வது மிகவும் கடினமான காரியம்.விருதாளர்களுக்கான தகுதியுரை  வாசிப்பவரை வயது கணக்கிடப்பட்ட போது அவர்களுக்கும் வயது கூடி இருந்தது .ஏனென்றால் அவர்களும் 23 ஆண்டுகளாகத் தகுதியுரை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே இந்த முறை புதிய ஆட்களைக் கண்டுபிடித்தோம். அப்படி வந்து இங்கே  வாசித்தவர்கள். ஜனனி பிரசாந்த்,மதுராஜா,ஜோதி ஜெயக்குமார் .பொன்னையா விவேகானந்தன் ஆகிய அவர்களுக்கும் நன்றி. குறிப்பாகப் பொன்னையா விவேகானந்தன் வாசித்தபோது கரகோஷம் அதிகமாக இருந்தது .அந்த அளவிற்கு அவர் வாசித்தார் அவருக்கும் என் நன்றி.இங்கே ஆர். பாலகிருஷ்ணன் வருவதற்கு  கடைசி நேரம் வரை விசா கிடைக்கவில்லை. நாங்கள் இங்கே நடுங்கிக் கொண்டிருந்தோம்.தூக்கமே வரவில்லை. இங்கே வந்திருக்கும் பலரையும் பல்லாண்டுகளாகத் தெரியும் ஆனால் இப்போதுதான் நேரில் முகம் பார்க்கிறேன்.முதன்மை விருந்தினராக வந்து சிறப்பாகப் பேசி எங்களுக்குப் பெருமை சேர்த்த சேரனுக்கும் நன்றி.அவரை அறிமுகம் செய்த சிவன் இளங்கோவுக்கும் நன்றி.அனைவருக்கும் நன்றி" என்றார்.

இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் தமிழ் இலக்கியத்திற்கான விருதுகளில் புகழ் பெற்றது கனடாவில் வழங்கப்படும் 'தமிழ் இலக்கியத் தோட்டம் ' விருதாகும்.தொடர்ச்சியாக 24 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

 கல்வியாளர்கள் , எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் கூட்டுறவில் இயங்கி வருகிறது.இது உலகமெங்கும் பரந்து இருக்கும் தமிழை வளர்ப்பதற்காக, தொடங்கப்பட்ட ஓர் அறக்கட்டளையாகும்.கனடா அரசால் பதிவு செய்யப்பட்ட ஒரே தமிழ் இலக்கிய அறக்கட்டளை இதுவாகும்.

அரிய தமிழ் நூல்களை மீண்டும் பதிப்பித்தல், தமிழ் ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பை ஊக்குவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் வழங்குதல், தமிழ்ப் பயிற்சிப் பட்டறைகள் ஒழுங்கு செய்தல், கனடா நாட்டு  நூலகங்களுக்கு இலவசமாகத் தமிழ் நூல்களை அளித்தல்  போன்ற சேவைகள் இதன் முக்கிய முன்னெடுப்புகளாகும்.

அமைப்பாகத் தோன்றி இயக்கமாக வளர்ந்திருக்கும் இந்த 'கனடா இலக்கியத் தோட்டம்'  மூலம் ஆண்டு தோறும் உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருவருக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி கௌரவித்து வருகிறார்கள். இயல் விருது என்ற பெயரில் இந்த விருது வழங்கப்படும் .இது பாராட்டுக் கேடயத்துடன் 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது.  புனைவு, அல்புனைவு, கவிதை, தமிழ்த் தகவல் தொழில்நுட்பம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் சிறந்த மாணவருக்கு ஆயிரம் டாலர் புலமைப் பரிசில்  என்கிற பெயரில் ஊக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

டொரண்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இலக்கியத் தோட்டம், தமிழ் அறிஞர்களின்  விரிவுரைகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. அத்துடன் மறக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள நாட்டுக் கூத்து போன்ற பாரம்பரியத் தொல் கலைகளை மீட்டுப் புத்தாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த இலக்கியத் தோட்டத்தின் தூண்களாகப் பலர் செயல்பட்டு வருகின்றனர்.    டாக்டர் விஜய் ஜானகிராமன்,பேராசிரியர் ஏ.ஜெ.வி . சந்திரகாந்தன், வழக்கறிஞர்  மேனுவல் ஏசுதாசன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம்,எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் என். கே. மகாலிங்கம், எழுத்தாளர், இதழாசிரியர் செல்வம் அருளானந்தம்,ஆலோசகர் உஷா மதிவாணன்,  இயக்குநர் திருமூர்த்தி ரங்கநாதன், இயக்குநர் சிவன் இளங்கோ ,செயலாளர் ராஜா மகேந்திரன்,  எஸ் .கே .ராம் பிரசாந்த் ஆகியோர் அமைப்பின் புரவலர் , இயக்குநர் ,செயல்பாட்டாளர்கள்  என்று தூண்களாக இயங்கி வருகிறார்கள். கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருதினை இதுவரை எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் ,கவிஞர், மொழி ஆய்வாளர், கல்வியாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் பெற்றுள்ளார்கள்.

அந்தப் பட்டியல், 2001-ல் சுந்தர ராமசாமி தொடங்கி மணிக்கொடி காலத்து கே. கணேஷ்,இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர்,ஜார்ஜ் எல். ஹார்ட், தாசீசியஸ்,லட்சுமி ஹோம் ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி,ஐராவதம் மகாதேவன்,எஸ் பொன்னுத்துரை,எஸ் ராமகிருஷ்ணன் நாஞ்சில்நாடன், டொமினிக் ஜீவா, தியோடர் பாஸ்கரன்,ஜெயமோகன் , இ.மயூரநாதன்,சுகுமாரன், வண்ணதாசன், இமையம், ஆ.இரா.வெங்கடாசலபதி, பாவண்ணன்,லெ. முருகபூபதி  என நீள்கிறது .

-அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com