'வைகோவுக்கு கிடைத்த சாகசக்காரர் பிம்பம் அவரது தொடர் தோல்விக்கு காரணம்!'

 'வைகோவுக்கு கிடைத்த சாகசக்காரர் பிம்பம் அவரது தொடர் தோல்விக்கு காரணம்!'
Published on

பாளையங்கோட்டையில் பேராசிரியர் தொ.பரமசிவனின் வீடு. மாடிப்படியில் குறுக்கே படுத்திருந்த ஆட்டுக்குட்டியைத் தாண்டி ஏறிச்சென்றால் நாற்காலியில் இயல்பாக அமர்ந்திருக்கிறார் தொ.ப.. வீட்டுக்கு எதிரே முருங்கை மரமொன்று காய்த்துக் குலுங்குகிறது. அதில் கறுப்புக் குருவி ஒன்று கூச்சலிட்டு நேர்காணலுக்கான பின்னணி இசையை வழங்குகிறது. தொ.ப.வின் நேர்காணல்கள் எப்போதும் முடிவடைவதே இல்லை. நேர்காணல் முடிந்ததென்று நிமிர்ந்த பின்னால் கொட்டத்தொடங்குகிறது இன்னொரு அருவி.

தமிழர், திராவிடம் என்ற சொல்லாட்சிகளின் மோதல் அரசியல் களத்தில் நடக்கும் நேரம் இது. திராவிடம் என்ற சொல்லாட்சி முடிவடைந்து விட்டதா?

திராவிட இயக்க முன்னோடிகளாக தமிழ்நாட்டில் பெரியார், கேரளத்தில் கேளப்பன் போன்ற பலர் இருந்தார்கள். பெரியார் ஆந்திராவில் புலிவேந்துலா என்ற இடத்தில் கூட ஒரு மாநாடு நடத்தினார். நாளடைவிலே திராவிடம் என்ற சொல்லாட்சி இயக்க வளர்ச்சிக்கு உதவாது என்று புரிந்துகொண்டதாலேயே 1938-ல் தமிழ்நாடு தமிழர்க்கே என்ற கோரிக்கையை முன்வைத்தார். சாதாரணமாகவும் போகிறபோக்கிலும் அவர் இதை முன்வைக்கவில்லை. திருச்சியில் மாநாடு கூட்டி, அதற்கு தமிழறிஞர்கள் என்று அறியப்பட்ட எல்லோரையும் அழைத்து வைத்து செய்தார். மா.ராசமாணிக்கனார், மு.வரதராசனார், தேவநேயப்பாவாணர் எல்லோரையும் வரவைத்து தமிழ்நாடு தமிழருக்கே என்று கையெழுத்து வாங்கினார். அதன்பின்னர் அவர் திராவிடம் பற்றிப்பேசவில்லை. தமிழ்நாடு பற்றித்தான் பேசினார். ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடு என்பதுதான் சாத்தியம் என்பதை நடைமுறை அறிவு அவருக்குச் சொன்னது. அதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆகவே திராவிடம் என்ற சொல்லாட்சி இன்று பயனற்றுப்போய்விட்டது என்பது உண்மைதான். ஆனால் தமிழ்நாடு தமிழர்க்கே என்பது உள்ளது. நாற்பதுகளில்  நாம் தமிழர் இயக்கம் என்று ஒன்றை சிபா ஆதித்தனார் தொடங்கினார். இப்படி மறைந்துபோன ஒன்று என்று கருதப்பட்டது இப்போது மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. பெரியாருக்குப் பிறகு இந்திய அரசியலிலே பெரும் மாறுதல்கள் நடந்தன. அவற்றில் பலவற்றை பெரியார் கணித்திருக்கவே மாட்டார். பெரியாருக்குப் பின் பெரியாருக்கு முன் என்று இந்திய அரசியலைக் கணிக்கவேண்டும். ஏனெனில் பெரியார் பார்த்தறியாத, கணித்தறியாத பல நிகழ்வுகள் பெரியாருக்குப் பின் நடந்தன. பெரியார் காலிஸ்தான் இயக்கத்தைத்தான் அதுவும் சிறிய அளவில் பார்த்தார். கனடாவில் இருந்து நாணயம் அச்சிட்டு வெளியிடுவார்கள் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஆந்திரத்தை இரண்டாகப் பிளக்கும் என்று அவர் நினைத்திருக்கமாட்டார்.  உல்ஃபா போன்ற பல மாநில பிரச்னைகள் உருவாயின. இப்படி மாநிலத்துக்கு மாநிலம் தேசிய இன உணர்வோடு இயக்கங்கள் உருவாவதற்கான குறுவித்துக்கள் உள்ளே கிடந்தன. அவை மேலெழுந்து வந்துகொண்டிருக்கின்றன. இன்றைக்கு தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தின் விளைவாக நாம் தமிழர் கட்சியை ஒருவர் தொடங்கி இருக்கிறார். கட்சி அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால் 1938ல் பெரியார் கூட்டிய திருச்சி மாநாட்டுச் செய்தியைத்தான் அவர் பெரிதுபடுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

உலகமயமக்கலால்  அடையாளங்கள் அழிக்கப்பட்டு பொதுமைப்படுத்தப்படுகின்றன. இந்த அழிப்பு தொடர்பான அச்சங்களே இதுபோன்ற இன அடையாளங்கள் இறுகப்பற்றிக்கொள்ளும் இயக்க உருவாக்கங்களுக்குக் காரணமா?

உலகமயமாக்கல் எல்லா தேசிய இன அடையாளங்களையும் அழித்துவிடும் என்பது உண்மைதான். அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் என்பதும் உண்மைதான். சல்லிக்கட்டு விஷயத்தில் வந்த எதிர்ப்பு அப்படிப்பட்டதுதான். ஆனால் தமிழர்கள் விழித்துக்கொண்டார்கள். சிறு கிராம விவசாயிகூட, எங்கள் உள்நாட்டுக்காளைகளை அழிக்க இவர்கள் வேலை செய்கிறார்கள் என்று சொல்லிவிட்டான். இந்த புரிதல் இருக்கிறது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதே உலகமயமாக்கலுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக அமையும்; அமைந்துகொண்டிருக்கிறது. அடையாளங்களைப் பிடித்துக்கொள்வது என்றால் நிறைய விஷயங்கள் கால ஓட்டத்தில் செத்துவிட்டன. தாய்மாமன் உறவும் அதன் மேன்மையும் காலஓட்டத்தில் செத்துப்போய்விட்டது. தாய்மாமன் கிடாய் பிடித்துவருவதெல்லாம் மலையேறிப்போய்விட்டது. அது உயிரோடு இருப்பதாகப் பாவனை செய்து, சினிமாதான்  காசு பார்க்கிறது. பிழைப்புக்காக செய்கிறது.

மரபுகள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமா?

உலகத்தில் எவ்வளவோ மரபுகள் மாறிவிட்டன.ஆனால் தமிழ்நாட்டில் இன்னமும் யாரும் சித்தப்பா மகளைக் கட்டணும் என்று சொல்லவில்லை அல்லவா? ப்ராஹிபிட்டட் ரிலேஷன் என்று எழுத்தில் வைக்கவில்லை. ஆனால் நெஞ்சில் இருக்கிறது அல்லவா? சில மரபுகளை உடைக்கவே முடியாது. குறிஞ்சி வாழ்க்கையோடும் முல்லை வாழ்க்கையோடும் தொடர்புடைய மரபுகள் செத்துப்போய்விட்டன என்பது உண்மைதான். ஆனால் மரபு என்பது வேர். வேரற்ற மரம் சடாரென்று விழுந்துவிடும். இன்னும் விழவில்லை. மரபுகள் கண்ணுக்குத் தெரியாமல் நிலத்தடி நீர்போல இருக்கின்றன. அதை வைத்துத்தான் நாம் சமாளிக்கிறோம். அதுபோல் தான் மரபுகளும். அதேசமயம் சில மரபுகள் தானாகவே இற்றுப்போய்விடும் என்பதும் உண்மை. ரோஜா மாலையை கருவறைக்குள் ஆரம்பத்தில் அனுமதிக்கவில்லை. ஏனெனில் அது வெளியில் இருந்து வந்தது. ஆனால் இப்போ அனுமதிக்கிறாங்க. இந்த மாற்றம் எங்கிருந்து வந்தது? எல்லா பெண்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். சமூகத்தில் சரிபாதி இருக்கும் பெண்கள் ஒப்புக்கொண்டால் எல்லா மாற்றங்களும் சாத்தியம்தான். சகோதரி மகளைப் போல, சகோதரன் மகளை திருமணம் செய்வதை பெண்கள் ஏற்றுக்கொண்டால் சரிதான். பெண்கள் ஏற்பார்களா மாட்டார்களா என்பது அவர்கள் இக்கட்டுக்கு ஆளாகும்போதுதான் தெரியும். சல்லிக்கட்டு பிரச்னையில் பெண்களின் கருத்தைக் கேட்டு ஏதாவது ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றனவா? இறந்துபோன வீரர்களின் மனைவியைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறார்களா? இல்லை. ஜனசமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் பார்வையில் சில நியாயங்களை பார்க்க பெரும்பாலும் ஆண்கள் தவறிவிடுவதாகவே இருக்கிறார்கள்.

ஆணவக்கொலை என்ற பெயரில் சாதிவெறி இன்னும் வெளிப்படுவது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

ஒவ்வொரு வட்டாரம் சார்ந்த வாழ்நிலையைப் பொறுத்து சாதி  தொழிற்படுகிறது. ஏன்...  சாதிமறுப்பு திருமணம் செய்தவர்கள் பல்லாயிரம்பேர் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழத்தானே செய்கிறார்கள்? அவர்கள் இரண்டாம் தலைமுறையாகவும் நிம்மதியாகத்தானே வாழ்கிறார்கள். அதுபற்றிய கணிப்புகள் ஏன் இல்லை? சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் வாழ்க்கை ஒரு வெகுஜன நீரோட்டத்தில் ஆற்றில் கரைத்த கைப்பிடி உப்பைப்போல கரைந்துபோகிறது. 

சாதிய இறுக்கம் அப்படித்தான் கட்டுடைகிறது. உண்மையில் சாதி தவிர்க்கமுடியாதது அல்ல. உயிரோட்டமானதும் அல்ல. மாற்று இருதயம் பொருத்தப்பட்ட பின்னும் உயிர்வாழ்தல்போல மாற்றுச்சாதிப் பெண்ணுடனும் குடும்ப உறவை, திருமண உறவைப் பேணமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டினால் போதும்.

சமீபத்தில்கூட ஒரு வார இதழில் திராவிட இயக்க முன்னோடியான டி.எம் நாயர், அன்னிபெசண்ட் அம்மையார் மோதல் விவாதிக்கப்பட்டது. இவர்களின் மோதல் பற்றிச் சொல்லுங்களேன்?

பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப் பட்டபோது அதை முதலில் விமர்சித்தவர் அன்னிபெசண்ட். இரண்டாவது ஆள் புத்திகேசவ பிள்ளை. இந்த இருவரும் காங்கிரசில் இருந்த உயர்சாதி ஆட்களால் தூண்டி விடப்பட்டவர்கள். காங்கிரஸில் சுயராஜ்யக்கட்சி என்றொரு பிரிவு கிடையாது. ஆனால் இவர்கள் அப்படியொன்றை வைத்துக்கொண்டு செயல்பட்டார்கள். பிராமணரல்லாதோர் அறிக்கை ஒரு தற்கொலை முயற்சி என்று ஹிந்து எழுதியது. அந்த நேரத்தில் அன்னிபெசண்ட் போன்றவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் யாருக்கேனும் ஏதேனும் செய்யவேண்டும் என்றால் அதை பிராமணர்களுக்குத்தான் அரசு செய்யவேண்டும். ஏனெனில் அவர்கள்தான் இந்திய மனச்சாட்சியின் பாதுகாவலர்கள் என்று அன்னிபெசண்ட் கூறினார். இதனால் தான் அவரை டி எம் நாயர் கடுமையாக விமர்சித்தார். Irish Brahmin, என்று கூறியதோடு A lady of  deep penetration, quick conception, easy delivery   என்று சிலேடையாக விமர்சித்தார். எல்லா பெண்களையும் அவர் அப்படி விமர்சிக்கவில்லை.  

பெசண்டுக்கு மட்டும்தான் அந்த விமர்சனம். அவர் பற்றி பல கதைகள் உலவின அப்போது. பெர்னார்ட் ஷாவைக் காதலித்து அந்த காதல் முறிந்தபின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தவர் அவர். Who is Ms Besant? Why has she come to India? என்றொரு புத்தகம் உண்டு. அது இப்போது படிக்க கிடைக்காது. Mrs Besant- tricks and dupes  என்று இன்னொரு புத்தகம் உள்ளது. இரண்டையும் படித்துவிட்டு அன்னிபெசண்ட் பற்றிப்பேசவேண்டும். அந்த நேரத்தில் பிராமணப் பெண்கள் கூட  யாரும் பிராமணியத்தை உயர்த்திப் பிடிக்கவில்லை. ஆனால் அதைச் செய்தார் பெசண்ட். அதனால்தான் நாயர் அவரை விமர்சித்தார்.

நாம் தமிழர் கட்சி வைத்திருக்கும் சீமான், தமிழர்களின் முப்பாட்டன் என்று முருகனையும் கிருஷ்ணனையும் கூறுகிறாரே?

சீமானுக்குச் சொல்லப்பட்டது, தொல்குடி தமிழர்கள் வணங்கிய தெய்வம் முருகனும் வள்ளியும் என்று.  முருகன் தான் முதற்கடவுள். வள்ளி ஒரு கொடி. வள்ளி என்ற பெயர் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் வைக்கப்படுகிற பெயர். தெய்வானை இல்லை. முருகனும் வள்ளியும் என் முப்பாட்டன் என்று சொல்வது உணர்வுபூர்வமான ஒரு மீட்டுருவாக்கம். கிருஷ்ணன்  மேய்ச்சல் சமூகத்தில் இருந்து பிறந்த ஒரு கடவுள். கடவுளுக்கு என்று இருக்கும் எல்லா அம்சங்களையும் உடைப்பவன் கிருஷ்ணன்.  நடையில் நின்றுயர் ராமன் என்பார்கள். எல்லா நல்ல குணங்களுக்கும் உதாரணமாக இருப்பிடமாக சொல்லப்படுபவன் ராமன். கிருஷ்ணாவதாரம் அப்படி இல்லை. அது திருடும்; பொய் சொல்லும்; பெண்களை தூக்கிச் செல்லும். எளியமனிதர்களின் வாழ்க்கையை அது வாழும். அதனால் அதை அவர் ஏற்றிருப்பார் என்று கருதுகிறேன்.

இந்த தேர்தலில் ஈழப்பிரச்னை எடுபடுமா? என்ன கருதுகிறீர்கள்?

அது ஒரு பிரதான பொருளாக எடுபடாது. மக்கள் மறந்துவிட்டார்கள். நாட்டார் வழக்காற்றியலில் Folk Memory is short lived என்று சொல்வார்கள். நாட்டாரின் ஞாபகங்கள் குறுகிய காலத்தவை. ஈழமக்களின் துயரம் மெல்லமெல்ல இவர்களின் நினைவுகளில் இருந்து மறைந்துகொண்டு வருகிறது. மறக்கப்படக்கூடாது என்பது வேறு. மறந்துகொண்டு வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இப்போதைக்கு ஆளும் அதிமுக தவிர எல்லா கட்சிகளும் மதுவிலக்கு கொண்டுவரவேண்டும் என்கின்றன. இதுபற்றி?

1971-ல் இரண்டாம் முறை வென்ற பிறகுதான் கருணாநிதி மதுவிலக்கு கொள்கையை கைவிட்டார். எனக்கெல்லாம் இருபத்தியொரு வயதில்தான் வண்ண வண்ண குடுவையில் இருக்கும் மதுபாட்டில்களே லேசான அறிமுகம் ஆயின. மதுவே பார்க்காது வளர்ந்த ஒரு தலைமுறை இருந்தது. அதில் நானும் உறுப்பினராக இருந்தேன். முதலில் மதுவை ரகசியமாக அருந்தியபோது எனக்கு 22 வயது. நான் சம்பாதிக்க ஆரம்பித்து ஓராண்டு மது அருந்தாமல் தான் இருந்தேன். ஆனால் மது முழுவதுமாக விலக்கப்பட்டதாக இல்லை. நம் சாமிகளான கருப்பசாமிக்கு சுடலை மாடனுக்கு சாராயம் படைச்சாங்க. நாட்டுச்சாராயம் உருவாக்கினார்கள். சாமிக்கு தட்டு இல்லாமல் கிடைச்சது. மதுவை ஒழிக்க வேண்டுமெனில் கருப்பசாமியையும் சுடலை மாடனையும் ஒழிக்கணும். முடியற காரியமா? தெய்வம் சாப்பிடறத நான் சாப்பிடக்கூடாதா? இந்த கேள்விக்கு என்ன பதில்?

ஆனால் மக்கள் குடியால்  அழிகிறார்களே?

அதற்கு புறக்காரணிகள் நிறைய. சமூக உளவியலைச் செதுக்கும் பொறுப்பு வியாபாரிகள் கைக்குச் சென்றுவிட்டது.  கடையில் போய் வசம்பு வாங்கவேண்டுமானால் பேர் சொல்லாதது கொடுங்க என்பார்கள். அவர் கொடுப்பார். இருவருக்கும் தெரியும் அதன் பெயர் வசம்பு என்று. சமூக நாகரிகம் இருக்கும் வரைக்கும் பிரச்னை இல்லை. அதை நாம் இழந்துபோகிறோம். மதுசார்ந்த நாகரீகத்தையும் நாம் இழக்கிறோம். ’ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்’என்றார் வள்ளுவர். இளவயதிலே மரணத்துக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு அது ஆகிவிட்டது. இதை முதலில் கணக்கில் எடுத்ததும் கவலைப்பட்டதும் ராமதாஸ் தான். ஏனெனின்றால் அவர் சாதிக்காரங்க நிறைய பாதிக்கப்பட்டார்கள். சாவில் என்ன சாதி? மதுவை ஒழிக்கத்தான் வேண்டும். இந்த கடைகளை எல்லாம் மூடினால் போதும். அவனவனுக்கு வேண்டிய மதுவை அவனவன் காய்ச்சிக்கொள்வான்.

மக்கள் நலக்கூட்டணி பற்றி?(விஜயகாந்த் அணியாக மாறும் முன்பு கேட்ட கேள்வி)

அடிப்படையில் சில அற உணர்ச்சிகளின் பாற்பட்டு இது உருவானது. மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு என்று இந்த கூட்டணியை அமைத்துள்ளார்கள். இவர்கள் வென்றாலும் மகிழ்ச்சி. தோற்றாலும் அந்த தோல்வி கௌரவமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அறம் எப்போதும் வெல்லும் என்று சொல்லமுடியாது. ஆகவே இவர்கள் தோற்றாலும் அறம் தோற்றது என்றுதான் சொல்லவேண்டும். வைகோ தோற்றார், ராமகிருஷ்ணன் தோற்றார், ம ந கூ தோற்றது என்று சொல்லக்கூடாது.

வைகோ தொடர்ந்து தோற்கிறாரே?

ஊடகங்கள் உருவாக்கும் பிம்பம் அவரது சரிவு. அவர் தொடர்ந்து இயங்குகிறார் என்பது முக்கியமானது. அவர் இன்னும் மண்வெட்டியைப் பிடித்து குளத்தை வெட்டுகிறார். நடக்கிறார். தோல்விக்குப் பிறகும் அவர் இயங்குகிறார். அதே தோல்வியைத் தந்த மக்கள் நடுவே தான் இருக்கிறார். அவரை கண்டிப்பாக விருதுநகர், கோவில் பட்டியில் போட்டியிடக்கூடாது என்று கூறி உள்ளனர். அவர் அண்ணாநகரில் போட்டியிடலாம் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றிய விவரங்கள் எல்லோருக்கும் தெரியவில்லை. ஊடகங்கள் சரியான பிம்பத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. போராட்டக்காரர் என்பதை விட அவர் ஒரு சாகசக்காரர் என்றே ஊடகங்கள் காட்டின. டைவ் அடித்து ஈழத்துக்குப் போய்விட்டு வந்தவர் என்கிற மாதிரி. இது அவர் அடையும் தோல்விக்கான காரணங்களில் ஒன்று.

உங்கள் மாணவர், அமெரிக்க பேராசிரியர் பெர்னார்ட் பேட் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவர் பற்றிய நினைவுகள்...

எவ்வளவோ நினைவுகள்.. அவர் எளிதில் கிடைத்திடாத அரிய மனிதர். தமிழ்நாட்டு மேடைப்பேச்சுகளை ஆய்வு செய்திருந்தார். கிட்டத்தட்ட தமிழராகவே நம் கலாச்சாரத்தை ஏற்று வாழ்ந்துவிட்டவர். . எங்கள் தேசிய இனப்பிரச்னையை நீ எப்படி புரிஞ்சிகிட்டேன்னு நான் கேட்டபோது அவர் சொன்னார். இவருடைய அம்மா ஸ்பானிஷ். வெளியே போனால் பாஸ்டர்ட்ஸ் என்று கேலி பண்ணுவார்களாம். அதனால் அவங்க அம்மா அவருக்கு ஸ்பானிஷ் மொழியே கற்றுக்கொடுக்கவில்லையாம்.  மு.ராமசாமி வீட்டில் மாடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போதான் நான் முதலில் இவரைப் பார்க்கிறேன். அப்போ பாரி என்றொருவரை இவருக்கு அறிமுகம் செய்தார்கள். உடனே பாரியா எந்த பாரி? பாரி பாரி’ என்று பல ஏத்தி, ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்; - அந்த பாரியா? என்றார். எல்லோரும் ஆடிப்போய் அந்த பாரியே தான் என்றனர். சங்க இலக்கியத்தை அப்படிப் படித்திருந்தார். ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி கேளுங்க.. ஒருமுறை பெர்னார்டு பேட் பேருந்து பயணத்தில் கம்பியைப் பிடித்து நின்றுகொண்டிருக்கிறார். இவர் முன்னே நிற்க, பிற்பகுதியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நிற்கிறார். அப்போது கூட்டத்தில் எவனோ ஒருவன் பெர்னார்டுக்குத் தெரியாத ஒரு மகா கெட்டவார்த்தையை உச்சரித்துவிட்டான். இவருக்கு அது என்னவென்று தெரியவில்லை. உடனே ஞானசம்பந்தனை நோக்கித் திரும்பி, அந்த கெட்டவார்த்தையை உச்சரித்து, அப்படின்னா என்னா அர்த்தம்? என்று  சத்தமாகக் கேட்கிறார். பேருந்தே ஒரு வெள்ளைக்காரன் தமிழ் பேசுவதை அதுவும் கெட்டவார்த்தை சொல்வது கண்டு ஸ்தம்பிக்கிறது.  ஞானசம்பந்தனுக்குக் கேட்கவா வேண்டும்? ‘ பஸ்ஸை விட்டு கீழே இறங்கு என்று அர்த்தம்’ என நகைச்சுவையாகச் சொல்லி சமாளித்திருக்கிறார்.  கடந்தமுறை வந்தவர் தன்னுடைய புதிய  நூலை,’ இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்’ என்று எழுதிக் கையெழுத்துப்போட்டுக் கொடுத்திருந்தார்.  அவர்போல ஒரு ஆள் கிடைக்கவே மாட்டார்!

ஏப்ரல், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com