தமிழ் இலக்கியத்தில் ‘திராவிட மாடல்’

தமிழ் இலக்கியத்தில் ‘திராவிட மாடல்’
Published on

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நான்காவது மாடியில் ஓர் அறையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார் பேராசிரியரும் தமிழ் மெய்யியல் அறிஞருமான க.நெடுஞ்செழியன். அவரது உடல்தான் மெலிந்திருக்கிறது. ஞாபக சக்தியோ ஆய்வுப்பார்வையோ பாதிக்கப்பட்டிருக்கவில்லை. சமீபத்தில் செம்மொழி உயராய்வு நிறுவனத்தின் கலைஞர் விருது (2021) வழங்கப்பட்டிருக்கும் இந்த அறிஞரிடம்  சில கேள்விகளை முன்வைத்தோம். தொல்காப்பிய வரிகள், சங்க இலக்கிய வரிகளை அவ்வப்போது சொல்லிக்காட்டி பேசிக்கொண்டே போகிறார்.

தொல்காப்பியத்தில் இருக்கும் தமிழர் அறிவுச்செறிவுப்பற்றி பேசிவந்துள்ளீர்கள்... அதுபற்றி?

சங்கப்பாடல்கள் தொடங்கி, பக்தி இலக்கியம், பிற்காலத்தில் தோன்றிய தனிப்பாடல்கள் வரை தொல்காப்பியரின் வரையறை மீறப்படாமலே இருந்திருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் கடவுளை வெளிப்படையாக மறுக்கும் தேவை உருவாகவில்லை. ஏனெனில் மாற்று கருத்து ஏதும் இல்லை. தூய்மையான அறிவியலே அப்போது இருந்தது. நடைமுறை வாழ்க்கைதான். வைதிக எதிர்ப்புக்கும் கடவுள் மறுப்புக்கும் தேவை இருந்திருக்கவில்லை. கடவுளைப் பற்றிய சிந்தனை முழுமை பெறாத காலம் அது. அறிவியல் நோக்கில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. இன்று சொல்லப்படும் கருந்துளைக் கோட்பாடு, காலம்வெளிக் கோட்பாடு போன்றவற்றைப் பற்றி தொல்காப்பியர் தெளிவாகச் சொல்கிறார் என்றால், தமிழரின் அறிவியல் அப்போது எப்படிக் கூர்மையாக இருந்தது என்பதை உணரலாம். முதல்பொருள் என்பது நிலமும் பொழுதும் என்கிறார். நிலத்தையும் பொழுதையும் தனித்தனியாக சொல்லாமல் நிலம் பொழுது இவற்றின் கலந்த மயக்கம் இவ்வுலகம் என்கிறார். அதாவது நிலம்வேறு பொழுதுவேறு என பிரிக்க இயலாது. டைம் அண்ட் ஸ்பேஸ்! ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பட்ட காலம்தான் வரையறை, அதன் பிறகு அவர்களுக்கான காலம் என்பது இல்லாமல் போய்விடுகிறது அல்லவா? நிகழ்ச்சி என்றால் என்ன? இந்த பேட்டி ஒரு மருத்துவமனையில் நடக்கிறது. இந்த நிகழ்வு ஒரு மரத்தடியில் கூட நடக்கலாம். இதன் விளைவு என்ன? கருமநிகழ்வே இடமென மொழிவர். ஒரு செயல் நிகழும் இடம்தான் இடம். இந்த கரும நிகழ்வை, நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளை நடக்கும் என பாகுபாடு செய்வதே காலம். இது இப்போது ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வது போல் இல்லையா? இப்படிப்பட்ட ஓர் அறிவு மரபு நம்முடையது. இதில் ஏற்பட்ட மாறுதல்களை காலந்தோறும் பார்த்து வருகிறோம்.

மானுடவியல் நோக்கில் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் பார்த்து ஆய்வுகள் செய்திருக்கிறீர்கள். அது பற்றி?

தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்ள மானுடவியல் அவசியம். உதாரணத்துக்கு இரவுக்குறி என்ற சொல். இதற்கு பிற்காலத்தில் வந்த பொருள் வீட்டுக்குத் தெரியாமல் தலைவன் தலைவி சந்திப்பது அல்லது களவு காலத்தில் பிறர் அறியாமல் சந்திப்பது என புலவர்கள் எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கத்தில் என்ன பொருள் தெரியுமா? திருமணம் ஆன நிலையில் தலைவி தாய்வீட்டில் தங்குவாள். அவளை தலைவன் சந்தித்து வரவேண்டும். அந்த சந்திப்பு இரவு நேரத்தில், பிறர் அறியாமல் நிகழும். அப்படி பிறருக்குத் தெரிந்தால் அவன் தண்டனைக்குள்ளாவான். தாய்வழிச் சமூக அமைப்பைச் சுட்டுவது இந்நிகழ்வு.

 ராபர்ட் ப்ரிபால்ட் என்ற மருத்துவர் முதல் உலகப்போரில் ஆப்ரிக்க நாடுகளில் பணியாற்றியபோது தாய்வழிச்சமூக அமைப்பு என்ற கருத்தை நிலைநாட்டிய நூலை எழுதினார். அதனுடன் இதை ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

இந்த தாய்வழிச்சமூகத்தின் தாக்கம் தமிழர்களிடம் இன்றும் நிலவுகிறது. சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளுடன் தொல்காப்பியர் குறிப்பிடும் சில விஷயங்கள் பொருந்திவருகின்றன.

இரவில் முன்வாசல் வழியாக வராமல் பின் வாசல் வழியாக வரவேண்டும் என தொல்காப்பியத்தில் வரையறை உள்ளது. ஆனால் நம் புலவர்களிடம் இரவுக்குறி என்பது பகலில் பிறர் அறியாமல் பார்த்துக்கொள்வது என்ற முடிவை அசைக்க முடியவில்லை. அகநானூறில் ஒரு பாட்டு: தலைவி சொல்கிறாள். தலைவன் மார்பில் மாலை போட்டு சந்தனம் பூசி, பின்வாசல் வழியாக வந்து கூடி இருந்தான். இனிமேல் எப்போது வருவானோ?. பின்வாசல் வழியாக யாரால் வர முடியும்? இந்த கேள்வி வந்தபின்னர் மானுடவியல் இங்கு சமூகம் எப்படி இருந்தது என்பதை புரிந்துகொள்கிறது. திருமணமான பெண் கணவனுடன் தோட்டத்தில் பேசச் செல்லும்போது ஒரு புன்னை மரத்தைத் தவிர்க்கிற பாடல் உங்களுக்குத் தெரியும். அம்மரம் தன் தாய் குழந்தையாக இருக்கும்போது போட்ட புன்னை மர விதையால் முளைத்தது. அதை அந்த தாயே வளர்த்தாள். அதனால் அது என் சகோதரி முறையுள்ள மரம், ஆகவே அவள் முன்னால் எப்படி அமர்ந்து பேசுவது? என்பது பாடல். இதில் நாம் கவனிக்கவேண்டியது, தாய் வளர்ந்த வீட்டில் மகளும் வளர்கிறாள் என்பதையே. எந்த சமூக அமைப்பில் இது சாத்தியமாகும்?

இன்னொரு பாட்டில் நெய்தல் நிலத் தலைவன் சொல்லுவான், நான் என்ன செய்தால் அவன் தன் மகளை எனக்குத் தருவான்? நான் கடலுக்குப் போகவா? அவனுடன் மீன் பிடிக்கவா? என்ன செய்யவேண்டும் என்கிறது அப்பாட்டு. முல்லை நில வாழ்க்கையில் ஒருத்தியை கல்யாணம்செய்வதற்காக அவள் வீட்டில் சென்று ஆடுமாடு மேய்ப்பார்கள். பெண்டுக்கு மேய்க்கி என்ற சொல்லாடல் இன்றும் தொடர்கிறது.

இந்த பாடல்களை புரிந்துகொள்ள மானுடவியல் பார்வை தேவை. எனவே தொல்காப்பியத்தை மானுடவியல் நோக்கில் ஆழ்ந்து பார்த்துள்ளேன். அத்துடன் மெய்யியல் நோக்கிலும் பார்த்துள்ளேன்.

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியர் என்பர். ஐந்திரமென்பதுதான் தொல்காப்பியரின் சிந்தனை மரபு. அது எத்தனை காலமாக இருந்து வந்தது எனத் தெரியாது. இந்த உலகின் தோற்றம் பற்றி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நிலம், நீர், தீ,வளி, விசும்பு என்ற ஐந்தின் கலந்த மயக்கம் இவ்வுலகம்; இதை யாரும் படைக்கவில்லை என்று சொன்னது. தொல்காப்பியர் காலத்திலேயே படைப்புக்கடவுள் யாரும் இல்லையா? அவன் படைத்திருக்கமாட்டானா என்ற சிந்தனை வருகிறது. அப்போது அவர் சொல்கிறார், ஒரு நிகழ்வு நடக்க எட்டுவகையான உறுப்புகள் தேவை. செய்வினை, செயப்படுபொருள், கருவி, காலம், போன்ற உறுப்புகளில் பயனும் முக்கியமானது. ஆயெட்டென்ப தொழில் முதல் நிலையே. கடவுள் இந்த உலகத்தைப் படைத்திருந்தால் அவருக்கு என்ன பயன்? என்ற விடைதெரியாத கேள்வி எழுகிறது.

இந்த  தத்துவ மரபில் பிற்பாடு கபிலர் என்ற அறிஞர் தோன்றி எண்ணியம் (சாங்கியம்) என்ற கோட்பாட்டை உருவாக்குகிறார். இதில் ஐந்திரத்துடன் வேத, வைதிக எதிர்ப்புகளும் சேர்க்கப்படுகின்றன. கபிலரால் வேத எதிர்ப்பு வளர்த்தெடுக்கப்பட்ட போது, இந்தியா முழுமையிலும் செல்வாக்கு பெற்ற ஓர் அமைப்பாக அது இருந்துள்ளது. திருக்குறளின் அடிப்படையும் வைதிக எதிர்ப்புதான். இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், பாரதிதாசன் வரையிலான தமிழ் இலக்கிய அடித்தளத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

உலகின் மாபெரும் கவிஞன் கம்பர். அவனை திருவரங்க மண்டபத்தில் அரங்கேற்ற விடவில்லை. ஏனெனில் ராமாயண மூலத்தில் இல்லாததை கம்பன் சொல்கிறார். மூலத்தில் இரணிய வதைப்படலத்தில் இரணியன் வேத எதிர்ப்பாளராக காண்பிக்கப் படுகிறார். கம்பன், இரணியனை வேத ஆதரவாளராகவும், தன்னுடைய மகனை வேதம் படிக்க வைதிகரிடம் அனுப்பியதாகவும் திருமாலிடம் இல்லாதது என்ன வேதத்தில் இருக்கிறது என மகன் படிக்க மறுத்ததால் வைதிகவாதியான இரணியன் தன் மகனைக் கொல்ல முற்படுவதாகவும் உள்ளது.

நமது பெரியார் இயக்கங்கள் பாகவதத்தில் இருப்பதைத் தான் எடுத்துக்கொண்டார்கள். அதற்கு மாற்றாக கம்பன் சொல்லி இருப்பதை எடுத்துக்கொள்ளவில்லை.

சங்க இலக்கியத்தில் இறைவன் பெயர்கள் உள்ளனவே?

சங்க இலக்கியம் என்பது காலத்தால் நீண்டது. தொல்காப்பியம் முதல் கம்பர் காலம் வரைக்கும் வரும். இந்த பெயர்கள் எல்லாம் பின்னாளில் வந்தவை. இடைச்செருகலாக வந்தவை எனக் கொள்ளலாம். நான் ஒன்று கேட்கிறேன். வேதங்களில் இந்திரனை முழுமுதற்கடவுள் எனவும் பின்னர் அக்னியை முழுமுதற்கடவுள் எனவும் சொல்கிறார்கள். பிறகு ஏன் அதை விடுத்து சிவனுக்கும் திருமாலுக்கும் வருகிறார்கள்? சிவனை அடிப்படையில் வைதிக எதிர்ப்பாளர் என்கிறார் அம்பேத்கர்.  தட்சன் செய்த யாகத்தை சிவகணங்கள் சிதைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டி அவர் சொல்கிறார்.

வேதங்களில் ஆரம்பகட்டத்தில் துதிப்பாடல்களில் முழு இடம் பெற்றிருந்தவன் இந்திரன். அதே இந்திரன் மீது ஆயிரம் கண் இருப்பதாக கீழ்த்தரமாக எழுதுகிறார்கள். இந்திரனும் வருணனும் அசுரன் என ரிக்வேதத்தில் வருகிறது. ஏன் அசுரன் என சொல்கிறார்கள். ஏன் அவனை அவதூறு செய்கிறார்கள். பழைய இந்திரன், புதிய இந்திரன் என பாகுபாடு செய்துள்ளார்கள். இதுபற்றியெல்லாம் என்னுடைய புதிய நூலில் எழுதி வருகிறேன். ரிக்வேதத்தை ஆழமாகப் படித்தால் புரியும். சங்க இலக்கியத்தில் இறைவன் பெயர்கள் இருப்பதாகச் சொல்கிறவர்கள், வேதத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்களை விளக்குவார்களா?

இந்திர விளையாட்டு தமிழ் இலக்கியத்தில் உள்ளதே..

ஆமாம். மழைதானே இந்திரன்! மாயோன் என்பது முல்லை நிலக்கடவுள். அதுவும் வைதிகத்தால் கவரப்படுகிறது. நம்மாழ்வாரின் பாடல்களில் வேத எதிர்ப்போ கடவுள் மறுப்போ எங்கும் இல்லை. ஆனால் முழுமையான பக்தி வழிபாட்டை முன்னெடுத்துச் செல்கிறார். ஆனால் வைதிகர்கள் அவர் பாடல்களைப் படிக்க தடை செய்கிறார்கள். அது திராவிட மொழியில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் வைணவ மரபில் வந்த தென்கலை அறிஞர்கள் மொழியினாலும் பிறப்பினாலும் இந்த பக்திப்பாடல்களை இழிவு படுத்துவது தாயின் கற்பை சோதிப்பதுபோல என்கிறார்கள். நம்மாழ்வாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இந்த வெறுப்புக்கு என்ன காரணம்? சைவத்திலும் 63 நாயன்மார்களில் மாணிக்க வாசகரை சேர்க்கலாமா கூடாதா என்ற பிரச்னை இருக்கிறது. இவரும் கடவுளுக்கும் வேதத்துக்கும் எதிரானவர் இல்லை. ஏன் இவர்களை ஒதுக்குகிறார்கள் என தேடிச்சென்றால், இவர்கள் தமிழ் மரபாகிய அகத்திணை மரபை பின்பற்றுகிறார்கள் என்ற காரணம் புலப்படுகிறது. மாணிக்கவாசகரின் திருக்கோவையார், நம்மாழ்வார் பாடல்கள் ஆகியவற்றில் தலைவியின் காதல் புலம்பலைப்போல் இறைவனை பாடுகிறார்கள்.

கம்பன் ராமாயணத்தைப் பாடிக்கொண்டு வரும்போது கோதாவரியை வருணிக்கிறான். இந்த ஆறு எப்படிச் செல்கிறது என்றால் சங்க இலக்கிய அகத்திணை மரபுபோல் செல்கிறது என்கிறான்.

 ‘ஐந்திணை நெறி அளாவி,

சவி உறத் தெளிந்து, தண்ணென்

ஒழுக்கமும் தழுவி, சான்றோர்

கவி எனக் கிடந்த கோதாவரி' என்கிறான்.

திறந்தமனத்தோர் பேறு பெற்றவர்கள் என்பர் பைபிளில். என்ன தான் நான் திராவிட இயக்கத்துடன் அடையாளப்படுத்திக்கொண்டாலும் என்னுடைய ஆய்வுகள் திறந்த மனத்துடன் செய்யப்பட்டவை. அவ்வையார் தனிப்பாடலில், &கடவுள் கோட்பாடு மலர்ச்சி பெற்ற காலகட்டத்தில்& சங்கத்தமிழ் மூன்றும் தா என்றுதான் கேட்கிறார். இந்த தொடர்ச்சியை சுட்ட விரும்புகிறேன். தமிழின் திணை மரபுகளைப் பாதுகாப்பதற்காகவே சங்கம் ஒன்று தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இரு போக்குகளைக் காணலாம். சங்கத்தை மூட ஒரு முயற்சி. சங்க இலக்கியங்களைப் பாதுகாக்க இன்னொரு முயற்சி.

திராவிடம்?

திராவிடம் என்ற சொல், வைதிகத்தால் உருவாக்கப்பட்டு பயன்பட்டாலும் அவர்களுக்கு எதிரானதாக நிலைகொண்டது. அந்த பயன்பாடுதான் இப்போது திராவிட மாடல் என்று உருவாகி உள்ளது. திராவிடம் என்ற சொல்லுக்குப் பின்னால் பல அறிஞர்கள் பல கோட்பாடுகளை இணைத்து அதை ஓர் இயக்கமாக உருவாக்கி இருக்கிறார்கள். ஆகவே திராவிடம் எனப் பேசுவதால் அவர்களை புறக்கணிப்பது தவறானது.

கம்பனுக்கே மீண்டும் வருவோம். அவர் மிகவும் நுட்பமாக ஒரு விஷயம் வைக்கிறார். ராமன் வனவாசம் சென்றுவந்து முடி சூடும்போது அந்த முடியை சூட்டுவது யார்? வசிட்டர் எடுத்துக் கொடுக்கிறார். சூட்டுபவர் சடையப்ப வள்ளல். அவர் எந்த சமூகப் பின்னணியைக் கொண்டவர்? அவர் யாருக்கு முடிசூட்டுகிறார் என்பதை சமூகவியல் பார்வையில் பார்த்தால் அது தரும் அர்த்தம் மிரட்சியைத் தருகிறது. ஆனால் சடையப்ப வள்ளலுக்கு பெருமை சேர்க்க கம்பர் இதை எழுதியதாக காண்பித்துவிட்டுச் செல்கிறார்கள்.

சங்கம் என்ற அமைப்பை சமணர்கள், பௌத்தர்களிடம் இருந்து தொல்காப்பியர் கற்று இருந்தால், ஏன் அந்த தொடர்ச்சி அவர்களிடமில்லை..? ஏன் இங்கே இருந்துள்ளது? அப்போது அது யாருக்கு உரியது இது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

‘நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற்கு மயங்கா மரபின் எழுத்துமுறை' காட்டுகிறார் தொல்காப்பியர் என்பதுதான் தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரம் கூறுவது. தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய எழுத்துமுறையைக் காட்டுகிறார். ஏன் அதை வேதம் வல்ல அறிஞனுக்குக் காட்டுகிறார். ஏன் காட்ட வேண்டும்? ஏனெனில் அவனிடம் எழுத்து இல்லை. அதுவும் எப்படிப்பட்ட எழுத்து, மயங்கா மரபின் எழுத்து. எப்படிப் பேசுகிறோமோ அப்படியே எழுதுகிற வரிவடிவம். தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளுக்கு இன்று பயணம் செய்து பலவற்றைக் கற்றுக்கொண்டுவருவதுபோல் அன்றும் தமிழ் நிலத்துக்கு வந்து எழுத்துமுறையக் கற்றுள்ளனர் என்றுதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ராஜராஜன் இந்து என்று சொல்வதில் என்ன பிழை இருக்கிறது?

நாம் நினைப்பதுபோல் சைவம் என்பது ஒரே சைவம் அல்ல. இது ஆறு உட்பிரிவுகளைக் கொண்டது. இதில் கபாலிகம், காளாமுகம், பாசுபதம் மூன்றும் பெரியவை. கபாலிகம் எல்லோருக்கும் இடம் தருவது. இதில் வைதிகத்தை குஜராத்தைச் சேர்ந்த லௌலீசர் புகுத்த முயல்கையில் காளாமுகமும் பாசுபதமும் உருவாகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் நாவுக்கரசர் கபாலிகர். ஞானசம்பந்தர் காளாமுகர். ஒரு கட்டத்தில் காளாமுகம் கபாலிகத்தை வீழ்த்துகிறது. பாசுபதம் என்ற அமைப்பை அரசர்கள் பின்பற்றுகிறார்கள். இதுவும் வேத எதிர்ப்பைக் கொண்டது. சங்கராச்சாரியாரின் சங்கரபாஷ்யம் உரையில் பாசுபதாதிகரணம் என்ற பிரிவு உள்ளது. அதாவது பாசுபதத்தை எதிர்ப்பது. எல்லோரும் இந்துவெனில் ஏன் பாசுபதத்தை எதிர்க்கவேண்டும்? ராஜராஜன் பாசுபத பிரிவைச்சேர்ந்தவன். இந்த பாசுபதத்தை வைதிகம் ஏற்கவில்லை. சைவத்தில் ஆதிசங்கரரை ஏற்கவில்லை. சிவஞான சித்தியாரில் இதைக் தெளிவாகக் காணலாம்.

நவம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com