வெளிச்சம் நிறைந்த முன்னறையில் சுவரில் தொங்கிய புத்தர் ஒவியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அழகான தொப்பிகள் அலங்காரமாக மாட்டவிடப்பட்ட ஸ்டாண்ட். சிறு உலோகச் சிலைகள். கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, திடீரென உள்ளிருந்து வந்து தன் கந்தர்வக் குரலில் எங்களை வரவேற்றார். ஒட்ட நறுக்கப்பட்ட தாடி, பேசுகையில் காற்றில் அலையும் கைகள், மிகக்கூர்மையான கண்கள். ஒல்லியான உடல்வாகு படைத்த அழகர் கிருஷ்ணா. கேள்விகளுக்கு தன் பதில்கள் கொஞ்சம் நீளமாகத்தான் இருக்கும் என்கிற இவர் அடுத்தமாதம் அயல்நாடு ஒன்றில் மலையேறச் செல்ல இருக்கிறார். ‘ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்குச் செல்வேன். எனக்கான தனிமையைத் தேடும் பயணம். இந்தமுறை வெளிநாடு’ என்கிறார்.
கிருஷ்ணா ஒரு புகழ்பெற்ற பாடகர் மட்டுமல்ல. சிறந்த எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். மரபை உடைத்துப்பார்க்கும் கலகக்காரராகவும் அவரை கர்நாடக இசை உலக ரசிகர்கள் பார்க்கிறார்கள். அவரது குரல்மீது வெறித்தனமாக நேசம் கொண்ட ரசிகர்கள் இருப்பதுபோல் அவரது சுதந்தரமான கருத்துகளுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எழுதிய A Southern Music ஆங்கிலப் புத்தகம் வெளிவந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அதில் அவர் வெளியிட்ட கருத்துகள் உருவாக்கிய அதிர்வுகள் இன்னும் விலகவில்லை. கர்நாடக இசையை பரவலாக்க வேண்டும். அதில் இருக்கும் சாதி தனித்துவத்தை அகற்றவேண்டும் என அவர் சொன்னதன் எதிரொலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து நேர்காணல்களில் இதை வலியுறுத்தும் கிருஷ்ணா, குப்பங்களில் சென்று இசைக் கச்சேரிகள் நிகழ்த்தி திரும்பிப் பார்க்கவைத்தார். சமீபத்தில் இனி டிசம்பர் சீசன் கச்சேரிகளில் பாடமாட்டேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அந்திமழைக்கான இந்த நேர்காணலில் கிருஷ்ணாவின் இனிமையான குரல், பல்வேறு திசையிலும் திரும்பி தன் கருத்துகளை ராகமாலிகாவாகப் பதிவு செய்கிறது.
உங்களைப் பொறுத்தவரை இசை என்பது என்ன?
பொதுவான பொருளில் சொன்னால் மெலடி, ரிதம், சொற்கள் இவை மூன்று. அல்லது இவற்றில் ஒன்று. எல்லா இசையும் ஒன்று என்பதை நான் ஏற்கமாட்டேன். காதுக்கு இனிமையாக இருப்பது இசை. உங்கள் கலாசாரம், பண்பாடு போன்றவை தான் எது உங்கள் காதுக்கு இனிமையாக இருக்கிறது என்பதை தீர்மானம் செய்கின்றன. இயற்கையில் இசை இருக்கிறதே என்று சொல்லலாம். அது இசை என்று யார் சொன்னாங்க? இயற்கை சொன்னதா? நாம் சொல்வதா? மனிதன்தான் அதை இசை என்கிறான். ஆகவே மனிதன் தான் இசையை உருவாக்கினான். சமூகத்தில் குழந்தை வளர்ப்பின்போது, உழைப்பின் போது என பல நிகழ்வுகளில் பாடுகிறோம். இது சமூக இசை. இது வழிவழியாக வருகிறது. அடுத்தது பக்திப் பாடல்கள். உங்களை பக்திப்பரவசத்தில் ஆழ்த்துவதுதான் இந்த இசையின் பயன்பாடு. கர்நாடக இசை என்னோட கண்ணோட்டத்தில் பக்தி இசை இல்லை. அரசியலும் இல்லை. சமூகத்தை மாற்றக்கூடியதும் இல்லை. அரூபமானது. ரிதம், மெலடி, சொல்லழகு கலந்து வருவது கர்நாடக இசை. இவை சேர்ந்து நிகழும் கொண்டாட்டம்தான் கர்நாடக இசை. இதன் பயன்பாடு முற்றிலும் மாறுபட்டது.
இசை அனைவரையும் ஒன்று சேர்க்கும் விஷயம். ஆனால் அதில் சாதியைப் பேசி நீங்கள் விஷத்தை விதைக்கலாமா என்று ஒரு கேள்வி பேசப்படுகிறது..
கர்நாடக இசையில் சாதி இல்லையா? இருக்கு. இசை எல்லாவற்றையும் தாண்டிப் போய்விடகூடியது என்றால் ஏன் சாதி இருக்கிறது? இருக்கக்கூடாதே? நான் புதிதாகவா சொல்கிறேன். கர்நாடக இசை சபாவுக்கு வாருங்கள். சுற்றிலும் பாருங்கள்.
சாதி இல்லை என்று சொல்ல முடியுமா?. இல்லாத பிரச்னையை நான் கூறவில்லை. சாதிப் பிரச்னையை நாம் கறுப்பு வெள்ளையாகப் பார்க்கிறோம். ஆனால் அது இரண்டுக்கும் இடைப்பட்டது. இன்று பார்த்தால் கர்நாடக இசையில் 99 சதவிதம் பிராமணர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் இசைக்கு பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அதை மறுக்கவே இல்லை நான். ஆனால் ஒரு பெரிய அளவிலான மக்களுக்கு இந்த இசை போய்ச்சேர்ந்ததா? இல்லை. உடனே சொல்வாங்க நாங்க என்ன நோ எண்ட்ரி பலகையா வெச்சிருக்கோம்? அப்படியெனில் பெண் விடுதலை பற்றிப் பேசக்கூடாது. இந்தியாவில் பெண்ணே பிரதமராக இருந்திருக்கிறார். அப்படியானால் பெண் விடுதலை பேசக்கூடாதா? அதுபோல்தான் இது. சாதி இருக்கு. அது மனசில் இருக்கு. அது இருக்குன்னு ஒத்துக்கணும்னு நான் சொல்றேன். அதைத் தாண்டி நாம் எப்படிப் போகணும்? ஒத்துக்கொண்டால்தானே அதைச் செய்யமுடியும்? கர்நாடக இசை எல்லாராலும் கேட்க முடியாது. ஒத்துக்கறேன். அதைக் கேட்கக்கூடிய சின்ன குரூப்பில் பல பின்னணி உடையவர்கள் இருக்கலாமே என்று நான் கேட்கறேன்.
கர்நாடக இசைக்கு பூணூல் இல்லை என்று எழுதி உள்ளீர்கள்.
ஏனெனில் அதை அணிந்துவருபவர்கள் கையில்தான் அந்த இசை உள்ளது. நான் மற்றவர்களை மட்டும் சொல்லவில்லை. எனக்கும் அந்த மனப்பான்மை இருக்கிறது. அந்த பூணூல் என்பது கர்நாடக இசையை ரசிக்கிறதுக்கோ கையாளுவதற்கோ அவசியம் இல்லை. அதற்குள் கர்நாடக இசையை நாம் முடிச்சு போட்டு வெச்சிட்டோம். அந்த முடிச்சை இசையிலிருந்து எடுத்துவிடுவோம். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் என்னவாகவும் அது இருக்கட்டும். இசைக்கு வேண்டாமே?
அதிகார மட்டத்தில் பல்வேறு அடுக்குகளில் இருந்து விரட்டப்பட்ட ஒரு சமூகம் இன்று தன் ஆளுமையை கர்நாடக இசையில் நிறுவிக்கொண்டிருக்கிறது. அதில் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடலாம் என்ற ஒரு விட்டுக்கொடுக்கும் கருத்து சொல்லப்படுகிறது..
இதை நான் என் நூலில் எழுதி உள்ளேன். விரட்டினார்கள் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். நான் திராவிட இயக்க உறுப்பினர் இல்லை. எந்த இயக்கத்துக்கும் சொந்தமானவன் இல்லை. விரட்டினார்கள் என்பது நியாயமான சொல் அல்ல. எல்லோரும் எல்லாவற்றிலும் வந்துவிட்டார்கள் என்று சொல்லலாம். அதனால் இது மட்டும் ஒருத்தருக்கு சொந்தமாக இருக்கட்டும் என்று சொல்லலாமா? நான் இதற்கு கலை வழியாக பதில் சொல்கிறேன். கலை இன்னும் வளரவேண்டுமானால் வெவ்வேறு பின்னணியில் இருந்த வந்தவர்கள் பங்களிப்பு இருக்கணும். அவங்க பார்வை, வித்தியாசமாக இருக்கும். இக்கலையை மாறுபட்ட பின்னணியில் இருந்து வந்த நிறைய பேர் கையில் எடுத்தால், இக்கலை மேலும் செழுமையாகும். இதே மாதிரி கூத்தும் வேறு கலைகளும் அதைச் செய்யும் குறிப்பிட்ட சாதிமக்களுக்கு மட்டும் உரியதில்லை. இந்த கலவை நடக்கணும். இது சாதிப்பிரச்னையை தீர்க்கும் என்று சொல்கிறேன். ஒரு மனிதனை மாற்ற வேண்டுமென்றால் அவன் நெஞ்சைத் தொடவேண்டும். புத்தியைத் தொட்டால் மாறமாட்டான். கலை ஒருவனின் நெஞ்சைத் தொடக்கூடியது. தமிழ்நாட்டில் சமூக வளர்ச்சி குறியீடுகள் அதிகமாக உள்ளன. அதற்குப் பெரிய காரணம் இங்கு நடந்த சமூகப் புரட்சிதான். அதை நாம் ஒத்துக்கணும். என் கொள்ளுத் தாத்தா செய்த தவறுக்கெல்லாம் பிராயசித்தம் நான் கண்டுபிடிக்கவேண்டும் என சொல்வது பைத்தியக்காரத்தனம். நான் சொல்லவில்லை. ஆனால் இருக்கிற சூழலை ஒப்புக்கொள்கிறேன்.
கர்நாடக இசையிலிருந்து இசை வேளாளர்கள் ஒதுக்கப்பட்டது பற்றிய வரலாறை சுருக்கமாகச் சொல்லுங்களேன்.
தேவதாசிகள், இசைவேளாளர்கள், பிராமண இசைக் கலைஞர்கள் என்கிற முக்கோண உறவுப் பரிமாற்றத்தின் அழகில் வந்ததுதான் கர்நாடக இசை. அது சமூகத்தில் மேல்மட்டத்தில் இருந்தவர்களுக்கு சொந்தமாக இருந்தது. 1850- 1930 காலகட்டம் மிக முக்கியம். அப்போ சுதந்தரப் போராட்டம் எழுச்சி அடைந்தது. கூடவே இந்து தேசியவாதம் வளர்ந்தது. அப்போதுதான் இப்போது நாம் பார்க்கும் கர்நாடக கச்சேரி இசைவடிவம் உருவாகி வந்தது. கர்நாடக இசைக்கு இந்து ஆன்மீக பிம்பம் கிடைத்தது. இந்த நிலையில் தேவதாசிகள் மறைய ஆரம்பித்தனர். அரசியல் சட்ட சீர்திருத்தம், சமூக விழிப்புணர்வு இதற்குக் காரணம். பிராமணர்கள் அரசு வேலைக்காக சென்னைக்கு வந்தனர். அவர்கள் இசைக்கு ஆதரவு தந்தனர். கர்நாடக இசையில் சொற்களுக்கு முக்கியத்துவம் வந்தது. கீர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். நாகஸ்வரத்தின் முக்கியத்துவம் குறைந்தது. ராகங்கள், பல்லவி, ரத்தி வாசித்துக்கொண்டிருந்த நாகஸ்வர வித்துவான்களும் இதனால் கீர்த்தனைகள் வாசிக்க ஆரம்பித்தனர். கர்நாடக இசையில் இருக்கும் பக்தி, மிக முக்கியம் என்று பேச ஆரம்பித்தனர். இந்து தேசியவாதம் இதில் கலக்கிறது. இந்த மாறுதல் மிகச் சுவாரசியமாக இருக்கிறது. தேவதாசிகளிடம் இருந்த இசையை, நாகஸ்வரக் கலைஞர்களிடம் இருந்த இசை நுணுக்கத்தை பிராமண கலைஞர்கள் எடுத்துக்கொண்டனர். ஆனால் இந்த விஷயங்களைத் தந்த நபர்கள் ஒதுக்கப்பட்டனர். நாகசுரம் கோவில்கள், திருமணம் ஆகியவற்றுடன் நின்றுகொண்டது. இந்த கட்டத்தில்தான் கர்நாடக இசைக் கான நவீன தியரி எழுதப்பட்டது. அதை எழுதியவர்கள் பிராமண இசை அறிஞர்கள். (ஆபிரஹாம் பண்டிதர் எழுதினார். இருப்பினும் அதை யாரும் படிப்பதில்லை). பிராமணர்கள் பின்பற்றிய இசைக்கும் அந்த தியரிக்கும் தொடர்பு உண்டு. கச்சேரி பத்ததி நிறுவப்பட்டது இவர்களால்தான். எனவே இந்த சாதியினர் செய்ததுதான் அங்கீகாரம் பெற்ற கர்நாடக இசை என்றானது. தேவதாசிகள், நாகஸ்வர வித்துவான்கள் இதற்குள் வந்தால்தான் அங்கீகாரம் என்றானது. ராஜரத்தினம் பிள்ளையின் கதை கேட்டால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் இசையை எல்லோரும் ஏற்றுக்கொண்டாலும் சாதியால் பிரச்னைக்குள்ளானார். அதேபோல் மிருதங்கம், வயலினிலும் உள்ளது. இதில் 1930, 40கள் வரை இசை வேளாளர்கள் இருந்தனர். அதிலிருந்து 1950, 60கள் வரை வந்தார்கள். அதன் பின்னர் இல்லை. மணி அய்யர் மிருதங்கம் வாசித்தது இசைவேளாளர்களுக்கான பிராமணப் பதிலாக உருவானது. அவரையொட்டி முழுக்க பிராமணர்கள் மிருதங்கத்தையும் கைப்பற்றினர். பழனி சுப்ரமணியம் பிள்ளையை நந்தி என்று சொல்வதில்லையே. மணி அய்யரைத்தான் மிருதங்க இசையில் நந்தி தேவராகக் குறிப்பிட்டனர். மணி அய்யர், இசைவேளாள மிருதங்க சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தவர் என்று என் நூலில் எழுதி உள்ளேன்.
திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இதில் என்னவாக இருந்தது? குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இசை வேளாளர் பின்னணியில் இருந்து வந்த நிலையில்...
திராவிட இயக்கத்தினர் கர்நாடக இசை பிராமணர்களால் கைக்கொள்ளப் பட்டிருக்கிறது என்பதாகச் சொல்லி ஒதுக்கிவிட்டார்கள். இது தவறு. இதற்குப்பதிலாக இது நம்முடையது என்று அதைப் பரப்பியிருக்கவேண்டும். அது மேலும் ஒதுக்கப்பட்டதால் பிராமணர்களால் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டது. இதில் பக்தி வந்தது இன்னும் குழப்பம். தமிழிசை பாடியபோது, தமிழ் என்று சொல்லி நீ தமிழில் பக்திப்பாடல்களையே பாடுகிறாய் என்று பெரியாரே திட்டி இருக்கிறார். கர்நாடக இசையை பக்தி சங்கீதமாகப் பார்த்திருக்கக்கூடாது என்பது என் பதில்.
பிராமணர்கள் மிருதங்கம், வயலின் போன்ற இசைக் கருவிகளை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் நாகஸ்வரத்தை ஏன் கைப்பற்ற வில்லை? அது இன்னமும் இசை வேளாளர்களிடம்தானே இருக்கிறது?
மிருதங்கத்தைப் போன நூற்றாண்டில் இருந்து பிராமணர்களும் இசைவேளாளர்களும் வாசித்துக்கொண்டிருந்தார்கள். நாகஸ்வரம்,இசை வேளாளர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டது. வெளியே யாரும் வாசிக்கவில்லை. ஒரு விதிவிலக்கு ஷேக் சின்ன மவுலானா இஸ்லாமியர். அவங்க தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஏன் பிராமணர்கள் வாசிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை. இந்த நூற்றாண்டில் நாகஸ்வரத்தை ஒதுக்கிட்டோம். அதனால் வாசிக்க வராம இருக்கலாம். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டிலும் இசை வேளாளர்கள் மட்டும்தான் வாசித்தனர். ஒருவேளை அவர்கள் தங்களுக்குள் மட்டும் இந்த இசையை வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்திருக்கலாம். இதில் உண்மையும் உள்ளது. இது இல்லாமல் அதை வாசிக்க நிறைய சக்தி வேண்டும். அசைவம் சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டுக்குப் போய் கத்துக்கொள்ள வேண்டும் என்ற காரணமா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் வயலின், மிருதங்கம் இசை வேளாளர்களிடமிருந்து பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள். அதுவும் 50க்கு முன்னால்தான். அதன் பின்னர் இசைவேளாளர்களிடம் கற்றுக்கொள்வது குறைந்தது. ஏனெனில் ஆசிரியரும் மாணவரும் பிராமணர்களாகவே ஆகிவிட்டனர். எனக்குத் தெரிந்து பிராமணர்கள் யாரும் இப்பவும் நாகஸ்வரம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சென்றதாகவோ அதற்கு மறுக்கப்பட்டதாகவோ கேள்விப்பட்டதில்லை. இது ஏனென்று எனக்குத் தெரியவில்லை.
சாஸ்திரிய சங்கீதம் எல்லாராலும் கேட்க முடியாத ஒன்று. குப்பங்களில் போய் கர்நாடக இசைக் கச்சேரி நடத்துவது ஸ்டண்ட் என்கிறார்களே?
ஸ்டண்ட் என்பவர்களுக்கு நான் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை. கர்நாடக இசை, குறைவான ஆட்களால்தான் ரசிக்கமுடியும். ஒத்துக்கறேன். அந்த குறைந்த ஆட்களின் வண்ணம் என்ன? அவர்களின் வண்ணம் மாறுபட்டதாக கலவையாக இருக்கவேண்டும் என்கிறேன். வெவ்வேறு சூழலில் இருந்து வருகிறவர்களுக்கும் ரசனை இருக்கலாம். எல்லா குப்பத்து மக்களும் நாளைக்கு கர்நாடக இசைதான் உயர்வானது என்று சொல்லப்போகிறார்கள் என்று நான் நினைத்தால் நான் தான் மடையன். ஆனால் அந்தமக்களுக்கு இதை ரசிக்கும் ரசனையே இருக்காது என்று சொன்னால் இது சமூக, இசை ரீதியிலும் ஒரு வன்முறை.
இப்போதைய கச்சேரிகளில் பழைய காலம்போல் ராகத்தையே மணிக்கணக்கில் பாட இயலுமா?
இன்று இருக்கும் கச்சேரி பத்ததி கடந்த நூறாண்டாக உள்ளது. இந்த வடிவமே இசையை குறுக்குவது என்பது என் கருத்து. இந்த ஃபார்மட் என்பது இசை அல்ல. இசை என்பது இதைத் தாண்டிய விஷயம். இசைதான் முக்கியம் ஃபார்மட் அல்ல. இதை எல்லோரும் மறந்துவிட்டோம். என்ன பிரமாதமான இசை பாடினாலும் இந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரணும் என்று ஒரு சட்டத்தை தயார் பண்ணிட்டோம். அதனால் சுதந்தரம் குறைகிறது. ரெண்டுமணி நேர கச்சேரி என்றால் அதில் வெறும் ராகம் மட்டுமே பாடினால் என்ன தப்பு? ஆனால் பாடகர் ராகம் மட்டுமே பாடினார். கீர்த்தனையெல்லாம் பாடலை என்று நமக்குத் தோன்றுகிறது. எல்லா திறமைவாய்ந்த கலைஞர்களும் கச்சேரி மரபில் சிக்கி உள்ளனர். இதிலிருந்து வெளியே வந்து இசையை மட்டும் பார்க்கணும்.
நம் ஊரில் இசை விமர்சனம் எந்த நிலையில் இருக்கிறது?
இசை மட்டுமல்ல; நம் ஊரில் கலைவிமர்சனம் என்கிற விஷயமே இல்லை. எழுதறவங்களுக்கு கலை பத்தி தெரியாது. கலை தெரிஞ்சவங்களுக்கு எழுதற திறமை இல்லை. கலை விமர்சனம் எழுதுகிறவங்களுக்கு பயிற்சி தர்ற கோர்ஸ் எதாவது நம் நாட்டில் உண்டா? இல்லை. கலை விமர்சனம் அந்த அனுபவத்தை பத்தி இருக்கணும். அதற்குள் டெக்னிகல் விஷயம் இருக்கணும். ஆனால் ஆங்கிலப் பத்திரிகை, தமிழ் இரண்டிலுமே விமர்சனம் மிகவும் குறைவான தரத்தில் இருக்கிறது என்பதே என் கருத்து. அதற்கான பயிற்சி இல்லை. பதினோரு மாசம் பொருளாதாரக் கட்டுரைகள் எழுதறாங்க. டிசம்பர்ல இசை விமர்சனம் எழுத வந்திடறாங்க. இது ஒரு சமூகமாக இதை மாற்றுவது கலைஞனின் பொறுப்பும் கூட. அவசரமான தேவையும் கூட.
டிசம்பர் சீசன்களில் பாடப்போவதில்லை என்று தடாலடியாக அறிவித்து விட்டீர்களே?.
புதுமுடிவு இல்லை. நான்கு ஆண்டுகளாக சீசன்களில் காலை நேரம் சென்று ப்ரீயாகப் பாடிக்கொண்டிருந்தேன். சீசன் என்பது மிகவும் கூட்டமாக ஆகிவிட்டது. சீசனில் இசை தொலைந்து மீதி சமாச்சாரங்கள் அதிகம் நடப்பதாகத் தோன்றுகிறது. இதில் கலை இருக்கிறதா என்று எனக்கு சந்தேகம். அதில் நடக்கும் ஊழல் பற்றியும் எழுதினேன். கிரிக்கெட் ஐபிஎல்லை எடுங்க. அதை எல்லோரும் திட்டறோம். அது என்ன? கிரிக்கெட்டில் நடக்கிற விஷயங்களின் பெரிதுபடுத்தப்பட்ட வடிவம். சீசன் என்பதும் ஐபிஎல்தான். அமைப்பை மாத்தணும். அதுக்காக பேசிகிட்டு இருக்கிறேன்.
இதுபோல் ஆக்டிவிசம் பண்ணி கிருஷ்ணா தன் சக்தியை வீணடிக்கிறார் என்கிறார்களே?
ஆக்டிவிசம் என்று சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நம்மை சுத்தி இருக்கும் விஷயங்களை கண்டுகொள்ளாமல் நாம் பண்றதை மட்டும் பண்ணிகிட்டே போறது சரியா? ஒரு மனிதன் தன்னைச் சுற்றி இருப்பதை பற்றி சிந்திக்கணும். நான் யாருக்குப் பாடுறேன், அவனுக்குப் போய்ச் சேர்கிறதா என்று சிந்திக்கணும். அது ஆக்டிவிசமா? இதனால் என் கவனம் குறைவதாக நினைத்தால் இருக்கட்டும். அதுபற்றிக் கவலை இல்லை.
சினிமாவில் கர்நாடக இசையை இளையராஜா, ரகுமான் இருவரும் பயன்படுத்தியது பற்றி?
இருவரும் சினிமாவுக்கு எப்படித் தேவையோ அப்படிப் பயன்படுத்திக்கொண்டார்கள். மிக அழகாகவும் பொருத்தமாகவும் செய்துள்ளனர். கர்நாடக இசை மட்டுமல்ல, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை என எல்லாவற்றையும் தேவைக்காகப் பயன்படுத்தினர். அவர்கள் சினிமாவில் போட்டது கர்நாடக இசை அல்ல என்பேன். கர்நாடக இசை அதன் உருவத்துக்குள்தான் உள்ளது. அதிலிருந்து உருவி எடுத்துப் பயன்படுத்தினால் அது வேறொரு விஷயமாக மாறிவிடுகிறது. கர்நாடக இசையாக இருப்பதில்லை. அது சினிமா இசை.
சிந்து பைரவியில் தியாகராஜ கீர்த்தனையை ராகம் மாற்றிப் பயன்படுத்தியதற்காக இளையராஜாவை விமர்சித்து எழுதி உள்ளீர்கள்/
சிந்துபைரவியில் கதை ஒரு கர்நாடக கலைஞன் பற்றியது. அந்த காட்சியில் கச்சேரி மேடையில் ஒரு கீர்த்தனை பாடுவதுபோல் ஒரு சூழல். அதற்காக தியாகராஜர் பெயரும் கீர்த்தனையும் தேவைப்படுகிறது. திரைவடிவில் அக்காட்சிக்கு ஒரு நம்பகத்தன்மையை அது கொடுக்கிறது. அதற்காக ’மரிமரி நின்னே’ கீர்த்தனையை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அவரது சொற்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அவர் கொடுத்த இசையை உதறிவிட்டிருப்பது நியாயமல்ல. அந்த சினிமா காட்சிக்கும் இது நியாயமில்லை. கர்நாடக இசைக் கலைஞன் பாடுவதாகக் காட்டும் காட்சிக்கும் இது நியாயமில்லை. அந்த கீர்த்தனைக்கு மரியாதை செய்யவேண்டாமா? இதுபற்றி கர்நாடக இசை கலைஞர்களும் கவலைப்படவில்லை என்பதுதான் சுவாரசியம். மரிமரி நின்னே, காம்போஜியில் இருக்கிறது. இந்த ராகத்தில் பாடும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. இந்த கீர்த்தனைக்கு ட்யூனே இல்லையென்றால் நீங்கள் இசை அமைக்கலாம். தவறில்லை. ட்யூன் இருக்கிறது. பாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. அவ்வளவுதான். ஆனால் ராஜா சாரின் பெரும் ரசிகன் நான்.
கர்நாடக இசையில் பக்தி முக்கியம் இல்லை என்கிறீர்கள். தியாகராஜர் கீர்த்தனைகளைப் பாடுகையில் நீங்கள் பக்தி பாவத்துடன் பாடுகிறீர்களா?
பக்தி என்பது என்ன என்பது முதலில் கேள்விக்குறி. நீங்கள் அர்த்தத்தைச் சொல்கிறீர்கள். கர்நாடக இசையில் அர்த்தம் என்பது வேறுமாதிரி புரிந்துகொள்ளப்பட வேண்டும். உதாரணம் ஒன்று சொல்கிறேன். பிரான்ஸ் செல்கிறோம். பிரெஞ்சு மொழியில் பேசுகிறார்கள். அந்த மொழி புரியாவிட்டாலும் அது அழகாக இருப்பதாக சொல்கிறோம். என்ன அது? அந்த ஒலியில் இருக்கும் ஒரு அழகு. அதுபோல் கர்நாடக இசையிலும் மொழியை அணுகவேண்டும் என்கிறேன். ஒவ்வொரு மொழிக்கும் அழகு வேறானது. ஒவ்வொன்றும் இசை வடிவமாக இருக்கையில் ராகமும் தாளமும், மொழியில் சேர்ந்து வரும்போது ஒரு அழகு உள்ளது. அதுவும் பாவம்தான். அதுதான் பாவம் என்கிறேன். உங்களுக்கு வேண்டுமானால் தியாகராஜர் கீர்த்தனையின் பழைய நொட்டேஷன்களைக் காட்டுகிறேன். அவரே நிறைய சங்கதிகள் போடுகையில் வார்த்தைகளை வெட்டிப் போட்டிருக்கிறார். அவருக்கே அவர் வார்த்தைகள் மீது நம்பிக்கை இல்லையா? அவர் பாவத்தை வேறுமாதிரி பார்த்தார். நாம்தான் பக்தி, பக்தி என்று அதைச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம். இசைக்காக, ராகத்தின் வளைவுக்காக, தாளத்தின் கட்டுப்பாட்டுக்காக இடைவெளி விட்டிருக்கிறார். அதனால் ஒரு அழகு கிடைக்கிறது. அது மொழி, தாளம், மெலடியிலிருந்து வருகிறது. அதுதான் பாவம். மொழி புரியாமல் ஆஹா என்கிறோம். எப்படி? அதில் பாவம் உள்ளதா இல்லையா? மனசைத் தொடுகிறதா இல்லையா? அர்த்தத்தை மீறிய ஓர் அர்த்தம் உள்ளதா இல்லையா? இந்த அர்த்தத்துக்கு மீறிய அர்த்தம்தான் கர்நாடக இசையில் மொழி செய்யும் பணி. தியாகராஜ சுவாமிக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். அவரை பக்தி என்கிற கட்டுப்பாட்டுக்குள் போட்டுவிட்டால் நான் கர்நாடக இசை பாடுவதற்கும் பக்திப்பாடல்களுக்கும் என்ன வித்தியாசம்? நான் பக்திப் பாடல்கள் பாடினேன் என்றால் அங்கே நீங்கள் என்னைக் கேட்பது சரி. அங்கே மொழியின் அர்த்தம் மிகவும் முக்கியம். ஆனால் கர்நாடக இசை அரூபமானது. அது ஒரு கலை வடிவம். அங்கே மொழிக்கும், ராகத்துக்கும், தாளத்துக்கும் ஒரு பணி உள்ளது. எல்லாத்துக்கும் சேர்ந்து ஒரு அர்த்தம் உள்ளது. அது நேரடியான அர்த்தம் அல்ல. அது கலைவடிவத்தில் உள்ள அர்த்தம். இதற்கு ஆதாரம் அந்த மகான்களின் கீர்த்தனைகளில் உள்ளது. இதை அவர்களே ஒரு கலைவடிவமாகத்தான் பார்த்தார்கள். இதற்கு போதுமான உதாரணங்கள் உள்ளன. இதை நாம் மறக்கக் கூடாது என்பதுதான் என் வேண்டுகோள்.
ஆகஸ்ட், 2015.