என் பள்ளிக்கூடத்தைக் காணவில்லை!

கர்னல் ஹரிஹரன்
கர்னல் ஹரிஹரன்
Published on

ஒவ்வொரு ஆசிரியர் தினம் நெருங்கும் போதும், நான் படித்த ஆரணி போர்டு ஹைஸ்கூல் என் நினைவில் தோன்றும். வாழ்க்கையின் ஆரம்பத்தில் நான் கற்றது கல்லாதது எல்லாம் அந்த பள்ளியின் தாக்கத்தின் உருவகமே. எங்கள் ஊரில் ஆங்கிலேயர் காலத்து பழைய கோட்டையை ஒட்டி இருந்த குதிரை லாயங்களில்தான் எங்கள் பள்ளிக்கூடம் தொற்றிக்கொண்டு இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு எனது அண்ணன் டாக்டர் ஹரி சீனிவாசன் (சார்வாகன்) நினைவாக நடந்த ஒரு விழாவில் பங்கேற்க எங்கள் பள்ளிக்கூடத்தில் என்னை அழைத்தார்கள். அப்போது நான் அங்கே போனபோது தான் என் நினைவில் இன்றும் நிற்கும் பள்ளிக்கூடத்தை தேடினேன். ஆனால் என்னால் காண முடியவில்லை,.

அதில் ஏற்பட்ட முதல் மாற்றம் எங்கள் போர்டு ஹைஸ்கூல் "அரசு உயர் நிலைப் பள்ளி"யாக மாறி இருந்தது. மாற்றம் எப்போதுமே வரவேற்கத்தக்கது என்பது என் அனுபவம். ஆனால் அது எங்கள் பள்ளியில் என்னைப் பொருத்தவரை பொய்யாகி விட்டது.

மிகவும் கொடுமையான மாற்றம் காணாமல் போன ஹெட்மாஸ்டர் அறை. பள்ளியில் நடுநாயகமாக விளங்கிய அந்த பெரிய அறையில் பூதாகரமான மேஜையின் பின்னால் தினமும் சூட்டும் பூட்டும் அணிந்து வந்த ஹெட்மாஸ்டர் பள்ளியை ஆட்சி செய்தார். அந்த அறையை பார்த்தாலே எவரும் குரலை உயர்த்தி பேசமாட்டார்கள். அந்த அறையில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பணியிலிருந்த நடேச ஐயர் தலையில் தலைப்பாகை, மேலே கோட்டும் டையும் கீழே மூலைக்கச்சம் கட்டிய மல்வேட்டியோடு பள்ளியில் மையத்தில் தோன்றி, காலையில் இரண்டாம் உலகப் போர் செய்திகளை எடுத்து உரைத்தது இன்று போல் தோன்றுகிறது.

ஆனால் அவருக்குப் பின் பதவி ஏற்ற பாலசுந்தரம் சாரைப் பார்த்தாலே எல்லோருக்கும் கதி கலங்கும். அவரிடம் ஒரே ஒரு முறை வகுப்பில் எவனோ உடைத்துவிட்ட நாற்காலிக்காக நான் அடிபட்டேன். என்னை நிற்க வைத்து பிரம்பால் அடித்த அடி மறக்க முடியாதது. ஆனால் நான் அழவில்லை, ஏனெனில் அழுவது ஒரு மானப் பிரச்சினை. வகுப்புக்கு திரும்பியவுடன் பலமுறை பிரம்படி பெற்ற அனுபவம் மிக்க “கருந்தேள்” கொடுத்த “டேய் தொடையில தேச்சுக்கோடா” என்ற உபதேசம் என் காதில் இன்னமும் ஒலிக்கிறது, ஆனால் அவன் உண்மையான பெயர் மறந்துவிட்டது.

தற்போது அந்த பள்ளியில் ,தலைமை ஆசிரியர் அறை, சிறு அறையாக ஓரம் கட்டப்பட்டு நிற்கிறது. அதில் தூசிபடிந்த அலமாரிகளின் பின்னணியில் உட்கார்ந்திருந்த தற்போதைய தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியருடன் அந்த அறையைப் பங்கு போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அந்த அறையில் ஆளுமைக்கு பதிலாக, பரிதாப உணர்ச்சியே மேலோங்கி இருந்தது. சுவரில் இருந்த பட்டியல் பள்ளிக்கூடத்தில் படிப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதை காட்டியது.

பள்ளிக்கூடத்தை சுற்றிக் காட்டிய என் நண்பர், "இப்பெல்லாம் இங்கிலீஷ் மீடியம் கேக்கறாங்க. இங்க அது தேவையானபடி சேங்ஷன் ஆவலை. ஊர்ல இப்போ வசதியானவங்க பிரைவேட் ஸ்கூல்லதான் போடறாங்க. அதுல கட்சி விவகாரம் வேற இருக்கு. அதனால இங்க மோஸ்ட்லி தலித் ஸ்டூடண்ட்ஸ்தான் படிக்கிறாங்க சார்" என்று விவரித்தார்.

எங்கள் வகுப்புகள் நடத்தப்பட்ட குதிரைலாய அறைகள் பல இடிந்து விழுந்திருக்க வேண்டும். ஏனெனில் அதற்கு ஒப்பான வகுப்பறைகள் கட்டப்பட்டு இருந்தன. இடியும் நிலையில் முதிர்ந்த ஒரு அறையில் பள்ளி நூலகம் பூட்டப்பட்டு இருந்தது. அதை திறந்த பார்த்தால் தூசி கவ்விய புத்தகங்கள். "புக்ஸ் இஷ்யூ பண்றதில்ல.. லைப்ரேரியன் அபாயிண்ட் ஆவல.." என்ற விளக்கம் கிடைத்த பின்பு ஏமாற்றம் அதிகரித்தது.

ஹைஸ்கூல் என்ற சொல்லின் தமிழாக்கம் அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உபயோகத்தில் வரவில்லை. பொதுஜனம் எங்கள் பள்ளிக்கூடத்தை இஸ்கோல் என்றுதான் வட ஆற்காடு தமிழில் அழைப்பார்கள். ஆசிரியரை வாத்தியார் என்றுதான் கூறுவார்கள். தற்போதைய சினிமா கலாசாரப்படி பேட்டை ரௌடிகள்தான் வாத்தியார் என்ற சொல்லை உபயோகிக்கிறார்கள். இதுவே வாத்தியார் தரம் தாழ்ந்து விட்டதை காட்டுகிறதா? தெரியவில்லை.

நான் படித்த காலத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடியது கிடையாது. இருந்தாலும் அறுபது ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிய வாத்தியார்களுக்கு சமூகத்தில் மதிப்புஇருந்தது.

என் நினைவில் இன்றும் பள்ளிக்கூடத்தில் கொண்டாடிய மூன்று தினங்கள் நினைவில் நிற்கின்றன. முதலாவது, "வீ-டே" தினம். அந்த தினத்தில் ஜார்ஜ் மன்னர் படத்துக்கு முன்பு நின்று மன்னர் வாழ்க வாழ்கவே என்று ஜப்பானை வெற்றிகண்ட பின்பு பாடியது நேதாஜி பக்தர்களான எங்களை வெறுப்படைய செய்தது.

சுதந்திர தினத்தை கொண்டாடிய போது, எல்லோருக்கும் காகிதப்பையில் லட்டு விநியோகித்த போது, என் அருகில் இருந்த "அழுக்கு" சுப்ரமணி அந்த லட்டை கையில் எடுத்து, " என்னடா இது" என்று அந்த இனிப்பை வாழ்க்கையில் முதல்முதலாகக் கண்டு வியந்தது நினைவு இருக்கிறது. காந்திஜி இறந்த போது அவர் படத்தின் முன்பு மாணவர்கள் தொண்டை அடைக்க மலர்கள் தூவி கும்பிட்ட போது நிலவிய நிசப்தம், கூவி அழும் இழவு வீட்டை விட கனமாக இருந்தது.

அந்தக் காலத்தில் பள்ளி சீருடை கிடையாது. நான் உள்பட பெரும்பாலான மாணவர்கள் காலில் செருப்பு அணிந்து பள்ளிக்கூடம் போகவில்லை. தலையில் எண்ணெய் வழிய கிராமத்து மாணவர்கள் வருவார்கள். வாத்தியார் அவர்களை, "ஏண்டா செக்குல தலை விட்டையா?" என்ற கடி ஜோக் அடிப்பதை பல முறை கேட்டிருக்கிறேன்.

மாணவர்கள் பல்வேறு சாதி, மதம், மொழி (எங்கள் ஊரில், பலர் வீட்டில் தெலுங்கு, கன்னடம் பேசுவார்கள்) பேதம் இல்லாமல் ஒன்றாக படித்தார்கள். எவரும் மாணவர்களை சாதியை அடையாளம் காட்ட கையில் கயிறு கட்டும்படி கட்டாயப் படுத்தவில்லை. டேய், பேரி செட்டி, நாயுடுகாரு, அய்யர் வூட்டு பையா, ஏண்டா பொரி மாவு (ஜைன மாணவர்களுக்கு அடை மொழி) என்று கேலியான பேச்சில் சாதி தலையிட்டாலும் குரல்களில் குரோதம் கண்டதில்லை. ஏனெனில், அந்த கால கட்டத்தில் சாதியை சமூகம் வெளிப்படையாக காட்டிக் கொண்டது. தற்போது போல, சாதியை நிராகரித்து விட்டோம் என்று சொல்லிட்டு மறைமுகமாக சாதியம் பழகவில்லை.

ஆசிரியர்கள் உடையில் கட்டுப்பாடு இருந்தது. . நல்ல எட்டு முழ வேட்டியில் துல்லிய சைக்கிள் கட்டு (அது தற்போது காணாமல் போய்விட்டது), தலையில் வெள்ளை தலைப்பா, வெள்ளை சட்டையின் மேல் ஒரு பிஸ்கெட் கலர் கோட்டு. சவரம் செய்த முகத்தில் கண்டிப்பு. ஆனால் அவர் குரலை உயர்த்தி பேசியதே இல்லை. அப்படித்தான் வேணு நாயக்கர் தினசரி சைக்கிளில் வருவார். அவர் நிமிர்ந்து பார்த்தால் வகுப்பு கப் சிப் என்று அடங்கிவிடும்.

அவருக்கு நேர்மாறானவர் சுந்தரமூர்த்தி முதலியார். அப்போது ஜாதிப் பெயரை வெளிப்படையாக உபயோகித்த காலம். அதனால்தான் நான் அதை குறிப்பிடுகிறேன். சுந்தரமூர்த்தி வாத்தியார் ஒரு சூட்டும் பேண்டும் அணிந்து கட்டை குரலில் கணீரென்று பேசுவார். அவர் பிரம்பை உபயோகிக்க தயங்கமாட்டார். தினசரி மூணு நாலு பேராவது அடி வாங்குவார்கள்!. ஒரு பையனை அவர் பிரம்படி பிளந்து கட்டிய பின்பு, அவன் ஐயோ அப்பா ஐயோ அம்மா என அலறி, ' இருங்க சார்.. நான் போயி அம்மாவை இட்டுட்டு வரேன் சார்' என்று வகுப்பை விட்டு ஓடி விட்டான். கால் மணி நேரம் கழித்து மகனை தர தரவென்று இழுத்துக் கொண்டு தாய் குலம் வகுப்பில் தோன்றியது.

அதைப் பார்த்து, குரலை கனைத்துக் கொண்டு சுந்தரமூர்த்தி சார் போருக்கு தயாரானார். வகுப்பில் நிசப்தம் நிலவியது.

"வாத்தியாரைய்யா, இவனை அடிச்சியாமே (எங்கள் ஊர் தமிழில் எல்லோருக்கும் ஒருமைதான்)... நல்ல வேலை செஞ்ச ஐயா. இந்த தறுதலை வூட்ல சொன்னத கேக்கறதே இல்லீங்க. இவன் கண்ணு ரெண்ட மட்டும் உட்டுபுட்டு நல்லா அடிங்க ஐயா, புத்தி வருதா கழுதைக்கு பார்க்கலாம்," என்ற தாய் குலம் அவன் காதைத் திருகி, திகைத்து நின்ற வாத்தியாரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறியது.

பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த பையனைப் பார்த்து சுந்தர மூர்த்தி சாரே பரிதாபப்பட்டிருக்க வேண்டும். "போய் உக்காந்து ஒழுங்கா படி" என்று அவர் சொல்ல தலைகுனிந்து கண்ணில் நீர் வடிய மார்பு ஏக்கத்தில் விம்ம நின்ற பையனை பார்த்து வகுப்பே ஆதங்கப் பட்டது. தற்போதைய தாய்மார்கள் பிரம்படி கொடுத்த வாத்தியார் மீது எஃப். ஐ. ஆர். பதிவு செய்திருப்பார்கள்

தமிழ் வகுப்பை முத்து சு மாணிக்க வாசக முதலியாரும் தமிழ் இலக்கணத்தை ராஜகோபால் நாயுடுவும் எடுத்தார்கள். இருவரும் வகுப்பிலே கவிதை எழுதும் அளவு தமிழில் திளைத்தவர்கள். ராஜகோபால் சார் திருக்குறளின் இரண்டு வரிகளை ஒரு வரியிலேயே உள்ளடக்கி எழுதியது நினைவில் நிற்கிறது. "கற்பவை கற்க, கற்ற பின் நிற்க" அவர் ஒரு குறளை குறுக்கிச் சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது. அவர் ளகர லகர உச்சரிப்பை பல மாணவர்களுக்கு திருத்தினார். 'ல' உபயோகிக்க நாக்கு மேல் பல்லை தொடணும். 'ள' உபயோகிக்க நாக்கை உள்ள முடிச்சு மேலண்ணத்தில தொடு தம்பி, என்ற அவர் போதனை, டி. வி. யி‌ல் தடுமாறும் செய்தியாளர் பலருக்கு மிகவும் உதவியாய் இருந்திருக்கும்.

முத்து. சு. கம்பராமாயணத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். கவனக சக்தி உள்ளவர். கவிதை எழுதுவதற்கான வெண்பா இலக்கணத்தை அவர் சொல்லித்தர நானும் வெண்பா எழுத முயற்சித்தேன். அவர் எனது தாத்தாவின் நண்பர். (பிற்காலத்தில் காஞ்சி ஆதீன மடாதிபதியாக மாறியவர்.) அதுதானோ என்னவோ என் பள்ளிப் படிப்பின் கடைசி நாளன்று என் பேரில் ஒரு வெண்பா எழுதி என் கையில் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அது முழுமையாக நினைவில் இல்லை, "ராமனென ஓங்கும் ரமணி ஹரிஹரனை..." என்று துவங்கி "... ஒத்தார் எவரோ உளர்" என்று முடிந்த செய்யுள் வரிகள் ஞாபகம் இருக்கின்றன. எந்த விதமான சிறப்பு அம்சமும் இல்லாத மாணவனான என்னை அவர் பாராட்டி எழுதியது வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் பெரியாரும் அண்ணாவும் இளைஞர்களுக்கு இடையே திராவிட இயக்கத்தைப் பரப்பி வந்தனர். ஞாயிறன்று சில மாணவர்கள் திராவிடர் கழகம் நடத்திய மேடைப்பேச்சு பயிற்சியில் பங்கேற்று வந்தனர். அவர்களில் எனது நண்பன் ஜெகதீசன் நல்ல பேச்சாளி ஆனான். பிற்காலத்தில், வாழ்க்கை திசைமாறி அவனது அரசியல் பேச்சுகாணாமல் போயிற்று.

சில ஆசிரியர்கள் வகுப்பில் பாடத்துடன் நாத்திக வாதம் பேசி வந்தனர். முக்கியமாக ராஜலிங்கம் வாத்தியார் நாத்திக வாதம் பேசுவதில் கைதேர்ந்தவர். அவர் தனது மகன்களுக்கு பானுகோபன், சலந்திரன் என்று அசுரர் பெயரிட்டு மகிழ்ந்தவர்.

ஜபனேஸ் சார் கிறிஸ்தவர். இருந்தாலும் மதங்கள் எல்லாம் பொய் பித்தலாட்டம் என்று வகுப்பில் பேசும் நாத்திகவாதி. அவர் மகனை நாய் கடிக்க, கவனக்குறைவாக இருந்து அவனுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி அளிக்காததால் இறந்து விட்டான். அதன்பிறகு வகுப்புக்கு வந்த ஜபனேஸ் சார், தனது மகன் இறந்தது கடவுள் தனக்கு அளித்த தண்டனை என்று பைபிளில் மேற்கோள் காட்டிப் பேசியது எங்கள் உள்ளத்தை தொட்டது.

நான் படித்த பள்ளி காணாமல் போய்விட்டது. இப்போது அவதரித்திருக்கும் அரசுப் பள்ளியில் அதை நான் தேடுவது மடத்தனம் என்பதை நான் திரும்பி வரும்போது உணர்ந்தேன்.

(கர்னல் ஆர்.ஹரிஹரன், ஓய்வு பெற்ற ராணுவ நுண்ணறிவுத் துறை அதிகாரி. இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் விவகாரங்கள் பற்றி தொடர்ந்து எழுதிவருகிறார்)

logo
Andhimazhai
www.andhimazhai.com