முதல் புத்தகம்!

Published on

முதல் புத்தகத்தை அச்சில் பார்ப்பதில் ஒரு தனி சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் தங்கள் முதல் நூலை வெளியிட்டிருக்கும் சில எழுத்தாளர்களிடம் பேசியதிலிருந்து... 

வாசுகி பாஸ்கர்
வாசுகி பாஸ்கர்

வாசுகி பாஸ்கர், 35,

மற்றமையை உற்றமையாக்கிட (கட்டுரைத் தொகுப்பு)

யாருய்யா அந்த வாசுகி பாஸ்கர்? அவரது முகத்தைப் பார்க்கணும் என்று ஆவலாகப் பலர் இந்த நூல் வெளியீட்டு விழா அன்று தேடிவந்திருந்தார்கள். கடந்த ஓராண்டாக முகத்தை வெளிக்காட்டா மல் முகநூலில் மிக சுறுசுறுப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைப் பற்றி ஓங்கி குரல் ஒலித்து வருபவர் இவர்.

காங்கிரஸ் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும்கூட திராவிட இயக்கச் சிந்தனையாளர்களே பாராட்டும் அளவுக்கு மிகவும் நறுக்கென்று எழுதக்கூடிய பாஸ்கர் சென்னையில் ஓர் பெருநிறுவனத்தில் பணியாற்றி தற்போது விலகி இருக்கிறார். ‘‘ இந்த நூலில் எழுதி இருக்கும் கட்டுரைகள் நூலுக்காகவே தனியாக எழுதப்பட்டவை. நான் வழக்கமாக முகநூலில் ஒடுக்கட்ட சமூகங்கள், பெண்கள், திருநங்கையர் பற்றி எழுதும் விவரங்களை மேலும் தரவுகள் சேர்த்து எழுதி இருக்கிறேன். முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்களுக்கு உதவிகரமாக இவை இருக்கும்'' என்கிறார். நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் சுறுசுறுப்பாக விற்பனையான நூல்களில் இவருடையதும் ஒன்று. 

ராஜசங்கீதன்
ராஜசங்கீதன்

ராஜசங்கீதன், 34,

சொக்கட்டான் தேசம், (கட்டுரைத் தொகுப்பு) 

முகநூலில் கடந்த சில ஆண்டுகளாக எழுதிய பதிவுகளைச் செப்பனிட்டு தன் முதல் நூலாகக் கொண்டுவந்திருக்கிறார் இவர். புத்தகக் கண்காட்சியில் முக நூல் நண்பர்கள் போட்டிபோட்டு வாங்கியதில் முதல் பதிப்பு விற்பனையாகி அடுத்த பதிப்பே கொண்டுவரவேண்டி இருந்ததாகச் சொல்கிறார். ‘‘ அப்பா பத்திரிகையாளர் என்பதால் எப்போதும் வீட்டில் சமூகம் அரசியல் கலை பற்றிய பேச்சுகள்தான். எனவே சின்னவயதிலிருந்தே எழுத்து மீது  ஈடுபாடு இருந்தது.  தொடர்ந்து எழுதி என் தந்தையிடம் காண்பித்து அவரது கறாரான விமர்சனத்தை எதிர்கொள்வேன். முகநூல் வந்தபின்னர் ஆரம்பத்தில் ஒரு சில வரிகள் எழுதினேன். பின்னர் 90களுக்குப் பின் உலகமயமாக்கலின் விளைவாக பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் காதல் குடும்பம் போன்றவற்றில் உருவான சிக்கல்களைப் பற்றியும் எழுதினேன். ஜல்லிக்கட்டு பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்தபோது நிறைய பதிவுகள் செய்தேன். நம்மை கோபமாகவே வைத்திருக்கும் அளவுக்கு இருக்கும் நம் தேசத்தின் அரசியல் என்னை நிறைய எழுதச் செய்தது. நம் சமகால பிரச்னைகளைப் பற்றி எதிர்காலத்துக்கும் நூல் வடிவில் கடத்தவேண்டும் என்று நினைத்தது தான் இந்த நூல் உருவாகக் காரணம்'' என்கிறார் ராஜசங்கீதன்.

தமிழ்ப்பிரபா
தமிழ்ப்பிரபா

தமிழ்ப்பிரபா, 30,

பேட்டை, (நாவல்)

தற்போது பத்திரிகையாளராகப் பணிபுரியும் தமிழ்ப்பிரபா ஐ.டி.  துறையில் பணிபுரிந்தவர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்துவளர்ந்தவர். சமூக வலைத்தளங்கள் அறிமுகம் ஆனபோது அதில் ஏராளமாக எழுதத் தொடங்கியவர். இலக்கியவாசிப்பில் இருந்த ஆர்வம் எழுத்தாளர்களுடனும் நல்ல எழுத்துக்களுடனும் அறிமுகம் தந்தது. சொந்த மண்ணான சென்னையைப் பற்றி எழுதிய பிற இலக்கியப் படைப்புகளை வாசித்தபோது அதனுடன் தன்னைப் பொருத்தமுடியாமல் இருப்பதை உணர்ந்ததாகச் சொல்கிறார். ‘‘ கூவக்கரையிலும் சேரிகளிலும் வசிக்கும் மக்களைப் பற்றிய சித்தரிப்புகள் சரியாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இந்த நிலையில்தான் ஒரு சம்பவத்தை முன்வைத்து என் நாவலை எழுதத்தொடங்கினேன். அதை எழுதுகையில்தான் எனக்கு மற்றவர்கள் இதன் பதிவில் எங்கே வேறுபடுகிறார்கள் என்று புரிய ஆரம்பித்தது. நாவல் எழுதிமுடித்த பின்னர் நண்பர் கிருஷ்ணபிரபு மூலமாக காலச்சுவடு பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தேன். தொடர்ந்து இரண்டாண்டு காலம் அவர்களுடன் மேற்கொண்ட பயணம் எனக்கும் உதவிகரமாக இருந்தது. அதன் பின்னர் வெளியான பேட்டை நாவலுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு சிறப்பாக உள்ளது,'' என்கிறார் தமிழ்ப்பிரபா. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இளைஞரான இவரது பேட்டை நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றது பலருக்கு ஆச்சர்யம்! நம்பிக்கையூட்டும் படைப்பாளியாக முத்திரை பதித்துள்ளார்!

சிவபாலன்
சிவபாலன்

சிவபாலன் இளங்கோவன், 36

மீட்கப்படவேண்டிய தேவசேனாக்கள், (சிறுகதைத் தொகுப்பு)

மனநல மருத்துவரான சிவபாலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் சமூகத்துடன் கொண்டிருக்கும் உறவுச்சிக்கல்களை விவரிக்கும் சிறுகதைகள் இவை. கடந்த ஆண்டு பல்வேறு இதழ்களில் வெளியானவை இப்போது தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. ‘‘திருச்சி மாவட்டம் வலையப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவன் நான். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்துவிட்டு சென்னை ஸ்டான்லியில் மனநல மேற்படிப்பு படித்தேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு வாசிப்புப் பழக்கம் உண்டு. புதுமைபித்தன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் என வாசிப்பேன். மனநல மேற்படிப்பு முடித்தபின் நான் பார்த்த பல நிகழ்வுகளில் ஒரு சிறுகதைக்கான கூறுகள் அடங்கி இருப்பதைக் கண்டேன். அவற்றையே கதைகளாக ஆக்கினேன். நான் பணிபுரியும் துறை சார்ந்தவையே அவை. வாசிப்பவர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு இப்போது முதல் நூலாக இந்த சிறுகதைத் தொகுப்பு வெளிவரும் அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது'' என்கிற சிவபாலன் மனநலம் தொடர்பாக தொடர்ந்து கட்டுரைகளும் எழுதிவருகிறார்.

அருணா ராஜ்
அருணா ராஜ்

அருணா ராஜ், 42,

கருப்பி, (சிறுகதைத் தொகுப்பு)

பல்மருத்துவப் பேராசிரியரான அருணா ராஜ், எழுத ஆரம்பித்து சில ஆண்டுகள்தான் ஆகிறது. சமூக ஊடகங்களிலும் தன்னுடைய வலைப்பூவிலும் எழுதிக்கொண்டிருந்தார். தன் முதல் சிறுகதையை அவர் தன் வலைப்பூவில்தான் வெளியிட்டார். அவரது சிறுகதை ஒன்று பிரபல நாளிதழின் சிறுகதைப் போட்டியிலும் வென்றுள்ளது. ‘‘தமிழில் நிறைய படிக்கவும் எழுதவும் ஆரம்பித்தது ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்புதான். இப்போதும் நிறைய தமிழில் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். என் கதைகளை கருப்பி என்ற தலைப்பில் தொகுப்பாக கடந்த ஆண்டு நவம்பரில் நானே வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்ததும் வாசகசாலை பதிப்பகத்தில் கேட்டு மீண்டும் வெளியிட்டனர். அதற்காக வெளியீட்டு விழாவும் நடந்து எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட்டார். மனித உறவுகள் குறித்துதான் என் கதைகள் பேசுகின்றன'' என்கிற அருணா கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர். சென்னை அரசு பல்மருத்துவக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

வாசு முருகவேல்
வாசு முருகவேல்

வாசு முருகவேல், 33,

ஜெப்னா பேக்கரி, (நாவல்)

இலங்கையில் நைனாத் தீவில் பிறந்த வாசு முருகவேலின் முதல் நாவல் ஜெப்னா பேக்கரி. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய வரலாற்றுச் சம்பவம்  குறித்து இந்த நாவல் பேசுகிறது. ‘‘புலிகளுக்கு எதிரான கரும்புள்ளியாக இந்த சம்பவம் எல்லா இடங்களிலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால் எல்லா கோணங்களிலும் இந்த நிகழ்வைப் பார்க்கவேண்டியது அவசியமாகிறது. ஒரு சில உண்மை களையும் முன்வைத்து அதைப் பரிசீலனை செய்யவேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகள், சில ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகள் ஆகியவையும் உற்றுநோக்க வேண்டியவையாக இருந்தன. இதையே என் நாவலில் சொல்லியிருக்கிறேன்,'' என்கிறார் வாசு முருகவேல். தமிழகத்துக்கு சிறுவயதில் புலம்பெயர்ந்து வந்து பதினோராம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடரமுடியாமல் போன இவர், பல்வேறு வேலைகளைச் செய்த வாழ்வனுபவம் கொண்டவர். இவரது முதல் சிறுகதை பிரான்சில் இருந்து வெளிவரும் முகடு என்ற இதழில் வெளியானது. ‘‘ அப்படி ஒரு கதை வெளியானதே யாருக்கும் தெரியாது'' என்று கூறும் வாசு முருகவேல், சமகால நிகழ்வுகளுக்கு எதிர் வினைகளை முகநூலில் பதிவு செய்துவருகிறவர்.

எம்.கே. மணி
எம்.கே. மணி

எம்.கே. மணி 55,

மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் (சிறுகதைத் தொகுப்பு)

‘‘நான் பத்தாம் வகுப்புகூட பெயில் ஆகிட்டேன்,'' என்று இயல்பாகச் சொல்லும் மணி.எம்.கே. மணி தமிழ் சினிமாவில் இப்போது சுறுசுறுப்பாக திரைக்கதைப்பிரிவில் இயங்குகிறவர். சினிமா ஆர்வத்தில் படிப்பை விட்டாலும் வாசிப்பையும் எழுத்தையும் அவர் விடவில்லை. அம்புலிமாமாவில் ஆரம்பித்து நவீன இலக்கியம் வரை வந்திருக்கும் இவர் சிறந்த வாசகர். சமூக ஊடகத்தில் ஆர்வமுடன் இயங்குகிறவர். அவரது நறுக்கென்ற பதிவுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.  ‘‘ சுமார் ஐம்பது சிறுகதைகள் எழுதி வெச்சிருக்கேன். ஆனால் எதையும் எங்கேயும் பிரசுரிக்கவில்லை. அதிலிருந்து பாலியல் பிரதிபலிப்புகளை அடிப்படையாகக் கொண்ட 17 கதைகளை இப்போது தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன். எதிர்வினைகள் மகிழ்ச்சி யூட்டுவதாக உள்ளன. அடுத் ததாக சினிமா குறித்த ஒரு நூலும் கவிதை நூல் ஒன்றும்கூட வெளியிடும் திட்டம் இருக்கிறது,'' என்கிறார்.

பிப்ரவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com