மரத்தில் மறைந்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை
Published on

நல்ல நாவல்கள் என்பது ஒன்று, திரைப்படமாவதற்குத் தோதான நாவல் என்பது வேறொன்று. பா.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, சுந்தரராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’, நகுலனின் ‘நினைவுப் பாதை’ போன்ற நாவல்களைத் திரைப்படமாக்குவது என்பது ஒன்றில் இயலாத காரியமாக இருக்கும் அல்லது மாபெரும் சவாலாக இருக்கும். ஆனால் அவை நல்ல நாவல்கள். சினிமா செய்வதற்குத் தோதான சில நாவல்கள் திரைப்படம் ஆனபிறகு இங்கே சில முணுமுணுப்புகள் கேட்கும். நாவலைச் சிதைத்து விட்டார்கள், நாவலை முழுமையாகத் திரைப்படத்தில் கொண்டுவர இயலவில்லை என்றெல்லாம். என்னைக்கேட்டால், நல்ல சினிமாவாக ஆவதற்கு ஒரு நல்ல சிறுகதையே போதும்.

நாவல்கள் சினிமா ஆனதற்கு நம்மிடம் சில எடுத்துக் காட்டுகள் உண்டு. கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’, தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’, நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’, ஜெயகாந்தனின் ‘ உன்னைப் போல் ஒருவன்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘யாருக்காக அழுதான்’ முதலியன. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ என்ற நாவல் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்று திரைப்படமாயிற்று. கமலஹாசன், நாசர் நடித்த ‘குருதிப்புனல்’ வேறு. மேலும் ‘மலைக்கள்ளன்’, ‘மரகதம்’, ‘திகம்பர சாமியார்’ எனும் திரைப்படங்களின் மூலம் நாவல் என்பார்கள். பிற மொழிகளிலும் நாவல்கள் திரைப்படம் ஆகியுள்ளன.

மலையாளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய ‘செம்மீன்’ அதே பெயரிலேயே திரைப்படமாக வந்தது. ‘ஓடையில் நின்னும்’, ‘மூலதனம்’, ‘நிர்மால்யம்’ போன்ற திரைப்படங்கள் நாவல் அல்லது சிறுகதை சார்ந்தது. தெலுங்கில் ‘ஒக்க ஊரி கதா’ என்று மிருணால் சென் இயக்கிய திரைப்படம் முன்ஷி பிரேம் சந்த் எழுதிய ‘கஃபான்’ எனும் இந்தி நாவலை அடிப்படையாகக் கொண்டது. கன்னடத்தின் ‘சோமன துடி’, ‘சம்ஸ்காரா’, ‘வம்ச விருக்‌ஷா’ பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். வங்காளத்தின் ‘பதேர் பாஞ்சாலி’, முக்கியமான எடுத்துக்காட்டு. எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘Old Man And The Sea’ அதே பெயரில் திரைப்படமாயிற்று. Zorba The Greak -ம்  அவ்வாறே என்று தான் அறிகிறேன். வில்லியம் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற  நாடகங்கள் Julius Caesor, Magbeth, Hamlet, Antony And Cleopatra, டாவின்சி கோட். மேலும் சில எடுத்துக்காட்டுகள். அடிப்படையாக அறிக ஒன்று.  நாவல் என்பது ஒரு ஊடகம். சினிமா என்பது மற்றோர் கலை ஊடகம். சிற்பம் என்பதொன்று, சிற்பத்தின் புகைப்படம் என்பது மற்றொன்று. எனது ‘தலைகீழ் விகிதங்கள்’ தங்கர் பச்சானால் ‘சொல்ல மறந்த கதை’யாக ஆக்கப்பட்டபின் பலர் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், நாவல் வாசிப்பில் தந்த நிறைவைத் திரைப்படம் தரவில்லையே என்று. நான் அவர்களிடம் சொன்னது - நாவல் பிரதியைக் கையில் வைத்துக்கொண்டு, அருள் கூர்ந்து சினிமாவைப் பார்க்காதீர்கள் என்று. நாவலின் மொழி வேறு, சினிமாவின் மொழி வேறு. நாவலாசிரியரின் படைப்புத் திறனும், சினிமா இயக்குனரின் படைத்திறனும் ஒப்பிடத்தக்கதன்று.

சாக்சஃபோன் என்பது முற்றிலுமாக ஐரோப்பிய இசைக் கருவி. அதில் அப்படியே கர்நாடக இசையை, இந்துஸ்தானி இசையை வாசிப்பது என்பது இயலாது. இவ்விசை மரபுகளுக்கென்று சில தனித்தன்மைகள் உண்டு. அவை சாக்சஃபோன்களுக்குள் அடங்கா. கதிரி கோபால் நாத் என்ற கலைஞன் தனது சாக்சஃபோனை இந்திய இசை மரபுக்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்து வடிவமைத்த பிறகே திறமையுடன் பயன்படுத்துகிறார். கென்னி ஜி எனும் சாகசக் கலைஞனின் சாக்சஃபோனில் கதிரி கோபால் நாத் அப்படியே ‘ எந்தரோ மகாநு பாவலு’ இசைக்க இயலாது.

எந்த நாவலும் மாறுதல்களுக்கு ஆட்பட்டே சினிமா ஆகும். ஒன்று வரிவடிவ வாசிப்பு அனுபவம் எனில், பிறது காட்சி வடிவ அனுபவம். இரண்டையும் புரிந்து கொண்டே அனுபவிக்கிறேன், ஒப்பிட்டு அல்ல. நாவலைப் படமாக்கும் போது சினிமாக் குழுவினரின் படைப்புத்திறன் சார்ந்த குறை பாடுகள் என்பது வேறு சமாச்சாரம். ஒன்றில் இருந்து மற்றது பிறந்தது என்பது உண்மையாக இருக்கலாம், என்றால் இருவேறு கலைகளை அவ்விதம் ஒப்பிடுவது நியாயமானதல்ல. இரண்டுமே கனிதான், இனிப்புதான் என்றாலும் மாம்பழமும் பலாப்பழமும் ஒப்பிடப்படுவதில்லை.

காதலும் சண்டையும் இல்லாமல் அபூர்வமாகத் தமிழில் வரும் நல்ல சினிமாக்கள் மிகுந்த தெம்பூட்டுகின்றன. நமக்கான உன்னத சினிமாக்களின் காலம் கனிந்து வருகிறதென்றே தோன்றுகிறது. அவர்களுக்கு நமது ஆதரவும் வாழ்த்தும். மந்தன், ஆதே அதுரே, அக்ரீத், சவாஸ், லகான், தலாஷ், Ship Of Theseus, இங்கிலிஷ் விங்கிலிஷ், பீப்லி லைவ் போன்ற படங்கள் இங்கும் சாத்தியம் தான். எதிலும் நுண் அரசியல் காணும் திறனாய்வு இனம் ஒன்று உண்டு இங்கே. அவர்களைப் பொருட்படுத்தாமலேயே நானிதைக் கூறுகிறேன்.

செல்லமுத்து குப்புசாமியின் ‘குருத்தோலை’ எனும் நாவல் வாசித்தேன் அண்மையில். என் மதிப்பீட்டில் திரைப்படமாக எடுக்க, நல்ல நாவல் அது. பாப்லோ அறிவுக்குயில் எழுதிய ‘தமுரு’ என்றொரு நாவல். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு இனத்தின் இளஞ்சிறார்கள் பற்றியது. திறமைசாலிகள் கையாண்டால் அஃதோர் நல்ல திரைப்படம் ஆகும். கிராமத்து சிறு தெய்வ வழிபாடுகளும் மனிதர்களின் மனதுள் இருக்கும் வன்மங்களும் எனப் பேசுவது ஏக்நாத்தின் ‘ஆங்காரம்’!  ஆண் பெண் உறவின் பாலியல் நெருக்கடிகளைப் பேசும் வா.மு.கோமுவின் ‘சயனம்’ மற்றுமோர் உகந்த நாவல். மேலும் விநாயகமுருகனின் ‘சென்னைக்கு மிக அருகில்’ நாவலையும் சொல்வேன். சென்னையின் இன்றைய மழை வெள்ளத் துயரங்களின் பின்னணியை அந்த நாவல் ஆய்கிறது.

தமிழ் தீவிர இலக்கிய இதழ்களில், வெளியான சினிமாக்களைப் பிரித்து வேய்ந்து நீண்ட நீண்ட கட்டுரைகள் எழுதும் சினிமா அறிஞர்கள் எவரும் கேட்கக் கூடும் இந்த நாவல்களில் எங்கே சினிமா இருக்கிறது என.

ஜெயமோகன் அடிக்கடி சொல்வார், சிற்பத்தை நக்கிப் பார்த்து அதன் கலைத்தன்மையை தீர்மானிக்க இயலாது என்று. ஒரு நாவலினுள் எங்கே சினிமா இருக்கிறது, அதை எவ்விதம் சினிமா ஆக்குவது என்பதெல்லாம் இயக்குநர்களின் சவால். எழுதுகிறவனுக்கு அந்தக்கவலைகள் கிடையாது. ‘கீஞுஞீ கூஞுச்’ யும்’, ‘இடலாக்குடி ராசாவும்’ இணைந்து எப்படிப் ‘பரதேசி’ ஆனது என்பதற்கு இயக்குநர் பாலாவின் பார்வைதான் காரணம்.

கண்மணி குணசேகரின் நாவல் ஒன்று, ‘கோரை’ என்று. கோரை என்பதோர் தாவரம். ஆனால் விவசாயத்தில் அஃதோர் களை. களை எனில் களையப்படவேண்டியது. கோரை வயலுக்கு வந்து சேர்ந்த விதம், அதைக் களைய விவசாயி படும்பாடு, இதுதான் நாவல். அதில் காமம், காதல், மோகம், வஞ்சம், கலவி என ஏதுமில்லை. 3கோடி செலவு செய்து 30கோடி ஈட்ட நினைப்பவர் பெரும்பான்மையராகக் கிடக்கும் சினிமா வர்த்தக உலகில், நம் பேச்சு வெற்றுப் பேச்சாக இருக்கக் கூடும்.

‘காவிரி ஆறு கஞ்சியாகவே பாய்ந்தாலும் நாய் நக்கித் தான் குடிக்கும்’ என்ற பழமொழி இப்போது ஏன் எமக்கு நினைவுக்கு வருகிறது? எனினும் கற்பாறையில் சிற்பம் தேர்ந்தெடுப்பவன் தானே கலைஞன்.

ஜனவரி, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com