மடத்துக் கதைகள் என்று இருப்பதாகச்சொன்னீர்களே,
ஆமா, சொன்னேன், மடம் மட்டுமில்லை, ஆயுள் தண்டனை பெற்று அங்கேயே பொழுதைக் கழிக்க நேரும் ‘‘ஜெயில் பறவை''யான மனிதர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்ட ஜெயில் கதைகள்,
இளவட்டங்களான பிள்ளைகள் தங்கிப்படிக்கும் காலேஜ் ஹாஸ்டல்வாசிகள் தங்களுக்குள் சொல்லி ஆனந்தப்படும் பால்கதைகள், பிளேக் நோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு பயந்து ஊரையே காலி செய்துவிட்டு காடோ மலையோ போய் கூட்டமாக வசித்த காலத்தில் பொழுது நகர ஒருவருக்கொருவர் சொல்லி ரசிக்கும் கதைகள், இவைகளிலும் பால்கதைகள் உண்டு. பாயசம் இல்லாத சாப்பாடா என்பது போலத்தான் பால்கதைகள்.
வார்த்தைகளிலும் சொற்களிலும் ஆபாசம் இல்லாமல் சொல்லும் பால்கதைகளைச்சொல்வார்கள், சாகசமான கதைசொல்லிகள்.
உயிர்த்தலம் என்பதைத் ‘‘ தம்பி '' என்பார்கள் ‘‘திருமால் நாயுண்டு சுப்பாநாயுண்டு'' கதையில் தம்பிக்கு எத்தனை பெயர்கள்! ‘‘பால பண்டு'', வாழைப் பழம், திருகைக்கல்லின் கைப்பிடி, எலி, இப்படியெல்லாம் வரும் .
இலக்கணத்தில் ‘‘பலபெயர்கள் & ஒரே சொல்'' என்பது போல, உலகத்தில் உள்ள மொழிகளில் ‘‘ஒரு பெயர் & பலப்பல சொற்கள்'' அதிகம் உள்ள சொற்கள் பால்கதைகளில்தான்.
ஊர் மடங்கள் எல்லாம் ராத்திரியில் தூங்கவந்து பகலில் கலைந்து போய்விடத்தான், ஆனால் அங்கே பகலில் ஒரு உலகம், ராத்திரியில் ஒரு உலகம்.
தூங்க வந்தவனுக்கு சொப்பன ஸ்கலிதம் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாமல், சொப்பனம் இல்லை, சொப்பனம் இல்லாத ஸ்கலிதமும் இல்லை, இப்படித்தான் இவை பற்றிய பேச்சுக்கள் கதைகள் பிறக்கின்றன.
‘‘நுள்ளு நாயக்கன் கதைகள்'' என்பது சொல்லித்தீராத சிரிப்புக்கதைகள், உண்மை பாதி, நம்ப முடியாத கற்பனை மீதி . இப்போது நாம் சங்க காலத்து இலக்கியத்துக்கு போக வேண்டும். யார் பாடியது, எந்த புலவர் என்றெல்லாம் கேட்கக் கூடாது, விசயம் தான் நமக்கு முக்கியம், நீங்களும் கேள்விப் பட்டவைதான்.
பால் விளையாட்டுகளில் நகம் பதிப்பது என்று உண்டு. மறு நாள் அவள் குளிக்கும் போது வளர்ப்புத் தாய் கண்டு கொள்கிறாள். ‘‘மாலைப்பிறை போலத் தோணுதே, அது என்ன என்று விசாரிக்கிறாள்.
‘‘மாலைப் பிறை போலக் குறி தோணுதே'' என்று காவடிச் சிந்து பாடலிலும் வருகிறது.
‘‘விளையாடிய'' போதோ வேணுமென்றோ நகம் பட்டுவிட்டது என்று நம்புவது சிலருக்கு முடியாமல் இருக்கலாம்.
இப்போதைய கேள்வி, இது பெண்ணுக்கு மட்டும்தானா, ஆண்களுக்கு கிடையாதா? அப்படியானால் அது எந்த இடம்? கேட்டவர் கேட்டுவிட்டுப் போய் விட்டார், நமது கற்பனைக்கு விட்டுவிட்டு.
அங்கே செவிலித்தாயோ, வளர்ப்புத் தாயோ கேட்டாள், இங்கே ஆணிடம் கேட்டுத் தெரிந்து கொண்டது யார்?
அந்த காலத்தில் சர்வாங்கச் சவரம் என்பது கட்டாயம் உண்டு, அது முதன் முதலில் புதுமாப்பிள்ளைக்கு என்று தொடங்கும், பிறகு தடவைக்கு தடவை.
இப்போது நித்தப்படி என்றும் முகத்துக்கு மட்டும் என்று ஆகிவிட்டது. பார்பர் சாப் வந்ததால் சர்வாங்கமும் என்பது ஒழிந்தது.
முன்பெல்லாம் குளத்தங்கரை மர நிழலில் மறைப்பு தடுப்பு எதுவும் இல்லாமல் வெட்ட வெளியில் தான் சவரம் நடக்கும், அப்போது சவரக்காரன் கண்டுகொள்வான், ஆனால் கேட்க மாட்டான்;
செவிலித்தாய் போல கேலிக்காரர்கள் கண்டும் காணாதது போல இருப்பதுடன், ஜாடை மாடையாகப் பேச்சுவாக்கில் ஈரர்த்தங்களில் பிரஸ்தாபிப்பார்கள். ஒரு ராகம் பாடும் போது, இன்னொரு ராகத்தின் ஜாடையை காட்டுவது போல; தர்பார் ராகத்தில் நாயகி ராகம் வருவது போல!
இன்னொரு காட்சி:
மக்கள் கூடியுள்ள கல்யாணம் போன்ற கலகலப்பான நேரங்களில் ஒரு சிறுவன் வருகிறான். அவனைப் பார்த்ததும் வாயாட வேண்டும் போலத் தோன்றும், ஆசை வரும், பயலின் துருதுருப்பு அப்படி, கூப்பிட்டதும் வந்து விட மாட்டான், அவன் பார்ப்பதே ‘‘அடெ போய்யா'' என்பது போல இருக்கும்.
இன்னொருவர் ‘‘ஒங்கிட்ட எல்லாம் வர மாட்டான், என்னிட்ட வா ராசா'' என்று அவரை விட இவர் பாசமாக கூப்பிடுவார்.
‘‘அவம் யாரிட்டயும் வரமாட்டாம்; அங்கே போகாதெ, இங்கெ வா ராசா'' என்று இன்னொருவர் கூப்பிட, ‘‘ஒங்கிட்டெ ஒரு ரகசியம் கேக்கணுமே'' என்று ஒரு தாத்தா கூப்பிட்டு, ஒன்னு கேப்பேன் சொல்லுவயா என்று ரகசியமாகக் கூப்பிட்டு நீ ஒங்க அப்பாவை நுள்ளுனயா? என்பார்.
இவன் திகைத்து இல்லையே என்பது போல தலையை உலுக்க, ‘‘இல்ல இல்ல கட்டாயம் நுள்ளியிருக்க; நாம் பாத்தேனே, கண்ணாரப்பாத்தோம்'' என்பார்.
என்ன இப்படி சொல்றீக என்பது போல அவன் பார்க்க, ஒங்களுக்கு யாரு சொன்னா? என்று ஒருவர் ஏண்டு வர, அப்ப, நாம் சொல்வனா பொய்யி என்று சொல்ல, உங்களுக்கு யாரு சொன்னது என்று குட்டிப்பையன் சார்பாக ஒருவர் வற்புறுத்திக் கேட்க, அய்னு தாம் சொன்னான் என்று அந்த தாத்தா சொன்னதும், பலத்த சிரிப்பொலி எழுந்தது.
இப்போது கூட்டம் ரெண்டாகப் பிரிந்து கொள்ளும். அவன் எப்படி நுள்ள முடியும் என்று ஒரு பிரிவு கேட்க,
அவன் இப்பொ நுள்ளல...
பிறகெப்போ?
இவன் அவனுடைய அம்மா வயித்துக்குள்ள இருக்கும் போது!
அட பாவிப் பயலே அப்படி செய்யலாமாடே; செய்யலாமா; ஒன் அப்பன் பாவமில்லையா அவனுக்கு இன்னுமந்த சுளித்தனம் போகல பாருங்க என்று ஒருவர் சொல்ல, அந்த சிறு பையன், இவங்க எல்லாரும் சேர்ந்து நம்மை எதுவோ கோட்டாதான் பன்னுகிறாங்கள் என்று அங்கிருந்து, அவர்களிடமிருந்து தப்பி ஓட்டம் பிடிப்பான்.
இந்த இவள்...! இது எழுத்தாளர் கிரா தன் 92 வயதில் தற்போது சுடச்சுட எழுதி முடித்திருக்கும் நாவலின் பெயர். அவரது முத்துமுத்தான கையெழுத்தில் இந்த நாவலைக் கண்டதும், அந்திமழை வாசகர்களுக்காக அதிலிருந்து ஒரு சிறுபகுதியைப் பெற்று நாவல் முன்னோட்டம் பகுதியில் வெளியிடுகிறோம். வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழ்ந்து கொண்டிருப்பவரும் தமிழ் எழுத்துலகின் பிதாமகருமான கிராவின் எழுத்து ஊற்று வற்றாத ஜீவநதியாய் சுரந்துகொண்டே இருக்கிறது. அதில் நனையும் பேறு பெற்றவர்களாக நாம் இருக்கிறோம்! உலகில் 92 வயதில் நாவல் எழுதி இருக்கும் எழுத்தாளர் யாரேனும் உண்டா?
புகைப்படம், நாவல் பிரதி உதவி: புதுவை இளவேனில்.
செப்டெம்பர், 2018.