ஒரு நாவலைப் படமாக்கும் போது நாவலின் ஊடாடும் மௌனம் கலைந்து விடுகிறது. வாசக மனதில் கதாபாத்திரங்கள் பற்றி உருவாக்கி வைத்துள்ள பிம்பம் உருமாறிப்போய்விடுகிறது. வெற்றிகரமான திரைப்படங்களாக உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் கூட நாவல் தந்த முழுமையான அனுபவத்தை பெறமுடியாது என்பதே உண்மை.
ஒரு நாவல் பெரிய வெற்றியை அடைந்தவுடன் அதை வணிக காரணங்களுக்காக திரைப்படம் ஆக்குகிறார்கள் என்பதே நிஜம், மற்றபடி இவ்வளவு உயர்வான இலக்கியப்படைப்பை திரைப்படம் எனும் கலையின் வழியே பல லட்சம் பேரிடம் கொண்டு சென்று இலக்கிய ரசனையை மேம்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் எவரும் நினைப்பதில்லை. நாவல்கள் திரைப்படமாக்கப்படுவது வர்த்தக காரணங்களால் மட்டுமே.
ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் பெருமளவு படங்கள் நாவல்களே, ஆனால் அவை இலக்கியப்பிரதிகள் இல்லை, வணிக கேளிக்கை நாவல்கள். இதற்காகவே நாவல்கள் எழுதும் தொழில்முறை எழுத்தாளர்கள் நிறைய இருக்கிறார்கள். இலக்கியப்படைப்புகளை திரைப்படமாக்குவது சிறந்த இயக்குனர்களின் விருப்பத்தின் காரணமாகவே அமைகிறது. உலகப்புகழ்பெற்ற இயக்குனர்கள் பலரும் முக்கிய இலக்கியப்படைப்புகளை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
அகிரா குரசோவா தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட்டை படமாக்கியிருக்கிறார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை படமாக்கியிருக்கிறார். ஸ்பீல்பெர்க், தி கலர் பர்பிள் என்ற நாவலை படமாக்கியிருக்கிறார். மார்டின் ஸ்கார்சசி, லாஸ்ட் டெம்டேஷன் ஆப் கிறிஸ்ட் என்ற நாவலை படமாக்கியிருக்கிறார்.
டால்ஸ்டாயின் முக்கிய நாவல்கள் அத்தனையும் திரைப்படமாக வெளியாகியுள்ளன. விக்டர் ஹியூகோ, பிளாபெர்ட், டிக்கன்ஸ் துவங்கி குந்தர் கிராஸ், மிலன் குந்தேரா வரை பல்வேறு முக்கிய எழுத்தாளர்களின் நாவல்கள் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தப்படங்கள் நாவலின் மையத்தை எடுத்துக் கொண்டு நிறைய மாற்றங்களுடன் உருவாக்கப் பட்டவை. டேவிட் லீன் இயக்கிய டாக்டர் ஷிவாகோ படம் நாவலை விட சிறப்பாக இருந்தது. ஆனால் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட டால்ஸ்டாயின் போரும் வாழ்வும், தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் படங்கள் பெரிய ஏமாற்றத்தையே தந்தன. ஹெமிங்வேயின் நாவல்கள் படமாக்கப்பட்ட போதும் இதே ஏமாற்றமே மிஞ்சியது.
தாமஸ் ஹார்டியின் நாவல்களே வெற்றிகரமான திரைப்படங்களாக உருவாக்கபட்டவை. நாவல் தந்த அனுபவத்தை விடவும் பொலான்ஸ்கியின் படம் தந்த அனுபவம் மேம்பட்டது.
தமிழில் வெற்றிகரமாக ஒடிய தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையாக வந்து நாவலாக வெளியானது, அந்த நாவலின் முதற்பகுதி மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. நாவலை விடவும் படம் செறிவானது. ஆனால் சுஜாதாவின் கரையெல்லாம் செண்கப்பூ நாவல் படமாக்கப்பட்ட போது நாவலின் உயிரோட்டம் சிதைந்து போனது.
இயக்குனர் மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் உமாசந்திரன் நாவலின் மையக்கதையை மட்டுமே எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு.
சிறப்பாக அதை மகேந்திரன் உருவாக்கியிருந்தார். ஜெயகாந்தன் தனது நாவல்களை தானே திரைப்படமாக உருவாக்கினார்.
நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான மார்க்வெஸ் தனது தனிமையின் நூற்றாண்டுகள் நாவலை திரைப்படம் ஆக்குவதற்கான உரிமையை தர மறுத்துவிட்டார், காரணம் அது வாசக மனதில் உருவாக்கிய பிம்பத்தை தானே அழிக்கக்கூடாது எனக்கூறுகிறார்.
தாராசங்கரின் புகழ்பெற்ற நாவலான ஆரோக்கிய நிகேதனம், மராத்தியின் புகழ் பெற்ற பன்கர்வாடி நாவல், குஷ்வந்த் சிங்கின் டிரைன் டு பாகிஸ்தான், போன்றவை படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை எதுவும் நாவல் தந்த அனுபவத்தை திரையில் ஏற்படுத்தவில்லை.
சரத்சந்திரரின் தேவதாஸ் நாவலாகவும் சினிமாகவும் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இது போலவே தாகூரின் நாவல்களும் சிறந்த திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
தகழியின் செம்மீன் தந்த அனுபவத்தை ராமுகரியாத் தனது திரைப்படத்தில் செறிவாக தந்திருந்தார். அடூரின் மதிலுகளும் பஷீரின் நாவலை சிறப்பாக கையாண்டிருந்தது. இவை சிறந்த உதாரணங்கள். இது போலவே மலையாளத்தில் புகழ்பெற்ற பல நாவல்கள் வெற்றிகரமான திரைப்படங்களாக உருவாக்கபட்டுள்ளன, இன்றும் அந்த மரபு தொடர்கிறது.
தமிழில் வடுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் நாவல்கள் படமாக்கபட்டுள்ளன. சுஜாதா, சிவசங்கரி, புஷ்பா தங்கதுரை, இந்துமதி, ராஜேஷ்குமார், சுபா போன்றவர்களின் ஜனரஞ்சக நாவல்கள் படமாக்கப்பட்டுள்ளன. பொன்னீலன், நாஞ்சில்நாடன். ஜானகிராமன் என புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் நாவல்கள் படமாக்கப்பட்ட போது நாவல் தந்த அனுபவம் சினிமாவில் கிடைக்கவில்லை.
ஹாலிவுட்டில் ஒரு நாவலை படமாக்கும் முன்பு அதன் உரிமையை பெருந்தொகை கொடுத்து எழுத்தாளரிடமிருந்து வாங்குகிறார்கள். அதன் திரைக்கதை வடிவத்தை இன்னொரு எழுத்தாளர் எழுதுகிறார். அவருடன் இணைந்தோ, தனியாகவோ நாவலாசிரியர் ஒரு திரைக்கதை வடிவத்தை உருவாக்குகிறார். இரண்டையும் ஒன்று சேர்த்து அல்லது ஒட்டி வெட்டி மூன்றாவது திரைக்கதை வடிவத்தை உருவாக்குகிறார்கள். இந்த பணிக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகாலம் செலவாகிறது. அதன்பின்பு தான் படப்பிடிப்பு துவங்குகிறது.
மரியோ புஸோவின் காட்பாதரை திரைப்படமாக்க முயன்ற பிரான்சிஸ் போர்ட் கோபலோ அதன் ஒவ்வொரு வரியையும் தனியே வெட்டி எடுத்து ஒட்டி பெரிய ஆல்பம் ஒன்றை தயாரித்திருக்கிறார். எந்த வரி தேவை. அதை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் விரிவான குறிப்புகள் எழுதியிருக்கிறார். பின்பு அதை நாவலாசிரியர் உடன் இணைந்து திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார், அதனால் தான் காட்பாதர் இன்றும் நாவலாக வந்து திரைப்படமாக உருவாக்கபட்டத்தில் மிகச்சிறந்த படைப்பாக கருதப்படுகிறது தமிழில் திரைப்படமாக்குவதற்கு உகந்த படைப்புகளாக பத்து நாவல்களை நான் சிபாரிசு செய்கிறேன்.
தமிழில் இந்த நாவல்களை படமாக்க விரும்பும் இயக்குனர்களும் இது போல ஆழ்ந்த வாசிப்பு அனுபவமும், உரிய உரிமை பெறுவதும், இணைந்து திரைக்கதையை உருவாக்குவதுமாக செயல்பட்டால் இந்த நாவல்களை வெற்றிகரமான திரைப்படமாக உருவாக்கமுடியும்.
1) புயலிலே ஒரு தோணி- பா.சிங்காரம்
2) மானீ -ஹெப்சிபா ஜேசுநாதன்
3) வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
4) கதிரேசன் செட்டியாரின் காதல் -மா. கிருஷ்ணன்
5) என் பெயர் ராமசேஷன் -ஆதவன்
6) மானசரோவர் -அசோகமித்ரன்
7) கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்
8) வேள்வித்தீ -எம்.வி.வெங்கட்ராம்
9) குறத்தி முடுக்கு -ஜி.நாகராஜன்
10) நிமித்தம் -எஸ். ராமகிருஷ்ணன்
ஜனவரி, 2016.