"நான் ஒரு எளிமையான தோட்டக்காரன்!”

அவர்கள் அவர்களே!
தி.க.சிவசங்கரன்
தி.க.சிவசங்கரன்ஓவியம் : ஜீவா
Published on

”நான் ஒரு எளிமையான தோட்டக்காரன்!” அவருக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கிறேன், எதில் இருந்து தொடங்குவது என்ற குழப்பத்துடன்!

எனது உதடு அசைவதற்கு முன்னால் அவரே ஆக்ரோஷமாக ஆரம்பிக்கிறார். ‘‘முதலில் எனது பஞ்சசீலக் கொள்கையைச் சொல்லி விடுகிறேன்'' என்கிறார்.  

 ‘தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச் சூழலியம், மார்க்சியம் ... இந்த ஐந்தும் தான் என்னுடைய தத்துவப் பார்வை. இதை முதல்ல குறிச்சுக்கோங்க'' ... என்றவர், ‘இனி உங்களோட கேள்வியைக் கேளுங்க!'' என்றார். இதுதான் என்னுடைய கொள்கை என்று சொல்லிவிட்டு எழுதியவர், பேசியவர், விமர்சித்தவர், வாழ்ந்தவர், இயங்கியவர் எழுத்தாளர் தி.க.சிவசங்கரன்.

இப்படிச் சொன்னால் பெரியளவில் தெரியாது. அனைவருக்கும் அன்பாக அவர் தி.க.சி.!

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், அந்த வாரத்து ஆனந்த விகடனில் என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. விகடனுக்கு ஏராளமான வாசகர் கடிதங்கள் தினமும் வரும். அந்தக் கடிதங்களைப் படிக்கத் தவறமாட்டேன். மக்கள் கருத்து, வாசகர் உள்ளம் அறிவது மிகப் பெரிய பயிற்சி. அப்படித்தான் கட்டுக்கட்டான கடிதங்களில் ஓர் அஞ்சல் அட்டை என்னை அட்டையைப் போல ஒட்டிக் கொண்டது.

'அன்புள்ள ப.திருமாவேலனுக்கு ...' என்று தொடங்கி , 'அன்புள்ள தி.க.சி.' என்று முடிந்தது அந்தக் கடிதம். அன்று முதல் அவர் வாழ்க்கை முடியும் வரை எத்தனை கடிதங்கள்! எத்தனை சந்திப்புகள்! நெல்லையில் இருந்து வள்ளிநாயகம் பேசினால், அருகில் திகசி இருக்கிறார் என்று அர்த்தம். திகசி பேசுகிறார் என்றால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் ஒரு தபாலை அனுப்பி இருக்கிறார் என்று அறியலாம். உற்சாகம் ஊட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான். வார்த்தைகளில் ஹார்லிக்ஸும், விரல்களில் வைட்டமின் மாத்திரைகளுமாக வைத்திருந்து புதிதாக எழுத வருபவர்களை அள்ளி அணைத்துக் கொள்பவர். அதனாலேயே அவர் அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டார்.

புதிதாக கதை, கவிதை எழுதுபவர்களிடம், ‘திகசி போஸ்ட் கார்ட் போட்டிருப்பாரே?' என்று கிண்டலாகக் கேட்பார்கள். அந்தளவுக்கு திகசியின் போஸ்ட் கார்ட்டுகள் பிரபலம். இந்தக் கிண்டல்களை திகசியும் அறிவார். கேட்டால் சிரித்தபடியே, 'நான் ஏழை, என்னால் போஸ்ட் கார்டு தான் அனுப்ப முடியும்' என்பார். 'இப்படி எல்லாரையும் பாராட்ட வேண்டுமா? எதை எடுத்தாலும் பாராட்டுகிறீர்கள் என்கிறார்களே?' என்றபோது அவர் சொன்ன பதில், அனைவரும் பின்பற்றத்தக்கது.

'நான் ஒரு எளிய தோட்டக்காரன். எல்லாச் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவேன். மலர்கின்ற செடி மலரட்டும். எந்தச் செடியும் கருக எனக்கு மனம் இடம் தராது. நிறைய படைப்பாளிகளை உருவாக்குவதே என் நோக்கம்' என்று சொன்னார். உண்மை தான். திகசி என்ற ஆளுமையின் பாராட்டால் உற்சாகம் பெற்று வளர்ந்து உன்னத இடத்தைப் பெற்றவர்கள் என்று பிரபஞ்சன், பூமணி, பா.செயப்பிரகாசம் போன்றவர்களைச் சொல்லலாம். உற்சாகப்படுத்த ஆள் இல்லாமல் எத்தனை பிரபஞ்சன் கள் கருகி இருப்பார்கள்? எத்தனை பூமணிகள் வாடியிருக்கும்?

அதற்காக எல்லாவற்றையும் பாராட்டிவிடும் ரகம் அல்ல திகசி. தனது பஞ்சசீலக் கொள்கைக்குள் அடங்கும் படைப்புகளை பாராட்டித் தள்ளுவார். மற்றவற்றை அடித்து நொறுக்குவார். அழகியலும் சமுதாய அறிவியலும் அறவியலும் கொண்ட படைப்புகளைக் கொண்டாடுவார். பாசிசத்தை மனதுள் தேக்கி, வெளி வேசத்தில் கலையை விலை பேசும் மனிதர்களை விளாசித் தள்ளுவார். பாராட்டும்போது பாசக் கார வார்த்தைகளும் விமர்சிக்கும்போது விலா எலும்பை முறிக்கும் வார்த்தைகளும் இருக்கும். நெருக்கமாக உட்கார்ந்து பேசும் போது, இந்த மனிதனா இப்படி எல்லாம் எழுதுகிறார் என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு மென்மையானவராக உருப்பெற்று உட்கார்ந்து இருப்பார்.

அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறாரே என்றபோதுதான் சின்ன வயது நிகழ்வு ஒன்றைச் சொன்னார்:

 ‘எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும் போதே அப்பாவையும் அம்மாவையும் இழந்துவிட்டேன். அம்மா மரணப்படுக்கையில் இருந்தபோது சொன்ன வார்த்தை இப்பவும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.  'நல்லா படிக்கணும்.. நல்லவனா வாழணும்.. நல்ல பேரை எடுக்கணும்' னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டாங்க. இந்த மூன்று கட்டளைகளையும் ஒழுங்காக நிறைவேற்றியதாகத்தான் நினைக்கிறேன்' என்று சொன்னார் திகசி. இதை ஐந்து வயதில் கேட்டவர் ஐம்பது வயது வரை மட்டுமல்ல எண்பது வயது வரைக்கும் கடைப்பிடித்தார். அது அவரது அம்மாவின் குரலாக மட்டுமல்ல, அறத்தின் குரலாகவும் அவருக்கு ப்ட்டது.

ஆனந்த விகடனில் 2000ம் ஆண்டில் 80 வயதைக் கடந்த ஆளுமைகளைப் பேட்டி கண்டு, 'நினைவுச் சிறகுகள்' என்ற தொடராக எழுதினேன். 39 வாரங்கள் வெளியான அந்தத் தொடர் 19 ஆண்டுகள் கழித்து இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. பரிசல் செந்தில்நாதன் வெளியிட்டுள்ளார். (இவரும் ஒரு குட்டி திகசி தான்!) அந்த தொடருக்காக நெல்லையில் திகசியைச் சந்தித்தேன். நான்கு மணி நேர பேட்டி அது. மரணப்படுக்கையில் அம்மா சொன்னது முதல் மரணிப்பதற்கு முன்னால் ஜீவா சொன்னது வரை இருக்கும். அந்தப் பேட்டியைப் படித்துவிட்டு போன் செய்த திகசி, 'என்னோட மொத்த வாழ்க்கையின் சாராம்சத்தையும் நாலே பக்கத்தில் கொடுத்துவிட்டீர்கள், உண்மையில் மிகச் சிறந்த பத்திரிக்கையாளர் தான்' என்று சொன்னார். அப்போது சொன்னேன், ‘நீங்கள் மிகச்சிறந்த கதை சொல்லியாக இருந்ததால்தான் அது மிகச்சிறந்த கட்டுரையாக மாறியது'' என்றேன்.  ‘இல்லை நான் சொன்னதை விட நீங்கள் அழகாக எழுதி உள்ளீர்கள், நேரடியாகப் பார்ப்பது போல் இருந்தது'' என்றார், அவர். என்னே பரந்த மனோபாவம்!

 ‘நெல்லை இந்துக் கல்லூரியில் பழைய மாணவர் என்ற முறையில் பேராசிரியர் அ.சீனிவாசராகவன் தலைமையில்  'நானும் என் கதைகளும்' என்ற தலைப்பில் பேசினார், புதுமைப்பித்தன். கல்லூரி மாடியில், இருநூறு பேர் கூடியிருந்தார்கள். புதுமைப்பித்தன் பேசிய காட்சியே வித்தியாசமானது.

தி.க.சிவசங்கரன்
தி.க.சிவசங்கரன்அந்திமழை

15 அடி நீள மேடையில் ஒரு ஓரத்திலிருந்து இன்னொரு ஓரத்துக்கு நடந்தார்... மேஜை மீது ஏறி உட்கார்ந்தார்.... கிராப்புத் தலைமுடியைக் கையால் உதறிவிட்டுக் கொண்டார்... கைக்குட்டையை எடுத்துக் கழுத்தில் கட்டிக் கொண்டார்... ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை தனக்குத் தானே சிரித்துக் கொண்டார்... பேசிக்கொண்டே இவ்வளவும் அவர் செய்த செய்கைகள்... ஒவ்வொரு கதையையும் தான் எப்படி எழுதினேன் என்பதையும் அருவிபோல அவர் விளக்கிக் கொண்டே போன காட்சி... இன்றும் ஒரு நாடகம் போல என் கண்ணில் நிழலாடுகிறது,''  என்று போகும், திகசியின் வர்ணிப்பு. அத்தகைய கதை சொல்லும் பாணி அவருடையது. இதே புதுமைப்பித்தனை சிலர் அளவுக்கு மீறி புகழத்தொடங்கிய போது, 'வீரவணக்கம் வேண்டாம், புதுமைப்பித்தனை கடவுள் ஆக்காதீர்கள்' என்று எழுதி அனுப்பிய துணிச்சலும் கொண்டவர்தான் திகசி.

படைப்புக்கு எது முக்கியம் என்று கேட்டபோது,  'விஷயம்தான் முக்கியம். வாழ்வின் குரூரங்கள் பற்றி ஒருவன் எழுதினால் முதலிலேயே 35 மார்க் போட்டுவிடுவேன்' என்று ஒருமுறை சொன்னார்.

அந்த, 'நினைவுச்சிறகுகள்' காலகட்டத்தில் தான் திகசியை முழுமையாக உணர்ந்தேன். இந்தத் தொடரில் தன்னைப் பேட்டி எடுப்பதற்கு முன்னதாக சிலரைப் பேட்டி எடுத்துவிட்டு தன்னைப் பேட்டி எடுக்கச் சொன்னவர், திகசி. ஒவ்வொரு வாரமும் பாராட்டி எழுதிவிட்டு அடுத்தடுத்து யார் யாரைப் பேட்டி எடுக்கலாம் என்று பட்டியல் அனுப்புவார். அவர்களைப் பற்றிய குறிப்பும் அனுப்புவார். அனைத்துக்கும் மேலாக தொடர்புடையவர்களுக்கும் கடிதம் போட்டு,  ‘திருமாவேலன் பேட்டி கேட்டால் கொடுங்கள்' என்றும் சொல்வார்.

திகசி சொன்னபிறகு தான் லா.ச.ரா., தொ.மு.சி. ரகுநாதன், வல்லிக்கண்ணன், மாஜினி ஆர்.ரங்கசாமி, தீக்கதிர் கே.முத்தையா, சரஸ்வதி விஜயபாஸ்கரன் ஆகியோரைப் பேட்டி கண்டு எழுதினேன். தொழிற் சங்கத் தலைவர் அந்தோணிப்பிள்ளை அவர்களைப் பேட்டி எடுக்கச் சொல்லி இருந்தார். அவருக்கு போன் செய்தேன். என்ன குரல் அந்த மனிதருக்கு!

'அந்தோணிப்பிள்ளை ஹியர்' என்றார். செய்தியைச் சொன்னேன். 'பிஸியாக இருக்கிறேன், ஒரு வாரம் கழித்து போன் செய்யுங்கள்' என்றார். ஒருவாரத்தில் இறந்து போனார். வல்லிக்கண்ணன் வீட்டுக்கு நான் போனபோது, என்னுடைய ஜாதகமே அவரிடம் இருந்தது. உபயம் திகசி. அதுமாதிரித்தான் விஜயபாஸ்கரனை சந்திக்கும்போது அவரும் என்னைப் பற்றி முழுமையாகச் சொன்னார். எல்லாம் திகசி தான். அதாவது அறத்தை வார்த்தையாக இல்லாமல் வாழ்க்கையாக வாழ சிலரால்தான் முடியும். அப்படிப்பட்ட ஆளுமை திகசி.

அவருக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்த ஞானியார் அடிகள் தமிழ் மன்றத்தின் தலைவர் அ.நா.பாலகிருஷ்ணனை நானும் அறிவேன். சின்னக்குத்தூசி அவர்களின் அறைக்கு ஓமப்பொடி மிக்சருடன் வந்து அரைக்கும் ஆட்களில் அ.நா.பா.வும் ஒருவர். விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்களும் அ.நா.பா.வும் இணைந்து திகசிக்கு விழா எடுத்தார்கள். அப்போது ஜெமினி கேன்டீன் ஏ.என்.எஸ். மணியன் அவர்களும் வந்திருந்தார். திருவல்லிக்கேணியில் இவரது தஞ்சாவூர் பட்சணக் கடை பிரபலமானது. எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டூடியோவில் கேன்டீன் நடத்தியவர் அவர். அதன்பிறகு திருவல்லிக்கேணியில் பலகாரக் கடை வைத்திருந்தார். குத்தூசியின் அறையை மொய்க்கும் எறும்புகள் அங்கும் ஊர்ந்து செல்லும். லட்டு, மிக்சர், காபி ஆகிய மூன்றும் சேர்த்து அடித்தால் 17 சதவிகிதம் ஆல்கஹால் மாதிரி இருக்கும். அந்த ஏ.என்.எஸ். மணியன் அவர்கள், இந்த விழாவுக்கு வரும்போது மாலையும் பூக்கிரீடமும் வாங்கி வந்துவிட்டார். திகசிக்கு சூட்டச் சென்றார்.

மலர் கிரீடத்தை தடுத்த திகசி, ‘நான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு விரோதமானது இது, அதனால் கிரீடம் சூட்ட மாட்டேன்'' என்று தட்டிவிட்டார். ‘உங்கள் மனம் கோணக்கூடாது என்பதால் மலர் மாலையை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று வாங்கிக் கொண்டார்.

இந்தக் கொள்கைப் பிடிவாதம் தான் அவரை ஊர் ஊராகத் துரத்தியது. தாம்கோஸ் என்ற வங்கியில் கணக்காளராக வாழ்க்கையைத் தொடங்கியவர் திகசி. இலக்கியத்தோடு சேர்ந்து தீவிரமான தொழிற்சங்கவாதியாகவும் இருந்தார்.இவரது தொழிற்சங்கப் பணிகள் காரணமாக ஊர் ஊராக மாற்றினார்கள். தமிழ்நாட்டில் இருந்தால் அடங்கமாட்டார் என்று கொச்சிக்கு தூக்கிப் போட்டார்கள். அங்கு இன்னும் தீவிரமானார். திடீரென வேலையை உதறினார். பூக்கிரீடத்தைத் தூக்கிப் போடுவதைப் போலத் தூக்கிப் போட்டார். இதுதான் திகசி.

'கலை இலக்கியத் துறையில் மற்ற கட்சிகளோடு ஒப்பிடும்போது கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமாக இருக்கிறது. நசிவு இலக்கியவாதிகளும், நாற்றமடிக்கும் பெருங்காய டப்பாக்களும் கொண்டாட்டம் போடும் போது நாம் ஏனோ தானோ என்று இருக்கிறோம்' என்று ஜீவாவிடம் சண்டை போட்டதாகச் சொன்னார். இதுதான் திகசி.

தூங்கும் நேரம் போக, நோயுற்ற நேரம் போக மற்ற நேரமெல்லாம் எழுதிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார் திகசி. தன் காலகட்டத்தில் வெளியான அனைத்துப் படைப்புகளையும் வாசித்தார். இலக்கிய இதழ்களோடு பயணித்தார். சமூக முன்னெடுப்புகளில் கலந்து கொண்டார். அதனால் தான் இவரை சிவதம்பி, 'இலக்கியக் களப்பணியாளர்' என்று சொன்னார். களப்பணியாளர் என்றால் எப்போதும் கண்ணைக் கசக்கிக் கொண்டு இருக்கும் களப்பணியாளர் அல்ல. நம்பிக்கையான களப்பணியாளர். 'நான் ஒளியில் நம்பிக்கை கொண்டவன், எதிர்காலம் இருளடைந்து கிடப்பதாக நான் எந்தக் காலத்திலும் சொன்னதில்லை' என்று சொன்னவர் திகசி. அவர் ஒளி. தூங்கும் போதும் கண்ணுக்குள் ஒளி வீசிக்கொண்டு இருக்கும் என்பார்கள். என் கண்ணுக்குள் வீசிக்கொண்டிருக்கும் ஒளியில் திகசியும் ஒரு துளி!

மார்ச், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com