தொடர்பில் இருப்போம் சார்! - பிரபஞ்சன்

அவர்கள் அவர்களே !
பிரபஞ்சன்
பிரபஞ்சன்ஓவியம் : ஜீவா
Published on

பிரபஞ்சன்...

என்னை சார் போட்டு அழைத்த முதல் சார்! அப்போது சட்டக் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவன் நான். 'இனி' இதழுக்கு ஆசிரியர் விடுதலை, உதவி ஆசிரியர் நான். விடுதலையின் தியாகராயநகர் வீட்டுக்கு பிரபஞ்சன் வந்திருந்தார். என்னை அறிமுகம் செய்து வைத்தார் விடுதலை. 'வணக்கம் சார், நான் பிரபஞ்சன்' என்றார். அவர் பிரபஞ்சன் என்பது எனக்கு ஏற்கெனவே தெரியும். அவர் என்னை, 'சார்' என்றதும் தான் ஜெர்க் ஆனேன். 'சார்'  போய்விட்டார்.

அவரது இறப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் திடீரென எழுத்தாளர் பி.என்.எஸ்.பாண்டி யனிடமிருந்து தகவல். எப்போதும் உற்சாகமாய் பேசும் பாண்டியனின் குரலில் நடுக்கம். பதற்றம். 'மறுபடியும் பின்னடைவு' என்றார். 'நல்லா இருந்தாரே, போனில் என்னிடம் பேசினாரே!' என்றேன். 'ஆமாம்! கஜா புயலுக்கு மறுநாளில் இருந்து பின்னடைவு' என்றார். உடனேயே துணைக்கு அருள் எழிலனை அழைத்துக்கொண்டு புதுச்சேரிக்குப் பயணமானேன்.

நடிகை மாதிரி பிரபஞ்சன். மேக்கப் இல்லாமல் அவரைப் பார்க்கமுடியாது. முழு அல்லது முக்கால் அலங்காரத்தோடு தான் காட்சித் தருவார். நெருக்கமானவர்கள் கூட கால் பங்கு அலங்காரம் இல்லாமல் பார்க்க முடியாது. எழுத்தில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் நேர்த்தியும் அழகியலும் உள்ள மனிதர்.

 புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். போனதும் கையைப் பிடித்துவிட்டேன். 'சார்... திருமாவேலனை பார்க்கணும்னு சொன்னீங்களே... வந்திருக்கார் சார்' என்றார் பாண்டியன். பிரபஞ்சன் கண்கள் விரிந்தது. நான் குனிந்தேன். அவர் வாய் அசைந்தது. என் பெயரை அவர் சொன்னதாக பிரமை. இன்னும் குனிந்தேன். கன்னத்தை வருடி இழுத்தார். எழுதி எழுதி எழுதி எழுதித் தீராத கை விரல்கள் என் கன்னம் தொட்டதால் புனிதம் பெற்று விட்டேன்.

 புத்தகத்தை கரையான் அரிக்கும். பிரபஞ்சனை புற்றுநோய் அரித்தது. அந்தக் கோலத்தில் அவரை பார்க்க மனமில்லை என்பதால் கவிதா பாரதி அழைத்தும் போய் பார்க்கவில்லை. எங்கள் நட்பு வட்டத்தில் 'பஞ்ச்' என்றுதான் அவரை அழைப்போம். 'பஞ்சை பார்த்து விட்டு வருவோம் என்று மருது அண்ணனும் சொன்னார்' என்றார் பாரதி. 'புதுச்சேரி அழைக்கிறது போக துணிச்சல் இல்லை' என்று முகநூல் பதிவிட்டேன். போனேன் இல்லை. கொஞ்சம் குணமடைந்ததும் அவரே போன் செய்தார். 'பிரபஞ்சன் பேசுறேன் சார்.. நல்லா ஆயிட்டேன்... நல்லா ஆயிட்டேன்... நம்ம பாண்டியன் தான் நல்ல கவனிச்சுகிட்டார். அவரை நீங்க பார்த்துக்கோங்க... வாங்க சார்... வாங்க சார்...'வைத்துவிட்டார். போன் செய்த நேரத்தில் தான் ஆனந்தாவில் இருந்து காபி வந்திருந்தது, வழக்கத்தை விட அதிகமாய் இனித்தது.

பேனா, காபி, குர்தா, செருப்பு, செண்ட் - புத்தகத்துக்கு பிறகு பிரபஞ்சனுக்கு பிடித்த ஐந்து பொருட்கள் இவைதான். பணம், பதவி, பரிசு, விருது, வீடு, என்று யோசனையே இருக்காது அவருக்கு. '100 ரூபாய் இருந்தா கொடுங்க சார்' என்பார். பணம் அவருக்கு வந்ததும் 500 ரூபாயாகத் திருப்பிக்கொடுப்பார். நான் கொடுத்தது அவரை பொறுத்தவரையில் அமெரிக்க டாலர். திருப்பித்தரும் போது இந்திய மதிப்பு. 'பணம் எங்கேயோ இருக்கு. நாம இங்க இருக்கோம்' என்பார். 'எல்லா மேடையிலும் பொய் சொல்லித் தான் துண்டு போடுகிறார்கள். பொன்னாடை என்கிறார்கள். எந்த மளிகைக் கடைக்காரரும் இந்த பொன்னாடையை வாங்குவதில்லை' என்பார். 'ஷீல்டு தருகிறார்கள், இதை வைப்பதற்கு வீடு இல்லை என்றே தெரியாமல்' என்பார்.

 விருது தர இருப்பதாக ஒரு முறை பிரபஞ்சன் அழைக்கபட்டார். பொற்கிழி தருவதாகவும் சொன்னார்களாம். கை உயரத்திற்கு ஷீல்டு கொடுத்துவிட்டர்கள். இதை எடுத்துக் கொண்டு பேருந்தில் எப்படிப் போவது என்று நினைத்தவர், ஓரமாக மரத்தடியில் ஒதுங்கி ஒண்ணுக்குப் போய்விட்டு 'மறந்து போய்' அந்த ஷீல்டை அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டார். யாருக்கும் தெரியாமல் இவர் நடைபோட்டுச் செல்ல.. பின்னால் ஓடிவந்த ஒருவன், 'சார் இதை மறந்து போய் விட்டு விட்டு வந்து விட்டீர்கள்' என்று கொடுத்தானாம். இந்த கதையை அவர் சொல்லிச் சிரிப்பார். 'சும்மா வீட்டில் இருந்திருந்தால் ஆயிரம் ரூபாயாவது மிச்சமாகி இருக்கும். விருது பெறப்போய் இருந்த ஆயிரமும் போனது' என்றார். 'பொற்கிழி என்னாச்சு சார்? என்றால், பச்சைக்கிளி வாங்க கூட வசதியில்லாத அமைப்பு சார்' என்றார்.

மாதத்தின் முதல் தேதியை, 'மாதாந்திர பயங்கரம்' என்பார் பிரபஞ்சன். ஐந்து மாதத்தில் அவரைக் கொன்றது புற்று நோய். ஐம்பது ஆண்டுகளாக கொன்று கொண்டு இருந்தது இந்த மாதாந்திர பயங்கரம்.. 'தந்தை' என்பதற்கு புது விளக்கம் கொடுத்தார் ஒரு நாள். 'பணம் கொண்டு வந்து தந்தால் தான் தந்தை!' வறுமை விரட்டிக் கொண்டேயிருந்தது. வார்த்தை அணைத்துக் கொண்டேயிருந்தது. இதுதான் பிரபஞ்சனின் வாழ்வும் எழுத்தும்.

 சென்னையிலேயே செட்டில் ஆகிவிடுவது என்று இங்கு வருவார். சில மாதங்கள், சில ஆண்டுகளில் புதுச்சேரிக்கே போய்விடுவார், புதுச்சேரியிலேயே இருந்து விடுவது என்று நினைப்பார், புதுச்சேரி விரட்டி விடும். சென்னைக்கும், புதுச்சேரிக்குமான துரத்தலிலேயே பல மாதங்கள் ஓடிவிடும். புதுச்சேரியிலாவது சொந்த வீடு இருக்கிறது, சென்னையில் அதுவும் இல்லை முதலில். எத்தனை மேன்சன் கள்? எத்தனை வீடுகள்?

 திருவல்லிகேணியிலேயே விதவிதமான மேன்சன்களில் இருந்துவிட்டார், திடீரென கலைஞர் நகர், திடீரென அமைந்தகரை என பாய்வார். கலைஞர் முதல்வரான போது தான் பீட்டர்ஸ் காலனியில் வீடு கொடுத்தார். அதன் பிறகு வீடு பிரச்சனை தீர்ந்தது. ஆனாலும் மாதாந்திர பயங்கரம் தொடர்ந்தது. எழுதிப் பிழைத்தல் இயலாது என்பது உண்மையா? எழுத்து மட்டுமே பிழைப்பாகி விடாது என்பது உண்மையா?

 எழுத்தை தொழிலாக பார்த்தால் பிரச்சனை இல்லை. எழுத்தை அறமாகப் பார்த்தால் சிக்கல் தான். இதுதான் புதுமைப்பித்தன் வகையறாக்களுக்கு நேரும். பிரபஞ்சன், பித்தன் வகையறா. ஓர் வார இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார். ஈரோட்டில்   ஒரு விழா. 'நீங்கள் மிகச்சிறந்த எழுத்தாளர், இது போன்ற குப்பை பத்திரிகையில் வேலை பார்க்கலாமா?' என்று ஒருவர் கேள்வி கேட்டார். வேறு யாராக இருந்தாலும் (நான் உட்பட) அது தரமான பத்திரிகைதான் என நிறுவுவோம். இவர்தான் பித்தன் வகையறாவாச்சே!

'அது குப்பை பத்திரிகைதான். நான் எழுதுவது குப்பையா என்று மட்டும் பாருங்கள்!' என்றார் பிரபஞ்சன். கேள்வி கேட்டவர் துணுக்கு எழுத்தாளர் போலும். இதை அப்படியே அஞ்சல் அட்டையில் எழுதிப் போட்டுவிட்டார். அப்பத்திரிகையின் மூன்றெழுத்து ஆசிரியர் கைக்குப் போனது. பிரபஞ்சன் வேலை போய்விட்டது.

 இப்படித்தான் பல இடங்களில். எங்கும் இந்த வகையறாக்களால் வேலை பார்க்க முடியாது. எழுத்துகளில் மட்டுமல்ல, எல்லாத் தொழிலுக்கும் அடிப்படை பண்பாக இருக்க வேண்டியது அறம் என்பார். அறம், அவ்வப்போது மட்டுமே வெல்லும் என்பதும் அவருக்குத் தெரியும். என்னை எப்படியாவது ஒரு நல்ல வேலையில் சேர்த்து விடத்துடித்தார். குமுதத்தில்  அப்போது மாலன் இருந்தார். அவரிடன் பேசினார் எனக்காக. தினமணி ஆசிரியர் இராம. திரு.சம்பந்ததுக்கும் பேசினார் . தினமணி கதிருக்காக ஞாநியிடம் பேசினார். விடுதலைக்குயில்கள், இனி, நீதியின் போர்வாள் என்ற எனது பயமுறுத்தும் பத்திரிகை வாழ்க்கை காரணமாக இங்கு நுழைய முடியவில்லை. நுழைய விடவில்லை. 'குங்குமத்தில்' வேலைக்கு விண்ணப்பித்தேன். வி.கே.சுந்தர் அறிமுகம் என்பதால் கிடைத்தது. முதல் பேட்டியே பிரபஞ்சன் தான், காபியை பற்றி மணக்க மணக்க பேசியிருப்பார். அதன் பிறகு விகடனுக்கு மாறினேன். மகிழ்ந்தார். எப்போது போனாலும், 'ஒண்ணும் பிரச்சனை இல்லை தானே சார்.' என்பார். இல்லை சார் என்பேன். 'பிரச்சனை இல்லாத இடமேது, பிரச்சனை என்பதும் வாழ்வின் ஓர் அங்கம் தான். வரவேற்பறை, படுக்கையறை,சமையலறை  கொண்டது மட்டுமல்ல வீடு. கழிப்பறையும் இருந்தால் தான் வீடு,' என்பார். ஜூனியர் விகடனுக்கு நான் ஆசிரியரான போது, அவரைத் தொடர் எழுத வைத்தேன். பெருமையாக இருந்தது.

' நீங்கள் ஆசிரியராக இருக்க நான் எழுதுகிறேன்' என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

'சிநேகம் ஒருவரையொருவர் கௌரவித்தல். ஒருவரை மற்றவர்க்கு இனம் காட்டல், ஒருவரை ஒருவர் சமர்ப்பணம் செய்து கொள்ளுதல், ஒருவரை ஒருவர் போதித்தல். ஒருவர் உயிரை மற்றவர்க்கு மாற்றுதல். ஒருவரே இருவரின் வாழ்க்கையையும் வாழ்தல், ஒருவர் மற்றவர்களை நினைத்தல், ஒருவர் மற்றவரைச் சார்தல், ஒருவருக்காக மற்றவர் பூப்பெய்தல்' என்று 'கோடை மழை' கதையில் எழுதி இருப்பார் பிரபஞ்சன். இதுதான் பிரபஞ்சன். அடுத்தவரை கௌரவிப்பார், சமர்ப்பணம் செய்து கொள்வார். சார்ந்து இருப்பார், பூப்பெய்வார், இவை அனைத்தும் அவர் குணங்கள், இயல்புகள், இதில் எது உங்களை நோக்கி வருகிறதோ அப்படியே நீங்களும் நடித்து கொண்டால் தொடரும், இல்லாவிட்டால் முற்றும்.

 'இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் ஒரு பூ, பூக்கத்தானே செய்கிறது' என்பது அவரது சொற்கள். அப்படி ஒரு பூ அவர். முள்ளும் இருந்தது, முள் இருந்தால் தான் பூ. அதுதான் யதார்த்தம்.

 பிரபஞ்சனின் கதைகள், பூக்கள். எல்லோருமே நல்லவர்கள், மிக நல்லவர்கள், நல்லவர்களுக்கும், மிக நல்லவர்களுக்குமான உரையாடலும் மோதலுமே அவரது கதைகள். பிரபஞ்சன் கட்டுரைகள், முட்கள். எல்லோருமே கெட்டவர்கள். மிகக்கெட்டவர்கள், கெட்டவர்களுக்கும், மிகக் கெட்டவர்களுக்குமான உரையாடலும் மோதலுமே அவரது கட்டுரைகள். இவ்வளவு மென்மையான கதைகள் எழுதியவரா, இவ்வளவு வன்மையான கட்டுரைகள் எழுதுகிறார் என்று பலரும் சந்தேகப்பட்டார்கள். 'திராவிடத்தின் பொய் முகங்கள்' எழுதுவதற்காக திராவிடம் படிக்க தொடங்கி, ஆரியத்தின் உண்மை முகத்தை உணர்ந்தவர் பிரபஞ்சன்.  'ஈரோடு தமிழர் உயிரோடு' என்று அதன் பிறகுதான் எழுதினார். அதற்கு முன்பு வரை அவரை கொண்டாடிய இதழ்கள், பத்திரிகையாளர்கள் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். கதைகேட்க மறுத்தார்கள், தொடர்கதை வாய்ப்பை தவிர்த்தார்கள், ஏன் பேசவே மறுத்தார்கள். 'மாதாந்திர பயங்கரம்' மிரட்டினாலும் பிரபஞ்சன் அதுபற்றி கவலைப்படவே இல்லை.

ஒடுக்கப்பட்டோர் பக்கம் நிற்பதுதான் 'எனது அறம்' என்று நின்றார், திராவிட இயக்க எழுத்தாளன் தான் என்று மார்தட்டினார், அதற்காக திராவிட இயக்க ஆட்சிகள் குறித்த தனது அற விமர்சனத்தை தவிர்க்கவில்லை.

 'பிரபஞ்சனின் விமர்சனங்கள் உள்நோக்கம் இல்லாதவை' என்று கலைஞரே ஒரு முறை சொன்னார். ஜெயலலிதா குறித்து பிரபஞ்சன் எழுதியதை நல்லவேளை ஜெயலலிதா படித்திருக்க மாட்டார். ஜெயலலிதா ஹிட்லர் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தபோது, 'தடா தகைப்பிராட்டி' என்று அச்சமற்று எழுதியவர் பிரபஞ்சன். அவரை அடித்துப் போட்டால் கேட்க நாதியில்லை. ஆனால் பயமில்லாமல் எழுதுவார். இயல்பில் பயந்த சுபாவம் கொண்டவர். பேனா பிடித்துவிட்டால் சூலாயுதம் ஏந்தியவராய் ஆகிவிடுவார்.

 ஜெயலலிதாவிற்கு வாழப்பாடி ராமமூர்த்தி தலையாட்டிக் கொண்டிருந்தபோது 'முதுகெலும்பு தமிழ்ச் சொல் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்' என்று எழுதினார். இந்த உருவகம்தான் பிரபஞ்சனின் உச்சம். 'நெடுஞ்சாலைகளில் இருக்கும் மோட்டல்கள் தான் தமிழ்நாட்டின் பலிபீடங்கள். தமிழகத்தின் தலைமைப் பலிபீடம் மாமண்டூர்' என்று எழுதினார். 'சென்னைக்காரர்களுக்கு லேசாக சாக்கடை கலந்த தண்ணீர் தான் பிடிக்கும்' என்பார். விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள், வயதான தெருப்பூனைகளைப் போல அதிகாரம் இல்லாமல் அலைவார்கள் என்று ஒரு முறை சொன்னார். ஸ்டார் திரையரங்கம் வாசலில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தோம், எதிர் திசையில் போய்க்கொண்டிருந்த ஒருவரை காட்டினார், இருபது ஆண்டுகளுக்கு முன் முக்கியமான பிம்ப் இவர் என்றார். 'கஞ்சா கசக்கி கசக்கி உள்ளங்கையில் லேசா குறி இருக்கும்' என்றார். இப்படி நுணுக்கமான கவனங்கள் தான் அவரின் எழுத்துகள். இப்படி நுணுக்கமான மனித மனங்களை பதிவு செய்வார்.

‘என் விதிக்கப்பட்ட வாழ்க்கை திணித்து வைக்கப்பட்ட ஆயிரம் அனுபவங்களால் ஆன ரகசிய பெட்டி. நிறைய மண்டை ஓடுகள், நிறைய அறுந்த செருப்புகள், நிறைய பழைய கிழிந்த சட்டைகள், நிறைய நடைவண்டிகள், நிறைய மரப்பாச்சி பொம்மைகள், நிறைய காதல் கடிதங்கள், பழிகள், பகைகள், கொலை வெறிகள், கூடிக் கிசுகிசுத்துக் குருட்டறையில் இட்ட கருக்கள் என்று நீண்டு கொண்டே போகும். உன்னதமும் சின்னத்தனமும் கொண்ட ஜாபிதாக்களின் சொல்கலன் அந்த ரகசியபெட்டி'' என்று எழுதினார் பிரபஞ்சன். அந்த ரகசிய பெட்டியைத் திறந்து திறந்து எழுதினார். பேசினார், கலந்துரையாடினார், அந்த ரகசியபெட்டியில் இருந்து பாதி கூட வெளியில் வரவில்லை. பாதியிலேயே போய்விட்டார். அவர் எழுத நினைத் தவை ஏராளம், திட்டமிட்டிருந்தவை ஏராளம், ஆனந்தரங்கம் பிள்ளை டைரியை தலைகீழாக படித்தவர். ஆனந்தரங்கம் பிள்ளை டைரியை போல அவரே இரண்டு மடங்கு எழுதும் திறம் படைத்தவர்.

 எப்போது போனாலும் படித்துக்கொண்டே இருப்பார், எப்போதும் எழுதிக் கொண்டிருப்பவர் அல்ல எழுத்தாளர். படித்துக்கொண்டும் இருப்பவரே எழுத்தாளர். தமிழில் அடுத்தவர் படைப்பை வாசிக்காதவர்தான் பெரிய எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். இளம் படைப்பாளிகளோ, மூத்த படைப்பாளிகளோ புத்தகம் கொண்டு வந்தால் வாசித்து விடுவார். வெளிப்படையாக எழுதியும் விடுவார். 'நான் எழுத வந்த காலத்தில் இப்படிச் சொல்ல யாருமில்லை, எனக்கு நேர்ந்தது இன்றைய படைப்பாளிகளுக்கு நேரக்கூடாது' என்பார். அன்பே அவரது அறம் என்றால், அன்பில் சேர்ந்தது தான் இந்தப் பாராட்டும். அவரே ஜெயகாந்தன் கதைகளை மொத்தமாய் கிழித்துத் தொங்கபோட்டதையும் பார்த்தோம்.

பிரபஞ்சனுக்கு ஆள் முக்கியமல்ல, சொல் முக்கியம், எழுத்து முக்கியம், எனவே தான் நட்பும் பகையும் ஒரு சேரச் சேர்ந்தது. நட்பு என்பது நிலத்துள் போன நீராகவும், பகை என்பது வானத்துள் ஆவியான நீராகவும் அவர் நினைத்து நடப்பார். அவரது கதையில் வரும் வைத்தியும், சுமதியும் பெரும்பாலும் இப்படித்தான் இருப்பர்கள், தேடிப்போய் நட்பு சொல்வார்கள், பகை என்றால் பார்க்காமல் தூரமாகப் போய்விடுவார்கள், வாழ்க்கையும், வார்த்தையும் பிரபஞ்சனுக்கு ஒன்று மற்றொன்று அல்ல.

 நேரில் விடைபெறும் போது, 'அப்புறம்... எப்ப சந்திக்கலாம் சார்' என்பது அவரது கேள்வியாக இருக்கும், தொலைப்பேசியில் பேசிவிட்டு வைக்கும் போது, 'தொடர்பில் இருங்க சார்!' என்பது அவரது ஆசையாய் இருக்கும்.

 ஏழு நாட்களுக்கு முன் கன்னம் தடவும் போது, 'தொடர்பில் இருங்க சார்!' என்று சொன்னதாகவே பிரமை. தொடர்பில் இருப்போம் சார் நிழலாய்! பிரபஞ்சன் எங்கோ இருக்கிறார்; நாம் இங்கு இருக்கிறோம்.

ஜனவரி, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com