தேடிச் சோறு நிதம் தின்று!

தேடிச் சோறு நிதம் தின்று!

Published on

யாவர்க்கும் தெரிந்த பழமொழிதான்.

‘ஆத்துக்குள்ளே நிண்ணு அரகரா என்றாலும், சோத்துக்குள்ளே இருப்பான் சொக்கலிங்கம்.'

என்பது அதிகாலை ஆற்றுக்குச் சென்று நீராடி, நெற்றியில் நீறணிந்து, கிழக்குதிக்கும் கதிரவனைப் பார்த்து, கை கூப்பித் தொழுது நின்றாலும் சொக்கலிங்கம் சோற்றுக்குள்ளே தான் இருப்பான் என்று பொருள். எதற்குக் குறிப்பாகக் கிழக்கே உதிக்கும் சூரியன் என்று சொன்னேன் என்றால் சமீபகாலமாகச் சாதிக்கிறார்கள் ஊடகவியலாளர்கள், சூரியன் யமனின் திசையான தெற்கில்தான் உதித்தான் என்று.

பழமொழியின் பொருள் உணவே இறைவன் என்பது. ஏழைக்கு இறைவன் உணவு வடிவத்தில் வருகிறான் என்னும் விவிலியம். ஏழைகளுக்கு மட்டும் என்றில்லை, யாவருக்குமே சோறுதான் கடவுள்.

ஆண்டாளின் திருப்பாவை,

‘அம்பரமே, தண்ணீரே, சோறே ‘ என்கிறது. அம்பரம் என்றால் இங்கு ஆடை.

எனவே தான் மணிமேகலை : ‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து!‘ என்கிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டது எல்லாம் கோஷம், உணவென்பது ஆருயிர் மருந்து.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!‘ என்றனர் . உண்டி எனில் உணவு. சிற்றுண்டி எனும் சொல் அறியார் இல்லை. ‘அரகர சிவ சிவ ‘என்பதெல்லாம் சரிதான், இரண்டு வேளை சோறின்றிக் கிடந்தால் தெரியும். எனவே சோற்றுக்குள்ளே இருப்பான் சொக்கலிங்கம்.

 மிக எளிய உணவு சோறு. பச்சரிசியோ, புழுங்கலரிசியோ களைந்து பானையிலிட்டு, நீரூற்றி, உலையேற்றி, வெந்தபின் இறக்கினால் சோறு. சோற்றை பொங்குவதோ, வடிப்பதோ அவரவர் வசதி, வழக்கம். புழுங்கலரிசியா, பச்சரிசியா என்பதும் அவரவர் தேர்வு. பச்சரிசி பொங்கித் தின்றவர் எல்லாம் மேன்மக்கள். புழுங்கலரிசியை வடித்துத் தின்றவர் எல்லாம் கீழ்மக்கள் என்பது காலாவதியான சங்கதி. காலமாற்றமே காரணமன்றி, எந்த அருட்தூதரும், சமூக வழிகாட்டியும் வழி நடத்தியதல்ல. வாய்ப்பிருந்தால் வடித்த சோறு, பசியிருந்தால் வடித்த கஞ்சி. மலையாளத்தார்க்கு ஒரு காலத்தில் கஞ்சி நாட்டு உணவு. 

கஞ்சியும் பயிறு துவரனும், கஞ்சியும் கப்பையும், கஞ்சியும்,சம்மந்தியும்  பசியாற்றியது. பயிறு என்றால் சிறு பயிறு, கப்பை என்றால் மரச்சீனி, சம்மந்தி என்றால் துகையல், அரிசி பற்றாக்குறையால் தான் சோற்றுக்குப் பகரம் கஞ்சி. 'கஞ்சி குடித்த மலையாளி, சோற்றைக் கண்டால் விடுவானா?' என்பதோர் வசை மொழி .

 கஞ்சியிலும், நொய்யரிசிக் கஞ்சி, பொடியரிசி கஞ்சி, குருணைக்கஞ்சி, பயத்தங்கஞ்சி, உளுந்தங்கஞ்சி, பால் கஞ்சி, இசுலாமிய சகாக்களின் நோன்புக்கஞ்சி என்று பலவகை. தானியங்கள் விளையும் இயற்கை சார்ந்து சோறுகளும் வாய்த்தன. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு, நெய் மணக்கும் கத்திரிக்காய், என்று சினிமாப் பாடல் உண்டு. நெல்லுச்சோறு என்பது அரிசிச் சோற்றைத்தான். சம்பா அரிசிச் சோறு என்றால் சம்பா நெல் அரிசிச் சோறு என்பதாகும். கேரளத்தார் விரும்பி உண்ணும் சம்பா அரிசிச் சோறு சிவப்பு நிறத்தில் இருக்கும். தமிழன் அதை தரம் குறைந்ததாக கருதி மட்டை அரிசிச் சோறு என்பான்.

ஜப்பான் போன்ற நாடுகளிலும் அரிசிச் சோறுதான் உண்ணுகிறார்கள். பிப்ரவரி 2018ல் நான் பத்து நாட்கள் அங்கிருந்தபோது சோறுதான் தின்றேன். தினமும் ஒரு வேளை. கொஞ்சம் பசைத்தன்மையுடன் இருந்தது. மலேசிய நாட்டில் தேங்காய்ப்பாலில் வேகவைத்த அரிசிச் சோறு தின்றிருக்கிறேன். தாய்லாந்தில் சோறு வேறு வகை. Fried Rice என்பது வேறு.

நெல்லுச்சோறு இல்லாவிட்டால் சோளஞ் சோறு, கம்மஞ்சோறு, ராகிச்சோறு, குதிரைவாலிச் சோறு, மூங்கிலரிசிச்சோறு, வரகரிசிச்சோறு, தினைச்சோறு, கோதுமைச்சோறு, எனப் பற்பல. ஒவ்வொரு தானியத்தையும் குத்திப் புடைத்துப் பொங்கும் விதமும் வேறு. கோதுமையைப் புழுக்கி, ஒன்றிரண்டாக உடைத்து தான் கோதுமைச் சோறு பொங்கினார்கள். நாற்பதாண்டுகளுக்கு முன்பு கடுமையாக அரிசிப் பஞ்சம் இருந்த காலத்தில், மராத்திய மாநிலத்தில், நெல் அரிசிச் சோற்றுக்கு மாற்றாக கோதுமை அரிசிச் சோறு போட்டார்கள் உணவகங்களில். அதற்கு லேப்சி என்று பெயர், அதையும் சாம்பார் ஊற்றிப் பிசைந்து குழைத்து  வயிற்றில் அடைத்தோம்.

 சோற்று வகைகளும் பலவுண்டு, ஒவ்வொரு பிரதேசத்துக்குமான தனித்தன்மைகளும் உண்டு. சுடு சோறு, தண்ணீர் விட்ட சோறு, பழைய சோறு, என்பது எமக்கு அன்று அன்றாட மூன்று வேளை உணவு. குருணைச்சோறு, பச்சரிசிச்சோறு, பொங்கல் சோறு, தயிர்ச்சோறு, புளித்தண்ணி தாளித்த சோறு, பருப்புச்சோறு, பாற்சோறு என்பன வேறு. உளுந்தஞ்சோறு, கூட்டாஞ்சோறு, படப்புச்சோறு, பற்றித் தனிக் கட்டுரை எழுதலாம்.

 எல்லாமே நெல்லரிசி சோறுதான், தம்பி கீரனூர் ஜாகிர் ராஜா இடைவெட்டுகிறார். பழனி பக்கமுள்ள கீரனூர் வட்டாரத்துத் தமிழ் முஸ்லீம்கள், ஆட்டின் தலையிலுள்ள அத்தனை உதிரி பாகங்களையும் போட்டு பிரியாணி பக்குவத்தில் செய்வதை 'தலைச்சோறு' என்பார்கள். இலை போட்டு முதலில் விளம்புவதை முதற்சோறு என்றனர். இரண்டாவது பரிமாறும் சோறு மறுசோறு எனப்பட்டது. சோறும் கறியும் என்பது வேறு, கறிச்சோறு என்பது வேறு. நேரமின்மையால் பறந்து பறந்து செய்து, பசி பொறுக்காமல் ஆத்திர அவசரமாகத் தின்பதை 'கொதிக் குழம்பும் சோறும்' என்றனர்.

சோறு சார்ந்து எக்கச்சக்கமான பழமொழிகள் உண்டு. வசவுகளும்  பஞ்சமில்லை. சாப்பிடுவதை மிக எளிமையாக, 'உண்டான சோத்துக்கு பருக்கையை திங்கணும்' என்றனர். சோற்றை வடிக்குமுன் அல்லது பொங்கி இறக்கும் முன், சோறு வெந்துவிட்டதா என்று பருவம் பார்ப்பதைப் பதச்சோறு என்றனர். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

 மலையாளிகள் மூளை இருக்கிறதா என்று கேட்பதை, 'தலச்சோறு இல்லே' என்பார்கள், கற்றாழை இனம் ஒன்றை நாம் சோற்றுக்கற்றாழை என்கிறோம். தோலை நீக்கினால் அதன் உட்பகுதி பனை நுங்கு போல் இருப்பதால்.சோற்றுக் கற்றாழையின்  ஆங்கிலச் சொல்லுக்கு எனக்கு spelling தெரியாது. ஆனால் இன்று சோற்றுக்கற்றாழையில் கிரீம்,  ஜாம், சாறு, சாஸ், என சந்தையில் கிடைக்கின்றன.

 'சோறு தின்னாச்சா?' என்றோம், 'சாப்பிட்டாச்சா ?' என்றும் வினவினோம். கொங்கு நாட்டில், 'சோறுண்டிட்டு வாறேன்'  'சோறு குடிக்கப் போறேன்' என்பர், இன்றும் கிராமப்புறத்தில் மலையாளத்தார் 'சோறுண்டோ?' என்றனர், ஊண், ஊட்டு, ஊட்டுப்புரை எல்லாம் தமிழ் சொற்கள். இன்றும் மலையாளத்தில் புழங்குகின்றன. 'ஊண்' என்பதை அவர்கள் 'ஊணு' என்றனர் . 'ஊணு கழிச்சோ' என்றால் அதற்கு சாப்பிட்டாயிற்றா என்று பொருள், இன்று அவர்களே, 'FOOD  கழிச்சோ' என்பதோர் அவலம்.

ஊண் வேறு, ஊன் வேறு. புலால் மறுத்தல் அதிகாரத்துக் குறள் பேசுகிறது.

 'தன்ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்

 எங்ஙனம் ஆறும் அருள்.'

 என்று தன்னுடலின் தசை வளர்க்க, இன்னொரு உயிரின் தசை அறுத்துத் தின்றால் எங்ஙனம் அருள் ஆறும் என்பது பொருள். ஊன் எனில் தசை, கறி, சதை, மாமிசம், புலால், தன் தசையையும் தனது வாரிசுகளின் தசையையும் வளர்ப்பதற்கு ஊரான் தசையை அறுத்துத் தின்பவனை எல்லாம் நாம் இமயம், பேராழி, பகலவன், திங்கள், விண்மீன்கள், வானம் என்று செல்லம் கொஞ்சுகிறோம்.

ஊண், உணவு, போசனம், ஆகாரம், தீவனம், சாப்பாடு, யாவற்றுக்குமான  பொதுச் சொல்லாக இருந்திருக்கிறது சோறு.

 'சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - வெறும்

சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்’

 என்பார் பாரதி, சோறும், 21 கூட்டுவான்களும், பப்படமும், பாயசமும்  கேட்கவில்லை, வெறும் சோற்றுக்கே பஞ்சம் .

தனிப்பாடல் திரட்டில், சுந்தரக் கவிராயர் எனும் புலவர் 'சோற்றுக்கும் தண்ணீருக்கும் துக்கப்பட்டு' என்கிறார். இன்றும் சொல்கிறோம் 'சோறு தண்ணி இல்லாமத் தவிச்சோம்' என்று 'அஞ்சாறு சோற்றுப் பருக்கைக்கு வழி இல்ல' என்பார்கள். 

 சங்க காலத்து ஔவையார், அதியமான் நெடுமான் அஞ்சி எனும் மன்னன், தனக்குப் பரிசில் வழங்கக் காலந் தாழ்த்திய போது எழுதிய பாடல் வரிகள் மிகவும் முக்கியமானவை. புறநானூற்றில் 206 வது பாடல். பதின் மூன்று வரிப்பாடலில் இறுதி மூன்று வரிகள் தருகிறேன்.

'மரம் கொல் தச்சன் கைவல் சிறா அர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே -

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!'

 அற்புதமான உவமை பேசும் பாடல் வரிகள். தச்சனின் திறன் மிக்க சிறுவர், கையில் கோடரியுடன் மரம் வெட்டச் செல்லும் காடு போன்றது உலகம். நாங்கள் எத்திசை நோக்கிச் சென்றாலும் அத்திசையில் சோறு கிடைக்கும் என்கிறாள் ஔவை. 'உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்' என்று மன்னனை பார்த்துக் கேட்கவில்லையா கம்பன்! அன்றைய புலவர்கள் அவ்விதம். இன்றைய நவீன புலவர்கள், அரசியல் தலைவரின் பெண்டாட்டி, மகள் செருப்பைத் தூக்கி நடக்கக் கூசுவதில்லை, 'சோழ நாடு சோறுடைத்து' என்றனர் புலவர். இன்று சோழ நாட்டில் நீரும் இல்லை, மணலும் இல்லை.

சோறு தமிழின் தொன்மையான சொற்களில் ஒன்று, ஆனால் திருக்குறள் சோறு எனும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. உடனே சாதம் எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளது என்ற பொருளில்லை. மிதவை எனில் பாற்சோறு, மிதவையும் இல்லை. அடிசில் என்றால் சமைத்த உணவு, அதுவும் இல்லை. வல்சி என்றாலும் சோறே, அதுவும் இல்லை. அடைப்பம் வைத்த இலைப்பணியாரத்தை வல்சன் என்னும் மலையாளம். வல்சி பெண்பால், வல்சன் ஆண்பால், என்பார்கள் பேராசிரியர்கள். அது கிடக்கட்டும், திருக்குறள் கூழ் எனும் சொல்லை ஆள்கிறது .

 'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.' -  என்பது ஒரு குறள்.

 

'படை குடி கூழ் அமைச்சு நட்பு  அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு' -  என்பது இன்னொரு குறள்.

இந்த குறளில் கூழ் என்றால் நல்லுணவு என்று பொருள், நீர் வார்த்த கூழைக் குறிக்க புற்கை என்றொரு சொல் பயன்படுத்துகிறது திருக்குறள். ஆனால் சோறு இல்லவே இல்லை. ஆனால் சோறு பல்லாயிரம் ஆண்டுப் பழைய சொல்.

எட்டுத்தொகை நூல்களில் 'சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னுமோர் மன்னன் மாமூலனாராலும் முரஞ்சியூர் முடி நாகராயராலும் பாடப்பெற்றிருக்கிறான். சோறு எனும் சொல்லை நூறு பாடல்களிலாவது பாட்டும் தொகையும் கையாண்டிருக்கின்றன.

 சோழன் கரிகால் பெருவளத்தானை, கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினபாலை எனும் நூலில் பாடும் போது, விருந்துண்டு ஆனா பெருஞ்சோற்று அட்டில் என்கிறார். விருந்தினர் உண்டும் குறையாத பெருஞ்சோறு உடைய சமையற் கூடம் என்பது பொருள். மதுரைக் காஞ்சியில், மாங்குடி மருதன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாடும் போது, 'புகழ் படப் பண்ணிய பேரூன் சோறு' என்கிறார் . பலரும் புகழும்படியாகச் சமைத்த பெரிய கறித்துண்டுகள் நிறைந்த சோறு எனும் பொருளில். பிரியாணி என்ற சொல்லின் தமிழாக்கம் அல்ல ஊன்சோறு .

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடுகிறார், பல்குன்றக் கோட்டத்துச் செங்கன் மாத்துவோன் நன்னன் சேய் நன்னனை, மலைபடுகடாம் எனும் நூலில் பாடும் போது, 'முள்ளரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு' என்று குறிப்பிடுகிறார். முள் நீக்கி ஆக்கிய மீன் துண்டங்கள் கலந்த வெள்ளை நிறத்து அரிசியின் வெண்சோறு என்பது பொருள். அரி என்றால் அரிசி. மலையாளம் இன்னும் அரி எனும் சொல்லை அரிசியைக் குறிக்க வழங்குகிறது.

 கலித்தொகை நெல் எனும் பொருளில் சோறு எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது, 'பெருந்திரு நிலை இய வீங்கு சோற்று அகன்மனை' என்பது பாடல் வரி. நிலைத்த பெரும் செல்வம் உடைய, பத்தாயங்கள் நிறைய நெல் கிடக்கும்  பெரிய மனை என்பது பொருள் . மருதன் இளநாகனார் எழுதிய மருதக்கலிப் பாடல் வரி அது. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்துப் பாடியவர் குமட்டூர் கண்ணனார்.

 'எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை

மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு'

 என்பது பாடல் வரி, அரிவாளால் அறுத்த ஆட்டிறைச்சித் துண்டங்களை உடைய வெண் நெல்லின் வெண் சோறு என்பது பொருள்.

 வியப்பாக இருக்கிறது! எத்தனை ஆயிரம் ஆண்டுகள் புழங்கப்படுகிற சொல் சோறு. இன்றைய கேரளத்து நெய்ச்சோறு, பண்டய நம் பண்பாட்டு எச்சம் தான். இன்று சோறு என்று சொல்லக் குறைச்சலாக, அவமானமாக, இழிவாக இருக்கிறது நமக்கு. சோறு எனும் சொல்லுக்கு மாற்றாக சாதம், RICE, சாப்பாடு, என்கிறார்கள். பின்னாட்களில் பாத் அல்லது சாவல் எனும் சொற்களும் தமிழ் நாவில் புரளக்கூடும்.

பண்டு ஒரு இந்திப்படத்தில், 'என்னாச்சு? என்னாச்சு? என்னாச்சு ?' என்று வினவும் முகத்தான், நகைச்சுவை ஆண் கதாப்பாத்திரம் "கியா பாத் ஹை? கியா பாத் ஹை? கியா பாத் ஹை ?'' என்பான் நகைச்சுவை பெண் பாத்திரம் சாந்தமாக, "டால் பாத் ஹை! '' என்று பதில் சொல்லும் . டால் பாத் என்றால் பருப்புச் சோறு என்று பொருள், தயிர்ச்சோறு, தயிர் சாதமாகி, CURD RICE, ஆனதைப் போல் பருப்புச்சோறு, பருப்பு சாதமாகி, DHAL RICE ஆகி நாளை டால் பாத் ஆகும்.

 சோறு என்னும் சொல்லுக்குப் பேரகராதி, boiled rice  வேக வைத்த அரிசி என்று முதற்பொருள் தருகிறது. புறநானூற்றில், வடம வண்ணக்கன் தாமோதரனார் எனும் புலவர், பிட்டம் கொற்றன் எனும் மன்னனை பாடும் பாடலில்

 'ஏற்றுக உலையே; ஆக்குக

சோறே கள்ளும் குறைபடல் ஓம்புக'

 என்கிறார். உலை ஏற்றுங்கள், சோறாக்குங்கள், கள்ளும் குறையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள் என்பது பொருள்.

 சோறு எனும் சொல்லுக்கு, பனை, தென்னை, கமுகு, ஈந்து போன்ற மரங்களின் உள்ளீடு என்பது இரண்டாவது பொருள். ஆங்கிலத்தில் pith in palms and other plants என்கிறார்கள். மூன்றாவது பொருள் தாழை மடல் போன்றவற்றின் உள்ளீடு. அதாவது கற்றாழை போன்ற தாவர மடல்களின் உட்பகுதி. சோறு எனும் சொல்லின் நான்காவது பொருள் முக்தி. திருவாசகம் சோறு எனும் சொல்லை முக்தி எனும் பொருளில் பயன்படுத்துகிறது என்கிறார்கள். ஒருவேளை, சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பதற்கு அப்படியும் பொருள் கொள்ளலாம் போலும். சோறு எனும் சொல் பரணி நட்சத்திரத் தையும் குறித்தது.

சோறு அரைத்துக் கிள்ளிக்காய வைத்து எடுக்கும் வடாம் அல்லது வற்றல், சோற்றப்பளம் என வழங்கப்பட்டது. சோற்றுக் கட்டியை சோற்றமலை என்று குறிக்கிறது பெரும்பாணாற்றுப்படை. சோறு விளம்பும் சிப்பல், சோற்றலகு என்றும் குறிக்கப்படுகிறது.

 ஒரு வேளை அளவு சாப்பாட்டுக் கடையில் சோறு முன்கூராகவே கொண்டு வைக்கப்படும் வட்டில், தட்டு, தட்டம் என்பதுவும் சோற்றலகு ஆகலாம். சோற்றுக்கற்றாழை மடலுக்கு சோற்றிலை என்று பெயர் வழங்கப்பட்டிருக்கிறது, உண்ட சோற்றுக்குச் செய்யும் கைம்மாறு, 'செஞ்சோற்றுக் கடன்' எனப்பட்டது. செஞ்சோறு என்பது சம்பா அரிசிச் சோறாக அல்லது செம்மையான சோறாக இருக்கலாம். 'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழந்தாயடா, கர்ணா! வஞ்சகன் கண்ணனடா! என்றொரு சினிமாப் பாட்டு பலகாலமாகப் புகழ்பெற்றது.

 கோயில் பணியாளர்களுக்கு சம்பளமாக சோற்றுக் கட்டி வழங்கப்பட்டது. கோயிலுக்கு கும்பிடச் செல்வோர் அதில் ஒன்றிரண்டு  உண்டைகள் காசு கொடுத்து வாங்கி கடையில் மோரோ, தயிரோ, ஊறுகாயுடன் வாங்கி, கோயில் பிரகாரத்தில் அமர்ந்து உண்டு பசியாறியதும் உண்டு. சோற்றுக்கட்டியின் மாற்றுப்பெயர்கள் அன்னக்கட்டி, அன்ன உருண்டை, உண்டகட்டி, வெண்சோற்றுக்கட்டி என்பன. வெண்பொங்கல் என்பது வெண்சோற்று கட்டி அல்ல.

கவி காளமேகம், உண்டு பசியாற, எதிர்ப்பட்ட சிறுவனிடம் 'சோறு எங்க விக்கும்?' என்று கேட்டிருக்கிறார், அதற்குச் சிறுவன் சொன்ன பதில் 'தொண்டையில் விக்கும்'  என்பது. அன்னம் விற்கும் இடம் சோற்றுக்கடை எனப்பட்டது வீட்டில் அனைவரும் இன்னும் சாப்பிட்டு முடியவில்லை என்பதற்குத் தாயார் சொல்வது, 'இன்னும் சோத்துக் கடை ஒதுங்கவில்லை' என்று.

 சோற்றுக்கு ஏங்கியிருப்பவனை, சோற்றுக்கு வீங்கி என்றனர். வலக்கையை சோத்துக்கை என்றும் இடக்கையை ‘பீச்சாங்கை'  என்று புழங்கினோம், உடம்பையை சோற்றுத்துருத்தி என்றார் தாயுமானவர். பேருணவு கொண்டபின் வரும் உறக்கத்தை, சோற்று நித்திரை என்றார்கள். சாப்பாட்டு ராமனைக் குறித்த சொல், சோற்றுப் பக்கரை, பக்கரை என்றால் பை. நாங்கள் சிறுவராய் இருந்த போது, தாள் உறை ஒட்ட பயன்படுத்தினோம் சோற்று பருக்கைகளை. அது சோற்றுப்பசை எனப்பட்டது. தினக்கூலிக்கு வேலைக்கு வருபவர்களுக்கு மதிய உணவுக்கு கொடுக்கப்படும் காசு சோற்றுப்படி எனப்பட்டது. எம்மூரில் வெள்ளக்குடி என்றொரு சொல்லும் வழங்கியது. ஒரு அரிசியின் சோறே சோற்றுப்பருக்கை. சோற்று பத்து எனப்பட்டதும் உண்டு. அதிலிருந்து வந்த சொல்லே, பத்துப் பாத்திரம்.

 வெந்த சோற்றின் கஞ்சியை வடிக்க ஒரு பலகை உண்டு. முக்காலங்குல கனத்தில், பூவரச இலை வடிவத்தில், சோற்றுப் பானையின் வாயளவில் பொருந்தும் படி, கைப்பிடிக் காம்புடன் . சோற்றுப் பானையின் வாயில் - அது பித்தளைப் பானையோ, செம்புப் பானையோ மண் பானையோ - சோற்றுப்பலகையைச் செருகி பானையைத் தலைகுப்புற சாய்த்து வைத்து, கஞ்சி வடிப்பார்கள். இரைப்பையே சோற்றுப்பைதான். வாசலில் எவராவது அவசரமாகக் கூப்பிட்டால், "கொஞ்சம் இரி, சோறு கமுத்தீட்டு வாறன்'' என்பார்கள் பெண்டீர். சோறு வடித்த கஞ்சி தானமாக வாங்கிப்போக, இல்லாப்பட்டவர் வருவதுண்டு. நானும் வாங்கி வந்ததுண்டு.

இரவலர்க்கு இடும் சோறு பிச்சைச்சோறு. பிச்சைச் சோறு என்பது எச்சில் சோறல்ல, கைப்பிள்ளைக் காரிகள், மத்தியானம் பொங்கப் போக்கற்றவர்கள், அடுத்த வீடுகளுக்குப்போய், தானமாக, கைப்பிள்ளைச் சோறு வாங்கிவருவார்கள்,அவர்கள் கொண்டு வரும் பாத்திரத்தில் பிள்ளைக்கும் அரை வயிற்றுக்குத் தள்ளைக்கும் காணும் படி சுடுசோறு போட்டு, அதன் தலை மேல் குழம்பும் ஊற்றிக்கொடுப்பார்கள்.

 பள்ளி, கல்லூரி நாட்களில் மதிய உணவு கொண்டுபோனது சின்ன பித்தளைத்தூக்கு வாளியில். அன்று அலுமினியம், கறுக்காத இரும்பு அறிமுகம் ஆகியிருக்கவில்லை. தூக்கு போணி என்றும் சொல்வதுண்டு. கொங்கு நாட்டில் அதைத் தூக்கு போசி என்பர்.

 அந்த பாத்திரத்துக்கு சோத்து வாளி என்று பெயர் . வாளியில் அன்றி, வாழையிலை, தேக்கிலை, தையல் இலை, தாமரை இலைகளில் சோறு பொதிந்து கொண்டு போனால் அது சோற்றுப் பொதியல் . கொங்கு மண்டலத்தில் கமுகம்பாளையில் கொண்டு போனார்கள். இன்று பாக்கு மட்டையில் செய்த சோற்றுத்தட்டுகள் தயாராக வாங்கக்கிடைக்கின்றன. Disposable  and eco-friendly.

கொங்கு மண்டலத்தில் சமைத்தலை 'சோறாக்குதல்' என்பார். சமையல்காரனுக்கு,வைப்புக்காரன்,குசினிக்காரன், தவசிப்பிள்ளை, சோறாக்கு எனப் பெயர்கள் இருந்தன. இன்று chef என்றால் அர்த்தமாகும் நமக்கு. நன்கு பதமாக வெந்த சோற்றைக்குறிக்க சோறு மலர்ந்தது, சோறு பொலிந்தது என்றனர். அவரவர் தேவை சார்ந்து சோற்றைக் குழையவிட்டனர். அல்லது பொல பொலவென வடித்தனர்.

 கைக்குழந்தைக்கு முதன் முறையாக சோறு கொடுப்பது ஒரு சின்ன விழாவாக கொண்டாடப்பட்டது. 'சோறூட்டல்'  என்று பெயர். சோறு கொடுத்தல் என்றனர். எச்சில் புரட்டினர் என்பார் நாஞ்சில் நாட்டார். வசதியுடையோர் குருவாயூர் உன்னிகிருஷ்ணன் சந்நிதியில் சோறூட்டுவர். போக்கத்த இந்த கட்டுரை ஆசிரியன், கும்பிட போன இடத்தில் தன் பிள்ளைகளுக்கு பிரசாதச் சோற்றை ஊட்டினான். மொட்டைபோட்டதும் அப்படித்தான். மகளுக்குத் திருச்சானூரிலும், மகனுக்குத் திருச்செந்தூரிலும், எந்த திட்டமும் முன்னறிவிப்பும் இன்றி. காது குத்தியது மும்பை நகரத்து டோம்பிவிலி ஊரின் பொற்கொல்லர் கடையில். எதுவும் குறைந்து போய்விடவில்லை, அப்பர் தானே சொன்னார், 'செல்வம் என்பது சிந்தையின் நிறைவே' என்று?

 அந்தச் சோற்றைத்தான் இன்று எங்கு தேடினாலும் காணோம்! சோறு எனும் சொல் அகராதிகளிலும் பண்டைய நூல்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது. சோறென்று சொல்லக் கூசுகிறான் தமிழன். அண்மையில்,மலேசிய நாட்டில், கெடா மாநிலத்தில் தியான ஆசிரமம் வைத்து, திக்கற்ற மாணவருக்குக் கல்வி வழங்கும் அரும்பணி செய்யும் சுவாமி பிரம்மானந்த சரசுவதி கோயம்புத்தூர் வந்திருந்தார், நகரின் புகழ்பெற்ற தொடர் உணவு விடுதி ஒன்றுக்கு உணவருந்தப் போனார், உணவருந்திக்கொண்டிருக்கும் போது சோறு கொண்டு வரச்சொன்னார், பரிமாறுபவன் கேட்டானாம் "ரைசா சார்?'' என்று.

Shit, மலம், பீ, எனும் சொற்கள் புழங்குகிற அளவில் கூட சோறு என்ற சொல் புழக்கத்தில் இல்லை, தின்ற சோற்றுக்கு நன்றி வேண்டாமா?

 பரவலாக இன்று நாம் பயன்படுத்தும் சொல் சாதம், சாதம் எனும் சொல்லை, சமற்கிருதம் என்கிறார் பேராசிரியர் அருளி. சாதம் எனும் வடசொல்லுக்கு அவர் தரும் பொருள்கள் - சோறு, பிறப்பு, தோன்றுவது, இளமை, உண்மை, கூட்டம்.

மாயா பஜார் எனும் தமிழ் சினிமாவின் பிரபலமான பாடல்  'கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்!' இன்னொரு வரி 'பூரி கிழங்கு பாரு, அதுவே  நமக்கு ஜோரு!' சாதம் சரி, கிழங்கு எனப்பட்ட உருளைக்கிழங்கு பாரதத்துக்கு என்று வந்தது என்ற போதமின்றி எழுதப்பட்ட பாடல் வரி, கேழ்வரகில் நெய் வடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

சாதம் என்பது தப்பான சொல் இல்லை, தொல்காப்பியரின் அனுமதியும் உண்டு. மொழிக்குள் சாதம் எனும் சொல் புழங்குவதில் இல்லை நம் வழக்கு, அதுவும் மற்றுமொரு உயர்ந்த மொழியின் சொல்லே! மேலும் வால்மீகியும் வியாசனும் பத்ருஹரியும், காளிதாசனும் சாதித்த மொழி. எந்த மொழியும் ஓர் அடக்குமுறை ஆயுதமாக, பண்பாட்டு ரீதியில் கீழ்ப்படுத்தும் யுத்தியாகப் பயன்படுத்தப்படும்போது நமக்கு வெறுப்பும் எதிர்ப்பும் பகையும் உண்டு.

எனது முறையீடு ஒன்று தான். ஐயாயிரம் ஆண்டுகளாக நம் மூதாதையர் உயிர்காத்த, உயிர் பேணிய சொல் இன்று தாழ்வாகப் பார்க்கப்படுகிறது. அருவருப்போடு பயன்படுத்தப்படுகிறது. தமிழனுக்கு சோறு தின்றேன் என்று சொல்வது பீயைத் தின்றேன் என்று சொல்லும் உணர்ச்சியைத் தருகிறது  போலும்! மேலும் ஓர் ஐயம், கலப்பற்ற தனித் தமிழாளர் வீடுகளில், மொழியை உய்விக்க வந்த இனமானக் கொழுந்துகளின் பலகோடி மதிப்புறும் கீற்றுக் குடிசைகளில், சோறு என்ற சொல் பயன்பாட்டில் உண்டா?

ஜனவரி, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com