தமிழின் நாவல் வடிவம் நவீன எழுத்தாளர்களால் பெரும் பாய்ச்சலுக்கு உள்ளாகி இருக்கிறது. மிக அற்புதமான படைப்புகள் ஆண்டுதோறும் பிரசவம் ஆகிக்கொண்டே இருக்கின்றன. தமிழ் நாவல் எழுத்தாளர்கள் சிலரிடம் அவர்கள் நாவல் எழுதுவது குறித்து பத்து கேள்விகளை முன்வைத்தோம். இவை அவர்களின் படைப்புகள் பற்றிய நேரடிக் கேள்விகள் அல்ல. அவர்களின் எழுத்துமுறை தொடர்பானது. கேள்விகள் இங்கே.
1) ஒரு நாவல் எழுத எவ்வளவு காலம் எடுத்துக் கொள்-வீர்கள்? அதிக காலம் எடுத்த உங்கள் நாவல் எது?
2) என்னமாதிரியான கள ஆய்வுகள் செய்வீர்கள்?
3) கையால் எழுதுவீர்களா? கணினியிலா?
4) எத்தனை முறை திருத்தி எழுதுவீர்கள்?
5) நீங்கள் எழுதியதும் உங்கள் முதல் வாசகர் யார்?
6) உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள் யார்?
7) நாவல் என்ற வடிவத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
8) ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் எழுதுவீர்கள்?
9) ரைட்டர்ஸ் பிளாக் என்று சொல்லப்படுவதில் நம்பிக்கை உண்டா?
10) நாவலின் வடிவம், இலக்கு பற்றிய உங்கள் புரிதல் என்ன?
பதில்கள் :
1. அது நாவலின் தன்மையையும் என் மன நிலையையும் பொறுத்தது. யாரும் யாருடனும் இல்லை- என் முதல் நாவல். 4 மாத கால அளவில் எழுதி முடித்தேன். அஞ்சாங்கல் காலம் ஆறு மாதத்தில் எழுதினேன். இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவல் போன மாத இறுதியில் ஆரம்பித்தேன். மகனுடைய விடுமுறையால் இடையில் எழுதாமல் நிற்கிறது.
2. நான் பார்த்த ஊர்களை என் நாவல்களுக்கான நிலவெளியாக பயன்படுத்துவது உண்டு.
3. கையால் எழுதிகொண்டிருக்கிறேன்.
4. நாவல்களை Rewrite செய்வதே இல்லை. நிறைய Edit செய்வேன்.
5. நான் தான்.
6. நிறைய எழுத்தாளர்கள் கவிஞர்களைப் பிடிக்கும். ஆதர்சமென்று யாருமில்லை.
7. நாவல் என்கிற மாபெரும் வெளி தருகிற சுதந்திரம், நான் எந்தக் கதாபாத்திரமாக வேண்டுமானாலும் கூடு விட்டுக் கூடு பாயும்
சுவாரஸ்யம், எங்கோ ஆரம்பித்த என்னை எதிர்-பாராத திசைகளிலெல்லாம் இழுத்துச் செல்லும் புதிர்த்தன்மை இதெல்லாம் நாவல் மீது வசீகரத்தை ஏற்படுத்தியது. வாழ்க்கையே ஒரு மாபெரும் நாவல் தானே! எனவே நாவல்
வாழ்க்கைக்கு அணுக்கமான இலக்கிய வடிவம் என்று தோன்றுகிறது.
8. தினம் எழுதுவது இல்லை. ஆனால் ஒரு படைப்பின் தீவிரத்தோடு இயங்கும் போது பகலும், இரவும் பத்து மணி நேரம் கூட எழுதியிருக்கிறேன்.
9. எனக்கு வந்ததில்லை.
10. எந்த வடிவத்தையும் அது கொள்ளலாம். சில சமயம் அது என்ன வடிவம் கொள்ளப்போகிறது என்பது எனக்கு தெரியாது. அது ஒரு மாபெரும் அலைகளாடும் கடல். வடிவங்களை நாவல் அடைந்து கொண்டிருப்பதே அதன் புதுமை!
1. அஞ்சலை நாவல் எழுத ரெண்டு வருசம் ஆச்சு. கோரை, நெடுஞ்சாலை ரெண்டையுமே ஒரு வருசத் தில எழுதிட்டேன். வந்தாரங்குடி எழுத மூணு வருசம் ஆச்சி.
2. என் நாவல்கள் எல்லாம் நான் பாத்த, எங்க ஊரு விசயங்கள் தான். கண்ணுக்கு முன்னாடி இருக்கிற மனுசங்க பத்தி எழுத என்னா பெரிய கள ஆய்வு, கட்டுரை வாசிப்பு வேண்டிக் கிடக்கு? வந்தாரங்குடி எழுதினப்போ நில எடுப்பு போராட்டங்களை நான் நேரில் பாத்தது இல்ல. அதற்காக மட்டும் சம்பந்தப்பட்டவங்கள நேரில் பார்த்து விவரம் தெரிஞ்சிகிட்டேன்
3. வந்தாரங்குடி நாவல் வரை கையால்தான் எழுதினேன். இப்ப எழுதிக்கிட்டிருக்கிற பேரழகி நாவலை தட்டச்சு செய்றேன்.
4. அஞ்சலை நாலுதடவை எழுதுனேன். மத்த தெல்லாம் எப்டியும் மூணு முறை ஆயிடும். ரெண்டு தடவ எழுதி மூணாவது தடவ பதிப்பாளர் வசந்தகுமார் அறிவுரைப்படி எழுதுவேன். திருத்த திருத்த செழுமை!
5.முதலில் பதிப்பாளர்கள் தான் வாசிச்சிட்டு இருந்தாங்க. கல்யாணம் ஆனப்பறம் இப்ப என் வூட்டுக்காரங்க வாசிச்சுப் பாக்கறாங்க.
6. கவிஞர் பழமலய். ஆரம்ப காலத்தில் அவரிடம் நிறைய கத்துகிட்டு இருக்கேன், ராசேந்திர சோழன்,
சு. வேணுகோபால், நாஞ்சில்நாடன் பிடிக்கும்
7. கவிதை, சிறுகதை, நாவல், அகராதி என்று பல வகைகளில் எழுதி உள்ளேன். நாவல் வடிவைத் தெரிவு செய்ய பரந்துபட்ட, ஒரு பெரிய பரப்பு கிடைக்கிறது என்பதுதான் காரணம்.
8. இப்பல்லாம் நேரம் கிடைக்கிறப்ப எழுதுறேன்.
9. தானே புயலில் கூரை வூடு போயிடுச்சி. கல் வூடு கட்டுனேன். அப்போதிருந்த மனநிலையில் எழுதமுடில.
10. நான் சரியான வடிவில் நாவல் எழுதுகிறேனா என்று வாசகர்கள்தான் சொல்லணும். நமக்கு தெரிந்த விசயத்தைச் சொல்றோம். அதை சரியா உள்வாங்கி சிலபேரு புரிஞ்சிக்கிடறாங்க.
1. ஜீ.சௌந்தராஜனின் கதை என்கிற நாவல்தான் என்னுடைய முதல் நாவல். அதிகபட்சமாக அந்த நாவலை 5 வருடங்களாக எழுதினேன். முறிமருந்து நாவலின் முதல்படியை 30 நாளில் எழுதி முடித்தேன். காலகண்டம் நான்கு வருஷங்கள். மருக்கை நாவலை ஒரு வருடமாக எழுதினேன். ஒவ்வொரு நாவலும் தான் பூர்த்தியாகிறவரை அதற்கான உழைப்பைக் கோருகிறது.
2. கதை நடக்கும் காலத்தையும் இடத்தையும் என் கற்பனை தொடுவதற்கு முன்பாக ஒரு முறையாவது நேரில் சென்று பார்த்துவிட்டுவருவேன். இப்போது மலையடிவாரப்பகுதியில் வாழ்ந்த குதிரைக்காரர்களைப் பற்றியும், கழுதை ஓட்டியவர்களைப் பற்றியும் நாவல் எழுதவுள்ளேன். அதற்காக மலைக்கு வாரத்திற்கு ஒருமுறையாவது சென்று வருகிறேன்.
3. 2000 வரை கையால்தான் எழுதினேன். இப்போது கணினி.
4. திருப்தி ஏற்படும் வரை.
5. இதுவரை யாரும் எனக்கு வாய்த்ததில்லை.
6. 1995ம் ஆண்டு எழுதத்தொடங்கினேன். அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு ஜெயமோகன்தான் ஆதர்சமான படைப்பாளி.
7. வாழ்க்கையை முழுமையாக சொல்ல வேண்டு-மென்பதற்காகத்தான். என்னளவில் தமிழில் இந்திய தரத்திற்கு ஒருநாவலை எழுதிவிடவேண்டுமென்கிற வேகம் என்னிடம் இருக்கிறது. பதிப்பகம் எனக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. நல்ல பதிப்பகத்திற்கு என்னைப் போல சில எழுத்தாளர்கள் காத்திருக்கிறார்கள்.
8. ஒருநாள் முழுக்க எழுதியிருக்கிறேன். ஒரு நாள் முழுக்க எழுதாமலும் இருக்கிறேன்.
9. இல்லை.
10. காலமும் வெளியும் இலக்கியத்திற்கு முக்கியம் என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழில் அதற்காக சாத்தியத்தை முதலில் கொண்டு வந்த நாவல் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் தான். அந்த நாவல் வந்த பிறகுதான் பலரும் 300 பக்கத்தைத் தாண்டி தங்களது பேனாவை கொண்டுச் சென்றார்கள். தாண்டினார்களே தவிர அப்பக்கத்தில் நாவலுக்கான காலத்தை மடித்து வைக்கவில்லை. அல்லது விசிறி போல பிரித்துக் காட்டவில்லை. நாவல் என்பது ஒருவாழ்வை முழுமையான அளவில் சொல்ல முயலுவது. அந்த அளவில் பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது நல்ல உதாரணம்.
1. அது அந்த நாவல் கோருகிற பரப்பைப் பொறுத்தும் இயங்கும் மனநிலையாலும் அமைவது. அளம் நாவலை ஒன்பது நாட்களில் முடித்தேன். இப்போது எழுதி வரும் புதினத்தைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதிவருகிறேன்.
2. நமது தமிழ் வாழ்க்கை திணை ஒழுக்கங்கள் கொண்டது. அந்தப் பின்னணி பிழையாக அமைந்துவிடக்கூடாதென எண்ணுவேன். இதற்காக களப்பயணங்கள் மேற்கொள்வதுண்டு.
3. பெரும்பாலும் கையால் எழுதுகிறேன். இரண்டாவது பிரதியை கணினியில் டைப் செய்வேன்.அவசரத்துக்கு எனது போனிலும் எழுதுவேன்.
4. தோரயமாக மூன்று முறைகள். சில சமயங்களில் திருத்தமே இல்லாமல் கச்சிதமாகவும் அமைந்திருக்-கிறது.
5. எனது கணவர் மற்றும் பிள்ளைகள்.
6. ஆதர்ச எழுத்தாளர் என்பதைவிட பிடித்த எழுத்தாளர்கள் என்று திருத்திக் கொள்ளலாம். அது நீண்ட பட்டியல்.
7. என்னிடமிருப்பவை முடிவுறா கதைகளென்பதாலோ என்னவோ. இது உள்ளுணர்வின்பால்பட்டது. சிறு கதைகள், கட்டுரைகளும் ஓரளவு எழுதவே செய்கிறேன்.
8. ஒரு நாளைக்கு 30 பக்கங்களெல்லாம் எழுதியிருக்-கிறேன். எழுதாமலும் இருந்திருக்கிறேன்.
9. எனக்கு அப்படி ஏற்படவில்லை. குடும்ப சூழல், பிள்ளைகளின் கல்வி போன்றவற்றிற்காகவும் நேரம் தேவைப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளில் தீவிரமாக எழுத முடியாமல் போனது. இனி வரும் ஆண்டுகளில் நிறைய எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
10. நாவலின் வடிவம் பரந்துபட்டது. பன்முகத் தன்மை கொண்டது.வாழ்வின் முரண்பட்ட இழை-களால் கட்டப்படுவது. யதார்த்தத்தை, கனவை, லட்சியத்தை,விருப்பத்தைக் கோர்த்துக் கட்டப்படுவது. முழுமை-யற்ற பகுதி-களைக் கொண்டு முழுமையை நோக்கி பயணிப்பது. வெவ்வேறு இயல்-பினரை, மொழியை அழகியலை வாழ்வை கற்பனையை அருகருகே இணைத்துப் பார்ப்பதென நிறையசொல்ல முடியும்.
1. என் முதல் நாவலான பழியை இரண்டு பாகங்களாக எழுதினேன். முதல் பாகத்தை ஒரு மாதத்தில் முடித்து விட்டேன் அடுத்த பாகத்தையும் ஒரே மாதத்தில் எழுதி முடித்தேன். ஆனால் இடையில் நான்கு மாதங்கள் எதுவும் எழுதவில்லை. அந்நாவல் எனக்குள்ளேயே ஊறிக்கிடந்தது. ஒரு கட்டத்தில் அது மொத்தமாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. நான் அதிக காலம் எடுத்துக் கொண்ட நாவல் ஓரிதழ் பூ. இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்நாவல் என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. எப்போது முடியும் எனவும் தெரியவில்லை.
2. சில பகுதிகளை எழுத நண்பர்களின் உதவியை நாட வேண்டியும், சில இடங்களுக்கு பயணிக்க வேண்டியும் இருந்தது. தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலிற்கு விரிவான வாசிப்பு தேவைப்படுகிறது. அதையும் ஒரு பக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.
3. கணினியில் எழுதுவேன்.
4. அதிகபட்சம் இரண்டு முறை. நான் மிக மெதுவாக எழுதுவும் வழக்கம் உள்ளவன். எனவே திருத்தங்கள் பெரிதாய் தேவைப்படாது.
5. இணைய வாசகர்கள்தாம். அவர்களே என் அறிதலுக்கான துணையாகவும் நிற்கிறார்கள்.
6. நிறைய இருக்கிறார்கள். குறிப்பிட்டு ஒருவரை மட்டும் சொல்ல வேண்டுமெனில் கோபி கிருஷ்ணன்.
7. தனிப்பட்ட வகையில் என்னால் மிகக் கச்சிதமாக எழுத முடியாது. சற்று விலாவரியாக, சுதந்திரமாக, பக்கம் குறித்த பிரக்ஞை இல்லாது எழுத நாவல் வடிவம் சரியாக இருக்கிறது.
8. எழுதும் அட்டவணை எனக்குக் கிடையாது. காதலில் மட்டுமல்ல எழுத்திலும் கடிகார நேரம் கிடையாது :)
9. உண்டு. இதற்கு அடிக்கடி உள்ளாகிறேன்.
10. நாவல் வடிவில் முழுமை சாத்தியமாகிறது. என்னைப் போன்ற பலரும் எழுத்தை நோக்கி வர க்ளாசிக்குகள் எனப்படும் பெரும் நாவல்கள்- குறிப்பாக ரஷ்ய, வங்காள மற்றும் கன்னடப் பெரும் நாவல்கள் காரணமாக இருந்தன. நாவல் வடிவின் இலக்கு என்பது அது இயங்கும் தளத்திற்கு மிக நேர்மையாக இருப்பதாகும்.
1. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை ஆகிறது. அதிக காலம் எடுத்தது, ‘வெட்டுப்புலி’ நாவல்.
2. மொழி, வரலாறு, புவியியல், அறிவியல் தகவல்களை முக்கியமாகக் கருதுகிறேன். சம்பந்தப்பட்ட காலங்களில் வாழ்ந்தவர்கள் இருந்தால் சந்தித்துப் பேசுவேன். நூல்களைத் தேடிப் படிப்பேன். நாவலில் வரும் இடங்களைச் சென்று பார்ப்பேன்.
‘வனசாட்சி’ நாவலுக்காக இலங்கையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ‘ஆபரேஷன் நோவா’ நாவலுக்கு அறிவியல் தரவுகளுக்காகக் கடுமையாக உழைத்தேன். அறிவியல் மாணவர்கள் பலர் பாராட்டினர். எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம் ஆகியோர் பாராட்டுக்கள் முக்கியமானவை. ஓர் ஐ.ஐ.டி-யன் அதை ஹார்டு சயின்ஸ் ஃபிக்ஷன் எனச் சொன்னார்.
3. 2005 முதல் கணினியில் எழுதிவருகிறேன்.
4. பத்து முறைக்குக் குறையாமல்.
5. என் மகன், மகளிடம் ஆலோசிப்பேன். நண்பர்களிடம் படிக்கக் கொடுப்பேன்.
6. புதுமைப்பித்தன், சுஜாதா, அ.முத்துலிங்கம்...
7. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை, சூழலை விவரிப்பதற்கு நெடிய பரப்பு தேவைப்படும்போது நாவல் வடிவத்தைத் தேர்ந்தெடுப்பேன்.
8. சுமார் ஒரு மணி நேரம்.
9. இந்த ஆண்டு முழுவதும் எழுதத் தொடங்கிய பலவற்றை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். எழுதவே தோன்றவில்லை. எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களிடம் கேட்டேன். ‘இதுவரை எழுதியதைவிட மேலும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற முனைப்புதான் காரணம்’ என்றார்.
10. வாசகர்களை சோர்வடையவோ, வெறுப்-படையவோ செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எழுத்து சமூகத்துக்குப் பயன்தர வேண்டும்.
1. அடிப்படையில் வெகுஜன எழுத்தாளன். வார இதழில் தொடர்கதை எழுதுபவன். எனவே வாரம்தோறும் அந்தந்த வாரத்துக்கு தேவையான அத்தியாயம் எழுதுவேன்.
2. எந்த சப்ஜெக்டில் எழுதப் போகிறேனோ அது தொடர்பான அனைத்து நூல்களையும் வாசிப்பேன். நிஜ இடங்களில் ஃபேன்டஸி கலப்பது பிடிக்கும் என்பதால் குறிப்பிட்ட அந்த இடம் / ஊருக்கு சென்று வருவேன்.
3. கணினி
4. அந்தந்த அத்தியாயங்கள் அச்சுக்கு செல்லும் இறுதி நொடி வரை எழுதியதை படித்துப் பார்த்து திருத்துவேன்.
5. நண்பரும் சக பயணியுமான யுவ கிருஷ்ணா.
6. ஒரிஜினாலிட்டி உள்ள அனைவருமே. பேச்சுக்கு சொல்லவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. எல்லோருமே தங்கள் முன்னோர்களின் தொடர்ச்சிதான் என்பதில் அதீத நம்பிக்கை உண்டு.
7. சக மனிதர்களோடு சுவாரஸ்யமாக உரையாட பிடிக்கும். எனவே...
8. பத்திரிகையாளன். எழுத்துதான் தொழில். எனவே அன்றைய நாள் எவ்வளவு நேரம் நிர்ப்பந்திக்கிறதோ... அவ்வளவு நேரம் எழுதுவேன்.
9. இல்லை. ஒரு டீ மாஸ்டருக்கு ‘டீ ப்ளாக்‘ ஏற்படுவ-தில்லை. அதுபோல்தான் எழுத்தும். என்ன மூளை உழைப்பு என்பதால் சில நேரம் சோர்வு ஏற்படும். அப்போது சற்று ஓய்வு எடுத்துக் கொண்டால் போதும்.
10. நாவலின்வடிவம், இலக்கு ஆகியவற்றில் எழுத்தாளரைவிட வாசகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எழுதுபவரை விடபடிப்பவர்களுக்குஎல்லாவிஷயங்களும்தெரிந்திருக்கிறது. இன்றையதகவல்தொழில்நுட்பம்அதைசாத்தியப்படுத்தி இருக்கிறது. எனவே அவர்கள் அறிந்தவற்றையே வேறொரு கோணத்தில் மறுபடியும் சொல்லமுற்படுகிறேன்
1. பயணம்’ நாவலின் முதல் படியை 2014 ஜனவரி 30இல் தொடங்கி அதே ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று முடித்தேன். ‘பொன்னகரம்’ நாவலின் முதல் படியை 2013இல் இரண்டு மாதங்களில் எழுதி முடித்தேன்.
2. பயணம்’ நாவலில் வரும் பல அம்சங்கள் என்னுடைய 30 ஆண்டுக் கால அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதால் தனியாகக் கள ஆய்வு தேவைப்படவில்லை. ‘பொன்னகரம்’ நாவலுக்காக ஒரு ரவுடியின் உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட சிலரைச் சந்தித்து விரிவாகப் பேசியிருக்கிறேன்.
3. நேரம் இருக்கும் என்றால் கையால் எழுதுவதையே விரும்புகிறேன்.
4. திருத்துவது, சேர்ப்பது, குறைப்பது எல்லாம் சேர்ந்து ஏழெட்டு முறை பிரதிக்குள் பயணம் செய்வதுண்டு.
5. பெரும்பாலும் எழுத்தாளரும் நெருங்கிய நண்பருமான ஜே.பி. சாணக்யா.
6. லெவ் தல்ஸ்தோய், ஃபியதோர் தாஸ்தாயெவ்ஸ்கி, காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான ஆதர்சம். இவர்களைத் தவிரவும் பலர் உண்டு.
7. வேறு எந்த வடிவிலும் எழுத முடியாது என்று தோன்றியதால்.
8. சராசரியாக ஒரு மணிநேரம். ஒவ்வொரு நாளும் எழுதித்-தான் தீருவேன் என்பதும் இல்லை.
9. இல்லை.
10. நாவல் என்பது ஒட்டுமொத்த வாழ்வுக்கு இணையான அகண்டாகாரமும் வீச்சும் ஆழமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்லலாம். நாவல் என்பது சொல்லப்பட்ட வாழ்வினூடே சொல்லப்படாத வாழ்வைப் பதிவுசெய்வது. காலத்தை, வரலாற்றைக் கலாபூர்வமாகப் பதிவுசெய்வது. இதை என்னுடைய புரிதல் என்றும் சொல்லலாம். கனவு என்றும் சொல்லலாம். நடைமுறையில், என்னுடைய இரண்டு நாவல்களும் தொடங்கிய இடம் ஒரு கேள்வி. ‘பயணம்’ நாவல் ஒரு நண்பரிடத்தில் ஏற்பட்ட நம்ப முடியாத மாற்றம் தொடர்பானது. ‘பொன்னகரம்’ நாவல் ஒரு பகுதியையும் அதில் நிலவும் வாழ்வையும் குறித்த கேள்வியிலிருந்து தொடங்கியது.
1. நான் எழுதிய மீன் காரத்தெரு என் பால்யகால ஞாபகங்களில் இருந்து எழுதியது. அதை எழுத ஒன்றரை மாதங்கள் பிடித்தன. துருக்கித் தொப்பியை ஏழெட்டு மாதங்களில் எழுதினேன். இது படைப்புக்கு ஏற்ப மாறுபடக்கூடிய கால அளவே.
2. பயணங்கள் சந்திப்புகள் இன்றி நாவல்களை உருவாக்க இயலாது. இப்போது என் மூதாதையர்கள் இந்துக்களாக இருந்து இஸ்லாமியர்களாக மாறிய வரலாற்றுப்பின்னணியில் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்காக பழனியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன்.
3. கையால்தான் எழுதுவேன்.
4. ஒரே ஒருமுறை தான் எழுதுவது வழக்கம். ஒரு பாரா எழுதியவுடன் திரும்ப வாசிப்பேன். தேவையிருந்தால் ஒரு சில சொற்கள் மாற்றுவேன்.
5. என் மனைவி.
6. நிறைய பேர். தஞ்சை பிரகாஷ் என் குருநாதர். நாஞ்சில்நாடனும் ச.தமிழ்செல்வனும் இல்லை என்றால் இந்த ஜாகிர்ராஜா இல்லை.
7. சுதந்தரம். இந்த வடிவத்தில் நிறைய விளையாட முடியும். எதையும் விவரமாக சித்திரிக்க முடியும். அதற்காக ஆயிரம் பக்கங்களில் எதையும் நான் எழுதிவிடவும் இல்லை.
8. அது அந்தந்த மனோபாவத்தைப் பொருத்தது. ஐம்பது பக்கங்களும் எழுதியதுண்டு. ஒன்றரை பக்கமும் எழுதியதுண்டு.
9. உண்டு. மனோநிலையைப் பொறுத்து படைப்புகள் ஊற்றெடுப்பது அமையும்
10. தொடர்கதைகளே நாவல்கள் என்ற எண்ணம் பொதுவாக தமிழ் வாசகர்களிடம் இருந்தது. அதை நவீன எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகளின் மூலம் கலைத்துப்போட்டார்கள். ஒரு அத்தியாயம் முடிந்த இடத்தில் மறு அத்தியாயம் ஆரம்பிக்கவேண்டியது இல்லை.
ஜனவரி, 2016.