மாதொருபாகன் இலக்கியம் சார்ந்த கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. இதன் பின்னணியில் சாதி , மத உணர்ச்சிகளை உசுப்பிவிட்டு அரசியல் ஆதாயம் தேடுபவர்களின் சதித்திட்டமும் செயல்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது.
பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூல் 2010 டிசம்பரில் வெளிவந்தது. இலக்கிய வட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் நான்கு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பெங்குவின் பதிப்பக்கத்தால் 2014 இறுதியில் வெளியிடப்பட்டது. மாதொருபாகன் ஆங்கிலத்தில் வெளிவந்த பிறகுதான் அதற்கான எதிர்ப்பும் எழுந்தது.
பெருமாள் முருகன் கொங்கு மண்டலப் பகுதியில் வழங்கும் வட்டாரச் சொற்களைத் தொகுத்து அகராதியாக 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டார். சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்படுதல், இழிவுபடுத்தல் குறித்த தங்கள் சொந்த அனுபவங்களை மற்றவர்களிடம் கேட்டுப் பெற்றுத் தொகுத்து ‘சாதியும் நானும் அனுபவக் கட்டுரைகள்’ என்னும் நூலாக காலச்சுவடு பதிப்பாக 2013இல் வெளியிட்டார். இதை ‘பலாத்காரத்தால் மனிதனை அடக்கச் சாதி இருக்கிறதே தவிர, இயற்கையில் எங்கே இருக்கிறது? என்று கேட்ட தந்தை பெரியார் ஈ.வே.ரா அவர்களுக்கு’ என்று எழுதிப்படையலாக்கியுள்ளார். கடைசியாக எழுதிய “பூக்குழி” நாவலை, தருமபுரி இளவரசன் நினைவாக என்று குறித்துள்ளார்.
தமிழ்நாட்டிலேயே நாமக்கல், திருச்செங்கோடு பகுதியில் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை உருவாக்கும் கல்வி வணிகச் சுரண்டலை எதிர்த்துப் பல கட்டுரைகள் எழுதினார். இந்த காரணங்களை பெருமாள் முருகனின் நாவலுக்கான எதிர்ப்புடன் இணைத்துப் பார்க்கவேண்டும். குழந்தைப்பேறுக்கு வாய்ப்பில்லாத சூழலில், வேறொரு ஆணுடன் உறவு கொண்டு கருவுருதலுக்கு பல வகையான பழக்க வழக்க முறைகள் தொன்மைக் காலந்தொட்டே இருந்து வந்துள்ளன. இதை அந்தந்தச் சமூகங்களும் அங்கீகரித்துள்ளன. ஒரு பெண் வேறு ஒரு ஆணுடன் உறவு கொண்டு குழந்தைப் பெறுவதை ‘நியோகா தர்மம்’ என்ற பெயரில் முன்பு அனுமதித்தாக கூறப்படுகிறது. பெரியாரின் படத்தைப் போட்டுக் கொள்ளும் அரசியல் கட்சிகள் சாதி வாக்குச் சரிந்து விடுமோ எனக் கருதி இப்பிரச்சனையில் வாய் மூடிக்கிடந்தன.
அரசியல் கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகளின் சீரழிவால் ஏற்பட்ட இடைவெளியைக் கடந்த முப்பது ஆண்டுக்காலத்தில் தமிழகத்தின் பெரிய எண்ணிக்கையில் உள்ள சாதிகளில் உள்ள தன்னல ஆதிக்கச் சக்திகள், சாதிப் பெருமித அடையாளங்களை முன்னிறுத்தி அரசியலிலும், பிற தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இப்போக்கு எல்லா சாதிகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதனால் சாதிய முரண்பாடுகளும், மோதல்களும் கூர்மையடைந்துள்ளன. கடந்த நூற்றாண்டில் பெரியார் உள்ளிட்ட பல தலைவர்களால் தமிழர் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி ஒற்றுமையை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும் பின்னடைவைக் கண்டுள்ளன.
இந்தப் பின்னணியில்தான் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலுக்கு எழுந்துள்ள எதிர்ப்புக்கான காரணங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தமிழகத்தில் முற்போக்கு சிந்தனையாளர்கள் ஓரணியில் திரண்டு, மக்கள் எழுச்சிகள் மூலம் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் சக்திகளை காலூன்ற விடாமல் தடுத்து, விரட்டியடிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளோம்.
பெருமாள் முருகன் தான் இனி எழுதவே போவதில்லை என்று எந்த மனோநிலையில் முடிவெடுத்திருந்தாலும் தன் முடிவை மாற்றிக் கொள்ளவேண்டும். அவரை ஆதரிக்கும் எல்லாரும் விரும்புவது இதைத்தான்.
(கட்டுரையாளர், மார்க்சிய பெரியாரிய அரசியல் விமர்சகர்)
பிப்ரவரி, 2015.