உயிர் தவச் சிறிது காமமோ பெரிது

உயிர் தவச் சிறிது காமமோ பெரிது
Published on

1960களின் அரசியல், இலக்கிய மேடைகள் தோறும், காவியத்தமிழின் அருமை பெருமைகளைக் காதாரக் கேட்டு தமிழ்ப் பித்துப் பிடித்து அலைந்தவர்களில் நானும் ஒருவன்.

 இருந்த போதிலும், கணிதத்தை விரும்பிப் படித்ததனால், கல்லூரிப் பாடத்தில் ரசித்த சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து ரசிக்கிற வாசிக்கிற வாய்ப்பினை உண்டாக்கிக் கொள்ளாமல் போய் விட்ட வருத்தம் இன்றும் உண்டு. ஆனாலும் என் கல்லூரிக் காலத்தில் மிகவும் கவர்ந்தது "பொருநராற்றுப் படை''. அதற்கு அதைக் கற்பித்த தட்சிணாமூர்த்தி ஆசிரியரும் ஒரு காரணமாக இருக்கலாம். அதில் வருகிற யாழ் பற்றிய வர்ணனையும் பாடினியின் உறுப்பு நலன் பற்றிய வர்ணனையும் அற்புதமாக இருக்கும். அதிலும் பாடினியின் தலை முதல் கால் வரையிலான  வர்ணனையில் வரிக்கு வரி காதல் சொட்டும்.

அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்

கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்

இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்

பலுறு முத்திற் பழிதீர் வெண்பல்

மயிர்குறை கருவி மாண்கடை யன்ன

பூங்குழை ஊசற் பொறைசால் காதின்

நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்

ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை

நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்

கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்

அணங்கென உருத்த சுணங்கணி யாகத்

தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை

நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்

உண்டென வுணரா உயவும் நடுவின்

வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்

இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின்

பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப

வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி

அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்

பரற்பகை யுழந்த நோயொடு சிவணி

மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்

நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்

பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி

இதில் வருகிற 'அல்குல்' என்றால் என்ன என்று சாரிடம் கேட்டுக் கலாட்டா பண்ணுகிற போதெல்லாம், கோபமும் படாமல் சிரிக்கவும் செய்யாமல் ஒரு அற்புதமான முகத்தோடு,
'இடைக்குக் கீழே, தொடைக்கு மேலே' என்பார். வகுப்பு ஹோவென்று இரைந்து அடங்கி விடும். மறைக்கவும் செய்யாமல் மறுக்கவும் செய்யாமல் மறைமுகமாகச் சொல்லுகிற அவரது திறனில் அடங்கி விடும் வகுப்பில்  அவர் பாடலை தொடர்ந்து நயமாகச்
சொல்லிப் போவார். பாடினியின் உள்ளங்காலினை  'வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி' என்று 'ஓடி ஓடி இளைத்துத் தொங்கும் நாயின் நாவி'ற்கு ஒப்பிட்டிருப்பதை இன்று வரை எந்த நவீன கவிஞனும் எழுதவில்லை. அங்கிருந்து ஆரம்பித்ததுதான் நாயும் பன்றியும் அடிக்கடி நடமாடும் காட்சிகளை அப்படியே படம் பிடிக்கும், படிமமாக்கும் என்  கவிதை உத்திகள் என்று  இப்போது தோன்றுகிறது.  ஆனால் அதைத் தாண்டி ஒரு படிமம் உண்டாக்க முடியாது என்று எப்போதும் தோன்றும்

சங்கப் பாடல்கள், காட்சிகளால் அமைந்திருக்கும். அதனால் அவற்றை சங்கச் சித்திரங்கள் என்பதே சரியாக இருக்கும்.  ஒரு ஃப்ரேம் பாருங்கள்.

‘‘வாள்நுதல் அரிவை மகன் முலையூட்டத்

தானவள் சிறுபுறம் சுவையினன் நன்று

நறும் பூந்தண்புற வணிந்த

குறும்பல் பொறைய நாடு கிழவோனே''

தலைவியும் தலைவனும் குழந்தையுடன் படுக்கையில். தாய், கணவனுக்கு முதுகைக் காண்பித்தபடி குழந்தைக்குப் பாலூட்டுகிறாள். கணவன் அவளது அழகிய முதுகை அணைத்தபடி காதலுடன் தடவிக் கொண்டிருக்கிறான். புலவர் பேயனார், ஐங்குறுநூற்றில் அவர்கள் படுக்கை அறையினை எட்டிப் பார்த்துச் சொல்லும் காதல்ச்
சித்திரம் இது. பெண், இரண்டு பேரின் வெவ்வேறு ‘பசி' விளையாட்டையும் நைச்சியமாய் ரசிப்பதை நாம் மனக்கண்ணில் பார்க்கிறோம்.

களவொழுக்கத்தில் தன்னைப் பறி கொடுத்து விட்ட காதலி ஊராருக்கு அஞ்சி அவனுடன் கூடுவதைத் தவிர்க்கவும் முடியாமல் அவனுடன் முயங்கவும் பயந்து கொண்டு அல்லாடுகிறாள், எப்படி? யானை உண்ணுவதற்காக ஒடித்த மரக்கிளை முற்றாக ஒடிந்து நிலத்தையும் தொடாமல், மரத்தில் ஊசலாடுவது போல அல்லாடுகிறாள். ஆலத்தூர் கிழார் எழுதிய குறுந்தொகைப் பாடலான அது,

கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்;

எள் அற விடினே, உள்ளது நாணே;

பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ

நாருடை ஒசியல் அற்றே&

கண்டிசின், தோழி!&அவர் உண்ட என் நலனே.

நெடுவெண்ணிலவினார் என்ற புலவரின் இன்னொரு குறுந்தொகைப் பாடல்:

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்

இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை

எல்லி வருநர் களவிற்கு

நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.

இரவில், தலைவன் காட்டு வழியே வேகமாய் வர முடியவில்லை. அதற்கு இடைஞ்சலாய் காட்டில் நிலவொளி வீசிக் கொண்டிருக்கிறது. ஒளிந்து ஒளிந்து, ரகசியமாக வர வேண்டியிருக்கிறது. தாமதம் பொறுக்காத தலைவி நீயும் பெண்தானே நிலவே, என்னை இப்படிப் படுத்தலாமா என்கிறாள். "திங்கள் நீயும் பெண்குலமும் ஒரு வகை ஜாதி தெரிந்திருந்தும் கொல்ல வந்தால் என்னடி நீதி'' என்று கண்ணதாசன் எடுத்தாண்டிருப்பார், இதை. இங்கே திங்கள் என்பது சந்திரன். அவன் ஆண் என்றாலும், சந்திர ஒளி ‘சந்திரிகை' பெண். (அது போலவே சூரியன் ஆணானாலும் அவனது ஒளி 'உஷை' பெண்)

'மதுரைக் காஞ்சி' என்கிற நெடிய பாடலில் "பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர்'' என்றொரு வரி வருகிறது. இது "பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ,'' என்றும் "உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்,'' என்றும் பாடும் கண்ணதாசனை நினைவூட்டுகிறது. கண்ணதாசன் மட்டுமில்லை எல்லா சினிமாக் கவிஞர்களும்தான். வாலி, "நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என்று காதல் தேவதை சொன்னாள், என் இடது கண் துடித்தது...'' என்று எழுதியிருப்பார். நாட்டுப் புறங்களிலும் இப்படிச்
சொல்வதுண்டு தான். இந்தக் கூற்று "நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே''  என்று கலித்தொகையில் குறிக்கப்படுகிறது. "தங்கப்பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போலே என்ற வரிகளை,'' "பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்  பின் இருங் கூந்தல் பிழிவனம்...''  என்று நீராடும் மகளிரின் முதுகில் ஈரக்கூந்தல், பொன்னில் நீல மணி பதித்தது போலப் படிந்திருக்கிறது என்கிறார் குறிஞ்சிப் பாட்டில் கபிலர். எலியட் சொல்வது போல ஒரே ஒரு கவிதையைத்தான் காலந்தோறும் நாம் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறோமோ..

குறுந்தொகையின் பிரபலமான அணிலாடு முன்றிலார் பாடலான

காதல ருழைய ராகப் பெரிதுவந்து

சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற

அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்

மக்கள் போகிய வணிலாடு முன்றிற்

புலப்பில் போலப் புல்லென்

றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.

தலைவன் பிரிந்து சென்று விட்ட துயரம், திருவிழா முடிந்து ஊரின் ஆரவாரம் எல்லாம் ஓய்ந்துவிட்ட பின், வீட்டு முற்றத்தில் அணில்கள் மட்டுமே ஓடியாடி விளையாடுகிற காட்சி எத்தனையோ படிமங்களை நவீன கவிதைக்கு நல்கக் கூடும்.

"அவர் கண்கள் தந்த காமத்தீ என்னை எரிக்கிறது. போய்ப் பார்க்கவும் முடியாது, அவரும் வர மாட்டார். குப்பைக் கோழிகள் சண்டையிடுவது போல் என் காமம் தடுப்பாரின்றி என்னுடன் சண்டையிடுகிறது,'' என்று தலைவி பொருமுவதை ‘‘குப்பைக் கோழியார்'' எழுதிய குறுந்தொகைப் பாடல் விளக்கும்

கண் தர வந்த காம ஒள் எரி

என்பு உற நலியினும், அவரொடு பேணிச்

சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே

வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;

உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்

குப்பைக் கோழித் தனிப் போர் போல,

விளிவாங்கு விளியின் அல்லது,

களைவோர் இலை&யான் உற்ற நோயே.

இன்னொரு பாடல்:

ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்

பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே

நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,

ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து

ஓர் ஏர் உழவன் போல,

பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே

நீர் நிற்காத மேட்டு நிலத்தையும் ஒரே ஒரு ஏரினையும் மட்டுமே கொண்ட ஒரு உழவன், மழை பெய்ததும் அவசர அவசரமாக உழுவது போல, உழத் துடிப்பது போல, தன் காதலியைக் காண, துடிப்போடு நெடுந்தொலைவு கடந்து வருகிறான் காதலன். இந்தச் சித்திரத்தை எழுதியவருக்குப் பெயரை ‘ஓரேர் உழவனார்' என்றே வைத்து விட்டார்கள் தொகுப்பாளர்கள்.

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள் உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!  என்று குறுந்தொகைச் செய்யுள் கூறும். ஆனால் காமமும் காதலும் ஓரிருவருக்கு மட்டுமே பொருந்தி வருகிற விஷயமல்ல. காதல், நீந்திக் கடக்க முடியாத கடல் என்பதை மூத்த தமிழ்ச் சமூகம் உணர்ந்திருந்ததனாலோ என்னவோ, சங்கப் பாடல்களில் பெரும்பாலும் அகப் பாடல்களே அதிகமாயுள்ளன. என் ரசனைக்கு உட்பட்டும், வாசிப்பிற்கு உட்பட்டும் சில சங்கக் காதல் சித்திரங்களைச் சொல்லியுள்ளேன். இன்னும் சங்கம் மருவிய காலத்து திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்கள் என்று கருதக் கூடிய முப்பால் நூல்களில் கூட மூன்றாம் பாலாக  அற்புதமான காதல் கவிதைகள் உள்ளன. ஏகப்பட்ட கவிதைச் சொத்திருக்கிறது நமக்கு எடுத்தெடுத்து அனுபவிப்போம்.

(குறிப்பு: இதிலுள்ள கவிதைகளையும் உரைகளையும் நண்பர் எஸ்.சிவகுமார் தேர்ந்து தொகுத்து வெளியிட்டுள்ள ‘‘கொங்குதேர் வாழ்க்கை - பாகம் 1'' தொகுப்பிலிருந்து நன்றியுடன் எடுத்துக் கொண்டுள்ளேன். இது தமிழினி பதிப்பக வெளியீடு.)

பிப்ரவரி, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com