“அது சாவிக்குப் பிடிக்கவில்லை!”

“அது சாவிக்குப் பிடிக்கவில்லை!”
Published on

பாலகுமாரன் சாவி இதழுக்காக பாலசந்தரை நேர்காணல் செய்தார். அது சாவியின் அனுமதியுடன் செய்யப்பட்டது. பாலாவுக்கு சினிமாவுக்குச் சென்றுவிட விருப்பம் தோன்றியிருந்த காலம். பாலசந்தருடன் ஒரு நாள் முழுக்க இருந்து நேர்காணல் செய்துவிட்டார். ஆனால் அதை  உடனடியாக எழுதமுடியவில்லை. ஏனெனில் அப்போது  அவரது குழந்தைக்கு ஜுரம். அதனால் உட்கார்ந்து எழுதமுடியவில்லை. அச்சமயம் அவரது கதை ஒன்று இதயம் பேசுகிறது இதழில் வந்துவிட்டது. அப்போது சாவிக்கும் இதயம் பேசுகிறது இதழுக்கும் இடையே கடும் மோதல். சாவி சாருக்கும் மணியனுக்கும் இடையில் ஒத்துப்போகாது. இடையில் ஒரு பச்சைப் புல்லை போட்டால்கூட பற்றிக்கொண்டு எரியும்!

நமக்கு நேர்காணலை எழுதித் தர நேரம் இல்லை. ஆனால் இதயம் பேசுகிறதுக்கு சிறுகதை எழுத பாலாவுக்கு நேரம் இருக்கிறது என்று சாவி தவறாக நினைத்துக் கொண்டு விட்டார். ஓரிரு நாட்கள் கழித்து பாலா கொடுத்த பாலசந்தர் நேர்காணலை சாவி வாங்கி படித்துக் கூடப் பார்க்கவில்லை! அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.

பாலா மிகவும் வேதனைப் பட்டார், சாவி அலுவலகத்திற்குள்தான்  திசைகள் அலுவலகமும் இருந்தது. என்னிடம் வந்தவர், தன் வேதனையைக் குமுறலோடு பகிர்ந்து கொண்டார். அழுகை முட்டிக் கொண்டு வந்தது. நான் இனி எப்படி பாலசந்தரைப் பார்ப்பேன் என்று பொருமினார். நான் சரி விடு, நம்ம பத்திரிகையில் போடலாம் என்றேன். அதுமாதிரியே மூன்று வாரங்கள் தொடர்ந்து வெளியிட்டேன். அது சாவி சாருக்குப் பிடிக்கவில்லை. நாம் வேண்டாம் என்று நிறுத்தியது நம் நிறுவனப் பத்திரிகையிலேயே வெளிவருகிறதே என்று நினைத்தார்.

இன்னொரு விதத்தில் எனக்கும் சாவி
சாருக்குமிடையே  விரிசல் விழுந்தது.  அப்போது பத்திரிகைகள் பிரபலங்களைக் கொண்டு ஒரு இதழ் தயாரிக்கும் பாணியைப் பின்பற்றி வந்தன.
சாவி சார், சுஜாதாவை சாவி இதழ் தயாரிக்க அழைத்தார். சுஜாதா பெங்களூருவில் இருந்தார். அவர் வேலை செய்த பாரத் எலெக்ட்ரானிக்ஸில் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த நேரம். அதனால் உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் யாரும் ஊரை விட்டுப் போகக்கூடாது என்று நிர்வாகம் சொல்லியிருந்தது. சுஜாதா முக்கியமான பதவியில் இருந்தார். அதனால் அவரால் சென்னைக்கு லீவ் போட்டுவிட்டு வந்து இதழ் தயாரிக்க முடியவில்லை. ஆனால் அந்த இதழை சுஜாதா தயாரிப்பதாக அறிவிப்பு போட்டாகி விட்டது. எனவே இரவில் சுஜாதா விமானம் பிடித்து
சென்னைக்கு வந்தார். அவரை நான் விமான நிலையத்தில் இருந்து சாவி அலுவலகத்துக்கு நேராக அழைத்துச் சென்றேன். போகிற வழியிலேயே அவரது திட்டத்தைப் பகிர்ந்து கொண்டார். முன்கூட்டியே ராஜு, பாலா எல்லோரையும் வரச் சொல்லி இருந்தார்/ யாரார் என்னென்ன செய்யவேண்டும் என்று இறங்கிய சில நிமிடங்களில் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார்.  ஒருபுறம் எழுதிக் கொண்டே மற்றவர்கள் எழுதியதை சரி பார்த்தார். அன்று இரவு இரண்டு மணி வரை வேலை பார்த்துவிட்டு, அங்கேயே தூங்கிவிட்டு விடிகாலையில் பெங்களூரு போய்விட்டார். அவர் திட்டமிட்டபடி அந்த இதழ் வெளியானது.

அப்போதெல்லாம் பாராட்டுகளை விட விமர்சனம் செய்து வரும் கடிதங்களைப் பிரசுரிப்பது குமுதத்தின் வழக்கம். அதை சாவியும் பின்பற்றி வந்தார்.  அதனால் வாசகர்களும் விமர்சிக்கும் கடிதங்களையே அதிகம் அனுப்பி வந்தார்கள்.

 அதனால்தானோ  அல்லது உண்மையிலேயே அவர் பார்வையில் அப்படித்தான் இருந்ததோ, இதழைப் படித்த ஒரு வாசகர், ஏமாற்றமாக இருக்கிறது. இதை செய்ய சுஜாதா என்ற கம்ப்யூட்டர் எதற்கு? ஒரு டைப் ரைட்டர் போதுமே என்று கடிதம் எழுதியிருந்தார். சாவி அந்தக் கடிதத்தை வெளியிட்டுவிட்டார்.

சுஜாதாவுக்கு அதில் பெரும் வருத்தம். என் வேலைக்கே ஆபத்து நேரக் கூடும் என்ற நிலையிலும் நான் வந்து இரவெல்லாம் பணி புரிந்திருக்கிறேன். இப்படிச் செய்யலாமா என்று குமுறினார். சாவியின்   சமாதானத் தால்  சுஜாதா மனம் ஆறவில்லை. நான் இனிமேல் சாவியில் எழுதப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். சாவி சாரும் நீங்கள் எதில் எழுதினாலும் நான் உங்கள் வாசகனாக அதை முதலில் படிப்பேன் என்று சொல்லி விட்டார். இருவருக்கும் இடையில் ஒரு முறுகலான மனநிலை.

திசைகள் ஆரம்பித்தபோது வழக்கமான
சிறுகதைகளுக்குப் பதிலாக அறிவியல் புனைகதைகள் வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். இளைஞர்களை அறிவியல் புனைகதைகள் எழுதத் தூண்ட வேண்டும் என்பதும் நோக்கம். அதனால் அறிவியல் புனைகதைகளை ஆறு விதமாக வகைப்படுத்தி வகைக் கொன்றாய் சுஜாதா கதைகள் எழுத வேண்டும் என அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  இதற்காக நான் பெங்களூர் சென்று ஒரு நாள் முழுதும் இருந்து, நீண்ட நேரம் விவாதித்துத் திட்டமிட்டிருந்தோம். அவர் அக்கதைகளை எழுதி அனுப்ப, அவற்றை திசைகளில் வெளியிட்டுக் கொண்டிருந்தேன்.

சுஜாதா சாவிக்கு எழுதுவதைத் தவிர்த்துவிட்டு, பின் திசைகளுக்கு எழுதியது சாவி சாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

சாவி சார் என்னிடம்,'' நான் வேண்டாம் என்று ஒதுக்கும் விஷயங்களை நம் அலுவலகத்தில் இருந்து வரும் பத்திரிகையிலேயே  நீங்கள்  வம்படியாக வெளியிடுகிறீர்களே? உள்ளே இருந்து கொண்டே ஏதாவது  புரட்சி செய்ய நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே?'' என்றார். நான் ''புரட்சியெல்லாம் செய்யும் எண்ணம் இல்லை. திசைகள் ஆரம்பிக்கும் போது அதை நீங்கள் விரும்புவது போல நடத்துங்கள் என்று என்னிடம் சொன்னீர்கள். நான் என் அறிவுக்கு எட்டிய வரையில் அதை நடத்திக் கொண்டிருக்கிறேன்.'' என்றேன். ''உங்கள் அறிவுக்கு என்ன? நீங்கள் அறிவு ஜீவி'' என்றார். கிண்டலாகச் சொன்னாரோ என்ற சந்தேகம் எனக்கு இன்றுவரை இருக்கிறது. அவர் ஊரில் இல்லாத போது நான் எடுத்த முடிவுகளை ஆதரித்த அவர் இப்போது இப்படி நினைக்கிறாரே என்று எனக்கு வருத்தமாகவும் இருந்தது

பின்னர் திடீரென ஒரு நாள்,''நான் திசைகளை நிறுத்திவிடப் போகிறேன்,'' என்றார். ''என்னைப் பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக் கொள்கிறேன் வேறு யாரையாவது வைத்து நடத்துங்கள். தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு என்று வேறு பத்திரிகை இல்லை,'' என்றேன்.

ஆனால் அத்துடன் திசைகள் நின்றுவிட்டது. வேறு யாரையும் வைத்து அவர் நடத்த முயற்சிக்கவில்லை.

(விரைவில் அந்திமழை வெளியீடாக வர இருக்கும் மாலனின் நீண்ட நேர்காணல் நூலில் இருந்து ஒரு சிறு பகுதி)

ஜூலை, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com