1975

நாவல் முன்னோட்டம்
1975
Published on

கோவிந்தன் மேன்ஷன் தானே, வாங்க நானும் அந்தப் பக்கம் தான் வரேன்''.

ஒதுங்கி நின்று உஸ்மான் ரோடு நெரிசலை ரசித்துக் கொண்டிருந்த  ஜிப்பாக்காரர், என்னோடு நடக்க ஆரம்பித்தார். நான் உடனே உஷாரானேன்.

‘‘சார், ஏதோ தப்பா என்னை நினைச்சுட்டீங்க போல. நான் அன்னிக்கு பீச்சிலே நோட்டீஸை பொறுக்கி எடுத்துப் போனது உண்மைதான். ஆனா அதுக்கு மேலே என்னால் எமர்ஜென்சி எதிர்ப்பு காட்ட முடியாது. நீங்க வந்து இருக்கவோ, தடை செஞ்சிருக்கற புத்தகம் கொண்டு வந்து விநியோகம் பண்ண பத்திரமா வைக்கவோ, வெளியூர் தீவிரவாதி வந்து தங்கிப் போகவோ, பீச் மீட்டிங் போட்டா பேசவோ, குறைந்த பட்சம் நின்னு கேட்கவோ நான் வர முடியாது. பேச்சைக் குறை, வேலையைப் பார்ன்னு கவர்மெண்ட் போர்ட் எழுதி வச்சிருக்கறதைப் படிச்சா, சைகையிலே           கூட அப்புறம் பேச மாட்டேன். ரயில்வே ஸ்டேஷன்லே ‘இந்தத் தண்ணீரைக் குடிக்காதீர்கள். கைகழுவ மட்டும் பயன்படுத்துங்கள்'ன்னு  போர்ட் போட்டிருந்த இடத்திலே இருந்து அதைப் பார்க்காம அவசரமா தண்ணி பிடிச்சுக் குடிச்சது தான் நான் அரசாங்க வார்த்தையை சமீபத்திலே மீறின ஒரே சம்பவம். அடுத்த எலக்ஷன் வந்தா ஓட்டு போடுவேன். அவ்வளவு தான் நான் உங்களுக்காகச் செய்ய முடியும். என்கூட வரலாம்னு நினைச்சா உங்க நேரம் தான் வேஸ்ட் ஆகும்''.

உஸ்மான் தெருவில் இருந்து பிரியும் தெருவில் என்னோடு அடி எடுத்து வைத்தவர் நின்றார். காலில் உரசிப் போன சைக்கிள் ரிக்ஷாவைத் தவிர்த்தபடி நானும் நின்றேன்.

‘‘சார் எனக்கு உங்க கிட்டே எதுவுமே வேணாம். நம்புங்க மிஸ்டர்...''

அவர் தயங்கினார். போத்தி என்றேன்.

‘‘மீட்டிங் நடத்த செலவுக்கு எப்போவாவது நண்பர்கள் கிட்டே வாங்கிப்போம். உங்க கிட்டே அதுவும் கேட்கப் போறதில்லே.

நீங்க விஸ்வநாதனோட ப்ரண்ட்ங்கறதாலே, அதுவும் ஒரே மேன்ஷன்லே இருக்கீங்கங்கறதாலே ஹலோ சொன்னேன். வேணாம்னா சொல்லலே இனிமேலே''.

மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. எடுத்தெறிந்தாற்போல பேசி இருக்க வேண்டாம். நான் பேசவில்லை அப்படி.

சாதாரண தினம் என்றால் புது நட்புகளை வரவேற்கவும், சிநேகிதமாக இருப்பதில் முன்கை எடுக்கவும் செய்தவன் தான் போத்தி. எமர்ஜென்சி அந்தப் பண்பாட்டை, லகுவான வாழ்க்கை முறையை எல்லாம் ஒரேயடியாக மாற்றிப் போட்டிருக்கிறது.

எதிர்ப்படுகிறவன் யாரோ, வேவு பார்க்க வந்த ஒற்றனோ, தலைமறைவு வாழ்க்கைப் போராளியோ, எங்கே இருந்து வருகிறார்கள், எங்கே போகிறார்கள் என்று ஆயிரத்தெட்டு கேள்விகளை மனதிலேயே கேட்டு அவஸ்தைப்படுவதை விட, புதிய அறிமுகம் ஏதும் கிடைத்தாலும் வேண்டாம் என்று கத்தரித்துப் போக நினைக்கும் மனப்பான்மை. எனக்கு என்று இல்லை, எல்லோருக்கும் பொதுவாக வந்து கொண்டிருப்பது அது.

இந்த ஜிப்பாக்காரன் எமர்ஜென்சி எதிர்ப்பாளன் தான். பயங்கரவாதி இல்லை. எதிர்ப்பாளர்கள் எல்லாரும் தீவிரவாதி என்றால் உலகத்தில் எப்போதும் துப்பாக்கிப் புகை தான் சூழ்ந்திருக்கும்.

‘‘ஸாரி, ஏதோ யோசிச்சிட்டிருந்துட்டேன்.

நீங்க விஸ்வநாதன் ஃப்ரண்டா? அவன் ராத்திரி தான் வருவான். யார் வந்திருந்ததா

சொல்லணும்?''

‘‘நானா, ஷர்மா. ராமகிருஷ்ண ஷர்மா. விஸ்வநாதன் எனக்கு ஃப்ரண்ட்டுனு வச்சா ஃப்ரண்ட் தான். என் வேட்டகத்து மனுஷா அவா குடும்பம். அங்க சுத்தி இங்க சுத்தி எல்லாரும் நம்ம மனுஷா தான், கேட்டேளா?''.

உஷாரானேன். ‘‘நீ ஐயரா' என்று கேட்கிறான் ஜிப்பாக்காரன். இல்லை என்று உடனே

சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை. 

‘‘வேட்டகம்னா என்ன சார்?''  நான் கேட்க, அவன் சிரித்தான்.

 ''நான் பொண்ணு இடம்''.

‘‘அப்படியா, நான் போத்தி''.

‘‘போத்தின்னா ஜாதியா? திருச்செந்தூர் கோவில்லே பூஜை பண்ற குருக்கள் எல்லாம் போத்திதானே?''.

‘‘அதெனக்கு தெரியாது

சார். நாங்க ப்ராமின் இல்லே. பகுதி ப்ராமின்னு

சொல்றவங்க உண்டு. முதலே இல்லேங்கறபோது பாதி எங்கே வந்தது?''

என்னோடு சேர்ந்து ஷர்மாவும் சிரித்தான். சிரித்தார். வரேன் என்று விடுவிடுவென்று நடந்து அறைக்கு வந்து சேர்ந்தேன்.

விஸ்வநாதனை அன்றைக்குப் பார்க்கவில்லை. அதற்கு அடுத்த இரண்டு நாளும் கூட அவன் இல்லை. புதன்கிழமை திரும்பி வந்தபோது பாலக்காட்டில் இருந்து நேந்திரம்பழ வறுவல் வாங்கி வந்திருந்தான்.

கூட்டமாக உட்கார்ந்து நாலு கிலோ வறுவலை முகாந்திரமாக முன்வைத்து கல்யாணி பியர் குடித்தோம்.

ஷர்மா வந்திருந்தார் என்று அப்போதுதான் அவனிடம்

சொன்னேன். பெரிய மோட்டார் கம்பெனியில் விற்பனைப் பிரிவில் இருக்கிறாராம் ஷர்மா. தீவிரவாதி இல்லை. ஆனாலும் தீவிரமாக வலம் போகிற ஆசாமியாம்.

விஸ்வநாதன் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்,  ஏ.கே கோபாலன், சகாவு கிருஷ்ணபிள்ளை என்று அபிமானத்தோடு பேசக் கூடியவன். ஷர்மா, விசுவின் பெரியம்மா மகளைக் கல்யாணம் செய்து கொண்டதோடு சிநேகிதம் பலமானதாம்.

சொந்தக் கதை எல்லாம் பியர் சாப்பிட்ட பிற்பாடு வச்சுக்கலாம் என்று பெல்காவி அபிப்பிராயப்பட அப்புறம் நாங்கள் அப்போது ஷர்மா பற்றிப் பேசவில்லை.

அக்டோபர், 2018.

நாவல் பற்றி...

இரா.முருகன் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்த கால கட்டத்தைப் பின்னணியாக கொண்டு  ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்.

‘‘1975 என்று பெயரிடப் பட்டிருக்கும் இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு இல்லை. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. எமர்ஜென்சி இல்லாமல் இருந்தாலும் இந்த நிகழ்வுகளில் பல நிகழ்ந்திருக்கும். ஆனால் அவற்றின் போக்கும் முடிவும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். இறுதி அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். திடுமென்று வந்து திடுமெனக் காணாது போகிற இவர்கள் எல்லோரும் கதைப் போக்கை நகர்த்த ஒரு கை கொடுத்துத் தேர் இழுக்கிறார்களா என்றால் இல்லை. ஆடுவாரும், ஆடி முடித்து அள்ளிச் செல்லாமல் ஒதுங்குவாரும், ஆட வந்தவர்களுமாகக் கதை விரிவதிலும் ஒரு ரசம் உண்டு.

Character Arc என்ற கதாபாத்திரத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ தட்டுப்படாதவர்கள் போத்தியும் மற்றவர்களும். கதைவெளியில் எமர்ஜென்சி தான் உருவாகி, வளர்ந்து, கலைந்து போகிறது.

எமர்ஜென்சி 1975-ஆம் வருடம் ஜூன் 25-ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது. 1977-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி விலக்கிக்கொள்ளப்பட்டது. இடைப்பட்ட இருபத்தோரு மாதங்களில் நிகழும் இந்த நாவலின் அத்தியாயங்களும் இருபத்தொன்றுதான்,'‘ என்கிறார் இரா.முருகன்.

அந்த நாவலின் ஒரு சிறுபகுதி அந்திமழை வாசகர்களுக்காக இங்கு பிரசுரமாகி உள்ளது.

அக்டோபர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com