வீதிக்கு வந்த போராட்டம்

வீதிக்கு வந்த போராட்டம்
Published on

வீதிக்கு வந்த போராட்டம்

இந்த ஆண்டு தமிழக  மாணவர் இயக்கங்களுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்தது. மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டபோது அதில் திருத்தங்கள் இந்திய தலையீட்டின்மூலம் கொண்டு வரப்பட்டன. அத்திருத்தங்கள் இலங்கையை இனப்படுகொலை விசா ரணையிலிருந்து தப்ப வைப்பனவாக அமைந்தன.

இந்நிலையில்  பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட படங்கள் வெளியானதையொட்டி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப்பேர் உண்ணாவிரதம் இருந்து ஆரம்பித்த போராட்டத்தீ தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களிடமும் உக்கிரமாகப் பரவியது. வகுப்புகளைப் புறக்கணித்து மாணவ மாணவியர் சாலைகளுக்கு வந்து இலங்கைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டம் பெருமளவுக்கு அரசியல் கட்சிகளை உள்ளே விடாமல் நடைபெற்றது. இதை அறப்போர் என்ற பெயரில் தொழில்நுட்ப ரீதியில் தரம்வாய்ந்த ஆவணப் படமாக எடுத்திருக்கிறார் வெற்றிவேல் சந்திரசேகர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியரின் பேட்டிகள் மூலமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின்னால் பெரும் எழுச்சியுடன் நடந்த இப்போராட்டத்தின் கதை திரையில் விரிகிறது. செங்கொடி மீடியா ஒர்க்ஸ் வழங்கும் இப்படத்தைத் தயாரித்திருப்பவர் சி.கபிலன். படம் முடிகையில் வரும் பாடல் பார்வையாளர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப வல்லது.

அறப்போர் (குறுந்தகடு) எழுத்து- இயக்கம் வே.வெற்றிவேல் சந்திரசேகர்.

விலை ரூ 100

---

தமிழின் டான் பிரௌன்

உணர்ச்சிமயமான கதைகளே பிரதானப்பட்டு வந்திருக்கிறது தமிழ் இலக்கியத்திலும் சினிமாவிலும். அறிவாளிகளை விட அழகானவர்களே இங்கு நாயகர்கள்.  இந்தச் சூழலில், நான்கு விஞ்ஞானிகளை பாத்திரங்களாய் கொண்டு அறிவுபூர்வமாய், முற்றிலும் மாறுபட்ட ஒரு புனைவை தமிழ் இலக்கியச் சூழலில் முன் நிறுத்துகிறது சுதாகரின் 6174 என்கிற நாவல்.

50,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த  லெமூரியர்கள்  லெமூரிய கண்டம் அழிகிற சமயத்தில் பெரும் ஆற்றலில் சேமிப்புக் கிடங்குளாய் விளங்கும் பிரமிட் என்னும்  சக்தி பீடத்தை  இரு பாகங்களாக்கி பூமியின் இரு பகுதிகளில் ஒளித்துவைக்கிறார்கள்.   இந்தச் செய்தியை வானத்திலிருந்து அதிர்வலையில் வந்த ஒரு சிக்னலை டீ கோட் செய்து பார்த்து கண்டறிகிறது இந்திய உளவுத்துறை.

சக்தி பீடத்தின் இரு பாகங்களும் ஒன்று  சேர்ந்தால், ஒரு வேற்று கிரக தீய சக்தி, பூமியைக் கண்டறியும், பேரழிவு ஏற்படும் என்பதால் சக்தி பீடத்தில் தலைப் பகுதியை தேடி அழிக்க  இந்திய நிபுணர்களின்  குழு ஒன்று ரகசிய வேட்டையில் இறங்குகிறது.  சில தீய அமைப்புகள் இவர்களைக் கொன்று விட துரத்துகிறது.  தடயங்கள் சங்கேத பாஷையிலும், கணிதக் குறிப்புகளிலும், வரைபடங்களிலும் இருக்கின்றன. புதிர்களை அவிழ்த்து அவை சுட்டிக் காட்டுகிற வழியில் காஞ்சீபுரம், ஒரிஸ்ஸா,  பர்மா, மெக்ஸிகோ என்று பயணித்து உச்ச கட்டத்தைத் தொடுகிறது ராக்கெட் வேகத்தில் பயணிக்கும் இந்தப் புதினம்.

புதிர்களை அவிழ்த்து ஒரு புதையலைத் தேடிப் போகும் குழு என்கிற கதையில் அறிவியல், கொஞ்சம் கணிதம், தமிழ்ச் செய்யுள்களால் ஆன புதிர்கள், கொஞ்சம் மர்மம் என்று கலந்து விறுவிறுப்பாய் எழுதி, இது தமிழ் நாவல் தானா என்று வியக்கவைக்கிறார் சுதாகர்.  அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த விவரிப்புகள் மிகுந்த நம்பகத்தன்மையோடு  சொல்லப்படுகின்றன.  கருந்துளை எண், சீல்க்கந்த மீன்கள்,  கப்ரேக்கர் கான்ஸ்டண்ட் , டிராவிடியன் எபிகிராபி என்று மிரட்டலான பல  விவரங்கள் கதை முழுவதும்  கொட்டிக் கிடக்கின்றன.  மேலெழுந்த வாரியாய் படித்துவிட்டுப் போகிற கதையில்லை இது.

அறிவியல் புனைக்கதை என்கிற வகை தமிழ் இலக்கியத்தில் அபூர்வம்.   பெரும்பாலான அறிவியல் புனைக்கதைகள்,  ஐநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பதாய் சொல்லி  வானூர்திகள், வேற்று கிரக வாசிகள், ரோபாட்டுகள் என்று நம்மால் கேள்வி கேட்கமுடியாத சூழலை முன்னிறுத்தி வெறும் வித்தை காட்டும் வடிவங்களாகவே இருந்திருக்கின்றன. சுதாகர், சமகால அறிவியில்  சூழலில்  நமக்கு பரிச்சயப்பட்ட ஒரு உலகத்தை நாம்  பார்த்திராத கோணத்தில் கதையாய்  சொல்கிறார்.  இந்த புத்திசாலித்தனமே இந்த நாவலின் தனிச்சிறப்பு.  தமிழுக்குப் புதியது இந்த எழுத்து.  ஆங்கிலத்தில் எழுதி வெளியிடுவது இந்த நாவலுக்கு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும்.

                                                     - ஆனந்த் ராகவ்

6174 

சுதாகர், வம்சி புக்ஸ், 19, டி.எம். சரோன். திருவண்ணாமலை

தொடர்பு எண்: 9444867023/9443222997. விலை. ரூ 300

---

தகவல் களஞ்சியம்

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பற்றி பல தகவல்கள் அடங்கிய நூல். வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவருக்கு உதவி செய்வதற்காக டர்பன் நகரில் இருந்த வேதியன் பிள்ளை என்பவர் 5000 ரூபாயை அப்போது இந்தியா வந்த காந்தியிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் அப்பணத்தை காந்தி வ.உ.சியிடம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் இடையே பல கடிதப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. மிகவும் மரியாதையுடன் நிகழ்கின்றன அக்கடிதப் போக்குவரத்துகள். மிகவும் பணக்கஷ்டத்தில் இருந்த சிதம்பரனாருக்கு அப்பணம் பெரிதும் தேவைப்படுகிறது. ஆனால் 1912-ல் கொடுக்கப் பட்ட அத்தொகை 1920 வரை கொடுக்கப் படவில்லை. பின்னர் வேதியன்பிள்ளை  இந்தியா வந்து காந்தியைச் சந்தித்து அப்பணத்தை வாங்கிக் கொடுக்கிறார். வட்டியோடு வரும் அப்பணத்துக்கு வட்டி வாங்க மறுத்துவிடுகிறார் வ.உ.சி. இரண்டு மேன்மக்கள் தொடர்பான இந்த சம்பவம்தான் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தியின் காந்தி கணக்கு நூலின் சாராம்சம். இது அவர் கூட்டங்களில் பேசிய சொற் பொழிவுகளையும் அவற்றுடன் சில கட்டுரைகளையும் சேர்த்து தொகுக்கப்பட்ட நூலாக உள்ளது. காந்தி, வ.உ.சி ஆகியோரின் வாழ்க்கை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் இதில்  இடம்பெற்றுள்ளன. வ.உ.சிக்கு நிதி அளித்த வேதியன் பிள்ளையின் குடும்பப் பின்னணியை ஆராய்ந்து அவர் தாயுமான சுவாமிகளின் பரம்பரையில் வந்தவர் என்றும் நூலாசிரியர் விளக்குகிறார்.

காந்தி கணக்கு, அனிதா கிருஷ்ண மூர்த்தி, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம்,  இடுவம்பாளையம்,  திருப்பூர் 641687

பேச: 9443722618.

---

தமிழ் பௌத்தம்

தமிழர்கள் இன்று பல சமயங்களைச் சார்ந்தவர்களாக இருப்பினும் இன்றும் அவர்களின் பழக்கவழக்கங்களில் பௌத்த அடையாளங்கள் இருப்பது உண்மை. கிமு மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டுக்கு அறிமுகமான பௌத்தம் இங்கே பக்தி இயக்கம் வேரூன்றும் வரைக்கும் மிகப்பரவலான மதமாக இருந்தது. மணிமேகலை, குண்டலகேசி, வீர சோழியம் உள்ளிட்ட நூல்கள், திருக்குறள் உள்ளிட்ட நீதிநூல் கருத்துகள் என்று பௌத்தம் இன்னும் தொடர்கிறது. தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட பல்வேறு கட்டுரைகள் அதே பெயரில் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் பௌத்தக் கருத்துகள் இருப்பது பற்றி ஆயும் பல கட்டுரைகளும், பௌத்தமும் பிறசமயங்கள் பற்றி ஆயும் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பௌத்த கலை, சிற்பங்கள் தமிழ் நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் கட்டுரைகள் உள்ளன. பௌத்தம் இங்கே ஏற்படுத்திய தாக்கமும் அதன் தொடர்ச்சியும் குறித்து அறிந்துகொள்ள வழிசெய்யும் நூல் இது.

தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் தொகுப்பு: முனைவர் பிக்கு போதிபாலா, முனைவர் க. ஜெயபாலன், உபாசகர் இ.அன்பன் வெளியீடு: காவ்யா, சென்னை 24. பேச: 044-23726882. விலை: ரூ 350

அக்டோபர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com