கொழுப்பை கொழுப்பால் வெல்லலாம், இதுதான் பேலியோ டயட்டின் சுருக்கமான விளக்கம். மூன்றுவேளையும் இட்லி, அரிசிச்சோறு சாப்பிட்டு வளரும் தமிழர்களுக்கு மூணுவேளையும் முட்டை, கறி மீனு என்று சாப்பிடுங்க, எந்த தானியத்தையும் சாப்பிடாதீங்க என்று கூறுகிற பேலியோ டயட் மிகவும் அதிர்ச்சியை வரவைக்கும். தலைகூட சுற்றலாம். ஆனால் இப்போது பலர் இந்த உணவுமுறைக்கு மாறியிருக்கிறார்கள். அதிலும் சைவப்பழக்கத்தைக் கைகொண்டவரான இந்நூலின் ஆசிரியர் நியாண்டர் செல்வன்கூட, இப்படி கொழுப்பு உணவுக்கு மாறி, உடல் நலம்பெற்றுத்தான் இந்த நூலையே எழுதி, தான் மட்டுமல்லாமல் ஏராளமானபேரை பேலியோ டயட் மூலம் பலன் அடைய வைத்துள்ளார். அசைவ வகைகளின் விலை ஏன் உயர்கிறது என்று இப்போது புரிகிறதா? நகைச்சுவை இருக்கட்டும். சர்க்கரை நோய், உடல்பருமன் போன்றவற்றுக்கு இந்த பேலியோடயட் மிகுந்த உதவியாக இருப்பதாக அறிவியல்பூர்வமாக இந்த நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆதிவாசிகள் என்ன சாப்பிட்டனர்? தானியங்களையா விளைவித்து சாப்பிட்டனர்? அவர்களுக்கு சர்க்கரைநோயும் இதய அடைப்புமா ஏற்பட்டது? என்று கேட்கும் நியாண்டர் செல்வன் பேலியோ டயட்டுக்கு மாறுங்கள். உடல் எடையைக் குறைத்து, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்கிறார். முன் வெளியீட்டுத் திட்டம் மூலமாக கடைக்கு வருவதற்கு முன்பே ஆயிரம் பிரதிகளுக்கும் மேல் விற்பனை ஆகியிருக்கும் நூல் இது. சைவர்களுக்கு சைவ பேலியோவும் இருக்கிறது என்பதும் இதைக் கடைப்பிடிக்கும் அனுபவசாலிகளின் அனுபவப் பகிர்வும் இதில் இருக்கிறது என்பதும் கூடுதல் விவரம்.
பேலியோ டயட் நியாண்டர் செல்வன்,
வெளியீடு: கிழக்கு பதிப்பகம் 177/103, அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை,
சென்னை -14 விலை 150 ரூ, பேச: 044-42009603
ஒரிசாவில் இந்திய ஆட்சிப் பணியில் பணிபுரியும் ஆர்.பாலகிருஷ்ணன், தமிழில் ஐஏஎஸ் தேர்வுகளை முதல்முதலில் எழுதித் தேர்வான பெருமைக்குச் சொந்தக்காரர். ஓர் சிறந்த இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளர். இடப்பெயர்களின் ஆய்வு என்ற தலைப்பில் கணினி மூலம் ஆய்வுகளை நடத்தி அவர் வெளியிட்டிருக்கும் முக்கியமான கருத்துகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற நகரங்களின் பெயர்கள் சிந்துவெளியிலும் அதற்கும் அப்பால் உள்ள ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை நிலைத்துள்ளன என்ற ஆய்வுச்செய்தியைச் சொல்கிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்கும் இந்தப் பெயர்கள் அங்கேயும் எப்படி இருக்கின்றன? இந்த கேள்விக்கான பதில்களை ஆராயமுற்படுகிறது இந்த நூல். சிந்து சமவெளி நாகரீகம் இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்குப் பழமையானது. அழிந்துபோன அந்த நாகரீகத்தின் எச்சமாகக் கிடைத்திருக்கும் முத்திரைகளை இன்றும் சரியாகப் பொருள்கொள்ள முடியவில்லை. அந்த மிகச்சிறந்த நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் சமூகத்தின் ரகசியத்தை ஆராயும் திறவுகோலாக இடப்பெயர்களைப் பயன்படுத்திப் பார்க்கிறார் நூலாசிரியர். சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி திராவிட மொழியாகத்தான் இருக்கவேண்டும் என்ற கருத்தையும் நிறுவியுள்ள இவர் சங்க இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு தகவல்களை எடுத்துக்காட்டி பல சிலிர்ப்பூட்டும் உண்மைகளை உரைக்கிறார். சிந்துவெளி விட்ட இடத்துக்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்துக்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு.
சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் ,ஆர்.பாலகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 18 பேச: 044-24332424 விலை: ரூ 150