எல்லாம் இன்ப மயம்

எல்லாம் இன்ப மயம்
Published on

தமிழ் திரையுலகில்  சாகாவரம் பெற்ற அற்புத பாடல்களைத் தந்தவர்களான எஸ்.வி.வெங்கடாமன், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன் ஆகிய இசையமைப்பாளர்களைப் பற்றிய புத்தகம் இது. பி.ஜி.எஸ். மணியன் எழுத்தில் வெளிவந்துள்ளது. இந்த  மூவரின் வாழ்வு, அவர்கள் உருவாக்கிய பாடல்கள், அவை உருவான சூழல் என்று இனிய மொழி நடையில் எழுதி உள்ளார் நூலாசிரியர். நடிகராக இருந்த எஸ்.வி. வெங்கட்ராமன், ஏவிஎம் கேட்ட காரணத்தால் நந்தகுமார் படத்துக்கு இசை அமைத்தது தற்செயலாக நடக்கிறது. அதிலிருந்து தொடங்கிதான் அவர் மீரா படத்துக்கு இசையமைப்பதும் எம்.எஸ். அவர்கள் பாடுவதும் நிகழ்கிறது. நாற்பதுகளில் தொடங்கி 60கள் வரை இசையமைத்த ஜி. ராமநாதன் அவர்களின் முக்கியமான பாடல்களையும் ‘வாராய் நீ வாராய்' எனத்  தொடங்கி, சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறார். 21 வயதில் எம்.கே தியாகராஜ பாகவதர் படத்துக்கு இசையமைக்க  வாய்ப்பு பெற்றார் பிறவி மேதை சி.ஆர்.சுப்பராமன். ஆனால் அந்த படத்துக்கு பாடல் ஒலிப்பதிவு ஆகும்போது பாகவதர் சிறைக்குப் போய், சுப்பராமன் இசை வாழ்வில் இடி இறங்கிற்று. ஆயினும் இரு ஆண்டுகளுக்குப் பின்னர் பரணி பிக்சர்ஸ் நிறுவன ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிறார். வேலைக்காரி, நல்ல தம்பி, மணமகள் என கொடிகட்டிப் பறந்த அவர் திடீரென 28ஆம் வயதில் மரணமடைந்துவிட்டார்.

இப்படி பல தகவல்களைத் தரும் இந்நூலில் இந்த இசையப்பாளர்களின் புகழ்பெற்ற பாடல்களைப் பற்றி அவற்றின் ராக பின்னணியுடன் விவரித்திருப்பது சிறப்பானது.

திரை இசை மும்மூர்த்திகள், பி.ஜி.எஸ். மணியன், வைகுந்த் பதிப்பகம், 15டி, இன்னாசி தாணுவன் தெரு,  இராமன்புதூர், நாகர்கோவில் 629002.

பேச: 9442077268 விலை ரூ 325.

சூழும் பாடல்கள்

தனிமையில் இருப்பவர்களுக்குத்தான் இசையின் அருமை தெரியும். அப்படி தனிமையில் இருந்து தான் ரசித்த பாடல்களின் அருமையை எழுதித்தீர்த்திருக்கிறார் இளம்பரிதி கல்யாணகுமார். சமகால கட்ட பாடல்களில் இவ்வளவு அழகிய வரிகளா என்று ரசிக்கவைக்கும் வண்ணம் எழுத்தில்  வடித்துள்ளார். அதேசமயம் காலத்தில் பின் சென்று சில பாடல்களையும் ருசித்துள்ளார். கண்ணதாசன் முதல் கார்த்திக் நேத்தா வரையிலான கவிஞர்களின் பாடல் வரிகளை அணுஅணுவாக ரசிக்கும் கட்டுரைகள் நிரம்பிய நூல் இது. ராஜபார்வையில் கண்ணதாசன் எழுதிய அழகே அழகு பாடலில் மாதவியை வருணிப்பதை எழுதிச்செல்லும்போது காதுகளில் அந்த பாடல் ஒலிக்க மனக்கண்ணில் காட்சிகள் ஓடும். இதுபோல் தான் நமக்குப் பிரியமான பாடல்களுக்கு இன்னொரு கோண விளக்கங்களும்  ஆங்காங்கே கிடைக்கின்றன. வரிகளை சிலாகித்து எழுதும் ரசனைக்கார விரல்களின் புத்தகம்.

மடை திறந்து, இளம்பரிதி கல்யாணகுமார்,

வாசகசாலை, 80 ஸ்ரீ சத்யசாய் நகர், ராஜகீழ்ப்பாக்கம்,

கிழக்கு தாம்பரம், சென்னை -73

பேச:9942633833 விலை ரூ 220

நாடு கடத்தப்பட்டவர்கள்

சுமத்திரா தீவில் பெனகோலன் நகர். அங்கே இருக்கும் மல்பரோ கோட்டைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ் கைதி கொண்டு போகப்பட்டார். அங்கேயே நான்கு மாதங்களில் இறந்துபோனார். அவரைப் பின் தொடர்ந்துபோய், அந்த கோட்டை வாயிலில் இருக்கும் கொடுக்காப்புளி மரத்தைப் பார்த்துவிட்டு, அக்கைதி அடைக்கப்பட்டிருந்த அறையில் புது வேட்டி வைத்து வணங்கிவிட்டு வந்திருக்கிறார் இந்த நாவலின் ஆசிரியர் மு.ராஜேந்திரன். அங்கே கொண்டு செல்லப்பட்ட கைதியின் பெயர் வேங்கை பெரிய உடையணத்தேவன். சிவகங்கையின் அரசர். வேலுநாச்சியாரின் மகளையும் அவர் மரணத்துக்குப் பின் பெரிய மருதுவின் மகளையும் மணந்துகொண்டவர். மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட 1801-இல் வேங்கை உடையணத்தேவன் உள்ளிட்ட 73 கைதிகள் கப்பலில் ஏற்றப்பட்டு மலேயாவுக்குக் கடத்தப்பட்டனர். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த தமிழர்கள். சின்னமருதுவின் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் நடத்தியவர்கள். இவர்களின் பட்டியலில்  சின்ன மருதுவின் மகன் 12 வயதான துரைசாமியும் ஒருவர்.

காலாபாணிகள் என அழைக்கப்பட்ட இவர்களின் துயரக் கதையை நாவலாக எழுதி இருக்கிறார் ராஜேந்திரன்.

மால்பரோ கோட்டையில் எலிக்கடியால் உயிரை விடும்போது பெரிய உடையணத்தேவன் என்ன நினைத்திருக்கமுடியும்? அவர் அருகே இருந்தது கறுப்பு நிறத்தில் ஒரு நாய் மட்டும்தான்!

காலாபாணி, நாடுகடத்தப்பட்ட முதல் அரசனின் கதை, டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப. வெளியீடு: அகநி, எண்.3., பாடசாலை தெரு, அம்மையப் பட்டு, வந்தவாசி- 604408 பேச: 9842637637 விலை: ரூ 650

அலையும் நினைவுகள்

துக்கப்படவா நாம்

சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறோம்

அதக்கிக் கொண்டிருக்கும்

கசப்புக்காய்களைத் துப்பு

இனிமையான உணர்வுகளை மீட்டெழுப்பும் கவிதை வரிகளைப் படைத்து இத்தொகுப்பின் மூலம் மீண்டும் ஒருமுறை நம் இதயத்தைத்தொடுகிறார் கவிஞர் ரவி சுப்பிரமணியன்.

இளஞ்சிவப்புப் பூ போட்ட

உன் சுங்குடிப் புடவை போலவே இங்கே மாடிக்கொடியில் ஆடுகிறதொரு புடவை

இந்த வரிகளில் தேங்கித் தெறிக்கிற காதலும் ஏக்கமும் பிரிவும் பெருமூச்சுமான உணர்வுகளை இந்த தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகளில் காணமுடிகிறது. நாய்க்குட்டிகளும் பூனைகளும் நிரம்பிய இத்தொகுப்பு மானுடத்தை ரசிக்கிற மாண்பினை அதிகமாகக் கொண்ட ஒரு கவியின் மனத்தில் பூத்துக்கிடக்கிற மலர்களின் வாசனையை காற்றில் பரவ விடுகிறது.

இன்றைய விளையாட்டை

இத்துடன் முடித்துக்கொண்ட கடவுள்

அடுத்த நிறுத்தத்தில்

இறங்கி நடந்தார் இயல்பாய்

-போன்ற புன்னகைக்க வைக்கும் வரிகளுக்கும் பஞ்சம் இல்லை. இது கவிஞரின் ஆறாவது தொகுப்பாம். இளமைக்கும் இனிமைக்கும் பஞ்சமே இல்லை!

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவி சுப்பிரமணியன்,  போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம்,  12/293,  இராயப்பேட்டை நெடுஞ்சாலை,  இராயப்பேட்டை, சென்னை -14.

பேச: 9841450437 விலை ரூ150.

logo
Andhimazhai
www.andhimazhai.com