பிப்ரவரி 12-ஆம் தேதி, திருவண்ணாமலையிலுள்ள பவா செல்லதுரையின் பண்ணை வீட்டில் ’வம்சி புக்ஸ்’ 12 புத்தகங்களை வெளியிட்டது. அவற்றில் பாதி மொழிபெயர்ப்புகள். பண்ணைக்குள் நிகழ்ச்சி நடந்த அரங்கமானது கருங்கல் ஒற்றைச்சுவரும், அதன் எதிரே கல் தூண்களின்மேல் ஓடும் வேயப்பட்ட திறந்தவெளி அரங்கம். பேச்சாளர்களின் ஆர்வத்தால் மதியம் இரண்டரை மணி தாண்டியும் ஆறு புத்தகங்களே வெளியிடப்பட்டன. பவாவின் இல்லத்திற்கு உணவருந்தச் சென்ற எங்களைக் கறிக்குழம்பின் வாசம் வரவேற்றது. சமையல் முடிய இன்னும் பத்து நிமிடமாகலாம்; அதற்குள் தன் சிறுகதைத் தொகுப்பான ’டொமினிக்’-கை வெளியிட்டுவிடலாம் என்று யோசனை கூறிய பவா,’ஒரு புத்தகம் அச்சானவுடனேயே அதற்கு சிறகு முளைத்துவிடுகிறது’, என்று ஜெயகாந்தன் கூறியதை மேற்கோள் காட்டினார்.இத்துணை உண்மை ஒரு தமிழ் எழுத்தாளனுக்குக் கட்டுப்படியாகுமா?
பவாவின் எழுத்தானது கரைகளற்ற,திசையற்ற காட்டாற்று வெள்ளம். மண்ணும் பாறைகளும் சுழித்துவரும் இந்த நீரோட்டத்தில் செல்லதுரை சொல்வதுபோலக் காட்டுப் பூக்களும் நொனாப் பழமும் களாக்காயும் மூலிகைகளும் அடித்து வருகின்றன. இதன் மணமும் ருசியும் சலசலப்பும் தமிழ் வாசகர்களுக்குப் புதிதான கிறக்கத்தையளிக்கின்றன.
இந்தக் கதைகளில் பெரும்பாலும் மையக் கதாபாத்திரமில்லை. தனித்துவமான கதைமாந்தர்கள் குறைவாகவே பேசுகிறார்கள்.‘கரடி’ கதையின் புலிவேடக்காரன், தனக்குப் பரிசாய்க் கிடைத்த ஒரே ஐம்பது ரூபாயை சக கிருஷ்ண வேடதாரியின் மார்பில் குத்தி அழகு பார்க்கிறான்.‘பிடி’ கதையில் அறம் சீறுகிறது. திருட்டைப் பற்றிய ‘வலி’-யில் மனித மனத்தின் விசித்திரமும் அடியாழத்து ஈரமும் மின்னலாய் வெட்டுகின்றன. இப்படி ஒன்பது சிறுகதைகளும் வெவ்வேறு களங்களில். எல்லோரும் திளைத்து அனுபவிக்க வேண்டிய வெள்ளமிது.
டொமினிக், பவா செல்லதுரை, வெளியீடு: வம்சி புக்ஸ் 19,டி.எம்.சாரோன் திருவண்ணாமலை-606 601. விலை:ரூ.100 பேச:04175-235806.
-பா.கண்மணி
உயிர்ப்பான சொற்களின் மூலமாக உணர்வுகளையும் சமூக சிந்தனைகளையும் கவிதைகளாக வடித்திருக்கிறார் மு. ஆனந்தன். தான் ஏர் பூட்டி கை சிவந்த அதே வயதில் தன் மகன் கல்லூரிக்குப் போக பைக் கேட்கிறான் என்கிற காட்சியை கவிதையாக வடிக்கும் போது இரண்டு வெவ்வேறு காலங்கள் ஒரே புள்ளியில் இணைந்து ஒரு எழுச்சியான உணர்வை உண்டுபண்ணுகின்றன. வாழ்வியலின் தருணங்களை, உறவுகளின் உரசல்களை, வறுமையின் சித்திரங்களை கவித்துவத்துடன் கூடிய வரிகளாக மாற்றியிருப்பதில் மு.ஆனந்தன் நிறைவை எட்டியிருக்கிறார். உதாரணம்:
கருத்து நெடிந்த பனைமரம்
கருப்பட்டி வாயில்
கூவிச்செல்கிறது
நுங்கு வாங்கலையோ... நுங்கு..
யுகங்களின் புளிப்பு நாவுகள், மு. ஆனந்தன், வெளியீடு: அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி - 604408 பேச: 9444360421 விலை: ரூ 70
தேனிமாவட்டத்தில் பண்ணைப்புரத்தில் இருந்து வந்த பாவலர் சகோதரர்கள் என்கிற இசைச் சகோதரர்கள் தமிழகத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். மிகச்சாதாரணமான பின்னணியில் இருந்துவந்து உலகையே தங்கள் இசைக்கு அடிமைகொண்ட இவர்களின் வெற்றிச்சரித்திரம் எத்தனை முறை கேட்டாலும் பிரமிக்க வைக்கக்கூடியது. இது ஒரு தலைமுறையின் சரித்திரமும் கூட. அன்னக்கிளியில் தொடங்கி, இன்று வரை ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ். இசைக் கலைஞர் கங்கை அமரன் தான் கடந்துவந்த பாதையை மிகச்சுவாரசியமாக நக்கீரன் இதழில் எழுதிவந்தார். அது இன்று நூல் வடிவம் பெற்றுள்ளது. இதன் முதல்பாகத்தில் அன்னக்கிளி முதல் நாள் அனுபவம் தொடங்கி எம்ஜிஆருக்கு கதை சொன்னவரைக்கும் ஏராளமான அருமையான வாழ்க்கைச் சம்பவங்களை கங்கை அமரன் சொல்லிக்கொண்டே செல்கிறார். பாரதிராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஆகியோருடைய வாழ்க்கையை பாவலர் சகோதரர்களின் வாழ்க்கையில் இருந்து பிரிக்கவே முடியாது என்பதால் அவர்கள் இருவரும் ரத்தமும் சதையுமாக இந்நூலில் உலா வருகிறார்கள். இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர் பெற்றிருக்கும் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பு, மன உறுதி, அசலான திறமை ஆகியவற்றையும் இந்நூலைப் படிப்பவர்கள் உணர முடியும்.
பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1, கங்கை அமரன், வெளியீடு: நக்கீரன், 105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை -14 தொடர்புக்கு: 044-43993000 விலை ரூ: 150
இருளை விரட்ட ஒளி எப்படி தேவையாக இருக்கிறதோ அதுபோல் மன இருண்மையை விரட்ட சுயமாக முயற்சி செய்யும் கவிஞனின் வெளிப்பாடாக அமைந்துள்ளன இந்த கவிதைகள். உக்கிரமான உணர்ச்சிகளும் அனுபவங்களும் தெறிக்கின்ற இக்கவிதை நூலில் சிறப்பான பல கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆவேசம் குறையாத இரவு என்ற கவிதையில் இருக்கும் ஆவேசம் மிகுந்த காதல் அழகாக வெளிப்படுகிறது.
என் வீட்டில் உன் அப்பா
நீ ஆளான செய்தியைச் சொன்னபோது
வானத்தில் நிலவில்லை - என்று தொடங்கும் இக்கவிதையில்
//இருள் அகலாத வெளிச்சத்தை
எனக்குள் எத்தனை முறைதான் ஏற்றுவார்கள்// என்கிற வரிகளில் மனசு நின்றுவிடுகிறது.
ஆவேசமான உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படும் மனத்தின் வெளிப்பாடு இக்கவிதை நூலில் பல கவிதைகளில் அதன் வீரியம் குறையாமல் வெளிப்பட்டுள்ளது.
நான் உனது மூன்றாம் கண், இளங்கவி அருண், வெளியீடு: முரண்களரி படைப்பகம், 34/25, வேதாசலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை 68
பேச: 9841374809 விலை ரூ 60.
மணவாழ்க்கை மகிழ்ச்சியாய் அமைய தமிழில் விரிவாய் எழுதப்பட்ட முதல்நூல் இதுவாகத்தானிருக்கும். நூலாசிரியர் நாகலட்சுமி சண்முகம் ஏராளமான நூல்களை தமிழில் மொழி பெயர்த்தவர். இது அவரது சொந்தப்படைப்பு. வற்றாத காதல், பரஸ்பர மரியாதை, ஈருடல் ஓருயிர், அசைக்க முடியாத நம்பிக்கை, அக்கறை மிக்க புரிந்துணர்வு, நாணமறியா அன்னியோன்யம், முழுமையான அர்ப்பணிப்பு என்ற ஏழு ரகசியங்கள் மணவாழ்க்கையை மாயாஜாலமாக மாற்றும் என்கிறார்.
புத்தகம் படிக்கும் பழக்கமில்லாத தன்னை புத்தகம் படிக்க வைத்து இன்றைக்கு இதுபோல் நூலொன்றைப் படைக்க வைக்கக் காரணமாயிருந்தவர் தன் கணவர் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இவ்வளவு
சிறப்புகள் தன்னை வந்தடைய காரணமாக இருந்தவர் தன் கணவர் என்றும் நல்லதொரு வழிகாட்டியாக கணவரைப் பெற்றிருப்பதற்குப் பெருமை கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.
ஆச்சரியங்கள் உங்கள் மணவாழ்க்கையை எப்போதும் சுவாரசியமாக வைத்திருக்கும் என்று கூறும் நூலாசிரியர் தன் கணவர் ஒரு நாள் திடீரென்று தன் அலுவலகத்துக்கு மலர்க்கொத்து ஒன்றை, “என் இனிய காதல் மனைவிக்கு, உன்னைக் காணாமல் நான் வாடுகிறேன். மாலையில் சீக்கிரம் வந்து விடு... உன் காதல் கணவன்” என்று குறிப்பிட்டு அனுப்பியதை நினைவுகூர்கிறார். அதுவும் திருமணமாகி பதிமூன்று ஆண்டுகள் ஆனபிறகு. அதை நினைத்தால் இன்றும் தன்னுள் புன்னகை மலர்வதையும் எழுதியிருப்பதைப் படிக்கும்போது நமக்குள்ளும் புன்னகை மலர்கிறது.
பெற்றோர்கள் பொருளாதாரப் பாதுகாப்பை வலியுறுத்துவது போன்று மகிழ்ச்சியான மண வாழ்க்கையைப் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைப்பதில்லை என்ற ஆழமான, நமக்கு இதுவரை புலப்படாத உண்மையை எடுத்துரைக்கிறார்.
மாயாஜாலமான மணவாழ்க்கை, நாகலட்சுமி சண்முகம், எம்பஸி புக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், 120, க்ரேட் வெஸ்டர்ன் பில்டிங், மகாராஷ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸ் லேன், போர்ட், மும்பை 400023. பேச: 022-30967415 விலை: ரூ 250
மு.செந்தமிழ்ச்செல்வன்