உருளும் வரலாறும் இதிகாசமும்

உருளும் வரலாறும் இதிகாசமும்
Published on

தாடியை தடவிக்கொண்டு சகுனி கேட்டார். துரியோதனா கே.என்.சிவராமன் எழுதிய சகுனியின் தாயம் என்ற புத்தகத்தைப் படித்துவிட்டாயா? துரியோதனன் கையிலிருந்த கதாயுதத்தைக் கீழே வைத்துவிட்டு பதில் சொல்வதற்குள் படிச்சிட்டேன் என்றவாறு கீழே குதித்தான் ஸ்பைடர்மேன். “நான் எவ்ளோ வேகமா பறப்பேனோ அதைவிட வேகமா பறக்குது” என்று அவன் சொல்கையில் புல்லட்டில் வந்து இறங்கிய சூனியக்காரப் பாட்டி ஸ்பைடர்மேன் வாயைப் பொத்திக்கொண்டே,“இதில் மூணு கதை ஒண்ணாப் போகுது. மூணும் எந்த இடத்திலும் சந்திக்கவே இல்லை. முழம் நீளக் கொம்பு உள்ள ஆடும் மகாபாரதப் போரில் ஈடுபட்ட பாண்டியர்களின் வாரிசுகளும் இரண்டு கதைகளில் வர்றாங்க. மூணாவது கதை முழுக்க முழுக்க சின்னப் பசங்களுக்கான கதை” என்றாள்.

ஜீ பூம்பா என்று உச்சரித்தவாறு தோன்றிய ஹாரிபாட்டர், பாட்டியை உருண்டு விழ வைத்து சிரித்தான். “எனக்கு மிகவும் பிடித்தபகுதி தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்து கதைதான். எல்லாகாலத்திலும் வர்த்தக நலன்கள்தான் அரசியல் போக்கை நடத்துகின்றன என்பதை சங்க கால நிகழ்வுகளில் வைத்து ஆசிரியர் எழுதியிருக்கிறார். அதில் வரும் யவன ராணி என்ன அழகு தெரியுமா? கத்தி சண்டையெல்லாம் பயங்கரமாகப் போடுறாங்க. எந்திரப் பொறிகளைக் கையாளுறாங்க. தண்ணிக்குள்ள மூச்ச அடக்குறாங்க... இப்பிடிப் பண்றாங்களேம்மா” என்றான் குதிரைமேல் வந்த இளமாறன்.

வெற்றிவேல் வீரவேல் என்ற சப்தம் பின்னால் கேட்டது. கரிகாலனின் சொந்தக்காரரான அதங்கோட்டாசானும் சீன அரசரும் வந்தார்கள். கூடவே வால்டர் ஏகாம்பரம் ஏகே 47-உடன் வந்து நின்றார். நக்சல் பாரி இயக்கத்தைச் சேர்ந்த தமிழரசன் வரவேற்றார்.“தமிழ் நாட்டின் தீவிர கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் பற்றிய வரலாறு, நாய்க்கன் கொட்டாய் எரிப்பு, அப்பு பாலன் படுகொலை, பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடல், அவற்றின் பகாசுர பலம் என எல்லாவற்றையும் விலாவாரியாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். தர்மபுரி இளவரசன் திவ்யா ஆகிய பெயர்களையும் கதாபாத்திரங்களுக்கு வைத்திருக்கிறார்” என்று தமிழரசன் கூறினார்.

சகுனி காலை நொண்டியவாறே வந்து தாயத்தை வீசினார். எல்லோரும் ஓடிப்போனார்கள். கிருஷ்ணனைத் தவிர.

“344 பக்கத்தில் ஒரு விறுவிறுப்பான நாவல்” என்று சிரித்தான் அருகில் நின்ற சகாதேவன்.

சகுனியின் தாயம், கே.என்.சிவராமன்,

வெளியீடு: சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு,  மயிலாப்பூர், சென்னை 600004. பேச: 7299027361

விலை: ரூ 200

நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா.

அந்தக்காலத்தில் சென்னை கோடம்பாக்கம் ரயில்வே கேட் அருகே தன் நண்பர்கள் குழாமுடன் இளைஞராக இருந்த நூலாசிரியர் வெட்ட வெயிலில் நடிகர்களின் கார்கள் சிக்னலுக்காகக் கடந்து செல்லும்போது காத்திருப்பதில் தொடங்குகிறது இந்த நூல். அன்று வில்லனாக இருந்து வெறுப்புக்குரியவரான நடிகர் டி.எஸ்.பாலையா இவரை அழைத்து காருக்குள் அமரவைத்து கையெழுத்துப் போட்டுத்தருகிறார். இன்று பாலையாவின் நூற்றாண்டுக்கு திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் எழுதியிருக்கும் நூலுக்கு 1950களின் நடுவே இவ்வாறாக விதைபோடப்பட்டுவிட்டது. பாலையா நடித்த படங்கள், அவர் ஏற்ற வேடங்கள் என்று தன் தகவல் களஞ்சியத்திலிருந்து எடுத்து அடுக்கி பிரமிக்க வைக்கிறார் சந்தானகிருஷ்ணன். 1940-லிருந்து 50க்குள் அவர் நடித்த படங்கள் பற்றிய தகவல்கள், பின்னர் நகைச்சுவை நடிகராக அவர் மாறி பின்னாளில் பின்னியெடுக்கும் மாறுதல்கள் என்று மிகசுவாரசியமாக இந்த நூல் விரிந்து செல்கிறது. வில்லனாக, கதாநாயகனாக, நகைச்சுவை நடிகராக என்று பல்வேறு பாத்திரங்களையும் சிறப்பாக ஏற்று நடிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்ற டி.எஸ்.பாலையா பற்றிய இந்நூலின் சிறப்பம்சம் ஆங்காங்கே பயன்படுத்தப் பட்ட அரிய புகைப்படங்கள். இக்காலகட்டத்தில் யாரும் பார்க்கக் கிடைக் காத புகைப்படங்களை நூலாசிரியர் தன்  தொகுப்பில் இருந்து பயன்படுத்தி உள்ளார்.

நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன்,  வெளியீடு: நிழல், 31/48, இராணி அண்ணா நகர், சென்னை -78.

பேச: 9444484868 விலை: ரூ150

பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு!

கண்ணகி ஓர்  உண்மை நிகழ்வு; அவள் ஒரு வரலாறு என்கிற எழுத்தாளர் யாணன், கண்ணகி வழிபாடு பற்றிய பல்வேறு வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி இந்த நூலைத் தொகுத்துள்ளார். கண்ணகியின் வழிபாடு தமிழகத்தில் வளரவேண்டும் என்று குறிப்பிடும் இவர் இதனால் சமூகத்தில் அறநெறிகள் வளரும். மனச்சாட்சிக்கு அஞ்சுவர். பாவபுண்ணியம் பார்ப்பர். நல்லோர் உயர்வர் என்கிறார். கண்ணகி எரித்த மதுரை எது? சிலம்பின் காலம் எது? சிலம்புச் செல்வர்  மபொசியின் கருத்துகள், தமிழகத்திலும் கேரளத்திலும் இலங்கையிலும் நடைபெறும் கண்ணகி வழிபாடு குறித்த தகவல்கள் என விரிவான தளத்தில் நின்று தகவல்களையும் அறிஞர்களின் கருத்துகளையும் சேகரித்துள்ளார் நூலாசிரியர் யாணன். கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோட்டத்துக்கு இவர் பயணம் மேற்கொண்டு விரிவாக எழுதவும் செய்துள்ளார். சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய பல்வேறு கோவில்கள் தெய்வங்கள் அவற்றின் உண்மைக் கதைகள் என்று எழுதப்பட்டிருக்கும் இந்நூல் கண்ணகி அம்மன் வழிபாடு  வளரவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு,

தொகுப்பாசிரியர் யாணன்,

வெளியீடு: பிளாக்ஹோல் மீடியா, எண் 7/1, மூன்றாவது அவென்யூ,

அசோக்நகர் சென்னை-83, பேச: 9600123146 / விலை ரூ130

அந்தரங்க உலகின் சாளரம்

நகர்ந்து கொண்டே இருக்கும் காலத்தின் புற மற்றும் அகச் சலன காட்சிகளை தனது வரிகளுக்கு இடையே மிக மெல்லிய தொனியில் பதிவு பண்ணி நகரும் தேவேந்திர பூபதியின் நடுக்கடல் மௌனம் கவிதைத் தொகுப்பு, அதன் மொழியாளுமையில், புதிய எல்லையைத் தொடுகிற அனுபவமாயிருக்கிறது.

நேரடியான அனுபவங்களைச் சுமந்தபடி வரும் இத் தொகுப்பின் கவிதைகளை, ஏதோ ஒரு இடத்தில் முளைக்கும் ஒற்றைச் சொல்,அல்லது வரி,வேறொரு உலகத்துக்கு நம்மைச் சுழற்றி எறிந்துவிடுகிற அனுபவமாக்குகிறது.

சந்திராஷ்டமம் என்கிற கவிதை மேற்சொன்ன அனுபவத்தின் மொத்த சாட்சியமாக மனோவசியப் படுத்துகிறது. “மனோரதியம்” என்கிற வார்த்தை ஒரு பெண்ணா என்ற அதன் கடைசி வரியில் விரிய ஆரம்பிப்பது வாசிப்பவனின் அந்தரங்க உலகம்.

வாசிப்பவனை தனக்குள் அணைத்துச் சேர்த்துக் கொள்கிற வலிந்த சொல்லாடல்கள் எதுவுமில்லாமல், அக்கறையற்ற விட்டேத்தித்தனத்துடன் நகரும் பெரும்பாலான கவிதைகள், வாசித்து முடித்த சற்று நேரத்தில் தவழவிடும் புதிய உலகம்,முற்றிலும் மாயத்தன்மை கொண்டதாயிருக்கிறது.

மதி நடனம் என்னும் கவிதையின் கடைசிவரிகள் இவை.

‘இப்போது என் போர்வைக்குள்

உறக்கத்திற்காக எனக்கும்

மேற்கில் சரியும் அந்நிலவுக்கும்

ஒரு வான ஒப்பந்தம்

அது இரண்டு கண்களைப் போன்றது‘

வியர்க்கும் வார்த்தைகள், சிறந்த உபாயம், ஜீவசத்தின் இரைச்சல், சாவில் என்ன சந்தேகம், ஆன்மாவின் பிஞ்சுகள் ஆகிய கவிதைகள் தரும் நீட்சி மிகவும் புதிதானது.

ஆலமர் செல்வன், தெய்வம் தீண்டியவன், ஆகிய கவிதைகள் எனக்கு மிகவும் நெருக்கமான அனுபவமாக இருக்கின்றன. நடுக்கடல் மௌனம் அந்த அனுபவத்தின் உச்சம்.

காசி நகரின் தெருக்களில் சுற்றியலைந்து விட்டு, கங்கைக்கான அதன் படிக்கட்டுத் துறையில் கால் வைக்கிற போது ஏற்படும் மனோ அனுபவமாக இருக்கிறது தேவேந்திரபூபதியின் நடுக்கடல் மௌனம்.

நடுக்கடல் மௌனம், தேவேந்திர பூபதி,

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,

கே.பி. சாலை, நாகர்கோயில் -629001 விலை ரூ.70

- குமரகுருபரன்

நினைவுகளின் அடுக்கில் கவிஞனும் கவிதையும்

கவிஞர் கலாப்ரியாவின் புதிய கட்டுரைத் தொகுப்பு நூல் மறைந்து திரியும் நீரோடை. சந்தியா வெளியீடாக வந்திருக்கிறது. நவீன கவிதை பற்றிய சுவாரசியமான பல கட்டுரைகளுடன் தொடங்கும் இந்த நூலில் சங்கப் பாடல்கள் முதல் பல நவீனக்கவிதைகள் வரை காலத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் பல தாவல்களை நிகழ்த்தி இலக்கிய உலகை சிருஷ்டிக்கிறார் கலாப்ரியா. ஒரு இடத்தில் கூட நெருடாத, வழிந்து செல்லும் நீரோடை போன்ற சுகமான மொழி. எதிர்பாராத நேரத்தில் அழகான திரைப்படப் பாடல்களின் வரிகளும் அதையொட்டிய நினைவுகளையும் காட்சியாக எழுதிச் செல்வது கலாப்ரியாவின் கட்டுரைகளில் தனிப்பாணி. வண்ணநிலவன் பற்றிய ஸகி என்ற கட்டுரையைத் திரும்பத் திரும்ப வாசிக்கலாம். 20களின் நினைவுகள் அவை. நட்பை, அன்பை வெளிப்படையாகச் சொல்லாமல் ஆனால் அடுக்கிச் செல்லும் சம்பவங்கள் மூலமாக காட்சியாக வெளிப்படுத்துகிற கட்டுரை. வெற்றியடைந்தவன் நான்  அதைக் கொண்டாட விடமாட்டாய் நீ- என்ற ஆங்கிலக் கவிதை வரிகள் எங்களிருவருக்கும் பிடிக்கும் எனச் சொல்லி கலாப்ரியா இந்த கட்டுரையை முடிக்கிறார். பழைய நினைவுகளை மனதிற்குள் கொண்டாடிக்கொண்டிருந்தால் மட்டும்போதும் என்கிறது இக்கட்டுரை. கவிஞர் சுகுமாரனின் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் அவர் வாசித்த கட்டுரையில் 38 ஆண்டுகளாக எனக்கு நண்பர் எனத் தொடங்கி அத்தனை ஆண்டுகளாக அவர் கவிதைகள் எனக்கு சவாலாகவும் இருக்கின்றன என விவரித்து சுகுமாரனின் கவிதைகள் குறித்த புதிய வாசல்களைத் திறந்து ரசவாதம் நிகழ்த்துகிறார்.  அந்திமழை இதழில் அவர் பல தலைப்புகளில் எழுதிய கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. கவிதை மீது ஆர்வமும் கவிஞர்கள் மீது நேசிப்பும் உள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு இது.

மறைந்து திரியும் நீரோடை -கலாப்ரியா,

சந்தியா பதிப்பகம்,  புதிய எண் 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர்,

சென்னை -83. பேச: 044-24896979 விலை: ரூ145

ஈரக்குரல்

நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி நீளும் கானல் கனவைச் சுமந்து திரியும் உலகமயமாக்கலின் அவலக் குழந்தையின் வாழ்வைப்பற்றியது என் கவிதைகள் என்கிற கடங்கநேரியானின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.  மானுட வாழ்வின் பல்வேறு உணர்ச்சிகளைப் பேசும் கவிதைகள். உலகமயமாக்கலால் துண்டாடப்பட்ட வாழ்வின் துளிகளை சொற்களாக வடித்துவைக்கிறார். மழை இரவு, காதல், காமம், மதுக்குவளை என உருவாக்கப்படும் தனிமையான உலகத்தையும் செழுமையான வரிகளில் செதுக்கித் தந்துள்ளார். விற்ற விதை நெல்/ திரும்பக் கிடைத்தது/ வாய்க்கரிசியாக.. என மாறும் உலகியல் அவலத்தை எழுதுகையில் தனித்திருக்கும் தவளையின் குரலை  ஈரத்துடன் எழுதவும் இயலுகிறது.

யாவும் சமீபித்திருக்கிறது, கடங்கநேரியான்,

ஆகுதி பதிப்பகம், பேச: 9976402706 விலை: ரூ 30

சிறுவர்களின் உலகம்

அதிஷாவின் முதல் சிறுகதை தொகுப்பான பேஸ்புக் பொண்ணு படிப்பதற்கு மிக லகுவான மொழியில், ஒரே மூச்சில் படிக்க தூண்டக்கூடியது.வாராது வந்த வாசகன்,சாமியாரின் மகிமை,விதியுடனொரு விளையாட்டு போன்ற கதைகளை சிரிக்காமல் படிக்கவே முடியாது.  முன்னுரையில் பாஸ்கர் சக்தி சொல்லியிருப்பது போல குழந்தைகளுக்கான சிறுகதைகளை எழுத அத்தனை தகுதிகளும் அதிஷாவின் எழுத்தில் தெரிகிறது. பெரும்பாலான கதைகளில் குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.ஓம்புயிர், நீலக்கை ஆகிய இரண்டு கதைகளும் தொகுப்பின் சிறந்த கதைகள். நம்மை தொந்தரவு செய்பவை.

வழக்கமான அதிஷாவின் குறும்பு நடையை எதிர்பார்த்து படிக்கத் துவங்கினால் முதல் கதையான மரம் செடி மலை யிலேயே நான் அதுமட்டுமில்லை என்று தலையில் தட்டி யோசிக்க வைத்துவிடுகிறார்.தேன் மிட்டாய், மயிலிறகு என நாம் இழந்துவிட்ட பால்யத்தை அதிஷாவின் கதையுலகம் மீண்டும் ஞாபகமூட்டுகிறது.  

ஃபேஸ்புக் பொண்ணு, அதிஷா, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18 பேச: 044-24993448 விலை: ரூ 100    

- இரா.கௌதமன்

logo
Andhimazhai
www.andhimazhai.com