பெண்முகம்
நானும் கவிதையும் வேறுவேறல்ல, கவிதை பெயரிடப்படாத நான், நான் பெயரழிந்த கவிதை’ என்று நூலின் முகப்பிலேயே குறிப்பிடும் கவிஞர் வெண்ணிலா இந்த கவிதைத் தொகுப்பில் தன் மொத்தக் கவியுலகத் தையும் பார்வைக்கு வைக்கிறார். பொதுவாக கவிதை என்பதை மொழி தெரிந்த யார் வேண்டுமானாலும் எழுதிவிடக்கூடும். ஆனால் அதன் பின்னால் இயங்கும் பித்துப்பிடித்த கவிமனம் தான் கவிஞருக்கும் ‘தொழில் நுட்ப வாதிகளுக்குமான’ வித்தியாசம். வெண்ணிலாவின் கவி உள்ளம் நெகிழ்ச்சியானது. உறவுகளை, உணர்வுகளை, வாழ்வை, சூழலை நெகிழ்வோடு காண்கிறார். அப்பாவை, மகளை, காதலனை, கணவனை, நண்பனை - உச்சகட்ட அன்போடு பார்க்கும் வரிகளில் வெண்ணிலா உயர்ந்து நிற்கிறார். அவருக்கு ‘மனசெல்லாம் பார்வை / பார்க்குமிடமெல்லாம் மனசு’.
இத்தொகுப்பில் ‘அறைகளால் ஆனவள்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்துமே தமிழ்ச்சூழலில் மிகவும் முக்கியமானவை. வேலைக்குச் செல்லும் மணமான, குழந்தைபெற்ற பெண்களின் தவிப்பை சொற்களில் நிரப்பி வாசகனுக்குக் கடத்துகிறார்.
அம்மாவின் அருகாமைக்கு ஏங்கும்
குழந்தையின் இயல்பும்
அன்னியமாகப்படும் அவசரத்திற்கு
கூசிப்போகிறது மனசு
இந்த வரிகளில் தெரியும் பரிதவிப்பை இத்தொகுப்பு முழுக்க அடையாளம் காணமுடியும். அது அன்றாடம் நாம் காணும் பெண்களின் முகங்களில் பிரதிபலிப்பது. உணர்வுகளின் தெறிப்பால் உயர்ந்து நிற்கிறது இத்தொகுப்பு.
எரியத் துவங்கும் கடல்
அ.வெண்ணிலா, வெளியீடு : அகநி, எண்;3,
பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி - 604 408, பேச : 94443 60431
விலை: ரூ.275
ஆழமும் விரிவும்
தமிழ்நாட்டில் வாழும் முக்கியமான பொருளாதாரம், மாநில சுயாட்சியியல் அறிஞரான பேராசிரியர் நாகநாதனின் கருத்துக்கள் எப்போதுமே கவனிக்கதக்கன. திமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கூட அவரது கருத்துகளில் துணிச்சலும் தனித்துவமும் இருக்கும். அவர் சிந்தனையாளன் இதழில் குட்டுவன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் பத்தியிலும் இந்த தனித்துவம் இருந்தது. இந்திய அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், மதம், நீதித்துறை,
சாதியம், மத்தியில் ஆளும் கட்சிகள் இவை பற்றியெல்லாம் குறிப்பிட்ட நிகழ்வுகள் சார்ந்து மிக ஆழமான கருத்துகளை அவர் எழுதியிருக்கிறார். இந்த கட்டுரைத் தொடர் நூல்வடிவம் பெற்று நெருப்புப் பொறிகள் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. எது ஜனநாயகம்? என்ற தலைப்பிலான முதல் கட்டுரையை எடுத்துக்கொள்வோம். இந்திய, சீன, அமெரிக்க, மக்கள் தொகை இவ்வளவு என்று ஆரம்பிக்கும் நாகநாதன், அமெரிக்க அரசியலை ஆணிவேரில் இருந்து ஆரம்பித்து அலசி, சீனத்து அரசியலை புட்டுபுட்டு வைத்து இந்திய அரசியலுக்குள் திரும்பி குட்டு வைக்கிறார். அனாவசியமாக புள்ளி விபரங்களை போட்டு நிரப்பாமல், எது அவசியமோ அவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளாக இவை உள்ளன. பல நூல்களைப் படித்த தெளிவு இந்த ஒரு கட்டுரை நூலிலேயே கிடைக்கும் என்பது தெளிவு.
நெருப்புப் பொறிகள்,
அரசியல் சமூக பொருளாதாரக் கட்டுரைகள் பேராசிரியர் மு.நாகநாதன்.
வெளியீடு : கதிரொளி பதிப்பகம்,/ எண்;14, சிவசங்கரன் மாடி குடியிருப்பு,
சிவசங்கரன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 86, பேச : 044 – 24321067 / விலை : ரூ.150
காலதரிசனம்
கீழத் தஞ்சை மாவட்டத்தில் கடந்துபோன ஐம்பது ஆண்டு கால வாழ்வின் பின்னணியில் செல்லும் நாவல் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம். நாவலுக்கென்று நாம் அறிந்திருந்த எந்த ஒழுங்கும் இல்லாமல் ஓர் ஓவியர் பல்லாண்டாக வரைந்த ஓவியத் தொடர்போல இந்நாவல் அமைந்திருக்கிறது. நாவலாசிரியரும் ஒரு தேர்ந்த ஓவியர் என்பதால் இது சாத்தியம் ஆகியிருக்கலாம். இந்தத் தொடர்பற்ற தன்மையைத் தாண்டி,மென்மையான கிறுகிறுப்பூட்டும் தன் நடையால் கவர்கிறது இந்நாவல்.
மலர்கள் பூத்த குளமும் வாய்க்காலும், நெல்வயலும், கிணறுகளும், குடிசைகளும், தென்னை மரங்களும் மிகப்பெரிய நிலப் பண்ணையும் பக்கங்கள் தோறும் நிறைந்து ஞாபகங்களின் மூச்சு முட்டுகிறது. ‘ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதி. எங்களைப் போன்ற முதல் தலைமுறை படிப்பாளிகளுக்கு அவரைப் பிடிக்கும் என்று நாய்க்கு ‘ஜிம்மி’ என்று பெயர் வைத்த காரணம் சொல்லும் மணிமொழி, மர்பி ரேடியோ லைசென்ஸ் வாங்கும் தமிழ்வாணன் - இருவரும் தான் கீழத்தஞ்சையில் கிளர்ந்த லட்சியவாத தலைமுறையின் அம்சங்கள். பண்ணையில் வேலைக்காக வரும் ட்ராக்டர், அதை எதிர்க்கும் கூலி வேலை செய்யும் மக்கள், அதில் ஓடும் சாதிக்கோடு, நிலவுடமையாளருக்கு எதிரான வன்முறை என்று வலிமையான அரசியல் பேசும் இந்நாவல் இதில் வரும் பெண் பாத்திரங்கள் மூலமாக கட்டற்ற சுதந்திரம் பேசுகிறது. வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதத்தில் உலவும் ‘மைனர்கள்’ மற்றும், ஆடுதன் ராணியைக் கொண்டு காமமும் காதலும் விரிகின்றன. தொடர்பில்லாத சம்பவங்கள் போல வளர்ந்து செல்லும் விடம்பனத்தில் எல்லாவற்றையும் இணைக்கும் மிகப்பெரிய நதியொன்று சலசலத்து ஓடுவதைக் காணமுடியும். “இந்த நாவலில் சொற்களால் உருவாக்கப்படும் காட்சிகளைக் காட்டிலும் காட்சிகளாக நிறுவப்படும் சொற்களே அதிகம் என்பதை வாசிக்கும் போது உணர முடியும்” என்று சுகுமாரன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை.
கீழத்தஞ்சையை ஓர் ஐம்பதாண்டுக்கு முன்னால் போய் பார்த்துவிட்டு வர உதவுகிறது இந்நாவல் என்று சொல்லலாம்.
விடம்பனம், சீனிவாசன் நடராஜன், வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001 விலை ரூ: 575 பேச: 04652-278525
ரசிகனின் பார்வை
புலமை எதுவும் பெற்றிராத ஒரு இரசிகனின் பார்வையில் வாலியின் பாடல்களில் மிளிரும் எண்ணங்களின் பதிவே இது - என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். தமிழ் திரைப்பட உலகை விரல் நுனியிலும் தன் ஆவணக்காப்பகத்திலும் வைத்திருக்கும் சந்தானகிருஷ்ணன் வாலியின் பாடல்களைப் பற்றிய தன் எண்ணங்களை நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளார். ‘பூவரையும் பூங்கொடியே, பூமாலை போடவா’ என்ற பாடலில் ஆரம்பிக்கும் நூலாசிரியர் இப்பாடலின் சூழலை விவரித்து, பாடலின் நயங்களை எழுதுகிறார். அத்தோடு விடாமல் வாலியின் முதல் படமான அழகர் மலைக்கள்ளன் படத்துக்கு அடுத்து அவரது கவித்திறனை எடுத்துக்காட்டியது ‘இதயத்தில் நீ’ படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் தான் என்கிறார். அத்துடன் இப்பாடல் படம் பிடிக்கப்பட்ட இடம் பூண்டி அணைக்கட்டு என்ற தகவலையும் தருகிறார். தமிழ் திரைப்படப்பாடல்களில் சிறந்த ரசிகரும் இசையறிவும் மிக்கவரான நூலாசிரியர் தேர்ந்தெடுத்திருக்கும் பாடல்களுக்காகவும் அவர் தரும் பின்னணித் தகவல்களுக்காகவும் இந்நூலை வாசிக்கலாம்.
நான் ரசித்த வாலி, திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், வெளியீடு : வாலி பதிப்பகம், தாமிரபரணி, எம்;8, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை - 89 விலை: ரூ90 பேச: 044-49596311.